இந்த வலைப்பதிவில் தேடு

அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 07, 2019

இயக்குநர் மகேந்திரன்: அழகியல் திரைப்பட ஆசான்

(அஞ்சலிஇயக்குநர் மகேந்திரன் 25.07.1939 – 02.04.2019)



தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன. 

அளவுக்கு மீறித் தான் புகழப்பட்டுவிட்டோமோ என அவரே கூச்சப்பட்டுப் பேசியிருக்கிறார். ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரைப் புகழ்ந்துபேசுவது ஒருவகையான போதை. அதை அவர்கள் தவிர்க்க நினைத்தாலும் அந்தப் போதையில் அவர்களுக்கு ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கும் ரசிகரின் உதிரத்தின் அணுக்களில் கலந்துவிட்ட பெயர்கள் ‘முள்ளும் மலரு’மும்  ‘உதிரிப்பூக்க’ளும் ‘மெட்டி’யும் ‘ஜானி’யும் ‘நண்டு’ம்  இன்ன பிற படங்களும்.   

பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதித் தள்ளிய பின்னரே அவர் இயக்குநராக அரிதாரம் பூசிக்கொண்டார். சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ அதில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்காகவே அறியப்பட்டது. அப்படியான மனிதர் முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுத்த ‘முள்ளும் மலரும்’ காட்சி மொழியில் புது இலக்கணம் வகுத்தது. அதன் பின்னர் அவர் யதார்த்த சினிமாவின் நாயகன் எனக் கொண்டாடப்படுகிறார். அவர் யதார்த்த சினிமாவை உருவாக்கினாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அவர் அழகியல் சினிமாக்களை உருவாக்கினார்.



அவரது முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தையே எடுத்துக்கொண்டால் அது ஒரு யதார்த்த படம் அன்று. அது முழுக்க முழுக்க அழகியல் சினிமாதான். கையை இழந்துவிட்டு அண்ணன் வந்து நிற்கும் ஒரு காட்சி போதும் அது அழகியல் சினிமா என்பதைப் புரிந்துகொள்ள.  கையில்லாமல் வந்து நிற்கும் அண்ணனைப் பார்த்து விக்கித்துப்போய் நிற்பார் தங்கை. அண்ணனோ “என்னடா ஆச்சு? ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்லடா… ஒண்ணும் இல்ல” எனும் வசனங்களை மட்டுமே பேசுவார். யதார்த்தத்தில் எந்த அண்ணனும் தங்கையும் அப்படிப் பேசிக்கொள்வார்களா? ஆனால், படத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது அற்புதமானதாகத் தெரியும். அந்தக் காட்சியின் கதாபாத்திர உணர்வுகளை ரசிகருக்கு நடிப்பின் வழியாகவும் இசையின் வழியாகவும் ஒளிப்பதிவின் வழியாகவும் இயக்குநர் உணர்த்தியிருப்பார். இந்தத் தன்மை அதுவரையான தமிழ் சினிமாவின் பாதையிலிருந்து விலகியிருந்தது. அதுதான் மகேந்திரனின் பாதையாக அதன் பின்னர் உருவெடுத்தது. உணர்வுமயமான தருணங்களை அறிவின் தளத்தில் வைத்து அலசிப் பார்ப்பதில் அலாதி ஆனந்தமடைந்தவர் அவர். அதனால்தான் அவை யதார்த்தப் படங்களா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அவரது படங்களில் திரையில் காட்சிகள் அமைக்கப்பட்ட விதமும் நடிகர்கள் வருவதும் போவதும் வசனங்களைப் பேசுவதும் ரசனைக்குரியவையாக மாறியிருந்தன. அவற்றில் காணப்பட்ட அழகில் சொக்கிப்போயிருந்தனர் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்.  அதுவரை பெரிதாக மலராமல் கிடந்த தமிழ் சினிமாவின் மலர்ச்சிக்குக் கைகொடுத்தவர் என்ற வகையில் தொடர்ந்து ஆராதிக்கப்படுகிறார் மகேந்திரன். அவரது பாடல்களில் காணப்படும் மாண்டேஜ் காட்சிகளும் அவர் எந்த அளவுக்கு சினிமாவில் அழகுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத் துல்லியமாக உணர்த்துகின்றன. ஆனாலும், சினிமாவில் பாடல்களின் இடம் குறித்து அவருக்குப் பலத்த ஆட்சேபகரமான கருத்துகள் இருந்தன என்பதும் உண்மை. அவருக்குப் பின் வந்த மணிரத்னம், ஷங்கர், வஸந்த் போன்ற பல இயக்குநர்களின் படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பான இடத்தைப் பெற்றதற்கு மகேந்திரன் பெரிய உந்துதலாக இருந்திருக்கக்கூடும்.  



உரையாடல் என்ற உறைநிலை சினிமாவில் இவரது பாதம் பட்ட பிறகுதான் அது உயிர் தரித்துக்கொண்டது. அவரது படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாள்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கலாம். திரைத்துறையின் நண்பர்கள் சந்தித்து அளாவளாவும்போதெல்லாம் அந்த இடத்தில் மகேந்திரன் பெயரோ அவரது படங்களின் பெயரோ அவர் படைத்த கதாபாத்திரங்களது பெயரோ இடம்பெறாமல் போகாது என்று சொல்லும் அளவுக்கு மகேந்திரன் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், இந்தியத் தரத்துடனும் உலகத் தரத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் மகேந்திரனின் இடம் நாம் பெருமைப்படும் அளவுக்கான உயரத்தில் இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் மகேந்திரன் அழுத்தமான அத்தியாயங்களை எழுதிச் சென்றிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. 

அவருக்குக் குடும்பம் என்ற அமைப்பின்மீது அநேகக் கேள்விகள் இருந்துள்ளன என்ற முடிவுக்கு நாம் வருவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை அவரது ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ போன்ற பெரும்பாலான படங்கள். மரபு, குடும்பம், திருமணம், ஆணாதிக்கம், பெண்களின் துயரம் இவற்றைப் போன்ற விஷயங்களைத் தான் அவர் தொடர்ந்து படைத்திருக்கிறார். அவற்றைக் கருவாகக்கொண்டே அவரது படைப்புகள் உருவாகியிருக்கின்றன. தந்தைமீது சினம் கொண்ட தனயர்களையும், அன்பு கொண்ட காரணத்தால் அவதிக்கு ஆளாகும் பெண்களின் துயரத்தையும் அவருடைய படங்களில் நாம் அதிகமாக எதிர்கொள்ள முடிகிறது.

பெரிய குடும்பத்தின் இனம்புரியாத அரூப சோக இழையைத் தேர்ந்தெடுத்து அதில் கதாபாத்திரங்களைக் கோத்துப் படங்களாக்கிருக்கிறார் மகேந்திரன். அவரது முதன்மைக் கதாபாத்திரங்கள் குடும்பங்களைப் புறக்கணித்தவை அல்லது குடும்பங்களால் துரத்திவிடப்பட்டவை. குடும்பத்திலிருந்து அல்லது ஒரு கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் மனநிலையில்தான் அவர் படங்களை உருவாக்கியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ‘மெட்டி’ திரைப்படத்தில் தந்தை மீது வெறுப்புக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவருகிறார் பட்டாபி. இது தமிழ்நாட்டில் நடைபெறும் கதை. இதே போல் ‘நண்டு’ திரைப்படத்தில் லக்னோவிலிருந்து தகப்பன் மீது கோபம் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார் அதிர்ஷ்டம்கெட்ட நாயகன் ராம் குமார் ஷர்மா.  



இந்தியா முழுவதும் குடும்பங்களில் ஆணாதிக்கத் திமிர் கொண்ட தந்தைகள்தாம் இருந்திருக்கிறார்கள் என்று இதை நாம் புரிந்துகொள்ள சாத்தியமிருக்கிறது. மகேந்திரனின் புரிதலும் இதுவாக இருந்திருக்கலாம். குடும்பத்துப் பெண்கள் ஆண்களை எதிர்த்துப் பேச முடியாமலும் அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவர இயலாமலும் தங்களை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினாலும் ஊர்ப் பேச்சுகளிலிருந்து தப்பிக்க வழியின்றித் தங்களை இழந்திருக்கிறார்கள். ‘மெட்டி’யின் கல்யாணி அம்மா தனது கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விலகித் தனியே தன் மகள்களை வளர்த்துவிட்டபோதும், ஊராரது இழிபேச்சுக்கு ஆளாகித் தனது முந்தானையிலேயே தூக்குப்போட்டு இறந்துவிடுகிறார். குடும்பமும் சமூகமும் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு பிற்போக்காக இருக்கின்றன என்பதை உணர்ந்து அந்தப் பிற்போக்குத் தனத்தை உணர்த்துவதற்காகவும் அதை மாற்ற இயலும் கலைப் படைப்பாகவுமே தனது படங்களை உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் கதை எழுதும் திறமை கொண்டிருந்தவர் என்றபோதும் பிறரது கதைகளைப் படமாக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ தாக்கத்தில்தான் அவர் ‘உதிரிப்பூக்க’ளைப் படைத்தார். நாவலுக்கும் சினிமாவுக்கும் பெரிய வேறுபாடுண்டு. ஆனாலும், உந்துதலைத் தந்த காரணத்துக்காகவே அதைப் படத்தின் டைட்டிலிலேயே கவனப்படுத்தியவர். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பாலமாக இருந்தவர் மகேந்திரன். அவரது வேர் இலக்கியத்தில் நிலைகொண்டிருந்த காரணத்தாலேயே அவரால் பசுமையான கிளை பரப்பிய உயிர்த்துடிப்பான சினிமாக்களை உருவாக்க முடிந்திருந்தது. அந்த சினிமாக்களின் நிழலில் சினிமா ரசிகர்கள் ஆசுவாசமடைந்துகொண்டே இருப்பார்கள். அந்த நிழல் இருக்கும் வரை மகேந்திரனின் நினைவுமிருக்கும்.

இந்து தமிழ் திசை இதழில் வெளியானது. 

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

சினிமா ஸ்கோப் 15: அம்மா


வீராவேசமாக மு.கருணாநிதியின் செந்தமிழ் வசனங்களைப் பேசி சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ காலம் முதல் தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட்டுக்குத் தனியிடம் உண்டு. தாய் மகன் பாசம் பற்றிப் பல படங்கள் உருகி வழிந்திருக்கின்றன. ‘அம்மா’ என்ற பெயரிலேயே எண்பதுகளில் ஒரு படம் வெளிவந்தது. சரிதாவும் பிரதாப் போத்தனும் நடித்திருப்பார்கள். அந்த அம்மாவுக்குப் பல கஷ்டங்கள் என்பதாக நினைவு. தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட் நிரம்பிவழிந்த காரணத்தால் அம்மா பாடல்கள் எனத் தனித் தொகுப்பே பலருடைய திரைப்பாடல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் பெரும்பாலான பாடல்கள் இளையராஜா குரலில் அல்லது அவரது இசையமைப்பில் வெளிவந்தவை. ‘மன்னன்’ படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘அம்மா என்றழைக்காத’ பாடலுக்கு நடிகர் ரஜினி காந்த் தன் தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். அந்த வயதில் ஒரு தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் அந்தத் தாயின் நிலைமை என்ன ஆகும் என யோசித்ததே இல்லை, ஒருவேளை அவருக்கு ஜன்னிகூடக் கண்டுவிடலாம். இப்படியான மிகைப்படுத்தல்கள் இல்லாமல் உறவையும் அதன் வலுவையும் காட்ட முடியாதா என்ன?



‘சுப்பிரமணிய புரம்’ படத்தில் ஒரு காட்சி வரும். தலைமறைவாக இருக்கும் அழகருக்கு அவன் தாய் உணவு கொண்டுவரும் காட்சி. படம் முழுவதும் தாயும் மகனும் எசலிக்கொண்டேயிருப்பார்கள். அந்தக் காட்சியின் தொடக்கத்தில்கூட ‘எதற்கு உணவு கொண்டு வந்தாய்?’ எனத் தாயைத் திட்டவே செய்வான் அழகர். ஆனால் அந்தக் காட்சி முடியும் தருவாயில் தாய் கிளம்பும்போது ‘அம்மா’ என அழைத்து, ‘பார்த்துப் போ’ என்பான். தருமன் அழகரின் தோளில் ஒரு கையைவைத்து அழுத்துவான். அத்தனை காலமும் அழகருக்குள் ஒளிந்துகிடந்த தாயன்பு அந்தக் கணத்தில் மலை அருவியின் ஒற்றை விழுதாய் நிலத்தைத் தழுவும். இப்படியான காட்சிகளில் கிடைக்கும் சிலிர்ப்பும் திருப்தியும் ‘வளவள’ என்ற வசனங்களிலோ யதார்த்தத்துக்குப் பொருந்தாத காட்சிகளிலோ கிடைக்காது. ராஜ் கிரணின் ‘அரண்மனைக் கிளி’ படத்தில் தாய் மகன் உறவு ஓரளவு யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கும் என்பதாக ஞாபகம். அதிலும் தாய் இறந்த பின்னர் ராஜ் கிரண் பாடும் இளையராஜாவின் பாடல் காட்சிகள் மிகையானவையே. தமிழ் சினிமாவில் இத்தகைய காட்சிகள் மிகையுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவே பல நேரங்களில் அமைந்துவிடுவது தமிழ் சினிமாவின் சாபமோ?



நீள நீளமான வசனங்களாலும் நாடகத் தனமான உடல்மொழிகளாலும் மட்டுமல்ல துண்டு துண்டான வசனங்களாலும் மட்டுப்படுத்தப்பட்ட உடல்மொழியாலும்கூட நாடகத்தனமான உணச்சியைத் திரையில் கட்டமைக்க முடியும் என்பதை மணிரத்னம் ‘தளபதி’ படத்தில் செய்து காட்டியிருப்பார். வசனமே இல்லாத காட்சிகளிலும் ஆறாய்ப் பெருகியோடும் மிகையுணர்ச்சி. ‘சின்னத்தாயவள்’ பாடல் பின்னணியில் ஒலிக்க சூர்யா தன் தாயைக் கோயிலில் பின் தொடரும் காட்சி இதற்கு உதாரணம். அதிலும் இறுதியாகத் தன் தாயின் தலையிலிருந்து உதிரும் பூவை பக்தி சிரத்தையுடன் எடுத்து சூர்யா கைகளில் பொதிந்துகொள்ளும் காட்சி அதன் உச்சம். அதே போல் சூர்யாவை வீட்டில் வந்து அவன் தாய் பார்க்கும் காட்சி ஒன்று உண்டு. ரஜினி காந்த் ஸ்ரீவித்யாவின் மடியில் ஒரு குழந்தைபோல் தலைவைத்துப் படுத்துக்கிடப்பார். இந்தக் காட்சியில் வெளிப்படும் மிகையுணர்ச்சி பார்வையாளர்களை நெளியச் செய்யும்.

ஏன் ‘தளபதி’யில் சூர்யா தன் தாயின் மடியில் தலைவைத்து அழுகிறான்? ஏன் என்றால் ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவி தன்னை அவனது தாய் என்று அடையாளப்படுத்தும் காட்சியில் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பான் கர்ணன். ஒரே வித்தியாசம் ‘தளபதி’யில் வசனம் குறைவு, நாடகத்துக்கான உடல்மொழி மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டிலும் ஆதார சுருதி மிகையுணர்ச்சியே. ஆனால் இத்தகைய காட்சியமைப்புகளால்தான் மணி ரத்னம் பார்வையாளர்களால் சிறந்த இயக்குநராகக் கொண்டாடப்படுகிறார் என்பது நகைமுரணே.


தமிழ்ப் படங்களில் சென்டிமெண்ட் பொங்கிவழியும் அதே வேளையில் லோகிதாஸின் திரைக்கதையில் சிபி மலயில் இயக்கத்தில் மம்மூட்டி, திலகன், முகேஷ், சரிதா உள்ளிட்டோர் நடித்த ‘தனியாவர்த்தனம்’ படத்தை நினைத்துப் பார்க்கும்போது தென்படும் வித்தியாசம் மலையளவு. இவ்வளவுக்கும் ‘தனியாவர்த்தன’மும் வணிகத்துக்காக உருவாக்கப்பட்ட படமே. ஆனால் படமாக்கத்தில், திரைக்கதையின் பயணத்தில், யதார்த்தை உணர முடியும். எந்த இடத்திலும் உணர்ச்சிகள் தம் வரம்பை மீறாது. எடுத்துக்கொண்ட கதையை வலுப்படுத்தும் விதத்திலான வலுவான திரைக்கதை படம் பார்ப்பதை ரசனைபூர்வ அனுபவமாக மாற்றும். பரம்பரை பரம்பரையாகக் குடும்பத்து ஆண்களில் ஒருவருக்கு மனநோய் கண்டுவிடுகிறது. மனநோய் கண்டிருந்த மாமன் இறந்தபிறகு, நல்ல மனநிலையுடன் உலவும் மம்மூட்டிக்கு மனநோய்க் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்று உறவும் சமூகமும் சந்தேகம் கொள்கிறது. இந்தச் சந்தேகக் கண்ணோட்டம் முற்றிவிட மம்மூட்டியை மனநோயாளி என்றே உறவும் சமூகமும் முடிவுகட்டிவிடுகிறது.

அவருடைய மாமன் பூட்டப்பட்ட அறையிலேயே அவரையும் பூட்டிவிட, மம்மூட்டியின் தாய் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டு, மகனுக்கும் விஷம் கொடுத்து கொன்று உலக வாழ்விலிருந்தும் அந்த நகரகத்திலிருந்தும் மகனுக்கு விடைகொடுக்கிறார். இந்தப் படம் 1987-ல் வெளியானது. மனநோயைப் பழமைவாதப் பார்வையுடன் அணுகும் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டும் இந்தப் படம். மனநோய் குறித்த சமூகத்தின் அறியாமையை அப்பட்டமாக்குகிறது. இப்படியான மாறுபட்ட கதைகளைக் கையாள இன்னும் தமிழில் ஓர் இயக்குநர்கூட முன் வராதது ஆச்சரியம்தான்.  

‘தனியாவர்த்தனம்’ படத்தின் தாய் மகன் உறவு, சாபம், தாய் விஷம் கொடுத்து மகனைக் கொல்தல் ஆகிய அம்சங்களுடன் ‘தளபதி’யின் அநீதியைத் தட்டிக் கேட்கும் அம்சத்தையும், தேவா சூர்யா பிணைப்பையும், இலங்கைத் தமிழர் என்னும் அம்சத்தையும் ஒன்றுசேர்த்து ஒரு படம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பாலாவின் ‘நந்தா’ நினைவில் தட்டுப்படும். ‘தனியாவர்த்தன’த்தில் தன் மகனைக் கொல்வதற்கு அந்தத் தாய்க்கு நியாயமான காரணம் இருக்கும் ஆனால் ‘நந்தா’வில் தகப்பனின் தொந்தரவால் தாய் படும் பாட்டைச் சகிக்க மாட்டாமல் தந்தையைக் கொன்றுவிடுவான் அந்த மகன். அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்படுவான். திரும்பிவந்த பின்னர் அவன் தாய் மீது பிரியத்துடன் வருவான். ஆனால் தாய் அவன் மீது பாசங்கொண்டிருந்தும் அவனைத் தள்ளிவிடுவாள்.  இறுதியில் அவனுடைய தாயே அவனை விஷம் தந்து கொல்வாள். ‘தனியாவர்த்த’னத்தின் திரைக்கதை சீராகப் பயணப்படும். படமாக்கத்தில் சிபி மலயில் வெளிப்படுத்தியிருந்த நேர்த்தி ‘நந்தா’வில் தவறியிருக்கும். இந்தப் படங்களை எல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது எது நல்ல திரைக்கதை என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.

திங்கள், ஏப்ரல் 07, 2014

பேஸ்புக்கால் பிழைத்த உயிர்

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


சமூக வலைதலங்கள் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக வலைதலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல செயல்களிலும் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கேரளாவில் ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் அகலி என்னும் இடத்தில் வசித்துவருபவர் ரபிதா சுனில் குமார். அவர் அகலியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் இதய நோயால் அவதியுற்றுவருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ரபீதா வகுப்பறையில் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை பாதிப்படைந்துள்ளதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரபீதாவை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு இருந்ததால் அவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். தேர்வு எழுத அவர் விரும்பினாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. கடும் வலி காரணமாக அவரால் தேர்வைச் சரியாக எழுத முடியவில்லை. பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அறுவைச் சிகிச்சை செய்தால் ஒழிய அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதய நோய் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் செலவாகுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாதாரணக் கூலித் தொழிலாளர்களான அவருடைய பெற்றோருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மகளின் உயிரைக் காப்பாற்ற அவ்வளவு பணமில்லை என்பதால் கவலையடைந்துள்ளனர்.

நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது ரபீதாவின் குடும்பம். குடும்ப நண்பர்கள் ஏதாவது நன்கொடை திரட்டலாம் என யோசனை தெரிவித்தனர், அதற்கும் முயன்றனர். ஆனால் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குறுகிய காலத்தில் எப்படிப் பணத்தைப் புரட்டுவது என ரபீதாவின் பெற்றோர் கலங்கித் தவித்துப்போனார்கள்.

இப்படியான சமயத்தில் ரபீதாவுடன் படிக்கும் மாணவி ஒருவர் ரபீதாவின் நிலைமை பற்றி ஃபேஸ்புக்கில் சாயக்கடா என்னும் குழுவில் பதிவிட்டுள்ளார். அது வெறும் லைக்குகளும் கமெண்டுகளுமாகச் சாதாரணப் பதிவாக முடிந்துவிடவில்லை. அந்தப் பதிவுக்கு அதிகமான அளவில் ஆதரவு கிடைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது பங்காக ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். எல்லோரும் அவர்களாக விரும்பி வந்து உதவினார்கள் என சாயக்கடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மினி ஸ்ரீனிவாசன் கூறுகிறார்..

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அங்கோலா போன்ற நாடுகளில் வசிக்கும் உறுப்பினர்கள் சிலரும் இந்த உதவியில் கைசேர்த்திருக்கிறார்கள். உண்மையில் இஸ்ரேலில் உள்ள ஒரு உறுப்பினர்தான் இந்த உதவிப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் என ரபீதாவின் அம்மா பிந்து சுனில்குமார் சொல்கிறார். அதனால்தான் எங்களை மலைக்கவைத்த தொகையை ஒரு வாரத்திற்குள் புரட்ட முடிந்தது என்றும் அவர் சந்தோஷப்படுகிறார்.

ரபீதாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. ரபீதாவுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவிட்டனர். ரபீதா மெல்ல மெல்ல இயல்பான நிலைக்குத் திரும்பிவருகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரபீதா மீண்டும் துள்ளித் திரியும் காலம் தொடங்கிவிட்டது.

திங்கள், ஜூலை 30, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை


வெவ்வேறு வர்ணங்கள் கொண்ட நூல்கள்


எண்பதுகளில் தொடர்ந்து வெற்றிப்படங்கள் வழங்கிய கதாநாயகன் ஒருவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அவர் நடிப்பில் 19 திரைப்படங்கள் வெளியானதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் வரவால் தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மனம் உணர்ந்து லேசாக அதிர்ந்தது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் சினிமாவை மையங்கொண்டுதான் இயங்குகின்றன என்றபோதும் திரைப்படங்களின் பொற்காலத்தை மங்கச்செய்துவிட்டன இந்த தொலைக்காட்சிகள். இப்போது ஒரு படம் பத்து நாள்கள் ஓடினாலே இமாலய வெற்றி எனப் பறைசாற்றப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சாத்தியத்தின் எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. எண்பதுகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்கள் தாய்க்குலங்களாக இருந்தனர். இப்போது வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்கள் இளம்வயதினர் என்னும் நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது. இளம் வயதினரைக் குறிவைத்தே பெரும்பாலான படங்களின் கதைகள் அமைகின்றன. கடந்த பத்தாண்டுகளாக ஐம்பதுகளை கடந்த இயக்குநர்கள்கூட யூத் சப்ஜெக்ட் தேடி உதவி இயக்குநர்களை விரட்டிவருவது நடைமுறை எதார்த்தம். 

ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியான, முற்போக்கு முகாம்களில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று ஏழு நாட்களுக்குப் பின்னே என்ன ஆனது என்பதே தெரியாமல் போனது. இந்தப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது என்னும் பிம்பத்தை உருவாக்கியதில் சின்னத்திரைக்கு முக்கியமான இடமுண்டு. உண்மை இதற்கு நேரெதிராக இருந்திருக்கலாம் எனினும் சுற்றுக்குவிடப்பட்ட இந்த பிம்பம் அழிவற்றதாக வரலாற்றின் பக்கங்களில் நிலைத்திருக்கக்கூடும். கம்யூனிச சித்தாந்ததையும் சம கால பிரச்சினையையும் எதார்த்தமாக எடுத்துக்காட்டியது போன்ற பாவனையில் ரசிகர்களை லாவகமாகவும் சுலபமாகவும் சுரண்டியது அந்தப் படம். அதற்கு நேர்மாறாகப் படமாக்கப்பட்டிருந்தது ஜூனில் வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை. பஞ்சாலை குறித்த படம் எனக் கேள்விப்படும்போது எவையெல்லாம் நம் மனத்தில் தோன்றுமோ அவை எல்லாம் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. விமர்சனத்துடன் கூடிய கம்யூனிச சித்தாந்தம், பஞ்சாலை அதன் மனிதர்கள் அவர்களுக்கிடையே எழுந்த உணர்வு, உறவுச் சிக்கல் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது இதன் கதை. சிலாகிக்கப்பட்ட படம் சினிமாத்தனமான திரைக்கதையின் பலத்தில் எதார்த்தமான படமாகத் தோற்றம்கொண்டது; எதார்த்தமான படமோ சினிமாத்தனமற்ற திரைக்கதையால் உரிய அடையாளத்தைக்கூடப் பெறவில்லையோ எனத் தோன்றியது. யோசித்தால் திரைக்கதை என்பது ஒரு ஏமாற்றுவேலை; நுட்பமாக ஏமாற்றுவதுதான் திரைக்கதையின் தாரக மந்திரம. இங்கு வெற்றிபெறுவது அறிவுஜீவித்தனம் அல்ல புத்திசாலித் தனம்.


ஆங்கிலேயே ஆட்சியை அகற்றி அந்த இடத்தில் அமர்ந்து நம்மவர்கள் சவாரியைத் தொடங்கிய சில வருடங்களுக்குப் பிறகு  -அதாவது ஐம்பதுகளில் - தமிழகத்தின் கொங்குப் பகுதியில் உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் ஊர்மக்களை ஒரு கூரையின் கீழ் இணைக்கும் வேலையை தொடங்கியது பஞ்சாலை ஒன்று. சாதி வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட ஆலையில் எல்லாச் சமூகத்தினரும் ஒரே இடத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு சமூகத்தில் நிலவிவந்த சாதி வேற்றுமையைத் தடயமற துடைத்திருக்கலாம்தான். ஆனால் தனி மனித வீராப்பு சகலத்தையும் அழித்துவிடும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இருக்கும்போது சமூகப் புரட்சியின் முனை மழுங்கிப் போவது குரூரமான எதார்த்தம். 

இந்தப் படத்தில் ஒரு பஞ்சாலையும் ஒரு சமூகச் சூழலும் இணைகோட்டில் பயணிக்கிறது. இறுதியில் இரண்டுமே தடம்புரண்டு தடுமாறுகின்றன. தன்னிடம் இருக்கும் பணம் தனது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பணக்காரர் ஒருவர் பஞ்சாலையைத் தொடங்குகிறார். அறிவு உள்ள இடத்தில் நயவஞ்சகமும் எளிதாக குடியேறிவிடும் என்பதற்கிணங்க அந்த ஆலையை நடத்தும் மேலாளர் செயல்படும்போது உரிமையாளர் கோபம் கொள்கிறார். பாமரனின் கோபம் எப்போதும் பதவிசாக வெளிப்படுவதில்லையே. மேலாளரையும் கொன்று தன்னையும் மாய்த்துக்கொள்கிறார் பெரியவர். அவரின் உயில் பிரகாரம் அவருடைய மகன் பஞ்சாலைக்குப் பொறுப்பேற்க நேர்கிறது. வெளிநாட்டில் வசித்துவந்த மகன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். காதல் மனைவியை பிரிந்த பிறகு அவனுக்கு எல்லாமே அவனது ஆலை என்றாகிவிடுகிறது. இந்த ஆலை அதைச் சார்ந்த மனிதர்கள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட சம்பவங்கள் மூலம் இயக்குநர் தான் அறிந்த ஒரு வாழ்க்கையை அதை அறியாத பார்வையாளர்களுக்குத் திரைமொழியில் வெளிப்படுத்துகிறார்.  


இப்படத்தின் கதையில் நாம் இறங்கிச் செல்ல படிகள் பல  காணக்கிடைக்கின்றன. வெற்று செண்டிமெண்ட் அற்ற புரிதலோடு சித்தரிக்கப்பட்டுள்ளன பல கதாபாத்திரங்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் அம்மா என்றால் அவள் மிகப் புனிதமானவளாக எல்லா அறங்களையும் பழுதின்றிப் பின்பற்றுபவளாகவே சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் அம்மா அப்படியானவள் அல்ல. அவளுக்குத் தன் குழந்தைகளைவிடச் சாதி முக்கியமானதாகப் படுகிறது. அவளது சாதி அபிமானத்தால் குரூரமான முடிவுகளை எடுக்கிறாள். அவளது வீராப்பு அவளது கடைசிச் சொட்டுக் குருதியையும் குடித்துவிட்டுத்தான் சாந்தமடைகிறது. பஞ்சாலை தொடங்கிய பெரியவரின் வீராப்பு அவரது மூச்சுக்காற்றை எரித்துவிட்டுத்தான் அடங்குகிறது. ஆலையை நடத்தும் மகனின் வீராப்பு பஞ்சாலையை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறது. தொழிலாளர்களின் வீராப்பு அவர்களது வேலையை பதம் பார்த்தபின்னர் ஓய்கிறது. 

இந்த அழிவுகள்,  தோல்விகள் அனைத்துமே மிக எளிதாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஏன் அப்படி அமையவில்லை? மனிதர்கள் எங்கே சறுக்குகிறார்கள் எனச் சிந்திக்கவைக்க விரும்பியுள்ளார் இயக்குநர். சிந்தனையைத் தூண்ட விரும்புபவர்கள் அனைவருமே மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் நாமறிந்த வரலாறு. கம்யூனிஸ சித்தாந்தம் என்னவென்று அறியாத அரைகுறை, மூலதனத்தைப் படித்தால் எல்லா நோய்களும் நீங்கிவிடும் என்று நம்பும் மூடன்தான் கிட்டு. இவனைப் போன்றவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களானால் எப்படி ஒரு தொழிற்சாலை உருப்படும்? தொழிற்சாலையில் அதிகப்படியான லாபம் வந்தபோது வாரிக்கொடுத்தவர் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத பொழுதில் போனஸைக் குறைக்கும்போது தொழிலாளி வெகுண்டெழுகிறான். தான் சுரண்டப்படுவதாய்ப் போதிக்கப்படுகிறான். புரட்சிக்குக் குரல் கொடுக்கிறான். தான் படித்த வசனங்களை முழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததெனப் பொழிந்துதள்ளுகிறான். நீடித்த புரட்சியால் வீட்டின் அடுப்பில் பூனை குடியேறிவிடுகிறது. வயிறு காயும்போது உண்மை எனும் சித்தாந்தம் விளங்கத் தொடங்குகிறது. மெல்லப் படி இறங்குகிறான். நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது. இரக்கம் காண்பித்த ஆலை உரிமையாளர் கூட எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாசியை மூழ்கடித்து நிற்கிறது வெள்ளம்.

சித்தாந்தங்களைத் தங்களுக்கு வாகாகப் பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்களை, அவர்களது அறியாமைகளைத் துணிச்சலோடு அடையாளங்காட்ட முயன்றுள்ளார் தனபால். முற்போக்கு முகமூடிகளை சுலமாகக் கழற்றிவிட முடியுமா என்ன? பணக்காரர்கள் எல்லோரும் பூர்ஷ்வாக்கள் ஏழைகள் அனைவரும் இறைவனின் குழந்தைகள்; நேர்மையாளர்கள் அவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள் என்ற பலமான நம்பிக்கையின் வேரை அசைப்பது அவ்வளவு எளிதல்ல. அத்தகைய முயற்சியை மேற்கொண்டதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். புரட்சிப் போராட்டம் வென்று இறுதிக் காட்சியில் பஞ்சாலையிலேயே அதன் உரிமையாளரைத் தொழிலாளிகள் ஒன்றுதிரண்டு கூறுபோட்டிருக்கலாம் அந்தக் காட்சியின் முடிவில் கார்ல் மார்க்ஸின் புகைப்படத்தை மெதுவாக ஜூம் இன் செய்திருக்கலாம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக என முழங்கியிருக்கலாம்தான். ஆனால் எதார்த்தமாக என்ன நடக்குமோ அதைக்காட்டும்போது அதை எப்படி எதிர்கொள்ள முடியும்? புரட்சி என்ற ஒன்று தோல்வியில் முடிவதை என்னருமைத் தோழர்களே எப்படித் தாங்கிக்கொள்ள இயலும்? தனிமனிதர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் அவர்களையே பலிகொள்ளும் அபத்தத்தை விளங்கவைப்பது தேவையில்லாத வேலைதானே? அதைத் தான் செய்துள்ளார் தனபால் இந்தப் படத்தில். 


ஒரு குடும்பத்துக்குள்ளேயே சுற்றிசுற்றி வந்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் அம்மாக்களில் ஒருத்தி ரேணுகா. சமையல் செய்வது, ஒயர் கூடை பின்னுவது என்று வாழும் அவளுக்குள் இருக்கும் சாதிப் பிடிமானம் சார்ந்த வைராக்கியம் ஏற்படுத்தும் விபரீதங்கள் சமூகத்தின் நிலவும் சாதிக்கொடுமையைச் செயல்களால் விவரிக்கின்றன. மனிதர்களின் ஆழ்மனத்தில் புதைந்துள்ள சாதி வேர்களைச் சுத்தமாக அறுப்பது என்பது சாத்தியமே அல்ல என்னும் உண்மை செரிக்க இயலாததாக நெஞ்சுக்கு மேலே எழுப்பிக்கொண்டே இருக்கிறது. வறட்டு கௌரவத்தால் நாம் பல விஷயங்களை இழந்துவருவதை ரேணுகா பாத்திரம் மூலம் விளக்குகிறார் இயக்குநர். தன் கணவனுடன் தான் வாழ்ந்த வீட்டை விட்டு அவள் வெளியேற வேண்டிய அவசியத்தை உருவாக்கியது வெறும் வறட்டு கௌரவம் அன்றி வேறென்ன? சாதிசார்ந்த சகிப்பின்மையைக் கைக்கொள்வதைவிடப் பாடையை ஏற்றுக்கொள்வது மேல் என சராசரியான ஒரு குடும்பப் பெண்ணை எண்ணவைக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறுக்க முடியவில்லை. 

பஞ்சாலையை ஆழமாக நேசிப்பவராகவும் அதன் ஊழியர்களை சொந்த குழந்தைகள் போல பாவிக்கும் உரிமையாளரால் எப்போதும் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோவொரு தருணத்தில் அவருக்குள்ளும் வீம்பு குடிகொண்டு விடுகிறது. ஆலை போனாலும் பரவாயில்லை எனத் தனது முடிவில் உறுதியாக இருந்துவிடுகிறார். 


படத்தின் கதைகளில் மெல்ல மெல்ல ஆழம்வரை இறங்க முடிந்த நம்மால் அதன் திரைக்கதையில் அழுத்தம் எதையும் காண முடியவில்லை. பார்வையாளன்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் அமையாதது திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம். கருத்தியல் ரீதியில் தான் தேர்ந்தெடுத்த கருத்துக்கு வலுசேர்க்கும் இந்தப் படம் காட்சியல் ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளது. ஒரு கதைக்கும் அதன் திரைக்கதை வடிவத்திற்கும் இடையில் சாமானியர்களால் புரிந்துகொள்ள முடியாத மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருந்தால் மட்டுமே திரைக்கதை பார்வையாளனின் மனத்தில் நிலைபெறும் சித்திரங்களாக உரு மாற இயலும். ஒரு சாதாரணக் கதையை பார்வையாளனை மிரண்டுபோகச் செய்யும் வித்தை அதன் திரைக்கதையிடம் தான் ஒளிந்திருக்கிறது. திரைக்கதை உருவாக்கம் காமத்தைக் கையாளுவது போல் நுட்பமானது; அது ஒரு தேடிக்கண்டடைதல். கற்றுத்தந்த, கற்றுக்கொண்ட எல்லா வழிமுறைகளும் காலாவதியாகும் மாய பயிற்சி அது. அறிவால் கண்டடைய முடியாததது அந்த நுட்பம். ஆனால் அது கைவரப்பெற்றால் மட்டுமே ஒரு சாதாரண கதை கூட ரசனைமிகு திரைப்படமாக மிளிரும். கதை வாசிப்பனுபவம் சார்ந்தது. வாசகன் தனக்குப் பிடித்த ரூபங்களை விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களுக்குக் கொடுத்து தன்னைக் கதையோடு பிணைத்துக்கொள்வான். திரைப்படத்தில் அவை அனைத்தும் இயக்குநரால் - திரைக்கதையையும் இயக்குநரே உருவாக்கும்போது - தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும்போது அவருக்கான பொறுப்பு கூடுகிறது. அதைச் சரிவர நிறைவேற்றும்போது பார்வையாளனை அவரால் பரவசப்படுத்த முடியும். திரைக்கதையோடு பார்வையாளனுக்கு உருவாகும் நெருக்கம்தான் படத்தை வெற்றிப்பாதைக்கு - வணிகரீதியான, கலைரீதியான வெற்றி இரண்டையும் உள்ளடக்கிய பாதை - அழைத்துச்செல்லும். பஞ்சாலையும் அதன் மனிதர்களையும் பார்வையாளன் மனத்தில் நிலைபெற்றிருக்கச்செய்வதில் திரைக்கதை கைகொடுக்கவில்லை; அதைப்போலவே நடிகர்களும் - ஷிப்டில் பணியாற்றுவது போல வந்துவிட்டுப்போய்விட்டார்கள். அதனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வரும்போது இது ஒரு நாவலாக எழுதப்பட்டிருந்தால் மிக நேர்த்தியான நாவலாக உருவாகியிருக்குமோ என்னும் எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு நல்ல படம் தர வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை படத்தின் உருவாக்கத்தில் உணர முடிகிறது; ஆனால் சிறந்த படத்திற்கு அது மட்டும் போதாதே?   
        

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்