வெகுளி வெள்ளச்சாமிக்கு சந்தோஷமான வாரம் இது. அவனோட தலைவர் குஜினி காந்த்
நடித்த யங்கா படம் ரிலீஸ் ஆகப் போகுது. பயங்கர உற்சாகமாயிட்டான் அவன்.
தலைவருக்கும் எழுபது வயது கிட்ட ஆயிருச்சு. ஆனாலும் இன்னும் டூயட், பஞ்ச்
டயலாக்குன்னு சும்மா அதிரடியா களம் இறங்கியிருக்காரு. ஐந்தாறு
வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் குஜினி காந்த் நடிச்ச படம் வருதுங்கிறது
அவனோட குதூகலத்துக்கு காரணம். ஸ்கூல் புக்குகளில் எல்லாம் உடல் மண்ணுக்கு
உயிர் குஜினிக்கு என ஒவ்வொரு பக்கத்திலும் எழுதி வைப்பான். அவ்வளவு
கிறுக்கு அவன்.
குஜினிகூட இந்தப் படத்துல நடிக்கிறது அவரோட பேத்தியின் க்ளாஸ் மேட்.
ஒருமுறை பேத்தியோட ஆண்டு விழாவுக்குப் போன குஜினிக்கு அந்தச் சிறுமியின்
நடனம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டாரு அந்தப் பெண்ணோட
ஒரு டூயட் பாடனும்னு. ஆனா அதுக்கு இப்பதான் நேரம் வாய்ச்சிருக்கு.
வயது அதிகமாயிட்டுதுன்னு ரசிகர்கள் ஏமாந்துறக் கூடாதுங்கிறதுல குஜினி
உறுதியாயிருந்தார். அவரப் பொறுத்தவரை வெள்ளச்சாமி போன்ற ரசிகர்களின்
சந்தோஷம்தான் முக்கியம். அதுக்காக எத்தனை படம் வேண்டுமானாலும் அவர்
நடிப்பார். ரசிகர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை நல்ல விஷயங்களையும்
தனது படங்களின் மூலம் கொடுப்பது தனது கடமை என அவர் நினைக்கிறார். சொத்தை
எல்லாம் எழுதி வைப்பார், நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பார். கல்வி
நிறுவனங்கள் தொடங்குவார். இன்னும் என்னென்ன உண்டோ அதையெல்லாம் படங்களில்
செய்துவிடுவார் குஜினி காந்த். வெள்ளைக்கு அதனால் அவர்மீது பயங்கர மரியாதை.
எல்லோரும் குத்துப்பாட்டு கும்மாங்குத்துன்னு படம் எடுப்பாங்க. ஆனால்
குஜினி காந்தின் படத்தைக் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம். ஆபாசமே
இருக்காது. ஒருமுறை குஜினி காந்தின் மேக்கப் தவிர படத்தில் வேறு ஆபாசமே
இல்லை என கோகோ படத்தின் விமர்சனத்தில் ஒரு நாளிதழ் தெரியாத்தனமாக
எழுதிவிட்டது. அவ்வளவுதான் குஜினியின் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். அந்தப்
பத்திரிகையின் பிரதிகளைக் கொளுத்தினார்கள். ஆனால் தனது அடுத்த படத்தின்
விளம்பரங்கள் முழுவதையும் அந்தப் பத்திரிகைக்கே வழங்கினார் குஜினி காந்த்.
அந்த அளவு எதிரிகளையும் நேசிக்கும் இயல்பு கொண்டவர் அவர். அதனால்தான்
வெள்ளை போன்ற ரசிகர்களின் மனதில் கடவுளாக வாழ்கிறார்.
யங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குஜினி, இவ்வளவு சின்ன
வயதுப் பெண்ணோட டூயட் பாடும் தண்டனையைக் கடவுள் தனக்குத் தந்துவிட்டானே
என்று வருந்தினார். வெள்ளை தன்னையும் அறியாமல் கண் கலங்கிட்டான். கடவுள்
தனக்குப் பிடிக்காதவங்களுக்கு நிறைய பணம் கொடுத்து கஷ்டப்படுத்துவார்.
என்னைப் பாருங்க எனது பணத்தால எனக்குச் சந்தோஷமே இல்ல. நிம்மதிங்கிறதே
போயிருச்சு. அடிக்கடி ஏதாவது சாமியாரைத் தேடி ஓடுகிறேன். இந்த நிலைமை
என்னோட ரசிகர்களுக்கு வர விடமாட்டேன்.
அதனால அவங்க எல்லோரும் ஓட்டாண்டி ஆகுற வரைக்கும் நடிச்சுக்கிட்டே
இருப்பேன். அதன் மூலம் எனக்குப் பணம் அதிகமாகச் சேர்ந்து நிம்மதி போகும்.
ஆனால் காசை எல்லாம் இழந்த என்னோட ரசிகர்கள் இமயமலை துறவிகள் போல வாழ்வின்
மகிழ்ச்சியை அடைவார்கள் என்றும் பேசினார். இந்த அளவு தன்னோட ரசிகர்கள் மேல்
உயிரா இருக்குற இன்னொரு நடிகர் பிறந்துதான் வரணும்னு வெள்ள நினைச்சான்.
இனிமே ‘யங்கா யங்கா நீ எப்போதும் யங்கா கிங்கா கிங்கா’ இங்க இன்னொருத்தன்
கிங்கா... ங்கிற பாட்டு பொறந்த கதையை பாடலாசிரியர் தங்கதகரம் ‘சந்தோஷ
ரொக்கம்’ பத்திரிகையில் விரிவாப் பேசியிருந்தாரு. சூரியனைப் பத்தி
எழுதுறதுக்கு நட்சத்திரங்களிடையே சொற்களைத் தேடி இரவு முழுவதும்
காத்திருந்தாகவும் பொழுது புலர்ந்த வேளையில் வார்த்தைகளும் வசப்பட்டதாகவும்
அதற்கு குஜினியின் ஆன்மிக ஷக்தியே காரணம் என்றும் புளகாங்கிதம்
அடைந்திருந்தார்.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி மீடியாக்கள் ஏகப்பட்டதை எழுதித்
தள்ளின. ஒரு புக் விடாம எல்லாத்தையும் வெள்ளை வாங்கிப் படிச்சான். தலைவரோட
தோல் சுருக்கம் தெரியக் கூடாதுங்கிறதுக்காக ஸ்பெஷலா அமெரிக்காவுல இருந்து
வரவழைச்ச அயர்ன் பாக்ஸ் மூலம் தோல் சுருக்கத்தை எல்லாம்
நேர்த்தியாக்கியிருக்காங்க. கறுப்பு மயிர்களை எல்லாம் கனடாவிலிருந்து
கொண்டுவந்திருக்காங்க. கடைவாயில் ஒரு பிளாட்டினப் பல் பொருத்தியதால் அது
தெரியும்படி வாயை அகற்றி குஜினி சிரிக்கும் சிரிப்பு ரசிகர்களுக்கு நல்ல
விருந்தாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது.
ஓபனிங் ஷோ டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய். ஆனால் எப்படியும் படத்தைப்
பாத்திரணுங்கிறதுல வெள்ளை குறியாய் இருந்தான். கையில் காசில்லை. வீட்டில்
அவசரத்துக்கு அடகு வைக்க தங்க நகைகூட இல்லையே என வருத்தம் வெள்ளைக்கு.
அப்போது ரத்த தானம் தேவை என்ற எஸ்.எம்.எஸ். அவனுக்கு வந்தது. உடனடியாக
ரத்தத்தைக் கொடுத்துப் பணத்தைத் தேற்றினான் வெள்ளை. டிக்கெட்டையும்
வாங்கிவிட்டான். இரவு உறங்கியபோது வந்த கனவிலேயே படத்தைப்
பார்த்துவிட்டான். ரசிகர்களுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் தலைவன் படத்தை
ரத்த தானம் செய்து பார்க்கப் போவதில் வெள்ளைக்கு அளவில்லாத சந்தோஷம்.
தி இந்துவில் வெளியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக