இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூலை 31, 2016

சினிமா ஸ்கோப் 9: ரெண்டும் ரெண்டும் அஞ்சு


பொதுவாகவே திரைக்கதை என்பது ஒரு முரண்களின் விளையாட்டு. எப்போதுமே முரணான விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் பயணப்படும்போதுதான் திரைக்கதையின் சுவாரசியம் கூடும். நல்லவர் நல்லது செய்வார் என்பதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால் ஒரு தீய செயலை அவர் செய்யும்போது, அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். அப்படியான ஆர்வத்தைத் தூண்டும்வகையிலான திரைக்கதையை அமைக்கும்போது ரசிகர்களை எளிதில் ஈர்க்கலாம். 

எனவேதான் பெரும்பாலான திரைக்கதைகள் முரண்களின்மீதே களம் அமைத்துக்கொள்ளும். சின்ன தம்பி திரைப்படத்தில் குடும்ப கவுரவத்தின் சின்னமான குஷ்பு, தாலியென்றால் என்னவென்றே அறியாத பிரபுவைக் காதலித்ததுபோல் நிஜத்தில் எங்காவது நடக்குமா, காலணியைக் கழற்றிவிட மாட்டாரா? அது சினிமா, அங்கே ஒரு முரண் தேவைப்பட்டது அவ்வளவுதான்.  

முரண்களைக் கொண்டு அமைக்கப்படும் திரைக்கதையை ஒரு வகையில் குதிரை சவாரிக்கு ஒப்பிடலாம். சவாரி பிடிபட்டால் காற்றாகப் பறக்கலாம். இல்லையென்றால் காற்றில் பறக்க நேரிடும். இந்த உண்மை புரியாமல் பலர் இதில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். சினிமா பார்க்கும்போது திரைக்கதை என்பது மிகவும் சாதாரணமாகத் தோன்றும். இதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்கு எழுதவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பின்னர்தான் அதன் நடைமுறைச் சிரமத்தை உணர்வார்கள். 


ஒருவர் நன்றாகப் படித்திருப்பார், புலமைபெற்றவராக இருப்பார். ஆங்கிலம் அவருக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கும். ஆனால் அவற்றை நம்பி அவர் ஒரு திரைக்கதையை எழுதத் துணிந்தால் விழி பிதுங்கிவிடும். அதே நேரத்தில் இன்னொருவர் எதுவுமே பெரிதாகப் படித்திருக்க மாட்டார். பள்ளிப் படிப்பையே பாதியில் விட்டுவிட்டு வந்திருப்பார். வெட்டியாகப் பொழுதைக் கழிப்பவராக இருப்பார், ஆனால் சுவாரசியமான திரைக்கதைகளாக எழுதிக் குவிப்பார்.

இதுவே முரண் தானே? இது எப்படிச் சாத்தியம். இதை அறிவால் அறிந்துகொள்ள முயன்றால் தோல்வியே மிஞ்சும். இதை உணர்வுரீதியில் அணுகினால் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அப்படியான உணர்வுகொண்டோரால் தான் திரைக்கதையை உருவாக்க முடியும். ஏனெனில் அது ஒரு குழந்தையைக் கையாள்வது போன்றது. அதற்கு அறிவு அடிப்படைத் தேவையல்ல, ஆனால் இங்கிதமான உணர்வும் கரிசனமும் இன்றியமையாதவை. திரைக் கதாபாத்திரங்கள் வெறும் நிழல்கள். ஆனால் அவற்றை ரசிப்பவர்கள் ரத்தமும் சதையுமான மனிதர்கள். இந்தப் புரிதலுடனும் நெகிழ்ச்சியான உணர்வுடனும் கதையைக் கட்டுக்கோப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இயல்பான சம்பவங்களால் கட்டி நகர்த்திச் செல்லும் திறமை இருந்தால்போதும், சின்னச் சின்ன சம்பவங்களில் ரசிகர்களை நெகிழ்த்திவிட முடியும். 

அப்படியான காட்சிகள்தான் ரசிகர்களை ஈர்க்கவும் செய்யும். கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நெகிழ்ச்சி என்பது அதன் வரம்பைக் கடந்துவிடாமலிருக்க வேண்டும். இல்லையென்றால் ரசக்கேடாய் அமைந்துவிடும். இந்த வரம்பைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, சேரனின் தவமாய்த் தவமிருந்து போன்ற திரைப்படங்களைப் பாருங்கள். உங்களுக்கே புரிந்துவிடும்.


திரைக்கதையில் ஒரு காட்சி அதிகாலை புலர்வது போல் இயல்பாகத் தொடங்க வேண்டும்; மாலையில் கதிரவன் மறைவது போல் கச்சிதமாக நிறைவுபெற வேண்டும். இதற்கான பயிற்சியைக் காலமும் அனுபவமும் தான் கற்றுத்தரும், லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பின்னிரவில் நடிகை ஸ்ரீவித்யா வீட்டின் பண்ட பாத்திரங்களை எடுத்துப் போட்டு விளக்கிக்கொண்டிருப்பார். பல குடும்பங்களில் இந்தக் காட்சியை அன்றாடம் நாம் பார்த்திருப்போம். அதைத் திரைப்படத்தில் பார்க்கும்போது நமக்கு உணர்வெழுச்சி ஏற்படுகிறது. 

இப்படியான சின்னச் சின்ன இயல்பான சம்பவங்கள் ஒரு படத்தில் இருந்தாலே அந்தப் படம் ரசிகர்களுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். இந்தக் காட்சியை அமைக்கப் பெரிய அறிவு அவசியமல்ல. ஆனால் வீடுகளில் அம்மாக்கள் செய்யும் அப்படிப்பட்ட வேலைகளைக் கண்களால் அல்லாமல் மனதால் கவனித்திருக்க வேண்டும். அப்படிக் கவனித்திருந்தால் பொருத்தமான ஒரு தருணத்தில் அதேவிதமான காட்சியை அமைக்கலாம். 

நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் ஒரு சம்பவத்தைத் திரைக்கதையில் கொண்டுவரும்போது கற்பனை வளத்துடன் அந்தக் காட்சி அமைய வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு ஆவணப் படத் தன்மை வந்துவிடும். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் ஆவணப் படத் தன்மையிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படியான விதிகளையொட்டி காட்சி அமையும்போது ரசிகர்களின் உணர்வோடும் அது கலந்துவிடும். இதைப் போல் வெயில் திரைப்படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் பாண்டியம்மாளும் முருகேசனும் தீப்பெட்டிகள் இறைந்துகிடக்கும் வீதியில் பேசியபடி நடந்துசெல்லும்போது சாக்குகளை உதறிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வரும். இதைப் போன்ற அவர்கள் வாழ்வில் பார்த்த ஒரு விஷயத்தை ரசனையுடன் பதிவு செய்யும்போது ரசிகர்கள் கிளர்ந்தெழுந்துவிடுவார்கள்.


இப்படியான காட்சிகள் திரைக்கதையில் கைகூடுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதற்கான பொறுமை இன்றி திரைக்கதையில் கைவைத்தால் வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, மெரினா, நந்தலாலா, தாரை தப்பட்டை, இறைவி போன்ற படங்களைப் போல் படம் அமைந்துவிடலாம். தரக் குறைவான படங்களை எடுக்கக் கூடாது என்ற விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகத் தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம், அதிலிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

உன்னதமான உலகத் திரைப்படங்கள் உங்களை மெருகேற்றுவது போல் தமிழ்ப் படங்களும் உங்களை மேம்படுத்தும். தரமான படத்தில் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தரமற்ற படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உலகப் படங்களுடன் இணைந்து உள்ளூர்ப் படங்களையும் பாருங்கள்; அப்போது தான் சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.

கே.பாக்யராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் திரைக்கதையை அமைத்துச் செல்லும் விதத்தைப் பாருங்கள். பெரிய மெனக்கெடுதல் இல்லாமல் மிகவும் இயல்பான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே சென்று திரைக்கதையை அமைப்பார்கள். அடிப்படையில் ஏதாவது ஒரு முரண் மட்டும் இருந்துகொண்டேயிருக்கும். உதாரணமாக, எந்தப் பெண்ணும் குழந்தையைக் கீழே போட்டுத் தாண்டி பொய் சொல்ல மாட்டாள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி ஒரு பெண்ணால் பொய்ச் சத்தியம் பண்ண முடிகிறது என்பதை வைத்தே அவர் முந்தானை முடிச்சு என்னும் படத்தை உருவாக்கினார். 


அந்தப் பொய்ச் சத்தியத்தின் பின்னணியில் ஓர் உண்மை அன்பு மறைந்திருக்கும். அதுதான் திரைக்கதையின் மைய நரம்பு. அதன் பலம் ரசிகர்களை இறுதிவரை படத்துடன் பிணைத்திருக்கும். ஆகவே, பிரயத்தனத்துடன் காட்சிகளுக்காக மூளையைச் சூடாக்கிக்கொள்வதைவிட நமது வாழ்வில் நாம் கடந்த, கேள்விப்பட்ட சம்பவங்களை, நிகழ்வுகளைப் பொருத்தமான இடங்களில் பொருத்தமான வகையில் பொருத்திவிட்டால்போதும் திரைக்கதை வலுப்பெறும்.

புதன், ஜூலை 20, 2016

சினிமா ஸ்கோப் 8: அழியாத கோலங்கள்


தாவணி அணிந்த கண்ணுக்கினிய பெண் மார்கழி மாதத்தில் வீட்டின் முற்றத்தில் போடும் அழகிய கோலம் போன்றது சினிமாக் கதை. அது நேரிடையானது. ஆனால் திரைக்கதை அப்படியல்ல. அது ஒரு தேர்ந்த ஓவியன் வரையும் ஓவியம் போன்றது. எங்கோ தொடங்கி எங்கோ முடியும் அது. ஆனால் அந்தப் பணி முடிவடையும்போது முழு ஓவியத்தையும் நம்மால் ரசிக்க முடியும்.

திரைக்கதையை எழுதுவது எப்படி என்பதைப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால் அதைவிட எளிதான வழி திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியே புரிந்துகொள்வதுதான். ஏனெனில் இந்த முறையில் உங்களுக்கு யாரும் கற்றுத் தர மாட்டார்கள். நீங்களே ஒவ்வொன்றாகக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு கதாபாத்திரத்தை எப்படி அமைக்கிறார்கள், அந்தக் கதாபாத்திரம் எப்படித் திரைக்கதைக்கு உதவுகிறது, திரைக்கதையில் அந்தக் கதாபாத்திரம் பற்றிய தகவல்களை ஒரே நேரத்தில் விளக்குகிறார்களா, துண்டு துண்டாக விளக்குகிறார்களா? ஒரே நேரத்தில் தருவதற்கும் வெவ்வேறு தருணங்களில் தருவதற்கும் என்ன வேறுபாடு? 

பெரும்பாலான படங்களின் திரைக்கதையில் தொடர்புடைய அனைத்துக் கதாபாத்திரங்களையும் படம் தொடங்கிய பத்து இருபது நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்திவிடுகிறார்களே அது ஏன்? இப்படியான கேள்விகளை நீங்களே எழுப்பிக்கொண்டு படங்களைப் பார்க்கத் தொடங்கினால், நீங்கள் பார்க்கும் படங்களே உங்களுக்கு விடைகளைத் தரும். அப்படியான கேள்விகளுடன் நீங்கள் படங்களை அணுகும்போது கிடைக்கும் விடை உங்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும். ஏனெனில் நீங்களே முட்டி மோதி கண்டறிந்த உண்மை அது. அதன் வீரியத்துக்கு இணையே இல்லை.


குறைந்த தகவல்களைக் கொண்டு கதாபாத்திர சித்தரிப்பை நிறைவுசெய்வது நலம். தகவல்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்ற எல்லை வகுத்துக்கொண்டால் மிக முக்கியத் தகவல்கள் மட்டுமே அதில் இடம்பெறும். ஆகவே அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பு கச்சிதமாக அமையும். ரசிகர்களுக்கும் அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் பிடித்துவிடும். குறைந்த தகவல்களிலேயே நிறைவான கதாபாத்திரத்தை உருவாக்கிவிடுகிறாரே திரைக்கதையாசிரியர் என்ற ஆச்சரியம் ரசிகருக்கு ஏற்படும். அந்த ஆச்சரியத்துடன் திரைக்கதையை அவர் நம்பிக்கையுடன் பின்தொடர்வார்.

அடுத்து, திரைக்கதைக்குத் தேவையான விளக்கங்கள் மட்டுமே அதில் இடம்பெறுவது நல்லது. இருட்டில் நடக்கும்போது வெளிச்சத்துக்காகக் கையில் விளக்கை ஏந்திச் செல்வோம். அப்போது பாதையில் வெளிச்சம் விழும்படிதான் விளக்கைப் பிடித்துச் செல்வோம். அப்படி நடந்துகொண்டால்தான் கவனம் தவறாமல் நடக்க முடியும். சுற்றுப்புறங்களில் வெளிச்சத்தைச் சிதறவிட மாட்டோம். ஏதாவது சத்தம் கேட்டாலோ அவசியம் ஏற்பட்டாலோ மட்டுமே சுற்றுப்புறங்களில் வெளிச்சம் பாய்ச்சுவோம். திரைக்கதையிலும் அதே போல்தான் செயல்படுவது நல்லது. திரைக்கதையின் பாதையிலேயே போக வேண்டும். அநாவசிய விளக்கத்துக்குள் சென்றுவிட்டால் திரைக்கதையின் பாதையும் திசையும் தப்பும். ஆகவே திரைக்கதைக்கு எது தேவையோ அதை மட்டும் விவரித்துச் சென்றால்தான் முடிவை நோக்கி சீராக நகர முடியும்.  


பாசிலின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியான படம் பூவிழி வாசலிலே. மலையாளப் படமொன்றின் மறு ஆக்கப்படமான இது ஒரு த்ரில்லர் வகைப் படம். கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வேணு கோபால் என்பவரை அவருடைய கம்பெனி எம்.டி. ஆனந்தும் ரஞ்சித் என்னும் உதவியாளரும் கத்தியால் குத்திக் கொல்கிறார்கள். கொலைக்கான காரணம் பெண் விவகாரம். கொலையை பென்னி என்ற குழந்தை பார்த்துவிடுகிறது. பென்னியைத் தேடிவரும் அதன் தாய் ஸ்டெல்லாவும் பார்த்துவிடுகிறார். கொலைகாரர்கள் ஸ்டெல்லாவைக் கொன்றுவிடுகிறார்கள். பென்னி தப்பித்துவிடுகிறான்.

மனைவியையும் குழந்தையையும் இழந்து சாக வேண்டும் என்னும் துடிப்புடன் வாழும் ஜீவாவிடம் வாழ வேண்டிய இந்தக் குழந்தை தஞ்சமடைகிறது. குழந்தைக்கு ராஜா என்னும் பெயரிட்டு அழைக்கிறான் ஜீவா. அவன் ஒரு முன்னாள் டென்னிஸ் ஆட்டக்காரன், அத்துடன் ஓவியனும்கூட. ஜீவாவின் மனைவி சுசிலா தன் குழந்தை ராகுல் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டவள். சுசிலா புத்திபேதலித்துப் போனவள். தன் கணவன் தன் குழந்தையைக் கொன்றுவிடுவான் என்னும் பயம் அவள் மனத்தைப் பேயாய் ஆட்டுகிறது. இந்த எண்ணம் முற்றிய நிலையில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. அது நடந்த தினம் நவம்பர் 18. அதேபோல் ஒரு நவம்பர் 18-ல் தான் ஜீவாவிடம் ராஜா வந்து சேர்கிறான். ராஜா மூலமாக யமுனா அறிமுகமாகிறாள். இவள் கங்காவின் தங்கை. கங்கா மைக்கேல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவள் (இந்த கங்கா வேறு யாருமல்ல. ஸ்டெல்லாதான்). எனவே குடும்பத்துக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது ராஜாவுக்கும் யமுனாவுக்கும் சித்தி மகன் உறவு. இப்படிப் போகிறது கதை.


படம் முழுவதும் ஒவ்வொரு இழையாக நெய்யப்படும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான தகவல்கள் அனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தரப்படும். ஒரு கொலை அதற்கான பின்னணி, அதனால் ஏற்படும் விளைவு என ஒரு புதிர் விடுபடுவது போல் படத்தில் ஒவ்வொரு முடிச்சாக விடுபடும். த்ரில்லர் என்றபோதும் படத்தில் வெளிப்படும் மனித உணர்வுகள் முக்கியமானவை. அந்த உணர்வுகள் இல்லாது வெறும் த்ரில்லராக மட்டும் இருந்திருந்தால் இந்தப் படம் நம் கவனத்தில் நிலைத்திருக்காது. தன் சோகத்தை ஜீவா ராஜாவிடம் விவரிப்பான். காது கேட்காத, பேச முடியாத ராஜா அதைக் கேட்டுக்கொண்டிருப்பான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளருக்கு கதாபாத்திரங்கள் மீது உறவும் பிரியம் கூடும். பேச இயலாத 3 வயதுக் குழந்தையை வைத்து அழகுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்ற உத்தியே இதைத் தனித்தன்மை கொண்ட படமாக்குகிறது. ஆகவே இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் திரைப்பட அனுபவம் அலாதியானது.

பூவிழி வாசலிலே போலவே குறிப்பிடத் தகுந்த மற்றொரு த்ரில்லர் புதிய பறவை. சிவாஜியின் நடிப்பில் தாதாமிராஸியின் இயக்கத்தில் உருவான படம். ஆங்கிலப் படத்தின் தழுவலில் அமைந்த வங்காளப் படத்தின் மறு ஆக்கம் இது. பூவிழி வாசலிலே படத்தில் பாசம் என்றால் புதிய பறவையில் காதல். அதன் மையமும் கொலைதான். ஆனால் சாட்சி கிடையாது. கொலையைச் செய்தவரே ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கான திரைக்கதையை வலுப்படுத்துகிறது உணர்வுபூர்வமான காதல். ஆக என்ன கதை என்றாலும் திரைக்கதையில் மனித உணர்வுகளுக்குப் பிரத்யேகமான இடம் வேண்டும். அப்படி இருந்தால்தான் ரசிகர்களால் படத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். அப்படியான படங்கள் தரும் சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. எல்லாப் படங்களும் மனிதர்களுக்காக அவர்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.

புதன், ஜூலை 13, 2016

சினிமா ஸ்கோப் 7: ஒரு கைதியின் டைரி



திரைப்படத்தின் முதல் படி கதை. அடுத்த படி திரைக்கதையே. திரைக்கதை திரைக்கதை என்கிறார்களே அதற்கும் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம் எனத் தோன்றலாம். ஒரு கதையைச் சுவாரசியமான சம்பவங்களைக் கொண்ட ரசிக்கும்படியான காட்சிகளாக மாற்றும் உத்திதான் திரைக்கதை. கரும்பு போன்றது கதை என்றால் வெல்லம் போன்றது திரைக்கதை. ஆனால் அதை அரிசி மாவுடன் சேர்த்து சுவையான அதிரசமாக மாற்றும்போது அதற்குக் கிடைக்கும் ருசியே தனி. கைப்பக்குவமான சமையல்காரரிடம் அரிசி மாவும் வெல்லமும் சென்று சேர்ந்தால்தானே நமக்கு சுவையான அதிரசம் கிடைக்கும். அதைப் போலவே நல்ல கதையை, சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய திரைக்கதையாக மாற்றி ரசனையான சினிமாவாக மாற்றக்கூடிய மாயாஜாலம் அறிந்தவர் இயக்குநர். திரைக்கதையை இயக்குநரே உருவாக்கிக்கொள்ளலாம் அல்லது பிறரை வைத்தும் எழுதச் செய்யலாம்.

திரைக்கதையைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் திரைக்கதை எழுதுவது எளிதல்ல. திரைக்கதையை எழுத ரசனையுணர்வும், வாழ்வனுபவமும் தேவை. எப்படிச் சொன்னால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பது பற்றிய அனுபவ அறிவு இருந்தால்தான் திரைக்கதையை எழுத முடியும். இல்லாவிட்டால் எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பதாக முடிந்துவிடும். டி.ராஜேந்தரும் திரைக்கதை எழுதுகிறார், பாரதிராஜாவும் திரைக்கதை எழுதுகிறார். எது நம்மை ஈர்க்கிறது என்பதே திரைக்கதையின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். 

பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி

கதை என்றால் கதாநாயகன் எப்படிப்பட்டவன் என்பதைப் பக்கம் பக்கமாக வசனமெழுதி சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் வசனமற்ற காட்சி மூலமே சொல்லிவிடலாம். உதாரணமாக ‘பாட்ஷா’ படத்தின் ஒரு காட்சி. ஆட்டோ டிரைவர் மாணிக்கமான ரஜினிகாந்த் கல்லூரி முதல்வரான சேது விநாயகத்திடம் பேசும் காட்சியை நினைத்துப் பாருங்கள். அவர்கள் கண்ணாடி அறைக்குள் பேசிக்கொள்வார்கள். எனவே எந்த வசனமும் கிடையாது. ரஜினி பேசப் பேச, சேதுவிநாயகத்திடம் பதற்றமும் பயமும் கூடும். அவர் மரியாதையுடன் தானாக எழுந்து நிற்பார். காட்சியின் முடிவில் வெளியேவரும் ரஜினி தன் தங்கையான யுவராணியிடம் ‘உண்மையைச் சொன்னேன்’ என்று கூறும்போது திரையரங்கமே அதிரும். மாணிக்கம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக பம்பாயைக் கலக்கிக்கொண்டிருந்த டான் என்பதை அழகாக, எந்த வசனமுமின்றி மிகவும் அநாயாசமாக விளக்கிவிடுகிறாரே சுரேஷ் கிருஷ்ணா. இதுதான் திரைக்கதையின் பலம். ஆனால் இந்தக் காட்சி ரஜினி போன்ற ஒரு நடிகருக்கு எடுபடும். இதுவே ஒரு புதுமுக நடிகர் என்றால் காலைவாரிவிட்டுவிடும். ஆக எந்த நடிகருக்கு, எந்தக் கதைக்கு எப்படியான திரைக்கதை அமைக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவை அனுபவம்தான் கற்றுத்தரும். 

திரைக்கதையில் முக்கியமான விஷயம் லாஜிக்தான். சில லாஜிக்களை மீற வேண்டும். சில லாஜிக்களுக்கு நியாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் சில லாஜிக் மீறல்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதை ஏற்பார்கள் எதை மறுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அது தெரியாமல்தான் திரைக்கதை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியாமல் திரைத்துறையினர் தடுமாறுகிறார்கள். ‘சின்னக் கவுண்டர்’ படத்தில் விஜய்காந்த் கொங்கு பாஷையா பேசினார்? ஆனால் படம் வெற்றிபெற்றதே! ஆடவே தெரியாத ராமராஜன் ‘கரகாட்டக்கார’னாக நடித்து படம் வெள்ளிவிழா கொண்டாடியதே! ஆக லாஜிக் மீறல் சினிமாவில் தவிர்க்க முடியாதது. ஆனால் அதை மிகச் சாமர்த்தியமாகக் கையாளத் தெரிய வேண்டும். அந்த சாமர்த்தியம் எல்லோருக்கும் எப்போதும் வாய்க்காது என்பதில்தான் சினிமாவின் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.



‘ஒரு கதையின் டைரி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதியால் வஞ்சிக்கப்படும் தொண்டனான டேவிட் அரசியல்வாதியையும் அவனுக்கு உடந்தையான இரு நண்பர்களையும் பழிவாங்குவதே கதை. இந்தக் கதைக்குப் பல திருப்பங்களும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் கொண்ட திரைக்கதையை அமைத்திருப்பார் பாரதிராஜா. அயோக்கியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மகனை அயோக்கியனாக வளர்க்கச் சொல்லி நண்பன் வேலப்பனிடம் தந்துவிடுகிறான் டேவிட். சிறைக்குச் சென்ற டேவிட் 22 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியே வருகிறான். நண்பனோ அவனைக் காவல் துறை அதிகாரியாக வளர்த்துவிடுகிறான். ஆகவே வயது முதிர்ந்த நாயகனே பழிவாங்கலில் ஈடுபடுகிறான். முதியவன் பழிவாங்கத் துடிக்கிறான். இளைஞன் அதைத் தடுக்க முயல்கிறான். எதிரும் புதிருமான இடத்தில் தந்தையும் மகனும் இருக்கிறார்கள். இப்போது நிலைமை என்ன ஆகும் என்ற ஆவலை ஏற்படுத்தி, கடமை, காதல், பாசம், பழிவாங்கும் உணர்ச்சி எனத் திரைப்படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறார் பாரதிராஜா.


குற்றமிழைத்த மூவரும் 22 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்களா? டேவிட் வந்து பழிவாங்க வேண்டும் என்றே காத்திருப்பார்களா? 22 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த கைதியான டேவிட் எப்படித் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடுகிறான்? எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி சிலை மனிதனாக மாறி இறுதிக் கொலையை நிகழ்த்துவது சாத்தியமா? இப்படியான பல கேள்விகளை நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த லாஜிக்கான கேள்விகளைக் கேட்கவிடாமல், உங்களை உணர்ச்சியில் ஆழ்த்திவிடும் நெகிழ்ச்சியான தருணங்களை உள்ளடக்கிய திரைக்கதை. டி.ஐ.ஜி.யின் மகளான ரேவதி டேவிட்டான கமலை, ஒரு கொலைகாரரைத் தனது வீட்டிலேயே தங்கவைக்கிறார். சட்டப்படி அவர் செய்வது தவறு, ஆனால் அதைச் செய்வதில் தவறில்லை எனச் சொல்லும்வகையிலான உணர்ச்சிகரமான சம்பவத்துடன் திரைக்கதையைப் பின்னியிருப்பார் பாரதிராஜா. இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் திரைக்கதை. ஆனால் அதை எப்படி லாவகமாக இழுக்க வேண்டும் என்ற ஞானத்தைக் கற்க பொறுமையும் அர்ப்பணிப்பும் தேவை.


டாக்டர் உன்னிகிருஷ்ணனுக்கு டேவிட் போனில் பேசும் காட்சி ஒன்றில், ‘நான் இங்கே இருப்பது உனக்கெப்படித் தெரியு’மென டாக்டர் கேட்பார். அப்போது டேவிட், பரிசித்து மகராஜாவின் கதையைச் சொல்லிச் சமாளிப்பார். டாக்டர் அங்கே இருப்பது டேவிட்டுக்கு எப்படித் தெரியும் என்பதை அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே சொல்லாமல் கடந்துசெல்லும் சாமர்த்தியம் அது. திரைக்கதையில் இப்படிச் சில சமாளிப்புகளைச் சமயோசிதமாக செய்யும் திறமை இருந்தால்தான் நல்ல திரைக்கதையை உருவாக்க முடியும். ஒரே விஷயம், லாஜிக் மீறல்களை உணராதபடி பார்வையாளரின் கவனத்தைத் திருப்பி திரைக்கதையை நகர்த்திச் செல்ல வேண்டும். ஏனெனில் அடிப்படையில் சினிமா ஓர் ஏமாற்றுக் கலை. திரைக்கதையில் புத்திசாலித்தனமாக ஏமாற்றத் தெரிந்தால் போதும் சினிமாவை வெற்றிக்கு நகர்த்தலாம். ‘சைலன்ஸ்’ என எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுத்தான் டைரக்டர், ‘ஆக்‌ஷன்’ எனக் கத்தி சினிமாவின் படப்பிடிப்பையே தொடங்குவார். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு நீங்கள் கத்துகிறீர்களே எனக் கேட்க முடியாது, இந்த முரண்தான் சினிமா.

புதன், ஜூலை 06, 2016

சினிமா ஸ்கோப் 6: புது வசந்தம்




தமிழில் கதைகள் அநேகம், கதையாசிரியர்களும் அநேகர். திரையுலகிலேயே எத்தனையோ உதவி இயக்குநர்கள் நல்ல கதைகளுடன் ஒரே ஒரு வாய்ப்புக்காகச் சுற்றித் திரிகிறார்கள். ஆனால் பிற மொழியில் பெரிய வெற்றிபெற்ற படங்களின் மறு ஆக்க உரிமையைப் பெறுவதில் தமிழ்த் திரையுலகம் காட்டும் ஆர்வத்தைத் தமிழ்க் கதைகளைக் கண்டடைவதில் காட்டுவதில்லை என்பதுதான் யதார்த்தம். சமீபத்தில் வசூல் சாதனை படைத்த பிரேமம் மலையாளப் படத்தின் மறு ஆக்க உரிமையைப் பெறுவதில் தமிழ்த் தயாரிப்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவியது. கெய்கோ ஹிகாஷினோ என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் நாவலைப் போன்ற கதைதான் த்ரிஷ்யம். ஜப்பானிய நாவலின் அடிப்படையில் சஸ்பெக்ட் எக்ஸ் என்னும் திரைப்படமும் வெளியாகி அங்கு பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. த்ரிஷ்யம், சஸ்பெக்ட் எக்ஸ் ஆகிய இரண்டு படங்களையும் பார்த்தால் இரண்டும் ஒரே கதை என்பதை யாரும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் த்ரிஷ்யத்தின் இயக்குநர் ஜீத்து ஜோஸப் தனது படம் சஸ்பெக்ட் எக்ஸின் தழுவலோ நகலோ அல்ல எனத் தைரியமாக மொழிந்தார். கமல் ஹாசன் அதை உண்மை என ஏற்றுக்கொண்டு அந்தக் கதையைப் பாபநாசம் என்னும் பெயரில், ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் மறு ஆக்கம் செய்து பெருமை தேடிக்கொண்டார். உத்தமவில்லனின் தோல்வியால் துவண்டிருந்த கமல் ஹாசனுக்கு இந்தப் படம் உற்சாகம் கொடுத்து தூங்காவனம் என்னும் மற்றொரு மறு ஆக்கப் படத்தை உருவாக்கவைத்தது. இந்தப் போக்கு, ஒரு புதிய கதைக்குத் திரைக்கதையை உருவாக்கும் சவாலை எதிர்கொள்ளத் திரையுலகினர் அச்சப்படுகிறார்களோ என்னும் சந்தேகத்தை எழுப்புகிறது. 


தமிழ்க் கதையாசிரியருக்கு ஆயிரங்களில் ஊதியம் கொடுக்கவே பலமுறை யோசிக்கும் திரையுலகம் மறு ஆக்க உரிமையைப் பெற வரிசையில் நிற்கிறது, லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கிறது. ஒருவேளை தமிழிலேயே நல்ல கதையை உதவி இயக்குநர் ஒருவரிடம் கண்டறிந்தாலும் அவரை ஏய்த்து, அந்தக் கதையை அபகரித்து, அல்லது குறைந்த விலைக்கு வாங்கி யாரோ ஒரு புகழ்பெற்ற இயக்குநரின் பெயரில் படத்தை உருவாக்கும் போக்கும் நிலவுகிறது என்பது கவலை தரும் செய்தி. வெற்றிபெற்ற பல படங்களின் கதைகளுக்குப் பலர் உரிமை கொண்டாடிவருவது அனைவரும் அறிந்தது. பெரும் தோல்வி அடைந்த லிங்கா படத்துக்குக்கூட ஒருவர் உரிமை கொண்டாடி நீதிமன்றத்தின் படியேறினார். வறுமையை நீக்க வேறு வழியற்ற உதவி இயக்குநர்கள் தங்கள் கதையைத் சொற்பத் தொகைக்குத் தாரைவார்த்துவிட்டு அதன் வெற்றியை யாரோ கொண்டாடுவதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மறு ஆக்க உரிமை மூலம் கிடைக்கும் வருவாயின்பொருட்டே இப்படிக் கதைகளுக்கான டைட்டில் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் இது எவ்வளவு பெரிய அநீதி. அறம் போதிக்கும், கருணையை முன் மொழியும் திரைப்படங்களை உருவாக்குவதில் பேரார்வம் கொண்ட திரைக் கலைஞர்களிடம் மலிந்துகிடக்கும் இந்த அவலத்துக்கு யாரைக் குற்றம்சாட்டுவது?



ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, அவர் தமிழில் பரவலான அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். அவரைத் தமிழில் குறிப்பிடத்தகுந்த ஓர் இயக்குநர் அழைக்கிறார். தனது புதிய படம் பற்றிய சில தகவல்களையும் ஆலோசனைகளையும் கேட்கிறார். கதையாசிரியரும் எழுத்தாளருமான அவரும் இயக்குநர் யாசித்த உதவியைச் செய்வதாக வாக்களிக்கிறார். எல்லாப் பேச்சுகளும் நிறைவுற்று சன்மானம் என்ற இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். பிடிகொடுக்காமல் நழுவுகிறார் இயக்குநர். அவர் சுற்றிவளைத்து தெரிவித்த விஷயம், உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேனே அதுவே சன்மானம்தான் என்பதாக முடிகிறது. தன்மானம் தலைதூக்க எழுத்தாளர் இருகைகூப்பி விடைபெற்றுவிட்டார். இந்த எழுத்தாளர் யார், இந்த இயக்குநர் யார் என்ற விவாதம் அவசியமல்ல. ஆனால் தமிழின் சூழல் இப்படித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தால் போதும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. எழுத்தாளர் ஒரு கதையை உருவாக்க எந்தச் செலவும் செய்வதில்லை என்று நினைப்பது அறிவுடைமையா? முழு நேர எழுத்தை நம்பிச் செயல்படுபவர்கள் பாடு இன்றும் கவலைக்கிடமானதுதான் என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அவமானமில்லையா? சில கதையாசிரியர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு அவர்களின் சமூக மதிப்பை உத்தேசித்து கருணை காட்டும் திரையுலகம் தான் பயன்படுத்தும் அத்தனை எழுத்தாளர்களையும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியமல்லவா?


தமிழ்க் கதைகளுக்கும் கதையாசிரியர்களுக்கும் உரிய கவுரவம் கொடுத்து, சன்மானம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நம் மண் சார்ந்த, நம் பண்பாட்டை எடுத்தியம்பும் கதைகளைத் திரைப்படங்களாக காணும் வாய்ப்பு உருவாகும். எத்தனையோ உணர்வுசார் செய்திகளும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தினந்தோறும் நடந்தேறிவருகின்றன. இவை குறித்த கதைகளை யாராவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் உங்கள் அருகில் கூட இருக்கலாம். அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி தேவை. அவற்றின் மீது நம்பிக்கை தேவை. ஓர் எழுத்தாளரது கதைகளுக்கு உரிய மதிப்பும் ஊதியமும் கிடைத்தாலே போதும் அவர் திருப்தியுறுவார். திரைப்படத்தின் அடிப்படை விஷயமான கதை விவகாரத்தில் இவ்வளவு கஞ்சத்தனம் காட்டிவிட்டுப் பின்னர் படம் தோல்வி அடைந்த உடன் வருந்துவது சரிதானா? கதைகளின் தேர்வு குறித்து ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் திரையுலகம் இறங்க இனியும் தாமதிப்பது சரியா? தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாடிவிட்டது. இன்னும் பழைய பாதையிலேயே பயணம் மேற்கொள்ளலாமா?


புது வசந்தம் படத்தில் முரளி, சித்தாரா

பிற மொழிப் படங்களைப் பார்ப்பது நமது சினிமா மொழியை விஸ்தரித்துக்கொள்ள உதவும் என்பது உண்மை. திரை நுட்பங்களுக்கான அறிவைப் பெற்றுக்கொள்ள அவை உதவும். தொழில்நுட்பம் வளர்ந்து கிடக்கும் இந்நாட்களில் நம் மண்ணின் அசலான படைப்பை உருவாக்கினால் அவற்றை வாங்க பிற மொழியினர் வரிசையில் வருவார்கள். மீண்டும் பாரதிராஜா, மகேந்திரன் எனத் தான் சுட்ட வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய கதைகள் நம் கதைகள் தானே. நமது ஆதார பிரச்சினைகளைத் தானே அவர்கள் படமாக்கினார்கள். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளியான அந்தப் படங்களை இன்னும் பேசுவது எதற்காக. அவை பரப்பிய அசலான மண்ணின் மணத்துக்காகத் தானே?  எழுபதுகளில் 16 வயதினிலேயும், எண்பதுகளில் ஒரு தலை ராகமும், தொண்ணூறுகளில் புது வசந்தம், சேது, இரண்டாயிரத்தில் சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் இங்கேயுள்ள கதைகளைக் கொண்டு தானே சரித்திரம் படைத்தன. தமிழ்த் திரையுலகுக்கும் இலக்கிய உலகுக்கும் இப்போது ஓரளவு ஆரோக்கியமான உறவு உள்ளது போலத் தான் தோன்றுகிறது. தமிழ்க் கதை பற்றிய தேடலைத் தொடங்க இது சரியான தருணம் தான்.

சனி, ஜூலை 02, 2016

இருளில் மூழ்கிய வெளிச்சம்


பெயரில் மட்டுமல்ல தம் புனைவுகளிலும் பெரும் புதுமைகளை மேற்கொண்டவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரைப் போல் தன் புனைபெயருக்கு நியாயம் சேர்ந்த பிறிதொரு எழுத்தாளரைக் கண்டுபிடிப்பது அரிது. நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த புதுமைப்பித்தனின் எழுத்துகள் அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கௌரவமான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்துகளை யார் பிரசுரித்தாலும் அவற்றை வாங்கிக்கொள்ள ஒரு பெரும் வாசகர் கூட்டம் இருக்கிறது. இந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனத்தைப் புதுமைப்பித்தனுக்குப் பெற்றுத்தந்ததில் புதுமைப்பித்தன் வரலாறு என்னும் இந்நூலுக்குக் கணிசமான பங்கிருக்கிறது.

இது புதுமைப்பித்தனது அனைத்து வாழ்க்கைச் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் விரிவாக விளக்கும் வரலாறு அல்ல, ஆனால் இந்த நூலின் வழியே புலப்படும் புதுமைப்பித்தனின் ஆளுமை வாசக மனத்தில் கல்வெட்டுப் போல பதிந்துவிடுகிறது. அதன் முக்கியக் காரணம் தொ.மு.சி.ரகுநாதனின் பள்ளத்தில் பாயும் தெள்ளிய நீரைப் போன்ற நடை. புதுமைப்பித்தனின் உருவம், பழக்க வழக்கம், பழகும் தன்மை என அவரது ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் திரட்டித் தந்துவிடும் முயற்சியை நூலில் உணர முடிகிறது.      

1906 ஏப்ரல் 25 அன்று திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த புதுமைப்பித்தன் 1948 ஜூன் 30 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில் பத்திரிகை, இலக்கியம், திரைப்படம் போன்ற காரணங்களுக்காகத் திருநெல்வேலி, திருவனந்தபுரம். புனே எனப் பல்வேறு திசைகளில் வாழ்க்கை அவரை அலைக்கழித்திருக்கிறது. அவருக்கு எட்டு வயதானபோது அவருடைய தாயார் வையத்திலிருந்து விடைபெற்றுவிட்டார். அன்னையின் பராமரிப்போ பாசமோ கிட்டாத நிலையில் பால்யத்தைக் கடந்த புதுமைப்பித்தனின் நெஞ்சில் தாயன்பு குறித்த ஏக்கம் நிரந்தரமாகவே தங்கிவிட்டது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் தன் மகளுக்கு பர்வதகுமாரி எனத் தாயாரின் பெயரைச் சூட்டவைத்திருக்கிறது. தந்தையுடன் சுமூக உறவு அற்ற அவரை மனைவியின் அன்புதான் மலரச் செய்திருக்கிறது. மனைவியை விட்டு வெகுதூரத்தில் இருக்க நேர்ந்த நாட்களில்கூட அவரை ஆற்றுப்படுத்தி அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்திருக்கிறது அவருடைய அன்பு. கலைமகளின் கருணையால் எழுத்தாளராகப் பெரும் புகழைப் பெற்ற நேரத்தில் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுத் திருமகளின் திருவுளத்தையும் சம்பாதிக்க முயன்ற புதுமைப்பித்தனை எமன் அழைத்துக்கொண்டான்.

புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் மகத்தான எழுத்தாளர் என்ற பெருமிதம் நெஞ்சில் எழுகிறது. ஆனால் வாழ்ந்த காலத்தில் புதுமைப்பித்தன் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களைப் பக்கம்தோறும் பேசுகிறது இந்நூல். தினசரி வாழ்வை நடத்தவே திண்டாடிய அவருடைய எழுத்துகள் இப்போது பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பது நகைமுரணே. எழுத்தைத் தொழிலாகக் கொண்ட எழுத்தாளரின் வாழ்வைக் காலமென்னும் கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதில்லை, சிறிதுகூட விட்டுவைக்காமல் மொத்தமாக அரித்துவிடுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது புதுமைப்பித்தனின் வாழ்க்கை.

புதுமைப்பித்தனின் எழுத்துகளை அறிந்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் இந்நூல் அவருடைய சிறுகதை ஒன்றைப் போல் விறுவிறுப்பாகச் செல்கிறது.   சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்புகள். கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பெரிய ராஜாங்கத்தையே பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்பியிருக்கிறார் புதுமைப்பித்தன். இப்படியொரு கலைமேதையின் வாழ்க்கை வரலாற்றை வெறும் 28 வயதில் எழுதி முடித்திருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். புதுமைப்பித்தன் வரலாறு என்னும் இந்நூல் முதல் பதிப்பு கண்டது 1951-ல். முதலில் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட இந்நூலின் அடுத்தடுத்த பதிப்புகளை 1958-ல் ஸ்டார் பிரசுரமும் 1980-ல் மீனாட்சி நிலையமும் பின்னர் என்.சி.பி.எச். 1991-லும் வெளியிட்டிருக்கின்றன. கணக்குக்கு ஐந்தாவது படைப்பான இந்நூலை, புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்பை உருவாக்கியிருப்பவரும் தமிழின் குறிப்பிடத்தகுந்த வரலாற்றாய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதியின் விரிவான முன்னுரையுடன் காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றுக்கான நல்ல பொருள் என முன்னுரையில், புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் பதிப்பாசிரியர் சலபதி கூறியிருப்பது சத்தான வாசகம் மட்டுமல்ல சத்தியமான வாசகமும்கூட. அந்தப் பொருளுக்குச் சுவையும் சுவாரசியமும் கூட்டுவதற்காகத் தன்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறார் அவர். 04.03.1978 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் தொ.மு.சி.ரகுநாதனை சுந்தர ராமசாமி செய்த நேர்காணல் இந்நூலுக்கு முழுமையைக் கூட்டும் முனைப்பின் விளைவே. புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றில் சில இடங்களில் காணப்படும் வெற்றிடங்களை இந்த நேர்காணல் நிரப்புவதால் புதுமைப்பித்தன் குறித்த முழுமையான சித்திரத்தைத் தீட்டுவதற்கு இது உதவுகிறது. இது தவிர, பின்னிணைப்பில் இந்த நூலில் பெயர் குறிப்பிடாத ஆளுமைகள் யார் யாரென்ற தகவலைத் தந்திருக்கிறார் சலபதி. இது இலக்கிய ஆர்வலருக்கும் ஆய்வாளருக்கும் பெருந்துணையாக அமையும். தமிழ் எழுத்தாளர்களுக்கு முறையான வரலாறு எழுதப்படாத சூழலில் ரகுநாதன் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த வரலாற்று நூல் சிறப்பான ஆக்கமாக இருப்பதால் இதை வறண்ட சூழலில் பூத்த அத்தி என முன்னுரையில் சலபதி குறிப்பிடுவது மிகப் பொருத்தமே.

புதுமைப்பித்தன் வரலாறு
தொ.மு.சி.ரகுநாதன்
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001
தொலைபேசி: 04652278525

இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 02.07.2016 அன்று தி இந்துவில் வெளியானது. 

புதன், ஜூன் 29, 2016

சினிமா ஸ்கோப் 5: ஆறிலிருந்து அறுபது வரை

குஷி படத்தில் விஜய், ஜோதிகா
சினிமா பேசத் தொடங்கிய நாள் முதலே அழுத்தமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையே நாம் ரசித்துவந்திருக்கிறோம். அதிலும் சுவாரசியமான திருப்பங்களும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களும் கொண்ட கதைகளே நமக்குத் திருப்தி அளிக்கின்றன. சினிமா தொடங்கிய பத்து நிமிடத்துக்குள் கதை ஆரம்பிக்கவில்லை என்றால் நெளியத் தொடங்கிவிடுகிறோம். கதை ஆரம்பிப்பது என்றால் அந்தப் படத்தின் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ வேண்டும். படத்தின் எஞ்சிய பயணத்தைத் தீர்மானிக்கும் வலுவான காட்சி ஒன்று தொடக்கத்தில் இடம்பெற்றுவிட வேண்டும். உதாரணமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், காதலனும் காதலியும் சேர்ந்துவிடுவார்கள் என்று கதையின் முடிவைச் சொல்லியே படத்தைத் தொடங்கினார் இயக்குநர்.

காதலர்கள் இணைந்துவிடுவார்கள் என்று தெரிந்தபோதும் அவர்கள் எப்படி இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களைத் தொடர்ந்து படம் பார்க்கவைத்தது, ரசிகர்கள் படத்தின் இறுதிவரை ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார்கள். ஆக, படம் தொடங்கிய அந்தப் பத்திருபது நிமிடங்களுக்குள் திரையரங்கில் ஆர்வத்துடன் கூடியிருக்கும் ரசிகர்களைத் திரைப்படம் எந்த வகையிலாவது தன் வசப்படுத்திவிட வேண்டும். இந்தப் படம் பார்ப்பதற்கு உகந்தது, நமக்கானது என்ற நம்பிக்கையை அது விதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் திரைப்படத்திலிருந்து உணர்வுரீதியாக விலகிவிடுவார்கள். பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் திரைப்படத்துடன் பிணைப்பது இயலாத காரியமாகிவிடும்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படக் காட்சி

ரசிகர்களுடன் அந்தரங்கமான உறவைப் பேணும் சினிமாவுக்கான கதை மிக எளிமையாக, உணர்வுபூர்வமானதாக இருந்தால் போதும். அறிவுஜீவித்தனமான கதையைவிட உணர்வுபூர்வமான கதையே ரசிகர்களைக் கவர்கிறது. உலகம் முழுவதுமே எளிய கதைகள்தாம் பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. சில்ட்ரன் ஆஃப் ஹெவன், பைசைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ என எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அவற்றின் கதைகள் எளிமையானவை, உணர்வுகளால் பொதியப்பட்டவை. சில்ட்ரன் ஆஃப் ஹெவனில் ஒரு சாதாரண ஷூதான் படத்தின் மைய இழை. தன் இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக ஷூ வாங்கித் தர வழியில்லாத ஏழைக் குடும்பம், அவர்களுடைய உணர்வுப் போராட்டம், ஷூவால் அந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவைதான் அந்தப் படம். இந்தப் பிரச்சினையை உலகின் எந்த நாட்டினரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிடாதா, அவர்கள் வாழ்வில் மேம்பட்டுவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்கும் திரைப்படப் பாத்திரங்களுக்கும் இடையே வெள்ளித்திரை மறைந்துவிடுகிறது. நம்மில் ஒருவர் என்று கதாபாத்திரங்களுடன் உறவை மானசீகமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியான ஓர் உறவு ரசிகர்களுக்கு உருவாகிவிட்டால் போதும். அதன் பின்னர் எதையும் பார்க்க அவர்கள் தயாராக இருப்பார்கள். சாமானிய மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாடச் சம்பவங்களோடும் சிக்கல்களோடும் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். 


ஆட்டோகிராஃப் படத்தில் சேரன், பத்மப்ரியா

இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் பெரிய காதல் காவியமல்ல. சேரனும் தமிழகத்து சத்யஜித் ராய் அல்ல. எனினும் சாதாரணமான அந்தப் படம் பெரிய வெற்றியை ஈட்டியது. அந்தக் கதையை சினிமாவுக்கான கதை அல்ல என்றே பலர் தட்டிக்கழித்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் தம் வாழ்வில் பல காதல்களைக் கடந்துவந்த ரசிகர்கள், அந்தப் படத்தின் கதைநாயகனுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது தங்கள் படம். தங்கள் வாழ்வைச் சொல்லும் படம். அவ்வளவுதான். அதனால்தான் சேரனின் அமெச்சூர்தனமான நடிப்பையும் மீறி அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இத்தகைய உணர்வு கொந்தளிக்கும் திரைப்படங்களுடன் நாம் எளிதாகப் பிணைப்பு கொள்கிறோம். தமிழில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தனது படங்களின் கதைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். மதுரை வீரன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண் என அவரது எல்லாப் படங்களும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான கதைகளைக் கொண்டவை. அப்படியான கதைகளைத் தேர்வுசெய்வதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

ஏழைப் பங்காளன் என்ற தனது கதாபாத்திர வார்ப்புக்கு உதவும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகள்மீது ஆர்வம் காட்டினார். அவர் ஒரு ஆபத்பாந்தவன் என்னும் நம்பிக்கையை அவரது திரைப்படப் பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் விதைத்தன. அதனால்தான் அவரால் அவ்வளவு ரசிகர்களை ஈர்க்க முடிந்தது. அவருடைய கதாபாத்திரங்களைப் போலவே எம்.ஜி.ஆரும் இருப்பார் என்ற நம்பிக்கையை அந்தப் படங்கள் உருவாக்கின. ஆகவே அவரால் சினிமாவைக் கடந்தும் வெற்றிகளைப் பெற முடிந்தது. 


எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர்.

ஒரு படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதைவிட அது எல்லோரையும் கவரக்கூடியதாக, உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். சினிமாவுக்குக் கதை எழுத முற்படுபவர் வாழ்க்கை சார்ந்த அனுபவத்தைப் பெற்றிருத்தல் நல்லது. வாழ்க்கையைத் துளித்துளியாக அனுபவித்துப் பார்த்த ஒருவருக்குத் தான், அதை ரசமான சம்பவங்களாக மாற்றும் ரசவாதம் கூடிவரும். அத்தகைய ரசவாதம் கூடிய கதைகளே திரைப்படத்தில் மாயாஜாலங்களை ஏற்படுத்தும். ஒரு கதையைச் சொல்லும் விதத்தில்தான், அதாவது திரைக்கதையின் அமைப்பில்தான், அது மாறுபடுகிறது. ஒரு கதை எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ, அப்படியே அது திரையில் சொல்லப்படுவதில்லை. ஆகவே சினிமாவுக்குக் கதை எழுத மூளையைக் கசக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் கதாசிரியர் இதயத்தில் உணர்வு நிரம்பியிருக்க வேண்டும்.

கதைகளில் அன்பு, பிரியம், பாசம், காதல், பிரிவு, துரோகம், எதிர்ப்பு, வீரம் போன்ற பல சங்கதிகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமைத்துத் தர வேண்டும். இவற்றை உள்ளடக்கிய கதைகளை எழுதினால் போதும், சுவாரசியமான திரைப்படத்துக்கு உத்தரவாதம் உண்டு. தீவிர இலக்கியப் படைப்பை உருவாக்கத் தேவைப்படும் மொழியியல் நிபுணத்துவம் சினிமாவுக்குக் கதை எழுத அவசியமல்ல. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக, நேரிடையாக விவரிக்கத் தெரிந்தால் போதும். கதையை எழுதிவிடலாம். பெரிய பெரிய வாக்கியங்கள், வாசகன் அறிந்திருக்காத புதிய புதிய சொற்கள் என எழுத்தாளர் தன் மொழி அறிவை எல்லாம் கொட்டி எழுதுவது போன்ற முயற்சி சினிமாக் கதை எழுதத் தேவையில்லை. இதனாலேயே யார் வேண்டுமானாலும் கதையை எழுதிவிடலாம் என நம்பிப் பலர் மோசம் போகிறார்கள். அதுதான் சோகம். புத்திசாலித்தனமான ரசிகர்கள் சினிமாவை இன்னும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.

புதன், ஜூன் 22, 2016

சினிமா ஸ்கோப் 4: சொல்ல மறந்த கதை

பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த்


ஒரு படம் பார்க்கிறோம், அது குறித்து எழும் முதல் கேள்வி படம் எப்படி என்பதே. பதில் சொல்கிறோம். அடுத்த கேள்வி, கதை என்ன என்று வந்து விழும். ஏனெனில், கதைக்குச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வளவுநமக்குக் கதை கேட்கப் பிடிக்கும். பாட்டியிடம் கேட்ட கதை, அம்மா சொன்ன கதை, அப்பா கூறிய கதை நண்பர்களுடன் பேசிய கதைகள் என வாழ்நாள் முழுவதும் கதைகளாகவே பேசுகிறோம். வாழ்வில் நாம் கடந்த சம்பவங்களைச் சிறிது புனைவு கலந்து கதைகளாகவே பிறரிடம் சொல்கிறோம். கதைகளைப் பேசுவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் கேட்பதிலும் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

எனவே, நம்மைப் பொறுத்தவரை சினிமாவும் நன்றாகக் கதை சொல்ல வேண்டும் எனவே விரும்புகிறோம். அது கதை சொல்லும் ஓர் ஊடகம்தானே. என்ன ஒன்று, சினிமாவில் கதை காட்சியாகவும், இசையாகவும், சிறு வசனம் வழியேயும், அரங்கப் பொருள் மூலமாகவும் என வெவ்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது. சிறுகதையிலோ நாவலிலோ கதையாசிரியர் எல்லாவற்றையும் எழுத்தில் விவரித்துத் தருவார்மனத்திரை உதாரணமாக, கதையில், “அவன் பத்திரிகையொன்றைப் புரட்டிக்கொண்டு அறை ஒன்றில் அமர்ந்திருந்தான். வெளியே வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன. இன்னும் அவளைக் காணவில்லை. வழக்கமாக இதற்கு முன்னரே வந்து வீட்டின் வேலைகளை முடித்திருப்பாள். ஏன் அவள் இன்னும் வரவில்லை என்ற கேள்வி அவன் மனத்தை அரித்துக்கொண்டே இருந்ததுஎன்று எழுதப்பட்டிருந்தால் வாசகர்கள் அவற்றுக்கான காட்சியைத் தாங்களே தங்கள் மனத்திரையில் உருவாக்கிப் பார்த்துக்கொள்வார்கள்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவு, அந்த அறை எப்படி இருந்தது, வெளியே என்ன மாதிரியான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தனஇதையெல்லாம் அவர்கள் மனம் காட்சிகளாக உருவாக்கும். தாங்கள் கடந்து வந்த அத்தகைய தருணம் ஒன்று சிந்தனையில் வந்து போகும். இவையெல்லாம் சேர்ந்த கலவையான உணர்வை அந்தக் கதை தரும். ஆக வாசகரின் கற்பனைக்கு வேலை உண்டுஆனால், சினிமாவில் அந்தக் கற்பனையை இயக்குநர் தலைமையிலான படக் குழுவினர் உருவாக்கித் தர வேண்டும். பார்வையாளரின் வேலை எளிது. ஐநூறு, அறுநூறு பக்கங்களில் சொல்லப்படும் வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேரத்துக்குள் சினிமாவில் சொல்லிவிட முடியும்.

இப்படிச் சொல்ல முடிவதாலேயே அது அதிகக் கற்பனையைக் கோரும் கடினமான பணியாகவும் மாறிவிடுகிறது. அதுதான் இயக்குநரின், படக் குழுவினரின் முன்னர் உள்ள பெரும் சவால். அதை அவர்கள் எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே சினிமாவின் கலைரீதியான வணிகரீதியான வெற்றி அமைகிறதுஒரு படத்தின் முதல் வேலை எதுவென்று நினைக்கிறீர்கள்? கதையைத் தேர்வு செய்வதுதான். கதையைச் சிலர் தாங்களே எழுதுகிறார்கள். சிலர் பிறரிடம் பெறுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதை சொல்லத் தெரிந்தால்தான் திரைப்படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை நிலைமை. ‘இயக்குநருக்கும் கதைக்கும் என்ன தொடர்பு, கதை என்பது கதையாசிரியனின் வேலை அல்லவா?’ என்று எந்தத் தயாரிப்பாளரும் கேட்பதுமில்லை.


நடிகர் கமல்ஹாசன்

ஒரு நல்ல கதையை உங்களால் தயாரிப்பாளரோ அவரைச் சேர்ந்தவர்களோ ரசிக்கும்படி சொல்லத் தெரியவில்லை என்றால் உங்களது இயக்குநர் கனவு வெறும் பகல் கனவுதான். நீங்கள் வைத்திருக்கும் கதை என்ன என்று கேட்டால் ஓர் உதவி இயக்குநர்ஓபன் பண்ண உடனே...’ எனத் தொடங்கி படத்தின் திரைக்கதையை ஷாட் பை ஷாட்டாகச் சொல்லத் தொடங்கிவிடுவார். அவருடைய விவரிப்பில் படத்தின் திரைக்கதையைத்தான் நீங்கள் கேட்டிருப்பீர்கள். கதைக்கும் திரைக்கதைக்குமான புரிதல் இந்த அளவிலேயே இருக்கிறதுஇந்தப் புரிதல் இல்லாமலேயே படங்கள் உருவாக்கப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான 'இறைவி' வரை இந்தச் சிக்கல் இருக்கிறது. கதைக்குப் பொருத்தமான திரைக்கதை அதில் அமைக்கப்படவில்லை. கதையின் அழுத்தத்தை உணராமலே கனமான அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்எனவே, திரைக்கதையைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் போயிருக்கிறது. ஒரு கதையை எதற்காகச் சொல்கிறோம், எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது போன்ற தெளிவு இல்லாவிட்டால் இயக்குநரின் பாடு சிக்கலாகிவிடும். இதை உணர்ந்துகொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் இறைவிஆக, எண்சாண் உடம்புக்குத் தலை எப்படியோ அப்படியே செல்லுலாய்ட் சினிமாவுக்குக் கதை. எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும் ஒரு படத்தின் கதை ரசிகர்களுக்குத் திருப்தி தரவில்லை என்றால் அந்தப் படத்தை ரசிகர்கள் புறக்கணித்துவிடுகிறார்கள்.

ரஜினிகாந்த் பெரிய சூப்பர்ஸ்டார்தான். அவர் நடிக்க வேண்டாம், வந்து நின்றாலே போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்று கதை பேசுவார்கள். ஆனால், அவர் நடித்த எல்லாப் படங்களும் வெற்றிபெற்றவையா? அவர் ஆன்மிகக் கனவுடன் உருவாக்கிய 'பாபா' அவருக்கு மிகப் பெரிய தோல்வியாகத்தான் அமைந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பங்கும் இருந்தது. அந்தப் படத்துக்காக ராமகிருஷ்ணனை அழைத்து வந்ததையே ஒரு கதை போல் சொல்வார்கள். ஆனால் கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய நடிகர் படத்துக்குக் கதை எதற்கு என்பார்கள். எப்போது? படம் வெற்றிபெறும்போது. அதே நடிகரின் படம் தோற்கும்போது, கதையே இல்லாமல் எப்படி ஒரு படம் வெற்றிபெறும் என்று கேட்பார்கள்அதனால்தான்நான் யானையல்ல, குதிரைஎன்று வசனம் பேசிய ரஜினிகாந்த், லிங்காவில் கிடைத்த அனுபவம் காரணமாக, புதுக் கதையும் பார்வையும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்; ரஞ்சித் என்னும் புது இயக்குநரைத் தேடி வந்திருக்கிறார். இங்கே ரஜினிகாந்தும் அவருடைய படங்களும் வெறும் உதாரணங்கள்தான். இது எந்த நடிகருக்கும் பொருந்தும்


எழுத்தாளர் சுஜாதா

ஆகச் சிறந்த நடிகர் என மதிக்கப்படுபவர் கமல்ஹாசன், அவரே கதை எழுதுவார்; திரைக்கதை எழுதுவார்; வசனம் எழுதுவார்; பாடல் எழுதுவார்; என்றாலும் எப்போதும் யாராவது ஓர் எழுத்தாளரைப் பக்கத்தில் வைத்துக்கொள்வார். சுஜாதா, பாலகுமாரன், கிரேசி மோகன், ஜெயமோகன் எனப் பலர் கமலின் படத்துக்குப் பங்களித்திருக்கிறார்கள். இவர்களின் கதைத் திறமையையும் எழுத்துத் திறமையையும் முடிந்த அளவு கமல் கறந்துவிடுகிறார்அதுதான் அவரது கெட்டிக்காரத்தனம். ஆக, ஒரு படத்தின் வெற்றியை எது வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால், தோல்வியை மோசமான கதை தீர்மானித்துவிடும். அதனால்தான் கதை பற்றி இவ்வளவு கதைக்க வேண்டியிருக்கிறது. வசூலைப் புறந்தள்ளிவிட்டு யோசித்தால் எந்த நடிகருக்கும் பெயரை வாங்கித் தந்த படம் அழுத்தமான கதை கொண்டதாகவே இருக்கிறது.

10.06.2016 அன்று தி இந்துவில் வெளியானது

< சினிமா ஸ்கோப் 3 >                                 < சினிமா ஸ்கோப் 5 >

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்