இந்த வலைப்பதிவில் தேடு

தளபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தளபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 05, 2020

தளபதி: சில நினைவுகள்

உலகப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் காலைவைக்கத் தொடங்கிய வேளை அது. 1991 நவம்பர் 5 அன்று தான் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ திரைப்படம் வெளியானது. ‘தளபதி’ படத்தை வைத்து பலவகையான வியாபாரமும் முன்னெடுக்கப்பட்டது. தளபதி காலண்டர், தளபதி டி ஷர்ட், தளபதி தொப்பி எனப் பல பொருட்கள் வியாபாரத்துக்கு வரலாயின. தென்காசியில் பரதன், வாஹினி இரண்டு திரையரங்கிலும் ‘தளபதி’ திரைப்படம் வெளியானது. பரதன் இப்போது இடிக்கப்பட்டுவிட்டது. வாஹினி திரையரங்கு இருந்த இடத்தில் ஏதோ ஷோபா கம் பெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆண்டு கமல் நடித்து வெளியான ‘குணா’ தாய்பாலா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. தாய் பாலா இப்போதைக்கு இயங்கிவருகிறது. இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்குமோ?

தீபாவளியன்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஓபனிங் ஷோ பார்த்தோம். அதுவரை தென்காசியில் எந்தப் படத்துக்கும் அப்படி அதிகத் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியதில்லை. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எந்தப் பண்டிகை என்றாலும் தியேட்டர்களில் டிக்கெட்டின் அசல் விலைக்கே டிக்கெட் கிடைத்துவந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றால் போதும் டிக்கெட் கிடைத்துவிடும். சைக்கிள் டோக்கனுக்கான கட்டணம் ஒரு ரூபாய். ஆகவே, நானூறு ஐந்நூறு டிக்கெட்டுகள் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்குக் கிடைத்துவந்தது. அந்த நடைமுறையை மாற்றியது ‘தளபதி’. அன்றே வாஹினியிலும் நண்பர்களுடன் படம் பார்த்தேன். எனக்குத் தெரிந்து ‘தளபதி’ படத்தைப் பத்துப் பன்னிரண்டு ஊர்களில் பார்த்திருப்பேன். சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்னும் பாடல் தொடங்கியதும் ஒரு கூட்டமே அப்படியே எழுந்து வெளியில் போய்விடும். படத்தின் ஓபனிங் காட்சியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது. 

ஜப்பானிய சாமுராய் போன்ற உடையில் ரஜினியை அந்தப் பாடல் காட்சியில் உலவவிட்டிருந்தார் மணிரத்னம். அந்தத் தீபாவளிக்கு வெளியான தினமலர் தீபாவளி மலருடன் ரஜினியின் ஆளுயர ஃபுளோ அப் ஒன்றைத் தந்தார்கள். அதில் இந்தத் ‘தளபதி’ தோற்றத்தில் தான் ரஜினிகாந்த் காட்சியளித்தார். மலையாளத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில் இறுதிக் காட்சி மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்றும் அந்தக் காட்சியில் ரஜினி இறந்து மம்முட்டி உயிருடன் இருப்பார் என்றும் அப்போது வதந்தி உலவியது.    

மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தின் பாதிப்பில் ‘தளபதி’ படத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் படம் ஒருவகையில் நாயகனின் உல்டாதான். ‘நாயக’னில் ஒருவர் என்றால் ‘தளபதி’யில் இருவர். மற்றபடி அதே நிழலுலக தாதாக்களின் வாழ்க்கைதான் படத்துக்குச் சம்பவங்களாயிருந்தன. ரஜினியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்த படம் ‘தளபதி’. 

ஆனால், படம் மிகப் பெரிய வெற்றியா என்பது சந்தேகம்தான். ஓரளவுக்குப் பெயர் சொல்லும்படி ஓடியதே தவிர, ரஜினி, மம்முட்டி இணையின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், சந்தோஷ் சிவனின் அமர்க்களமான ஒளிப்பதிவு ஆகியவை காரணமாக எகிறியிருந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திசெய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படம் தீபாவளி அன்று வெளியானாலும் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி போகியையும் அதைத் தொடர்ந்து பொங்கல் திருவிழாவையுமே நினைவூட்டியது. படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 

படத்தில் அடிக்கடி ரஜினி காந்த் தனியாகச் சென்று அமர்ந்துவிடுவார். பின்னணியில் சூரியன் தகதகக்கும். சூர்ய புத்திரன் கர்ணன் என்பதால் சூர்யா கதாபாத்திரத்தையும் அப்படியே உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இப்படியான காட்சி உருவாக்கங்கள் படத்துக்கு ஒரு சர்வதேசத் தன்மையை அளித்திருந்தன. இருபது வயதில் பார்த்தபோது பெரிய மயக்கத்தைத் தந்த ‘தளபதி’ நாற்பது வயதில் பார்த்தபோது எந்தக் கிறக்கத்தையும் தரவில்லை. விடலைத்தனத்தின் துறுதுறுப்பின்போது ரசனைக்குரியதாக இருந்த படம் நாற்பதின் நிதானத்தில் ரசிக்க முடியாமல் போனது. இதுதான் மணிரத்னம் எனும் இயக்குநரின் மகிமை. 

1990 தீபாவளியின் போது ரஜினி காந்த் நடித்த எந்தப் படமும் வெளியாகியிருக்கவில்லை. ஆகவே மதுரை ரஜினி ரசிகர்கள் அந்த தீபாவளியைத் துக்க நாளாகக் கருதி சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளியானபோது செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. அப்போதே ரஜினிக்கும் ஜெ.வுக்குமான உரசல் ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து வந்த ‘மன்னன்’ திரைப்படத்தில் விஜய சாந்தி ஏற்று நடித்த கதாபார்த்திரம் ஜெயலலிதாவுடன் பொருத்திப்பார்க்கப்பட்டு ரஜினி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.

‘தளபதி’யின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தும் ரஜினி நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் ‘யாரடா நீ மன்மதா?’ என்னும் பெயரில் படம் ஒன்று வெளியாகக் கூடும் என அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என நினைவு. 29 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமான பல சம்பவங்கள் மன அலைவரிசையில் அகப்படுகின்றன. எல்லாவற்றையும் எடுத்திடவோ எழுதிடவோ இயலவில்லை என்பது பெரும் சோகம். 

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

சினிமா ஸ்கோப் 15: அம்மா


வீராவேசமாக மு.கருணாநிதியின் செந்தமிழ் வசனங்களைப் பேசி சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ காலம் முதல் தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட்டுக்குத் தனியிடம் உண்டு. தாய் மகன் பாசம் பற்றிப் பல படங்கள் உருகி வழிந்திருக்கின்றன. ‘அம்மா’ என்ற பெயரிலேயே எண்பதுகளில் ஒரு படம் வெளிவந்தது. சரிதாவும் பிரதாப் போத்தனும் நடித்திருப்பார்கள். அந்த அம்மாவுக்குப் பல கஷ்டங்கள் என்பதாக நினைவு. தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட் நிரம்பிவழிந்த காரணத்தால் அம்மா பாடல்கள் எனத் தனித் தொகுப்பே பலருடைய திரைப்பாடல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் பெரும்பாலான பாடல்கள் இளையராஜா குரலில் அல்லது அவரது இசையமைப்பில் வெளிவந்தவை. ‘மன்னன்’ படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘அம்மா என்றழைக்காத’ பாடலுக்கு நடிகர் ரஜினி காந்த் தன் தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். அந்த வயதில் ஒரு தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் அந்தத் தாயின் நிலைமை என்ன ஆகும் என யோசித்ததே இல்லை, ஒருவேளை அவருக்கு ஜன்னிகூடக் கண்டுவிடலாம். இப்படியான மிகைப்படுத்தல்கள் இல்லாமல் உறவையும் அதன் வலுவையும் காட்ட முடியாதா என்ன?



‘சுப்பிரமணிய புரம்’ படத்தில் ஒரு காட்சி வரும். தலைமறைவாக இருக்கும் அழகருக்கு அவன் தாய் உணவு கொண்டுவரும் காட்சி. படம் முழுவதும் தாயும் மகனும் எசலிக்கொண்டேயிருப்பார்கள். அந்தக் காட்சியின் தொடக்கத்தில்கூட ‘எதற்கு உணவு கொண்டு வந்தாய்?’ எனத் தாயைத் திட்டவே செய்வான் அழகர். ஆனால் அந்தக் காட்சி முடியும் தருவாயில் தாய் கிளம்பும்போது ‘அம்மா’ என அழைத்து, ‘பார்த்துப் போ’ என்பான். தருமன் அழகரின் தோளில் ஒரு கையைவைத்து அழுத்துவான். அத்தனை காலமும் அழகருக்குள் ஒளிந்துகிடந்த தாயன்பு அந்தக் கணத்தில் மலை அருவியின் ஒற்றை விழுதாய் நிலத்தைத் தழுவும். இப்படியான காட்சிகளில் கிடைக்கும் சிலிர்ப்பும் திருப்தியும் ‘வளவள’ என்ற வசனங்களிலோ யதார்த்தத்துக்குப் பொருந்தாத காட்சிகளிலோ கிடைக்காது. ராஜ் கிரணின் ‘அரண்மனைக் கிளி’ படத்தில் தாய் மகன் உறவு ஓரளவு யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கும் என்பதாக ஞாபகம். அதிலும் தாய் இறந்த பின்னர் ராஜ் கிரண் பாடும் இளையராஜாவின் பாடல் காட்சிகள் மிகையானவையே. தமிழ் சினிமாவில் இத்தகைய காட்சிகள் மிகையுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவே பல நேரங்களில் அமைந்துவிடுவது தமிழ் சினிமாவின் சாபமோ?



நீள நீளமான வசனங்களாலும் நாடகத் தனமான உடல்மொழிகளாலும் மட்டுமல்ல துண்டு துண்டான வசனங்களாலும் மட்டுப்படுத்தப்பட்ட உடல்மொழியாலும்கூட நாடகத்தனமான உணச்சியைத் திரையில் கட்டமைக்க முடியும் என்பதை மணிரத்னம் ‘தளபதி’ படத்தில் செய்து காட்டியிருப்பார். வசனமே இல்லாத காட்சிகளிலும் ஆறாய்ப் பெருகியோடும் மிகையுணர்ச்சி. ‘சின்னத்தாயவள்’ பாடல் பின்னணியில் ஒலிக்க சூர்யா தன் தாயைக் கோயிலில் பின் தொடரும் காட்சி இதற்கு உதாரணம். அதிலும் இறுதியாகத் தன் தாயின் தலையிலிருந்து உதிரும் பூவை பக்தி சிரத்தையுடன் எடுத்து சூர்யா கைகளில் பொதிந்துகொள்ளும் காட்சி அதன் உச்சம். அதே போல் சூர்யாவை வீட்டில் வந்து அவன் தாய் பார்க்கும் காட்சி ஒன்று உண்டு. ரஜினி காந்த் ஸ்ரீவித்யாவின் மடியில் ஒரு குழந்தைபோல் தலைவைத்துப் படுத்துக்கிடப்பார். இந்தக் காட்சியில் வெளிப்படும் மிகையுணர்ச்சி பார்வையாளர்களை நெளியச் செய்யும்.

ஏன் ‘தளபதி’யில் சூர்யா தன் தாயின் மடியில் தலைவைத்து அழுகிறான்? ஏன் என்றால் ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவி தன்னை அவனது தாய் என்று அடையாளப்படுத்தும் காட்சியில் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பான் கர்ணன். ஒரே வித்தியாசம் ‘தளபதி’யில் வசனம் குறைவு, நாடகத்துக்கான உடல்மொழி மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டிலும் ஆதார சுருதி மிகையுணர்ச்சியே. ஆனால் இத்தகைய காட்சியமைப்புகளால்தான் மணி ரத்னம் பார்வையாளர்களால் சிறந்த இயக்குநராகக் கொண்டாடப்படுகிறார் என்பது நகைமுரணே.


தமிழ்ப் படங்களில் சென்டிமெண்ட் பொங்கிவழியும் அதே வேளையில் லோகிதாஸின் திரைக்கதையில் சிபி மலயில் இயக்கத்தில் மம்மூட்டி, திலகன், முகேஷ், சரிதா உள்ளிட்டோர் நடித்த ‘தனியாவர்த்தனம்’ படத்தை நினைத்துப் பார்க்கும்போது தென்படும் வித்தியாசம் மலையளவு. இவ்வளவுக்கும் ‘தனியாவர்த்தன’மும் வணிகத்துக்காக உருவாக்கப்பட்ட படமே. ஆனால் படமாக்கத்தில், திரைக்கதையின் பயணத்தில், யதார்த்தை உணர முடியும். எந்த இடத்திலும் உணர்ச்சிகள் தம் வரம்பை மீறாது. எடுத்துக்கொண்ட கதையை வலுப்படுத்தும் விதத்திலான வலுவான திரைக்கதை படம் பார்ப்பதை ரசனைபூர்வ அனுபவமாக மாற்றும். பரம்பரை பரம்பரையாகக் குடும்பத்து ஆண்களில் ஒருவருக்கு மனநோய் கண்டுவிடுகிறது. மனநோய் கண்டிருந்த மாமன் இறந்தபிறகு, நல்ல மனநிலையுடன் உலவும் மம்மூட்டிக்கு மனநோய்க் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்று உறவும் சமூகமும் சந்தேகம் கொள்கிறது. இந்தச் சந்தேகக் கண்ணோட்டம் முற்றிவிட மம்மூட்டியை மனநோயாளி என்றே உறவும் சமூகமும் முடிவுகட்டிவிடுகிறது.

அவருடைய மாமன் பூட்டப்பட்ட அறையிலேயே அவரையும் பூட்டிவிட, மம்மூட்டியின் தாய் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டு, மகனுக்கும் விஷம் கொடுத்து கொன்று உலக வாழ்விலிருந்தும் அந்த நகரகத்திலிருந்தும் மகனுக்கு விடைகொடுக்கிறார். இந்தப் படம் 1987-ல் வெளியானது. மனநோயைப் பழமைவாதப் பார்வையுடன் அணுகும் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டும் இந்தப் படம். மனநோய் குறித்த சமூகத்தின் அறியாமையை அப்பட்டமாக்குகிறது. இப்படியான மாறுபட்ட கதைகளைக் கையாள இன்னும் தமிழில் ஓர் இயக்குநர்கூட முன் வராதது ஆச்சரியம்தான்.  

‘தனியாவர்த்தனம்’ படத்தின் தாய் மகன் உறவு, சாபம், தாய் விஷம் கொடுத்து மகனைக் கொல்தல் ஆகிய அம்சங்களுடன் ‘தளபதி’யின் அநீதியைத் தட்டிக் கேட்கும் அம்சத்தையும், தேவா சூர்யா பிணைப்பையும், இலங்கைத் தமிழர் என்னும் அம்சத்தையும் ஒன்றுசேர்த்து ஒரு படம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பாலாவின் ‘நந்தா’ நினைவில் தட்டுப்படும். ‘தனியாவர்த்தன’த்தில் தன் மகனைக் கொல்வதற்கு அந்தத் தாய்க்கு நியாயமான காரணம் இருக்கும் ஆனால் ‘நந்தா’வில் தகப்பனின் தொந்தரவால் தாய் படும் பாட்டைச் சகிக்க மாட்டாமல் தந்தையைக் கொன்றுவிடுவான் அந்த மகன். அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்படுவான். திரும்பிவந்த பின்னர் அவன் தாய் மீது பிரியத்துடன் வருவான். ஆனால் தாய் அவன் மீது பாசங்கொண்டிருந்தும் அவனைத் தள்ளிவிடுவாள்.  இறுதியில் அவனுடைய தாயே அவனை விஷம் தந்து கொல்வாள். ‘தனியாவர்த்த’னத்தின் திரைக்கதை சீராகப் பயணப்படும். படமாக்கத்தில் சிபி மலயில் வெளிப்படுத்தியிருந்த நேர்த்தி ‘நந்தா’வில் தவறியிருக்கும். இந்தப் படங்களை எல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது எது நல்ல திரைக்கதை என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்