இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், டிசம்பர் 01, 2014

ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம்

முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த, 27,000 அடிகள் நீளம் கொண்ட அந்தப் படத்தில் 39 காட்சிகளே இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை அனைத்தும் தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டவை, முன்னுதாரணமற்றவை. 


 முதன்மைக் கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகிய மூவரும் நடித்திருந்த போதும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் படத்தின் பிரதான தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே புதுமுகங்கள்.அந்தப் படக் குழுவினருக்குத் தொடர்ந்து படங்கள் கிடைத்திருந்தால் தமிழ் திரைப்பட வரலாற்றில் பெயர் சொல்லத்தக்கப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். 

திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்த்திருக்கும் தமிழ்ப் படமாக 'அவள் அப்படித்தான்' (1978) இருக்கும். அது வெளியான காலத்தில் மட்டுமல்ல இப்போது பார்த்தாலும்கூட அப்படி ஒரு கதையைக் கையாளும் துணிச்சலோ பக்குவமோ சமூகப் பார்வையோ இப்போதைய இளம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. 

படித்த, மத்திய தர வர்க்க இளைஞர்களுக்கும் சமூகத்திற்குமிடையேயான குழப்பமான உறவை, சமூகத்துடன் அவர்களுக்கு ஏற்படும் முரணை, ஆண் - பெண் உறவில் ஏற்படும் அகச் சிக்கலை கச்சிதமாகவும் நுட்பமாகவும் பேசிய படம் அது. பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற சிந்தனைகளை முன்னெடுத்த தமிழ்ப் படங்களில் முதன்மையான படமென அதைச் சுட்டலாம். 

திரைக்கதைகளுக்கான இலக்கணங்களாகத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த மரபுகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுப் படார் படாரென உண்மைகளைப் போட்டுடைக்கும் வசனங்கள், எண்ணிக்கையில் அதிகமான அண்மைக் காட்சிகள் எனத் புதிய காட்சிப்படுத்துதலைக் கொண்டிருந்த படம் அவள் அப்படித்தான். 



மத்திய தரப் பெண்களின் மனப் போராட்டத்தை, வாழ்வியல் சிக்கலைப் பாலசந்தர் அதிகமாகக் கையாண்டிருந்தாலும் சினிமாவின் அழகியல் கூறுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் ருத்ரய்யாவின் 'அவள் அப்படித்தான்' முன்னணிக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. நமது சமூகத்தின், உறவுகளின், ஊடகத்தின் போலித் தனங்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி உறித்துப் போட்ட துணிச்சல்காரர் அப்படத்தை இயக்கிய ருத்ரய்யா. 

சேலம் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் அவர். சினிமா கனவுகள் அவரைத் தூங்கவிடாமல் துரத்தியதால் அவர், சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை இயக்கம் பிரிவில் சேர்ந்து படித்தார். படித்து முடித்த பின்னர் குமார் ஆர்ட்ஸ் என்னும் பெயரில் சினிமா நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்னும் கதையைப் படமாக்க முடிவு செய்திருந்தார். நடிகர் கமல் ஹாசன் நடிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. தன் கதையைப் படமாக்க தி. ஜானகிராமன் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அப்படக் கனவு கலைந்துபோனது. 

அடுத்து ருத்ரய்யாவின் மனதைத் துளைத்தெடுத்த கதையே அவள் அப்படித்தான். அனந்துவின் சீரிய ஒத்துழைப்பில் எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் கே.ராஜேஷ்வர், ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் அப்படத்தை ருத்ரய்யா இயக்கினார். படமும் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளியான ஒருசில நாட்களின் இப்படத்தைப் பார்த்த புகழ்பெற்ற இயக்குநர் மிருணாள் சென் படத்தின் சிறப்பைப் பாராட்டிப் பேட்டி கொடுத்தார். அதன் பின்னர் படம் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஓடியது. 


வசூலில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கூட இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மறுக்க முடியாத படமாக நிலைபெற்றுவிட்டது என்பது இயக்குநர் ருத்ரய்யாவுக்குக் கிடைத்த உண்மையான வெற்றியே. 1980-ல் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்த கிராமத்து அத்தியாயம் அவரது இரண்டாவது படமும் இறுதிப் படமுமானது. தமிழ்த் திரையில் ருத்ரய்யாவுக்குக் கிடைத்தது ஓர் அத்தியாயம் மட்டும்தான் என்பது கசப்பான உண்மை. ஆனால் அந்த ஓர் அத்தியாயத்தை ஒரு வரலாறாக மாற்றிய பெருமையுடன் அவர் 18.11.2014 அன்று மறைந்துவிட்டார். 

தி இந்து இணையதளத்தில் வெளியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக