இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 12, 2017

சினிமா ஸ்கோப் 29: வண்ணக்கனவுகள்


தொண்ணூறுகளுக்கு முன்னரான காலம் இப்போது போலில்லை. சினிமா பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்குத் தான் செல்ல வேண்டும். விரும்பிய பாடலை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால்கூடப் படத்தை மீண்டும் பார்ப்பது ஒன்றே வழி. அதனால் திரையரங்குடன் அந்தரங்க உறவு கொண்டிருந்த ரசிகர்கள் அநேகர். வண்ணக்கனவுகள் பொதிந்த பசுமையான வெளியாகத் திரையரங்கம் அவர்களது மனதில் நிலைகொண்டிருக்கும். இப்போது கேட்டாலும் அவரவரது ஊரில் இருந்த, இருக்கும் திரையரங்கின் கதையை ரசிக்க ரசிக்கச் சொல்வார்கள். அப்படியொரு ரசிகன்தான் வசந்தபாலன் இயக்கிய வெயில் (2006) படத்தின் நாயகன் முருகேசன்.  

கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற பசுபதி, சினிமாவால் வாழ்வைத் தொலைத்த, எம்.ஜி.ஆர். ரசிகனான முருகேசன் என்னும் வேடத்தை ஏற்றிருப்பார். ஆழப்புதைய சரியான ஆழிக்காகக் காத்திருப்பவர்கள் கூத்துப்பட்டறைக்காரர்கள். பசுபதியும் சளைத்தவரல்ல என்பதை இந்தப் படத்தில் காட்டியிருப்பார். தோல்வி பெற்ற ஒருவனின் வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதால் பசுபதியும் ஆழ்கடலில் மூழ்கித் தரைதொட்டு மேலெழுவார். சினிமாவால் முருகேசனது வாழ்வு என்ன ஆனது என்பதன் பின்புலத்தில் காலத்தில் கரைந்துபோகும் கரிசல் வட்டாரத்தின், வாழ்வின் ஞாபகங்களை மண்ணின் மணத்துடன் மீட்டெடுக்க முயன்றிருப்பார் வசந்தபாலன். இதன் திரைக்கதையில் முருகேசனுக்கும் பாண்டிக்குமான பிரியம் வெளிப்பட்டிருந்த விதம் ஆண் பெண் உறவு பற்றிய அக்கறையுடன் கையாளப்பட்டிருக்கும்.


அண்ணன் தம்பிப் பாசம், காதல், தகப்பன் மகனின் விநோத உறவு, நலிவடையும் தொழில், உருப்பெறும் புதுத் தொழில், தொழில் போட்டி, பகைமை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான விறுவிறுப்பான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருந்த படமாக வெயில் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் கன்னியப்பா டாக்கீஸ் காட்சிகள் அனைத்துமே இத்தாலிப் படமான சினிமா பாரடைஸை நினைவூட்டும். 

1990-ம் ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்ற படம் சினிமா பாரடைஸ் (1988). சினிமா பாரடிஸோ என்னும் தியேட்டரில் தனது பால்யத்தையும் பருவத்தையும் கழித்துப் பின் சினிமா இயக்குநராக உயர்ந்த, சிறுவயதில் தோத்து எனச் செல்லமாக அழைக்கப்பட்ட, சல்வதோரி தி விதாவின் கதைதான் அந்தப் படம். ஆல்ஃப்ரெதோ என்னும் சினிமா ஆபரேட்டருக்கும் தோத்துவுக்குமான உறவின் பிணைப்பு வெளியாக அந்தத் திரையரங்கமே இருக்கும். அந்த ஊரின் பிரதான சதுக்கத்தில் மையமாக அமைந்த சினிமா பாரடிஸோவின் பின்னணியில் அவர்களது வாழ்வைச் சொன்ன படம் அது. ஆல்ஃப்ரெதோவின் மறைவுச் செய்தியுடன் படம் தொடங்கும். அதை அறிந்த சல்வதோரியின் நினைவுகளாகப் படம் திரையை நிறைக்கும். வெயிலில் படம் முருகேசனின் பார்வையில் தான் சொல்லப்படும். சினிமா பாரடைஸின் காட்சிக்கோணங்களும் வண்ணத் தோற்றமும் ரசிகர்களின் மனத்தில் அப்படியே அப்பிவிடும் தன்மை கொண்டது. சுவாரஸ்யமான திருப்பங்கள் படத்தில் கிடையாது. அது ஒரு வாழ்வைச் சொல்லும் படம். எனவே, அதற்கேற்ற திரைக்கதை கண்ணாடித் தளத்தில் நீர் பரவுவதைப் போல் மென்மையாக வழுக்கிக்கொண்டு செல்லும்.


தோத்துவுக்கு சினிமா மீது ஏற்படும் காதலை இந்தப் படத்தின் திரைக்கதை மிக ரசனையுடன் காட்சிகளாகச் சித்தரித்திருக்கும். முருகேசன் வேறு வழியில்லாத சூழலில் கன்னியப்பா டாக்கீஸை தஞ்சமடைவான். ஆனால் தோத்துவுக்கு அப்படியல்ல; சினிமா பாரடிஸோ அவனது சொர்க்கம். அதன் ஒவ்வோர் அசைவையும் அவன் கூர்ந்து கவனித்து, ஆபரேட்டிங் வேலையைக் கற்றுக்கொண்டவன். தியேட்டரில் நெருப்புப் பற்றி ஆல்ஃப்ரெதோ கண்பார்வையைப் பறிகொடுத்த பின்னர் அந்த தியேட்டர் ஆபரேட்டராகப் பொறுப்பேற்றுக்கொள்வான் தோத்து. ரசிகர்கள் சந்தோஷமாகத் திரைப்படம் பார்க்கும்போது, அவர்களுக்கு அந்த மகிழ்வை அடைந்த திருப்தி ஏற்படுவதை ஆல்ஃப்ரெதோ தோத்துவிடம் பிரியத்துடன் சொல்வார். என்னதான் விருப்பத்துடன் வேலைசெய்தாலும் அந்தப் பணி குறித்த சங்கடங்களையும் அவர் தோத்துவுடன் பகிந்துகொள்வார். அதனால்தான், ‘உன் பேச்சு போதும், உன்னைப் பற்றிய பேச்சு தேவை’ என்று தோத்துவை ஊரைவிட்டு விரட்டுவார்.  

தோத்து தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சிறு துவாரம் வழியே பார்க்கும் ஆல்ஃப்ரெதோவைப் பார்த்து சைகையில் பேசும் காட்சியைப் போலவே வசந்தபாலனின் வெயிலில் முருகேசனின் காதலி தங்கம் தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு முருகேசனுடன் காதல்கலந்த சைகை மொழியில் பேசுவாள். போதிய ஆதரவு இல்லாமல் சினிமா பாரடிஸோ இடிக்கப்படுவதைப் போலவே கன்னியப்பா டாக்கீஸும் இடிக்கப்படும். வெயிலின் ஒரு பகுதி சினிமா பாரடிஸோவை நினைவூட்டுவதைப் போல் அதன் இன்னொரு பகுதி டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் இஸ்ரேலியப் படத்தை ஞாபகப்படுத்தும்.


2001-ல் வெலியான இந்த இஸ்ரேலியப் படம் டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் ஒரு தியேட்டரை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும். ஊரைவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடிப் போன, ஆவ்ரம் என்னும் பெயர் கொண்ட தம்பி, தன் அண்ணன் மோரிஸின் ஓராண்டு நினைவஞ்சலி தினம் அனுசரிக்கப்படும் வேளையில் ஊருக்குள் வருகிறான். இந்த வேளையில் மோரிஸ் தன் இரண்டாம் மகன் நிஸ்ஸிம் கனவில் வந்து, மூடிக்கிடக்கும் பழைய தியேட்டரில் இறுதியாக ஒரு படத்தைத் திரையிட வேண்டும் எனச் சொல்லி மறைகிறான். தியேட்டரைத் திறக்கும் முயற்சியில் இரு மகன்களான ஜார்ஜும் நிஸ்ஸிமும் ஈடுபடுகிறார்கள். தியேட்டரின் எந்தப் படத்தைத் திரையிட வேண்டும் என்று யோசிக்கும்போது இந்திப் படமான சங்கம் அங்கே திரையிடப்பட வேண்டும் என்கிறான் அந்த ஊரில் வாழும் இந்தித் திரைப்பட ரசிகனான இஸ்ரேல் -அவன் தியேட்டர் கூரை மேல் அமர்ந்து சுவரின் சிறு துவாரம் வழியே திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பவன். தியேட்டர் ஆபரேட்டரான ஆரோனும் அதை ஆமோதிக்கிறான். அந்தப் படத்தைத் திரையிட வேண்டாமென மறுக்கிறாள் மோரிஸின் மனைவியான செனியோரா. 

ஆனால் மகன்கள் தாயின் மறுப்பைப் புறக்கணித்து சங்கம் படத்தைத் திரையிட முயல்கிறார்கள். சங்கம் படத்தின் பிரிண்ட் தேடி அலைகிறார்கள். அதுவோ ஆவ்ரமிடம்தான் இருக்கிறது. இரு நண்பர்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பதும் அதைத் தெரிந்துகொண்ட நண்பன் ஒருவன் நட்புக்காகக் காதலை விட்டுத் தருவதும் சங்கம் படத்தின் கதை. அதைப் போலவே மோரிஸின் வாழ்விலும் நடந்திருக்கிறது செனியோராவும் ஆவ்ரமும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் மோரிஸுடன் செனியோராவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அண்ணனுக்காகத் தன் காதலைத் துறந்து ஊரை விட்டு ஓடிப்போனவன் தான் ஆவ்ரம். இந்த உண்மை மகன்களுக்குத் தெரியவருகிறது. இப்படிச் செல்லும் டெஸ்பரடோ ஸ்கொயரின் திரைக்கதை.

வெயில், டெஸ்பரடோ ஸ்கொயர் இரண்டு படங்களிலும் பிரதானமாக தியேட்டர் உண்டு; அண்ணன் தம்பிப் பாசமுண்டு; நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டப்படுவதுண்டு; இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பும் கதாபாத்திரமுண்டு. ஆனாலும் வெயில் ஒரு தமிழ்ப் படம். அதற்கான குணாதிசயங்களுடன் அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதனாலேயே சிறந்த இந்தியப் படமென்ற தேசிய விருதும் வெயிலுக்குக் கிடைத்தது. இந்த மூன்று படங்களையும் பார்க்கும் ரசிகர் ஒருவர், வெயிலின் உருவாக்கத்தில் சினிமா பாரடைஸ், டெஸ்பரடோ ஸ்கொயர் போன்றவற்றின் சாயலைக் கண்டடைய முடியும், அவ்வளவுதான்.

< சினிமா ஸ்கோப் 28 >                             < சினிமா ஸ்கோப் 30 >            

செவ்வாய், மார்ச் 07, 2017

ஆன் தி அதர் சைடு (குரோஷியா)

உலகமெங்கும் போரால் மனிதர்கள் உறவுகளை இழக்கிறார்கள்; உறவுகளைப் பிரிகிறார்கள். பிரிந்த உறவுகளைக் கண்டடைந்துவிட மாட்டோமா எனத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் சிலர். அந்தப் பிரிவின் நினைவைக்கூடச் சிலர் தொலைத்துவிட விரும்புகிறார்கள். வெஸ்னா என்னும் செவிலி இந்த ரகத்தைச் சேர்ந்த பெண்மணி. குரோஷியாவின் தலைநகரான ஸாக்ரெப்பில் வசித்துவருகிறார் வெஸ்னா. அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள் திருமண வயதில் இருக்கிறார். மகனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. வீடுகளுக்குச் சென்று நோயாளிகளைப் பராமரிப்பது வெஸ்னாவுடைய பணி. நிம்மதியாகச் சென்றுகொண்டிருக்கும் அவரது வாழ்வைக் குலைத்துப்போடுகிறது தொலைபேசி அழைப்பு ஒன்று. முதலில் அந்தத் தொலைபேசி அழைப்பை ஏற்க மறுக்கும் அவர் தொடர்ந்து அழைத்த நபருடன் உரையாடத் தொடங்குகிறார். இதனால், அவர் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி அந்தத் தொலைபேசியில் பேசிய நபர் வேறு யாருமல்ல; அவளுடைய கணவன் ஸார்க்கோதான்.



ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவளிடமிருந்து விலகிச் சென்றவர் எதிர்பாராத ஒரு தருணத்தில் தொடர்புகொள்கிறார். இருபதாண்டுகளாக அவர் எங்கிருந்தார், ஏன் மனைவியை விட்டுப் பிரிந்தார் போன்ற கேள்விகளுக்கான பதில்களை மாறுபட்ட திரைக்கதையாக்கி, ‘ஆன் தி அதர் சைடு’ என்னும் படத்தை உருவாக்கியுள்ளார் குரோஷிய இயக்குநர் ஸ்ரிங்கோ ஆக்ரெஸ்டா. இந்தப் படத்தை நம் நினைவில் நிலைக்கச் செய்வது இதன் திரைக்கதையே. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சி அப்படியே பார்வையாளர்களைப் புரட்டிப் போட்டுவிடும் திருப்பம் கொண்டது. உணர்வுபூர்வமான இந்தத் திரைப்படத்தின் ஜீவனை முழுமையாக்குவது அந்த க்ளைமாக்ஸ்தான்.


இந்தப் படத்தில் கணவன் மனைவியின் பிரிவுக்குக் காரணம் 1991-95 ஆண்டுகளில் நடைபெற்ற குரோஷிய சுதந்திரப் போராட்டம்தான். அந்தக் காலகட்டத்தில் மத்திய குரோஷியாவின் சிசாக் என்னும் நகரில் செவிலி வெஸ்னா தன் கணவன் ஸார்க்கோவுடனும் குழந்தைகளுடனும் வசித்துவந்தார். ஜேஎன்ஏ என அழைக்கப்பட்ட, செர்பியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூகோஸ்லோவிய மக்கள் ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார் ஸார்க்கோ. போர் காரணமாகவே வெஸ்னா தன் குழந்தைகளுடன் ஸாக்ரெப்புக்கு இடம்பெயந்திருக்கிறார். ஸார்க்கோ போர்க் குற்றங்களுக்காகச் சுமார் 20 ஆண்டுகளைச் சிறையில் கழிக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் தன் மனைவியை அழைத்துப் பேசுகிறார்.

நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும்போதும், தொலைபேசி வழியே உரையாடும் போதும், அந்த நாள்களின் ஞாபகங்களையும் மனிதர்களையும் நினைவின் ஆழத்திலிருந்து உருவிப் பேசுவது என்பது இதம் தருவது என்றபோதும் வலி மிக்கது. இந்த வலியை உணர்த்தும் விதமான ஒளிப்பதிவு, பின்னணியிசை, காட்சிப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு படத்தை இயக்குநர் நகர்த்துகிறார். அதனால்தான் மிக நிதானமாக நகரும் இந்தப் படத்தை நாம் பொறுமையுடன் பார்க்க முடிகிறது. இந்தப் போர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை பேரின் வாழ்வில் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்குமா என்ற ஆதாரக் கேள்வியைப் படம் எழுப்புகிறது.


படத்தின் பின்னணி போராக இருந்தபோதும், போர் நடந்து முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னரான வாழ்வே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வாழ்வின் வழியேதான் போரின் பாதிப்பை இயக்குநர் உணர்த்துகிறார். ஆகவே இந்தப் பாதிப்பானது மிகவும் நுட்பமாக, சன்னமான தொனியில்தான் வெளிப்பட்டிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் தன் கணவனின் நடவடிக்கை காரணமாகத் தன் குழந்தையை இழந்த சோகத்தை வெஸ்னாவால் மறக்கவோ தன் கணவனை மன்னிக்கவோ முடியவில்லை. அந்தக் கணவனுடன் மீண்டும் சேர வேண்டுமா என்பதாலேயே அவள் அவரைத் தொடக்கத்தில் மன்னிக்க மறுக்கிறார். அவர் தொலைபேசி வழியே வற்புறுத்தி அழைத்தபோதும், பெல்கிரேடு நகரில் இருக்கும் அவரைச் சந்திக்கப் பிரியப்படுவதில்லை. வெஸ்னாவின் மகனும் தன் தந்தையைப் பார்க்கவே விரும்பவில்லை.

மகளுக்கோ அவளுடைய அரசு வேலைக்கு இடைஞ்சலாக அமைந்துவிடுகிறது தன் தந்தையின் ராணுவப் பணி. இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஸார்க்கோவுடன் இணையவே விரும்பவேயில்லை. ஆனால், ஸார்க்கோவுக்கோ தன் குடும்பத்தினரைப் பார்க்கவும் அவர்களுடன் சேர்ந்துவாழவும் ஆசை. அதனால்தான் தனது உரையாடல் வழியே அதைச் சாதித்துக்கொள்ள முயல்கிறார்.


நடுத்தர வயது தரும் தனிமை காரணமாகப் பின்னிரவில் தொடரும் உரையாடல் வெஸ்னாவை ஏதோவொரு வகையில் தேற்றுகிறது. கடந்துபோன காலத்தின் துயர நினைவுகளைத் தொடர்ந்து போர்த்திக்கொண்டிருப்பதால் என்ன பயன் என்ற நினைப்பிலேயே அந்த உரையாடலை அனுமதிக்கிறார்; தொடர்கிறார். பழைய காலத்தைப் பற்றி வெஸ்னாவும் அவருடைய கணவரும் உரையாடும் பின்னிரவுக் காட்சிகள் அழகாகக் கோக்கப்பட்டுள்ளன. திடீரென்று ஒரு நாள் அழைப்பு வருவது நின்றுவிடுகிறது. பரிதவித்துவிடுகிறார் வெஸ்னா. மீண்டும் ஸார்க்கோவிடம் பேசிவிட அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றுவிடுகிறது.

வெஸ்னாவுடன் பேசிய ஸார்க்கோ இத்தனை வருடங்களுக்குப் பின்னர் தொடர்புகொண்டு முதலில் பேசியதற்கு நன்றி தெரிவிக்கிறார். அந்தச் சொற்களால் அதிர்ந்துவிடுகிறார் வெஸ்னா. அப்படியானால் இத்தனை நாள்களாகத் தன்னுடன் பேசியது யார் என்று அதிர்ந்துவிடுகிறார். காருக்குள் இருந்தபடியே, தன்னந்தனியே அழுது தீர்க்கிறார். உடனடியாக கைபேசியை எடுத்து அந்த நபரை அழைத்துக் குமுறுகிறார். அவரது வீட்டுக்கு எதிரே தனியே வசிக்கும் நடுத்தர வயது கொண்ட நபர்தான் வெஸ்னாவுடன் உரையாடியவர் என்பதைத் தெரிவித்து, படம் நம்மிடமிருந்து விடைபெறுகிறது. போரின் கடுந்துயரத்தில் ஒன்று தனிமை. போரின் நேரடித் தாக்கம் உயிரைக் கொல்வது என்றால், போரின் மறைமுகத் தாக்கம் உணர்வைக் கொல்வது என்பதைப் படம் சொல்கிறது.

ஆன் தி அதர் சைடு
நடிப்பு: செனிஜா மெரிங்கோவிக், லாஸர் ரிஸ்டோவ்ஸ்கி
இயக்கம்: ஸ்ரிங்கோ ஆஜ்ரெஸ்டா
திரைக்கதை: மேட் மடிஸிக், ஸ்ரிங்கோ ஆக்ரெஸ்டா
தயாரிப்பு: இவான் மேலோக்கா
ஒளிப்பதிவு: ப்ராங்கோ லிண்டா
இசை: மேட் மடிஸிக்


ஞாயிறு, மார்ச் 05, 2017

சினிமா ஸ்கோப் 28: மூடுபனி வீடு


வீடு கட்டுவதைப் பற்றி ஒரு கதை எழுதி அதைப் படமாக்கினால் எப்படி இருக்கும்? ரசனைக்குரியதாக இருக்காது என்று தானே சொல்வோம். ஆனால், உணர்வுபூர்வமான வீட்டைக் கட்டுவதையே உருப்படியான சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. அது ‘வீடு’ (1988). தனது படங்களில் தனக்குத் திருப்தி அளித்த இரண்டில் ஒன்று ‘வீடு’ என்று பாலுமகேந்திரா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இன்னொன்று ‘சந்தியா ராகம்’. 

‘வீடு’ திரைப்படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பகீரதப் பிரயத்தனப்பட்டு வீடொன்றைக் கட்டுகிறார். வீடு கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மெட்ரோ நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். இதுதான் கதை. ஒரு கதை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தரும் வகையில் காட்சிகளை அமைத்துவிட்டாலே திரைக்கதை சரியாக அமைந்துவிடும் என்பது திரைக்கதையின் அடிப்படைப் பாடம்.


வீடு கதையில் அந்தப் பிரதானப் பாத்திரம் 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் செல்வச் சீமானல்ல. அவனுக்கும் திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அந்தப் பெண் ஏன் வீடு கட்ட முயன்றாள்? இது நமக்கு எழும் முதல் கேள்வி. அதற்கான விடைதான் படத்தின் முதல் சில காட்சிகள். வசிக்கும் வாடகை வீட்டைக் காலி பண்ண வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். இன்றுகூட சென்னையில் வீடு தேடி அலைந்தால் நாம் பட்டினத்தார் ஆகிவிடும் அளவுக்கு நமக்கு அனுபவங்கள் கிடைத்துவிடும். சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’யில் வீடு தேடு அலைவதன் அவஸ்தையை இயக்குநர் மணிகண்டன் இயல்பாகக் காட்சிகளாக்கியிருப்பார். அன்றும் இந்த நிலைதான். அதில் மாற்றமில்லை. வீடு தேடி அலைந்து சுதா சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. செயலில் இறங்கிவிடுகிறாள் சுதா.

ஏன் வீடு கட்ட வேண்டும் என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. எப்படிக் கட்டினாள் என்ற கேள்விக்குப் பதில்தான் தொடரும் காட்சிகள். வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. நிலம் சரி. வீடு கட்டப் பணம்? தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்ட கடன் கேட்டுப் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். நிலமும் இருக்கிறது பணத்துக்கும் வழிசெய்தாகிவிட்டது. அடுத்து மளமளவென்று வீட்டைக் கட்டிவிட வேண்டியதுதானே? அப்படியெல்லாம் முடியுமா? வீடு கட்டுவது என்றால் லேசுப்பட்ட காரியமா? சிக்கல் வரத்தானே செய்யும்? சிக்கலே இல்லையென்றால் திரைக்கதை எப்படி ரசிக்கும்? 


வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப்பிரச்சினை, மனப்பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை எழுப்பி முடித்தபோதுதான் சுதாவை நிலைகுலையச் செய்வது போன்ற கிளைமாக்ஸ். அவள் நீதிமன்றத்தின் படியேறுவதுடன் படம் முடிந்துவிடுகிறது. 

இது யதார்த்தமான ஒரு திரைப்படம். எதிரே திரையில் சலனக் காட்சிகள் நகர்கின்றன என்பதையே மறக்கடித்துவிடும் படத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு தத்ரூபம். இளையராஜாவின் ஹவ் டூ நேம் இட் ஆல்பத்தின் இசையைச் சில காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பார்கள். பிற காட்சிகளில் பின்னணியில் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்களைப் போன்று இயற்கையான ஒலிகளால் நிரம்பியிருக்கும். அது உணர்வைக் கிளறும். அன்னக்கிளி வந்த பின்னர் தமிழ்நாட்டில் டீக்கடைகளில் இந்திப் பாட்டுப் போடுவது வழக்கிலிருந்து மறைந்துவிட்டது என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையொன்றில் ஆர் டி பர்மனின் யம்மா யம்மா பாடல் ஒலிக்கும். தனது சிறுவயதில் தன் தாய் கட்டிய வீடு காரணமாக அவரது குணத்தில் ஏற்பட்ட மாறுபாடு பற்றிய ஆழமான நினைவுகளின் தாக்கமே இந்தப் படத்துக்கான உந்துதல் என்று பாலுமகேந்திரா சொல்லியிருக்கிறார். இதுதான் படத்தின் உயிரோட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்கும். 


இதே போல் வீட்டை மையமாக வைத்து 2003-ல் ஓர் அமெரிக்கத் திரைப்படம் வெளியானது அதன் தலைப்பு ஹவுஸ் ஆஃப் சேண்ட் அண்ட் ஃபாக். வீடு படத்தில் சுதா வீடு கட்டப் போராடுகிறாள் என்றால் இந்தப் படத்தில் ஏலமிடப்பட்ட தன் தந்தை தந்த வீட்டைக் கைப்பற்றப் போராடுகிறாள் படத்தின் நாயகி. வீட்டுக்கான வரியைக் கட்டவில்லை என்பதால் அவளது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுகிறது அரசு. அந்த வீட்டை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அரேபியர் ஒருவர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கிவிடுகிறார். அவர் வீட்டைத் தர மறுக்கிறார். அந்தப் பெண்ணோ தன் வீட்டைக் கைப்பற்றத் துடிக்கிறார். இருவருக்குமான போராட்டம் திரைக்கதையாக மாறுகிறது. இறுதியில் இந்த வீடே தனக்குரியதில்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண். அந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை அழுத்தமாகப் படமாக்கியிருப்பார் வடிம் ப்ராவ்மென் என்னும் இயக்குநர். இது இவரது முதல் படம். அரேபியர் வேடமேற்று நடித்திருப்பவர் பென் கிங்க்ஸ்லி. 

வீட்டைப் பிரதான விஷயமாகக் கொண்ட இன்னுமொரு அமெரிக்கப் படம் லைஃப் அஸ் ஏ ஹவுஸ். இதில் தன் தந்தையின் கடற்கரையோர வீட்டை இடித்துவிட்டுப் புதிய வீடு ஒன்றைக் கட்ட முற்படுவான் விவாகரத்து பெற்ற நாயகன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறது நிறுவனம். அந்த தினமே அவனுக்குப் புற்று நோய் என்பதும் தெரிந்துவிடுகிறது. அதை யாரிடமும் அவன் தெரிவிக்கவில்லை. இறப்பதற்குள் வீட்டைக் கட்டிவிட முயல்கிறான். வளரிளம்பருவ மகனின் ஒத்துழைப்புடனும் இதைச் செயல்படுத்த விரும்புகிறான். ஆனால் மகனோ தகப்பனை வெறுக்கிறான், வீடு கட்டும் பணியில் ஒத்துழைக்க மறுக்கிறான். மகனுக்குத் தந்தையின் நோய் நிலை தெரிந்ததா? வீடு கட்டப்பட்டதா போன்றவற்றை உள்ளடக்கிய திரைக்கதையைப் படமாக்கியிருப்பார் இயக்குநர் இர்வின் விங்க்லர். நிம்மதியாக வாழலாம் என்று தான் ஒரு வீட்டுக்காக மனிதர்கள் பிரயத்தனப்படுகிறார்கள் ஆனால் வீடு அந்த நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறதா என்னும் கேள்வியைத் தான் இந்தப் படங்கள் எழுப்புகின்றன.

< சினிமா ஸ்கோப் 27 >                      < சினிமா ஸ்கோப் 29 >

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017

சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை


பிறமொழியில் ஒரு நல்ல படத்தைப் பார்க்கும்போது, அதைத் தமிழில் உருவாக்க வேண்டும் என்று ஒரு படைப்பாளிக்குத் தோன்றுவது இயல்பு. ஆகவே, அருகிலுள்ள மாநிலத் திரைப்படங்கள் குறிப்பாகப் பல மலையாளப் படங்கள் தமிழுக்கு வந்துள்ளன. இது இன்று நேற்று தொடங்கிய பழக்கமல்ல; நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டிருக்கிறது; இப்போதும் தொடர்கிறது. இப்போதைய போக்குக்கும் பழைய போக்குக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் உள்ளது. இப்போது காணப்படுவதைப் போல, ஒரு மலையாளப் படம் வணிகரீதியில் வெற்றிபெற்றுவிட்டாலே தமிழில் அந்தப் படத்தை மறு ஆக்கம் செய்தே ஆக வேண்டும் என்று போட்டிபோடும் மன நிலை அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. அழுத்தமான கதைகளுக்கும் திரைக்கதைகளுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.   

எம்.ஜி.ஆர். நடித்த ஒரே ஒரு மலையாளப் படமான ‘ஜெனோவா’ தமிழில் வெளியாகியிருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த ‘பாபு’ படமும் மலையாளத்தில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘ஓடயில் நின்னு’ படத்தின் மறு ஆக்கமே. எம்.கிருஷ்ணன் நாயர், தான் இயக்கிய ‘பாடுன்ன புழா’ படத்தையே தமிழில் ‘மன்னிப்பு’ என்னும் பெயரில் இயக்கினார். வங்காளப் படங்கள், பிரெஞ்சுப் படங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் தனது படங்களைப் படைத்தவராக அறியப்பட்டிருக்கும் கே.பாலசந்தரும் பல மலையாளப் படங்களைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார். ஐ.வி.சசி இயக்கத்தில் மது, ஷீலா நடித்த ‘ஆ நிமிஷம்’தான் ‘நூல் வேலி’ ஆனது. கமல்ஹாசன் நடிக்க பாலசந்தர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் மூலமும் மலையாளம்தான். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘அடிமகள்’தான் ‘நிழல் நிஜமாகிற’தானது. 


ஆக, தமிழுக்கும் ஏற்ற, தமிழில் கிடைக்காத கதைகளுடன் மலையாளப்படம் வெளியாகும்போது, அதைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். இந்தப் போக்கின் தொடர்ச்சியாகவே, ஃபாசில் தனது பல மலையாளப் படங்களை பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, வருஷம் 16, காதலுக்கு மரியாதை என்று படமாக்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. உணர்வுபூர்வமான கதையம்சப் படங்களைப் போலவே, மலையாளத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படங்களும், அரசியல் படங்கள் சிலவும் தமிழுக்கு வரத் தொடங்கின. 

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், ஜெயராம் நடித்த ‘மழவில்காவடி’ என்னும் படத்தைத்தான் பாண்டியராஜன் ‘சுப்பிரமணியசாமி’ என்னும் பெயரில் தமிழ்ப் படமாக்கியுள்ளார். சத்யன் அந்திக்காடு இயக்கிய ‘நாடோடிக் காற்று’தான் தமிழில் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடிப்பில் ‘கதாநாயகன்’ ஆனது. இந்தப் படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றாலும் அதையும் தாண்டி மலையாளப் படங்கள் கொண்டிருந்த ஆதார உணர்வைத் தமிழ்ப் படங்கள் எந்த அளவுக்குக் கொண்டிருந்தன என்பதைப் பொறுத்தே அவற்றுக்கான வரவேற்பு தமிழில் கிடைத்திருக்கிறது. ‘மக்கள் என் பக்கம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ போன்ற படங்கள் மலையாளத்திலிருந்தே தமிழுக்கு வந்திருந்தன என்றபோதும் அவை அசல் தமிழ்ப் படங்களைப் போன்ற நிறத்தையே கொண்டிருந்தன. 
ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்கு ஒரு படத்தை மறு ஆக்கம் செய்யும்போது, முதல் மொழியைவிட மேம்பட்ட வகையிலோ குறைந்தபட்சம் அதற்கு இணையான வகையிலோ படத்தை உருவாக்கினால் மட்டுமே அந்த மறு ஆக்கத்துக்கு மதிப்பு ஏற்படும். கதை, திரைக்கதை, வசனம், கதாபாத்திரங்களின் உருவாக்கம், கதை நிகழும் களம் போன்ற பல்வேறு அம்சங்களும் இரண்டாம் மொழியில் பொருந்திப் போகும்போதுதான் சிறந்த படைப்பாக மாறும் இல்லையெனில் அது பத்தோடு பதினொன்றாகிப் போகும். யதார்த்தத்தில் இது எந்த அளவு சாத்தியமாகியிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. மலையாளத்தில் வெளியான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்னும் திரைப்படம், கேரளாவிலிருந்து தாதியாக பெங்களூருக்குச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் வாழ்வைச் சிதைப்பவனை அவள் பழிவாங்குவதைச் சொன்னது. இந்தப் படத்தைத் தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்னும் பெயரில் தமிழில் உருவாக்கினார்கள். இந்தப் படத்தின் மைய அச்சானது இளம்பெண்கள் தாதிகளாகப் பிற மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ பணிக்குச் செல்வதுதான். தமிழ்ச் சூழலில் இப்படியொரு பழக்கம் வழக்கத்திலேயே இல்லை. ஆக, அடிப்படையிலேயே இந்தப் படம் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுவிடுகிறது. இப்படி, ஒரு மண்ணுக்கேயான பிரத்யேகப் பண்புகளைக் கொண்ட கதைகளைப் பிறிதொரு மண்ணுக்காக மறு ஆக்கம் செய்யும்போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது பாதகமான முடிவையே தரும்.    

சிலவேளைகளில் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வும் சிக்கலாக மாறிவிடும். உதாரணமாக மலையாளத்தில் பல சுவாரசியமான திரைக்கதைகளை உருவாக்கியுள்ள சீனிவாசன் படைக்கும் பாத்திரங்கள் கேலிக்குரிய பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவை கோமாளித்தனமானவை மட்டுமல்ல; அவற்றிடம் உள்ளடங்கிய ஒரு புத்திசாலித்தனம் பளிச்சிடும். அப்படியான பாத்திரங்களைப் படைப்பதே சீனிவாசனின் இயல்பு. அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்குத் தமிழில் நடிகர்களே இல்லை. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் தமிழ்ப் படைப்பாளிகள் கவலைகொள்வதில்லை. இலுப்பைப் பூக்களின் சர்க்கரையில் திருப்தியடைந்துவிடுகிறார்கள். 


‘வடக்குநோக்கியந்திரம்’ படத்தில் அவர் ஏற்றிருந்த சந்தேகக் கணவன் பாத்திரத்தைத் தமிழில் கருணாஸ் ஏற்று நடித்திருந்தார். கருணாஸ் என்னும் காமெடி நடிகரை அப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்ததால் ‘திண்டுக்கல் சாரதி’ மிக ஏமாற்றம் தந்த திரைப்படமாக மாறியது. ‘உதயனுதாரம்’ படத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த வேடம், தமிழ் நடிகர் ரஜினிகாந்தின் படங்களில் காணப்படும் அபத்தமான, கதாநாயகத்தனக் காட்சிகளைப் பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இயல்பிலேயே அந்தக் கதாபாத்திரத்திடம் ஒரு கேணங்கித் தனமும் வெகுளித் தனமும் தென்படும். ஆனால், தமிழில் அதை ‘வெள்ளித் திரை’ ஆக்கியபோது அந்த வேடத்தை ஏற்றிருந்தவர் பிரகாஷ்ராஜ். அவர் கமலையே கரைத்துக் குடித்து ஏப்பம்விட்ட திருப்தியில்தான் நடிக்கவே தொடங்குவார். அத்தகைய அதிபுத்திசாலி நடிகர் பிரகாஷ்ராஜ். அவரை அந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தாங்குமா? இவ்வளவு ஏன், சீனிவாசன் ஏற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தைத் தமிழில் இயக்குநர் தங்கர்பச்சானே ஏற்று நடித்திருக்கிறார் என்றால் சீனிவாசனை எந்த அளவு தமிழ்த் திரையுலகம் அலட்சியமாகக் கையாண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவற்றுக்கு மாறாக, இயக்குநர் பார்த்திபன், தனது ‘புள்ளகுட்டிக்கார’னில் சிறுவேடம் ஒன்றில் சீனிவாசனையே பயன்படுத்தியிருப்பார். 

இதுபோக, மலையாளப் படங்களின் போக்கே பெருமளவில் மாறிவிட்டது. அவை தமிழ்ப் படங்களைப் போலவே உருவாக்கப்படுகின்றன. சமீபத்தில் ‘பிரேமம்’ அங்கே பெரிய வெற்றியைப் பெற்றதன் காரணம் அதன் படமாக்கலில் வெளிப்படையாகக் காணப்பட்ட தமிழ்ப்படத்தனமே. நடிகர் விஜய் நடித்த பல தமிழ்ப் படங்கள் அங்கே வசூலை வாரிக்குவிக்கின்றன. பார்வையாளர்களின் மனம் அங்கே பெரிய அளவில் மாறியிருக்கிறது. இப்போதைய மலையாள ரசிகர்களின் தேவை ‘பிரேமம்’தான் ‘செம்மீன்’ அல்ல. அவர்களுக்காக உருவாக்கப்படும் ‘பிரேமம்’ போன்ற திரைப்படங்கள் ஒருபார்வையில் தமிழ்ப் படங்களே. அவற்றைத் தமிழில் மறு ஆக்கம் செய்ய இவ்வளவு அடித்துக்கொள்ள வேண்டுமா? அப்படி அடித்துப் பிடித்து உருவாக்கிய பல படங்கள் கலைரீதியாகவும் வசூல்ரீதியாகவும் தோல்வியைத்தானே தந்துள்ளன? 

< சினிமா ஸ்கோப் 26 >                     < சினிமா ஸ்கோப் 28 >

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

சினிமா ஸ்கோப் 26: காதல் கவிதை


புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தோயெவ்ஸ்கி எழுதி, 1848-ல் வெளியான கதை ஒயிட் நைட்ஸ். பனிபொழியும் காலத்தின் நான்கு இரவுகளில் நடைபெறும் சம்பவங்களை உள்ளடக்கிய கதையான இது ஒரு கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள். கதைப்படி அந்தக் கனவுலகவாசி கூச்ச சுபாவி. அவனது பிரதேசத்தில் அழகிய இளம்பெண்கள் பிரவேசித்ததில்லை. பெண்களின் உலகுக்குள் அவனும் அத்துமீறி நுழைந்ததில்லை. ஓரிரவில் அவன் சந்திக்கும் ஓரிளம்பெண் அவனது வாழ்வின் திசையை மாற்றுகிறாள். தன்னைப் பிரிந்துசென்ற காதலனுக்காக காத்திருக்கிறாள் அந்த இளம் பெண். நான்கு நாட்களுக்குள் கனவுலவாசிக்கும் இளம் பெண்ணுக்கும் நட்பும் காதலும் உருவாகிவிடுகின்றன. அவள் முழு மனத்துடனும் காதலுடனும் கனவுலகவாசியுடன் கைகோத்த கணத்தில் பழைய காதலன் தோன்றிவிடுகிறான். அந்தக் காதலனுடன் சென்றுவிடுகிறாள் இளம்பெண். கனவுலகவாசி மீண்டும் தன் கனவுகளில் தஞ்சமடைந்துவிடுகிறான்.       

சற்றே நீண்ட இந்தச் சிறுகதையை உலகின் பல இயக்குநர்கள் படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொருவிதமான படத்தைப் படைத்திருக்கிறார்கள். கதை ஒன்றுதான். ஆனால், திரைக்கதையின் போக்குக்கு ஏற்ப இதன் காட்சிகளும், கதாபாத்திரங்களின் தோற்றங்களும் மாறுபடுகின்றன. களம் மாறுபடுகிறது, கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் வந்துவிடுகிறது. இப்படியாக அவை வெவ்வேறு வகையான திரை அனுபவங்களைத் தருகின்றன. அடிப்படையில் இந்தக் கதையே முழுக்க முழுக்க காதலுணர்வில் முகிழ்த்த கதை. ஆகவே அசட்டுத்தனங்களுக்கும் அற்புதத் தருணங்களுக்கும் குறைவில்லை. ஒரு திரைப்படத்துக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்கள் என எவையுமில்லை. ஆனால், அறிவால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத உணர்வின் அடைப்படையில் அந்த இளம்பெண் எடுக்கும் முடிவுகள் அதிர்ச்சிதரவல்லவை.   


இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு 1957-ல் இத்தாலிய இயக்குநர் லூக்கினோ விஸ்கோந்தி ஒயிட் நைட்ஸ் என்னும் பெயரிலேயே ஒரு படத்தை உருவாக்கினார். கறுப்பு வெள்ளைப் படமான இதில் பனிபொழியும் இரவு, ஆற்றுப் பாலம், அதை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை அசையும் ஓவியங்களைப் போலவே காட்சிகொள்ளும். கதையைப் போலவே இதிலும் இளம்பெண்ணின் பாட்டி உறங்கும்போது, தன்னுடன் அந்தப் பெண்ணின் உடையைப் பிணைத்திருப்பார். தீவிர வாசிப்பனுபவத்துக்கான கதையை இனிய காட்சியனுபவமாக மாற்றியிருப்பார் இயக்குநர். 

இதே கதையை 1971-ல் ஃபோர் ஆஃப் எ ட்ரீம்மர் என்னும் பெயரில் ஃபிரெஞ்சு இயக்குநர் ராபே ப்ரேஸான் (ஆங்கில உச்சரிப்பு ராபர்ட் ப்ரஸ்ஸான்) படமாக்கினார். பிக் பாக்கெட் படத்தை உருவாக்கிய ராபே ப்ரேஸான் தனக்குரிய முத்திரைகளுடன் ஒயிட் நைட்ஸ் கதையைக் கையாண்டிருப்பார். இந்தக் கதையில் இளம்பெண்ணுக்குப் பாட்டி கிடையாது. அதற்குப் பதில் அம்மா. தனது தனிமைக்குள் உழலும் அந்தக் கனவுலகவாசி ஓர் ஓவியன், ஆனால் அதையே பிறரிடம் வெளிப்படுத்தாத அளவுக்கு உள்ளடங்கிய குணம் கொண்டவன். தன் குரலில் தானே பேசி அதைக் கேட்டு மகிழ்பவன். அழகிய வெள்ளைப் புறாக்கள் புல் தரையில் அலைவுறும் ஒலியைப் பதிவுசெய்வதைக்கூட விருப்பத்துடன் செய்யும் அளவுக்கு மென்மையானவன். அவனைத்தான் காதலனுக்காகக் காத்திருந்த இளம்பெண் காதலிக்கிறாள்; காதலன் திரும்பிவிடவும் கைவிட்டுவிடுகிறாள்.  


முக்கோணக் காதல் கதைகளைத் தனித்துவத்துடன் இயக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதி இயக்கிய அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) திரைப்படத்தில் ஒயிட் நைட்ஸின் பாதிப்பை உணர முடியும். திரைக்கதையில் ஸ்ரீதர் செய்திருந்த பல மாற்றங்களே இந்தப் படத்தை ஒயிட் நைட்ஸிலிருந்து வேறுபடுத்தும். வேணி என்னும் இளம் பெண் கதாபாத்திரத்தை லதா ஏற்று நடித்திருப்பார். அவருடைய காதலனாக ஜெய்கணேஷ் வேணு என்னும் பாத்திரத்திலும், வேணியை உருகி உருகிக் காதலிக்கும் வாசு என்னும் பாத்திரத்தில் விஜயகுமாரும் நடித்திருப்பார்கள். காதலன் பாத்திரத்தை ஸ்திரிலோலனாக மாற்றியிருப்பார் ஸ்ரீதர். ஒயிட் நைட்ஸில் ஓராண்டில் திரும்பிவந்துவிடுவதாகக் காதலன் கதாபாத்திரம் சொல்லிவிட்டுச் செல்லும். ஆனால், இதில் ஜெய்கணேஷ் வேணியிடம் வேண்டியது கிடைத்ததும் தலைமறைவாகிவிடுவார். பல முற்போக்கு சங்கதிகளை இந்தப் படம் கொண்டிருக்கும். வேணியின் அண்ணன் மகளாக வரும் பருவப் பெண் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை அள்ளிவிடுபவளாக நடித்திருப்பாள். வேணுவிடம் வேணி தன்னை இழந்திருப்பதை அறிந்தும் அவளைக் கரம்பற்ற விரும்புபவனாகவே வாசுவின் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார் ஸ்ரீதர். வாலி எழுதிய என் கல்யாண வைபோகம், நானே நானா யாரோ தானா? உள்ளிட்ட பல பாடல்கள் இந்தப் படத்தை மறக்க முடியாததாக மாற்றியிருக்கிறது. 


2003-ல், தோழர் எஸ்.பி.ஜனநாதன் கதை, வசனம் இயக்கத்தில் வெளியான இயற்கை படமும் இதன் பாதிப்பில் உருவானதே. இதை ஜனநாதனே நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ படத்தின் டைட்டிலில் எதுவும் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஸ்ரீதரின் படத்தில் கனவுலகவாசியின் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருந்தார் என்றால் இயற்கையில் காதலன் கதாபாத்திரத்தில் அவருடைய மகன் அருண் விஜய் நடித்திருப்பார். பொழுதுபோக்குப் படங்களை உருவாக்கிவந்த ஸ்ரீதரின் படத்தின் கதாபாத்திரங்கள் போல் முற்போக்கான கதாபாத்திரங்களை, மாற்றுப் படங்களை உருவாக்குவதான பாவனை காட்டும் ஜனநாதன் உருவாக்கவில்லை. நாயகி மாசற்ற பெண்ணாகவே படைக்கப்பட்டிருப்பாள். நெய்தல் நிலத்தின் பின்னணியில் படத்தை உருவாக்கியிருந்ததால் படத்துக்குப் புதியதொரு நிறம் கிடைத்தது. சிறந்த படமென மாநில அரசின் விருதும் கிடைத்தது. 



இத்தனை படங்களுக்குப் பின்னர், இந்திப் பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, சாவரியா (2007) என்னும் பெயரில், ஒயிட் நைட்ஸ் கதையை ஒரு காவியப் படமாக்கினார். காதலனாக சல்மான் கானும், காதலியாக சோனம் கபூரும், கனவுலகவாசியாக ரன்பீர் கபூரும் நடித்திருப்பார்கள். இத்தாலிப் பட்த்திலும், ஃபிரெஞ்சுப் படத்திலும் அந்த இளம் பெண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாகக் காட்சிபடுத்தப்பட்டிருப்பாள். இந்திப் படத்தில் அந்தப் பெண் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவள். மெலோ டிராமா வகையைச் சேர்ந்த இந்தப் படம் ஒயிட் நைட்ஸின் தீவிரத் தன்மையைக் குறைக்கும் வகையிலானது. ஸ்ரீதரைப் போலவே, அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் க்ரேயும் இந்தக் கதையின் பாதிப்பில் 2008-ல் டூ லவ்வர்ஸ் என்னும் பெயரில் ஒரு படமெடுத்தார். இதில் அந்தக் கனவுலக வாசிக்கு வேறு ஒரு காதலியையும் இவர் உருவாக்கியிருப்பார். தான் விரும்பிய இளம் பெண் அவளுடைய காதலனுடன் சென்ற பிறகு, கனவுலகவாசி மற்றொரு காதலியைத் தஞ்சமடைந்துவிடுவான். ஒரே கதையைப் பல்வேறு திரைக்கதைப் பாதைகளில் கொண்டுசென்று பல படங்களை உருவாக்கிவிட முடியும். ஆனால் எல்லாப் படங்களும் தனித்துவம் கொண்டதாக அமைய வேண்டுமென்றால் அதற்கு இயக்குநரின் ஒத்துழைப்பு தேவை. அவருடைய பார்வை வழியேதான் படம் மெருகேறும் அல்லது மொண்ணையாக மாறும்.

< சினிமா ஸ்கோப் 25 >                               < சினிமா ஸ்கோப் 27 >  

சனி, பிப்ரவரி 11, 2017

ஊழல் தண்டவாளங்களில் நசுங்கும் நேர்மை

க்ளோரி

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு பார்த்த உருப்படியான படங்களில் ஒன்று ஸ்லாவா. இது ஒரு பல்கேரியத் திரைப்படம். இதன் ஆங்கிலத் தலைப்பு க்ளோரி. இரட்டை இயக்குநர்கள் கிறிஸ்டினா குரொஸொவா, பீட்டர் வல்சனவ் இயக்கிய திரைப்படம் இது. இருவரும் இணைந்து அநேகக் குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 2014-ல் ‘த லெஸன்’ என்னும் முதல் படத்தை இயக்கினார்கள். செய்தித் தாள்களில் இடம்பெறும் செய்திகளின் அடிப்படையில் சமூக, அரசியல் பார்வையுடன் மூன்று திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்தில் படங்களை இயக்கிவருகிறார்கள். ‘க்ளோரி’ இரண்டாவதாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.



படத்தின் பிரதான பாத்திரம் சாங்கோ பெட்ரோவ் என்னும் ரயில்வே ட்ரேக்மேன். மத்தியதர வயதைக் கடந்து, முதுமையின் படியில் கால்வைத்திருக்கும் அவர், தனியே ஒரு வீட்டில் வசித்துவருகிறார். அவருடைய துணை கரிசனத்துடன் அவர் வளர்த்துவரும் முயல்கள்மாத்திரமே. அதிகமாக யாருடனும் பேசாமல், நிதானமான வாழ்வை மேற்கொள்பவர் அவர். அவருக்கு நேர் எதிரானது, போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றும் ஜுயா ஸ்டேகோவா என்னும் பாத்திரம். அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். இவர்கள் இருவரையும் ஒரே கோட்டில் இணைத்து அதன் மூலம் பல்கேரியாவின் சமூக, அரசியல் சூழலை விமர்சித்திருக்கிறார்கள் இந்த இயக்குநர்கள்.


ரயில்வே தண்டவாளங்களைக் கண்காணித்துச் செப்பனிடும் பணியைத் தினந்தோறும் செய்துவரும் சாங்கோ பெட்ரோவ், ஒரு நாள் தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது பணத் தாள் ஒன்று கிடப்பதைப் பார்க்கிறார்.அதை எடுத்துக்கொள்ளும் அவர் சிறிது தூரம் சென்ற பின்னர் மற்றொரு தாள் கிடைக்கிறது. இரண்டையும் தன் பையில் செருகிக்கொள்கிறார். தொடர்ந்து சென்றவருக்கு அதிர்ச்சிதரும் வகையில் ஏராளமான பணத் தாள்கள் சிதறிக்கிடக்கின்றன. அவர் அரசுக்குத் தகவல் தெரிவிக்கிறார். ஊடகங்கள் வறுத்தெடுக்கும் போக்குவரத்துத் துறையின் ஊழலிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார், செய்தித் தொடர்பாளர் ஜுயா ஸ்டேகோவா. நேர்மையான மனிதரான சாங்கோவுக்கு அமைச்சரின் தலைமையில் பரிசளித்துக் கவுரவித்து நாட்டின் மானத்தைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளால் மனிதநேயம் எவ்வளவு மலினப்படுத்தப்படுகிறது என்பதை இயல்பான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.


பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் சாங்கோ பிரமாதமாகக் கவனிக்கப்படுகிறார். அவருக்குப் புதிய உடைகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பான காட்சிகள் அனைத்துமே எள்ளல் மிக்கவை. அவருடைய பழைய மணிக்கட்டுக் கடிகாரத்தைக் கழற்றிக்கொடுக்குமாறு அவரை வற்புறுத்தும் ஜுயா அவருக்குப் புதிய மணிக்கட்டுக் கடிகாரம் அமைச்சரால் அணிவிக்கப்படும் என்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருடைய பழைய கடிகாரத்தைத் தந்துவிடுவதாகவும் கூறுகிறார். வேறு வழியின்றி தன் தந்தை தனக்குப் பிரியமாக அளித்த கடிகாரத்தை ஜுயாவிடம் தருகிறார் சாங்கோ. ஆனால் வழக்கம்போல் அரசு நிர்வாகம் மெத்தனமாகச் செயல்படுகிறது. ஜுயா சாங்கோவின் பிரியத்துக்குரிய கடிகாரத்தைத் தவறவிட்டுவிடுகிறார். சாங்கோ தன் கடிகாரத்தை மீண்டும் பெற்றுவிடப் போராடுகிறார். இதனிடையே ஊடகங்கள் வேறு தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றன.


பரிசளிப்பு விழாவில் அமைச்சரிடம் தனியே பேசும் வாய்ப்புப் பெற்ற சாங்கோ தங்களது சம்பளப் பாக்கி எப்போது வரும் என்று கேட்கிறார். அது மட்டுமல்ல போக்குவரத்துத் துறையில் நடக்கும் சில ஊழல்கள் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும் அதில் ஈடுபடுபவர்களைப் பற்றியும் தன்னால் சொல்ல முடியும் என்றும் கூறுகிறார். அமைச்சர் திக்குமுக்காடிப் போகிறார். நேர்மையான மனிதரின் எளிய கேள்விகளுக்கு விடைசொல்ல முடியாமல் ஊழல் கறை படிந்த அமைச்சர் நழுவுகிறார். சாங்கோ பற்றி அறிந்துகொண்ட ஊடகர் ஒருவர் அவரைக் காட்சி ஊடகம் ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்கிறார். அதில் அரசின் ஊழலை அம்பலப்படுத்துகிறார் சாங்கோ. இப்போது அரசு நிர்வாகம் தான் நாயகன் என முன்னிறுத்திய நேர்மையான மனிதரை விரோத மனப்பானமியுடன் அணுகுகிறது. அவரை மிரட்டுகிறது. அவரே தான் சொன்னது உண்மையல்ல எனச் சொல்லவைக்கிறது. அரசாங்கம் தன் ஊழலை மறைக்கத் தனி நபரின் நேர்மையை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதையும் அதன் வழியே தனி மனித உணர்வுகள் எந்த அளவுக்கு நசுக்கப்படுகின்றன என்பதையும் துயரார்ந்த நகைச்சுவைச் சம்பவங்கள் வழியே உணர்த்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள். நமது நாட்டு அரசியல் சூழலோடு பொருந்திப்போவதால் இப்படத்தை மிக நெருக்கமானதாக உணர முடிந்தது.

தி இந்துவில் வெளியானது. 

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

சினிமா ஸ்கோப் 25: துள்ளாத மனமும் துள்ளும்


ஒரு திரைப்படத்தை அப்படியே நகலெடுப்பது ஒரு வகை என்றால் அந்தப் படத்தின் தாக்கத்தில் கதை எழுதி திரைக்கதை அமைப்பது மற்றொரு வகை. இந்த இரண்டு வகைகளிலும் கைதேர்ந்தவர்கள் தமிழ்ப் படைப்பாளிகள். பிற படைப்பாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக உதாரணம் காட்டக்கூடிய ஒரு படம் சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ். சற்றேறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1931-ல் வெளியான இது, மிகவும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திரைப்படம். இதன் கதை, இன்றுவரை பல படங்களின் திரைக்கதைக்கு அடித்தளமாக  அமைந்துவருகிறது என்பதே இதன் மகத்துவம். 

சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதையை ஓரிரு வரிகளில் பார்க்கலாம். வசிக்க வீடற்ற எளிய மனிதன் ஒருவனுக்கும் நடைமேடையில் பூவிற்றுப் பிழைப்பு நடத்தும் பார்வையற்ற பெண்ணுக்குமான உறவை மனிதநேய இழையில் தொடுத்துக்கட்டி பார்வையாளரின் முன்வைத்த படம் இது. இந்தப் படத்துக்குத் தான் சார்லி சாப்ளின் முதன்முதலில் பின்னணியிசை அமைத்தார். இதன் திரைக்கதையின் நேர்த்தி காரணமாக இன்றுவரை இதன் பாதிப்பில் உருவாக்கப்பட்ட எந்தப் படத்தாலும் இதைத் தொடவே முடியவில்லை. இது வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றால், இதன் தாக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் வீட்டில் தொங்கவிடப்படும் காகித நட்சத்திரங்களாகவே காட்சிகொள்கின்றன. 


பார்வையற்ற பெண்மீது கொண்ட பிரியம் காரணமாக அவளது வறுமையைப் போக்க உதவுகிறார் எளிய மனிதரின் வேடமேற்றிருக்கும் சார்லி சாப்ளின். தற்கொலை செய்துகொள்ள முயலும் ஒரு மில்லியனரைக் காப்பாற்றும் சாப்ளினுக்கு உதவுகிறார் அவர். ஆனால் அவர் போதையில் இருக்கும்போது மட்டுமே சாப்ளினை அவருக்கு அடையாளம் தெரியும். போதை தெளிந்தால் சாப்ளினை விரட்டிவிடுவார். இப்படியொரு விநோதக் கதாபாத்திரம் அது. பூக்காரப் பெண்ணின் நெருக்கடியைப் போக்கவும் அவளது பார்வையைத் திரும்பப் பெறவுமான பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் சாப்ளின் இறங்கியபோது, எதிர்பாராத சம்பவத்தால் சாப்ளின். திருட்டுக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். பூக்காரப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வரும் சாப்ளினைக் காவல்துறையினர் பிடித்துச் சிறைக்கு அனுப்பிவிடுகின்றனர்.

சிறைக்குச் சென்று திரும்பிவரும், பிச்சைக்காரர் போன்ற தோற்றம் கொண்ட சாப்ளினை பேப்பர் விற்கும் சிறுவர்கள் கிண்டல் செய்கிறார்கள், அவரது கிழிசலான உடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியிருக்கிறாள் பூக்காரப் பெண். அவளுக்கு இப்போது பார்வை வந்துவிட்டது. சாப்ளின் அவள் முன்னால் வந்து நிற்கிறார். அவர் கையிலுள்ள ரோஜாப்பூவில் ஒவ்வொரு இதழாக உதிர்கிறது. அது முழுவதும் உதிர்ந்த கணத்தில் அவர்மீது இரக்கம்கொண்டு ஒரு புது ரோஜாவைக் கொடுக்கிறாள் பூக்காரப் பெண். அப்போது அவருடைய கையை வருடும்போது அந்த ஸ்பரிசம் அவர் தனக்கு உதவியவர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இருவரும் இணைகிறார்கள். இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கும் தன்மை காரணமாக இப்போது நீங்கள் படத்தைப் பார்த்தால்கூட ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போல் உணர முடியும். படத்தின் ஒரு ஷாட்கூட தேவையற்றது என நீங்கள் சொல்ல முடியாது. அவ்வளவு கூர்மையான படைப்பு அது. 


சிட்டிலைட்ஸைப் போன்று பல திரைக்கதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. 1954-ல் வெளியான ராஜி என் கண்மணி இதன் தழுவல்தான். டி.ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி நடித்த இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரிக்க இயக்கியவர் கே.ஜே. மகாதேவன். இதன் பின்னர் குல்ஷன் நந்தாவின் கதை எழுத ஏ.எல்.நாராயணன் வசனத்தில் வெளியான எங்கிருந்தோ வந்தாள் (1970) படத்தை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இது தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கரு சிட்டி லைட்ஸ் போன்றதே. 

சிட்டி லைட்ஸில் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் இதில் பித்துப் பிடித்த கதாபாத்திரம். அந்த வேடமேற்றவர் சிவாஜி கணேசன். பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஆதரவாக வந்து அவரைக் குணப்படுத்துபவர் ஜெயலலிதா. அவரது கதாபாத்திரம் ஒரு தேவதாசிப் பெண் போன்றது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்படியொரு சூழலில் மாட்டிக்கொள்வார் ஜெயலலிதா. மனநிலை பாதிப்பு கொண்ட சிவாஜியைக் கவனித்துக்கொள்ளும் ஜெயலலிதாவை ஒரு அசந்தர்ப்பமான பொழுதில் தனதாக்கிக்கொள்வார் சிவாஜி. ஆனால் அவருக்குப் பித்து தெளிந்த சமயத்தில் ஜெயலலிதாவை யாரென்றே தெரியாது. பின்னர் அதை யார் தெளிவுபடுத்துகிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ். பித்துத் தெளிந்த பின்னர் சிவாஜி ஒவ்வொருவராக அடையாளம்கண்டு வரும் சிவாஜி யாரிந்தப் பெண் என ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்பார். அப்போது ஜெயலலிதா, பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி நடித்துக்காட்டுவார். கிட்டத்தட்ட மனப்பிறழ்வுக்குள்ளானவர் போல் நடந்துகொள்வார். இந்தக் காட்சி உங்களுக்கு மூன்றாம் பிறை படத்தை ஞாபகமூட்டக் கூடும். 


பாலுமகேந்திரா கதை திரைக்கதை எழுதி இயக்கிய படம் மூன்றாம் பிறை (1983). இதில் ஸ்ரீதேவி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அவருக்கு ஆதரவு காட்டுபவர் கமல் ஹாசன். எங்கிருந்தோ வந்தாளை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்தால் அது மூன்றாம் பிறை. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் தன்னை யாரென்று வெளிப்படுத்த, ஸ்ரீதேவியின் முன்பு நடித்துக்காட்டுவர் கமல் ஹாசன். மனநலம் பிறழ்ந்த ஒருவன் என்றே ஸ்ரீதேவி அவரை நினைத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் கமல் அவமானப்படுவது சிட்டி லைட்ஸில் சாப்ளின் அவமானப்படுவதற்கு நிகரானது. என்ன ஒன்று ‘கமல் அளவுக்கு’ சாப்ளின் நடித்திருக்க மாட்டார். அப்படி நடித்ததால்தான் கமலுக்குத் தேசிய விருது கிடைத்தது. படத்தின் வணிக வெற்றிக்கு சில்க் ஸ்மிதா பயன்பட்டிருப்பார். மூன்றாம் பிறை போன்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளை உருவாக்கத் தனித் தைரியம் வேண்டும். அதைப் பெற்றிருந்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தை இந்தியிலும் பாலுமகேந்திரா உருவாக்கினார். நேரிடையாக சிட்டி லைட்ஸைத் தழுவி உருவாக்கப்பட்ட ராஜி என் கண்மணி தோல்விப்படம். ஆனால் எங்கிருந்தோ வந்தாள், மூன்றாம் பிறை போன்றவை எல்லாம் வெற்றிப் படங்கள்.   


இவை மாத்திரமல்ல மகேந்திரன் திரைக்கதை வசனத்தில் உருவான நிறைகுடம் (1969). எழில் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் (1999), மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்த நிலவே முகம் காட்டு (1999) போன்ற பல படங்களில் சிட்டி லைட்ஸின் தாக்கத்தை உணர முடியும். இந்த அனைத்துப் படங்களையும் ஒருசேரப் பார்க்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் நீங்கள் புதிய திரைக்கதை ஒன்றையே எழுதிவிட முடியும். ஆனால் அது சிட்டி லைட்ஸைத் தாண்டக்கூடிய வகையில் அமையுமா என்பதுதான் உங்களுக்கான சவால். அந்தச் சவாலை இப்போதும் உங்களிடம் விதைக்கும் படமாக சிட்டி லைட்ஸை உருவாக்கியதுதான் சார்லி சாப்ளின் என்ற கலைஞனின் மேதைமை. 

< சினிமா ஸ்கோப் 24 >                         < சினிமா ஸ்கோப் 26 >

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்