இயக்குநர்
M.பாஸ்கர் M.A. இயக்கிய நான்காம் படம் ‘பக்கத்து வீட்டு ரோஜா’. 1982 செப்டம்பர் 2 அன்று
வெளியாகியிருக்கிறது. ‘பைரவி’ படத்தில் நடிக்க மறுத்திருந்த நடிகர் முத்துராமனின் மைந்தனான
கார்த்திக்தான் இந்தப் படத்தின் நாயகன். இதில் அவருக்கு ஒரு காட்சியில் பெண் வேடமும்
உண்டு. இந்த ஆண்டில் நடிகர் கார்த்திக் நடித்த ‘நினைவெல்லாம் நித்யா’, ‘வாலிபமே வா
வா’, ‘இளஞ்ஜோடிகள்’ உள்ளிட்ட பத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு ஜோடியாக
நடிகை ராதா நடித்திருந்தார். 1982-ல் ராதா ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’,
‘காதல் ஓவியம்’ உள்ளிட்ட 14 படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திக், ராதா இருவரும்
இந்த ஆண்டில் ஆறு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். 1981-ல் வெளியாகி பெரிய வெற்றியைப்
பெற்ற ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகிய வெற்றி ஜோடி இவர்கள் என்பதே இதற்குக்
காரணமாக இருக்க வேண்டும்.
படத்தின் கதையும் தயாரிப்பும் கலைஞானம். அவருடைய
உதவியாளர் பனசை மணியன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இயக்கம் மட்டுமே பாஸ்கர்.
இசை சங்கர் கணேஷ். மனோரமா, கவுண்டமணி, ஜனகராஜ், S.S.சந்திரன், தியாகு உள்ளிட்ட பலரும்
நடித்திருக்கின்றனர். மலையாள நடிகர் பிரேம் நஸீரின் மகனான ஷாநவாஸ் எதிர்மறை நாயகனாகவும்
அப்போதைய பிரபல நடிகை ராணி பத்மினி நடனக்காரியாகவும் வேடமேற்றிருக்கிறார்கள். நிஜ வாழ்வில்
கொலைக்காளான ராணி பத்மினிக்கு இந்தப் படத்திலும் அதே கதிதான்.
மிக எளிய கதை. படத்தைப் பற்றி ஒரு வரியில்
சொல்ல வேண்டும் என்றால், பெண் ஒருவர் நகைமீது கொண்ட ஆசையால் எதிர்கொண்ட ஏற்ற இறக்கமான
சம்பவங்கள் என்று சொல்லலாம். பொதுவாகவே பாஸ்கர் தனது படத்துக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்குப்
பெரிதாக மெனக்கெடவில்லை. என்ன இருந்தாலும் இது சினிமாதான் என்ற புரிதல் காரணமாக இந்த
முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். இந்தப் படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு
நடிகர்களது பெயரே வழங்கப்பட்டிருக்கிறது. ராதாவுக்கு நகை என்றால் கொள்ளைப் பிரியம்.
கோயிலில் அர்ச்சகரிடம் இரவலாக அம்பாள் நகையையே கேட்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
யாராவது கண்ணைப் பறிக்கும் புது நகை ஒன்றை அணிந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும்
அதை எப்படியாவது அணிந்துபார்க்க வேண்டும் என்ற அடங்காத ஆசை அவருக்கு எழுந்துவிடும்.
நகைக்கடை அதிபர் மதன் ஒரு காமுகன். நகைகளுக்கு
மயங்கும் பெண்களைத் தன்வசப்படுத்தி மகிழ்பவன். அவனது நகைகளைப் பறிக்க முயன்ற கூட்டத்தினருடன்
சண்டையிட்டு அவனுக்கு கார்த்திக் உதவியதால் இருவரும் நண்பர்களாகின்றனர். தனது கடையிலேயே
மதன், கார்த்திக்கைப் பணியில் அமர்த்துகிறான். நகைக்கடைக்கு வரும் ராதா கார்த்திக்கை
அதன் உரிமையாளர் என எண்ணிக்கொள்கிறாள். அழகான பெண் என்பதால் கார்த்திக்கும் அதை அப்படியே
பராமரிக்கிறான். இருவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
தன்னைக் கடையின் உரிமையாளர் என நினைப்பதால்
தனக்கு உதவுமாறு மதனிடம் வேண்டுகிறான் கார்த்திக். ராதாவுக்காக அவனும் கார்த்திக்குக்கு
உதவுவதாக ஒத்துக்கொள்கிறான். ராதா குடும்பத்தினரிடம் கார்த்திக்கின் கடையில் தான் வேலை
பார்ப்பதாகச் சொல்கிறான் மதன். கார்த்திக் ராதா திருமணம் நடந்துவிடுகிறது. மணமான மறுநிமிடம்
ராதாவுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் ராதாவுக்கு கார்த்திக்கை மனதால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றாக இருந்தும் ஒன்றிணைய அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதைச் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.
பெண்களின் நகை மோகத்தால் அவர்களுக்கு ஏற்படும்
பாதிப்பைச் சுட்டிக்காட்டும் படம். நகைச்சுவையான திரைக்கதைதான் படத்தை நகர்த்துகிறது.
சிஸ்டர் என்று கூறியே பெண்களைக் கட்டிலில் தள்ளத்துடிக்கும் மதன் கதாபாத்திரம் வழியே
சமூகத்தில் சகோதரி என்னும் பதம் எப்படியான பொல்லாங்குப் போர்வை என்பதைச் சுட்டுகிறார்
இயக்குநர். பாஸ்கர் படங்களில் பெண்களின் உரிமை என்பது பேசப்பட்டாலும் பெண்களின் பாதுகாப்பு
என்பது வரம்புக்குள் இருக்கும்வரைதான் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இந்தப் படத்திலும்
அந்தப் போக்குதான் உள்ளது. என்றபோதும், ஆண்களின் புரிதலின்மையையும் படம் பேசுகிறது.
தன்னை நாடாத மனைவி ராதாவை வழிக்குக் கொண்டுவர இன்னொரு பெண்ணுடன் காதல் கொள்வதுபோல்
நடிக்கிறார் கார்த்திக். ஆண்களின் இந்த நடவடிக்கை எவ்வளவு அபத்தம் என்பதைப் படம் கவனப்படுத்துகிறது.
படத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் பெண் இயக்குநராக
வருகிறார் மனோரமா. நாயகர்கள் டூப் போடுவதை நக்கலடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வருகிறது.
நாயகியைச் சாட்டையால் அடிக்கும் காட்சியை டூப் போட்டு எடுக்கிறார்கள். தயாரிப்பாளர்
உதவி இயக்குநரிடம் ‘டூப்புக்கு வசனம் உள்ளதா?’ என்று கேட்கிறார். வாய்ப்பு கேட்டு வரும்
நடிகர் ஒருவர் பல் செட் வைத்துக்கொண்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனம் பேசி பல் தெறித்து
நிற்கிறார். கீழே விழுந்து கிடக்கும் பல் செட் தமிழ் சினிமாவைக் கேலியாகப் பார்க்கிறது.
சினிமாவில் இருப்பதால் அதை உன்னதமான வேலையாகக் கருதாமல், தனக்குக் கிடைக்கும் சிறு
சிறு வாய்ப்புகளில், அதன் அபத்தங்களை வெளிக்கொணரும் காட்சிகள் இயக்குநரின் முத்திரைகளாகின்றன.
முந்தையப் படங்களைப் போல் இதிலும் நட்பு, பாசம்,
காதல், பாலியல் வல்லுறவு, கொலை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான அனைத்து
அம்சங்களையும் கலந்து, தன்னால் இயன்ற அளவு தெளிவாகவும் நேர்த்தியாகவும் படத்தைத் தந்திருக்கிறார்
பாஸ்கர். யூடியூபில் இதன் மட்டமான பிரிண்ட்தான், அதுவும் பாடல்கள் எவையுமின்றிக் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக