மரங்களற்ற சாலையில் இறைந்து கிடக்கும் இலுப்பைப் பூக்கள்
சினிமா பற்றிப் 'பல' நூல்களைத் தமிழுக்குத் தந்திருப்பதாக முன்னுரையில்
பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கும் அஜயன் பாலா இதற்கு முன் சினிமா குறித்து இரண்டு
நூல்கள் மட்டுமே எழுதியுள்ளதாக இந்நூலின் முதல் பக்கம் தெரிவிக்கிறது. உணர்ச்சிமிகு
படைப்பாளிகளின் ஆழமான நகைச்சுவை உணர்வு வெளிப்படும் இடங்கள் நமது யூகங்களுக்கு
அப்பாற்பட்ட விஷயம் என்பதைப் பாலுமகேந்திராவின் முன்னுரை உணர்த்துகிறது. ஆள்காட்டி
விரலின் நுனியால் தட்டினால் கணினி ஆயிரம் தகவல்களை அள்ளி இறைத்துவிடும். ஆகவே,
தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க இக்காலத்தில் வெறும் தகவல்களால் நிறைந்த புத்தகம் என்பது
ஒருவகையான 'ஏமாற்றமே'.
சினிமா குறித்த அடிப்படை அறிவு, ரசனை பற்றிய புத்தகங்களின் தேவையே இப்போது அவசியம்
என முன்னுரையில் பாலுமகேந்திரா தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தேவையை இது
பூர்த்திசெய்கிறதா? இதில் இடம்பெற்றுள்ள தகவல்களின் நெரிசல் தீபாவளிக்கு முந்தைய
தின தி. நகர் ரங்கநாதன் தெருவை நினைவூட்டுகிறது. இந்தியா முதலில் சுதந்திரம் பெற்றது
எப்போது? நிலவில் கால்வைத்த முதல் வீரர் யார்? ரீதியிலான பொது அறிவுக் கேள்வி
பதில்கள் தொகுக்கப்பட்ட நூல்களின் விற்பனை புறநகர் ரயில்களில் அமோகமாக நடக்கும்.
அவற்றிற்கும் சினிமாப் பொது அறிவு பொதியப்பட்டுள்ள இதற்கும் என்ன வித்தியாசமென
எண்ணிப் பார்த்தால் விலை மட்டுமே நினைவிலாடுகிறது. முந்தையவற்றின் விலை பத்தோ இருபதோ
தான்.
"இந்தப் புத்தகம் எனக்கு ஏதேனும் நற்பெயரை தருமானால் அதில் சரி பாதியை நண்பர்
ஆந்திரா வங்கி பாலசுப்ரமணியனுக்கும் சேருவது நியாயமாக இருக்கும் என நம்புகிறேன்"
(பக். 13) என்பதைப் புத்தகத்தைப் படித்து முடித்த பின்பு பார்க்கும்போது
திருவிளையாடல் தருமி "சரி . . . பரிசு கிடைத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன் . . .
வேறெதாவது கிடைத்தால் . . ." எனச் சிவனிடம் அப்பாவித்தனமாக வினவியது மனத்தில்
வந்துபோனது. மேற்குறிப்பிட்ட வாக்கியத்தைப் புத்தகத்தில் உள்ளபடியே
தந்திருக்கிறேன்.
சினிமாவின் முதல் திரையீட்டு நிகழ்வு தினம் இப்புத்தகத் தின் 16, 31ஆம் பக்கங்களில்
1895, டிசம்பர் 28 என்றும் 56 ஆம் பக்கத்தில் டிசம்பர் 25, 1895 என்றும் 159ஆம்
பக்கத்தில் டிசம்பர் 27, 1895 என்றும் அச்சிடப்பட்டுள்ளது. எது சரி எனும் சந்தேகம்
வாசகனுக்கு எழுவது இயல்பு. கிட்டத்தட்ட ஒரு ஆய்வுநூல் போன்று வெளியாகியுள்ள இதில்
மேற்கோள் நூல்களின் பட்டியலாவது இச்சந்தேகத்தைப் போக்கும் எனத் தேடினால் அதற்கும்
வழியில்லை. ஏனெனில், ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள புத்தகத்தில் அப்பட்டியல் ஏனோ
இடம்பெறவில்லை.
மூளைக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தார் (பக். 40) எனக் கட்டுரையின் நடுவே
வரும் வரியைப் படிக்கும் தருணத்தில் அஜயன் பாலா அடிப்படையில் சிறுகதை எழுத்தாளர்
என்ற இப்புத்தகத்தின் முதல் வரியைப் படித்த ஞாபகம் எழுந்தடங்கியது.
The Mother and the Law எனும் தலைப்பில் இயக்குநர் டி. டபிள்யூ.
கிரிபித் படம் ஆரம்பித்ததாகப் பக்கம் 82இல் இண்டாலரென்ஸ்
(Intolerance) எனும் துணைத்தலைப்புக் கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு செய்தி வருகிறது. கட்டுரையின்
முடிவில் கிரிபித் இயக்கிய படமென
Intolerance குறிப்பிடப்படுகிறது.
The Mother and the Law  Intoleranceஆக மாறியதா
இரண்டுக்கும் என்ன தொடர்பு போன்ற தகவல்கள் கண்களுக்குப் புலப்படவில்லை. பிதாமகன்கள்
கட்டுரையில் பிரபல இயக்குநர் ஐஸன்ஸ்டைன், செர்கை ஜஸன்ஸ்டைன்
(Sergai Jisenstain) எனக் குறிப்பிடப்படுகிறார். 157, 171ஆம் பக்கங்களில் இதே
Jisenstain ஐஸன்ஸ்டைன் ஆகியுள்ளார். சினிமாவின் முக்கியமான ஓர் ஆளுமையின்
பெயர் என்பதால், சினிமாவை நேசிப்பவர்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள
முடியாது.
"இன்று ஒரு இளம் இயக்குநர் தனது வாய்ப்புக்காகச் சிறிய கையடக்க கேமராவில்
குறும்படங்களை எடுத்துக்காண்பிப்பது போலத்தான் . . ." (பக். 166) என்ற யதேச்சையான
வரிகள் குறும்படங்கள் குறித்த பொதுப்புத்தியின் புரிதலா நூலாசிரியரின் புரிதலா
என்பது விளங்கவில்லை. உலகத் தமிழ் ஆவண, குறும்பட விழாவை நண்பர்களுடன் 2002இல்
நடத்தியவர் அஜயன் பாலா என்பதால் அது பொதுப்புத்தியின் புரிதல் எனக் கொள்வதற்கான
சாத்தியமுள்ளது.
முகஸ்துதி என்னும் மோகத்தில் மூழ்கிக்கிடக்கும் தமிழ்த் திரைப்படத் துறையின்
மோகத்தைத் தெளிவிக்கும் சினிமாவின் உண்மையான வீரியத்தைப் புரியவைத்துத் திரைப்பட
ரசனையை மேம்படுத்த உதவும் வகையிலான புத்தகங்களே நமது தேவை. இதைப் போன்ற தகவல்
களஞ்சியங்கள் அல்ல. பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரிய
பொக்கிஷம் இப்புத்தகம் என இயக்குநர் பாலுமகேந்திரா சொல்லியிருக்கும்போது வேறென்ன
பாராட்டு வேண்டும் இப்புத்தகத்திற்கு? ஆனாலும் புத்தகத்தைக் குறித்த உண்மையான
புரிதலை அஜயன் பாலாவே வெளிப்படுத்தியுள்ளார் தன்னுரையில் இப்படி, "எங்கே அறிவு ஜீவி
முத்திரை நமக்கு விழுந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக "இந்திர குமார்" எனும்
பெயரில் இந்தத் தொடரை எழுதினேன். அது பொருளற்றது என்பதை இப்போது வெட்கத்துடன்
உணர்கிறேன்" (பக். 12) எந்தவிதமான வெளிப்பூச்சும் இன்றி உண்மையை அப்படியே சொல்லிய
அஜயன் பாலா பாராட்டுக்குரியவரே.
ஆசிரியர்: அஜயன் பாலா
பக். : 176 விலை: ரூ. 150
முதற்பதிப்பு: டிசம்பர் 2007
வெளியீடு
கே. கே. புக்ஸ் (பி) லிட்,
19, சீனிவாச ரெட்டி தெரு
தி.நகர், சென்னை 600 017
பக். : 176 விலை: ரூ. 150
முதற்பதிப்பு: டிசம்பர் 2007
வெளியீடு
கே. கே. புக்ஸ் (பி) லிட்,
19, சீனிவாச ரெட்டி தெரு
தி.நகர், சென்னை 600 017
காலச்சுவடு ஆகஸ்ட் 2008 இதழில் வெளிவந்த மதிப்புரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக