இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஜூன் 04, 2019

நட்சத்திர நிழல்கள் 8: அனுராதா பாடிய புதிய ராகம்



தமிழ்த் திரையுலகில் திரைப்படங்களை இயக்கிய பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆர்வத்திலும் ஆசையிலும் சிலர் ஓரிரு படங்களை இயக்கியுள்ளனர். அப்படியான ஆர்வத்துடன் படத்தை இயக்கியவர்களில் ஒருவர் ஜெயசித்ரா. துணிச்சலான நடிகை என அறியப்பட்ட ஜெயசித்ரா 1991-ல் வெளியான, தனது முதல் படமான ‘புதிய ராக’த்தில் அனுராதா என்னும் வேடத்தை ஏற்றிருந்தார். அதுவே பெரிய துணிச்சல்தான். இது போதாதென்று இந்தப் படத்தின் கதையை, திரைக்கதையை எழுதியதுடன் இயக்கித் தயாரித்துமிருந்தார்.

அனுராதா பேரும் புகழும் பெற்ற பெரிய பாடகி. சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டிருப்பார். அவருக்கு வாய்த்த துணைவன் அக்மார்க் கணவன். பெயர் ரகு ராமன். பெயர்தான் புராணக் கதாபாத்திரத்தின் பெயரே தவிர. அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான குணங்களைக் கொண்டவர் அவர். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மனைவியைச் சந்தேகப்படுவது மட்டுமே.

படத்தின் மையம் குடும்ப வன்முறைதான். அதற்கேற்றபடி குடும்பத்தில் அனுராதா சம்பாதித்துக்கொண்டே இருப்பார். ரகுராமனோ அதை வியாபாரத்தில் இழந்துகொண்டே இருப்பார். வியாபாரம் வியாபாரம் என்று சொல்வாரே தவிர அவர் எந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை யாராலும் கண்டுகொள்ள முடியாது. ரகுராமனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என்று சொல்லுமளவுக்குப் புகை, குடி, கள்ள நோட்டு, பெண்கள் என அவரது கைங்கர்யங்கள் மிகப் பரந்த தளத்திலானவை. பூமிமாதா போல் இவை எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வார் அனுராதா. காரணம் அவருக்கென்று யாரும் கிடையாது. வந்து வாய்த்தவன் இந்தப் போக்கிரித்தனமான கணவன் மட்டுமே. அவள் சாய்ந்துகொள்ளவும் தோள்வேண்டுமே? கணவன் எந்தத் தவறு செய்தாலும் தனக்கு நல்ல கணவனாக, தன்னிடம் பிரியமானவனாக நடந்துகொண்டால் மட்டும் போதும் என நம்பும் எண்ணற்ற மனைவிகளின் பிரதிநிதிகளில் ஒருவர்தான் அனுராதா. ஆனால், அப்படி எந்தக் கணவரும் நல்லவிதமாக நடந்துகொள்ளாதது போலவே ரகு ராமனும் நடந்துகொள்கிறார்.  

ராஜா என்னும் பாடகனை அனுராதா காதலித்திருப்பார். அவரையும் தியாகம் செய்துவிட்டுத் தான் ரகு ராமனைக் கைப்பிடித்திருப்பார். ராஜாவுக்காக அவருடைய முறைப்பெண் ஷீலா இருப்பார். இவர்கள் இணைய வேண்டுமென்றால் ராஜா வாழ்விலிருந்து அனுராதா விலக வேண்டுமே. ராஜாவின் பாட்டி அனுராதாவிடம் அந்தக் கோரிக்கையை வைக்க தன் காதலனை விட்டுக்கொடுத்து விலகிடுவார் அனுராதா. ஆக, அனுராதா காதலித்தவனை மணந்துகொள்ள முடியவில்லை; மணந்துகொண்டவனைக் காதலிக்க முடியவில்லை. இது அனுராதாவுக்கு மட்டுமே நிகழ்ந்த விபத்தில்லை. நூற்றுக்குப் பத்துப் பெண்கள்தாம் இந்த விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்கள்; ஏனையோர் இதில் சிக்கியிருக்கிறார்கள்.

ரகுராமன் மட்டுமே அனுராதாவைச் சுரண்டவில்லை. அவனுடைய குடும்பமே ஒட்டுண்ணியாய் அனுராதாவை உறிஞ்சுகிறது. அதை முடிந்த அளவு அனுராதாவும் அனுமதித்துக்கொண்டே இருக்கிறார். வேறென்ன செய்ய முடியும்? அவர் பெண்ணாயிற்றே? அனுராதாவின் பணப்பைகளை களவாடிய அந்தக் குடும்பம் அவருடைய கருப்பையைக் கூட விட்டுவைக்காது. அப்போதுதான் விழித்துக்கொள்கிறார். அப்போதும் விழித்துக்கொள்ளாவிட்டால் வாழும் வாழ்க்கைக்குப் பொருளே இருக்காதே. அதுவரை அவர் பாட்டுக்கு இழந்துகொண்டே இருப்பார். பொதுச் சபையில் கணவனை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். மனைவிகளுக்கே உரிய ‘பிறர் ஏதாவது நினைத்துக்கொள்வார்கள்’ என்ற தன்மையில் மூழ்கிப்போனவர்தானே அனுராதா. தன் வீட்டு விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு அசிங்கம் என்ற கொள்கையில் அனுராதா காட்டும் உறுதிப்பாடு வேறு. ஆகவே, அவர் பாடுவார்; சம்பாதிப்பார்; கோவிலுக்குப் போவார். கணவனின் கொடுமைகளை எல்லாம் சகித்துக்கொண்டிருப்பார். இந்த நாடகத்தை நடத்தும் கடவுள், கல்லாய் அமர்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். கிட்டத்தட்ட புராண காலத்தில் ஒரு பெண் அனுபவித்திருந்த கொடுமைகளை எல்லாம் அவர் தாராளமய காலத்தில் பொறுத்துக்கொண்டிருப்பார். கூடையில் வைத்து ரகுராமனைச் சுமந்துசெல்லவில்லை என்பது மட்டுமே குறை. அதற்குப் பதில் கார் இருந்தது. அது ராமனை எங்கெங்கும் சுமந்து சென்றது.  

கணவனின் கொடுமைகளால் வந்துசேர்ந்த துயரங்களால் சோர்ந்து போயிருந்த அனுராதா வாழ்வில் மீண்டும் ஒரு தென்றல் வீசத் தொடங்குகிறது. அவளது வாழ்வில் வாசம் சேர்க்க வந்துசேர்கிறான் ராஜா. அவளை அவளது துயரங்களிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய மன்னவன் அவனாகத்தானே இருக்க முடியும்? திருமண வாழ்க்கை அனுராதாவுக்கு அளிக்காத குழந்தை பாக்கியத்தை ராஜாவுக்குப் பெற்றுத் தந்த திருப்தியுடன் ஷீலா வானுலகம் சென்றுவிடுகிறாள். ஷீலா இருந்திருந்தால் அனுராதாவுக்கு அவன் எப்படிக் கைகொடுக்க முடியும்?  சமூகம் கேள்வி கேட்காதா? ராஜா மணமான பின்னர்கூட நல்ல குணங்களைக் கைவிடாதவன். காதலன் நேர்மையாளனாக, பிறர் துயரம் உணர்ந்தவனாக இருப்பதுதானே இயல்பு.

அனுராதாவின் வாழ்க்கைக்குள் ராஜா மீண்டும் வந்து சேர்ந்த பின்னர் ராமனுக்குச் சந்தேகம் வருகிறது. வராவிட்டால் அவன் எப்படி ராமன்? இல்லற வாழ்வின் கசப்பு தாங்க முடியாத முடை நாற்றத்துடன் வெளிப்படுகிறது. ஆனாலும், எதையும் ராஜாவிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அனுராதா. ஆனால், அனுராதாவின் இன்னல்களை அவனே அறிந்துகொள்ளும்படியான சூழல்கள் வாய்க்கின்றன. தன் செல்ல மகன் அனு மோகனை அனு என அழைக்கிறான் ராஜா. அவனை ஏன் மோகன் என அழைக்கக் கூடாது எனக் கேட்கிறான் ரகுராமன். அனுராதாவின் பிறந்தநாளன்று கூடக் கோவிலுக்கு அர்ச்சனைக்கு வஸ்திரம் வாங்கிவிட்டு வருவதாகச் சொன்ன ரகுராமன் வரவேயில்லை. எதேச்சையாக ராஜாதான் வஸ்திரம் வாங்கிவந்து ஆபத்பாந்தவனாக உதவுகிறான். அனுராதாவுக்குத் தன்னால் முடிந்த அளவு ஆறுதலாக இருக்கிறான் ராஜா. கணவனின் பொறுப்பற்ற தனத்தை முடிந்த அளவு சகித்துக்கொண்ட அனுராதாவால் அவன் சொத்துக்காகத் தனது கருப்பையையே அறுத்த களவாணித் தனத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆவேசத்துடன் அவனை நோக்கிக் கேள்வி கேட்கிறாள்.

ஆணை அதுவும் தொட்டுத் தாலி கட்டிய கணவனை எப்படிக் கேள்வி கேட்கலாம்? கொதித்துப்போன ரகுராமன் மங்கல வாத்தியம் முழங்க அவளது கழுத்தில் தான் கட்டிய தாலி இருக்கும் திமிரில் தானே இப்படிப் பேசுகிறாள் என்றெண்ணி மதிப்புமிக்க அந்தத் தங்கத் தாலியை அறுத்து எறிகிறான். அது நேராக அங்கிருந்த கழிப்பறையில் போய் விழுகிறது. அந்தக் கணத்தில் அனுராதாவின் தன்மானம் சட்டென்று விழித்துக்கொள்கிறது. இல்லையென்றால் பிழிந்து பிழிந்து அழுதுகொண்டிருந்திருப்பாள். சுயமரியாதை சுடர்விட்டதால் நீரைத் திறந்துவிட்டு மங்கலத் தாலியைக் கழிவுநீரில் மூழ்கடிக்கிறாள். அதுவரை வெறும் பதுமையாகத் திரிந்த அனுராதா புதுமைப் பெண்ணாகச் செய்த ஒரே உருப்படியான காரியம் இதுதான். தாலியே விலகிய பிறகு கணவனுக்கென்ன தனி மரியாதை. அவனைவிட்டு விலகி ராஜாவுடன் இணைகிறாள். வலைக்குத் தப்பி உலையில் வீழ்ந்ததுபோல் இந்தப் புதுவாழ்வும் அவருக்கு அமைந்திருந்திருக்கலாம். ஆனால், நலமாக அமையும் என்று நம்பியே இதைப் புதிய ராகம் என்கிறார் ஜெயசித்ரா. கணவன், காதலன், மகன் போன்ற ஆண் மக்கள் எல்லாம் ஒருநாளும் பெண்ணுக்கான வழித் துணையாக அமையப்போவதில்லை என்பதை அனுராதாக்கள் உணர்ந்துகொள்வதே அவர்களுக்கான விழிப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக