இந்த வலைப்பதிவில் தேடு

சத்யராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சத்யராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 04, 2020

இயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை

இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும். எல்லோருக்கும் ஓர் அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், வேறு சிலரோ தமது தொழிலிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவர் எல்லாவகையான படங்களையும் உருவாக்கியுள்ளார். 

மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழப் போராட்டம் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன், கோவை மாவட்டம் சூலூரில் 1953-ல் ஒரு வியாபாரக் குடும்பத்தில் R.சுப்ரமணியம், மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சூலூர் அரசுப் பள்ளியில் பயின்ற நாட்கள் முதலே அவர் கலைகளில் ஆர்வங்கொண்டிருந்திருக்கிறார். பள்ளிநாட்களில் ‘கதாகாலட்சேபம்’ என்னும் பெயரில் மேடைகளில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். கோவை அரசுக் கல்லூரியில் பி.யூ.சி. படித்த நாட்களில் ஷியாம் பெனகல், மிருணாள் சென் ஆகியோரது படங்களையும் மலையாளத்தில் வெளியான யதார்த்தவாதப் படங்களையும் கண்டுகளித்திருக்கிறார். அதன் வழியே சினிமாவுக்கான உந்துதல் கிடைத்துள்ளது. தமிழ்ப் படங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே என்று அவர் சலிப்படைந்திருந்த நேரத்தில் ‘16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ போன்ற மாற்றத்தை நோக்கிய திரைப்படங்கள் வெளிவந்தது அவருக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மாறுபட்ட படத்தைத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த அவருக்கு சினிமாவில் தாமும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை இத்தகைய திரைப்படங்கள் அளித்துள்ளன. எனவே, மணிவண்ணன் சென்னைக்கு வந்துள்ளார். “என்னையும் சினிமாவையும் மட்டுமே நம்பி நான் சென்னைக்கு வந்தேன்” என்கிறார் மணிவண்ணன்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு, ‘கிழக்கே போகும் ரயில்’ பற்றி எழுதிய விமர்சனக் கடிதம் வழியே அவரது அறிமுகத்தைப் பெற்ற மணிவண்ணன் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கிறார். ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ ஆகிய படங்களின் கதையையும் வசனத்தையும் எழுதிய மணிவண்ணன், ‘காதல் ஓவியம்’ படத்தில் வசனத்தை மட்டும் எழுதியுள்ளார். ‘ஆகாய கங்கை’ படத்தின் வசனத்தை எழுதியுள்ளதுடன் அதன் திரைக்கதையை இயக்குநர் மனோபாலாவுடன் இணைந்து எழுதியுள்ளார்.

மணிவண்ணன் பல படங்களுக்குக் கதை எழுதியபோதும் அவரது முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’யின் கதை கலைமணியுடையது. அந்தக் கதைக்கு மணிவண்ணன் திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கியிருந்தார். அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு இளையராஜாதான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் வினுச்சக்ரவர்த்திக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அருக்காணி என்னும் வேடத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எளிமையான கதை, சுவாரசியமான திரைக்கதை உணர்வுபூர்வக் காட்சிகள் என்று தனது இயக்குநர் பயணத்தை மிகத் தெளிவான புரிதலுடன் தொடங்கியிருந்தார் மணிவண்ணன். அடுத்த ஆண்டில், 1983இல் ‘ஜோதி’, ‘வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்’, ‘இளமைக் காலங்கள்’ என்னும் மூன்று படங்களை இயக்கினார்;  1984இல் அவர் இயக்கிய ஆறு படங்களில் ‘நூறாவது நாள்’, ‘இங்கேயும் ஒரு கங்கை’ ஆகிய இரண்டும் முக்கியமானவை.

‘நூறாவது நாள்’ படத்தில் நடிகர் சத்யராஜ், காட்சி ஒன்றுக்காக மொட்டை போட்டு நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு மொட்டை போட்டு நடிகர் நடித்தால் படம் வெற்றிபெறும் எனும் ஒரு நம்பிக்கை திரைத்துறையில் உருவாகிவிட்டது. ‘சூரியன்’ திரைப்படத்தில் சரத்குமாரும் ‘ஜென்டில் மேன்’ படத்தில் சரண் ராஜும் மொட்டை போட, அந்தப் போக்கு தொடர்ந்தது. நடிகரை மொட்டை போட வைத்தாலும் அவருடைய தயாரிப்பாளர் மொட்டை போடும்படியான நிலைமையை மணிவண்ணன் உருவாக்கியதில்லை. 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தனக்குத் தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின்போது தான் தலைகுனிந்ததுமில்லை என்றே அவர் கூறியிருக்கிறார். அவர் இயக்கிய ஐம்பது படங்களில் 25இல் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்; அதில் ‘ஜல்லிக்கட்டு’ முதல் ‘அமைதிப்படை’ வரை 12 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன.

‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தின் கதை சற்றேறக்குறைய ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதையை ஒத்திருக்கும். சூழல் காரணமாகக் காதலியைப் பிரிந்துவிடுகிறான் காதலன். அவளுக்கு மணமாகிவிடுகிறது. இந்த வேளையில் மீண்டும் அவள் வாழ்வில் குறுக்கிடுகிறான். இப்போது காதலி மனைவியாகத் தொடர்கிறாளா, காதலனைக் கைபிடிக்கிறாளா என்பதுதான் முடிவு. படத்தின் திரைக்கதை விஷயத்தில் மணிவண்ணன் வேறு ஒரு பாதையில் பயணம் செய்திருந்தார். காதலனாக முரளியும், காதலியாக தாராவும், கணவனாக சந்திரசேகரும் (இந்தப் படத்தில்தான் சந்திரசேகர் தாடியை எடுத்துவிட்டு நடிக்கத் தொடங்கியிருந்தார்) நடித்திருந்தனர். பாக்யராஜ் தாலி செண்டிமெண்டைக் கையில் எடுத்திருந்தார். மணிவண்ணனோ மனிதாபிமான அடிப்படையில் முடிவை எடுத்திருந்தார்.

1986ஆம் ஆண்டு தீபாவளி நாளில் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ என்னும் இரு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. இரண்டிலும் நாயகன் சத்யராஜ்தான். இரண்டும் வெவ்வேறு வகையான படங்கள். ‘பாலைவன ரோஜாக்கள்’ மு.கருணாநிதி கைவண்ணத்தில் உருவான அரசியல் படம். இது மலையாளப் படமான ‘வர்தா’வின் மறு உருவாக்கம். ‘விடிஞ்சா கல்யாணம்’ ஒரு திரில்லர். ஆஃபாயில் ஆறுமுகம் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். ஒரே நாள், ஒரே இயக்குநர் இரண்டும் வெற்றி என்பதையெல்லாம் இனிப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். போதைப் பொருள் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மணிவண்ணன் இயக்கிய படம் ‘புயல் பாடும் பாட்டு’.


மணிவண்ணன் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட எல்லாப் படங்களும் பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட படங்கள்தாம். அதில் மாறுபட்டு நிற்கிறது ‘இனி ஒரு சுதந்திரம்’. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப் போட்டியில் ‘நாயக’னின் வேலுநாயக்கருடன் களத்தில் மோதிய கதாபாத்திரம் இது. விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் எவ்வளவு பாழ்பட்டுப்போயிருக்கிறது என்பதைக் குறித்து அவருக்கு எழுந்த ஆதங்கத்தில் உருவான படம் அது. விடுதலைப் போராட்டத் தியாகியாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார். அவர் நுட்பமாக நடித்திருந்த படம் இது. அரசு கையகப்படுத்திய நிலத்துக்கான பணத்துக்காக, வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி, வெள்ளை வேட்டி சட்டை, கையில் மஞ்சள் பை, குடை சகிதம் அவர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நடந்துநடந்து தேய்ந்துபோன அழகை மணிவண்ணன் வசனமே இன்றிக் காட்டியிருப்பார். “உண்மை ஊசலாடிக்கிட்டிருக்கப்போ அதைக் காப்பாத்துறதுக்கு உணர்ச்சியாவது இருக்கனும். உணர்ச்சியே செத்துப்போனதுக்கப்புறம் உண்மையை யார் காப்பாத்துறது?”, “நாப்பது வருஷமா எனக்குள்ள ஊறிப்போயிருந்த நல்ல தத்துவத்தை நாலே வருஷத்துல நாசமாக்கிட்டியேடா” போன்ற வசனங்கள் அவரது உட்கிடக்கையைத் தெளிவாகக் காட்டும். கல்வி வியாபாரமான அவலத்தையும் இதில் சொல்லியிருப்பார் அவர்.

அவரை வெகுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த முக்கியமான படம் ‘அமைதிப் படை’. நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனங்கள் குத்தீட்டியாகக் குத்தவல்லவை என்பதை இந்தப் படத்தில் மணிவண்ணன் காட்டியிருப்பார். இவ்வளவுக்கும் இது ஓர் அரசியல் படம் என்று சொல்லத்தக்கது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு குடும்பம் படம். அதனூடாக அரசியலைத் தூவியிருப்பார். இதன் அடுத்தபாகமாக வெளியான ‘நாகராஜன் சோழன் MA, MLA’தான் மணிவண்ணனின் இறுதிப் படம்.

இயக்குநர் மணிவண்ணன் சுமார் பத்துப் படங்களைத் தயாரித்திருக்கிறார், நானூறு படங்களில் நடித்திருக்கிறார். நடிகனாக அவருடைய ஆதர்ஸம் எம்.ஆர்.ராதாதான் என்கிறார் அவர். ‘கொடிபறக்குது’ படத்தில் அவரை பாரதிராஜாதான் வில்லன் நடிகராக்கினார். கில்பர்ட் தனசேகரன் என்னும் அந்த வேடத்துக்கு பாரதிராஜாதான் குரல் தந்திருப்பார். பெரிய மனித போர்வையில் அயோக்கியத்தனங்களில் ஈடுபடும் கதாபாத்திரம் அது. முதன்முதலில் வாய்ப்புத் தந்த வெளி இயக்குநர் என்றால் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். படம் ‘தேவா’. அதில் மொட்டை போட்டு மீசையுடன் காட்சி தருவார்.

‘படையப்பா’ படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்த சிவாஜி கணேசன், “டேய் தாடிக்காரா உன்னிடம் தொழில் இருக்குதுடா நீ பெரிய ஆளா வருவ” என்று சொல்லிக் கட்டியணைத்துத் தலையைத் தடவிக்கொடுத்த சம்பவத்தை நினைவுகூரும் மணிவண்ணன் பல விருதுகளைவிட மதிப்பு மிக்க விருது அது எனப் புளகாங்கிதமாகக் கூறுகிறார் மணிவண்ணன்.

இயக்குநர் அகத்தியனின் ‘காதல் கோட்டை’யில் இவர் ஒரு டெலிபோன் பூத் வைத்து நடத்துவார். ‘விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பே காதல் விவகாரங்களின் தூதுவனே’ என்று பேசியபடி காதலைக் கலாய்க்கும் அவரது நடிப்பு வெகுஜன மனத்தில் வெகுகாலமாக நிற்கக்கூடியது. கமல்ஹாசனுடன் ‘அவ்வை சண்முகி’, கார்த்திக்குடன் ‘கோகுலத்தில் சீதை’ என எல்லாப் பெரிய நடிகரோடும் சேர்ந்து நடித்துள்ளார்.  ‘சங்கமம்’ திரைப்படத்து நாட்டுப்புறக் கலைஞர் பாத்திரம் ஒரு நடிகராக அவருக்கு நிறைவைத் தந்ததாகக் கூறியிருக்கிறார். மணிவண்னனும் சத்யராஜும் சேர்ந்து ‘தாய் மாமன்’, ‘மாமன் மகள்’ போன்ற படங்களில் அடித்த லூட்டி இப்போதும் யூடியூபில் ஆதிக்கம் செலுத்துகிறது. யதார்த்தமான நகைச்சுவையில் மிளிர்ந்த நடிகராக இருந்தபோதும் நகைச்சுவை தனித் தடத்தில் பயணம்செல்வதை அவர் விரும்பியதில்லை. கடவுள் நம்பிக்கையில்லாத மணிவண்ணன் ‘கடவுள்’ திரைப்படத்தில் கடவுளாக நடித்திருக்கிறார்.


தமிழீழ அரசியலைப் பேசும் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இயக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அது நடைபெறாமலே போய்விட்டது. ஆனால், அவரது படங்கள் மணிவண்ணைப் பற்றிய சேதிகளை ரசிகர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். இன்று (ஜூலை 31) அவரது பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.   

 இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான கட்டுரை இது.

புதன், ஜூலை 20, 2016

சினிமா ஸ்கோப் 8: அழியாத கோலங்கள்


தாவணி அணிந்த கண்ணுக்கினிய பெண் மார்கழி மாதத்தில் வீட்டின் முற்றத்தில் போடும் அழகிய கோலம் போன்றது சினிமாக் கதை. அது நேரிடையானது. ஆனால் திரைக்கதை அப்படியல்ல. அது ஒரு தேர்ந்த ஓவியன் வரையும் ஓவியம் போன்றது. எங்கோ தொடங்கி எங்கோ முடியும் அது. ஆனால் அந்தப் பணி முடிவடையும்போது முழு ஓவியத்தையும் நம்மால் ரசிக்க முடியும்.

திரைக்கதையை எழுதுவது எப்படி என்பதைப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால் அதைவிட எளிதான வழி திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியே புரிந்துகொள்வதுதான். ஏனெனில் இந்த முறையில் உங்களுக்கு யாரும் கற்றுத் தர மாட்டார்கள். நீங்களே ஒவ்வொன்றாகக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு கதாபாத்திரத்தை எப்படி அமைக்கிறார்கள், அந்தக் கதாபாத்திரம் எப்படித் திரைக்கதைக்கு உதவுகிறது, திரைக்கதையில் அந்தக் கதாபாத்திரம் பற்றிய தகவல்களை ஒரே நேரத்தில் விளக்குகிறார்களா, துண்டு துண்டாக விளக்குகிறார்களா? ஒரே நேரத்தில் தருவதற்கும் வெவ்வேறு தருணங்களில் தருவதற்கும் என்ன வேறுபாடு? 

பெரும்பாலான படங்களின் திரைக்கதையில் தொடர்புடைய அனைத்துக் கதாபாத்திரங்களையும் படம் தொடங்கிய பத்து இருபது நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்திவிடுகிறார்களே அது ஏன்? இப்படியான கேள்விகளை நீங்களே எழுப்பிக்கொண்டு படங்களைப் பார்க்கத் தொடங்கினால், நீங்கள் பார்க்கும் படங்களே உங்களுக்கு விடைகளைத் தரும். அப்படியான கேள்விகளுடன் நீங்கள் படங்களை அணுகும்போது கிடைக்கும் விடை உங்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும். ஏனெனில் நீங்களே முட்டி மோதி கண்டறிந்த உண்மை அது. அதன் வீரியத்துக்கு இணையே இல்லை.


குறைந்த தகவல்களைக் கொண்டு கதாபாத்திர சித்தரிப்பை நிறைவுசெய்வது நலம். தகவல்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்ற எல்லை வகுத்துக்கொண்டால் மிக முக்கியத் தகவல்கள் மட்டுமே அதில் இடம்பெறும். ஆகவே அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பு கச்சிதமாக அமையும். ரசிகர்களுக்கும் அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் பிடித்துவிடும். குறைந்த தகவல்களிலேயே நிறைவான கதாபாத்திரத்தை உருவாக்கிவிடுகிறாரே திரைக்கதையாசிரியர் என்ற ஆச்சரியம் ரசிகருக்கு ஏற்படும். அந்த ஆச்சரியத்துடன் திரைக்கதையை அவர் நம்பிக்கையுடன் பின்தொடர்வார்.

அடுத்து, திரைக்கதைக்குத் தேவையான விளக்கங்கள் மட்டுமே அதில் இடம்பெறுவது நல்லது. இருட்டில் நடக்கும்போது வெளிச்சத்துக்காகக் கையில் விளக்கை ஏந்திச் செல்வோம். அப்போது பாதையில் வெளிச்சம் விழும்படிதான் விளக்கைப் பிடித்துச் செல்வோம். அப்படி நடந்துகொண்டால்தான் கவனம் தவறாமல் நடக்க முடியும். சுற்றுப்புறங்களில் வெளிச்சத்தைச் சிதறவிட மாட்டோம். ஏதாவது சத்தம் கேட்டாலோ அவசியம் ஏற்பட்டாலோ மட்டுமே சுற்றுப்புறங்களில் வெளிச்சம் பாய்ச்சுவோம். திரைக்கதையிலும் அதே போல்தான் செயல்படுவது நல்லது. திரைக்கதையின் பாதையிலேயே போக வேண்டும். அநாவசிய விளக்கத்துக்குள் சென்றுவிட்டால் திரைக்கதையின் பாதையும் திசையும் தப்பும். ஆகவே திரைக்கதைக்கு எது தேவையோ அதை மட்டும் விவரித்துச் சென்றால்தான் முடிவை நோக்கி சீராக நகர முடியும்.  


பாசிலின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியான படம் பூவிழி வாசலிலே. மலையாளப் படமொன்றின் மறு ஆக்கப்படமான இது ஒரு த்ரில்லர் வகைப் படம். கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வேணு கோபால் என்பவரை அவருடைய கம்பெனி எம்.டி. ஆனந்தும் ரஞ்சித் என்னும் உதவியாளரும் கத்தியால் குத்திக் கொல்கிறார்கள். கொலைக்கான காரணம் பெண் விவகாரம். கொலையை பென்னி என்ற குழந்தை பார்த்துவிடுகிறது. பென்னியைத் தேடிவரும் அதன் தாய் ஸ்டெல்லாவும் பார்த்துவிடுகிறார். கொலைகாரர்கள் ஸ்டெல்லாவைக் கொன்றுவிடுகிறார்கள். பென்னி தப்பித்துவிடுகிறான்.

மனைவியையும் குழந்தையையும் இழந்து சாக வேண்டும் என்னும் துடிப்புடன் வாழும் ஜீவாவிடம் வாழ வேண்டிய இந்தக் குழந்தை தஞ்சமடைகிறது. குழந்தைக்கு ராஜா என்னும் பெயரிட்டு அழைக்கிறான் ஜீவா. அவன் ஒரு முன்னாள் டென்னிஸ் ஆட்டக்காரன், அத்துடன் ஓவியனும்கூட. ஜீவாவின் மனைவி சுசிலா தன் குழந்தை ராகுல் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டவள். சுசிலா புத்திபேதலித்துப் போனவள். தன் கணவன் தன் குழந்தையைக் கொன்றுவிடுவான் என்னும் பயம் அவள் மனத்தைப் பேயாய் ஆட்டுகிறது. இந்த எண்ணம் முற்றிய நிலையில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. அது நடந்த தினம் நவம்பர் 18. அதேபோல் ஒரு நவம்பர் 18-ல் தான் ஜீவாவிடம் ராஜா வந்து சேர்கிறான். ராஜா மூலமாக யமுனா அறிமுகமாகிறாள். இவள் கங்காவின் தங்கை. கங்கா மைக்கேல் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவள் (இந்த கங்கா வேறு யாருமல்ல. ஸ்டெல்லாதான்). எனவே குடும்பத்துக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது ராஜாவுக்கும் யமுனாவுக்கும் சித்தி மகன் உறவு. இப்படிப் போகிறது கதை.


படம் முழுவதும் ஒவ்வொரு இழையாக நெய்யப்படும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான தகவல்கள் அனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தரப்படும். ஒரு கொலை அதற்கான பின்னணி, அதனால் ஏற்படும் விளைவு என ஒரு புதிர் விடுபடுவது போல் படத்தில் ஒவ்வொரு முடிச்சாக விடுபடும். த்ரில்லர் என்றபோதும் படத்தில் வெளிப்படும் மனித உணர்வுகள் முக்கியமானவை. அந்த உணர்வுகள் இல்லாது வெறும் த்ரில்லராக மட்டும் இருந்திருந்தால் இந்தப் படம் நம் கவனத்தில் நிலைத்திருக்காது. தன் சோகத்தை ஜீவா ராஜாவிடம் விவரிப்பான். காது கேட்காத, பேச முடியாத ராஜா அதைக் கேட்டுக்கொண்டிருப்பான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளருக்கு கதாபாத்திரங்கள் மீது உறவும் பிரியம் கூடும். பேச இயலாத 3 வயதுக் குழந்தையை வைத்து அழகுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்ற உத்தியே இதைத் தனித்தன்மை கொண்ட படமாக்குகிறது. ஆகவே இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் திரைப்பட அனுபவம் அலாதியானது.

பூவிழி வாசலிலே போலவே குறிப்பிடத் தகுந்த மற்றொரு த்ரில்லர் புதிய பறவை. சிவாஜியின் நடிப்பில் தாதாமிராஸியின் இயக்கத்தில் உருவான படம். ஆங்கிலப் படத்தின் தழுவலில் அமைந்த வங்காளப் படத்தின் மறு ஆக்கம் இது. பூவிழி வாசலிலே படத்தில் பாசம் என்றால் புதிய பறவையில் காதல். அதன் மையமும் கொலைதான். ஆனால் சாட்சி கிடையாது. கொலையைச் செய்தவரே ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கான திரைக்கதையை வலுப்படுத்துகிறது உணர்வுபூர்வமான காதல். ஆக என்ன கதை என்றாலும் திரைக்கதையில் மனித உணர்வுகளுக்குப் பிரத்யேகமான இடம் வேண்டும். அப்படி இருந்தால்தான் ரசிகர்களால் படத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். அப்படியான படங்கள் தரும் சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. எல்லாப் படங்களும் மனிதர்களுக்காக அவர்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்