ஆண்டு 1988, நவம்பர் 8 தீபாவளி நாள். இலஞ்சி இராமசாமிப் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வீடும் இலஞ்சியில்தான் இருந்தது. அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி என்பது புதிதாக வந்துள்ள திரைப்படத்தைப் பார்ப்பதுதான். அதுவும் மனத்துக்குப் பிடித்த நடிகரின் படத்தைப் பார்ப்பது என்றால் மனத்துக்கு இறக்கை முளைத்துவிடும். பருவ வயதும் அந்தப் பைத்தியக்காரத்தனமும் மோடியும் வெற்றுப்பேச்சும்போல் எப்போதும் சேர்ந்தேதான் இருக்கிறது.
அந்தத் தீபாவளிக்கு பரதன் தியேட்டரில் கொடிபறக்குது படம் வெளியாகயிருந்தது என்பதால் தீபாவளி நாளை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். உலகப் படங்களோ இந்தியப் படங்களோ பார்த்திராத பருவம் அது. பாரதிராஜாவைத் தான் உலகத்தின் சிறந்த இயக்குநர் என்பதாக நம்பிய நாட்கள் அவை. ஆகவே, பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்திருந்ததால் படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் மிகப் பெரிய ரஜினி ரசிகன் என்று காட்டிக்கொள்வதில் அப்படியொரு பெருமை. மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமைன்னு கேக்குறீங்களா? அப்போ அதெல்லாம் தெரியல. அந்தக் காலகட்டத்தில் தென்காசியில் திரையிடப்படும் ரஜினியின் திரைப்படங்களை முதல் நாளிலேயே பார்த்துவிட வேண்டும் என்னும் வெறியே இருந்தது. 1987ஆம் ஆண்டுதான் முதன்முதலில் தென்காசியில் மாவீரன் என்னும் ரஜினி படம் வெளியாகியிருந்தது. அப்போது தென்காசி போன்ற மூன்றாம் நிலை நகரங்களில் திரைப்பட ரிலீஸ் என்பதே பெருமைமிகு சம்பவம்தான். இப்போதோ தென்காசியே மாவட்டத் தலைநகராகிவிட்டது. அந்தப் பெருமை எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது.
தீபாவளி அன்று வீட்டிலிருந்த ஹெல்குலஸ் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றேன். எனக்குப் பொழுதுபோக்காக இருந்தவந்த அந்த சைக்கிளில்தான் அப்பா அலுவலகம் சென்றுவந்துகொண்டிருந்தார். வடகரையில் நாங்கள் இருந்தபோது வாங்கிய சைக்கிள், அப்போது அதன் விலை ரூ.750 என்று நினைவு. பாண்டியன் திரைப்படத்துக்கு தாய்பாலா சென்றபோது, போலீஸ் லத்தி அடியை அந்த சைக்கிளின் பெல் வாங்கிக்கொண்டது. பெல் மேற்பகுதி உள்வாங்கிவிட்டது. அந்த அடி மட்டும் கையில் பட்டிருந்தால், அவ்வளவுதான். சைக்கிளின் தகர செயின் கார்டின் வலது பக்கவாட்டுப் பக்கத்தில் அப்பாவின் பெயரும் அலுவலப் பணி குறித்த விவரமும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். சைக்கிளின் நிறம் இளம்பச்சை. வாங்கிய புதிதில் டைனமோ மீது மஞ்சள் நிறத் துணியைக் கட்டியிருப்போம். கால ஓட்டத்தில் அந்த சைக்கிள் கரைந்து போய்விட்டது. காலம்தான் எல்லாவற்றையும் உண்டு செரித்துவிட்டு, இன்னும் இன்னும் என்று கேட்கிறதே.
ஒருமுறை தென்காசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இரவு நேரத்தில் டைனமோ விளக்கு எரியவில்லையாதலால், என்னை நிறுத்தி, சைக்கிளின் காற்றைப் பிடிங்கிவிட்டார் போலீஸ்காரர் ஒருவர். அப்படியொரு தண்டனை தருவதில் அவருக்கு ஒரு திருப்தி. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மனிதனுக்கு அதைப் பயன்படுத்திப் பார்ப்பதில் ஓர் அற்ப மகிழ்ச்சி. நான் சைக்கிளை உருட்டிக்கொண்டு திரும்பியபோது அந்த சைக்கிளில் எழுதப்பட்ட விவரத்தைப் பார்த்ததும், முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா என்று கேட்டார். அந்த விவரம் எழுதப்பட்டதற்கு அப்படி ஒரு நோக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இலஞ்சியில் இருந்தபோது, மாதந்தோறும் மளிகைச் சாமான்களை தென்காசி கூலக்கடை பஜாரில் சம்பளத் தேதியை ஒட்டிய நாளில் வாங்குவோம். அம்மா சென்று எல்லா சாமான்களையும் வாங்கி பலசரக்குக் கடையில் வைத்திருப்பார். நான் சென்று சைக்கிளின் கேரியரில் சாமான்களை வைத்துக் கட்டிக் கொண்டுவருவேன். நான் கொடிபறக்குது படம் பற்றித் தான் எழுதத் தொடங்கினேன். கதை ஏனோ சைக்கிளை நோக்கி நகர்கிறது. சரி சைக்கிளை விட்டுவிட்டு கொடிபறக்குது பக்கம் நகர்ந்துவிடுவோம்.
தீபாவளியன்று பரதனுக்குச் சென்று காத்துக் கிடந்ததுதான் மிச்சம். அன்று படப்பெட்டி வரவில்லை. மறுநாள் 9ஆம் தேதி அன்றுதான் படப் பெட்டி வரும் என்று சொல்லிவிட்டார்கள். மறுநாள் பள்ளி இருந்தது. எப்படியாவது பள்ளிக்கு லீவ் போட்டுவிட்டு வந்துவிடலாம் எனத் திட்டமிட்டேன். அதே போல் ஏதேதோ பொய் சொல்லி பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்குத்தான் செல்லவில்லையே படத்துக்குப் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என பரதனுக்கு சைக்கிளை விட்டேன். டிக்கெட்டும் கிடைத்தது. உற்சாகமாகப் படம் பார்த்தாகிவிட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் நண்பனொருவன் வந்துவிட்டான். உடனே அப்படியே சைக்கிளைப் போட்டுவிட்டு அவனுடன் அடுத்த காட்சி பார்த்தேன். அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் அதுவும் கொடிபறக்குது. யோசித்துப் பாருங்கள். என்ன தலைசுத்துகிறதா?
என் இனிய தமிழ் மக்களே என்று தொடங்கி, ரஜினியைப் பற்றி பாரதிராஜா பேசும் வசனங்கள் அப்படியே காதுக்குள் இன்னும் ஒலிக்கின்றன: “ என் காதலுக்குரிய ராஜகுமாரன் ரஜினியுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பவனி வருகிறேன். ரஜினிக்கு நான் ரசிகனாய் ரஜினி எனக்கு ரசிகனாய் தாகம்கொண்ட இரு நதிகள் சந்தித்துக்கொண்ட சந்தோஷ சங்கமம் கொடிபறக்குது. முதல் மரியாதையில் ஒரு தென்றலின் கையைப் பிடித்துக்கொண்டு நந்தவனத்தைச் சுற்றிவந்த திருப்தி எனில் இந்தப் படத்தில் ஒரு புயலின் கையைபிடித்துக்கொண்டு பூமியைச் சுற்றிவந்த திருப்தி ...” இப்படியான வசனங்களைக் கேட்டுக் கேட்டுக் கிறங்கிக் கிடந்த காலம் அது. படத்தின் கதைவசன கேஸட்டைக்கூட வாங்கிவைத்திருந்து கேட்டுக்கொண்டிருப்போம். லஹரி நிறுவனம் வெளியிட்டிருந்த அந்த கேஸட்டை.
கொடிபறக்குது படம் படுதோல்வியடைந்தது. ஒருவேளை எஸ்பி.முத்துராமன் இயக்கியிருந்தால் படம் வெற்றியடைந்திருக்கக்கூடும் என்று அப்போது சொல்லி மனத்தை ரஜினி ரசிகர்கள் தேற்றிக்கொண்டோம். படத்துக்கு இசை அம்சலேகா. கடலோரக் கவிதைகள் படத்துக்குப் பின்னர் இளையராஜாவிடம் ஏற்பட்ட கருத்து மோதலால் பாரதிராஜா வேதம் புதிது படத்தில் தேவேந்திரனையும் இந்தப் படத்தில் அம்சலேகாவையும் இசையமைப்பாளராகப் பயன்படுத்தியிருந்தார். பின்னர் அவர் இளையராஜாவுடன் என் உயிர்த் தோழன் படத்தில்தான் இணைந்தார். அதனால்தான் அந்தப் படத்துக்கே அப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். என் உயிர்த் தோழன் திரைப்படமும் பரதனில்தான் வெளியானது. நான்கைந்து நாட்கள் மட்டுமே ஓடியது. அந்தப் படத்தை பாரதிராஜாவே விநியோகித்தார் என்று சொன்னார்கள். வேதம்புதிது படத்தின் பாடல்களுடன் கொடி பறக்குது படத்தின் பாடல்களை ஒப்பிட்டால் மிகவும் சுமார் ரகம்தான். ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’, ‘அன்னை மடியில்’ ஆகிய பாடல்கள் நினைவலைகளில் தவழ்ந்துவருகின்றன.
வேதியியல் ஆசிரியர் முத்துசாமி நிறையக் கதைகள் சொல்வார். அவரிடம் டியூஷன் படித்த காலத்தில் அவருடைய காதல் கதைகளைக்கூடக் கூறியிருக்கிறார். பள்ளியில் ரெனால்ட் பால் பாயிண்ட் பேனாவை அவர்தான் அறிமுகப்படுத்தினார். பிற ஆசிரியர்களிடமிருந்து வேறுபட்டவர் அவர். ரெனால்ட் பேனா என்பதை எங்கு கேள்விப்பட்டாலும் அத்துடன் ஆசிரியர் முத்துசாமியையும் மனம் நினைவில் கொண்டு நிறுத்திவிட்டு இதுதானே என்பதுபோல் ஒரு பார்வை பார்க்கும். மனத்தின் இது போன்ற குழந்தைவிளையாட்டு இல்லாவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக