இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், டிசம்பர் 30, 2014

பனிக்காலத்தில் ஒரு கூலிங் கிளாஸ்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் மிகச் சிறந்த திறமைசாலிகளில் ஒருவரான ரஸ்பின் பயங்கர உற்சாகத்தில் இருந்தார். சமீபத்தில் வெளியான அவருடைய கைக்காசு படம் சக்க போடு போடுது. அந்தப் படத்தின் ஒரிஜினலை அவர் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு ப்ளைட்ல போகும்போதுதான் பார்த்தார். செர்பியப் படமான அதை எப்படியும் தமிழில் பண்ணிரணும்னு அர்த்த ராத்திரியில் அவருக்குத் தோணுச்சு.

உடனே தன்னோட லேப்டாப்பத் திறந்து வச்சு, அந்தப் படத்த அப்படியே வரிக்கு வரி தமிழில் எழுதி அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ்ப் படத்தின் கதையை எழுதிமுடித்துவிட்டார். அவரது மனக் கண்ணில் படம் முடிந்தவுடன் போடும் எ ஃபில்ம் பை ரஸ்பின் என்னும் வாசகம் ஒளிர்ந்தது. ஒருமுறை உடலைச் சிலிர்த்துக்கொண்டார். கண்ணில் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை லேசாக அசைத்துச் சரிசெய்தார்.

படம் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட என்ஆர்ஐ சிலரை அமெரிக்காவில் பார்த்தார். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு துடிச்சிட்டிருந்த அவங்களுக்கு அந்தப் படத்தின் கதை ரொம்பப் பிடிச்சிப் போச்சு. கடைசிக் காட்சியில் மனித உணர்வூட்டும் மாத்திரைகளை வில்லன்கள் வாயில் திணிக்கும் காட்சியைப் பட்டை தீட்டியிருந்தார்.

என்ஆர்ஐகள், ரஸ்பினைத் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாத குறையாகக் கொண்டாடினாங்க. அதுல ஒருத்தர் ரஸ்பின்னின் முதல் படமான பைத்தியம் பிடிக்குதடி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வசனத்துடன் ஒப்புச்சார். அவர் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே ரஸ்பின் குறட்டைவிடத் தொடங்கிவிட்டார். ஆனால் ஆர்வம் காரணமாக அந்த ரசிகர் விடிய விடிய கதையைச் சொல்லி முடித்தபின்னர் உறங்கிவிட்டார்.

ரஸ்பின் தனியா இருக்கும்போது தன்னோட பழைய வாழ்க்கையை யோசித்துப் பார்ப்பார். வெகுளி வெள்ளச்சாமின்னு அவர எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. ஸ்கூலில் படிக்கும்போது ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் படிச்சு முடிச்சிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டபோது, ஜெராக்ஸ் கடை வைக்கப்போறதா வெள்ள சொன்னான். கூடப் படிச்சவங்க எல்லோரும் மாடியில இருந்து கீழ விழுந்து சிரிச்சாங்க. ஏன் அப்படிச் சொன்னோம்னு வெள்ளைக்கே தெரியல. ஏனோ தோணுச்சு சொன்னான். அவ்வளவுதான். அவன் எப்போதுமே அப்படித்தான் எதையாவது கோக்குமாக்கா சொல்வான். கேட்பவங்க எல்லாரும் அதுல ஏதோ அர்த்தம் இருக்குதுன்னு நினைச்சுக்குவாங்க. படம் பண்ணும்போதும் அப்படித்தான் ஏன் எதுக்குன்னு தெரியாம இஷ்டத்துக்கு எதையாவது எடுப்பான் அதுல அந்தக் கூறு இருக்கு இதுல இந்தக் கூறு இருக்குன்னு விமர்சகர்கள் பிச்சி மேய்வாங்க. ஆனா ரஸ்பின்னுக்குத் தெரிஞ்சதெல்லாம் கத்தரிக்கா கூறுதான்.

அவர் எடுத்த தெருநாயும் கருங்கல்லும் படம் தமிழ்நாட்டில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு எல்லா வேலையையும் அவர் பார்த்தார். போஸ்டர் ஒட்டினாரு, கவுண்டருல டிக்கெட் கொடுத்தார் இன்னும் என்னவெல்லாமோ பண்ணினாரு.

தெருநாய் மேல பாசம் வைத்து அதோட பிறந்தநாளை ஒரு கல்லறையில் கேக் வெட்டிக் கொண்டாடும் காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து அந்த நாயே கண்ணீர்விட்டதெனப் பத்திரிகைகள் புகழ்ந்தன. சுமார் அரைமணி நேரம் தேம்பித் தேம்பி தனது கதையை அந்த நாயிடம் சொல்லுவார் ரஸ்பின். நாயையும் சக தோழனாக நினைத்து தோழமை காட்டும் மனித நேயமான காட்சிக்கு எல்லா தியேட்டர்களிலும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது.

டைரக்டர் ஆகுறதுக்கு முன்னால, வெள்ளை ஒரு புத்தகக் கடையில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அங்க உள்ள புத்தகங்களை எல்லாம் ஒண்ணுவிடாம தொடச்சி வைக்கணும், அதுதான் அவரோட வேலை. புத்தகங்கள் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தும். பெரிய பெரிய ரஷ்ய இலக்கியங்களால் அவருக்கு ஆஸ்துமாவே வந்துவிட்டது. அதைத் தான் அவர் முதலில் அவரைப் பேட்டி எடுத்த செய்தியாளரிடம் சொன்னார். ரஷ்ய இலக்கியங்கள் என்னைப் பாதித்தன என்னும் தலைப்பில் அவர் பேட்டியை பேப்பரில் போட்டார். அன்றிலிருந்து ரஸ்பின்னுக்குப் பெரிய அறிஞர் அந்தஸ்து கிடைத்துவிட்டது.

தன்னை வித்தியாசமா காட்டிக்கொள்ள என்ன பண்ணனுன்னு வெள்ளை யோசித்தார். அவரோட நண்பன் கொடுத்த ஐடியா கறுப்புக் கண்ணாடி போட்டுக்கோ தமிழ்நாட்டுல பெரிய ஆளுங்க எல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டவங்கதான்னு உசுப்பேத்தினான். அன்றிலிருந்து ரஸ்பின் கறுப்புக் கண்ணாடியுடன் தான் எப்போதும் இருந்தார். உறங்கும் போதும், குளிக்கும்போதும் கூட அவர் அந்தக் கண்ணாடியைக் கழற்றுவதேயில்லை.

அதே போல் புரியாத மாதிரி எதையாவது சொல்லு. ஜனங்களுக்கு ஒன்னும் புரியாது ஆனா சூப்பராயிருக்குன்னு சொல்லிருவாங்கன்னான். உதாரணத்துக்கு நடிகர் டமால்ஹாசன் பேட்டி ரெண்டு மூண எடுத்துக் காண்பிச்சான். எல்லாமே ஒரே விஷயம்தான் ஆனால் எதுவுமே புரியாத மாதிரி கந்த கோலமா இருந்துச்சு. அதன் பின்னர் பேட்டிகளில் ரஸ்பின் பொளந்து கட்டுனார். 

தி இந்துவில் வெளியானது

திங்கள், டிசம்பர் 22, 2014

நீ எப்போதும் யங்கா?!

வெகுளி வெள்ளச்சாமிக்கு சந்தோஷமான வாரம் இது. அவனோட தலைவர் குஜினி காந்த் நடித்த யங்கா படம் ரிலீஸ் ஆகப் போகுது. பயங்கர உற்சாகமாயிட்டான் அவன். தலைவருக்கும் எழுபது வயது கிட்ட ஆயிருச்சு. ஆனாலும் இன்னும் டூயட், பஞ்ச் டயலாக்குன்னு சும்மா அதிரடியா களம் இறங்கியிருக்காரு. ஐந்தாறு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் குஜினி காந்த் நடிச்ச படம் வருதுங்கிறது அவனோட குதூகலத்துக்கு காரணம். ஸ்கூல் புக்குகளில் எல்லாம் உடல் மண்ணுக்கு உயிர் குஜினிக்கு என ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி வைப்பான். அவ்வளவு கிறுக்கு அவன்.
குஜினிகூட இந்தப் படத்துல நடிக்கிறது அவரோட பேத்தியின் க்ளாஸ் மேட். ஒருமுறை பேத்தியோட ஆண்டு விழாவுக்குப் போன குஜினிக்கு அந்தச் சிறுமியின் நடனம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டாரு அந்தப் பெண்ணோட ஒரு டூயட் பாடனும்னு. ஆனா அதுக்கு இப்பதான் நேரம் வாய்ச்சிருக்கு.

வயது அதிகமாயிட்டுதுன்னு ரசிகர்கள் ஏமாந்துறக் கூடாதுங்கிறதுல குஜினி உறுதியாயிருந்தார். அவரப் பொறுத்தவரை வெள்ளச்சாமி போன்ற ரசிகர்களின் சந்தோஷம்தான் முக்கியம். அதுக்காக எத்தனை படம் வேண்டுமானாலும் அவர் நடிப்பார். ரசிகர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை நல்ல விஷயங்களையும் தனது படங்களின் மூலம் கொடுப்பது தனது கடமை என அவர் நினைக்கிறார். சொத்தை எல்லாம் எழுதி வைப்பார், நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பார். கல்வி நிறுவனங்கள் தொடங்குவார். இன்னும் என்னென்ன உண்டோ அதையெல்லாம் படங்களில் செய்துவிடுவார் குஜினி காந்த். வெள்ளைக்கு அதனால் அவர்மீது பயங்கர மரியாதை.

எல்லோரும் குத்துப்பாட்டு கும்மாங்குத்துன்னு படம் எடுப்பாங்க. ஆனால் குஜினி காந்தின் படத்தைக் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம். ஆபாசமே இருக்காது. ஒருமுறை குஜினி காந்தின் மேக்கப் தவிர படத்தில் வேறு ஆபாசமே இல்லை என கோகோ படத்தின் விமர்சனத்தில் ஒரு நாளிதழ் தெரியாத்தனமாக எழுதிவிட்டது. அவ்வளவுதான் குஜினியின் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதிகளைக் கொளுத்தினார்கள். ஆனால் தனது அடுத்த படத்தின் விளம்பரங்கள் முழுவதையும் அந்தப் பத்திரிகைக்கே வழங்கினார் குஜினி காந்த். அந்த அளவு எதிரிகளையும் நேசிக்கும் இயல்பு கொண்டவர் அவர். அதனால்தான் வெள்ளை போன்ற ரசிகர்களின் மனதில் கடவுளாக வாழ்கிறார்.

யங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குஜினி, இவ்வளவு சின்ன வயதுப் பெண்ணோட டூயட் பாடும் தண்டனையைக் கடவுள் தனக்குத் தந்துவிட்டானே என்று வருந்தினார். வெள்ளை தன்னையும் அறியாமல் கண் கலங்கிட்டான். கடவுள் தனக்குப் பிடிக்காதவங்களுக்கு நிறைய பணம் கொடுத்து கஷ்டப்படுத்துவார். என்னைப் பாருங்க எனது பணத்தால எனக்குச் சந்தோஷமே இல்ல. நிம்மதிங்கிறதே போயிருச்சு. அடிக்கடி ஏதாவது சாமியாரைத் தேடி ஓடுகிறேன். இந்த நிலைமை என்னோட ரசிகர்களுக்கு வர விடமாட்டேன்.

அதனால அவங்க எல்லோரும் ஓட்டாண்டி ஆகுற வரைக்கும் நடிச்சுக்கிட்டே இருப்பேன். அதன் மூலம் எனக்குப் பணம் அதிகமாகச் சேர்ந்து நிம்மதி போகும். ஆனால் காசை எல்லாம் இழந்த என்னோட ரசிகர்கள் இமயமலை துறவிகள் போல வாழ்வின் மகிழ்ச்சியை அடைவார்கள் என்றும் பேசினார். இந்த அளவு தன்னோட ரசிகர்கள் மேல் உயிரா இருக்குற இன்னொரு நடிகர் பிறந்துதான் வரணும்னு வெள்ள நினைச்சான்.

இனிமே ‘யங்கா யங்கா நீ எப்போதும் யங்கா கிங்கா கிங்கா’ இங்க இன்னொருத்தன் கிங்கா... ங்கிற பாட்டு பொறந்த கதையை பாடலாசிரியர் தங்கதகரம் ‘சந்தோஷ ரொக்கம்’ பத்திரிகையில் விரிவாப் பேசியிருந்தாரு. சூரியனைப் பத்தி எழுதுறதுக்கு நட்சத்திரங்களிடையே சொற்களைத் தேடி இரவு முழுவதும் காத்திருந்தாகவும் பொழுது புலர்ந்த வேளையில் வார்த்தைகளும் வசப்பட்டதாகவும் அதற்கு குஜினியின் ஆன்மிக ஷக்தியே காரணம் என்றும் புளகாங்கிதம் அடைந்திருந்தார்.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி மீடியாக்கள் ஏகப்பட்டதை எழுதித் தள்ளின. ஒரு புக் விடாம எல்லாத்தையும் வெள்ளை வாங்கிப் படிச்சான். தலைவரோட தோல் சுருக்கம் தெரியக் கூடாதுங்கிறதுக்காக ஸ்பெஷலா அமெரிக்காவுல இருந்து வரவழைச்ச அயர்ன் பாக்ஸ் மூலம் தோல் சுருக்கத்தை எல்லாம் நேர்த்தியாக்கியிருக்காங்க. கறுப்பு மயிர்களை எல்லாம் கனடாவிலிருந்து கொண்டுவந்திருக்காங்க. கடைவாயில் ஒரு பிளாட்டினப் பல் பொருத்தியதால் அது தெரியும்படி வாயை அகற்றி குஜினி சிரிக்கும் சிரிப்பு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. 

ஓபனிங் ஷோ டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய். ஆனால் எப்படியும் படத்தைப் பாத்திரணுங்கிறதுல வெள்ளை குறியாய் இருந்தான். கையில் காசில்லை. வீட்டில் அவசரத்துக்கு அடகு வைக்க தங்க நகைகூட இல்லையே என வருத்தம் வெள்ளைக்கு. அப்போது ரத்த தானம் தேவை என்ற எஸ்.எம்.எஸ். அவனுக்கு வந்தது. உடனடியாக ரத்தத்தைக் கொடுத்துப் பணத்தைத் தேற்றினான் வெள்ளை. டிக்கெட்டையும் வாங்கிவிட்டான். இரவு உறங்கியபோது வந்த கனவிலேயே படத்தைப் பார்த்துவிட்டான். ரசிகர்களுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் தலைவன் படத்தை ரத்த தானம் செய்து பார்க்கப் போவதில் வெள்ளைக்கு அளவில்லாத சந்தோஷம்.

தி இந்துவில் வெளியானது

திங்கள், டிசம்பர் 15, 2014

அழகு நடிகை அஸ்குவின் அரசியல்

 

நடிகை அஸ்கு தேசியக் கட்சியில் சேர்ந்துட்டதா அரசல் புரசலாப் பேசிக்கிட்டாங்க. அப்ப வெகுளி வெள்ளச்சாமி சும்மா சொல்றாங்கன்னு விட்டுட்டான். ஏன்னா, ஏற்கனவே இப்படித்தான் நடிகர் பைக்தின் அந்தக் கட்சியில் சேர்ந்துட்டாருன்னு சொன்னாங்க. ஆனா அவர் ஞாபக மறதியில் தன்னோட கார அவர் கட்சி ஆபீஸுக்கு விடுறதுக்குப் பதிலா தேசியக் கட்சி ஆபீஸுக்கு விட்டுட்டாராம். இது தெரியாம அவரு கட்சியில சேர்ந்துட்டாருன்னு தலைவரு சொல்ல பெரிய பரபரப்பாயிருச்சு. 

யாருமே இல்லாத தெருவுலகூட எதாவது நடந்தா அத நியூஸாக்கிற மாட்டமான்னு துடிக்கிற பத்திரிகையாளர்கள் எப்பவும் குவிஞ்சிகிடப்பாங்களே. அவங்களுக்கு யாராவது தும்மிட்டா போதும் டெங்கு பரவும் அபாயம்னு தலைப்பையே யோசிக்க ஆரம்பிச்சு டைப்படிக்கத் தொடங்கிருவாங்களே. நடிகர் பைக்தின் மேட்டர விட்டுவைப்பாங்களா! இதெல்லாம் தெரிஞ்ச வெள்ளை, நடிகை அஸ்கு அந்தக் கட்சியில சேர்ந்திருக்க மாட்டாங்கன்னு நினைச்சான்.

ஆனா இப்ப பேப்பரிலேயே கொட்ட எழுத்துல போட்டுட்டாங்க. 1980-ல ஒரு படத்துல மட்டும் நடிச்ச நடிகை இப்ப என்ன பண்றாங்கங்கிற அளவுக்கு நியூஸத் துருவி துருவி தேடித் தேடி போடுற பத்திரிகைகள் இதுல பொய் சொல்லாதுன்னு வெகுளிக்குத் தோணுச்சு. அதனால நடிகை அஸ்கு கட்சியில சேர்ந்த விஷயம் உண்மையாத்தான் இருக்கும். அஸ்குன்னா உயிர் வெள்ளைக்கு. அஸ்கு படம் ஒன்னுவிடாம எல்லாத்தையும் தியேட்டருல போய் பாத்திருக்கான் வெள்ள. 

ஒருமுறை அவனோட தலைக்குழந்தை டைபாய்டுல துடிச்சிக்கிட்டிருந்த அன்னைக்குன்னு பார்த்து அஸ்கு நடிச்ச தந்தைமகள் படம் ரிலீஸாச்சு. வெள்ளயால படம் பார்க்காம இருக்க முடியல. நரம்பெல்லாம் விறுவிறுன்னு இருந்துச்சு. கூட ரெண்டு மாத்திரையைக் குழந்தைக்குக் குடுத்துட்டுப் படம் பார்க்கப் போயிட்டான். அந்த அளவு அவன் அஸ்கு மேல உயிரா இருக்குறான். 

ஏற்கனவே அஸ்கு மஞ்ச கட்சியில இருந்தாங்க. ஆனா அந்தக் கட்சியில ஏற்கனவே நிறைய தலைவர்கள் இருந்ததால அங்க இருந்தா எப்படி அஸ்கு மேல வர முடியும்னு வெள்ளைக்கு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் அவங்க பிரச்சாரத்துக்கு வந்ததால மஞ்சக் கட்சிக்கே ஓட்டுப் போட்டான். அஸ்கு முதலமைச்சராயிட்டா எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்குவாங்க. நாடும் நல்லா இருக்கும்னு வெள்ளைக்குத் தோணுச்சு. இப்ப தேசிய கட்சிக்கு வந்ததால தமிழ்நாட்டுல அந்தக் கட்சி ஜெயிச்சா அஸ்குதான் முதல்வருன்னு நினைச்சு வெள்ளை குஷியாயிட்டான். அந்தக் கட்சியில் தேர்தலில் நிக்கிறதுக்கே ஆட்களை கூகுளில்தான் தேட வேண்டியதிருக்கும். தேர்தல் அறிவிச்ச உடனே வேட்பாளர் தேர்ந்தெடுக்குறதுக்குள்ளயே கட்சிக்கு தாவு தீர்ந்துரும். வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் நாள்களில் எல்லா கட்சி அலுவலகங்களும் ‘ஜே ஜே’ன்னு இருக்கும். தேசியக் கட்சித் தலைமை அலுவலகமோ எழவு வீடு மாதிரி வெறிச்சோடிக் கிடக்கும். எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் கிடைச்சுட்டாலே போதும் மாபெரும் வெற்றிதான். அப்படிப்பட்ட ஒரு கட்சியில் அஸ்கு சேர்ந்ததால அவரு ஈஸியா தலைமைப் பொறுப்புக்கு வந்துரலாம்னு கணக்குப் போட்டான் வெள்ளை. 

தேசிய கட்சியின் கொள்கையான எளிமையை வாழ்க்கையில கடைப்பிடிக்கிறவர் நடிகை அஸ்கு. அவரு பச்சைக் கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியில ஷோ ஒன்னு பண்ணினாரு. அதுல அவரு எவ்வளவு குறைந்த துணியால ரவிக்கை தைச்சுப் போட முடியுமோ அவ்வளவு குறைஞ்ச துணியால ரவிக்கை தைச்சுப் போட்டிருந்தாரு. இதுலயே இவ்வளவு சிக்கனம் காமிக்கிறவரு ஆட்சிக்கு வந்தா இருக்குற நிதியை வச்சு மக்களுக்குக் கண்டிப்பா நல்லது பண்ண முடியும்னு வெள்ளை நம்பினான். 

ஒரு பொருளாதார நிபுணருக்கு இருக்க வேண்டிய பண்பு இதுன்னு ஒரு அறிஞர்கூட சொன்னாரு. அதைக்கூட நடிகை அஸ்கு கத்துவச்சிருந்தார். ஆனா இதைப் புரிஞ்சிக்காம அவர விமர்சிக்கிறாங்களேன்னு வெள்ளைக்கு வருத்தமா இருக்கும். ஆனா அவரு எப்படி டிஸைன் டிஸைனா ரவிக்க போடுறாருன்னுப் பார்க்கவே நிறைய தாய்க்குலங்கள் அந்த ஷோவப் பாத்தாங்க. அந்த அளவுக்கு மக்கள் ரசனையைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கும் அஸ்கு கண்டிப்பா அரசியலில் ஜெயிப்பார்னு வெள்ளைக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை. 

சோர்ந்து கிடக்கும் கட்சிய உசுப்பேத்துவேன்னு அஸ்கு அறிக்கை விட்டாரு. அதைக்கூட கிண்டல் பண்ணி இவரு என்ன லேகிய வைத்தியரான்னு எதிர்க் கட்சிக்காரங்க வாட்ஸ் அப்ல மெஸேஜ் பாஸ் பண்ணினாங்க. ஒரு பெண்மணியை எப்படி நடத்த வேண்டுங்கிற அடிப்படை நாகரிகம்கூட இல்லாதவங்களா இருக்காங்களேன்னு வெள்ளைக்குக் கஷ்டமாப்போச்சு. 

உண்மையில் தேசிய கட்சி தேர்தல் வெற்றிபெற ஒரே அஸ்திரம் அஸ்குதான். அதுல வெள்ளைக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஏன்னா, தேசியக் கட்சியின் முக்கிய பிரபலம் லாருக் எந்த மாநிலத்துக்குப் பிரச்சாரத்துக்குப் போனாலும் அந்த மாநிலத்தில் கட்சி அதலபாதாளத்துக்குப் போயிடுது. ஜெயிக்குற மாதிரி தெரியுற மாநிலங்களில்கூட அவர் போயிட்டா போதும் அப்படி ஒரு அலை அடிச்சு கட்சிய காணாமல் பண்ணிருது. இந்த நிலைமைல அஸ்கு போன்ற துணிச்சலான ஒருத்தரத் தவிர வேறு யாரால கட்சிய காப்பாற்ற முடியும்? காலம் பதில் சொல்லும்னு ஒரு வேதாந்தி மாதிரி சொல்லிகிட்டே திரியுறான் வெள்ள. 

தி இந்துவில் வெளியானது

திங்கள், டிசம்பர் 01, 2014

ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம்

முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த, 27,000 அடிகள் நீளம் கொண்ட அந்தப் படத்தில் 39 காட்சிகளே இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை அனைத்தும் தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டவை, முன்னுதாரணமற்றவை. 


 முதன்மைக் கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகிய மூவரும் நடித்திருந்த போதும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் படத்தின் பிரதான தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே புதுமுகங்கள்.அந்தப் படக் குழுவினருக்குத் தொடர்ந்து படங்கள் கிடைத்திருந்தால் தமிழ் திரைப்பட வரலாற்றில் பெயர் சொல்லத்தக்கப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். 

திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்த்திருக்கும் தமிழ்ப் படமாக 'அவள் அப்படித்தான்' (1978) இருக்கும். அது வெளியான காலத்தில் மட்டுமல்ல இப்போது பார்த்தாலும்கூட அப்படி ஒரு கதையைக் கையாளும் துணிச்சலோ பக்குவமோ சமூகப் பார்வையோ இப்போதைய இளம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. 

படித்த, மத்திய தர வர்க்க இளைஞர்களுக்கும் சமூகத்திற்குமிடையேயான குழப்பமான உறவை, சமூகத்துடன் அவர்களுக்கு ஏற்படும் முரணை, ஆண் - பெண் உறவில் ஏற்படும் அகச் சிக்கலை கச்சிதமாகவும் நுட்பமாகவும் பேசிய படம் அது. பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற சிந்தனைகளை முன்னெடுத்த தமிழ்ப் படங்களில் முதன்மையான படமென அதைச் சுட்டலாம். 

திரைக்கதைகளுக்கான இலக்கணங்களாகத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த மரபுகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுப் படார் படாரென உண்மைகளைப் போட்டுடைக்கும் வசனங்கள், எண்ணிக்கையில் அதிகமான அண்மைக் காட்சிகள் எனத் புதிய காட்சிப்படுத்துதலைக் கொண்டிருந்த படம் அவள் அப்படித்தான். 



மத்திய தரப் பெண்களின் மனப் போராட்டத்தை, வாழ்வியல் சிக்கலைப் பாலசந்தர் அதிகமாகக் கையாண்டிருந்தாலும் சினிமாவின் அழகியல் கூறுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் ருத்ரய்யாவின் 'அவள் அப்படித்தான்' முன்னணிக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. நமது சமூகத்தின், உறவுகளின், ஊடகத்தின் போலித் தனங்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி உறித்துப் போட்ட துணிச்சல்காரர் அப்படத்தை இயக்கிய ருத்ரய்யா. 

சேலம் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் அவர். சினிமா கனவுகள் அவரைத் தூங்கவிடாமல் துரத்தியதால் அவர், சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை இயக்கம் பிரிவில் சேர்ந்து படித்தார். படித்து முடித்த பின்னர் குமார் ஆர்ட்ஸ் என்னும் பெயரில் சினிமா நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்னும் கதையைப் படமாக்க முடிவு செய்திருந்தார். நடிகர் கமல் ஹாசன் நடிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. தன் கதையைப் படமாக்க தி. ஜானகிராமன் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அப்படக் கனவு கலைந்துபோனது. 

அடுத்து ருத்ரய்யாவின் மனதைத் துளைத்தெடுத்த கதையே அவள் அப்படித்தான். அனந்துவின் சீரிய ஒத்துழைப்பில் எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் கே.ராஜேஷ்வர், ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் அப்படத்தை ருத்ரய்யா இயக்கினார். படமும் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளியான ஒருசில நாட்களின் இப்படத்தைப் பார்த்த புகழ்பெற்ற இயக்குநர் மிருணாள் சென் படத்தின் சிறப்பைப் பாராட்டிப் பேட்டி கொடுத்தார். அதன் பின்னர் படம் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஓடியது. 


வசூலில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கூட இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மறுக்க முடியாத படமாக நிலைபெற்றுவிட்டது என்பது இயக்குநர் ருத்ரய்யாவுக்குக் கிடைத்த உண்மையான வெற்றியே. 1980-ல் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்த கிராமத்து அத்தியாயம் அவரது இரண்டாவது படமும் இறுதிப் படமுமானது. தமிழ்த் திரையில் ருத்ரய்யாவுக்குக் கிடைத்தது ஓர் அத்தியாயம் மட்டும்தான் என்பது கசப்பான உண்மை. ஆனால் அந்த ஓர் அத்தியாயத்தை ஒரு வரலாறாக மாற்றிய பெருமையுடன் அவர் 18.11.2014 அன்று மறைந்துவிட்டார். 

தி இந்து இணையதளத்தில் வெளியானது

வெள்ளி, நவம்பர் 28, 2014

ஆறே மாதத்தில் அறிவாளி


எல்லாரும் தன்னை முட்டாள்னு நினைக்கிறாங்களோன்னு வெகுளி வெள்ளச்சாமிக்கு மைல்டா ஒரு சந்தேகம் வந்துச்சு. நாமளும் அறிவாளியாகிறனும்னு முடிவுபண்ணிட்டான். வீட்டில் அவனோட மனைவி பார்க்குற சீரியல்ல ஆறு மாசத்துல கதாநாயகன் அறிவாளியாகுறான்.

தமிழே தட்டுத் தடுமாறி பேசுற ஆளு ஆங்கிலத்துல பொளந்துகட்டுறான். இன்னொரு சீரியலில் ஒரு பெண்ணு கல்யாணம் ஆன பின்னாடி ஆனா ஆவன்னால்லாம் கத்துக்குறா. பி.எச்டி. படிச்சிருக்கும் தன்னோட பொண்டாட்டி அத விழுந்து விழுந்து பார்க்குறா. உச்சு கொட்டுறா. அப்படி இருக்கும்போது தான் ஏன் அறிவாளி ஆகக் கூடாதுன்னு நினைச்சான். போதாக் குறைக்கு அறிவாளின்னு சொல்லப்படுற ஆள்களோட பேச்சுகள பேப்பரில் படிச்சுப் பார்க்கும்போது அவனைவிட அவங்கல்லாம் மோசமா பேசுறதுபோலதான் அவனுக்குத் தெரிஞ்சுது. அதனால் அறிவாளி ஆவது ஈஸியான வேலையாத்தான் இருக்கும்னு முடிவுக்கு வந்துட்டான். 

அவனோட நண்பர் வீராசாமிட்ட போயி ஆலோசனை கேட்டான். வெள்ளயப் பொறுத்தவரை வீரா வற்றாத அறிவு ஆறு. எதிரில் ஆளே இல்லாட்டிக்கூட அலைகடலென மக்கள் திரண்டிருப்பது போல நினைத்துக்கொண்டு 26 எழுத்துக்களக் கொண்ட ஆங்கிலத்துல பிச்சு ஒதறுவான். தமிழ்னா கேட்கவே வேண்டாம் 247 எழுத்தாச்சா. கொளுத்திருவான். அவன் பேச்சு நடக்கிற இடங்களில் ஃபயர் சர்வீஸ் வண்டிய நிப்பாட்டுற அளவுக்குப் பேச்சுல பொறி பறக்கும்னு பேசிக்குவாங்க. 

அப்படி ஒரு ஆவேசமும் ஆற்றலும் இருக்கும் பேச்சுல. ஒரு டம்ளர் தண்ணி வேணும்னாகூட முல்லை பெரியாறு, காவிரின்னு சமூக விஷயங்களத் தொட்டுத் தான் தொடங்குவான். உலக வரலாறெல்லாம் அவனுக்கு அத்துப்படி. தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட ரோமாபுரியின் சரித்திரத்தை ரத்தம் சொட்டச் சொட்ட சொல்லுவான் பாவிப்பய. தாய்ப்பாலு குடிச்சு வளராம வரலாறையே வாரி வாரிக் குடிச்சே வளர்ந்திருப்பான்போல. அப்படியொரு வரலாற்று ஞானம் வீராவுக்கு. தன்னோட அறிவ நம்பி ஒரு எலக்‌ஷனில் வார்டு மெம்பரா போட்டிபோட்டான். பாவம் ஒரு ஓட்டுகூட அவனால வாங்க முடியல. அவனோட ஓட்டுச் சீட்ட பெட்டியில போடுற சமயத்துல, உள்ளுக்குள்ள வந்த டிவிக்காரங்கட்ட பேசிட்டே அத கையோட எடுத்துட்டு வந்துட்டான். 

வீராவிடம் கேட்டதுக்கு அவன், தன்னைப் புத்தகங்கள்தான் இந்தக் கதிக்கு ஆளாக்குச்சுன்னு சொன்னான். அதனால நல்ல புத்தகத்தப் படிச்சா போதும் நினைத்தது நடக்கும்னான். உனக்கு ஏண்டா நினைச்சது நடக்கலன்னு ஒரு சின்ன கேள்வி வெள்ளைக்கு வந்துச்சு. ஆனா டைமிங் சரியில்ல, கேட்க வேண்டாம்னுட்டு கம்முன்னு இருந்துட்டான். முதலில் ஒரு புத்தகக் கடைக்குப் போனான் வெள்ளை. 

“ஆறு மாசத்துல அமெரிக்க அதிபர் ஆவது எப்படி?” ஒபாமாவே வாசித்துப் பின்பற்றிய தமிழ் நூல்ங்கிற புத்தகத்துக்குப் பின்னால் முப்பதே நாள்களில் மூன்று மொழிகள் என்று ஒரு புத்தகம் இருந்துச்சு. அந்த மொழிகள்ல இங்கிலிஷும் ஒண்ணு. வெள்ளைக்கு ஆங்கிலம் கொஞ்சம் வீக்குதான் ஆனா கணக்கு ஸ்ட்ராங். முப்பது நாளில் மூன்று மொழின்னா ஒரு மொழிக்குப் பத்து நாள். ஆக பத்தே நாளில் இங்கிலிஷ் படிச்சுட்டு வீராசாமி மாதிரி நரம்பு வெடிக்க ஆங்கிலத்தில் பேசணும்னு துடிச்சான். 

நாலஞ்சு புத்தகத்த வாங்கிட்டு வந்துட்டான். ஒரு தடவை படிக்கிறதவிட நாலஞ்சு தடவ படிக்கிறது நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கல்லா? அதனால நாலஞ்சு தடவ படிக்கணுங்கிற ஆசையிலதான் அத்தனையையும் வாங்குனான். ஒரே புத்தகத்த திருப்பி திருப்பிப் படிக்கிறதவிட வேற வேற புத்தகத்தை படிக்கிறது நல்லதுங்கிறதால அப்படி ஒரு ஐடியா பண்ணினான். எல்லாப் புத்தகத்தையும் விடிய விடிய படிச்சான். ஆனாலும் படிக்கிற வெறி அவனுக்கு அடங்கவே இல்ல. முழுக்க படிச்சு முடிச்ச உடனே புத்தகத்தை கரைச்சே குடிச்சான். முதலில் கொஞ்சம் குமட்டுச்சு. ஆனா அறிவாளி ஆகணும்னா சில கஷ்டம் இருக்கத்தானே செய்யும்னு, தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கிட்டான். 

உள்ளுக்குள்ள குறுகுறுன்னுதான் இருந்துச்சு. திடீர்னு வாந்தி வர்ற மாதிரியிருந்துச்சு. குபுக்னு வாந்தியே எடுத்துட்டான். ஆனா வந்து விழுந்ததெல்லாம் இங்கிலிஷ் லெட்டர்ஸா இருந்துச்சு. தனக்குள்ள ஆங்கிலம் பரவியிருச்சுங்கிற சந்தோஷத்துல தலை கால் புரியாம ஆடினான். வீட்டுக் கூரை, நடு ரோட்ல, பஸ்ஸுக்கு முன்னாலன்னு எங்க எங்கயோ சந்தோஷமா ஆடுனான். 

அறிவாளி ஆயிட்டோம்… இனி டிவியில பேசலாம், பத்திரிகைல கருத்து சொல்லலாம், இப்படியெல்லாம் நினைக்கும்போதே வெள்ளைக்கு பூரிப்பா இருந்துச்சு. ஆனா அதுக்கும் அறிவுக்கும் என்னடா சம்பந்தம்னு அவனோட நண்பன் ஒருத்தன் வெள்ளைட்ட கேட்டான். அப்படியா, அப்பன்னா இந்த அறிவ வச்சுட்டு என்ன பண்றதுன்னு வெகுளியா கேட்டான் வெள்ள. கேன்சர் வந்தாக்கூட அறுவை சிகிச்சை பண்ணி தூக்கிரலாம். ஆனா இத வச்சுக்கிட்டு ஒரே ரோதனைதான்னு சொல்லிட்டுப் போயிட்டான் அவனோட ஃப்ரண்ட். வெள்ளைக்குப் பயமா போயிருச்சு. தன்னோட டிரஸ் அழுக்கா இருக்கிற மாதிரி அசிங்கமா தோணுச்சு. 

முன்னால இப்படி எல்லாம் யோசிச்சதே இல்லயே. அறிவ எப்படியும் போக்குறதுக்கு என்ன பண்ணலாம்னு நியூஸ் சேனலில் எடிட்டரா இருக்கும் ஃப்ரண்டுட்ட கேட்டான். பேசாம என்னைப் போல் டிவியில சேர்ந்துரு, தானா சரியாயிரும்னு சொன்னான். அது நல்ல யோசனைன்னு ஒரு டிவி சேனலுக்கு இண்டர்வியூக்குப் போயிருக்கான் வெள்ளை. 

தி இந்துவில்  வெளியானது.

வெள்ளி, நவம்பர் 21, 2014

சுத்தமான விளம்பரம்


இன்னிக்குத் தன்னோட தலைவர் தாமரை காந்தின் பொறந்தநாள். அதைக் கொண்டாடத் தயாராயிட்டான் வெகுளி வெள்ளச்சாமி. வழக்கமா அவரு பொறந்தநாள் சமயத்தில் வடக்க எங்கயோ இருக்குற ஒரு சாமியாரப் பார்க்கப் போயிருவாரு. ஒருமுறை அப்படி இமய மலையின் அடிவாரத்தில் தாமரை காந்த் உட்கார்ந்திருந்தபோது, அவரு யாருன்னு தெரியாம யாத்ரீகர் ஒருவர் பிச்சைக்காரர்னு நினைத்து அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டுட்டாராம். ஆனா தாமரை காந்த் தங்கமானவர். கோபமே படல. அந்த நாணயத்தையும் எடுத்துத் தன்னோட பாக்கெட்டுல போட்டுக்கிட்டாராம். பத்திரிகையில எழுதியிருந்தாங்க.

அந்த அளவு அன்பும் இரக்கமும் பிறர் மீது அக்கறையும் கொண்ட தனது தலைவரைப் பார்க்க ஒவ்வொரு வருஷமும் அவரு வீட்டுல போயி காத்துக் கிடப்பான் வெள்ள. ஆனா அவன நாயி மாதிரி அடிச்சு விரட்டிருவாங்க தலைவர் வீட்டுக் காவலாளிங்க. அன்பான தன்னோட தலைவர் இரக்கப்பட்டு இவங்களுக்கு வேலை கொடுத்திருப்பார். ஆனா இவங்க இப்படி அன்பே இல்லாம நடந்துக்கிறாங்க, தலைவரப் பாக்கும்போது அவர்ட்ட சொல்லனும்னு நினைச்சுக்குவான். ஆனா ஒரு தடவைகூட அவரைப் பார்க்க முடியல. 

இந்தத் தடவை அவரு பிறந்தநாளுக்கு வெள்ளயோட தெருவைக் கூட்ட வருவார்னு சொன்னாங்க. எப்போதும் பளிச்சுன்னு சுத்தமா இருக்குற தன்னோட தெருவத் தலைவர் ஏன் பெருக்கணும்னு வெள்ள நெனச்சான். அழுக்கான மனிதர்கள் அழுக்குத் தெருவச் சுத்தப்படுத்தும்போது சுத்தமான தலைவர் சுத்தமான தெருவத்தானே சுத்தம் பண்ண முடியும்னு அவனுக்குத் தோணுச்சு. எவ்வளவு லாஜிக்கா யோசிக்கிறோம்னு வெள்ள தானா சிரிச்சுக்கிட்டான். தலைவர் எதையும் சிறப்பா செய்வார்னு புத்தகத்துல படிச்சிருக்கான். 

இன்னக்கி தெருவச் சுத்தப்படுத்திட்டுச் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்குறதுக்குக்கூட ஏகப்பட்ட தடவ ஒத்திகை பார்த்தாராம். துணை நடிகர்கள் நான்கைந்து பேரைக் கூட்டிட்டு வந்து ஒத்திகை பார்த்திருக்காரு. அதை அப்படியே படம்பிடித்து எடிட் பண்ணி தன்னோட ஆபீஸ்ல இருக்குற தியேட்டர்ல போட்டுப் பார்த்து, அது ஓகே ஆன பிறகுதான் அவருக்குத் திருப்தி ஏற்பட்டுச்சாம். அதுக்கான செலவை அவரது புதுப் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏத்துக்கிட்டார். 

அந்த ஒத்திகைக்கே பத்து லட்சம் செலவாச்சாம். ஒத்திகையின்போது கவனமாப் பேசிட்டிருந்த தாமரை உடன் தலையாட்ட வேண்டிய நபர் ஒருமுறை தலையாட்டத் தவறியதை நுட்பமாகக் கவனிச்சுக் கண்டிச்சாராம். அந்த அளவுக்குத் தலைவருக்கு பெர்பெக்‌ஷன் மேல காதல். மனிதர் உணர்ந்துகொள்ள அது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது, புனிதமானது. 

தன்னோட தலைவர் பார்க்காத ஒலகப் படமே இல்லங்கிறது வெள்ளயின் அசைக்க முடியாத நம்பிக்கை. தான் பார்த்தது மட்டும் போதாது தன்னோட ரசிகர்களும் அதைப் பார்க்கணும். ஆனா அவங்களுக்குத் தமிழ் மட்டும்தானே தெரியும். அதனால் தனக்குப் பிடிச்ச படத்தை எல்லாம் பட்டியல் போட்டு ஒண்ணொன்னா தமிழில் எடுத்துச் சேவை செஞ்சுகிட்டிருந்தார். அவரோட நல்ல உள்ளத்தைப் புரிஞ்சிக்காம அவர ‘காப்பிகளின் தலைவர்’னு சிலர் கிண்டல் பண்றாங்களேன்னு வெள்ளைக்கு வேதனையா இருக்கும். தலைவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாருன்னு அறிவிச்சாங்க. 

அப்போது பள பளன்னு ஒரு புது கார் வந்தது. தலைவரோட சொந்த காரு அது தூரத்துல வரும்போது வெள்ள பார்த்துட்டான். தலைவர் இறங்கின உடனே தன்னோட கையில் இருந்த பூக்களை அவர் மீது போடணும்னு தயாரானான். கூட்டத்தினரை முண்டியடித்துக்கொண்டு முன் வரிசைக்கு வந்தான். கார் வந்து நின்றதும் அதிலிருந்து நான்கைந்து பேர் குப்பை நிரம்பி வழியும் கூடையோடு இறங்கினார்கள். 

எல்லோரும் அதை அழகாகத் தெருவெங்கும் கொட்டினார்கள். சுத்தமான அந்தத் தெருவைக் கொஞ்ச நேரத்தில் அசுத்தமாக்கிட்டாங்க. அனேகமா இயக்குநர் தயிராவின் பட்டறையில் பட்டம் தீட்டப்பட்ட வைரங்களா இருப்பாங்கபோல. கொஞ்ச நேரத்துல அந்த இடத்தையே குப்பை மேடா ஆக்கிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல தலைவர் வந்தாரு. கையில் அழகாக தொடப்பத்த ஏந்தினாரு. வாழ்க்க பூராவும் தெருவையே பெருக்குபவர் போலவே, அப்படியொரு செய்நேர்த்தியுடன் தொடப்பத்த ஏந்தியிருந்தாரு. தெருவில் கிடந்த சிறு தூசைக்கூட அவரு தொடப்பம் தொடாமலே அந்தத் தெரு முழுக்கக் கூட்டி சுத்தம் செஞ்ச எஃபக்ட தன்னோட பாடி லாங்குவேஜ்லயே கொடுத்தாரு. அவருடைய உதவியாளர் ஆப்பிள் ஜூஸக் கொண்டுவந்து நீட்டினாங்க. இது என்னோட வியர்வைக்கு இல்ல உங்களோட உழைப்புக்குக் கிடைத்த மரியாதைன்னு அழகுத் தமிழில் சொல்லிட்டு அவரே குடிச்சாரு. ரசிகர்களுக்கெல்லாம் வயிறு குளிர்ந்திருச்சு. 

அடுத்ததா செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தாங்க. கையில் மைக்க பிடிச்சாரு. தன்னோட அரசியல் பிரவேசம் பற்றி அதிரடியாப் பேசினாரு. அநேகமா வரவிருக்கும் தன்னோட படத்தில் அரசியல் கருத்துகள் இருக்கும்ங்கிறத ரொம்ப சூசகமாச் சொன்னாரு. ஆனா அரசியலுக்குத் தான் வருவதா, வேண்டாமாங்கிறத இங்க கேட்டு முடிவு பண்ணுவேன்னு நெஞ்சுல கையை வச்சாரு. சட்டைப் பைக்குள்ள அவருடைய மனைவி போட்டோ தெரிஞ்சுது. பெண்களை அவர் எவ்வளவு மதிக்குறாருன்னு வெள்ளைக்குப் புல்லரிச்சுப் போச்சு. 

தி இந்துவில் வெளியானது.

வெள்ளி, நவம்பர் 14, 2014

இதுதாண்டா நடிப்பு

வெகுளி வெள்ளச்சாமிக்குத் திடீர்னு சினிமா இயக்கணும்னு ஆசை வந்துருச்சு. ஃபிலிம் சுருளுக்குள்ள நடிகர்கள் எல்லாம் எப்படி போய் உக்காந்துக்குறாங்க, எப்படி சண்டை எல்லாம் போடுறாங்கன்னு ஆச்சரியப்பட்டு ஃபிலிம் ரோலைக் கழற்றி அப்படி இப்படின்னு திருப்பிப் பார்க்குற வெள்ளைக்கு, இப்படி ஓர் ஆசை ஏன் வந்துச்சுன்னே தெரியல. ஆனா, அதுக்கு முன்னால நிறைய தமிழ்ப் படமா பார்த்தான். அதைப் பார்த்ததுக்கு அப்புறமா படம் எடுக்குற அறிவு தனக்கு நிறைய இருக்குதுன்னு அவனுக்கு ஒரு நம்பிக்க வந்துருச்சுபோல.

அவன் படமெடுக்கப்போறான்னு தெரிஞ்சு உடனே அவனைச் சுத்தி ஐந்தாறு அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸும் கூடீட்டாங்க. அதில் முதலில் வந்தவரு ஆறு பேருக்கு மேல யாரையும் சேர்க்க மாட்டோம்னு அதன் பின்னால வர்றவங்களை எல்லாம் அனுப்பிவச்சுட்டார். தான் மனசுல நெனச்ச உடனேயே இவங்கள்லாம் ட்ரை பண்ண ஆரம்பிச்சுருப்பாங்களோன்னு வெள்ளைக்கே மைல்டா ஒரு டவுட். ஆனா யாருமே சம்பளம் எவ்வளவுன்னு கேட்கவோ வெள்ளைச்சாமி யாருட்ட அஸிஸ்டண்டா இருந்தான்னு யோசிக்கவோ இல்லங்கிறதால அவனுக்கும் அவங்கள ரொம்ப பிடிச்சுப்போச்சு.

தான் எடுக்கும் படம் வித்தியாசமானதா இருக்கணும்னு வெள்ள ஆசப்பட்டான். அத தன்னோட அஸிஸ்டண்ட்ஸ்கிட்ட சொன்னான் வெள்ள. கதை இல்லாம படமெடுக்குறாங்க, ஃபிலிம் இல்லாம படமெடுக்குறாங்க, பாட்டு இல்லாம படமெடுக்குறாங்க, ஏன் புத்தியில்லாமகூடப் படமெடுக்குறாங்க ஆனா இதுவரைக்கும் யாரும் நடிப்பு இல்லாம படமெடுக்கலன்னு கூவினான் ஒரு ஒண்ணாந்தர அஸிஸ்டண்ட். அதக் கேட்ட வெள்ளை நடிப்பே இல்லாம படமெடுக்கணும்னு முடிவு பண்ணிட்டான்.

கதைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சான். அப்ப ஒரு அஸிஸ்டண்ட் நாம் படம் தயாரிக்கறதா சொல்வோம். நிறைய பேரு கதை சொல்ல வருவாங்க, அதுல ஒரு நல்ல கதையா எடுத்துக்கிடலாம்னு ஐடியா கொடுத்தான். புத்திய கத்தி மாதிரி தீட்டுறானேன்னு வெள்ளைக்கே புல்லரிச்சுப் போச்சு. ஆனா, நாளைக்கு அவன் கோர்ட் கேஸுன்னு போயிட்டா என்ன பண்றதுன்னு வெள்ளைக்குப் பயம் வந்துருச்சு. அதனால் அவன் வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சான்.

ராத்திரியெல்லாம் மூலையில உட்கார்ந்து மூளையைக் கசக்கினான் வெள்ளை. ஃபார் எ சேஞ்ச் (தனக்கு இங்கிலீஷ்லாம் வருதேன்னு வெள்ளைக்கு வெட்கமே வந்துருச்சு) பழைய தமிழ்ப் படத்துல இருந்தே, ஏன் கதையை சுடக் கூடாதுன்னு முடிவு பண்ணினான். உதவியாளர்கள்ட்ட கேட்டான். அதுவும் புதுசு இல்ல அப்படின்னு, அதுக்கு நிறைய உதாரணங்களை உதவியாளர்கள் அள்ளிப்போட்டாங்க. இவ்வளவு அறிவுக் கொழுந்துகளா இருக்காங்களே பயபுள்ளய்ங்கன்னு நெனச்சு வெள்ள கண்ணுல தண்ணி வந்துருச்சு.

ஓடாத ஒரு படத்தைப் பார்த்து அப்படியே சீன் பை சீன் எடுக்க ஒரு வழியா முடிவு பண்ணினான். குண்டு குண்டா அழகா எழுதும் ஓர் ஒல்லியான அஸிஸ்டண்ட் ராத்திரியெல்லாம் முழிச்சு படத்தப் பார்த்து திரைக்கதை, வசனம் எழுதிட்டான். நடிக்கவே தெரியாத ஒரு நடிகன் பற்றிய கதை அது. இதுக்கு ஹீரோவா யாரெப் போடலாம்னு யோசிச்சாங்க.

நம்ம நடிகர்கள் நடிப்புன்னு வந்துட்டா சோறு தண்ணியில்லாம பாடுபடுவாங்க. கேரக்டருக்காக ஒல்லியாவாங்க, குண்டாவாங்க, மொட்டை போடுவாங்க, தலைகீழா நிப்பாங்க... அப்படிப்பட்டவங்களுக்கு இந்த ரோல் அல்வா சாப்டுற மாதிரி... ஏகப்பட்ட நடிகர்கள் இப்படி ஒரு கேரக்டருக்குக் காத்திட்டிருக்காங்க, ஆனாலும் கப்ஸா காந்த் இதப் பண்ணலாம். அவர்தான் எல்லா விஷயத்தையும் கத்து வச்சிருக்கதா சொல்றாரு. நடிக்கத் தெரியாத நடிகன் ரோல பண்ண அவரவிட்டா ஆளே இல்லன்னு முடிவு பண்ணி அவர்ட்ட சொன்னாங்க.

இதுதாண்டா நடிப்புன்னு டைட்டில் வச்சாங்க. கீழ சின்னதா ‘அன் ஆக்டர் வித்தவுட் ஆக்டிங்’ அப்படின்னு கேப்ஷனும் போட்டாங்க. கப்ஸாவை சும்மா சொல்லக் கூடாது, மனுஷன் பிச்சு உதறிட்டாரு. அனைத்து ஷாட்டும் ஒரே டேக்கில் ஓகேயாச்சு. மறதியாகக்கூட அவர் ஒரு காட்சியிலும் நடிக்கல. அதை எல்லா டிவி பேட்டியிலயும் வெள்ள சொன்னான். அந்த அளவு அவர் அந்த கேரக்டரோட கேரக்டரா மிங்கிள் ஆயிட்டார். படம் கேக்கவே வேண்டாம். அப்படி ஒரு ஹிட். வசூல் கன்னாபின்னான்னு எகிறிருச்சு. இந்தி, தெலுங்கு டப்பிங் உரிமை இதுவரை இல்லாத அளவுக்குப் பேசப்படுதுன்னு பத்திரிகைல எழுதினாங்க. அப்புறம்தான் அது வெள்ளைக்கே தெரிய வந்துச்சு.

கப்ஸா காந்தின் நடிப்புத் திறமை இவ்வளவு நாளும் வெளியவே வரலன்னு எல்லோரும் சொன்னாங்க. படத்தில் தென்பட்ட பின் நவீனக் கூறுகளை எல்லாம் புத்திசாலி விமர்சகர்கள் பூதக் கண்ணாடியால பார்த்துப் பார்த்து புட்டு புட்டு வச்சாங்க. அப்பதான் ஒரு பூதம் கெளம்புச்சு. படத்தின் கதை தன்னோடதுன்னு ஒருத்தரு கெளம்பி வந்தாரு. வெள்ளைக்கு ஒண்ணுமே புரியல. ஆனாலும் இதை அப்படியே விடக் கூடாதுன்னு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணினான். அந்தக் கதைக்காக தான் பட்ட பாடெல்லாம் சொன்னான். ஒரு பாட்டில் ரத்தத்தை வித்து ஒரு பாட்டில் மை வாங்குனத சொன்னபோது, எளகுன மனசு கொண்ட ஓரிரு செய்தியாளர்கள் கர்சீப்பால் கண்களைத் தொடச்சுக்கிட்டாங்க.

தன்னோட பேட்டிய டிவியில பாத்த வெள்ளைக்கு சட்டென்று பல்பு எரிந்தது, அடுத்த படத்துல தானே கதாநாயகனா நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டான்.

தி இந்துவில் வெளியானது.

வெள்ளி, நவம்பர் 07, 2014

அதுல எம் பேரு இருக்கா?

ஊரே ஒரே பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் பட்டியலப் பத்தியே பேசுனாங்க. வழக்கமாவே வெகுளி வெள்ளச்சாமிக்கு ஒண்ணும் புரியாது. இட்லிய வச்சு கம்யூனிசத்த விளக்கும் பட வசனம்கூட அவனுக்கு கம்யூனிசம்னா என்னன்னு புரியவைக்க முடியலன்னா பாத்துக்கோங்களேன். அவன் அவ்வளவு வெகுளி. 

வெளுத்ததெல்லாம் விலை உயர்த்தப்பட்ட பால்னு நினைக்கிற ரகம். லாண்டரியில் உள்ள வெளுத்த உருப்படியக்கூட பால்னு நினைச்சிருக்கான். அப்டியாப்பட்ட ஆளுதான் அண்ணன் வெள்ள. அவனுக்கு இந்தக் கறுப்புப் பணம் கறுப்புப் பணம்னு சொல்றாங்களே, அது என்ன, அத ஏன் விக்ஸ் பேங்குல போட்டு வைக்கிறாங்கன்னு ஒரே ஆச்சரியம். 

அவனோட ஆத்ம நண்பனிடம் கேட்டு விளக்கம் பெறலாம்னு நினைத்து அவனைப் பார்க்கப் போனான். அந்த நண்பனால கறுப்புப் பணம் பத்தி ஒண்ணும் சொல்ல முடியல. ஆனா அத போட்டு வச்சிருக்கும் இடம் விக்ஸ் பேங்கு இல்ல சுவிஸ் பேங்குங்குற விஷயத்தை மட்டும் விவரமா சொன்னான். அப்படியான்னு கேட்ட வெள்ள சுவிஸ் பேங்குக்கே போய் விஷயத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு யோசிச்சான். 

ஆனா இதப் போய் யாருட்டயும் கேட்க வேண்டாம். நாமளே தேடிப் பாக்கலாம்னு முடிவு பண்ணினான். தெருத் தெருவா அலஞ்சான். அந்த ஊரில் எஸ்பிஐ இருந்துச்சு, எஸ் பேங்க் இருந்துச்சு, இன்னும் என்னவெல்லாமோ பேங்க் இருந்துச்சு. முழு ஊரையும் சுத்திப் பாத்துட்டான் சுவிஸ் பேங்க காணவே இல்ல. கறுப்புப் பணத்தைப் போல் பேங்கையும் பதுக்கிட்டாங்களோன்னு அவனுக்குப் பலத்த சந்தேகம் வந்துருச்சு. 

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்கிற லெவலுக்குப் போயிட்டான். வெள்ளச்சாமி வெகுளியா இருந்தாலும் ஓவியம் வரையத் தெரிஞ்சவன். அதனால நெறங்களப் பத்தி அவனுக்கு நல்லாத் தெரியும். கறுப்புப் பணம்னு சொல்றாங்க அதனால அது கறுப்பாத்தான் இருக்குங்கிறதுல அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் அது ஏன் கறுப்பா இருக்குதுங்கிறத தெரிஞ்சுக்க ஆசைப்பட்டான்.

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரத்தைப் போய் பார்த்தான். அவர் ஓர் எழுத்தாளர். உட்கார்ந்த இடத்துல இருந்தே உலக விஷயங்களை எல்லாம் பின்னிப் பெடலெடுக்குற ஆளு. அவரிடம் போய் வெள்ள நின்னான். டெய்லி ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவிக்கும் அந்த எழுத்தாளரிடம் வெள்ள கேட்ட கேள்விகளால பாவம் வெலவெலத்துப் போயிட்டார். 

புராணங்களை எல்லாம் கரைத்துக் குடித்திருந்த அந்த எழுத்தாளருக்குத் திருவிளையாடலில் சிவனே வந்து கொசுக்கடி தாங்காம ஒரு பாட்ட எடுத்து விட்ட மாதிரி, வெள்ள கடவுளோட அவதாரமோன்னு சந்தேகம் வந்துருச்சு. அவன அன்பா உபசரிச்சு, சாப்பாடு போட்டு, அனுப்பிவச்சுட்டாரு. நேரில் கண்ட இறைவன்ங்கிற பேரில் ஒரு கட்டுரை எழுதி அதை இணையத்துல போட்டாரு. போட்ட மாத்திரத்தில அத வாசகர்கள் வரிஞ்சு கட்டிட்டுப் படிச்சாங்க. லட்சக்கணக்கான ஷேர். சரி அதவிடுங்க வெள்ள விஷயத்துக்கு வருவோம். 

வழியில் வெள்ள ஒரு பத்திரிகைக்காரரைப் பார்த்தான். அவருக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சி அவர்ட்ட விவரம் கேட்டான் வெள்ள. அது ஒண்ணுமில்ல வெள்ள, பணக்காரங்க பணத்தை மத்தவங்க கண்ணுல படாம பாதுகாக்கிறதுக்காக மண்ணத் தோண்டி புதைச்சு வச்சிருவாங்க. அப்போது தூசு துப்பட்டன்னு அதுல துரு ஏறிரும். 

அதனால அது கறுப்பா மாறியிரும்னு தனக்குத் தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்துச் சொன்னாரு. வெள்ளைக்கு ஓரளவு புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. தனக்கு இது தோணாமப் போச்சேன்னு அவனுக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு. இவ்வளவு அறிவு இருப்பதால்தான் பத்திரிகையில் வேலை பார்க்க முடியுதுபோல் என நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். 

கறுப்புப் பணம் பத்தி தெரிஞ்ச வெள்ள மறு நாள் பேப்பர் வாங்க அதிகாலையிலேயே பேப்பர் கடையில போய் நின்னான். பேப்பர வாங்கி பிரிச்சுப் பார்த்த வெள்ளைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுப்போச்சு. அவன் பேரில் விக்ஸ் பேங்குல அதான் சுவிஸ் பேங்குல ரூ.50,000 கோடி இருந்துச்சுன்னு அதுல போட்டிருந்தாங்க. தான் ஒருவேளை சாப்பாடு இல்லாம ஒரு ரூபாய் இட்லி சாப்பிட்டு வாழுறோம், நம்ம பேருல ரூ.50,000 கோடியான்னு அதிர்ச்சியில அவன் மயக்கம்போட்டு விழுந்துட்டான். 

தி இந்துவில் வெளியானது.

வியாழன், செப்டம்பர் 18, 2014

பிக் பாக்கெட்

குற்றமல்ல கலை





பலவீனமான மனிதன் மிஷெலின் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாமல் பிரியத்தின் காரணமாக அவனை வந்தடைகிறாள் ஜியன். இந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் வித்தியாசமான பயணம்தான் 1959-ல் படமாக்கப்பட்ட ராபர்ட் பிரெஸ்ஸன்னின் பிக்பாக்கெட். காதலில் ஈடுபடுவதைவிட ஈர்ப்புடன் அவன் பிக் பாக்கெட் அடிப்பதில் ஈடுபடுகிறான். அவனைப் பொறுத்தவரை பிக் பாக்கெட் அடிப்பதால் உச்சச்கட்ட பரவசம் கிடைக்கிறது; அவனுக்கு அது ஓர் ஆன்மிக அனுபவம். பியோதர் தஸ்தோயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் ஈர்ப்பு காரணமாகவே இத்திரைப்படத்தை பிரெஸ்ஸன் உருவாக்கியுள்ளார். படமாக்கப்பட்ட விதத்தால் உலகத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பிக்பாக்கெட் மாறுகிறது.

கத்தோலிக்கரான ராபர்ட் பிரெஸ்ஸன் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் இயக்குநர்களில் ஒருவர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 18 மாதங்களை ஜெர்மனியின் சிறைக் கொட்டடியில் கழித்தவர். மதம் போதிக்கும் அறத்தை, நியாயத் தீர்ப்பு என்னும் கோட்பாட்டை அர்த்தம் தொனிக்கும் தீவிரக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். ஆனால் கேள்விகள் வெளிப்படையாய் ஒலிப்பதில்லை; படத்தின் இருளில் மறைந்துகிடக்கின்றன. பின்னணி ஒலியும் காட்சிகளில் படரும் இருளும் ஒளியும் படத்தைப் பொருள்மிக்கதாக்குகின்றன.


படம் வாழ்வு குறித்த ஆழ்ந்த தத்துவக் கருத்துகளை மனதில் எழுப்புகிறது; மோதவிடுகிறது. தனிமனித ஆசைக்கும் சமூகம் வலியுறுத்தும் விழுமியங்களுக்கும் இடையில் அலைபாயும் வாழ்வின் ஊசலாட்டமும் உளவியல் சிக்கலும் காட்சிகளுக்கிடையே பொதிந்து கிடக்கின்றன.

நவீன உலகில், விருப்பமான வாழ்வுக்கும் விதிக்கப்படும் வாழ்வுக்கும் இடையில் காணப்படும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியின் வெம்மையை உணர்த்துகிறது மிஷெலின் வாழ்க்கை. ஒல்லியான உருவம், ஒடுங்கிய முகம், கூர் நாசி, எப்போதும் கூச்சத்தில் மூழ்கிக் கிடப்பது போன்ற தோற்றம், மற்றவரின் கவனத்தை ஈர்க்க விரும்பாத எண்ணம் ஆகியவை கொண்டவன் மிஷெல். அவன் தன்மீது வைத்திருப்பதைவிடத் தன் தாய்மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறான் அதே நேரத்தில் அவளை அடிக்கடி சென்று பார்ப்பதைத் தவிர்க்கிறான். தாய் இறந்த பின்பு அந்தத் தேவாலயத்தில் மிஷெலின் கண்களிலிருந்து வழிந்து கன்னத்தில் படர்ந்திருக்கும் கண்ணீர்க் கறையும் கேவல் மிக்க பார்வையும் பின்னணியில் ஒலிக்கும் துயரார்ந்த இசையும் அவனது துன்பத்தை மட்டுமல்ல அவனது பிரியத்தையும் துல்லியமாகச் சொல்கின்றன. மிஷெலை உருவாக்கியவர் பிரெஸ்ஸன். சிருஷ்டித்தாரெனில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லசால். அவர் தொழில்முறை நடிகரல்ல, ஆனால் பிரெஸ்ஸனின் மனதிலிருந்த மிஷெல்லைத் திரையில் அப்படியே கொண்டுவந்திருக்கிறார்.



சாதாரண குற்றச் செயல் எனப் புரிந்துகொள்ளப்படும் பிக் பாக்கெட் அடிப்பதை அவன் தொழிலாகப் பாவிக்கிறான். அதன் அத்தனை நுணுக்கங்களையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்றுத் தேர்ந்துகொள்கிறான்; அதில் வெற்றிபெறுகிறான்; தோல்வியுறுகிறான்; அவமானப்படுகிறான்; எல்லாமும் நிகழ்கிறது. தர்க்கத்தின்பால் ஈர்க்கப்படும் மனதைப் புறந்தள்ளி, மிஷெலை அவனது ஆசாபாசங்களுக்கு உட்பட்ட நிலையிலேயே நடமாட வைத்துள்ளார் ராபர்ட் பிரெஸ்ஸன். மிஷலின் நடை, உடை, பாவனைகள் அவனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆனால் அவன் அவர்களில் ஒருவன். இந்த முரண்தான் பிக் பாக்கெட் படத்தின் உணர்வுபூர்வ இழை. அறிவுக் கத்தியால் சம்பவங்களைக் கூறுபோட நினைக்கும் தர்க்க மனதைச் சர்வ சாதாரணமாக ஏமாற்றி ஒரு கலைஞனாக மிளிர்கிறார் ராபர்ட் பிரெஸ்ஸன்.

மிஷெல் சாதாரணமானவன். ஆனால் அவனது செயல் அவனை சூப்பர்மேனாக உணரச் செய்கிறது. அந்தப் பரவசம் மீண்டும் மீண்டும் அவனை அச்செயலில் ஈடுபடச் செய்கிறது. அவன் வாழ்ந்ததற்கான பொருளை அச்செயல் அவனுக்கு அளிக்கிறது. அவன் வேறு வேலை செய்து பிழைத்திருக்க முடியும். ஆனால் அவன் பிக்பாக்கெட் அடித்தே வாழ்கிறான். அதன் பின்னணியிலிருக்கும் அத்தனை ஆபத்தையும் மீறி அவனுக்குச் சாகசச் செயல் செய்த திருப்தி கிடைக்கிறது. வேறு எந்த வேலையிலும் கிடைக்காத திருப்தியை அவன் பிக்பாக்கெட் அடிக்கும் போது உணர்கிறான். அது அவனை ஆட்கொள்கிறது. பிக்பாக்கெட் அடிக்கும் தொழிலை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தக் கலை அவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. துயரத்தின் கதவை அவனாகவே சென்று தட்டுகிறான். அதை அவன் தவிர்த்திருக்கலாம் ஆனால் அவனால் தவிர்க்க இயலவில்லை. அந்த மாயச் சூழல் அவனை வழிநடத்துகிறது. சமூகப் பார்வையில் அது ஒரு பொறி, அதில் அவனாகச் சென்று சிக்குகிறான். பொறிக்குள் மாட்டிக்கொள்வதில் அவனுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியே அவனது துக்கமாகவும் மாறுகிறது. துக்கம் தரும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் மிஷெல். இது புதிரானது, புரியாதது. ஆனால் தனது படத்தின் காட்சிகளில் இந்தப் புரிதலைப் புதைத்துவைத்துள்ளார் இயக்குநர் பிரெஸ்ஸன். அர்த்தமற்ற வழக்கங்களுக்குள் புகுந்துகொண்டு வர மறுக்கும் அபத்தத்தை அனாயாசமாக விளக்குகிறார் பிரெஸ்ஸன்.

தி இந்துவில் வெளியானது

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

நைட் டிரெயின் டூ லிஸ்பன்

பரவசம் தரும் தேடல்


சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாஸ்கல் மெர்ஸியர் எழுதிய நாவல் நைட் டிரெயின் டூ லிஸ்பன். இந்த நாவல் ஜெர்மனியில் 2004-ல் வெளியானது. இதே நாவல் 2008-ல் ஆங்கிலத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது; பெஸ்ட் செல்லர் நாவல் என்னும் பெருமையும் கிடைத்தது. இந்த நாவலை இதே பெயரில் படமாக்கினார் டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குநர் பில்ல ஆகஸ்ட் (Bille August). இப்படம் முதலில் 2013 பிப்ரவரியில் ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ரெய்மென்ட் கிரெகோரியஸ் என்பவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவர், லத்தீன், ஹீப்ரு போன்ற பழங்கால மொழிகளில் நல்ல பரிச்சயம் கொண்டவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் தனியே வசித்துவருகிறார். படத்தின் தொடக்கத்தில் அவர் அவருடனேயே செஸ் விளையாடுவார். அவரது தனிமையை உணரும்போது மனத்தில் மெல்லிய சோகம் ததும்பும். ஒருநாள் அவர் வழக்கம்போல் கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. அவர் செல்லும் வழியில் உள்ள ஆற்றுப் பாலத்தின் மேல் ஒரு பெண் கீழே உள்ள ஆற்றில் குதித்து உயிரைவிட யத்தனிக்கிறாள். இதைப் பார்த்த கிரெகோரியஸ் பாய்ந்து சென்று அவளைத் தடுத்துத் தன்னுடன் அழைத்துவருகிறார். வகுப்பறையில் அவளை ஓரமாக அமர்த்திவிட்டு வகுப்பெடுக்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்தில் அவள் சென்றுவிடுகிறாள். ஆனால் அவள் அணிந்திருந்த சிவப்பு ரெயின் கோட்டை மறந்துவிட்டுப் போய்விடுகிறாள்.



அவளது கோட்டில் புத்தகமும் அதில் போர்ச்சுகலின் நகரான லிஸ்பனுக்குச் செல்லும் டிரெயின் டிக்கெட் ஒன்றும் உள்ளன. கிரெகோரியஸ் ரயில் நிலையத்திற்கு விரைகிறார். ரயில் கிளம்பும் சமயம். அவள் அங்கு இல்லை. வகுப்பறையைப் பாதியில் விட்டு வந்த அவர் சிறிதும் யோசனையின்றிச் சுமார் 2000 கி.மீ. தள்ளியுள்ள ஊருக்குப் போக அந்த ரெயிலில் ஏறிவிடுகிறார். அந்தப் பயணத்தின்போது அவர் வாசித்த அந்தப் புத்தகம் அவரது வாழ்வை மாற்றிப்போடுகிறது; அவரை அவருக்கே அடையாளம் காட்டுகிறது. அவருக்குள் உறைந்துபோயிருந்த பல வாசகங்களை அந்தப் புத்தகத்தில் அவர் உயிர்ப்புடன் கண்டு திகைக்கிறார். ஒரு பரவசமான உலகம் அவரை உள்ளிழுத்துக்கொள்கிறது. இது ஒரு கதை.

மற்றொரு கதை அந்தப் புத்தகத்தின் வழியே விவரிக்கப்படுகிறது. அதில் நாயகன் டாக்டரான அமெதேயு தே அல்பிரதோ. ஜோர்ஜ், ஜோவோ ஆகியோர் அவனுடைய தோழர்கள். ஜோர்ஜின் மனைவி எஸ்தபேனியா. அவர்களுக்குள் உள்ள உறவும் போர்ச்சுகல் சர்வாதிகாரி அன்டோனியோ தே ஒலிவெய்ரா சலசாரின் வலது சாரி ஆட்சிக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டமும் அதன் பாதிப்புகளும் சொல்லப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாட்டில் நீதிபதியாக இருப்பவர் அமெதேயுவின் தந்தை. சல்சாருக்கு எதிரான தனது கண்டனத்தைத் தந்தை எதிரே உள்ளபோதே சபையில் உரையாக முன்வைக்கிறார். இதனால் தந்தைக்கும் தனயனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
சர்வாதிகாரத்தின் தாக்கமும் நெருக்கமான நண்பர்களிடையே பெண்ணால் ஏற்படும் துரோகம், காதல், உறவு, பிரிவு ஆகியவையும் தத்துவார்த்தமாகவும் கவிமொழியிலும் காட்சிகளாகியுள்ளன. எஸ்தபேனியா எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில்வைத்திருக்கிறாள்.



மறைமுகப் போராட்டம் நடத்தும்போது அனைவரது முகவரியையும் தொடர்புஎண்களையும் அவள் மனதிலிருந்தே எடுத்துப் போடுகிறாள். அந்த ஞாபகங்கள் அவளுக்கு மறப்பதேயில்லை. படத்தின் தனித்துவமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இந்த இரு கதைகளும் மாறிமாறி, இறந்த காலமும் நிகழ்காலமும் பின்னிப்பிணைந்து வந்து செல்லும். தேடலை அடித்தளமாகக் கொண்டிருந்தும் ஒரு த்ரில்லரின் தன்மையையும் கொண்டிருப்பதால் மாறுபட்ட படமாகிறது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு சம்பவங்களை வெளிப்படுத்தும் தனித்தனியே துண்டு துண்டாகத் தெரியும் சம்பவங்களால் உருவாகும் முழு சித்திரம் படத்தில் வெளிப்படும் தருணத்தில் ஒரு முழுமையை உணர முடியும். அந்த முழுமை படம் குறித்தது மாத்திரமல்ல வாழ்வு குறித்ததுமாகும்.

இப்படம் உங்களை உற்சாகப்படுத்தும் படமல்ல, ஆனால் உள்முகப்படுத்தும் படம். உங்களது வாழ்வைப் பரிசீலிக்க வைக்கும் படம். படத்தின் கவித்துவமான, தத்துவார்த்தமான வசனங்களும் தொனியும் உங்கள்மீது நறுமணமாகப் படரும். அது உங்கள் உதிரத்தில் கலந்து மூளையைக் கலக்கும். அர்த்தமற்ற வாழ்வின் அர்த்தங்களைச் சொல்லிடத் துடிக்கும். அறத்திற்கும் கடமைக்கும் இடையேயான ஊசலாட்டத்தை உணர்த்தும். உறவு முக்கியமா, உண்மை முக்கியமா என்னும் கேள்விகளை எழுப்பும். தருணங்களால் ஆன வாழ்வில் திட்டமிடாமல் நம்மை இயக்கும் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்களுக்கு வாழ்க்கை தனது பரவசத்தைத் தர காத்திருக்கும் உண்மையை உணர்த்தும்.

தி இந்துவில் வெளியானது

புதன், ஜூலை 23, 2014

தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர்

பால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23


சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 அன்று பிறந்தார். சிப்பாய்க் கலகம் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டு முன்னர் பிறந்த திலகர் ஓர் அறிஞர்; கணிதத்தில் புலமை மிக்கவர்; தத்துவவாதி; தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த திலகர் சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் தாயை இழந்த திலகர் பதினாறு வயதில் தந்தையையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்ட திலகர் அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். அதனால் தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார்.

ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மைவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.


தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது. இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.

1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இருந்த அவரது இல்லத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

செவ்வாய், ஜூலை 15, 2014

எளியவர்களுக்கு ஏற்றம் தந்த காமராஜ்


கர்ம வீரர் எனப் பிரியத்துடன் அழைக்கப்பட்டவர் காமராஜர். 1903-ம் ஆண்டு ஜூலை 15 ல் விருதுநகரில் ஒரு தேங்காய் வியாபாரியின் மகனாகப் பிறந்தார். அவருடைய அப்பா குமாரசாமி. அம்மா சிவகாமி அம்மாள். காமராஜர் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவரது அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. காமராஜருடைய அம்மா சிவகாமி அம்மாள் காதில் போட்டிருந்த நகையைத் தவிர குடும்பத்தில் இருந்த எல்லா நகைகளையும் விற்றார். அதை உள்ளூர் வியாபாரியிடம் கொடுத்தார். அதில் இருந்து கிடைத்த வட்டியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார்.

பள்ளியில் காமராஜர் மிகவும் சாதாரணமான மாணவராகவே இருந்தார். ஆறாம் வகுப்பு வரைதான் படித்தார். பிறகு தாய்மாமா கருப்பையாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் கடையில் இருந்து திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவார். வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸப் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றுவிடுவார். அந்தப் பருவத் திலேயே அவருக்குத் தீவிரமான அரசியல் ஈடுபாடு இருந்தது. குடும்பத்தைவிடச் சமூகமே அவருக்குப் பிரதானமாகப் பட்டது. உள்ளூரில் இருந்தால் அரசியல் கூட்டங்களுக்குப் போய்விடுகிறார் என்பதால் திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு உறவினரின் கடைக்குக் காமராஜரை அனுப்பி வைத்தனர்.


அங்கும் காமராஜரால் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. அங்கே கோயில் இருந்த தெருக்களில் நடமாடக் கூடாது என இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வைக்கம் எனுமிடத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அதில் காமராஜர் கலந்துகொண்டார். உறவினர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தனர். ஆனால் காமராஜர் அதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. தனது 16-ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1930-ல் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.

விருதுநகர் அஞ்சலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவருக்காக வரதராஜுலு நாயுடுவும் ஜார்ஜ் ஜோஸபும் வாதாடி வெற்றிபெற்றனர். ஆனால் 1940-ல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்தபோது விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர சமூகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்தபோது காமராஜருக்குக் கல்வியின் அவசியம் புரிந்தது. தேச விடுதலைக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த காலத்தில் கல்வியைத் தானாய்த் தேடிக் கற்றார்.

பின்னாளில் அவர் முதல்வரான பிறகு அனைவருக்கும் இலவசக் கல்வி என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார்.


அரசியலில் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியைக் குருவாகக் கொண்டு செயல்பட்டார் காமராஜர். 1936-ல் சத்தியமூர்த்தி மாகாண காங்கிரஸ் தலைவராக ஆனபோது காமராஜரை மாகாண காங்கிரஸ் செயலாளர் ஆக்கினார். நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார். ஒரே நபர் கட்சிப் பணியையும் அரசுப் பொறுப்பையும் வகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 1963-ல் காமராஜர் திட்டம் என்பதைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின்படி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

1965-ல் இந்தியப் பிரதமர் நேரு மறைந்த பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். பிரதமர் பதவி தன்னைத் தேடி வந்த போதும் பெருந்தன்மையுடன் அதை மறுத்த மகா மனிதர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று காலமானார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார்.

ஞாயிறு, ஜூலை 13, 2014

மக்கள் தலைவர் ஜோதிபாசு



கல்கத்தா நகரில் மருத்துவராயிருந்த நிஷிகண்ட பாசு, ஹேமலதா பாசு தம்பதிக்கு 1914-ம் ஆண்டு ஜூலை 8 அன்று மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் அதிக ஆண்டுகள் சேவையாற்றிய முதலமைச்சராகப் பின்னாளில் அந்தக் குழந்தை மாறும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. அந்தக் குழந்தைதான் மேற்கு வங்காளத்தில் 28 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து சாதனை படைத்த ஜோதிபாசு. உயர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு 1920ல் அங்கிருந்த லோரெடா பள்ளியிலும் பின்னர் புனித சவேரியார் பள்ளியிலும் பயின்றார்.

தற்போது பிரசிடென்ஸி கல்லூரி என அழைக்கப்படும் இந்து கல்லூரியில் தனது ஆங்கிலப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1935-ல் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு படித்த காலத்தில் இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1937-ல் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய மாணவர்களுக்கான அமைப்பான இந்தியா லீக்கில் உறுப்பினரானார். லண்டன் மாஜிலிஸ் இயக்கத்திலும் சேர்ந்தார். இந்திய விடுதலைக்காக மாணவர்களை அணி திரட்டிப் போராடினார். 1938-ல் ஜவஹர்லால் நேரு லண்டன் சென்றபோது அவரைச் சந்தித்தார் ஜோதிபாசு. இந்திய மாணவ நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜோதிபாசுவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு கிழக்கு லண்டனிலிருந்த படிப்பறிவற்ற எளிய இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்.


1940-ல் கல்கத்தா திரும்பிய ஜோதிபாசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தான் சேரப்போவதாகத் தெரிவித்தார். அவரது அறிவிப்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் பேச்சிழந்துபோனார்கள். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1940-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆனாலும் தலைவர்களுடன் தொடர்புகொண்டார் ஜோதிபாசு. கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பணி ஜோதிபாசுவின் தோளுக்கு வந்தது. அதை நேர்த்தியாக செய்துமுடித்தார் அவர்.

1940-ல் பாஸாந்தி கோஷ் என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். ஆனால் திருமண வாழ்வில் ஜோதிபாசுவுக்குப் பலத்த அடியாக அவரது மனைவியின் மரணம் அமைந்தது. 1942-ம் ஆண்டு மே 11 அன்று அவரது மனைவி அகால மரணம் அடைந்தார். மகனின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகம் ஜோதிபாசுவின் தாயாரைக் கடுமையாகப் பாதித்தது. சில மாதங்களுக்குள் அவரும் காலமானார். 1944-ல் வங்காள அஸ்ஸாம் ரயில்வே தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1946-ல் வங்காள சட்டசபைக்கு ரயில்வே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படார்.


பின்னர் 1948-ல் கமல் பாசுவைத் திருமணம் செய்துகொண்டார். 1951-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது. அதே வருடம் ஜோதிபாசுவுக்கு குழந்தை பிறந்து சில தினங்களில் நோயால் மரித்தும்போயிற்று. 1953-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிரிவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் அவரும் ஒருவரானார்.

1967, 1969 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தார். 1977-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது முதலமைச்சரான ஜோதிபாசு 2000 ஆண்டுவரை தொடர்ந்து பதவி வகித்தார். அந்த ஆண்டில் உடல்நிலை காரணமாகப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜோதிபாசு 2010-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று காலமானார்.

தி இந்து வெற்றிக்கொடி பகுதிக்காக எழுதியது. 2014 ஜூலை 7 இதழில் வெளியானது.

திங்கள், ஜூலை 07, 2014

இயல்பின் அழகு


அது ஓர் எளிய கிராமம். அங்கு இரண்டு புகழ்பெற்ற கோவில்கள் இருந்தன. ஒரு ஜென் கோவிலில் அழகான தோட்டம் ஒன்று இருந்தது. இந்தத் தோட்டத்தைக் குரு ஒருவர் பராமரித்துக்கொண்டிருந்தார். அவருக்கு செடி,கொடிகள் மீதும் பூக்கள் மீதும் அளவற்ற பிரியம் உண்டு. அதனால் தான் அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கும் பணியே அவருக்குக் கிடைத்தது. தோட்டத்தையும் அங்கிருந்த செடி கொடிகளையும் குழந்தைகளைப் பராமரிப்பது போல அன்புடன் அந்தக் குரு கவனித்துக்கொள்வார். 

அந்த ஜென் கோவிலுக்கு அருகிலேயே மற்றொரு சிறிய கோவிலும் இருந்தது. அங்கு வயதானதொரு ஜென் துறவி வசித்து வந்தார். இரண்டு கோவில்களையும் பெரிய சுவர் ஒன்று பிரித்துவைத்திருந்தது. ஆனால் பெரிய கோவிலில் குரு செய்யும் அனைத்து வேலைகளையும் ஜென் துறவியால் அவரது கோவிலிலிருந்தே பார்க்கக்கூடிய வகையிலேயே அந்தச் சுவர் அமைந்திருந்தது. 

ஒரு நாளின் அதிகாலையிலேயே கோயிலைப் பராமரித்து வந்த குரு பரபரப்பாகக் காணப்பட்டார். அன்று அந்தக் கோவிலுக்கு யாரோ முக்கியமான விருந்தினர் வருகையை எதிர்பார்த்துத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி விட்டபடி அழகுபடுத்திக்கொண்டிருந்தார். ஒரு குழந்தையைப் போல் குரு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார். செடி கொடிகள் வாடியிருக்கின்றனவா என்று நிமிடத்திற்கு ஒரு தரம் பார்த்து தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.இதைக் கண்ட ஜென் துறவிக்கு வியப்பாக இருந்தது. 

தனது வேலைகளை எல்லாம் திருப்தியாக முடித்த பின்னர் அவற்றை எல்லாம் பெருமையாகப் பார்வையிட்டார் குரு. அப்போது தான் அருகிலுள்ள கோவிலிருந்து ஜென் துறவி தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைக் குரு பார்த்தார். உடனே ஜென் துறவியை நோக்கிக் குரு, “எனது தோட்டம் எப்படி இருக்கிறது, பார்க்க அழகாக இருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சொன்ன ஜென் துறவி, ”ஆனால் ஒரு சிறிய குறை இருக்கிறது என்னைத் தோட்டத்திற்குத் தூக்கி விடு அதை நான் சரிசெய்கிறேன்” என்று சொன்னார். 

எல்லாவற்றையும் திருப்தியாகச் செய்தும் என்ன குறை வந்துவிட்டது எனப் பதறிவிட்டார் குரு. ஆனாலும் துறவி வந்து சரிசெய்யப்படும் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி அவரைத் தோட்டத்துக்குள் வருவதற்காகத் தூக்கிவிட்டார். தோட்டத்திற்குள் வந்த ஜென் துறவி தோட்டத்தின் நடுவே இருந்த மரம் ஒன்றை நோக்கி விரைந்தார். மரத்தின் அருகே சென்று அதன் அடி மரத்தைப் பிடித்துப் பலமாக உலுக்கினார். இதனால் மரத்திலிருந்து இலைகளுக்கும் பூக்களும் நிலத்தில் பொலபொலவென உதிர்ந்தன. குரு அதிர்ச்சியுடன் ஜென் துறவியைப் பார்த்தார். இப்போது இந்த இலைகளையும் பூக்களையும் மரத்தில் மறுபடியும் இணைத்துவிடு” என்று கூறி விட்டு ஜென் துறவி நடையைக் கட்டிவிட்டார்.  

ஞாயிறு, ஜூலை 06, 2014

வெள்ளை அடித்தால் குளுமையாகும் கட்டிடம்


கோடைகாலத்தில் மட்டும் வெயில் கொளுத்தும் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. பழங்காலத்தில் விதவிதமான கட்டுமான முறையைக் கையாண்டு கட்டிடத்திற்குள் வெம்மையான சூழலைக் குறைத்தார்கள். வீடுகளுக்கெல்லாம் வெள்ளை நிறச் சுண்ணாம்புதான் பூசுவார்கள். அப்போதெல்லாம் வெயில் நேரத்தில் சாதாரண மின்விசிறியைக் கொண்டே வெப்பத்தை விரட்டிவிட முடிந்தது. குளிர்சாதன வசதி என்பதெல்லாம் மிக மிக வசதி படைத்தவர்களால் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள முடிந்த விஷயமாக இருந்தது. சாதாரண மனிதர்களின் வசிப்பிடங்களில் அதிக அளவில் குளிர்சாதன வசதி தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. அடிக்கும் வெயிலை விரட்ட குளிர்சாதன வசதி மிகவும் அவசியம் என்னும் நிலைமை உருவாகிவிட்டது. காரணம் இப்போது நமது கட்டுமான முறையும் மாறிவிட்டது. கான்கிரீட் தவிர்க்க முடியாத கட்டுமான பொருளாகிவிட்டது. கான்கிரீட் கட்டிடங்களில் பகல் முழுவதும் அடிக்கும் வெயில் காரணமான வெப்பம் உள்ளுக்குள்ளேயே தங்கி நள்ளிரவுக்குப் பின்னும் கட்டிடம் தகிக்கிறது. 

நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேயிருக்கும் வெயிலின் தாக்கத்தைச் சாதாரண மின்விசிறி மூலம் துரத்த முடியவில்லை. மாலை வேளைகளில் கட்டிடங்கள் மீது குடம் குடமாய் நீரை ஊற்றினாலும் கட்டிடத்தின் உள்ளே ஊடுருவும் வெப்பத்தைத் தவிர்க்க முடியவில்லை. வளைகுடா நாடுகள் போல் நமது நகரங்களிலும் கிராமங்களிலும் கூட அனைத்து வசிப்பிடங்களிலும் அலுவலகங்களிலும் வெம்மையை விரட்ட குளிர்சாதன வசதி பொருத்தப்படுவது அவசியம் என்னும் நிலை உருவாகியுள்ளது. ஓஸோன் படலத்தில் விழுந்த ஓட்டை காரணமாக புவியின் வெப்பம் அதிகமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இயற்கையை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த இயலாது. அதை எதிர்த்து நிற்கும் வழியைக் கண்டுபிடிப்பது மட்டும் தான் நம்மால் முடிந்த செயல். அப்படியானால் வெப்பத்தை எதிர்க்க என்ன வழி? அனைத்துக் கட்டிடங்களிலும் குளிர்சாதன வசதியைப் பொருத்திவிடலாமா? அதுவும் சாத்தியாமானதில்லை. எல்லோருக்கும் அதற்கான பொருளாதார வசதி இடம் கொடுக்காது; மேலும் கிராமங்களில் மின்சாரமே பெரும் பிரச்சினை பிறகெப்படி குளிர்சாதன வசதி உதவும்? எல்லோரும் குளிர்சாதனவசதியைப் பொருத்தினாலும் அதனால் ஏற்படும் விளைவால் சுற்றுச்சூழலும் மாசுபடவே செய்யும். 

ஆக கட்டிடத்திற்குள் வெப்பம் பரவாமல் இருக்கும் மாற்றுவழியைத் தேடிக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு தொழில்நுட்பம் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. அது ஒன்றும் புதிய முறை அல்ல. பழங்காலத்தில் நமது முன்னோர்களிடம் வழக்கத்தில் இருந்த நடைமுறைதான். கட்டிடத்தின் மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதுதான் அது. கட்டிடத்தின் கூரைமீது வெள்ளை நிற வண்ணமடித்தால், கட்டிடத்தில் படரும் வெயிலால் உருவாகும் வெம்மையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதை ஆய்வு மூலம் நிரூபித்திருக்கவும் செய்கிறார்கள். நிபுணர்கள் நடத்திய ஓர் ஆய்வில் ஒரு கட்டிடத்தின் கூரைமீது வெள்ளை பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். மற்றொரு கட்டிடத்தில் வேறு வண்ணத்தைப் பூசியிருக்கிறார்கள். இரண்டு கட்டிடங்களின் உள்ளேயும் நிலவும் வெப்ப நிலையை இரண்டு மூன்று மாதங்களாகக் குறித்திருக்கிறார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்த கட்டிடத்தில் வெப்ப நிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைவாகவே இருந்திருக்கிறது. 

வெள்ளை நிறம் வெப்பத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உள்வாங்குகிறதோ அதே அளவு அப்படியே வெளியிட்டுவிடும். வெப்பத்தை அப்படியே உள்ளே வாங்கி வைத்துக்கொள்ளாது. கொளுத்தும் வெயிலில் விளையாடும் வீரர்களுக்கு வெள்ளை நிற உடை தருவது இந்தக் காரணத்தால்தான். ஆகவே கூரைமீது வெள்ளை அடித்தால் வெப்பத்தை தவிர்க்க முடியும் என்னும் தொழில்நுட்பத்தைப் பரவலாக எடுத்துச் சென்றால் கட்டிடத்தின் மீது கடும் வெப்பம் இறங்கும் சூழலை ஓரளவு சமாளிக்கலாம். மழை நீர் சேகரிப்பு போன்ற நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தியது போல் இந்த வெள்ளை பெயிண்ட் அடிப்பதையும் கட்டிட அனுமதி தரும்போதே வலியுறுத்தினால் அதன் மூலம் கட்டிடத்தின் வெம்மையைக் குறைத்து கட்டிடத்திற்கு குளுமையைக் கொண்டுவரலாம்.

திங்கள், ஜூன் 30, 2014

உணவு தயாரிக்கும் 3டி பிரிண்டர்


குழந்தைகளுக்குச் சாப்பாடு தருவது என்பது தாய்மார்களின் சிரமமான வேலை. குழந்தைகளுக்குப் புதுப் புது வடிவங்கள், புதுப் புது வண்ணங்கள் ஆகியவை விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன. ஆனால் அவர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் அளவுக்குத் தாய்மார்களிடம் தொழில்நுட்பம் இல்லை. அதே உணவு வகைகள்; அதே வடிவம்; அதே நிறம்; அதே சுவை. இவை எல்லாம் குழந்தைகளை உணவை விட்டுத் தூரத்திற்கு விரட்டி விடுகிறது. அடுத்ததாக ஊட்டச் சத்துகளை எப்படிச் சரிவிகிதத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தருவது என்பது ஒரு சிக்கலே. இந்த இரண்டையும் களையும் விதத்தில் செயல்படுகிறது உணவுக்கான 3டி பிரிண்டர். இதெற்கெல்லாமா 3 டி பிரிண்டர் என்றுதான் தோன்றும். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கும் கருவியைக் கொண்டு வந்துவிட்டது. 

அரிசியையும் உளுந்தையும் நன்கு அரைத்து புளிக்கவைத்து அவித்து சுடச்சுட மல்லிகைப் பூ இட்லி தயாரிக்கிறோம். 3டி பிரிண்டரில் மாவு ஊற்றிவிட்டால் அது இட்லியைத் தந்துவிடுமா? அதைத்தான் குக்கரே தந்துவிடுமே. அப்படியானால் 3 டி பிரிண்டரால் என்ன பயன்? அவசரப்படாதீங்க. பயன் இருக்கிறது. இட்லியை ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறத்தில் வட்ட வடிவமாகவே பார்க்கச் சலிப்பாக இல்லையா? அதை மாற்றிவிடும் இந்த 3டி பிரிண்டர். விதவிதமான வடிவங்களில் வண்ணங்களில் இட்லி மாவை வடிவமைக்க இது உதவும். குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்பைடர்மேன் வடிவத்தில், சிவப்பு நிறத்தில் இட்லி வரவேண்டுமா? கவலையே இல்லை. தேவையான மாவில் வண்ணங்களைச் சேர்த்து 3டி பிரிண்டரில் இட்டு தேவையான வடிவத்தையும் உள்ளீடு செய்தால் போதும் நீங்கள் விரும்பிய வடிவத்தில் இட்லி தயார். ஆனால் அதை அப்படியே எடுத்துச் சாப்பிட முடியாது. ஏனெனில் இட்லியின் வடிவத்தையும் நிறத்தையும் தான் 3டி பிரிண்டர் உருவாக்கித் தரும். ஆனால் அதை அவிக்கும் வேலையை அது செய்யாது. அதை நாம்தான் செய்ய வேண்டும்.


இட்லி என்பது வெறும் உதாரணத்திற்குத் தான். அனைத்துவித உணவு வகைகளையும் இதில் உருவாக்கலாம் என்னவொன்று, எல்லாவற்றையும் பேஸ்ட் வடிவத்தில் மாற்றித்தான் பிரிண்டரின் கேப்சுயூல்களில் உள்ளீடு செய்ய வேண்டும். பெண்கள் தங்களை அழகுபடுத்த மெகந்தி கோன்களில் மெகந்தியை இட்டி கைகளையும் பாதங்களையும் வண்ண வண்ணமாக நுட்பமான உருவங்களால் மெருகேற்றிக் கொள்வது போல் உணவையும் கண்களைக் கவரும் வகையில் மாற்றிக்கொள்ள 3 டி பிரிண்டர் உதவும். பூப்போன்ற மிருதுவான இட்லி என்பதை உண்மையிலேயே பூப்போன்ற வடிவத்திலும் வண்ணத்திலும் பெறலாம் என்பது சுவையாகத்தானே இருக்கும். இவற்றை எல்லாம் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் பயன்படுத்த முடியுமா என்னும் சந்தேகம் எழத்தான் செய்யும். அந்தச் சந்தேகங்கள் எல்லாம் களையப்பட்டு எதிர்காலத்தில் எல்லோரது வீடுகளில் ஒரு 3 டி பிரிண்டர் இருக்கலாம். எல்லாம் சரி இதன் விலை என்ன? இப்போது 3,000 அமெரிக்க டாலர்.

கட்டுமானச் செங்கல்லை மாற்றலாமே


எவ்வளவு விலை கொடுத்தும் செங்கற்களையே வாங்கிப் பயன்படுத்திப் பழகிவிட்டோம். இதை விடுத்து மாற்றுச் செங்கற்களையும் பயன்படுத்த முயலலாம். மாற்றுச் செங்கற்களை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது ஏன் பயன்படுத்த வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயல்பு. வழக்கமான செங்கற்களின் தயாரிப்பு காரணமாக வளமான நிலம் பாழ்படுகிறது, இதைத் தயாரிக்க அதிக ஆற்றலும் தேவைப்படுகிறது. இத்தைகய காரணங்களால் மாற்றுச் செங்கற்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. நம்மிடம் சில மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செங்கற்களின் பயன்பாடு குறையும். செங்கல் உற்பத்தியாளர்களும் இந்த மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்க வேண்டும். இதன் மூலம் செங்கல் உற்பத்தியாளர்கள் உற்பத்தியையும் லாபத்தையும் மேம்படுத்த முடியும். இதனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை மாற்றுச் செங்கற்களாகப் பாவிக்கப்படுகின்றன. இத்தகைய மாற்று செங்கற்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும், இவற்றுக்கான மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதே. அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களிலிருந்தே இவற்றைத் தயாரிக்க முடியும்.  இந்த மாற்றுச் செங்கற்கள் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்காது. 

இத்தனை அனுகூலங்கள் இருப்பினும் அதிகமாக மாற்றுச் செங்கற்கள் பயன்படுத்தப்படாததன் காரணம் நமது மனநிலையே. மாற்றுச் செங்கல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே நாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த தயங்குகிறோம். இந்த மனநிலையைப் போக்க அரசு முயல வேண்டும். அரசுக் கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். மாற்றுச் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.  

இதே போல் செங்கல் உற்பத்தியாளர்கள் ப்ளை ஆஷ் செங்கற்களை உற்பத்தி செய்ய முன்வரும்போது அவர்களுக்கும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யலாம். இத்தகைய நடவடிக்கைகள் ப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும், அவர்களின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும். ஏனெனில் ஏற்கனவே பில்டிங் ப்ளாக்ஸ் உருவாக்குவதில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு முன் அனுபவமும் அவற்றை உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பும் உள்ளன.  

செங்கல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்று தொழில்வாய்ப்பாகவும் இது அமையும். மழைக்காலங்களிலும் செங்கல் உற்பத்தி அதிகமாக இராத காலங்களில் மாற்றுச் செங்கள் உற்பத்தியில் அவர்கள் ஈடுபட இயலும். சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு விரைவில் அதிகரித்து செங்கல் உற்பத்திக்கு வளமிக்க விவசாய நிலத்தைப் பாழ்படுத்தக் கூடாது என்பது விதியாக அமலாக்கப்படலாம். அப்போது மாற்றுச் செங்கற்களே கைகொடுக்கக்கூடும். மேலும் செமி ஸ்கில்டு தொழிலாளர்கள் எனச் சொல்லப்படும் குறைந்த திறன் தொழிலாளர்களைக் கொண்டே மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்கலாம். இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தி மாற்றுச் செங்கல் உற்பத்தியைக் கூட்டலாம். 

பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் கான்கிரீட் கேவிட்டி ப்ளாக்குகளும் கான்கிரீட் சாலிட் ப்ளாக்குகளும் அதிகமாகப் பயன்படுகின்றன. இத்தகைய பெரு நகரங்களில் செங்கற்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுநர்கள் கான்கிரீட் ப்ளாக்குகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இத்தகு நகரங்களில் செங்கல் தயாரிக்கத் தேவைப்படும் தரமான களிமண் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம். கல் குவாரிகளில் கிடைக்கும் கழிவான கற்களே கான்கிரீட் ப்ளாக்குகளின் தயாரிப்புக்குப் போதுமானவை. 

கட்டுமானத் துறையில் ஈடுபடும் பொறியாளர்களும் கட்டுநர்களும் ஆலோசகர்களும் மாற்றுச் செங்கற்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே கான்கிரீட் ப்ளாக்குகளை காம்பவுண்ட் சுவர்களுக்கும், தற்காலிகக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்தும் போக்கு பரவலாக உள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியுள்ளது. 

சில தொழிற்சாலைக் கட்டிடங்கலுக்கும் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு இத்தகைய கான்கிரீட் ப்ளாக்குகளை உபயோகிக்கிறார்கள். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வணிக வளாகங்களின் கட்டுமானத்திலும் அதிக எடையைத் தாங்கும் தேவையில்லாத இடங்களில் கான்கிரீட் ப்ளாக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும். 

நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் இவை சுற்றுச்சூழலுக்கும் உகந்தவையாகவே உள்ளன. கட்டுமானச் செலவும் குறையும். வழக்கமான செங்கற்களாலான கட்டிடமே உறுதியானவை என்னும் பழமைவாத எண்ணத்திலிருந்து விடுபட்டு எங்கெல்லாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்தும் புதுமை எண்ணம் அனைவரிடம் உருவாக வேண்டும். அரசும் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவதை ஊக்கவிக்க வரிச்சலுகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது நல்லது.