தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் இந்து தமிழ் திசை வணிகத்துக்கு வலுச்சேர்க்கவும்; தமிழ்ப் பற்றுக் கொண்ட நாளேடாய்க் காட்டிக்கொள்ளவும் ‘தமிழால் இணைவோம்’ என்னும் சொற்றொடரைத் தனது நாளேட்டின் முதல் பக்கத்தில் தலைப்புக்கு நடுவில் இலச்சினையில் அச்சிட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தால் சங்கமமாவோம் எனத் துணைத் தலைப்பிடும் சூழல் நம் நிலத்தில் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவேளை துணைத் தலைப்பிட்டு நாளேடு இப்போது அளிக்கும் செய்திகளையே அளித்திருந்தாலும், பெரிய வேறுபாடு தோன்றியிருக்காது. பெரும்பாலான நாள்களில், தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக நடத்தப்படும் தோற்றம்தரும் வகையில் இந்நாளேட்டின் இணைப்பிதழ்க் கட்டுரைகளும், நடுப்பக்கக் கட்டுரைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமாகும் அதே நேரத்தில் இந்நாளேட்டின் செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் நுண்ணரசியலில் தோய்த்து எழுதப்படும். நாளேட்டின் செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் எவரொருவரும் எளிதில் இந்த அரசியலைப் புரிந்துகொள்ள இயலும். அப்படியொரு செய்திக் கட்டுரையை இந்நாளேடு 2025 ஜூலை 13 அன்று தனது கடைசி பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
கட்டுரையின் தலைப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்தச் செய்திக் கட்டுரையை எழுதியிருப்பதாக நாளேடு தெரிவிக்கிறது. 2025 ஜூலை 12 அன்று மாநில அரசால் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வை விமர்சித்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மேலோட்டமாக வாசித்துப் பார்க்கும்போது, இளந்தலைமுறைமீது அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரையாகத் தோற்றம் தருகிறது. ஏனெனில், முதல் பத்தியில் தேர்வு நடத்தப்பட்ட விதத்தை வாழ்த்தித் தொடங்கும் கட்டுரை, பெரும்பாலும் நேர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்வதே நோக்கம் என்னும் மயக்கத் தொனியிலேயே எழுதப்பட்டுள்ளது. கட்டுரையைச் சற்றுக் கவனத்துடன் வாசிக்கும்போது, அதில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களும், ஐயங்களும் நம் சிந்தையைக் கிளறிவிடுகின்றன; கட்டுரையில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டுகொள்ளத் தூண்டுகின்றன. கட்டுரையின் தலைப்பைக் கவனித்தீர்கள் எனில், பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு என்னும் சொற்றொடர் புதிர்க்கதவைத் திறக்கும். அறிவில் என்ன, நவீன அறிவு தொல்லறிவு எனத் தோன்றக்கூடும். தொழில்நுட்பம்சார் அறிவைத்தான் கட்டுரையாளர் நவீன அறிவு என எழுதியுள்ளார். அப்படியென்றால், தொல்லறிவு என்பது தொல்காப்பியம் தொடங்கிப் புழங்கிவரும் தமிழ் மொழியின் இலக்கண அறிவென்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
முதலில் வாக்கியங்களைக் குறித்து விவாதிக்கலாம். அடுத்ததாகக் கட்டுரையின் ஐயங்களை அலசலாம். “நாளுக்கு நாள் வெகுவேகமாக மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன், மிக நிச்சயமாக, நம் தமிழுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘இலக்கணம்’ என்கிற குடுவைக்குள் இளம் தலைமுறையின் தாய்மொழி அறிவை அடைக்க முயற்சிப்பது ஏன்?” என்றொரு வினாவை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். இவ்வாக்கியத்தில் காணப்படும் பிழைகளைக் கண்டு பதறாதீர்கள், அதைப் பின்னர் விளக்கலாம். முதலில் இந்த வாக்கியத்தை எப்படி எழுத முடிந்தது, இந்த வாக்கியம் எப்படி நாளேட்டின் ஆசிரியர் முதலிய அனைவர் கண்ணையும் மறைத்து வெளிப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
உலகின் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் இலக்கணத்தை, அம்மொழியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டிய பொறுப்புமிக்க இளந்தலைமுறை கற்றுத் தெளிய வேண்டியதன் அவசியம் உணர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இலக்கணம் தொடர்பான வினாக்களை எவ்வளவு எளிதாகக் கட்டுரையாளர் மடைமாற்றிக் காட்டுகிறார். தாய்மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ளாமல் எப்படி அந்தத் தாய்மொழியில் தெளிவைப் பெற முடியும்? இலக்கணம் என்பது இதிகாசங்களிலும் புராணக் கதைகளிலும் இடம்பெறும் குடுவைக்குள் அடைபட்ட பூதம் போன்ற புனைவுச் சரக்கா? இதில் என்ன ஆச்சரியமென்றால், இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள இதே நாளேட்டின் நடுப்பக்கத்தின் இறுதியில், இந்நாளேடு நடத்தும் பதிப்பகம் உருவாக்கி விற்றுவரும் ‘இலக்கணம் இனிது’ என்னும் நூலின் விளம்பரமும் இடம்பெற்றுள்ளது. தன் கையை எடுத்துத் தன் கண்ணையே குத்துவது போன்ற காரியமல்லவா இது? பதிப்பக விற்பனைக்கு வேட்டுவைக்கும் வேலையை நாளேடு செய்யலாமா? கட்டுரையாளருக்கு இது தெரியாமல் போகலாம். ஆனால், நாளேட்டின் செய்தி ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டோர் இப்படியொரு முரணைக் கவனித்திருக்க வேண்டுமே?
மேலே இரட்டை மேற்கோள் குறிகளுக்கிடையே குறிப்பிட்டுள்ள நாளேட்டு வாக்கியத்தில் தென்படும் பிழைகளைப் பார்க்கலாம். ‘இதையெல்லாம்’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார். இந்தச் சொல் ‘இதை என்றோ’, ‘இவற்றை எல்லாம்’ என்றோ எழுதப்பட்டிருக்கவோ பிரசுரிக்கப்பட்டிருக்கவோ வேண்டும். ‘தொழில்நுட்ப தேவைகளுக்கு’ என்று அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் சொற்களுக்கு இடையே ஓர் ஒற்றெழுத்து இட்டிருக்க வேண்டும். ‘முயற்சிப்பது’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் பயன்படுத்தியுள்ளார். அவ்விடத்தில் ‘முயல்வது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். முயல் என்பது வேர்ச்சொல். ஆகவே, முயற்சிப்பது என்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். வினாத் தாளில் இடம்பெற்றுள்ள பல திரிசொற்களைக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர், “இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் தவறில்லை. ஆனால் அதற்கான களம் இதுவல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதி, ‘ஆனால், அதற்கான களம் இதுவன்று’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ‘அல்ல’ என்பது பன்மைக்குரிய பயனிலை. கட்டுரையாளர் ஒருபோதும் குடுவைக்குள் தாய்மொழி அறிவைப் புதைத்திராதவராக இருக்கலாம். இப்படி மொழிரீதியாகப் பல பிழைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இலக்கண அறிவு தேவையா என்பது குறித்து வினா எழுப்புவது நகைப்பைத் தருகிறது.
வினாத்தாளில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று சாதிய அடையாளம் தவிர்த்ததைப் பாராட்டும் கட்டுரையாளர், டாக்டர் நடேச முதலியார், திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை ஆகியோர் பெயரின் சாதிப் பெயரையும் திருத்தி இருக்கலாம் என அங்கலாய்க்கிறார். அதுவும் ‘திவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனும் பெயரை நாளேடு ‘பகவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனப் பிரசுரித்துள்ளது. எப்போதும் பகவான் நினைவோ என்னவோ? இல்லம் தேடிக் கல்வி, விடியல் பயணம் போன்ற கொள்கை சார் கேள்விகளைப் பற்றிக் கூறி இப்படித்தான் இருக்கும் எனத் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறாராம் கட்டுரையாளர். அரசுப் பணிக்கு வரும் ஒருவர் அரசுத் திட்டங்கள் சார்ந்த விவரங்களை அறிந்திருக்கிறாரா இல்லையா எனச் சோதிப்பது இயல்புதானே? அத்தகைய திட்டங்கள் சார்ந்த கேள்விகளைக் கண்டு ஏன் உச்சி வேர்க்கிறதோ, முதுகு அரிக்கிறதோ? ஒருவேளை வினாத் தாளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்தது அதற்குக் காரணமாயிருக்குமோ?
ஒரு கட்டுரையிலேயே இத்தனை பிழைகள் எனில் நாளேட்டின் எஞ்சிய பக்கங்களில் எத்தனை எத்தனையோ? இப்படிப் பிழைகள்சூழ் செய்திகளைப் பிரசுரிக்கும் நாளேடுகள் மலிந்த சூழலில் இளந்தலைமுறையின் இலக்கண அறிவை, தொல் தமிழ்ச் சொற்கள் ஆகியவை குறித்தெல்லாம் தேர்வுகளின் வழியே சோதிப்பது ‘தெய்வக் குற்றமா’? மேலே சுட்டப்பட்ட பிழைகள் கட்டுரையாளர் செய்யாதவனவாக இருக்கலாம். ஏனெனில், ஒருவேளை கட்டுரையாளர் சரியாக எழுதி, நாளேட்டின் தரப்படுத்தலுக்கு உட்பட்டு வெளிவரும் வேளையில் பிழைபட்டிருக்கலாம். நூற்றாண்டுப் பெருமை கொண்ட குழுமக் கூடத்திலிருந்து வெளிவரும் ஒரு நாளேடு தொல் மொழி குறித்து இத்தனை பிழைகளுடன் செய்திக் கட்டுரை வெளியிடுவதை வாசித்துவிட்டு வாளாவிருக்க இயலுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக