இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜூலை 23, 2014

தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர்

பால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23


சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 அன்று பிறந்தார். சிப்பாய்க் கலகம் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டு முன்னர் பிறந்த திலகர் ஓர் அறிஞர்; கணிதத்தில் புலமை மிக்கவர்; தத்துவவாதி; தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த திலகர் சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் தாயை இழந்த திலகர் பதினாறு வயதில் தந்தையையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்ட திலகர் அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். அதனால் தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார்.

ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மைவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.


தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது. இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.

1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இருந்த அவரது இல்லத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக