அண்மையில் லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி படத்தைப் பார்த்திருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தபோதே, மண்ணுக்குள் வைரம் (1986) படம் நினைவு வந்தது. அது வெளியான காலத்தில் படத்தைப் பார்த்திருக்கவில்லை. ஆனால், சலவைத் தொழிலாளர் பற்றிய கதை என்பதை அறிந்திருந்தேன். படம் வெளியானபோது குமுதம் இதழின் விமர்சனத்தை விமர்சித்துப் படத்தின் இயக்குநரான மனோஜ் குமார் ஒரு கடிதமோ என்னவோ எழுதியிருந்தார் அது நினைவுக்கு வந்தது. ஆகவே மண்ணுக்குள் வைரம் படத்தை யூடியூபில் தேடினேன், இருந்தது. சில படங்கள் யூடியூபில் முன்னர் பார்த்த சில படங்கள் இப்போது கிடைக்கவில்லை. கலைஞர் வசனம் எழுதிய பாலைவன ரோஜாக்கள், ஒரே ரத்தம் ஆகிய படங்களை யூடியூபில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை இப்போது பார்க்கக் கிடைக்கவில்லை.
பாரதிராஜாவின் மைத்துனரான இயக்குநர் மனோஜ்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய முதல் படம் இது. சின்னத்தாயி படத்தை இயக்கிய S.கணேச ராஜ் இந்தப் படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார் போல. டைட்டிலில் பெயர் வருகிறது. மண்ணுக்குள் வைரம் படத்தின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சின்னத்தாயி. இரண்டு கணேச ராஜும் ஒருவர்தானா என்பது தெரியவில்லை. இசை அமைப்பாளர் தேவேந்திரன் இந்தப் படத்தில்தான் அறிமுகமாகியிருக்கிறார். நடிகை வாணிவிஸ்வநாத்தின் அறிமுகப் படமும் இதுதான். வாணி விஸ்வநாத் என்றதும் பூந்தோட்டக் காவல்காரன், நல்லவன் போன்ற விஜய காந்த் நடித்த படங்கள் நினைவில் எழும்.
சிட்டு தனது தாயுடன் கிராமத்துக்கு மருத்துவராக வருகிறார். அவரது பயணத்தில் கடந்தகாலக் காட்சி விரிகிறது. அதுவரை அப்பத்தா வீட்டில் வளர்ந்த சிட்டு தந்தை வேலப்பனுடன் சொந்த வீட்டுக்கு வருகிறாள். மேட்டுப்பட்டி கிராமத்தில் சலவைத் தொழிலாளி வேலப்பன். அவனுடைய மனைவி வெள்ளையம்மா. அந்த ஊரின் பெரிய மனிதர் தவசி. அவருக்கு சின்னத்தாயி என ஒரு பேத்தி. குழந்தைத் திருமணத்தில் சிறுவனான கணவனை இழந்து கைம்பெண்ணாக இருக்கிறாள். வெள்ளைப் பாவாடை சட்டையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். தவசிக்கு ஒரு தம்பி. சாதிப் பெருமைமிக்க மனிதர் அவர். பேர் விருமாண்டி. அவருடைய மகன் மயில்சாமி. அவனுக்கும் படிப்புக்கும் தூரம் அதிகம். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு ஆண்டுகள் தங்கி நிதானமாகக் கல்வி கற்றுச் செல்லும் மாணவன் அவன். அவன் படிக்கும் அதே பன்னிரண்டாம் வகுப்பில் வந்து சேர்கிறாள் சிட்டு.
சலவைத் தொழில் செய்து பிழைக்கும் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த அவளை எப்படியாவது படிக்கவைத்துவிட வேண்டும் என்று வேலப்பன் நினைக்கிறான். அவளுக்கும் படிப்பில் அதிகப் பிரியம். நன்றாகப் படிக்கிறாள். முதலில் சிட்டுவுக்கும் மயில்சாமிக்கும் மோதல் வருகிறது. அவளைச் சாதியைச் சொல்லித் திட்டிவிடுகிறான் மயில்சாமி. அவள் ஊர்கூட்டி நியாயம் கேட்கிறாள். ஊர்ப் பெரியவர் தவசி மயில்சாமி செய்த தவறுக்கு சிட்டுவின் துணியையும் ஊரார் துணியையும் மயில்சாமி துவைத்துப்போட வேண்டும் எனத் தீர்ப்பு தருகிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மயில்சாமிக்கு சிட்டுமீது காதல் வருகிறது. அவனுடைய அப்பாவுக்கும் விரோதம் வந்துவிடுகிறது. பொங்கலன்று தவசி தந்த நல்ல துணிமணியுடன் வலம்வரும் வேலப்பனைப் பார்த்து விருமாண்டி பொறாமையில் புழுங்குகிறார்.
அந்த நேரம் பார்த்து தவசி வெளியூருக்கு பஞ்சாயத்து பண்ணச் செல்லவேண்டியதாகிவிடுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு வேலப்பனை வெளுக்க அனுப்புகிறார் விருமாண்டியின் கையாள். வெளுக்கச் சென்ற வேலப்பன் தீவிபத்தில் மாட்டி உயிருக்குப்போராடுகிறார். உயிரைக் காப்பாற்ற சிட்டு மருத்துவமனைக்கு விரைகிறாள். அங்கே மருத்துவர் விருமாண்டியும் குடித்துக் கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிறார். அந்தக் கும்பல் சிட்டுவைக் கேலி பேசி அனுப்பிவிடுகிறது. வேலப்பனோ கரிக்கட்டையாகிவிடுகிறார். இரவோடு இரவாக சிட்டுவையும் அவளுடைய அம்மாவையும் ஊரைவிட்டே விரட்டி விடுகிறார் விருமாண்டி. கணவன் உடலை அப்படியே கரையில் போட்டுவிட்டு மகளைக் கூட்டிக்கொண்டு போகிறார் வெள்ளையம்மா. அப்போது சென்ற சிட்டு இப்போதுதான் ஊருக்கு வருகிறார்.
இப்போது மனம் பேதலித்த நிலையில் மயில்சாமியை சிட்டு பார்க்கிறார். அவருக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்த நினைக்கிறால் சிட்டு. ஆனால், விருமாண்டியின் வறட்டு கௌரவம் சிட்டுவை அனுமதிப்பதில்லை. மயில்சாமிக்கு பித்தம் தெளிந்ததா, சிட்டு மயில் சாமி காதல் என்ன ஆனது, சின்னத்தாயி நிலைமை என்னா ஆயிற்று என்பதையெல்லாம் ஒன்றுதிரட்டி திரைக்கதையை அமைத்திருக்கிறார் மனோஜ் குமார். சாதிப் பெருமை என்னும் இழிகுணத்தைச் சாடுவதுதான் படத்தின் நோக்கம்.
பொதுவாக, சாதி இழிவு பேசும் படங்களில் எல்லாம் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய இழிவே பேசப்படும். ஆனால், இந்தப் படத்தில் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கு ஆதிக்க சாதியால் நேரும் கொடுமைகள் பேசப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி எப்படிக் கைகொடுக்கிறது என்பதைப் பேசியிருக்கிறார் இயக்குநர். ஒரு வணிகப் படத்தில் இந்த அளவு முற்போக்காகப் பேசியிருப்பது ஆரோக்கியமான விஷயமாகவே படுகிறது. இவ்வளவுக்கும் இது ஒரு அக்மார்க் தமிழ் சினிமாதான். ஆனால், மாற்றுசினிமா என்று சல்லி அடிக்கும் படங்களைவிட சமூகத்தைச் சாடும் செய்திகளை நன்றாகவே கையாண்டிருக்கிறது இந்தப் படம்.
தவசியாக சிவாஜி கணேசனும், விருமாண்டியாக வினுச்சக்கரவர்த்தியும், வேலப்பனாக ராஜேஷும், வெள்ளையம்மாவாக சுஜாதாவும், சிட்டுவாக ரஞ்சனியும் காந்திமதி, பாண்டியன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கவுண்டமணி செந்தில் ஜோடியும் உள்ளது. ஆனால் காமெடி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குழந்தைத் திருமணம், சாதிப் பெருமை என்னும் இழி குணம் ஆகியவற்றைச் சாடும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் மனோஜ் குமார். அநேகமாக அவர் இயக்கிய படங்களில் உருப்படியான படமாக இதுதான் இருக்கும்போல. இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசையில் பொங்கியதோ காதல் வெள்ளம், இதழோடு இதழ் சேரும் நேரம் போன்ற பல பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. ஒளிப்பதிவு கே. எஸ்.செல்வராஜ்.