திரைப்படப்
பாடல் என்பது நமது பால்யம் தொட்டே நம்மைத் தாலாட்டிவருகிறது. ஒரே பாடல் வெவ்வேறு
சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வகையான பொருள் தந்து நம்மை மகிழ்வூட்டும்.
அப்படியான ஒரு பாடலை வேறொரு சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்த்ததால் விளைந்த
பதிவு இது. புது யுகம் தொலைக்காட்சிக்காக எழுதியது இது.
வைரமுத்து |
திரைப்படப் பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்…
திரைப்படம்: என் சுவாசக் காற்றே
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்பி பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வெளியான ஆண்டு:
1999
…ஒரு கன்னம் தந்தேன் முன்னே
மறு கன்னம் தந்தாய் பெண்ணே
இயேசு நாதர் காற்று வந்து வீசியதோ…
வெள்ளிவீதியார் பாடிய கன்றும் உண்ணாது கலத்தினும் படாது என்னும் குறுந்தொகைப் செய்யுளுடன் தொடங்கும் இந்தப் பாடல் காதலனும் காதலியும் காதல் மயக்கம் கொண்டு பாடுவது போன்ற காட்சியமைப்பை கொண்டது.
இதில் கையாண்டுள்ள இயேசு நாதர் காற்று வந்து வீசியதோ என்னும் உவமை இந்தப் பாடலைக் கவனிக்கச் செய்கிறது.
பரிசுத்த வேதாகமப் புத்தகத்தில், மத்தேயு சுவிஷேசத்தில், 5 ஆம் அதிகாரம்
39 ஆம் வசனத்தில், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்,
அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்று இயேசு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. தீமையை நன்மையால் தான் எதிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திய வசனத்தைக் காதலுக்குரிய மனநிலையை வெளிப்படுத்த பாடலாசிரியர் வைரமுத்து கையாண்டுள்ளார்.
காதலிக்கு ஒரு கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறான் காதலன். அந்த அன்பில் நெகிழ்ந்த காதலி மறு கன்னத்தைக் காட்டி நிற்கிறாள்.
எப்போதும் சிணுங்குபவள் மறு கன்னம் தருகிறாளே கிறிஸ்துவைப் படித்திருப்பாளோ என ஐயம் கொள்கிறான் காதலன்.
அதனால் இந்த உவமையைப் பயன்படுத்தியிருக்கலாம்.
அடுத்த சரணத்தில், கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக்கொள்ளவோ எனக் கேட்கிறான் காதலன்.
தொடுவானம் கடலைத் தொட்டுநிற்கும் காட்சி காதலனுக்கு வானம் பூமியை முத்தமிட்டு நிற்பதாகத் தெரிகிறது.
அவ்வளவு பரந்த முத்தத்தையே விலக்கிக்கொள்ள முடியவில்லையே வானத்திற்கு எனக் காதலன் பாடும்போது அவனது ஏக்கமும் ஆசையும் ஒருசேர வெளிப்படுகின்றன.
முதல் சரணத்தில் முத்தம் என்னும் சொல்லையே காதலன் பயன்படுத்தியிருக்க மாட்டான். அடுத்த சரணத்தில் முத்தத்தை வெளிப்படையாகச் சொல்வான்.
இறுதியாகப் பாடல் முடியும் தருணத்தில் பனியோ பனியின் துளியோ உன் இதழ் மீது என்ன எனக் காதலன் கேட்கிறான்,
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன எனக் காதலி காமுறுவதுடன் பாடல் முடிகிறது.
காதலுக்கும் காமத்திற்குமான முறையான பயணத்தைத் தரமான சொற்களுடன் கையாண்டவிதத்தால் இந்தப் பாடல் மனசுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக