மீன்களின் மொழி நீர்ப்பரப்பில் எழுதப்படுகிறது
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், ஜனவரி 20, 2010
பேசும் கண்கள்
திங்கள், ஜனவரி 11, 2010
அறிவுப் புரட்சி 2010
வியாழன், டிசம்பர் 31, 2009
ஏதோ சொல்ல இருக்கிறது

எக்ஸ்க்யூஸ்மீ நீங்க தான் அந்த அப்பாவியா நடத்துங்க நடத்துங்க...
ஊரில் எல்லோரும் - பெரும்பாலானோர் - மிக மகிழ்ச்சியாக புத்தாண்டைக்கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஏனோ தெரியவில்லை மனம் கொண்டாட்டங்களின் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவதில்லை. சிறுவயது முதலே மிக மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் என்று எதுவுமே நினைவிலில்லை. மிக துக்கமாகவும் எதுவும் தோன்றியதில்லை. ஆனாலும் துக்கங்களும் துயரங்களும் எனக்குப் பிடிக்கும் என்று தோன்றுகிறது. வாழ்வில் பெரிய துன்பமும் வந்ததில்லை. பெரிய மகிழ்ச்சியும் ஏற்பட்டதில்லை. எது துக்கம் எது மகிழ்ச்சி எதுவுமே புரியவில்லை. ஏன் இப்படித் தோன்ற வேண்டும்? பெரும்பாலானவர்கள் போல் இருக்க முடியாதது ஏன்? இப்படியெல்லாம் கிறுக்கத் தோன்றுவது எதனால்? ஏன்களின் கோட்டைக்குள் வாழ்வது எதனால். என்னைச் சுற்றி மிக மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்போதும் நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழல்வதோ என்றுதான் தோன்றும் அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. சோகங்கள் இல்லாத வாழ்வில் பொய்யாய் ஒரு சோகத்தை உருவாக்கிக்கொண்டு அதிலே முழுவதுமாய் என்னை மூழ்கடித்துவிட்டு இன்பம் காணுவது ஒரு தனி சுகம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுகம். மனம் போன போக்கில் எதையாவது எழுதுவது என்பது மனநோயா மனநோய்க்கான மருந்தா தெரியவில்லை. Everybody wish you happy new year என எல்லோருக்கும் சொல்லலாம்தான் ஆனால் விருப்பமே இல்லாமல் அதையேன் சொல்ல வேண்டும்? சமூகச் சூழலோடு ஒத்துப்போகவே முடியாதா? பத்துவரி எழுதினாலே பதினைந்து முறை படித்துப்பார்க்க தோன்றுகிறது. எப்படித்தான் இணையத்தில் சளைக்காமல் எழுதித் தள்ளுகிறார்களோ நமது எழுத்தாள பிரம்மாக்கள். டைரியில் விரும்பியதைக் கிறுக்கிக்கொள்வதைப் போல் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள வசதியாக இருக்கிறது.யாருக்காக அல்லது எதற்காக எல்லாம். எல்லாம் நமக்காகவா தனக்காகவா.
வெள்ளி, டிசம்பர் 18, 2009
வெளியில் மிதக்கும் ஓவியம்
நள்ளிரவு, சாலையில் நடந்துபோகும் பெண்...
வசூல் ராஜாவும் சாமான்யமானவனும்

புனிதமாகக் கருதப்பட்ட கல்வியும் மருத்துவமும் காசு கொழிக்கும் தொழில்களாக மாறியதன் அவலம் சாதாரண மனிதர்களை வாட்டிவதைக்கிறது. மருத்துவம் தரும் மகராசர்கள் தங்களை மாண்புமிகுக்களாகக் கருதி கதிகலங்கவைக்கின்றனர்.
சமீபத்தில் காய்ச்சல் காரணமாக ஒரு மருத்துவரைப் பார்க்கப் போனேன். மளிகைக் கடைக்காரர் போல் வரிசையாகப் பணத்தை வகை பிரித்து அவரது மேசையின் உள்ளே வைத்திருப்பவரது கவனம் எல்லாம் காசு வாங்குவதில் தான் உள்ளதே தவிர நோயாளியின் நோய் குறித்து விசாரிப்பதில் இல்லை. போன உடனே வைரஸ் காய்ச்சல் என மாத்திரை. அதை எழுதிக்கொடுக்க ஆகும் நேரத்தில் அடுத்த நோயாளியைப் பார்க்க வசதியாக மருந்து எழுதிக்கொடுக்க ஓர் உதவியாளர். ஏதோ டெஸ்ட் எழுதிக்கொடுத்தார். அது என்ன டெஸ்ட் எனக் கேட்டதற்கு அவருக்கு வந்ததே கோபம். எரித்துவிடுவதுபோல் பார்த்துவிட்டு 'சொன்னதை மட்டும் செய்' என எச்சரிப்பதுபோல் நடந்துகொண்டார்.
பணம் தரப்போகிறவனுக்கு எதனால் அந்த டெஸ்ட் என அறிந்துகொள்ளக்கூட உரிமை இல்லையா? ஆனால் அவர் மருத்துவம் படித்துள்ள மகத்தான மனிதர். அவர் எழுதித்தந்த டெஸ்ட்டை நவீன வசதிகளோடு சுவருக்கு சுவர் விலை உயர்ந்த டிவி அலங்கரித்துக்கொண்டிருந்த ஸ்கான் சென்டரில் எடுக்கச் சொல்லியிருந்தார். அந்த ஸ்கான் சென்டர் அவருக்கு அளித்திருந்த லெட்டர் பேடில் தான் டெஸ்ட் குறித்து எழுதித்தந்திருந்தார். மலேரியா டைபாய்டு குறித்த டெஸ்ட் அது. இரண்டுமே இல்லை எனக்கு என ரிப்போர்ட் சொன்னது. அதற்கான செலவோ ஒட்டிக்கு ரெட்டி. டாக்குக்கு (டாக்டரைச் செல்லமாக) கமிஷன் கிடைத்திருக்கக் கூடும். மன உளைச்சல்தான் மிச்சம் எனக்கு. இதில் அந்த மருத்துவர் நல்லவர் என மக்களிடம் கருத்து நிலவுகிறது. மற்ற மருத்துவர்களை நினைத்தால் ஆழ்வார்பேட்டை ஆண்டவனது படம் மனதில் வந்துபோகிறது. எந்த மருத்துவரையும் மனதார நம்ப இயலவில்லை. வியாதி வராத வரை தப்பித்தோம் வந்தால் நம் கதி அதோ கதி தான். சிறு வயதில் பார்த்த ஒரு துணுக்கு ஞாபகத்தில் வந்து போகிறது. கையில் ஆயுதங்களோடு கொள்ளையடிக்க ஒரு கும்பலும் ஆபரேஷன் தியேட்டருக்கு ஒரு கும்பலும் செல்லும். அடுத்த படத்தில் கொள்ளையடிக்க சென்ற கும்பலில் ஒருவர் ஆபரேஷன் செய்த கும்பலைப் பார்த்துச் சொல்வார் இப்படி, ‘அடப்பாவிகளா நாங்களாவது உயிரோடாவது விட்டுவிடுகிறோமே’ என. இது கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பென்றால் இன்றைய நிலையை நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.
மாமா நீங்க எங்க இருக்கீங்க?

இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு எதேச்சையாகத் தன் மனைவியை போன் குரலில் கண்டுபிடித்து சுமதி என்ன ஞாபகம் இருக்காம்மா...ன்னு வசனம் பேசும் திரிசூலம் சிவாஜியை யாரும் மறந்திருக்க முடியாது. அதுலயும் குறிப்பா, இடையில் ஒரு முறை எக்ஸ்டென்ஸன் ப்ளீஸ் அப்படின்னு கத்துவாரு. அதுதான் சிவாஜி. ட்ரெங்க்கால் புக் பண்ணி பேசிய அனுபவம் உள்ளங்களுக்குத் தான் இதோட முக்கியத்துவம் புரியும். கலர் கலர் மொபைல்ல காதலியோட மணிக்கணக்கா கதைக்கும் இளைஞர்களோட பிரச்சினை எல்லாம் சிக்னல் ப்ராப்ளம் தான். லைன் கட்டாகி திரும்ப கிடைக்குறதுக்குள்ள வேற யாரும் பார்ட்டிய பிக்கப் பண்ணிரக் கூடாதுங்குற அவஸ்தை அவங்களுக்கு. பாவம் பாஸ்ட் புட் யுகம்.
நம்மோட லைஃப்ல எவ்வளவோ பேரைப் பார்க்குறோம்; பழகுறோம். சிலரை ஏதோ ஒரு கட்டத்தில் ஏதேதோ காரணங்களால் பிரிந்துவிடுகிறோம். ஆனால் சப்கான்ஸியஸ்ல அவங்க உலவிட்டே இருக்காங்க. அப்படிப்பட்ட சிலரை எங்கேயாவது ஒரு முறையாவது பார்த்துற மாட்டோமான்னு மனம் ஏங்கும். அப்படிப்பட்ட ஒருவரது ஞாபகத்தின் விளைவே இப்பதிவு. அவர் பாண்டியன் மாமா. அவரை நான் கடைசியாகப் பார்த்தது 1987இல். கோவில்பட்டியில இருந்த பாண்டியன் மாமா வீட்டுக்கு நாங்க முழுப் பரீட்சை லீவுல போவோம். மாமா அங்க இருந்த ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்தார். அங்க இருக்குற நாட்களில் நாடார் ஸ்கூல்ல நடக்குற பொருட்காட்சிக்குப் போவோம். டெய்லி ஒரு படம் போடுவான் அங்கே. பூவிழி வாசலிலே படம்கூட பொருட்காட்சியில் பார்த்ததா ஞாபகம். தென்காசி அருகே இருந்த இலஞ்சியில் இருந்தோம் நாங்க. குற்றாலம் சீஸனுக்கு குடும்பத்தோடு மாமா வருவார். பல ஆண்டுகள் இந்த வழக்கம் தொடர்ந்தது ஆனால் ஏனோ 87ஆம் வருஷத்தோடு அந்த உறவு முடிந்துபோனது. எனக்குத் தெரிந்து எந்தச் சண்டையும் இல்லை எங்கள் குடும்பங்களுக்கிடையே. இப்போது அவர் எங்கே இருப்பார் அவரது குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் அறிய அவ்வப்போது ஆவல் ஏற்படும். ஆனால் தேடிச்சென்று கண்டுபிடிக்க ஏனோ தருணம் வாய்ப்பதேயில்லை. சில நட்புகளும் சில உறவுகளும் முன்னறிவிப்பின்றி காற்றோடு காற்றாய்க் காணாமல் போய் விடுகிறதே! ஏன் காலம் திடீரென இப்படிச் சிலரைப் பிரித்துவிடுகிறது? (இந்தமாதிரியான விபரீத எண்ணங்கள்தாம் சிலரை பொக்கிஷம்வரை கொண்டுபோய் பொசுக்கிவிடுகிறதோ?) பாண்டியன் மாமா போல் பலர் அப்படி அப்படியே சில குறிப்பிட்ட காலங்களில் வந்து சென்றிருக்கிறார்கள். நினைவுகளாய் நிலைத்துவிட்ட அவர்கள் நிஜத்தில் வரப்போவதே இல்லை தான். ஆனாலும் வந்துவிட்டால் எப்படி இருக்கும் என மனம் ஏங்காமல் இருந்ததே இல்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் புரியவேஇல்லை. புரிந்தால் ஏன் இப்படி நள்ளிரவில் அமர்ந்து வலைப்பதிவு செய்யப்போகிறோம்?
