இந்த வலைப்பதிவில் தேடு

புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 21, 2021

புலி வருது புலி வருது


ஜகமே தந்திரம் படம் பார்த்து அலுத்துப் போய் இருந்த நேரத்தில் ஃபேஸ்புக்கில் ஜூன் 18 அன்று அமேசான் பிரைமில் வெளியான இந்திப் படமான ஷெர்னி குறித்து எழுதியிருந்தார்கள். ஆகவே, இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால், பெண் புலி என்பதை மனம் விடுதலைப் புலிகளுடன் எப்படியோ முடிச்சிட்டிருக்கிறது. அந்த நினைப்புடனே படம் பார்க்க அமர்ந்தால் படம் வேறு ஒன்று. இது வனம், அதை நம்பி வாழும் பழங்குடியினர், அவர்களை வாக்குக்காக வளைக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள், அவர்களுக்குத் துணைபோகும் அதிகார வர்க்கம் இவற்றுக்கிடையே பணியேற்றுள்ள பெண் வன அதிகாரி ஆகியோரைச் சுற்றிப் படர்ந்து செல்கிறது படம். 

பெரிய திருப்பங்கள் எவையும் அற்ற இயல்பான கதை ஓட்டம். இந்தப் படத்தை இயக்கிய அமித் மஸுர்கர் இயக்கிய நியூட்டன் என்னும் படத்தைப் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு திரைப்பட விழாவின் போது, ரஷ்ய பண்பாட்டு மையத்தில் இந்தப் படத்தை பார்த்ததாக நினைவு. ஷெர்னியும் அப்படி ஒரு சாயலையே கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் தேர்தலை நடத்துவதில் உள்ள சவாலை ஒரு அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பது விவரிக்கப்பட்டிருந்தது. இதில், வன அதிகாரி எதிர்கொள்ளும் சவால்கள் திரைக்கதையின் முதன்மை அம்சமாயிருக்கின்றன. 

வனத்தில் நடமாடும் பெண் புலி ஒன்று அருகே இருக்கும் கிராமத்தினரைச் சேர்ந்த ஒருவரை அடித்துக்கொல்கிறது. மேலும் ஓரிருவர் கொல்லப்படுகிறார்கள். அந்த மரணங்களின் பின்னணியில் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள், அரசியல்வாதிகள் அந்தப் பிரச்சினையைத் தங்களுக்கு வாகாக எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் போன்றவற்றின் அடிப்படையில் திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. பெரிய கதாநாயக அம்சம் என்று எதுவுமில்லை. மிகச் சாதாரண நடுத்தரவர்க்கப் பெண்ணாகவே இருக்கிறார் வன அதிகாரி வித்யா (வித்யா பாலன்). சுற்றுச்சூழலை அழிப்பதில் எப்படி அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் கைகோத்துள்ளது என்பதைப் போகிறபோக்கில் சொல்கிறார்கள். 

வனப் பாதுகாப்பு, பழங்குடியினர் நலன் இவை இரண்டுக்குமிடையே சிக்கலாக வளர்ந்து நிற்கும் அனைத்துக் காரியங்களும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம் இரண்டின் கைங்கர்யங்களாகவே உள்ளன. இதனிடையே டிஆர்பி ரேட்டிங்காக ஊடகங்கள் வேறு பிரச்சினையை ஊதிப் பெருக்கும் காரியத்தில் இறங்குகின்றன. கிராமத்தினரை அடித்துக்கொல்லும் பெண் புலியைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது. வித்யாவுக்குப் புலியைக் கொல்வதில் உடன்பாடில்லை. அதைப் பிடித்து தேசிய பூங்காவில் விட்டுவிட வேண்டும் என நினைக்கிறார். அந்தப் புலியையும் அதன் குட்டிகளையும் பாதுகாக்க வித்யாவால் முடிந்ததா, அந்தப் பயணத்தில் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் இவையே படமாகியுள்ளன. 

படம் மிக மெதுவாகத் தான் நகர்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், வழக்கமான கதைப் படங்களைப் பார்த்து பார்த்து அலுத்துப்போயிருந்தால் இந்தப் படம் சற்றுப் புத்துணர்ச்சி தரக்கூடும். இதுவும் மிக உயர்வான ரசனைக்குரிய படமன்று. ஆனால், எடுத்த கதைக்கு இயன்றவரை ஒழுங்காக உழைத்துப் படத்தை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க வனப்பகுதியிலேயே படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, கண்ணுக்குக் குளுமையான பசுமையான வனத்தின் அழகைப் பார்க்க முடிகிறது. அந்த வனத்திடையே கனிமச் சுரங்கம் ஒரு மாபெரும் வடுவாக நிற்கிறது. அது வன விலங்குகள் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. அதுதான் பிரச்சினையின் மையம்.  

வளர்ச்சி என்னும் பெயரில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்தால் அதனால் மனிதர்கள் சிக்கலை அனுபவிக்கத்தான் வேண்டியுள்ளது. வனம் வளம் பெற வேண்டும் மனித வாழ்வும் நலம் பெற வேண்டும் என்றால் அதற்கு  வனத்தையும் வன விலங்குகளின் தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் உண்மையிலேயே வன அதிகாரிகள் அப்படி இருக்கிறார்களா? தான் நம்பிய உயரதிகாரியே அரசியல்வாதிகளுடன் கூட்டுச்சேர்ந்துவிடுவதை வித்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைக் கோழை என்கிறார். இந்தக் கோழைகள் தாம் பலவிடங்களில் நிறைந்திருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.    

புலியை வேட்டையாடத் துடிக்கும் நபருக்கு அரசியல்வாதிகளின் தயவு இருக்கிறது. அந்தப் புலியைக் காப்பாற்ற நினைக்கும் அதிகாரிக்கோ அதிகாரவர்க்கத்தினரின் ஆதரவுகூடக் குதிரைக் கொம்பாகிறது. நேர்மையான அதிகாரிகளை அந்தப் பகுதியின் மக்கள் மாத்திரம் எப்படியும் கொண்டாடுகிறார்கள் என்பதைப் படம் இயல்பாகச் சொல்லிச் செல்கிறது. ஆளும் தரப்பின் அதிகாரவர்க்கத்தின் பேராசைக்கு விலங்குகள் பலியாவதைப் போலவே மக்களும் பலியாகிறார்கள். இந்த இருதரப்பினருக்கும் இடையே நேர்மையை நிலைநாட்டப் போராடும் ஓர் அதிகாரியின் நடைமுறைச் சிக்கலைப் பார்க்க விரும்புவர்களுக்கான படம் இது. 

வனம் புலி என்பதையெல்லாம் கதை மையமாகக் கொண்டிருந்தும்,  ஆக்ரோஷமோ, அச்சுற்றுத்தலோ இல்லாத காட்சிகளையே படம் கொண்டிருக்கிறது. அதிக அளவிலான ரத்தம் திரையில் காட்டப்படவில்லை. மனிதரின் இயல்புக்கும் ஆசைக்கும் அதிகாரத்துக்கும் நேர்மைக்கும் இடையேயா கண்ணாமூச்சு விளையாட்டே இப்படம்.  ஆஸ்தா டிக்கு எழுதிய கதை, திரைக்கதையை  அமித் மஸுர்கர் இயக்க படம் பிடித்திருக்கிறார் ராகேஷ் ஹரிதாஸ்.

ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

காட்டுச் சிறுவனின் ஆக்‌ஷன் அவதார்!

வால் டிஸ்னி பிக்ஸர்ஸ் தயாரிப்பில் 1967-ல் வெளியான சாகசத் திரைப்படம் த ஜங்கிள் புக். இதே பெயரில் ரூத்யார்டு கிப்லிங் 1894-ல் எழுதிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அனிமேஷன் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நான்கு மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 205.8 மில்லியன் டாலர் வசூலித்துக் கொடுத்திருக்கிறது. இப்போது இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் 1967-ல் வெளிவந்த திரைப்படத்தைவிட அதிக சுவாரஸ்யத்தைத் தரும் வகையில் இப்போது இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதலில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். பின்னர் லைவ் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் இரண்டையும் ஒன்று சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பார்ப்பதற்கு லைவ் ஆக்‌ஷன் படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தில் மோக்லி வேடமேற்றிருக்கும் நீல் சேதி மட்டுமே உயிருள்ள மனிதன்.

மீதி அனைத்துமே கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை. படத்தில் இடம்பெற்றிருக்கும் விலங்குகளுக்கு பில் முர்ரே, பென் கிங்ஸ்லி, இட்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் வால்கன் போன்ற பல பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் விலங்குகள் பார்க்க உயிருள்ள மிருகங்கள் போன்றே இருக்கின்றன. கார்ட்டூன் படங்களுக்கு உயிரூட்டப்பட்டது போன்ற தோற்றம் இல்லை.

ஒரு பிரம்மாண்டமான பயணத்தின் தொடக்கம் போன்று வெளியாகியிருக்கும் இதன் ட்ரெயிலர் வெளியிடப்பட்ட ஒரு நாளில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த ட்ரெயிலர் தரும் பிரமிப்பைப் பார்க்கும்போது முழுப் படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றாமல் இருக்காது.

காட்டில் மோக்லி எதிர்கொள்ளும் அத்தனை விலங்குகளையும் கம்ப்யூட்டரில் அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உதவியால்தான் உருவாக்கியிருக்கிறார்கள் என்ற நினைவே எழாதவண்ணம் அவை நிஜ விலங்குகள் போலவே கிலி ஏற்படுத்துகின்றன. காட்டில் மாட்டிக்கொள்ளும் மோக்லி புலி, யானை போன்ற பல வன விலங்குகளிடமும் மாட்டிக்கொண்டு தப்பித்துவிடுகிறான் ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் மாட்டிக்கொள்வதையும் தப்பிப்பதையும் பார்ப்பவர்களுக்கு உயிர் போய் உயிர் வருகிறது.

அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்னும் எதிர்பார்ப்பையும் என்ன அசம்பாவிதம் சம்பவிக்குமோ என்னும் அச்சத்தையும் தரும் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாகசக் காவியம் போல் இந்தப் படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நீல் சேதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் முயற்சியில் சுமார் ஆயிரம் பேரைத் தாண்டி வெற்றிபெற்றிருக்கிறான்.

அவனுக்கு அடுத்து இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரப்போவது அந்தப் பாம்புதான். அதன் முன்பு மிரட்சியுடன் நிற்கிறான் மோக்லி ஆனால் பாம்போ அவனுக்குத் தைரியமூட்டுகிறது. எத்தனையோ ஆபத்துகள்; அத்தனையையும் தனி ஒருவனாகச் சமாளித்து சிறுவன் மோக்லி மேற்கொள்ளும் சாகசப் பயணத்தின் ஒவ்வொரு கணமும் பார்ப்பதற்கு அலுக்காது.

படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஒரு சிற்பம்போல் செதுக்கியிருக்கிறார்கள். படத்தின் உயிரோட்டமான இசையும் நம் கண் முன்னே தெரியும் அந்த மாய உலகத்தை நிஜ உலகம் என நம்பவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரே படம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைச் சொல்லிவிடுகிறது. அந்தப் பிரமாண்டத்தின் முழுப் பரிமாணத்தையும் பார்க்க நீங்கள் தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும்.

செப்டம்பர்18 தி இந்து நாளிதழில் வெளியானது

புதன், மே 21, 2014

மலையில் திரியும் வரையாடு

தமிழகத்தின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு. அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் வரையாடு இடம்பெற்றுள்ளது. இந்த வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகின்றன. கடலிலிருந்து 1200 முதல் 2600 மீட்டர் உயரம் உள்ள செங்குத்தான மலையின் புற்கள் படர்ந்த பாறைப் பகுதியில் இவை வசிக்கும். பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் உண்டு வரையாடுகள் வாழும். இவை தாவர உண்ணி வகையைச் சேர்ந்தவை. செங்குத்தான மலைகளில் ஏறும் உடலமைப்பை இவை பெற்றுள்ளன. வரையாடுகள் விரைவாக ஓடக்கூடியவை.    


முதிர்ந்த ஆண் வரையாடு 100 கிலோ எடையும் 110 செமீ உயரமும் கொண்டிருக்கும்; பெண் வரையாடு 50 கிலோ எடையும் 80 செமீ உயரம் கொண்டதாயும் இருக்கும். பெண் வரையாட்டின் கொம்பு குட்டையாகவும் சரிவாகவும் காணப்படும். ஆண் வரையாடு, அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும். பெண் வரையாடோ சாம்பல் நிறத்தைக் கொண்டிருக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான மாதங்களில் இவை இனப்பெருக்கம் செய்யும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் வரையாடு. நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை குட்டிகள் தாயிடம் பால் குடிக்கும். 

அதிகாலை நேரத்திலும் பின் மாலை நேரத்திலும் இவை சுறுசுறுப்பாக மேய்ச்சலில் ஈடுபடும். சுமார் 3 ஆண்டுகளில் இவை இனப்பெருக்கம் செய்யும் தகுதி பெற்றுவிடும். இவற்றின் சராசரி ஆயுள் காலம் 3-3.5 ஆண்டுகளே. ஆனால் 4-4.5 ஆண்டுகள் வரை சராசரியாக வாழ்கின்றன. இவற்றின் ஆயுள் 9 ஆண்டுகள் வரை நீளவும் வாய்ப்புண்டு. 2010-ன் கணக்கெடுப்பின்படி சுமார் 2600 வரையாடுகள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் 5 சதவிகித இடங்களில் பரவியுள்ள இவை தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே வாழ்கின்றன. இரவிகுளம், நீலகிரி ஆகிய தேசிய பூங்காங்களில் இவை அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

புலி, செந்நாய், ஓநாய் ஆகியவை வரையாடுகளை இரையாக உண்ணும். இவை இந்த விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொம்புகளைப் பயன்படுத்தும். 1972-ல் இயற்றப்பட்ட இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்