ஓவியம்: வெங்கி |
வெகுளி வெள்ளைச்சாமி நகரசபைத் தலைவராக இருந்த இந்தூர் நகரசபைக்குத் தலைவராக ஆசைப்பட்டவன் சின்னதம்பி. நேர்மையாவும் மக்களோடு மக்களாகவும் நின்று செயல்பட நினைப்பவன் சின்னதம்பி. ஆனால், அவனது அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா என அவனுடைய பரம்பரையே அந்த நகராட்சிக்குத் தலைவராக இருந்திருக்கிறது. அவர்கள் சம்பாதித்த கெட்ட பெயரை எல்லாம் சின்னதம்பியால் போக்க முடியவில்லை. அவனும் என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிறான் போடா தம்பி போ என்னும் விதமாகவே அனைவரும் நடந்துகொள்கிறார்கள். ஆனாலும் வெள்ளைச்சாமியை விரட்டாமல் ஓயப்போவதில்லை என சின்னதம்பி சபதம் எடுத்ததுபோல் செயல்படுகிறான்.
இதையெல்லாம் சமாளிக்கும் திறன் பெற்றவன் வெள்ளைச்சாமி. நன்றாக உடம்பை வளர்த்துவைத்திருந்தான் வெள்ளை. அறிவு வளராததால் அந்த வளர்ச்சியெல்லாம் உடம்பில் வந்துசேர்ந்தது. ஆஜானுபாகுவான வெள்ளையின் தோற்றம் கம்பீரமாக இருக்கும். அந்த உடம்பு அவனுக்குப் பெரிய வரப்பிரசாதம். அவன் பெரிய நடிகன். திடீர்னு அழுவான் அடுத்த கணமே பெருங்குரலெடுத்து சிரிப்பான். எதுக்குன்னே தெரியாது. நமக்கு மட்டுமல்ல; அவனுக்கும் தெரியாது. அவனுடன் இருப்பவர்களே குழம்பிப்போவார்கள். ஆனால் அப்படியெல்லாம் நடந்துக்குவான். அதுக்காகப் பெரிய பயிற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறான். வெற்றி மட்டும்தான் வெள்ளையின் குறிக்கோள். அதற்காக எந்த இழிவான நிலைக்கும் அவன் செல்வான். அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்வின் அடிநிலையிலிருந்து மேலெழுந்து வந்தவன். பல தகிடுதத்தங்கள் செய்து மேலே வந்த பின்னர் அந்தத் தகிடுதத்தங்களைக் கடும் உழைப்பு என்று உதார் விடுவான். பொய் சொல்லக் கூசவே மாட்டான் வெள்ளை. மிகத் தைரியமாகப் பொய் சொல்வான்.
வெள்ளைச்சாமியின் தாய் மிகவும் ஏழை. வரிசையில் நின்று ரேசன் பொருட்கள் வாங்குவார். அதை போட்டோ எடுத்து பரப்புவான் வெள்ளை. தன் தாய் எவ்வளவு எளிமையாக வாழ்கிறாள் எனப் பிரபலப்படுத்துவான். அவ்வப்போது கிழிந்த டவுரசரைப் போட்டுக் கொண்டு தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொள்வான் வெள்ளை. இப்போது விலை உயர்ந்த கோட் சூட் எல்லாம் போட்டும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் எப்படித் தகிடுதத்தம் செய்து பதவிக்கு வந்தோமோ அப்படி வேறு யாராவது இந்தப் பதவிக்கு வந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கும். சில வேளைகளில் அழுகை அழுகையாக வரும். அப்போதெல்லாம் டேய் நீ ஒரு டான் அழக் கூடாது என்று கண்ணாடியைப் பார்த்து தன்னைத் தேற்றிக்கொள்வான்.
ஒரு முறை அவன் தமிழூருக்குச் சென்றபோது, அந்த ஊரின் மக்கள் அவனைப் பயங்கரமாக அவமானப்படுத்திவிட்டார்கள். சுவரெங்கும் வெள்ளையே திரும்பிப் போ என்று முழக்கமிட்டார்கள். காரைவிட்டு வெள்ளை இறங்கவே இல்லை. அன்று அவனுடைய காலைக் கடன், குளிப்பு, சாப்பாடு உரை எல்லாமே காரிலிருந்தபடியே கழிந்தது. மாலையில் தப்பித்தால் போதும் என்று தமிழூரிலிருந்து ஓடியே வந்துவிட்டான். எப்போதுமே தமிழூர் என்றாலே அவனுக்குக் கண்டம்தான். தமிழூரின் தலைவராக இருக்கும் பெரியவரை நினைத்தாலே அவனுக்குப் பகீரென்றிருக்கும். பேண்டை நனைத்துவிடுவோமோ என்று பயப்படுவான். சின்னவயதில் ஆசிரியருக்குப் பயந்தது நினைவுக்கு வரும்.
மொத்தம் பத்தாயிரம் பேர் உள்ள அந்த இந்தூரில் 15 ஆயிரம் பேரோட ஆதரவால் தான் நகராட்சித் தலைவராக ஆனதாகப் பெருமைப்பட்டுக்கொள்வான். திடீரென வெள்ளைச்சாமியின் பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது. அந்த ஊரின் வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமே வெள்ளைச்சாமி ஆதரவு தருவதாகவும் ஏழை எளியோரை வஞ்சிப்பதாகவும் சின்னத்தம்பி வெள்ளைக்கு எதிராக நகராட்சி உறுப்பினர்களைத் திரட்டினான். பொதுவாக, பொதுக்கூட்ட மேடைகளில் கையை அசைத்தும் தலையை ஆட்டியும் உற்சாக உரை எழுப்பும் வெள்ளைச்சாமிக்கு நகராட்சிக் கூட்டத்தில் பேச வேண்டுமென்றால் கைகால் எல்லாம் உதறும். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாது வெள்ளைச்சாமிக்கு. பாவம் அவன் என்ன செய்வான். அவனுக்கு அதெல்லாம் தெரியாது. அதனால் செய்தியாளர்களைச் சந்திக்கவோ நகரசபையில் விவாதத்தை எதிர்கொள்ளவோ திணறுவான். அப்படியே விவாதத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசுவான். ஆனால் அதை பெரிய சாதனை போல் சொல்வான். இதை எதுக்குச் சொல்றான் என யோசிக்கும்முன்பே அவன் தான் நினைத்ததை எல்லாம் உளறி முடித்துவிடுவான். எப்படியோ ஒவ்வொரு நிகழ்வையும் அவன் சமாளித்துவருகிறான். சில நேரம் இந்த மானங்கெட்ட பொழப்பு தனக்குத் தேவையா எனத் தனியாக இருக்கும்போது நினைத்துக்கொள்வான்.
வெள்ளை பயந்த நாள் வந்தது. சின்னதம்பி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டான். வெள்ளைக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரிக்க முயன்றான். சின்னதம்பி பேசியதைப் பார்த்த வெள்ளை திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. வேகமாக எழுந்துசென்று சின்னதம்பியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். மிகப் பிரமாதமான பேச்சு எனப் பாராட்டினான் வெள்ளை. வெள்ளை தன்னைக் கட்டிப் பிடித்துவிட்டானே, முத்தம் கொடுத்துவிட்டானே என சின்னதம்பிக்கு அவமானமாகப் போய்விட்டது. டன் கணக்கில் டெட்டால் போட்டுக் குளிக்க வேண்டும் என சின்னதம்பி எண்ணிக்கொண்டான். அவ்வளவு வெறுப்பு வெள்ளைமீது சின்னதம்பிக்கு.
சின்னதம்பி கேட்ட எந்தக் கேள்விக்கும் வெள்ளை பதிலே சொல்லவில்லை. அவை அனைத்தும் நியாயமான கேள்விகள். அதற்கு வெள்ளை பதில் சொன்னால் மாட்டிக்கொள்வான். அது அவனுக்குத் தெரியும். அதனால்தான் சின்னதம்பியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து நாடகமாடினான். அப்பாவிகள் வெள்ளையைப் புகழ்ந்தனர். எதிரியையும் சமமாக நடத்தும் வெள்ளையின் புகழ் நாடெங்கும் பரவியது. சின்னதம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படியொரு மானங்கெட்ட மனிதனை எப்படிச் சமாளிப்பது எனக் குழம்பினான். ஆனாலும் எப்படியும் வெள்ளையை வென்றாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் சின்னதம்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக