இந்த வலைப்பதிவில் தேடு

அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 01, 2012

சின்ன விஷயங்களின் கடவுள்: காமத்திப்பூவும் கடவுளும்

தமிழ்மொழி மூலமாக உலக இலக்கியப் பரிச்சயம்கொண்ட வாசகனின் நீண்ட கால எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது. அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் புக்கர் பரிசுபெற்றதிலிருந்தே அந்நாவல் குறித்த பாராட்டு மொழிகளும் அதன்மீது தூற்றப்படும் அவதூறுகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. 28 ஜூலை 2012 வரை 38 மொழிகளில் பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்த நாவல் அன்று தமிழிலும் வெளியாகி வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் சில அல்லது பல ஆயிரங்கள் அதிகரித்துக்கொண்டது- வெளியான அன்றே விற்றுத்தீர்ந்த பிரதிகள் அதற்குச் சான்று. இப்போது 39 மொழிகளில் வெளியான நாவல் என்னும் பெருமையையும் அது பெற்றுள்ளது. அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் தன்னுடன் மேலும் 3 நூல்களை இணைத்துக்கொண்டு அரங்கேறியது. கிறிஸ்தவர்களின் மற்றொரு பக்கத்தைத் தோலுரித்த கடவுள் வெளியாக மேடை அமைத்துத் தந்தவர்கள் கிறிஸ்தவ அமைப்பினர் என்பது பகைவனையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த கிறிஸ்துவின் வார்த்தைகள் வெறும் போதனைகளாகச் சுருங்கிவிடவில்லை என்பதை உணர்த்தியது. அதை உறுதிசெய்வது போல் அருந்ததி ராயைச் சமூக நீதிக்கான குரலை வலுவாக வெளிப்படுத்துபவர் என ஜான் அலெக்ஸாண்டர் புகழ்ந்துரைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். 

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியின் ஒலிக்காட்சி அரங்கில் அந்தச் சனிக்கிழமை மாலையில் முதலில் மலர்ந்தது காமத்திப்பூ. இதிலிருந்து சில கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு ரசித்துதான் வாசித்தார் சுகிர்தராணி. அந்த அரங்கில் காமம் குறித்த தன் அவதானிப்பை, காதலுக்கும் காமத்திற்குமான விலக்க முடியாத நெருக்கத்தை, மனம் சார்ந்த புனிதமும் உடம்பு சார்ந்த இழிவும் கட்டமைக்கப்பட்ட வரலாற்றைச் சொற்களால் அடுக்கிக்கொண்டே போனார் அருந்ததி ராய் வெளியிட்ட காமத்திப்பூவைப் பெற்றுக் கொண்ட பிரபஞ்சன். ஆண்குறியினரின் அபத்தங்களையும் யோனி கொண்டோரின் சிறப்புகளையும் அரங்கைச் சற்றே சலன மடையச் செய்யும் விதத்தில் அவர் வெளிப்படுத்தினார். இறுதியாக யோனியை ஆயுதமாகக் கொண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியதன் மூலம் ஔவையார், ஆண்டாள் வரிசையில் அடுத்த கவிஞர் சுகிர்தராணிதான் என மொழிந்து தன் உரையைப் பிரபஞ்சன் நிறைவுசெய்தார். யோனியை ஆயுதமாக்கிய கவிஞர் எனப் பிரபஞ்சனால் புகழப்பட்ட சுகிர்தராணி பிரியம் வழிந்த அணைப்பை அவருக்குக் காணிக்கையாக்கினார். அரங்கில் நெகிழ்ச்சி அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன.

அடுத்ததாகக் காலச்சுவடு நவயானா இணைந்து வெளியிட்டிருக்கும் பீமாயணம் என்னும் மொழிபெயர்ப்பு நூல் அரங்கின் மேடைக்கு வந்தது. சமூக விடுதலைக்கும் தீண்டாமைக்கும் குரல் கொடுத்த அம்பேத்கரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரங்கள் மூலமாக உணர்த்தும் புத்தகம் அது. வண்ணச் சித்திரங்களுக்கும் குழந்தைகளுக்குமான தீராப் பிணைப்பை உணர்த்தும் விதத்தில் அதைப் பெற்றுக்கொண்டவர்கள் சோனியா, திருமூர்த்தி என்னும் குழந்தைகள். நூலை அருந்ததி ராய் வெளியிட்டார். நவயானா ஆனந்த் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சித்திரங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். அடுத்ததாக வெளியான ராஜா சாண்டோ ஒரு பதிப்பு நூல். பேசும் படம் என்னும் இதழை நடத்திய டிவி ராமநாத் எழுதிய இந்த நூலை டிராட்ஸ்கி மருது வெளியிட்டார். இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து கலை வளர்த்த ராஜா சாண்டோவின் நூலைச் சென்னை முழுவதும் மிதிவண்டியில் - மிகச் சமீபத்திலிருந்து மோட்டார் வாகனத்தில் - சுற்றித் திரிந்து புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர் பரிசல் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டதும் பொருத்தமானதே. இந்நூல் குறித்து உரையாற்றிய தியடோர் பாஸ்கரன் மௌனப்படக் காலத்தின் சிறப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் மொழிந்தார். டிராட்ஸ்கி மருது உரை நிகழ்த்தியபோது, ஆளுமைகளின் பதிவு குறித்த அவசியத்தைச் சுட்டினார். பதின் பருவத்தில்தான் பார்த்து ரசித்த ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் போன்ற ஆளுமைகள் குறித்தும் ஓரிரு சம்பவங்கள் குறித்துமான சில ஞாபக துணுக்குகளைப் பகிர்ந்துகொண்டார். 

இறுதியாக வெளியிடப்பட்டது சின்ன விஷயங்களின் கடவுள். வெளியிட்டவர் சுகுமாரன், பெற்றுக்கொண்டவர் கலீஸியன் எழுத்தாளர் மரியா ரெமோண்ட். தமிழறியாத இவர் வாசித்த கொஞ்சு தமிழ் உரையை அரங்கினர் ரசித்தனர் என்பதன் வெளிப்பாடுதான் சுகுமாரன் அவருக்குத் தெரிவித்த கைகுலுக்கலுடன் கூடிய பாராட்டு. இந்நூல் வெளியீடு குறித்த பல விவரங்கள் விரிவாக இதே இதழில் தொடர்ந்த பக்கங்களில் வெளியாகியுள்ளன. இறுதியாக மைக்கேல் அமலதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். அரங்கை வடிவமைத்திருந்த ரோஹிணி மணி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்வில் இடம்பெற்ற ஒளிப்படக் காட்சிக்குப் பின்னணிக் குரல் கொடுத்த சிந்து, விட்டு விடுதலையாகி என்னும் பாரதியின் பாடலைப் பாடிய ரவி சுப்பிரமணியன் போன்ற பலரது துணையுடனும் பார்வையாளர்களின் ஒத்துழைப்புடனும் எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவேறியது காலச்சுவடு பதிப்பகத்தின் இவ்வெளியீட்டு நிகழ்வு. இந்த மாலையின் நினைவைப்போல், பள்ளிக் குழந்தைகள் உருவாக்கிய, ஆசிரியர் எஸ். டி. ராஜ் அணிவித்த ஏலக்காய் மாலையின் மணமும் சில நாட்களுக்கு அருந்ததிக்குள் கமழ்ந்துகொண்டிருக்கக் கூடும்.

வியாழன், பிப்ரவரி 24, 2011

வரலாற்றில் வாழும் சிலைகள்

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரது சிலை சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே கடற்கரைச் சாலையில் கடலை நோக்கியபடி கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. தற்போதைய விவேகாநந்தர் இல்லமான ஐஸ் ஹவுஸ் அந்தக் காலத்தில் பிரபலமான வக்கீலான பிலகிரி அய்யங்காருக்குச் சொந்தமானது. அக்கட்டடத்தில் தான் விவேகாநந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அக்கட்டடத்திற்கருகே மேடை அமைக்கப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எனவே1963இல் அவருடைய நூற்றாண்டு விழாவின் போது அவரது சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. முதலில் ஜவஹர்லால் நேரு தான் இச்சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. ஆனால் நேரு காலமாகிவிட்டதால் 1964ஜூனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இச்சிலையைத் திறந்துவைத்தார். விவேகாநந்தர் இல்லத்திலும் விவேகாநந்தரின் சிலை ஒன்று உள்ளது.
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனத்தில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் 1881இல் சந்தித்தார். இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. 24 டிசம்பர், 1892இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறைமீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அம்மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாகப் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று அந்தப் பாறை விவேகானந்தர் பாறை என அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவில் நடைபெறவுள்ள 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்துகொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. 1902ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார்.
தங்குத்தூரி பிரகாசம் பந்துலு
சென்னை பாரிமுனை பேருந்து நிலையம், இராஜா அண்ணாமலை மன்றம் ஆகியவற்றின் அருகில் எஸ்பிளனேடு, பாரிஸ் கார்னர் பிராட்வே பேருந்து நிலையச் சாலை ஆகியவை சந்திக்கும் முனையில் அமைக்கப்பட்டுள்ள சிலை ஆந்திர கேசரி திரு தங்குத்தூரி பிரகாசம் பந்துலுவினுடையது. சென்னை மேயராக திரு ஹபிபுல்லா பாக் இருந்தபோது அக்டோபர் 19, 1968 அன்று அப்போதைய தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இந்திய ஜனாதிபதி டாக்டர் வி வி கிரி திறந்துவைத்த சிலை இது.
பந்துலு சென்னை மாகாணப் பிரதமராக 30.04.1946 முதல் 23.03.1947 வரை பதவிவகித்துள்ளார். அவரது அமைச்சரவையில் வி வி கிரி தொழிற்துறை மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆலோசகர் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மதுவிலக்கை பந்துலு மீண்டும் கொண்டுவந்தார். ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்தபோது அதன் முதல்வராக 01.101953முதல் 15.11.1954வரை பதவிவகித்துள்ளார் இவர். சென்னையில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் இவரது தலைமையில் நடைபெற்ற இடத்திலேயே இவருக்குச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை நிறுவுவதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டவர் இவர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிரகாசம் பந்துலு ஸ்வராஜ்யா என்னும் ஆங்கிலத் தினசரி பத்திரிகையை சென்னையில் நடத்தி விடுதலைப் போருக்கு மாபெரும் சேவை செய்தார். ஆகஸ்ட் 23, 1872இல் பிறந்த ஆந்திர கேசரி பந்துலு மே 20, 1957இல் காலமானார்.
கோபால கிருஷ்ண கோகலே
கோபால கிருஷ்ண கோகலேவின் சிலை பல்கலைக்கழக செனட் கட்டடத்தின் முன்னே அமைக்கப்பட்டுள்ளது. காந்தியால் அவரது அரசியல் குரு என அழைக்கப்பட்டவர் கோகலே. காந்தியின் அழைப்பின் பேரில் 1912இல் தென்னாப்பிரிக்கா சென்றுவந்தவர் கோகலே. இவர் மகாராஷ்டிராவிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தின் கோதலக்கில் மே 9, 1866 அன்று பிறந்தவர். மிதவாதியாக இருந்தபோதும் நாட்டின் நன்மையைப் பொறுத்தவரையில் எதையும் யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடியவரல்ல. கல்விக்காக ஸ்ரீ கோகலே செய்த பொதுத்தொண்டு மிக மிக அதிகமான அளவிலானது. அதன் காரணமாகவே அவரது சிலை செனட் மண்டபத்தின் முகப்பில் இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. கோகலே பிறர் நலனுக்காக வாழ்ந்தவர். 1905ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேந்தெடுக்கப்பட்டார். அப்போது இந்திய ஊழியர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் கோகலே. சென்னை ராயப்பேட்டையில் இதன் கிளை இருக்கிறது. தனது 49ஆவது வயதில் பிப்ரவரி 19, 1915 அன்று பம்பாயில் காலமானார் கோகலே.
பாபு ஜெகஜீவன் ராம்
இந்தியாவின் துணைப் பிரதமராக விளங்கிய பாபு ஜெகஜீவன் ராமின் சிலை சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே எழிலகக் கட்டடத்தின் முகப்பில் பல்கலைக்கழகத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை 1990ஆம் ஆண்டு முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கடரமணன் திறந்துவைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரான ஜெகஜீவன் ராம் பீஹாரில் அர்ரா அருகேயுள்ள சந்த்வாவில் 1908, ஏப்ரல் 5 அன்று பிறந்தார். அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பை 1935இல் உருவாக்குவதற்கு முக்கியப் பங்காற்றியவர். 1946இல் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையின் மிக இளைய அமைச்சர் இவர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் விவசாயத்துறை அமைச்சராகவும் இரயில்வே துறை அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார் இவர். 1947, ஆகஸ்ட் 16இல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதியாக காந்தியவாதி டாக்டர் அனுக்ரஹா நாராயண் சின்ஹாவுடன் சென்று கலந்துகொண்டார். தற்போதைய மக்களவை சபாநாயகரும் முதலாவது பெண் சபாநாயகருமான மீரா குமார் இவரது மகள். பாபு ஜெகஜீவன் ராம் ஜூலை 6, 1986இல் புதுதில்லியில் வைத்துக் காலமானார்.
டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கரின் வெங்கலத்திலான முழு உருவச் சிலை சென்னையில் சிங்கார வேலர் மாளிகைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் 94ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. 1985, ஏப்ரல் 14அன்று எம். ஏ. எம். ராமசாமி தலைமையில் ஜனாதிபதி ஆர். வெங்கடரமணன் திறந்துவைத்துள்ள சிலை இது. இவ்விழாவில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கோமதி சீனிவாசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆர். எம். வீரப்பன், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மரகதம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் (தற்போதைய மத்தியப்பிரதேசம்) ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14ஆவது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915இல் பண்டைய இந்தியாவின் வர்த்தகம்என்னும் ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப் பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வுஎன்னும் ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்என்னும் ஆய்வுரைக்கு 1921இல் முது அறிவியல் பட்டம் பெற்றார். ரூபாயின் பிரச்சினைஎன்ற ஆய்வுரைக்கு 1923இல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராடினார். 1930இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக இரட்டை வாக்குரிமைதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931இல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே புனா ஒப்பந்தம்ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக்கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956இல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951ஆம் ஆண்டு இந்து சட்டத் தொகுப்பு மசோதாஅறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6இல் காலமானார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்