இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜூன் 13, 2021

மலையைப் பிளந்த உளி

ஜனவரி 16, நேரம்: 18:20 

சுகமான கனவுக்குப்பின் கலையும் இதமான நண்பகல் துயிலுக்கே சாம்ராஜ்யம் கிடைத்ததுபோல் சமாதானம் அடையும் இந்த மனமா சமயத்தில் சுனாமியாகச் சீறுகிறது

😍

ஜனவரி 16, நேரம்: 21:24 

சிறு தவறு நிகழ்ந்தால்
நேசம் நாசமாகிவிடுகிறது
பாசம் சாபமாகிவிடுகிறது

😍

ஜனவரி 17, நேரம்: 07:27 

காலையிலேயே கோமாளியின் பாடல் எங்கோ ஒலிக்கிறது.
ஆனால், வெறும் கோமாளியன்று, காரியக் கோமாளி.
வெறுங்கோமாளியெனில் விட்டுவிடலாம்.
காரியக் கோமாளியென்பதாலேயே கடுங்கோவம்.
மக்கள் சிலரது மனங்களில் இன்னும் கோமாளி வசிப்பதன் காரணம்,
மக்களின் மடத்தனம் மட்டுமேதானா?
முந்தைய தலைமுறையினரிடம் வெளிப்பட்ட
முட்டாள்தனத்தின் பேருரு அல்லவா இந்தக் கோமாளி?
எல்லாக் காலத்திலும் ஏதாவது ஒரு கோமாளி
ஏன் தேவைப்படுகிறார்?
இன்னும் எவ்வளவு காலம் கோமாளி
சமுதாயத்தின் நனவிலி மனத்தில் இருப்பார்?
அச்சமூட்டும் எண்ணம் ஒன்று
நிலத்தை மூடும் பனியாய் ஆழ்மனத்தில் கவிகிறது.

😍

ஜனவரி 18, நேரம்: 13:53

அறிவுபெற்றிட வேண்டும் என்னும் ஆசையில்
எதை வாசித்தாலும்,
முட்டாள் என்பதையே வாசிப்பு சுட்டுகிறது.
முட்டாளாகப் பிறந்து
முட்டாளாகவே மடிய வேண்டும் என்பதை
மாற்றியமைக்க வாசிப்பாலாகாதா,
முறையான வாசிப்பை மேற்கொள்ளவேயில்லையா?
ஒருவேளை அறிவுபெற்றிட வேண்டும் எனும் முனைப்பு
அறிவுசார்ந்ததாக இல்லாமல் முட்டாள்தனமானதோ?
இல்லையெனில், ஆண்டவனைப் போல அறிவும்
இருக்கு ஆனா இல்லைதானா?
அட முட்டாளே
எதையும் எதிர்பார்க்காமல்
வாசிப்பை வாசிப்புக்காகவே
மேற்கொள்ள வேண்டும்
எனும் அடிப்படையறிவே இல்லையா?
இப்படியிருந்தால், எதை வாசித்தாலும்
முட்டாள் என்பதைத்தானே சுட்டும்?
சரி முட்டாள் என்பதைச்
சிலவேளைகளில் துல்லியமாக
உணர்ந்துகொள்ள முடிகிறதே,
அந்த அறிவும் முட்டாள்தனம்தானா?
அறிவும் முட்டாள்தனமும்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களா?
எனில், ஒருவரை அறிவாளி என்பதோ
முட்டாள் என்பதோ அபத்தமானதா?
அது அந்தந்தக் கணத்துக்கானதா?
இப்படியான எந்த யோசனையுமின்றி
வாழ்ந்து மடிந்துவிடுதல்
கொடுப்பினையா, கொடுவினையா?

😍

ஜனவரி 19, நேரம்: 06:35

அறிவை அழிக்கும் செயலைத்தான்
வாசிப்பு நிகழ்த்துகிறது
என்பதை உணர்ந்தபின்
வாசிப்பு
எளிதாகிறது,
விரைவாகிறது,
முழுமையாகிறது.

😍

ஜனவரி 20, நேரம்: 11:06

பகடையை உருட்டுதல் உற்சாகம்
காய்களை நகர்த்துதலே அலுப்பு
பகடையை உருட்டினால்
காய்களை நகர்த்தியாக வேண்டியதிருக்கிறதே
விளையாட்டின் சட்டதிட்டங்களையே
மாற்ற முடியவில்லையே
என்கிறது ஆயாசம்
அருகில்
மௌனமாகக் கிடக்கிறது
மலையைப் பிளந்த
உளி

🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக