இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மே 30, 2021

த ஸ்ட்ரேஞ்சர் (1946): அவன் ஓர் அந்நியன்


இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆர்சன் வெல்ஸின் த ஸ்ட்ரேஞ்சர் அமெரிக்கப் படம் இதே பின்னணியைக் கொண்டிருந்தபோதும், இந்தப் படம் பிறவற்றிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஒரு வெகுசனப் படத்தில் நாஜி வதை முகாம்களின் காட்சி இடம்பெறுவது இந்தப் படத்தில் முதன் முறையாக நிகழ்ந்திருக்கிறது. படம் போர்க்குற்றவாளி ஒருவரை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது ஒரு த்ரில்லர் வகைப் படமே. தூண்டிலில் புழுவை மாட்டி மீனைப் பிடிப்பது போன்ற ஒரு வேலையே முழுப் படமும். படத்தை இப்போது பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் பார்க்க முடிகிறது என்பதே படத்தின் சிறப்பாகப் படுகிறது. 

பொதுவாகவே, வண்ணப்படங்களைவிடக் கறுப்பு வெள்ளைப் படங்களே மனத்தைக் கவர்கின்றன. இந்தப் படம் 1946ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. படம் ஒன்றரை மணி நேரம்தான். ஒரு சினிமா தரக் கூடிய அத்தனை திருப்தியையும் தருகிறது படம். மிகச் சில கதாபாத்திரங்கள். இரண்டாம் உலகப் போரின்போது இன அழிப்பில் ஈடுபட்ட போர்க் குற்றவாளியான ஃப்ரான்ஸ் கிண்ட்லர் என்பவரைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு போர்க் குற்றங்களுக்கான ஆணையத்தின் துப்பறிவாளர் வில்ஸனிடம் (எட்வர்ட் ஜி ராபின்சன்) விடப் பட்டிருக்கிறது. அவர் முன்னால் உள்ள பெரிய சவால் என்னவென்றால், ஃப்ரான்ஸ் கிண்ட்லர் தனது எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டார். ஆகவே, அவர் எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் யாராக இருக்கிறார் என்பவற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதன்று. ஆனாலும், அவரைக் கண்டுபிடித்தாக வேண்டும். 

படம் தொடங்கும்போது, அந்நியர் ஒருவர் கப்பலில் இருந்து இறங்குகிறார். கான்ரெட் மெய்னகி என்னும் அந்த மனிதர் தன்னை போலந்தைச் சார்ந்தவர் என்றும் தனது உடல்நலத்தின் பொருட்டு அங்கே வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரை வில்ஸன் நியமித்த ஆள் தொடர்கிறார். மெய்னகி தேடி வந்த மனிதர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் ஹார்பர் நகரத்தில் வசிப்பதாகத் தகவல் கிடைக்கிறது. ஆகவே, மெய்னகி அங்கே செல்கிறார். அவரைத் தொடர்கிறார் வில்ஸன். 

ஹார்பர் நகரத்தில் மெய்னகி ஒருவரைச் சந்திக்கிறார். அவர் அங்குள்ள கல்லூரியில் பணியாற்றும் சார்லஸ் ரேன்கின் என்னும் பேராசிரியர். அன்று அந்தப் பேராசிரியருக்கும் அவரைக் காதலித்த மேரிக்கும் (லோரெட்டா யங்) திருமணம் நடைபெறுகிறது. அந்தத் திருமணத்துக்கு இடையே தன்னை வந்து சந்தித்த பேராசிரியரிடம் தன்னைத் தொடர்ந்த மனிதரைத் தான் கொன்றுவிட்டதாகக் கூறுகிறார் மெய்னகி. சிறிது நேரத்தில், பேராசிரியர் மெய்னகியைக் கொன்று புதைத்துவிடுகிறார். பேராசிரியர் யார், அவர் ஏன் மெய்னகியைக் கொல்கிறார், பேராசிரியருக்கும் மெய்னகிக்கும் என்ன உறவு, ஃப்ரான்ஸ் கிண்ட்லரை வில்சன் கண்டுபிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை தேடி மீதிப் பயணத்தை மேற்கொள்கிறது திரைக்கதை. 

ஆர்சன் வெல்ஸ் பேராசிரியர் வேடத்தை ஏற்றிருக்கிறார். திருமண நாளன்று ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை மறைக்க எத்தனையோ பொய்களைக் கூறுகிறார் அவர். ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும், அவர் சிறிது சிறிதாக உண்மையைச் சொல்வதுபோல் தொடர்ந்து தன் மனைவியிடம் கூடப் பொய்யையே கூறுகிறார். மிதமிஞ்சிய காதலின் காரணமாக மேரியால் கணவன் கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எது செய்தாலும் அது நல்லதுக்கே என்று நம்புகிறார். 

பார்வையாளர்களுக்குப் பேராசிரியர் யார் என்பதை இயக்குநர் தெளிவுபடுத்திவிடுகிறார். ஆனால், மேரிக்கு அவர் யார் என்பது இறுதியில்தான் தெரியவருகிறது. திரைக்கதையின் சுவாரசியம் குன்றாமல் படம் முழுக்கவும் பயணப்படுகிறது. பேராசிரியருக்கும் கடிகாரம் பழுதுபார்த்தல் என்பதன் மீது பேரார்வம். அதை அவர் தொடர்ந்து செய்துவருகிறார். அந்தப் பேரார்வம்தான் அவர் யார் என்பதையும் காட்டிக்கொடுக்கிறது.

மரங்களடர்ந்த பகுதி, டவுன் கிளார்க் நடத்தும் ஸ்டோர், அங்கே போன் செய்துகொள்ளலாம், மதுவருந்தலாம், சூதாடலாம், பொருள்களை வைத்துச் செல்லலாம், தேவாலயம், மேரியின் வீடு இப்படிச் சில இடங்களே படத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. கொலையாளிக்கும் துப்பறிவாளருக்கும் இடையே உள்ள சிறிய தூர இடைவெளியைத் திரைக்கதை சிறிதுசிறிதாக நிரப்பிவருகிறது. அந்த இடைவெளி முற்றாக இல்லாமல்போகும்போது படம் நிறைவடைந்துவிடுகிறது. 

விக்டர் ட்ரைவாஸ் எழுதிய கதைக்குத் திரைக்கதையை எழுதியிருக்கிறார் அந்தோனி வெய்ல்லர். ரஸ்ஸல் மெட்டி ஒளிப்பதிவை மேற்கொண்ட இந்தப் படத்தின் இசை ப்ரோனிஸ்லா காப்பர். சுவாரசியமாகப் பார்ப்பதற்கு உகந்த படம் இது. நல்ல சினிமா பார்க்க விரும்புவர்களுக்கான விருந்து இந்தப் படம். இந்தப் படத்துக்கான ஐஎம்டிபி ரேட்டிங் 7.4.  யூடியூபிலேயே படம் கிடைக்கிறது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். 

வெள்ளி, மே 07, 2021

மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை


திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றது திமுக. மிசா காலகட்டத்தில் தொடங்கி கொரோனா காலகட்டம் வரை பல நெருக்கடிகளை எதிர்கொண்டு சாதாரணத் தொண்டனாகத் தொடங்கிய பயணத்தில் 54 ஆண்டுகால அனுபவம் பெற்று 68 வயதில் இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார். அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களில் 15 பேர் புதுமுகங்கள். எட்டுப் பேர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள். இருவர் பெண்கள். சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நால்வர். 

கொரொனா தொற்றுப் பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் 07.05.2021 அன்று காலை எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற்றது. குடும்பத்தினர் தவிர, திருமாவளவன், வைகோ, சுபவீ, கமல் ஹாசன், சரத் குமார், ஓ.பன்னீர் செல்வம், கே.எஸ்.அழகிரி, இல.கணேசன் உள்ளிட்ட பலரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். கமல்ஹாசன் கறுப்பு  உடையில் விழாவுக்கு வந்திருந்தார். அவருடன் பொன்ராஜும் வந்திருந்தார். ஒன்பது மணிக்குச் சற்று முன்னதாக மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஸ்டாலின். கொரொனா தொற்றுப் பரவல் காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர்; சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒன்பது மணிக்கு அரங்குக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் அவருக்கு அமைச்சர்களாகப் பதவியேற்க இருப்பவர்களை அறிமுகப்படுத்தினார். 

விழா தொடக்கமாக முதலில் தேசிய கீதம் ஒலிபரப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. சரியாக 9:10க்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்... எனத் தொடங்கி உறுதிமொழி ஏற்று முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். முகக் கவசத்தைக் கழற்றிவிட்டுக் கையெத்திட்ட ஸ்டாலின் பின்னர் முகக் கவசத்தை அணிந்துகொண்டார். முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து பிற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக அமர்ந்தபடி அனைத்து நிகழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டிருந்தார். சரியாக 10:11 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு வைபவம் நிறைவடைந்தது. இறுதியாக நாட்டுப்பண் இசைக்க விழா முடிவடைந்தது. 

1. மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் 

பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புப் முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்

2. மாண்புமிகு திரு. துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சர்

சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

3. மாண்புமிகு திரு. கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

4. மாண்புமிகு திரு. இ.பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சர்

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன் 

5. மாண்புமிகு திரு. க.பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சர்

உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்ன ணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் 

6. மாண்புமிகு திரு. எ.வ.வேலு பொதுப்பணித் துறை அமைச்சர்

பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

7. மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் 

வேளாண்மை,  வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு 

8. மாண்புமிகு திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் 

வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை 

9. மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் 

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி - மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்

10. மாண்புமிகு திரு. எஸ்.இரகுபதி சட்டத் துறை அமைச்சர் 

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 

11. மாண்புமிகு திரு. சு.முத்துசாமி வீட்டு வசதித்துறை அமைச்சர் 

வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 

12. மாண்புமிகு திரு. கே.ஆர்.பெரியகருப்பன் ஊரக வளர்ச்சி துறைத் அமைச்சர் 

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் 

13.மாண்புமிகு திரு.தா.மோ.அன்பரசன் ஊரகத் தொழில்துறை அமைச்சர்

ஊரகத் தொழில்கள், குடிசைத்  தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், ஊரகத் தொழிற் துறை அமைச்சர்குடிசை மாற்று வாரியம் 

14. மாண்புமிகு திரு. மு.பெ.சாமிநாதன் செய்தித் துறை அமைச்சர் 

செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் 

15. மாண்புமிகு திருமதி. பி.கீதா ஜீவன் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் 

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம் 

16. மாண்புமிகு திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் 

மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு 

17. மாண்புமிகு திரு. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சர் 

போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, மற்றும் இயக்கூர்தி சட்டம் 

18. மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சர் 

வனம் 

19. மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் 

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு 

20. மாண்புமிகு திரு. வி.செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் 

மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்) 

21. மாண்புமிகு திரு. ஆர்.காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 

கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம் 

22. மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 

மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் 

23. மாண்புமிகு திரு. பி.மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் 

வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு 

24. மாண்புமிகு திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் 

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் 

25. மாண்புமிகு திரு. பி.கே.சேகர்பாபு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் 

26. மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை 

நிதித்துறை, திட்டம், பணியாளர்  மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் 

27. மாண்புமிகு திரு. சா.மு.நாசர் பால்வளத் துறை அமைச்சர் 

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி 

28. மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் 

சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம் 

29. மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 

பள்ளிக் கல்வி 

30. மாண்புமிகு திரு. சிவ.வீ.மெய்யநாதன் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை 

31. மாண்புமிகு திரு. சி.வி.கணேசன் தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு 

32. மாண்புமிகு திரு. த.மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 

தகவல் தொழில்நுட்பத் துறை 

33. மாண்புமிகு திரு. மா.மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சர் 

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 

34.  மாண்புமிகு திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 

ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

 

வியாழன், மே 06, 2021

நடிகரும் ஓவியருமான பாண்டு காலமானார்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; ஆயிரணக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். கொரோனா பாதிப்பு பிரபலங்களையும் விட்டுவைப்பதில்லை. பிரபலப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தொடங்கி எண்ணற்ற திரைப் பிரபலங்கள் இதற்குப் பலியாயினர். கடந்த வாரம் இயக்குநர் கே வி ஆனந்தும் குணச்சித்திர நடிகர் செல்லத்துரையும் பலியாயினர். இன்று காலை பிரபல நடிகர் பாண்டு (74) கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொமார பாளையத்தில் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 19இல் பிறந்திருக்கிறார் பாண்டு. 

எம்.ஜி.ஆரின் நண்பரும் பிரபல நடிகருமாக இருந்த இடிச்சபுளி செல்வராஜின் சகோதரர் நடிகர் பாண்டு. இடிச்சபுளி செல்வராஜ் 2012இல் காலமானார். ஓவியக் கல்லூரியில் படித்திருந்த பாண்டு, திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களையும் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்துள்ளார். வேலை கிடைச்சிடுச்சு படத்தில் இவரது நகைச்சுவை நடிப்பு கவுண்டமணி சத்யராஜ் இருவரையும் தாண்டி ரசிக்கவைத்த ஒன்று. 1970இல் வெளியான மாணவன் படம் தொடங்கி பணக்காரன் நடிகன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, கோகுலத்தில் சீதை, வாலி, சிட்டிசன், கில்லி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்டநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  தான் பயின்ற ஓவியம் அடிப்படையிலான வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் பாண்டு. இதன் மூலம் பிரபல ஆளுமைகளின் வீடுகளின் பெயர்ப்பலகைகளை அழகுற வடிவமைத்தவர் பாண்டு. குறிப்பாக, அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் இவர்தான் என்பது இவரது சிறப்பு.  தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் லோகோவை வடிவமைத்துப் பாராட்டுப் பெற்றிருக்கிறார். 

ஓவியம்தான் இவரது விருப்பமான கலை. ஓவியம் வரைய தூரிகைகளைவிடத் தனது பெருவிரலையும் பிற விரல்களையும் பயன்படுத்துவதிலேயே தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் பாண்டு. கணினித் திறனைப் பயன்படுத்தி மரபுக் கலையான ஓவியத்தில் புதிய பாணியை உருவாக்கி மகிழ்ந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் அம்பாசடர் பல்லவாவில் ஓவியக் காட்சியையும் நடத்தியிருக்கிறார். 

வியாழன், ஏப்ரல் 29, 2021

ஜீ.முருகன் சிறுகதைகள்: பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் கதைகள்


சட்டென்று வசீகரித்துவிடுகின்றன ஜீ.முருகனின் சிறுகதைகள். முதலில் அவற்றின் மொழிநடை. முரண்டுபண்ணாமல் உடன் நடக்கும் செல்லக் குழந்தைபோல் அவருக்கு ஒத்துழைக்கிறது மொழி. அடுத்தது, சிறுகதையின் நீளம். அநேகமாக எல்லாக் கதைகளுமே சிக்கனமாகவும் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுடனும் எழுதப்பட்டுள்ளன. ஆழமான சிறுகதைகளுக்கும் நீளமான சிறுகதைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்த்திவிடுகின்றன இந்தக் கதைகள்.

தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும்போது, பிரியத்துடன் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கதை சொல்லும் மூதாட்டியின் நினைவு வந்து செல்கிறது. சக மனிதருடன் உரையாட முருகன் தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறையே கதை என்பதாகவே படுகிறது. அவர் பரிமாறுவதற்கு விழையும் அனைத்துக் காரியங்களையும் கதையைச் சாக்காக வைத்துச் சொல்கிறார். கதையையும் சொல்கிறார்; அதன் வழியே உரையாடலையும் நிகழ்த்துகிறார். முன்னது மேலடுக்கில் இருக்க, பின்னது உள்ளடுக்கில் உள்ளது.

மனிதரைக் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்த்தும் வாழ்வின் துயரம், எல்லாருக்குமானது இயற்கை என்ற எண்ணமின்றித் தமக்கானது உலகம் என வாழும் மனிதரின் அத்து மீறல், ஆண் பெண் உறவில் ஏற்படும் பொருளற்ற சிக்கல், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமைத் தத்துவம் எனப் பல விஷயங்கள் குறுக்கீடு நிகழ்த்தும் வாழ்வைப் பொட்டலம் போல் பொதிந்து தந்திருக்கிறார். மானுடத் துயரத்தைத் துயரம் என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கிறார்; எழுதுகிறார். அதற்கு அதிகப்படியான சோகச் சாயையைப் பூசவில்லை. ‘வழித்துணை’கதையில் வெளிப்படும் தனிமையுணர்வு மனத்தில் பரவும்போது கதையில் மறைந்த நாயாக மனம் மாறிவிடுகிறது.

தொகுப்பின் கதைகளில் புழுவும் எலியும் நாயும் பூனையும் கழுதையும் யானையும் குரங்கும் குருவியும் பாம்பும் கிளியும் புறாவும் வருகின்றன. தமக்கான வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களும் வருகிறார்கள். ஒவ்வொரு பானையையும் வெவ்வேறு வடிவத்தில் செய்து பார்க்கும் குயவர் போல் வெவ்வேறு வடிவங்களில் கதைகளைச் செய்துபார்த்திருக்கிறார். கற்பனை யான சம்பவங்களும் நிகழ்ந்ததாக நம்பக்கூடிய சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மாய யதார்த்தக் கதைகளாக மாறியிருக்கின்றன.

ஜீ. முருகன்
துடுப்பற்ற படகு கடலின் மேலே சதா அலைவுறுவதுபோல் காமம், மரணம் இரண்டுக்குமிடையே அலைக்கழிக்கப்படும் மனித மனம் அதிலிருந்து வெளியேற ஏதோவொரு வழி தேடி அலைகிறது. அந்த மனத்தின் அலைச்சலை, உளைச்சலை உள்வாங்கி அவற்றைக் கதைகளாக்கி ஆறுதலடைகிறார் முருகன். புணர்ச்சியும் சாவும் இணைந்த புள்ளிகளால் கோலம் போட்டது போல் தொகுப்பு அமைந்திருக்கிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்களாலும் ஆண்களின் வாழ்க்கையில் பெண்களாலும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. மனச்சிதைவென்னும் அபாய விளிம்பில் நிற்கும்படியான ஆண்களைப் பல கதைகளில் காண முடிகிறது. தலையணை கட்டிலில் கிடக்கும் கோலமே ஓர் ஆணுக்குப் பெண்ணின் துரோகம் பற்றிய குரோத நினைவைத் தூண்டிவிடும் அளவுக்கு ஆணின் மனத்தில் பெண்ணின் உடம்பு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனிமையில் அழுதபடியிருக்கிறார் ஒரு தாய். விலக்க முடியாத துயரமாகத் தன் மீது கவிந்து கிடக்கும் நோயுற்ற மகனைத் தூக்கித் திரியும் தாயொருத்தி அவனைப் பிணமாகப் பார்க்கிறாள். குழந்தை சீரழிக்கப்படுவதன் வேதனை தாளாமல் தவிக்கிறான் ஓர் ஓவியன். இப்படிப் பல கதாபாத்திரங்களை வாசகருக்கு நெருக்கமாக்கியிருக்கிறது கதைகளின் கூறுமுறை.

ஒரு வகையில், சமூகத்தின் மூடாக்கை விலக்கிப் பார்க்கின்றன சில கதைகள்; சில கதைகளோ மூடாக்கை விலக்கப் பார்க்கின்றன. பாலியல் உணர்வு ‘காண்டாமிருகம்’ போன்ற கதைகளில் உள்ளாடைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; ‘இடம்’, ‘கிழத்தி’ போன்ற கதைகளில் துண்டிக்கப் பட்ட சிற்பத்தின் திமிர்ந்த மார்புபோல் வெளியே விழுந்து கிடக்கிறது. ‘பூனைகள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?’ காமம் தொடர்பான நல்ல கதை.

இரட்டை வாழ்வு நடத்தும் தோழர்களை முருகனின் எழுத்து புழுப் புழுவாய் உதிர்த்துவிடுகிறது. ‘புழு’ கதையில் சவக்கிடங்கில் கிடக்கும் பிணங்களை விழித்தெழச் சொல்லும் தோழர் ஒருவரைச் சந்திக்கும்போது, ‘விருந்தோம்ப’லில் தோழர்களைப் பெரிதாகப் பகடி செய்யவில்லை என்றாகிவிடுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பூமியில் ஆறுதலாகச் சாய்ந்துகொள்ள எந்தத் தோளுமில்லை என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இந்தக் கதைகள் அதனாலேயே ஆசுவாசமே தருகின்றன. வாழ்வு குறித்த பொய்யான நம்பிக்கைகளில் வாசகரை அமிழ்த்தும் கதைகள் அல்ல இவை. அசலான வாழ்வில் நகல்கள் பெருத்துவிட்டதைச் சொல்லும் கதைகள்.

‘பாரிச வாயு’ என்னும் கதையில் புறாவைத் தேடி அலைகிறான் கிருஷ்ணன். புறாக்களை எங்கும் காணவில்லையே என்ற பரிதவிப்புடன் தொடங்கும் கதையின் இறுதியில் புறாவை அவன் தேடுவது - தன் நாயின் நோய் தீர்க்க - புறாவின் ரத்தத்துக்காகத்தான் என்பது தெரிகிறது. தாயின் நோய் குறித்த நிலை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால், இரண்டு புறா வேண்டுமா எனக் கேட்கும்போது, சற்று யோசனை செய்துவிட்டு இப்போதைக்கு ஒன்று போதும் என்று முடிவெடுக்கும்போது அந்தத் தாயின் நிலை வாசகருக்குப் புரிகிறது. இப்படித்தான் பல கதைகளில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் சொல்லப்படாத சேதிகளை உணர்த்துகின்றன. ‘கவுண்டர் கே’ என்னும் கதை கிட்டத்தட்ட சுய விமர்சனக் கதையைப் போலவே எழுதப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள ஐம்பது கதைகளும் பெரும்பாலும் வெவ்வேறானவை. ‘இடம்’ ‘கிழத்தி’, ‘பாரிச வாயு’ ‘வேட்டை’, ‘மஹா விஜயம்’ ‘சத்திரம்’ போல சில கதைகளில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது.

வாழ்வென்னும் புதிரை அவிழ்க்க அவிழ்க்க அது முடிச்சுகளை உருவாக்கிக்கொண்டே போகிறது. அடுப்பங்கரைச் சுவரில் படியும் கரிக் கறைபோல் மனத்தில் படியும் அறிவுக் கறையை இலக்கியம் கொண்டு போக்கும் முயற்சிகளாகவே கதைகளை எழுது கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டபோதும், அதன் முரணானது மனத்தை அரிக்கிறது. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அப்படிக் கேள்விகள் எழுப்பிக் கொள்ளாதவர்கள் பாக்கியவான் கள். இந்தத் தொகுப்பு அவர்களுக் கானதல்ல. கேள்விகளில் முட்டி மோதிக் குருதி வழிய நிற்கும் மாந்தர்களுக்கான கதைகள் இவை. அந்தக் கேள்விகளை உருவாக்குவதற்கான மேடையாக அல்லது அந்த மேடையில் உரு வான கேள்விகளாக இந்தக் கதைகள் கருக்கொள்கின்றன. ஒரு பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் இந்தக் கதைகள் தனித்தும் தெரிகின்றன. கதைகளுக்கேற்ற பொருத்தமான அட்டைப்படத்துடன், நல்ல முறையில் நூலை உருவாக்கியிருக்கிறது ஆதி பதிப்பகம். வரிகளின் தொடக்கத்தில் ஒற்றெழுத்து வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

பக்கங்கள் : 400 விலை : ரூ.320
வெளியீடு:
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை 606806
தொடர்புக்கு: 9994880005

வெள்ளி, ஏப்ரல் 23, 2021

விடுதலை ராகம் பாடும் குயில்கள்

அப்போது எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தேன். அந்தச் சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி ரஜினி காந்த் நடித்த விடுதலை (1986 ஏப்ரல் 11) திரைப்படம் வெளியானது. திருநெல்வேலி நியூராயல் தியேட்டரில் படத்தை வெளியிட்டிருந்தார்கள். விடுமுறையில் குடும்பத்துடன் பேட்டை செல்லையா அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தோம். அண்ணன் பேட்டை மில்லில் வேலை பார்த்தார். 

அவர் வீட்டில் ஒரு மேசையில் டேப் ரிக்கார்டர் இருக்கும். எதிரே நாற்காலியைப் போட்டு மேசை டிராயரில் இருக்கும் கேஸட்டுகளில் எதையாவது போட்டுக் கேட்பேன். பெரும்பாலான கேஸட்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கப் பாடல்களே இருந்தன. அங்குதான் முதன்முதலில் அந்தப் பாடல்களைக் கேட்டேன். ஏனோ அந்தச் சிறுவயதில் அந்தப் பாடல்களைக் கேட்பது ஈர்ப்புக்குரியதாக இருந்தது. என்னவோ சொர்க்கமே காலடியில் கிடப்பது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். ஒருநாள் அண்ணன் என்னைப் படத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினார். அப்போது ரஜினி படம் என்றால் சோறு தண்ணிகூடத் தேவைப்பட்டிருக்காத காலம். இப்போது ரஜினி படத்தைப் பார்க்காட்டி உயிர் போகும்னு சொன்னா போகட்டும் என்று விட்டுவிட முடிகிறது. 

என்ன படம் பார்க்க விரும்புகிறாய் என செல்லையா அண்ணன் கேட்டதும், மறுபேச்சின்றி ரஜினி நடித்த விடுதலை படம் பார்க்கலாம் என்று கூறினேன். லீவு முடிந்து ஸ்கூலுக்குப் போனதும் படத்தின் கதையையும் சொல்லலாம்; படம் பார்த்த கதையையும் சொல்லலாம் என்ற ஆசைதான். அண்ணனுடன் புறப்பட்டேன். மணி பதினொன்று கிட்ட ஆகிவிட்டது. மனம் பார்க்கப்போகும் படத்தை எண்ணி பரபரப்பானது. பேட்டை மெயின் ரோட்டில் ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் கேசரி வாங்கிக் கொடுத்தார்.  ஜம்முன்னு சேரில் உட்கார்ந்து கேசரியைச் சாப்பிடும் கௌரவத்தை அண்ணன் தந்திருந்தார். அது இப்போது நினைத்தால் இனிக்கிறது. ஆனால் அன்று கேசரியைவிட சிங்க நிகர் தலைவன் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. ஆகவே, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படத்துக்குப் போக வேண்டும் என்று தான் ஆர்வமாக இருந்தது. 

தென்காசியில் படம் பதினோரு மணிக்கெல்லாம் போட்டுவிடுவார்கள். அதற்குப் பழகியிருந்ததால் நேரமாகிக்கொண்டிருக்கிறதே அண்ணன் மிக நிதானமாக இருக்கிறாரே என்றிருந்தது. கேசரி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அய்யய்யோ படம் போட்டுவிடுவானே என்றிருக்கிறது. அண்ணனோ நிதானமாக இருக்கிறார். அவரிடம் சொல்லவும் முடியவில்லை. நம்மையும் ஓர் ஆளாக மதித்து ஒருவர் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். அவரை எப்படி அவசரப்படுத்த முடியும்? 

ஒருவழியாக பஸ் பிடித்து டவுனில் இறங்கினோம். அருகிலேயே தான் ராயல் தியேட்டர். டிக்கெட் எடுத்து அவசர அவசரமா உள்ளே போனா, யார் நீ எனக் கேட்கும் வில்லனிடம் 'நான் கடவுளோட புள்ள' அப்படின்னு ரஜினி சொல்லிட்டிருக்கார். படம் போட்டு ஏழெட்டு நிமிஷமாயிருச்சு. படம் படு மொக்கை. ஆனால் அதையே மீண்டும் தென்காசி பரதனிலும் பார்த்தேன். திருநெல்வேலியில் ஏழெட்டு நிமிஷம் கழிச்சுத்தானே பார்த்தேன். ஆகவே, முதலிலிருந்து தென்காசியில் பார்த்தேன். நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க பாடல் கேட்கும்போதெல்லாம் சும்மா நரம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருக்கும்.

சிவாஜியும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களிலேயே படு தோல்வி அடைந்த இந்தப் படம் படு கேவலமான படமும்கூட. சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இந்தப் படத்தில் காக்கி உடையில் சொல்வார். சிவாஜியின் மிகை நடிப்பு அதிகமாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்கு கார் திருடன் பாத்திரம். இந்தப் படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் காட்சி அப்போது மிகவும் பிடித்திருந்தது. விஷ்ணுவர்தன் கதாபாத்திரமும் நன்றாக இருக்கும். கே.பாலாஜி தயாரித்திருந்த இந்தப் படத்தில் மாதவி, அனுராதா, விஜய குமார், பேபி ஷாலினி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே விஜயன் இயக்கிய படம். சந்திரபோஸ் இசையில் நீலக்குயில்கள் ரெண்டு பாடலும் கேட்பதற்கு இனிமையானது. இந்தியில் வெளியான குர்பானி திரைப்படத்தின் மறு ஆக்கம் விடுதலை.  ஆனால், இந்திப் படம் போல் நன்றாக அமையவில்லை தமிழ்ப் படம் என்பது அப்போதைய ரசிகர்களின் கணிப்பு. இப்போது ராயல் தியேட்டரோ, பரதன் தியேட்டரோ இல்லை என்பதும் நானும் ரஜினி ரசிகனாக இல்லை என்பதும் புரியும்போது, வாழ்க்கை, விடுதலை என்பதற்கெல்லாம் வேறு பொருள்கள் உண்டு என்று தோன்றுகிறது. 

திங்கள், ஏப்ரல் 19, 2021

காதல் வந்தால் சொல்லியனுப்பு


ரஷ்ய எழுத்தாளர்களில் பெரிதும் மதிக்கப்படுபவர்களில் ஒருவரான இவான் துர்கநேவ் 1857இல் எழுதிய குறுநாவல், ஆஸ்யா. இந்தக் குறுநாவலை அல்லது நெடுங்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் நா.பாஸ்கரன். நாவலுக்கு மொழிபெயர்ப்பாளர் தந்திருக்கும் தலைப்பு சீமானின் திருமணம். ஸ்டார் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நாவல் 1956 அக்டோபரில் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இந்த நாவலின் பிடிஎஃப் வடிவம் தமிழ்நாட்டு அரசின் பொது நூலக இயக்ககத்தின் இணையப் பக்கத்தில் கிடைக்கிறது. ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் இந்த இணையப்பக்கம் கண்ணில் பட்டது. இதில் தற்செயலாகத் தேடிப்பார்த்தபோது, சீமானின் திருமணம் என்னும் தலைப்பு சட்டென்று ஈர்த்தது. ஆகவே, அதைப் பதிவிறக்கிப் படித்தேன். 

நாவலின் மையப்பாத்திரமான மனிதர் இருபது வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அவர் வாழ்வில் வந்து, அவரை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வேறோர் இளைஞருடன் சென்றுவிட்ட இளம் கைம்பெண் ஒருவரது ஞாபகத்திலிருந்து விடுபட ரஷ்யாவை விட்டு விலகி ஜெர்மனியின் ரைன் நதிக்கரையில் ஓர் சிற்றூரில், தனிவீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார். அந்த ஊருக்கு சா... என்று மட்டும் பெயரிடுகிறார். இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. நிலக் காட்சிகளின் விவரணை அதிகமாக  இடம்பெற்றிருக்கிறது. நிலா, நதி, நாடு, மக்கள் என நாவலின் விவரணை வாசிப்பவர்களைக் கதைசொல்லியின் நிலத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

இவான் துர்கநேவ்
அந்தச் சிற்றூர் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஊரில் எலுமிச்சை மரங்கள் நிறைந்திருக்கின்றன. நதியின் மேலமைந்திருக்கும் பாலங்கள் என அந்த ஊரை வார்த்தைகளால் வடித்துவிடுகிறார். ரைன் நதிக்கரையின் ஓரத்தில் பன்னீர் மரத்தடியில் கிடக்கும் கல்லாசனத்தில் அமர்ந்து தன் வாழ்வில் வந்துபோன அந்தக் கைம்பெண் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கிடந்த அவனை (இளைஞன் தானே அதனால் அவன் என்றே குறிக்கிறேன்) ஒரு நாள் நதியின் எதிர்க்கரையிலிருந்த ஓர் இசை சப்தம் இழுக்கிறது. தன்னை நோக்கி ஒரு துயரம் இசையாக வந்துகொண்டிருக்கிறது என்பது அந்த இளைஞனுக்குத் தெரியாது. இசை மயக்கத்தில் அவன் ல என்னும் அந்த நகரத்துக்குச் செல்கிறான். 

அங்கே அவனுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த காகின் என்பவனும் அவனுடைய தங்கையான ஆஸ்யாவும் அறிமுகமாகிறார்கள். ஆஸ்யா அவனை ஈர்க்கிறாள். ஆஸ்யாவைத் தங்கை என அறிமுகப்படுத்துகிறான் காகின், ஆனால், இளைஞனுக்கு அவர்களிடையே சகோதர உறவு இல்லை என்று படுகிறது. தொடர்ந்து அவர்கள் வசிக்கும் வீட்டுக்கும் செல்கிறான். காகின் ஓர் ஓவியன். ஆஸ்யா ஒரு தனவந்தருக்கும் அவருடைய வீட்டின் பணிப்பெண்ணும் பிறந்தவர். இவர்கள் மூவருக்கும் நட்பு தொடர்கிறது. ஆஸ்யாவுக்கும் காகினுக்கும் என்ன உறவு அண்ணன் தங்கை தானா, இளைஞனுக்கு ஆஸ்யாவுடன் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன ஆனது என்பதை எல்லாம் நாவல் விவரிக்கிறது. 

இந்த நாவல் துர்கநேவ் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான நாவல் என்கிறார்கள். நாவலில் மன உணர்வுகளையே துர்கநேவ் தொடர்ந்து விவரிக்கிறார். ஒரு வகையில் இது ஒரு நிறைவேறாக் காதலையே கொண்டிருக்கிறது. ஆண் பெண் உறவின் சிக்கலைத் தான் உலகின் பெரிய பெரிய படைப்பாளிகள் கைக்கொள்கிறார்கள். ஆனாலும், அது தீர்ந்தபாடில்லை. உறவுச் சிக்கல் தீரத்தான் வாய்ப்பே இல்லையே. ஆஸ்யாவின் உருவ சித்தரிப்பைவிட அவளது மனநிலை மாற்றங்களைப் பற்றிய விவரங்களே நாவலின் முதன்மையான சித்தரிப்புகளாகியிருக்கின்றன. அவள் பதினேழு வயது நிரம்பியவள். சிறுமியா பெண்ணா எனக் குழம்பவைக்கும் பருவத்தைக் கொண்டிருக்கிறாள். பெண் மனம் எப்படியெல்லாம் ஆணால் உந்தப்படுகிறது, அதனால் என்ன பாடு படுகிறது என்பதையெல்லாம் துர்கனேவ் விவரித்துக்கொண்டே போகிறார். 


நாவல் என்று சொன்னபோதும், இது நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ரைன் நதியோட்டம் போன்ற இயல்பான நடையைக் கொண்டிருக்கிறது நாவல். வாசிப்பு சுகம், இலக்கிய இன்பம் என்றெல்லாம் சொல்கிறார்களே அவற்றைத் தேடுபவர்களுக்கான நாவல் இது. 1857இல் எழுதப்பட்ட நாவல் இது என்பதால் அந்தக் காலகட்டத்தில் ஓவியங்களும் எழுத்துகளுமே மனிதர்களை அவர்களது வாழ்க்கையை வெளியுலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தன என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டியதுள்ளது. ஆனால், நாவலின் மனவோட்டங்கள் இன்றுவரை மாறவில்லை. மனிதரின் அகச் சிக்கல் பெரிய அளவில் மாறவில்லை என்பதையே உணர முடிகிறது. இன்றும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் சிக்கலைத் தான் கையாள முடியாமல் மனிதர்கள் தவிக்கிறார்கள். அகத்தில் உருண்டு திரண்டு வரும் அன்பை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த இயலாமல் மனிதர்களை எது தடுக்கிறது? பறிபோனபின் பரிதவிக்கும் மனிதர்கள் படும்பாட்டை இலக்கியங்கள் காலாகாலத்துக்கும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. 

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்