அவள் பெயர் ...
அவளை நான் காதலிக்கிறேன்.
சுவை மிகு தருணத்தில் அறுபடும் கனவாய்
அடிக்கடி காணாமல் போகும்
அவளை நான் காதலிக்கிறேன்
யாரையாவது காதலித்திருக்கிறாயா என
யாரேனும் வினவும்போதெல்லாம்
இல்லையெனத் தைரியமாகப் பொய்யுரைக்கும் போதெல்லாம்
ஊமையாய்
உள் நெஞ்சைப் பிறாண்டும்
அவளை நான் காதலிக்கிறேன்
ஊகிக்க முடியாத பொழுதுகளில்
எதிர்பாராத இடங்களில்
எதிப்படும்
அவளைத் தான் காதலிக்கிறேன் நான்..
கரு மேகம்
கன மழை
இரண்டுக்கும் இடைப்பட்ட தருணங்களில்
வந்து மறையும்
அவள்
முத்தம் தந்ததில்லை
முற்றும் துறந்ததில்லை
நுனி விரல் உரசும் போது மட்டும்
நூறு சர்ப்பங்கள் நுழைந்து கொத்தும்
காமக் களிறு ஒன்று
பிளிறிச்செல்லும் காடுமேடெல்லாம்
கண்ட துண்டமாய் வெட்டிப்போட ஆசை அலைபாயும்
ஆனாலும் என்ன செய்ய
அவளை நான் காதலிக்கிறேன்.
உறக்கம் தொலைத்த இரவுகளில்
இரக்கம் கொன்ற நினைவுகளில்
உலா வரும் அவளை ஒருநாளும்
மறந்ததில்லை
அவளுக்கு முகம் மட்டும் இருந்ததில்லை
அவளைத் தான் நான் காதலிக்கிறேன்
ஆனால் ஏன்?
(தூக்கம் வராமல் பாயைக்கிழிக்கவைக்கும் பிறாண்டல் சமயத்தில் கணினி கிடைத்ததால் கிடைத்த கிறுக்கல் இது. உறக்கத்தில் உளறுவது போய், அதையும் எழுதிவைக்க ஏனோ தோன்றியது)
சூப்பர் செல்லப்பா. கவிதைத் தொகுப்பு எப்போ?
பதிலளிநீக்குமிரட்சியுடன்,
முரளிதரன்
நன்றி. கேள்வியெல்லாம் கேட்டு பயமுறுத்தாதீங்க.
பதிலளிநீக்கு