இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

நைட் டிரெயின் டூ லிஸ்பன்

பரவசம் தரும் தேடல்


சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாஸ்கல் மெர்ஸியர் எழுதிய நாவல் நைட் டிரெயின் டூ லிஸ்பன். இந்த நாவல் ஜெர்மனியில் 2004-ல் வெளியானது. இதே நாவல் 2008-ல் ஆங்கிலத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது; பெஸ்ட் செல்லர் நாவல் என்னும் பெருமையும் கிடைத்தது. இந்த நாவலை இதே பெயரில் படமாக்கினார் டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குநர் பில்ல ஆகஸ்ட் (Bille August). இப்படம் முதலில் 2013 பிப்ரவரியில் ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ரெய்மென்ட் கிரெகோரியஸ் என்பவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவர், லத்தீன், ஹீப்ரு போன்ற பழங்கால மொழிகளில் நல்ல பரிச்சயம் கொண்டவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் தனியே வசித்துவருகிறார். படத்தின் தொடக்கத்தில் அவர் அவருடனேயே செஸ் விளையாடுவார். அவரது தனிமையை உணரும்போது மனத்தில் மெல்லிய சோகம் ததும்பும். ஒருநாள் அவர் வழக்கம்போல் கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. அவர் செல்லும் வழியில் உள்ள ஆற்றுப் பாலத்தின் மேல் ஒரு பெண் கீழே உள்ள ஆற்றில் குதித்து உயிரைவிட யத்தனிக்கிறாள். இதைப் பார்த்த கிரெகோரியஸ் பாய்ந்து சென்று அவளைத் தடுத்துத் தன்னுடன் அழைத்துவருகிறார். வகுப்பறையில் அவளை ஓரமாக அமர்த்திவிட்டு வகுப்பெடுக்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்தில் அவள் சென்றுவிடுகிறாள். ஆனால் அவள் அணிந்திருந்த சிவப்பு ரெயின் கோட்டை மறந்துவிட்டுப் போய்விடுகிறாள்.



அவளது கோட்டில் புத்தகமும் அதில் போர்ச்சுகலின் நகரான லிஸ்பனுக்குச் செல்லும் டிரெயின் டிக்கெட் ஒன்றும் உள்ளன. கிரெகோரியஸ் ரயில் நிலையத்திற்கு விரைகிறார். ரயில் கிளம்பும் சமயம். அவள் அங்கு இல்லை. வகுப்பறையைப் பாதியில் விட்டு வந்த அவர் சிறிதும் யோசனையின்றிச் சுமார் 2000 கி.மீ. தள்ளியுள்ள ஊருக்குப் போக அந்த ரெயிலில் ஏறிவிடுகிறார். அந்தப் பயணத்தின்போது அவர் வாசித்த அந்தப் புத்தகம் அவரது வாழ்வை மாற்றிப்போடுகிறது; அவரை அவருக்கே அடையாளம் காட்டுகிறது. அவருக்குள் உறைந்துபோயிருந்த பல வாசகங்களை அந்தப் புத்தகத்தில் அவர் உயிர்ப்புடன் கண்டு திகைக்கிறார். ஒரு பரவசமான உலகம் அவரை உள்ளிழுத்துக்கொள்கிறது. இது ஒரு கதை.

மற்றொரு கதை அந்தப் புத்தகத்தின் வழியே விவரிக்கப்படுகிறது. அதில் நாயகன் டாக்டரான அமெதேயு தே அல்பிரதோ. ஜோர்ஜ், ஜோவோ ஆகியோர் அவனுடைய தோழர்கள். ஜோர்ஜின் மனைவி எஸ்தபேனியா. அவர்களுக்குள் உள்ள உறவும் போர்ச்சுகல் சர்வாதிகாரி அன்டோனியோ தே ஒலிவெய்ரா சலசாரின் வலது சாரி ஆட்சிக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டமும் அதன் பாதிப்புகளும் சொல்லப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாட்டில் நீதிபதியாக இருப்பவர் அமெதேயுவின் தந்தை. சல்சாருக்கு எதிரான தனது கண்டனத்தைத் தந்தை எதிரே உள்ளபோதே சபையில் உரையாக முன்வைக்கிறார். இதனால் தந்தைக்கும் தனயனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
சர்வாதிகாரத்தின் தாக்கமும் நெருக்கமான நண்பர்களிடையே பெண்ணால் ஏற்படும் துரோகம், காதல், உறவு, பிரிவு ஆகியவையும் தத்துவார்த்தமாகவும் கவிமொழியிலும் காட்சிகளாகியுள்ளன. எஸ்தபேனியா எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில்வைத்திருக்கிறாள்.



மறைமுகப் போராட்டம் நடத்தும்போது அனைவரது முகவரியையும் தொடர்புஎண்களையும் அவள் மனதிலிருந்தே எடுத்துப் போடுகிறாள். அந்த ஞாபகங்கள் அவளுக்கு மறப்பதேயில்லை. படத்தின் தனித்துவமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இந்த இரு கதைகளும் மாறிமாறி, இறந்த காலமும் நிகழ்காலமும் பின்னிப்பிணைந்து வந்து செல்லும். தேடலை அடித்தளமாகக் கொண்டிருந்தும் ஒரு த்ரில்லரின் தன்மையையும் கொண்டிருப்பதால் மாறுபட்ட படமாகிறது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு சம்பவங்களை வெளிப்படுத்தும் தனித்தனியே துண்டு துண்டாகத் தெரியும் சம்பவங்களால் உருவாகும் முழு சித்திரம் படத்தில் வெளிப்படும் தருணத்தில் ஒரு முழுமையை உணர முடியும். அந்த முழுமை படம் குறித்தது மாத்திரமல்ல வாழ்வு குறித்ததுமாகும்.

இப்படம் உங்களை உற்சாகப்படுத்தும் படமல்ல, ஆனால் உள்முகப்படுத்தும் படம். உங்களது வாழ்வைப் பரிசீலிக்க வைக்கும் படம். படத்தின் கவித்துவமான, தத்துவார்த்தமான வசனங்களும் தொனியும் உங்கள்மீது நறுமணமாகப் படரும். அது உங்கள் உதிரத்தில் கலந்து மூளையைக் கலக்கும். அர்த்தமற்ற வாழ்வின் அர்த்தங்களைச் சொல்லிடத் துடிக்கும். அறத்திற்கும் கடமைக்கும் இடையேயான ஊசலாட்டத்தை உணர்த்தும். உறவு முக்கியமா, உண்மை முக்கியமா என்னும் கேள்விகளை எழுப்பும். தருணங்களால் ஆன வாழ்வில் திட்டமிடாமல் நம்மை இயக்கும் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்களுக்கு வாழ்க்கை தனது பரவசத்தைத் தர காத்திருக்கும் உண்மையை உணர்த்தும்.

தி இந்துவில் வெளியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக