இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஏப்ரல் 30, 2025

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் உங்களிடம் அவன் உரையாடத் தொடங்குகிறான். நீங்கள் ஆணா, பெண்ணா அவனுக்கு நீங்கள் உறவா நட்பா பகையா எதுவும் அவனுக்குத் தெரியாது. ஒருவேளை இப்போதே நீங்கள் இந்தப் பதிவை வாசிப்பதிலிருந்து விலகியிருக்கலாம். ஆனாலும், அவன் உங்களுடன்தான் உரையாடுகிறான். இது ஒரு விதமான மாய விளையாட்டு. யாருமே இல்லாத சூழலிலும் யாரையாவது உருவகித்துக்கொண்டு உரையாடுகிறான். அந்த யாரோ நீங்களாக இருக்கலாம்; நீங்களாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனது உரையாடல் தொடங்கிவிட்டது.

பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இப்போது தின மலர் என்னும் நாளிதழை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அதன் அரசியல் புரியாத அந்தச் சிறுவயதிலேயே சிறுவர் மலர் வாசித்தானா என்பது நினைவில் இல்லை. ஆனால், வாரமலரை வாசித்திருக்கிறான். இப்போது அரைவேக்காட்டுத்தனமாகத் தோன்றும் அந்து மணி பதில்கள் எல்லாம் அப்போது வாசித்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
ரத்னபாலா வாசித்தது நினைவில் உள்ளது. புத்தகங்களுக்காகப் பிறர் வீடுகளுக்குச் செல்வதும் அப்போதே தொடங்கியிருக்கிறது. அந்தச் சிற்றூரில் பேருந்து வந்துசெல்லும் ஒரே சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சிறுவயதில் போயிருக்கிறான். ஒரே தூசி மயமாக அந்த வீடு அவனது நினைவில் புரள்கிறது. அதன் நுழைவாயிலின் வளைவுகள் தூசி படிந்து ஒரு புராதனத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். வாழ்ந்துகெட்ட ஒரு வீட்டுக்கான சாயலை அந்த வீடு கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வீட்டையும் அங்கே வாசித்த புத்தகங்களையும் மனத்தில் முறையாகத் தொகுக்க அவனால் முடியவில்லை. அந்த வீடு தொடர்பான காட்சிகள் துண்டுதுண்டாக வேகவேகமாக மாறிக்கொண்டே வருகின்றன. வெவ்வேறு காட்சிகள் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன மனத்திரையில்.
உண்மையில் இவையெல்லாம் அவன் கடந்தவந்த பாதையா இல்லை அவனையே அறியாமல் மனம் புனையும் ஒரு புனைவா என்றுகூடத் தோன்றுகிறது. அங்கே ஒரு பெண்மணி சக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் செல்வார். அந்த வீட்டுக்குப் புத்தகம் வாங்கவே சென்றுள்ளான். அந்த மனிதர்களின் பெயர் எதுவும் நினைவில் இல்லை; அங்கே வாசித்த புத்தகங்கள் நினைவில் இல்லை. ஆனால், அங்கே வாசித்த நினைவை மனம் தக்கவைத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இப்படியான நினைவுகளுக்காகவா அங்கே சென்றான்? படிக்கும் காலத்தில் எத்தனையோ தகவல்களை நினைவில் தவறவிட்டு மதிப்பெண்களை இழந்திருக்கிறான். மதிப்பெண்களைப் பெற்றுதரவியலாத எத்தனையோ நினைவுகளை மறக்காமல் வைத்திருக்கிறானே? இந்த மடத்தனங்கள் எல்லாம் இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
மனிதர்களிடம் மனிதர்களை உறவுகொள்ள வைக்கும் மனித நேயம் தான் எழுத்துக்கும் வாசிப்புக்கும் அடிப்படை என்றபோதும், அவனைப் பொறுத்தவரையில் அவனுடைய வாசிப்பு அவனை மனிதரிடமிருந்து அந்நியப்படுத்துகிறதோ என்ற அய்யம் எழும்வேளையில் திடுக்கிட்டு வாசிப்பை நிறுத்திவிடுகிறான். ஆனாலும், வாசிப்பு அவனைக் கைவிடவில்லை. இளைப்பாற ஏதாவது ஓரிடம் தேவைதானே? அப்படியோரிடமாக இன்றுவரை புத்தகங்கள் தானே இருக்கின்றன.
அவன் வேலையில்லாமல் திரிந்த ஒரு காலத்தில் நண்பர் ஒருவர் அவன் கையிலிருந்த புத்தகம் ஒன்றைப் பார்த்துவிட்டு இந்த வெட்டி வேலையை விட்டுவிட்டு ஒரு நல்ல வேலையில் சேரலாமே என்று கேட்டார். அவனுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தது. ஆனால், அவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க முடியவில்லை. வாசிப்பது அப்படியொரு குற்றமாகத்தான் இன்னும் தமிழ்ச் சமூகத்தில் பார்க்கப்படுகிறதோ என்னும் அய்யம் இன்றுவரை நீங்கவில்லை. நீங்கள் கைநிறையச் சம்பாதிக்கும் வேலையில் இருந்துவிட்டு வாசித்தால் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அதே நேரத்தில் வாசிப்பதையே வேலையாக வைத்திருந்தால் உங்களை மனிதராகக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
இலக்கற்ற வாசிப்பு சரியா தவறா என்ற யோசனைகளைத் தாண்டி அவனது பொழுதுகளை அவையே எடுத்துக்கொள்கின்றன. வாசிப்பதும் குறிப்பு எடுப்பதுமாக இருக்கிறான். அவற்றை எல்லாம் என்ன செய்வான்? அவனிடம் கேட்டால் அவனுக்கும் தெரியாது. ஆனால், அவை ஏதோ ஒரு திருப்தியைத் தருகின்றன என நம்புகிறான். அந்த திருப்தி என்பது அர்த்தமற்ற ஒன்றல்லவா என நீங்கள் சிரிக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றை அவன் லட்சியம் செய்வதில்லை. அவனுக்கு அது பிடித்திருக்கிறது அல்லது அது பிடித்திருக்கிறது என நம்புகிறான்.
வாசிப்பதைப் பொறுத்தவரை தேடித் தேடி வாசிப்பதோ ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்ட புத்தகங்களை மட்டும் வாசிப்பதே என்றோ எந்த வரையறையும் இல்லை. கைக்குக் கிடைத்ததை வாசிப்பான். ஒரு நூலைக் கையிலெடுத்தால் அதை முடித்துவிட்டுத் தான் மறுவேலை என்னும் வழக்கம் அவனிடம் இல்லை. பல நூல்களை ஆர்வத்துடன் வாசிக்க முயன்றும் சில பக்கங்களைக் கடப்பதற்குள் ஆயாசமாகிவிடும். இந்தப் புத்தகத்தை வாசித்து என்ன செய்யப் போகிறோம் எனத் தோன்றிவிடும் அப்படியே மூடிவைத்துவிடுவான். விலையின்றிக் கிடைக்கும் புத்தகங்களைத் தான் வாசிக்க முடிவதில்லையோ என்ற எண்ணத்தில் கூடுமானவரை புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிக்கும் வழக்கத்தைப் பின்பற்றலாம் என முடிவுசெய்து அதைச் செயல்படுத்தியும் பார்த்தான். ஆனால், வாசிப்புக்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு நல்ல புத்தகம் அதற்குரிய வாசகரைக் கண்டடைந்து தன்னைத் தானே வாசிக்கச் செய்துகொள்ளும் என்றே எண்ணுகிறான். இது அறிவுக்குப் பொருத்தமாக இல்லாத கூற்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இப்படித்தான் வாசித்திருக்கிறான். ஏதோ ஒரு நாட்டில் பிறந்த ஏதோ ஒரு மொழியில் எழுதிய ஓர் எழுத்தாளரின் நாவலைத் தமிழில் வாசித்து லயித்துக் கிடக்கும் அவனை அவன் வசிக்கும் ஊரில் ஓர் எழுத்தாளரின் ஒரு நூல் சென்றடையவில்லை எனும் போது, ஒரு நூலுக்கும் வாசகருக்குமான தூரத்தை எப்படிப் புரிந்துகொள்வது என அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.
வாசிப்பு அவனது அறியாமையின் பரப்பை அதிகரித்தபடியே செல்கிறது. எல்லாவற்றையும் அறிந்ததுபோல் மமதை கொண்ட ஒரு வேளையில் புரட்டும் ஒரு நூலின் ஒரு வரி உனக்கு ஒரு எழவும் தெரியாது என்பதை மண்டையில் குட்டியபடி சொல்லும். என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல வரியை எழுதிவிட மாட்டோமா என்ற அங்கலாய்ப்பு அவனுக்கும் உண்டு. உருப்படியாக எதையாவது எழுதலாமே என நண்பர்கள் ஊக்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவனுக்குத் தான் உருப்படியாக எழுதுவது என்றால் என்ன என்பது தெரியவில்லை.
எதற்காக எழுத வேண்டும்; வாசிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு அவனால் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால் எழுதுவதும் வாசிப்பதும் அவற்றுக்கான விடைகளைத் தேடிக் கண்டடையும் முயற்சி என்பதை நம்பியே அவற்றைத் தொடர்கிறான்...
இந்தப் பதிவை ஏன் வாசித்தோம்... இதைவிட உருப்படியான எதையாவது செய்திருக்கலாமே என்று சலித்துக்கொள்ளும் உங்களை முன்னிருத்தித்தான் இதை எழுதினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரோ ஒரு மனிதன் எங்கேயோ இருந்து எழுதுகிறான்... அதை யாரோ ஒரு மனிதர் எங்கேயோ இருந்து வாசிக்கிறார் என்பதில் மனிதருக்கு இடையே ஓர் அரூப உறவு முகிழ்க்கிறதே அது போதாதா எழுதுவதற்கும் அதை வாசிப்பதற்கும்... (2024 ஏப்ரல் 30 அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்த பதிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்