சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று 06.01.2016 வெற்றிகரமாகத் தொடங்கியது. டிசம்பர் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய விழா டிசம்பரின் கடும் வெள்ளம் காரணமாக கால தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. இன்று கேஸினோ தியேட்டரில் ஃபார் எவர் என்னும் திரைப்படம் பார்த்தேன். கிரேக்க நாட்டுப் படம்.
எளிமையான கதை. ஆனால் தத்துவார்த்தமான படம். மத்திய வயதைக் கடந்த ஆணுக்கு ஒரு பெண் மீது ஏற்படும் அன்பு தான் படத்தின் மையம். படத்தில் வசனங்கள் சொற்பம். படத்தின் மிகுதியும் காட்சிபூர்வ நகர்வே. படம் முழுவதுமே ஒரு பனிமூட்டம் போன்ற கலர் டோனைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட படத்தின் மனநிலையும் அதுதான். இரவுப் பொழுதில் மெட்ரோ ரயில் செல்லும் வழியெங்கும் கேமரா செல்வது ரம்மியம். லாங் ஷாட்டில் இரவில் தூரத்தில் ரயில் போகும் அழகை கேமரா படம் பிடித்திருக்கும் விதம் ரசிக்கத்தக்கது. தனியாகவே இருக்கும் நாயகன் தனியாகவே இருக்கும் நாயகி. இவர்கள் தான் மையப் பாத்திரங்கள். அவர் ரயில் இன்ஜின் டிரைவர். நாயகி படகு போக்குவரத்துத் துறையில் பயணச்சீட்டு வழங்கும் பணியில் உள்ளவர்.
வசனங்களைப் போலவே கதாபாத்திரங்களும் சொற்பமே. நீளம் குறைந்த படம். மிகவும் நிதானமாக ஆனால் அடர்த்தியான காட்சிகள் நிரம்பியிருந்த படம். மிகவு சிறந்த படம் என்று சொல்ல முடியவில்லை என்றபோதும் பார்க்கத் தகுந்த படமாக இருந்தது. பின்னணி இசையும் படத்தில் மிக மிக சொற்பம். பல காட்சிகள் இசையே இல்லாமலேயே நகர்கிறது.மிக அவசியப்பட்ட இடங்களில் மட்டும் காட்சிக்குத் தேவையான இசை சன்னமாக ஒலிக்கிறது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பை விதவிதமாகச் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கால ஓட்டத்தில் நாம் இழந்துபோனவற்றை எல்லாம் படம் நினைவுபடுத்துகிறது. நவீன வாழ்வு நம் கலாசார வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்தெடுப்பதை நயமாக எடுத்துச்சொல்கிறது. படத்தின் பூடகத் தன்மைக்காகவும் காட்சிகளின் நிதானத்துக்காகவும் அழகுக்காகவும் இந்தப் படத்தைக் காணலாம். திரையில் எழுதப்பட்ட கவிதை இந்தப் படம் எனலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக