நடிகை அஸ்கு தேசியக் கட்சியில் சேர்ந்துட்டதா அரசல் புரசலாப்
பேசிக்கிட்டாங்க. அப்ப வெகுளி வெள்ளச்சாமி சும்மா சொல்றாங்கன்னு
விட்டுட்டான். ஏன்னா, ஏற்கனவே இப்படித்தான் நடிகர் பைக்தின் அந்தக்
கட்சியில் சேர்ந்துட்டாருன்னு சொன்னாங்க. ஆனா அவர் ஞாபக மறதியில் தன்னோட
கார அவர் கட்சி ஆபீஸுக்கு விடுறதுக்குப் பதிலா தேசியக் கட்சி ஆபீஸுக்கு
விட்டுட்டாராம். இது தெரியாம அவரு கட்சியில சேர்ந்துட்டாருன்னு தலைவரு
சொல்ல பெரிய பரபரப்பாயிருச்சு.
யாருமே இல்லாத தெருவுலகூட எதாவது நடந்தா அத நியூஸாக்கிற மாட்டமான்னு
துடிக்கிற பத்திரிகையாளர்கள் எப்பவும் குவிஞ்சிகிடப்பாங்களே. அவங்களுக்கு
யாராவது தும்மிட்டா போதும் டெங்கு பரவும் அபாயம்னு தலைப்பையே யோசிக்க
ஆரம்பிச்சு டைப்படிக்கத் தொடங்கிருவாங்களே. நடிகர் பைக்தின் மேட்டர
விட்டுவைப்பாங்களா! இதெல்லாம் தெரிஞ்ச வெள்ளை, நடிகை அஸ்கு அந்தக் கட்சியில
சேர்ந்திருக்க மாட்டாங்கன்னு நினைச்சான்.
ஆனா இப்ப பேப்பரிலேயே கொட்ட எழுத்துல போட்டுட்டாங்க. 1980-ல ஒரு படத்துல
மட்டும் நடிச்ச நடிகை இப்ப என்ன பண்றாங்கங்கிற அளவுக்கு நியூஸத் துருவி
துருவி தேடித் தேடி போடுற பத்திரிகைகள் இதுல பொய் சொல்லாதுன்னு
வெகுளிக்குத் தோணுச்சு. அதனால நடிகை அஸ்கு கட்சியில சேர்ந்த விஷயம்
உண்மையாத்தான் இருக்கும். அஸ்குன்னா உயிர் வெள்ளைக்கு. அஸ்கு படம்
ஒன்னுவிடாம எல்லாத்தையும் தியேட்டருல போய் பாத்திருக்கான் வெள்ள.
ஒருமுறை அவனோட தலைக்குழந்தை டைபாய்டுல துடிச்சிக்கிட்டிருந்த அன்னைக்குன்னு
பார்த்து அஸ்கு நடிச்ச தந்தைமகள் படம் ரிலீஸாச்சு. வெள்ளயால படம்
பார்க்காம இருக்க முடியல. நரம்பெல்லாம் விறுவிறுன்னு இருந்துச்சு. கூட
ரெண்டு மாத்திரையைக் குழந்தைக்குக் குடுத்துட்டுப் படம் பார்க்கப்
போயிட்டான். அந்த அளவு அவன் அஸ்கு மேல உயிரா இருக்குறான்.
ஏற்கனவே அஸ்கு மஞ்ச கட்சியில இருந்தாங்க. ஆனா அந்தக் கட்சியில ஏற்கனவே
நிறைய தலைவர்கள் இருந்ததால அங்க இருந்தா எப்படி அஸ்கு மேல வர முடியும்னு
வெள்ளைக்கு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் அவங்க பிரச்சாரத்துக்கு வந்ததால
மஞ்சக் கட்சிக்கே ஓட்டுப் போட்டான். அஸ்கு முதலமைச்சராயிட்டா எல்லாரையும்
சந்தோஷமா வச்சுக்குவாங்க. நாடும் நல்லா இருக்கும்னு வெள்ளைக்குத் தோணுச்சு.
இப்ப தேசிய கட்சிக்கு வந்ததால தமிழ்நாட்டுல அந்தக் கட்சி ஜெயிச்சா
அஸ்குதான் முதல்வருன்னு நினைச்சு வெள்ளை குஷியாயிட்டான். அந்தக் கட்சியில்
தேர்தலில் நிக்கிறதுக்கே ஆட்களை கூகுளில்தான் தேட வேண்டியதிருக்கும்.
தேர்தல் அறிவிச்ச உடனே வேட்பாளர் தேர்ந்தெடுக்குறதுக்குள்ளயே கட்சிக்கு
தாவு தீர்ந்துரும். வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் நாள்களில் எல்லா கட்சி
அலுவலகங்களும் ‘ஜே ஜே’ன்னு இருக்கும். தேசியக் கட்சித் தலைமை அலுவலகமோ எழவு
வீடு மாதிரி வெறிச்சோடிக் கிடக்கும். எல்லாத் தொகுதிகளுக்கும்
வேட்பாளர்கள் கிடைச்சுட்டாலே போதும் மாபெரும் வெற்றிதான். அப்படிப்பட்ட ஒரு
கட்சியில் அஸ்கு சேர்ந்ததால அவரு ஈஸியா தலைமைப் பொறுப்புக்கு வந்துரலாம்னு
கணக்குப் போட்டான் வெள்ளை.
தேசிய கட்சியின் கொள்கையான எளிமையை வாழ்க்கையில கடைப்பிடிக்கிறவர் நடிகை
அஸ்கு. அவரு பச்சைக் கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியில ஷோ ஒன்னு
பண்ணினாரு. அதுல அவரு எவ்வளவு குறைந்த துணியால ரவிக்கை தைச்சுப் போட
முடியுமோ அவ்வளவு குறைஞ்ச துணியால ரவிக்கை தைச்சுப் போட்டிருந்தாரு. இதுலயே
இவ்வளவு சிக்கனம் காமிக்கிறவரு ஆட்சிக்கு வந்தா இருக்குற நிதியை வச்சு
மக்களுக்குக் கண்டிப்பா நல்லது பண்ண முடியும்னு வெள்ளை நம்பினான்.
ஒரு பொருளாதார நிபுணருக்கு இருக்க வேண்டிய பண்பு இதுன்னு ஒரு அறிஞர்கூட
சொன்னாரு. அதைக்கூட நடிகை அஸ்கு கத்துவச்சிருந்தார். ஆனா இதைப்
புரிஞ்சிக்காம அவர விமர்சிக்கிறாங்களேன்னு வெள்ளைக்கு வருத்தமா இருக்கும்.
ஆனா அவரு எப்படி டிஸைன் டிஸைனா ரவிக்க போடுறாருன்னுப் பார்க்கவே நிறைய
தாய்க்குலங்கள் அந்த ஷோவப் பாத்தாங்க. அந்த அளவுக்கு மக்கள் ரசனையைப் பத்தி
தெரிஞ்சு வச்சிருக்கும் அஸ்கு கண்டிப்பா அரசியலில் ஜெயிப்பார்னு
வெள்ளைக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை.
சோர்ந்து கிடக்கும் கட்சிய உசுப்பேத்துவேன்னு அஸ்கு அறிக்கை விட்டாரு.
அதைக்கூட கிண்டல் பண்ணி இவரு என்ன லேகிய வைத்தியரான்னு எதிர்க்
கட்சிக்காரங்க வாட்ஸ் அப்ல மெஸேஜ் பாஸ் பண்ணினாங்க. ஒரு பெண்மணியை எப்படி
நடத்த வேண்டுங்கிற அடிப்படை நாகரிகம்கூட இல்லாதவங்களா இருக்காங்களேன்னு
வெள்ளைக்குக் கஷ்டமாப்போச்சு.
உண்மையில் தேசிய கட்சி தேர்தல் வெற்றிபெற ஒரே அஸ்திரம் அஸ்குதான். அதுல
வெள்ளைக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஏன்னா, தேசியக் கட்சியின் முக்கிய
பிரபலம் லாருக் எந்த மாநிலத்துக்குப் பிரச்சாரத்துக்குப் போனாலும் அந்த
மாநிலத்தில் கட்சி அதலபாதாளத்துக்குப் போயிடுது. ஜெயிக்குற மாதிரி தெரியுற
மாநிலங்களில்கூட அவர் போயிட்டா போதும் அப்படி ஒரு அலை அடிச்சு கட்சிய
காணாமல் பண்ணிருது. இந்த நிலைமைல அஸ்கு போன்ற துணிச்சலான ஒருத்தரத் தவிர
வேறு யாரால கட்சிய காப்பாற்ற முடியும்? காலம் பதில் சொல்லும்னு ஒரு
வேதாந்தி மாதிரி சொல்லிகிட்டே திரியுறான் வெள்ள.
தி இந்துவில் வெளியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக