இந்த வலைப்பதிவில் தேடு

இறைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 20, 2016

இறைவி: சிற்பி சிதைத்த சிலைகள்


ஓரிரு படங்கள் இயக்கிய பின்னர், தான் ஒரு இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டியதும் சமூக அக்கறை தொனிக்கும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற வேட்கை ஓர் இயக்குநருக்கு எழுவது இயல்பு. கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ அப்படி உருவான படைப்பே. எல்லாப் படங்களையும் போலவே இதிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வருகிறார்கள். இது பெண்களுக்கான படமோ ஆண்களுக்கான படமோ அல்ல, இது குத்துப்பாடலைக் கலையாகக் கருதும் சராசரியான ஒரு சினிமா. ஆனால் ஒரு வணிக சினிமாவாக ‘ஜிகர்தண்டா’ கொண்டிருந்த நேர்த்தி இதில் இல்லை. ‘இறைவி’யில் சில நெகிழ்ச்சியான, உயிரோட்டமான தருணங்களை உருவாக்கித் தர முயன்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த முயற்சி பல இடங்களில் தோல்வியையே அடைந்துள்ளது. வெற்றி தோல்வி முக்கியமல்ல முயற்சியே போதும் என்று மொழியும் நல் மனங்களைக் கொண்டோர் அவரை உச்சிமோந்து வருகிறார்கள்.   

கார்த்திக் சுப்புராஜ் ஒரு நேர்காணலில், இது பெண்ணியப் படமல்ல என்று தெரிவித்தார். அது உண்மை என்பது படத்தைப் பார்த்த பின்னர் தெளிவாகப் புலனாகிறது. கதையின் மையமான வடிவுக்கரசி ஏற்றிருக்கும் மீனாட்சி என்னும் கதாபாத்திரம் படம் முழுவதும் கோமா நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மையில் ஒரு குறியீடு. மீனாட்சியின் மூத்த மகனான இயக்குநர் அருள் செல்வன் என்ற வேடமேற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வேடம் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. அவருக்குத் தொந்தரவு தராத வேடமான இதுதான் படத்தின் பிரதான வேடம். ‘இறைவி’யின் ஆதிச் சிக்கல் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது. அருள் பிரமாதமான இயக்குநர் என்பதாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் நம்புகிறார்கள். அவருடைய மே 17 படம் படமாக்கப்பட்டும் வெளிவர இயலவில்லை. தயாரிப்பாளர் முகுந்தனுக்கும் அருளுக்கும் ஏற்பட்ட ஈகோ மோதலே இதற்குக் காரணம். படம் வெளியானால் அருள் செல்வன் உலகத் தமிழர்களால், புலம் பெயர் தமிழர்களால் விதந்தோதப்படலாம் என்னும் நம்பிக்கை அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளது. ஆனால் இறுதிவரை அந்தப் படம் வெளியானதா இல்லையா என்பதை யாராலும் எளிதில் சொல்லிவிட முடியாது.


தமிழர்களின் உணர்ச்சியை உத்தேசித்து கண்ணகியையும் ஈழத் தமிழர் விஷயத்தையும் கதையில் சேர்த்திருக்கிறார்கள். சிலப்பதிகாரம், இலங்கைத் தமிழர் விவகாரம் என்ற சங்கதிகள் இணையும்போது படத்தின் நிறம் மாறும். கூடவே மகளிரின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசும்போது அப்படத்துக்குத் தனிக்கவனம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் படத்தை உருவேற்றியிருக்கிறார்கள். இவையெல்லாம் இப்படத்திற்கு ஒரு அறிவுஜீவித் தனமான பிம்பத்தை உருவாக்கும் முயற்சி என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தைச் சந்தைப்படுத்தும் ஓர் உத்தி. அந்த உத்தி வெற்றியடைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படம் ஒரு போலி அறிவுஜீவித்தனமான படமாகவே காட்சி கொள்கிறது. இயல்பான சம்பவங்களோ, காட்சியமைப்போ, வசனங்களோ இல்லாமல் எல்லாமே போலச் செய்தது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரது படங்களின் பாதிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர் வேடம் போட்டது போல் படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மீனாட்சி, யாழினி, பொன்னி, மலர்விழி என்ற நான்கு பெண்களின் வாழ்வு அவர்களைச் சேர்ந்த ஆண்களால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதே கதை. ஆனால் அது திரைக்கதைக்குத் தாவும்போது தடாலடியாகக் கீழே விழுந்து படத்துக்கு மிகப் பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடுகிறது. கதைக்குத் தேவையான திரைக்கதை அமைக்கப்படாமல் திரைக்கதையின் பயணம் வேறொரு திசையில் செல்கிறது. படத்தின் முக்கியத் திருப்பங்கள் சீரியல் தனமானவை. திரைக்கதையை நகர்த்த வேண்டும் என்ற முனைப்பே பிரதானமாக உள்ளது காட்சிகளின் நம்பகத் தன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. விஜய் சேதுபதி போலீஸ் வாகனத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். படத்தில் இடம்பெறும் இரு கொலைகளும் அவசியமில்லாதவை. அதிலும் தயாரிப்பாளரை மைக்கேல் கொல்லும் காட்சி வன்முறையானது. தான் எதைச் சொல்லப்போகிறோம் என்ற தெளிவு இயக்குநரிடம் இல்லாத தன்மையையே இது காட்டுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் அபாயகரமானவை அதனாலேயே அவை கொண்டாடப்படவும் செய்கின்றன என்பது ஒரு முரண்நகை அல்லது தற்போதைய தமிழ்ச் சூழல்.


இயக்குநர் அருள் செல்வன் படம் முடங்கிப்போய்விட்ட காரணத்தால் முழு நேரக் குடிகாரனாகிவிட்டார். தன்னைத்தானே சிதைத்துக்கொள்கிறார். படத்தை வெளியிட சிலைகளைக் கொள்ளையடிக்கும் முயற்சிக்கு அருள் செல்வனின் தந்தையான சிற்பி தாஸ் வரை அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ‘தங்களிடம் பராமரிப்பே இல்லாத நிலையில் இருக்கும் சிலை அது பேணப்படும் இடத்திற்குச் செல்வது சரிதானே’ என்று தன் மனைவியைக் குறிப்பிட்டு தாஸ் வசனம் பேசுவதன் மூலம் சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. இது சரியென்றால் குடிகார அருள் செல்வனைவிட்டு அவருடைய மனைவி யாழினி விலகிச் செல்ல விரும்புவது நியாயம்தானே? ஒருவேளை மே 17 என்னும் படம் வெளியாகி அப்படம் தோற்றுவிட்டால் அவர் மீண்டும் குடிகாரனாகும் வாய்ப்பு உள்ளதே. அப்படிப்பட்ட ஒரு குடிகாரக் கணவனைவிட்டு யாழினி செல்லாமல் அருள் செல்வனைத் தியாகியாகக் காட்டியிருப்பது எந்தவகை நியாயம் எனத் தெரியவில்லை. அதிலும் இறுதியில் அவர் பேசும் ஆண் நெடில் என்னும் வசனம் அருவருப்பானது ஆனால் திரையரங்கில் இந்த வசனத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு குமட்டச்செய்கிறது.       

மலர்விழி கதாபாத்திரம் காதல் கணவனை இழந்தபிறகு துணையாக மைக்கேலைக் கொள்கிறார். அவருக்கு மைக்கேல் மேல் துளியும் காதலில்லை. ஆனால் உடல் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மைக்கேல் மலர்விழியைக் காதலிக்கிறார். அவரையே மணந்துகொள்ள விரும்புகிறார். ஆனால் மலர்விழி மறுக்கவே பொன்னியை மணந்துகொள்கிறார். மலர்விழி கதாபாத்திரம் தனது பாலியல் தேவையை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது புனித மழை நீரை இயக்குநர் தெளிக்கிறார். மைக்கேல் மழையில் நனைந்தபடி வெளியேறுவதை மாடியிலிருந்து பார்க்கும் மலர் கண்ணீர் வடிப்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?


ஜெகன் கதாபாத்திரச் சித்தரிப்பும் சரிவரக் கையாளப்படவில்லை. பெண்களின் துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் அவர். ஆனால் அவரால்தான் பொன்னியின் வாழ்க்கையில் சிக்கலே வருகிறது. அவருக்குப் பொன்னி மீது காதல். பொன்னியை விரும்புவதை வெளிப்படையாகச் சொல்கிறார். சமூகம் போதித்த கட்டுப்பாடுகளை பொன்னியால் மீற முடியாமல் அந்தக் காதலை மறுக்கிறார். ஆனால் பொன்னியை அடைய ஜெகன் போடும் திட்டமோ சிறிதுகூடத் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கவில்லை. அந்தத் திட்டம் நம்பத்தகுந்ததாகவோ, ஏற்றுக்கொள்ளும்படியாகவோ அமைக்கப்படவில்லை.   

கதை தொடர்பான அனுபவமோ புரிதலோ இல்லாமல் படத்தைக் கையாண்டிருப்பதால் படத்துடன் ஒன்றுவது சிரமமாக உள்ளது. அஞ்சலி கதாபாத்திரம் மட்டுமே படத்தின் சினிமாத்தனத்தை மீறி இயல்பாக உலவுகிறது. பாலசந்தரின் படங்களிலும் ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களிலும் பெண் கதாபாத்திரங்களிடம் காணப்பட்ட தெளிவு இந்தப் படத்தின் கதாபாத்திரங்களிடம் காணப்படவில்லை. படத்தின் பல காட்சிகளில் மழை பொழிகிறது. மழையில் நனையப் பெண்கள் விருப்பம் கொள்கிறார்கள், ஆனால் நனைவதே இல்லை. பெண்களின் சிக்கலுக்கு ஆண்களே காரணம் என்ற கருத்தியல் முன்வைக்கப்படுவது ஆண் பெண் உறவு குறித்த புரிதலின் போதாமையினாலேயே. இத்தகைய கதையைக் கையாளும் பக்கும் இன்னும் கார்த்திக் சுப்புராஜுக்கு கைவரவில்லை என்பதையே இப்படம் உணர்த்துகிறது.     

நண்பர் முரளியின் அடவி இதழில் ஆகஸ்டு 2016இல் வெளியானது.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்