இந்த வலைப்பதிவில் தேடு

எம்.ஜி.ஆர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.ஜி.ஆர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 21, 2017

சினிமா ஸ்கோப் 34: நான் மகான் அல்ல

திரைக்கதைகளுக்கு நடிகர்களைத் தேடுவதற்கும் நடிகர்களுக்குத் திரைக்கதை எழுதுவதற்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசமிருக்கிறது. திரைக்கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேடும்போது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைகளை மட்டும் வெளிப்படுத்தினாலே போதும். கதாபாத்திரத்தின் குணாதிசயம் புரிந்துவிடும். நாயக நடிகர்களுக்குத் திரைக்கதை எழுதும்போது அவர்களின் குணநலன்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றையும் சேர்த்துதான் ரசிகர்கள் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்வார்கள். நடிகர்களுக்குப் பொருந்தாத குணாதிசயத்தைக் கதாபாத்திரத்திடம் தவிர்த்திட வேண்டும். இல்லையென்றால் அந்தக் கதாபாத்திரம் எடுபடாது. அதனாலேயே நடிகர் எம்.ஜி.ஆர். தனது படங்களில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் குடிப்பது போலவோ புகைப்பது போலவோ காட்சிகள் அமைப்பதைத் தவிர்த்தார். அப்படியான காட்சிகள் தனது இமேஜைச் சரித்துவிடக்கூடியவை என நம்பிச் செயல்பட்டார் அவர்.  

எம்.ஜி.ஆர். இயல்பில் நல்லவரா கெட்டவரா என்பது வேறு விஷயம். ஆனால், ரசிகர்கள் பார்க்க விரும்பிய நல்ல எம்.ஜி.ஆர். மட்டுமே திரையில் காட்சி தந்தார். கதாபாத்திரங்களது குணாதிசயம் நடிகர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாகவே அவர் அந்தப் புரிதலைக் கொண்டிருந்திருக்கலாம். எனவேதான், புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, புதுமுக நடிகர்களைக் கொண்டு அல்லது தனக்கெனப் பெரிய இமேஜ் ஏதுமற்ற நடிகர்களைக் கொண்டு பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஒருதலை ராகம், புதுவசந்தம், சேது, சுப்பிரமணிய புரம், சூது கவ்வும் எனப் பல உதாரணங்களைச் சுட்ட முடியும். இப்படியான படங்களின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், அந்த நடிகர்கள் பற்றிய முன்முடிவுகள் எவையும் ரசிகர்களிடம் இருக்காது.     

எச்சில் கையால் காக்காவைக்கூட விரட்டாதவர் என்று பெயர் எடுத்த நடிகரை வைத்துக் கொடைவள்ளல் ஒருவரைப் பற்றிய கதையை உருவாக்கும்போது, ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டியதிருக்கிறது. உதாரணத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த லிங்கா படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றிருந்த கதாபாத்திரம் தனது சொத்தை எல்லாம் விற்று ஊருக்காக அணைகட்டுவது போல திரைக்கதை அமைந்திருக்கும். அது சாத்தியமா என்பதை ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் வைத்துத் தீர்மானிக்கவில்லை கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகரின் குணநலன்களையும் பரிசீலித்தே தீர்மானித்தார்கள். ஆகவே, அந்தத் திரைக்கதை எடுபடாமல் போனது.  

அதே போல் ஒரு திரைக்கதையை எந்தக் காலகட்டத்தில், யாருக்காக எழுதுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே உத்தியை எப்போதும் பின்பற்றும் போக்கும் ஆபத்தானது. லிங்கா திரைப்படம் எண்பதுகளில் வெளியாகியிருந்தால் ஒருவேளை அது மிகப் பெரிய வெற்றியைக்கூடப் பெற்றிருக்க முடியும். அன்று ரஜினி காந்த் என்ற நடிகருக்கு மிகப் பெரிய இமேஜ் இருந்தது. சமூக வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி ரஜினி காந்தின் முகமூடியை அகற்றியிருக்கிறது. இந்தச் சூழலில் வெளியான லிங்காவின் திரைக்கதை ரசிகர்களுக்கு அந்நியமாகப் பட்டிருக்கலாம்.


இந்தப் படத்தின் தோல்வி தந்த பாடத்தாலேயே அதன் பின்னர் வெளியான கபாலி என்ற ரஜினி காந்த் படம் தலித் படம் என்று முன்னிருத்தப்பட்டு வெற்றியை நோக்கி நகர்த்தப்பட்டது என்பதாகவும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ரஜினி காந்த் என்னும் நடிகருக்கான திரைக்கதையை எழுதுவது பெரிய கம்ப சூத்திரமல்ல; ஆனால், ஏழு கடல் தாண்டி, எட்டு மலை தாண்டிச் சென்று திரைக்கதையைப் பெற்று வந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டும். அருணாச்சலம் என்னும் சாதாரணப் படத்துக்காக என்னவெல்லாம் கதைகள் பரப்பப்பட்டன என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். ரஜினி காந்தை முன்வைத்துச் செய்யப்படும் பலகோடி ரூபாய் வியாபாரத்தின் பொருட்டே இந்தத் திரைக்கதைக்காக, இந்தத் திரைப்படத்துக்காக எப்படி எல்லாம் சிரமப்பட்டிருக்கிறோம் என்ற விஷயங்களை எல்லாம் படம் தொடங்கிய நாள் முதலே ஊடகங்களின் உதவியுடன் பார்வையாளர்களிடம் பரப்புகிறார்கள். 

ரஜினியைப் பொறுத்தவரை, அவர் திரைப்படங்களில் ஏழைகளுக்கு உதவுவார்; பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பார்; அநியாயங்கள் கண்டு பொங்குவார்; அம்மா, தங்கை என்றால் நெகிழ்வார். மொத்தத்தில் திரைப்படங்களில் அவர் ஓர் ஏழைப் பங்காளன்; ஒரு நவீன கால ராபின்ஹூட். பெரும்பாலான திரைப்படங்களில் இப்படியான திரைக்கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவந்தவர் அவர். 


எப்போதுமே வலுவான திரைக்கதையிலேயே திறமையான நடிகரின் பங்களிப்பு பளிச்சிடும். ரஜினி காந்தின் படங்களின் திரைக்கதையை வலுவேற்றுவதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை இணைத்துக் காட்சிகள் அமைக்கப்பட்டதும் தமிழ்த் திரை கண்ட ஒன்றே. தமிழில் பெரிய வெற்றிபெற்ற மன்னன் படம் அனுராகா அருளிது என்னும் கன்னடப் படத்தின் மறு ஆக்கம்தான். இந்தப் படத்தில் விஜயசாந்தி ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்கு எதிராக ரஜினி காந்த் பேசும் வசனங்கள் அரசியல்ரீதியாக அவருடைய ரசிகர்களால் அர்த்தம்கொள்ளப்பட்டன. மன்னன் படத்தில் ரஜினி காந்த் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பார். 'அடிக்குது குளிரு...' என்னும் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஜன்னி வந்துவிடும். என்றபோதும் அந்தப் படம் பெற்ற வெற்றிக்குத் தமிழக ரசிகர்களின் இந்தப் புரிதலும் காரணமானது.  

இதற்கு அடுத்து வெளிவந்த அண்ணாமலை படத்தில் இந்த அரசியல்ரீதியான வசனங்கள் படு வெளிப்படையாகவே அமைக்கப்பட்டிருந்தன. வினுச்சக்ரவர்த்தி ஏற்றிருந்த ஏகாம்பரம் எனும் அரசியல் கதாபாத்திரத்துக்கு எதிராக ரஜினி பேசும் வசனங்கள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரானதாக ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டுப் பலத்த கைதட்டலைப் பெற்றுத் தந்தன. அண்ணாமலையின் மூலப் படமான ஹூத்கர்ஸ் என்னும் இந்திப் படத்தில் இந்தக் காட்சிகள் கிடையாது. இவை தமிழுக்காகவே செய்யப்பட்ட மாற்றங்கள். அதுவும் ரஜினி கதாபாத்திரம் கேமராவைப் பார்த்தே சவால் விடும்; வசனங்களைப் பேசும்.  


அண்ணாமலை பெற்ற வணிக வெற்றியால் இப்படியான வசனங்கள் அவருடைய படங்களான பாண்டியன், உழைப்பாளி, முத்து போன்றவற்றிலும் தொடர்ந்தது. ஆனால், இத்தகைய வசனங்கள் பாண்டியனுக்குக் கைகொடுக்கவில்லை. அது பாம்பே தாதா என்னும் கன்னடப் படத்தின் மறு ஆக்கமாகவே உருவானது. ஆனாலும், ஜெயசுதாவைப் பார்த்து ரஜினி பேசும் பல வசனங்கள் ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசப்படுவதாக நினைத்தே ரசிகர்கள் படத்தைப் பார்த்தனர். ஆனாலும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 

ஆக, மக்கள் செல்வாக்குப் பெற்ற நடிகராக இருந்தாலும் திரைக்கதை சரியாக சோபிக்கவில்லை எனில் நடிகரின் உழைப்பு வீண்தான் என்பதே பாலபாடம். ரஜினி காந்த் பெரிய நடிகர், ரசிகர்கள் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது உண்மை எனில், ரஜினி காந்த் ஆத்மார்த்தமாக நடித்துக் கொடுத்த ஸ்ரீராகவேந்திரர், அவர் கதை வசனம் எழுதிய வள்ளி, ஆன்மிக அனுபவமாகக் கருதி நடித்த பாபா போன்றவை பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவை பெரிய வெற்றியைப் பெறவில்லை தோல்வியே கண்டன என்பது திரைக்கதையின் பலத்திலேயே நடிகர்கள் ஜொலிக்க முடியும்; நடிகர்கள் பலத்தில் திரைக்கதை ஜொலிக்காது என்பதையே உணர்த்துகிறது.



< சினிமா ஸ்கோப் 33 >                   < சினிமா ஸ்கோப் 35 >                      

புதன், ஜூன் 29, 2016

சினிமா ஸ்கோப் 5: ஆறிலிருந்து அறுபது வரை

குஷி படத்தில் விஜய், ஜோதிகா
சினிமா பேசத் தொடங்கிய நாள் முதலே அழுத்தமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையே நாம் ரசித்துவந்திருக்கிறோம். அதிலும் சுவாரசியமான திருப்பங்களும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களும் கொண்ட கதைகளே நமக்குத் திருப்தி அளிக்கின்றன. சினிமா தொடங்கிய பத்து நிமிடத்துக்குள் கதை ஆரம்பிக்கவில்லை என்றால் நெளியத் தொடங்கிவிடுகிறோம். கதை ஆரம்பிப்பது என்றால் அந்தப் படத்தின் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ வேண்டும். படத்தின் எஞ்சிய பயணத்தைத் தீர்மானிக்கும் வலுவான காட்சி ஒன்று தொடக்கத்தில் இடம்பெற்றுவிட வேண்டும். உதாரணமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், காதலனும் காதலியும் சேர்ந்துவிடுவார்கள் என்று கதையின் முடிவைச் சொல்லியே படத்தைத் தொடங்கினார் இயக்குநர்.

காதலர்கள் இணைந்துவிடுவார்கள் என்று தெரிந்தபோதும் அவர்கள் எப்படி இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களைத் தொடர்ந்து படம் பார்க்கவைத்தது, ரசிகர்கள் படத்தின் இறுதிவரை ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார்கள். ஆக, படம் தொடங்கிய அந்தப் பத்திருபது நிமிடங்களுக்குள் திரையரங்கில் ஆர்வத்துடன் கூடியிருக்கும் ரசிகர்களைத் திரைப்படம் எந்த வகையிலாவது தன் வசப்படுத்திவிட வேண்டும். இந்தப் படம் பார்ப்பதற்கு உகந்தது, நமக்கானது என்ற நம்பிக்கையை அது விதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் திரைப்படத்திலிருந்து உணர்வுரீதியாக விலகிவிடுவார்கள். பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் திரைப்படத்துடன் பிணைப்பது இயலாத காரியமாகிவிடும்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படக் காட்சி

ரசிகர்களுடன் அந்தரங்கமான உறவைப் பேணும் சினிமாவுக்கான கதை மிக எளிமையாக, உணர்வுபூர்வமானதாக இருந்தால் போதும். அறிவுஜீவித்தனமான கதையைவிட உணர்வுபூர்வமான கதையே ரசிகர்களைக் கவர்கிறது. உலகம் முழுவதுமே எளிய கதைகள்தாம் பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. சில்ட்ரன் ஆஃப் ஹெவன், பைசைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ என எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அவற்றின் கதைகள் எளிமையானவை, உணர்வுகளால் பொதியப்பட்டவை. சில்ட்ரன் ஆஃப் ஹெவனில் ஒரு சாதாரண ஷூதான் படத்தின் மைய இழை. தன் இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக ஷூ வாங்கித் தர வழியில்லாத ஏழைக் குடும்பம், அவர்களுடைய உணர்வுப் போராட்டம், ஷூவால் அந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவைதான் அந்தப் படம். இந்தப் பிரச்சினையை உலகின் எந்த நாட்டினரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிடாதா, அவர்கள் வாழ்வில் மேம்பட்டுவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்கும் திரைப்படப் பாத்திரங்களுக்கும் இடையே வெள்ளித்திரை மறைந்துவிடுகிறது. நம்மில் ஒருவர் என்று கதாபாத்திரங்களுடன் உறவை மானசீகமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியான ஓர் உறவு ரசிகர்களுக்கு உருவாகிவிட்டால் போதும். அதன் பின்னர் எதையும் பார்க்க அவர்கள் தயாராக இருப்பார்கள். சாமானிய மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாடச் சம்பவங்களோடும் சிக்கல்களோடும் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். 


ஆட்டோகிராஃப் படத்தில் சேரன், பத்மப்ரியா

இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் பெரிய காதல் காவியமல்ல. சேரனும் தமிழகத்து சத்யஜித் ராய் அல்ல. எனினும் சாதாரணமான அந்தப் படம் பெரிய வெற்றியை ஈட்டியது. அந்தக் கதையை சினிமாவுக்கான கதை அல்ல என்றே பலர் தட்டிக்கழித்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் தம் வாழ்வில் பல காதல்களைக் கடந்துவந்த ரசிகர்கள், அந்தப் படத்தின் கதைநாயகனுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது தங்கள் படம். தங்கள் வாழ்வைச் சொல்லும் படம். அவ்வளவுதான். அதனால்தான் சேரனின் அமெச்சூர்தனமான நடிப்பையும் மீறி அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இத்தகைய உணர்வு கொந்தளிக்கும் திரைப்படங்களுடன் நாம் எளிதாகப் பிணைப்பு கொள்கிறோம். தமிழில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தனது படங்களின் கதைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். மதுரை வீரன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண் என அவரது எல்லாப் படங்களும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான கதைகளைக் கொண்டவை. அப்படியான கதைகளைத் தேர்வுசெய்வதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

ஏழைப் பங்காளன் என்ற தனது கதாபாத்திர வார்ப்புக்கு உதவும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகள்மீது ஆர்வம் காட்டினார். அவர் ஒரு ஆபத்பாந்தவன் என்னும் நம்பிக்கையை அவரது திரைப்படப் பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் விதைத்தன. அதனால்தான் அவரால் அவ்வளவு ரசிகர்களை ஈர்க்க முடிந்தது. அவருடைய கதாபாத்திரங்களைப் போலவே எம்.ஜி.ஆரும் இருப்பார் என்ற நம்பிக்கையை அந்தப் படங்கள் உருவாக்கின. ஆகவே அவரால் சினிமாவைக் கடந்தும் வெற்றிகளைப் பெற முடிந்தது. 


எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர்.

ஒரு படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதைவிட அது எல்லோரையும் கவரக்கூடியதாக, உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். சினிமாவுக்குக் கதை எழுத முற்படுபவர் வாழ்க்கை சார்ந்த அனுபவத்தைப் பெற்றிருத்தல் நல்லது. வாழ்க்கையைத் துளித்துளியாக அனுபவித்துப் பார்த்த ஒருவருக்குத் தான், அதை ரசமான சம்பவங்களாக மாற்றும் ரசவாதம் கூடிவரும். அத்தகைய ரசவாதம் கூடிய கதைகளே திரைப்படத்தில் மாயாஜாலங்களை ஏற்படுத்தும். ஒரு கதையைச் சொல்லும் விதத்தில்தான், அதாவது திரைக்கதையின் அமைப்பில்தான், அது மாறுபடுகிறது. ஒரு கதை எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ, அப்படியே அது திரையில் சொல்லப்படுவதில்லை. ஆகவே சினிமாவுக்குக் கதை எழுத மூளையைக் கசக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் கதாசிரியர் இதயத்தில் உணர்வு நிரம்பியிருக்க வேண்டும்.

கதைகளில் அன்பு, பிரியம், பாசம், காதல், பிரிவு, துரோகம், எதிர்ப்பு, வீரம் போன்ற பல சங்கதிகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமைத்துத் தர வேண்டும். இவற்றை உள்ளடக்கிய கதைகளை எழுதினால் போதும், சுவாரசியமான திரைப்படத்துக்கு உத்தரவாதம் உண்டு. தீவிர இலக்கியப் படைப்பை உருவாக்கத் தேவைப்படும் மொழியியல் நிபுணத்துவம் சினிமாவுக்குக் கதை எழுத அவசியமல்ல. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக, நேரிடையாக விவரிக்கத் தெரிந்தால் போதும். கதையை எழுதிவிடலாம். பெரிய பெரிய வாக்கியங்கள், வாசகன் அறிந்திருக்காத புதிய புதிய சொற்கள் என எழுத்தாளர் தன் மொழி அறிவை எல்லாம் கொட்டி எழுதுவது போன்ற முயற்சி சினிமாக் கதை எழுதத் தேவையில்லை. இதனாலேயே யார் வேண்டுமானாலும் கதையை எழுதிவிடலாம் என நம்பிப் பலர் மோசம் போகிறார்கள். அதுதான் சோகம். புத்திசாலித்தனமான ரசிகர்கள் சினிமாவை இன்னும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.

ஞாயிறு, மார்ச் 30, 2014

அறுசுவைக் கலைஞன்

பிரகாஷ் ராஜின் பிறந்தநாளுக்காக (மார்ச் 26) எழுதப்பட்ட கட்டுரை. இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 2014 மார்ச் 28 அன்று தி இந்துவில் வெளியானது.)


பாலசந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். 1965 மார்ச் 26 அன்று பிறந்த பிரகாஷ் ராஜ் பாலசந்தரின் டூயட் படத்தின் விறுவிறுப்பான வில்லனாக அறிமுகமானார். பிரத்யேக உடல்மொழி, வனங்களை உச்சரிக்கும் பாணியில் தனித்துவம் என எளிதாக ரசிகர்களை வசீகரித்தார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே கன்னடத்தில் நாடகங்களில் நடித்திருந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. தமிழ்த் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பின்னர் 1995இல் கையளவு மனசு என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் தமிழ்க் குடும்பங்களுக்குப் பரிச்சயமான நடிகராக அவர் மாற முடிந்தது. 1995-96களில் வெளியான ஆசை, கல்கி ஆகிய திரைப்படங்கள் மூலமாக பிரகாஷ் ராஜ் முன்னணிக்கு வந்தார். வில்லனாக நடித்தாலும் கதாநாயகனுக்குச் சமமான வரவேற்பையும் பெற்றார். ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் ஆகிய நடிகர்கள் வரிசையில் பிரகாஷ் ராஜுக்கு முக்கிய இடம் கிடைத்தது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக பிரகாஷ் தோன்றினார். திராவிட அரசியலில் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் உறவைச் சித்திரிந்திருந்த அந்தப் படத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேடமேற்றிருந்தார் பிரகாஷ் ராஜ். அந்தப் படம் வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பிரகாஷ் ராஜின் நடிப்புத்திறனுக்குச் சாட்சியாக இருந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என படு பிஸியான நடிகராக வலம் வந்தார் பிரகாஷ்.

வஸந்தின் அப்பு திரைப்படத்தில் அரவாணி வேடம் ஏற்று நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடமேற்ற நடிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் இவரது நடிப்பு ஒரே பாணியில் தான் அமைந்துள்ளது என விமர்சனமும் உண்டு. சைக்கோத்தனம், நக்கல் நையாண்டி வசனம் இரண்டையும் கலந்து தனது கதாபாத்திரங்களுக்கு புது வடிவம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் இவரது உச்சரிப்பில் வெளியான செல்லம்… என்னும் வசனம் ரசிகர்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. வில்லனாக அறிமுகமானாலும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்னும் விருப்பத்தால் தானே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற படங்களை அதன் காரணமாகவே உருவாக்கினார். திரைப்படம் மீது கொண்ட தாகத்தால் தோனி என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்தார். பூலோகம், மத கஜ ராஜா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்