இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 30, 2018

2018 தமிழ்த் திரைப்படங்கள்: இனியொரு படம் செய்வோம்!


ஐந்நூறு, அறுநூறு கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான படத்தை உருவாக்கும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படம் தொழில்நுட்பரீதியாக வளர்ந்திருக்கிறது. அதே நேரம் உலக அளவில் ‘இதுதான் எங்கள் படம்’ என முன்னிறுத்தும் வகையில் நமது நிலம் சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த, பண்பாடு சார்ந்த கலை நுட்பம் கூடிய ஒரு படமாவது இங்கே உருவாக்கப்படுகிறதா என்றால் பெருத்த மௌனமே பதிலாகிறது. ஆனாலும், அப்படியொரு படம் உருவாகக்கூடும் என்னும் நம்பிக்கை சூறைக்காற்றிலும் அணையாத மெல்லிய சுடர் போல் உயிரைத் தேக்கிவைத்துக் காத்திருக்கிறது.

2018-ம் ஆண்டைப் பொறுத்தவரை முதல் பாதியைவிட இரண்டாம் பாதி பரவாயில்லை. இந்த ஆண்டு வெளியான படங்களில் மாறுபட்டவை என ‘சவரக்கத்தி’ தொடங்கி ‘கனா’ வரை பலவற்றைச் சொல்லலாம். ‘சவரக் கத்தி’யைப் பொறுத்தவரை படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவைவிட நடித்திருந்த இயக்குநர்கள் ராமும் மிஷ்கினும் அதிகம் பேசப்பட்டார்கள்; அந்த அளவுக்குப் படம் பேசப்படவில்லை.

பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ பொழுதுபோக்கு நோக்கம் கொண்ட படம் என்றபோதும், டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்தின் உள் நோக்கத்தைக் கேள்வியுடன் அணுகி, துணிச்சலாகவும் புத்திசாலித்தனமாகவும் கதையை நகர்த்திச் சென்ற காரணத்துக்காகத் தனித்துத் தெரிகிறது.


திருமணத்துக்கு வெளியேயான உறவு ஒரு சாதாரணக் குடும்பத்தைப் பாதிக்கும் விதம் பற்றிப் பேசிய படம் காளி ரங்கசாமி இயக்கிய ‘ஒரு குப்பைக் கதை’. ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற படங்களில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட விஷயம்தான் படத்தின் கரு. தகவல் தொழில்நுட்பத்துறையினரின் வாழ்வு பற்றிய மேம்போக்கான பார்வையைக் கொண்டிருந்த படம் என்றபோதும், சென்னை மாநகரில் நம் பார்வையில் தினந்தோறும் தென்படும் குப்பை அள்ளும் எளிய மனிதர்களின் வாழ்வை இயன்றவரை சினிமாத்தனமற்ற காட்சிகளாகக் கொண்டதால் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த படமிது. குப்பை பொறுக்குவோரை மையமாக வைத்து இயக்குநர் துரை ‘பசி’ என்னும் படத்தை இயக்கியதையும் இந்தப் படம் நினைவுபடுத்திச் சென்றது.

ரஜினி காந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தை வைத்து ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை இரண்டாம் முறையும் பேசவைத்தார் பா.இரஞ்சித் என்னும் பெருமையை அவருக்கு அளித்த ‘காலா’ தமிழ்த் திரைப்படத் துறைக்கு எந்தப் பெருமையையும் பெற்றுத் தரவில்லை. மாய யதார்த்த படம் என்னும் புதிய வகையில் முயன்றதைத் தவிர வேறொன்றும் இல்லாமல் போனதால் புது இயக்குநர் எஸ்.பி.மோகன் இயக்கிய ‘பஞ்சு மிட்டாய்’ கவனிக்கப்படாமலே போயிற்று.  



ஆகஸ்டில் வெளியான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ விமர்சகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது. இயக்குநர் லெனின் பாரதியை அழைத்துப் பல விமர்சனக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழ் நிலமும் எளிய குடியானவனின் வாழ்வும் உலகமயமாதலில் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாவதைப் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் இல்லாமல் எளிமையாகச் சொன்ன தன்மைக்காகப் பாராட்டப்பட்ட படமிது. என்றாலும், ஒரு சினிமாவாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ அடிவாரத்திலேயே தவழ்ந்துகொண்டிருந்தது. இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கத்தில் வெளியான ‘வஞ்சகர் உலகம்’ தமிழ்ப் படத்தின் வழக்கமான தன்மையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது. நிழலுகத்தில் செயல்படும் சம்பத் எனும் மனிதனின் உளவியல் சிக்கலைப் பேசிய படம் இது. நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் மாறுபட்ட திரைக்கதை விவரிப்பில் வெளியான படமாகத் திரை ரசிகர்களின் சில பகுதியினரைப் பெரிதும் கவர்ந்தாலும் பரவலான வரவேற்பைப் பெறாத படமாகவே தங்கிவிட்டது.

இத்தகைய சூழலில் வெளிவந்தது மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ என்னும் திரைப்படம். இயக்குநராகச் சம்பாதித்த பெயரைவிட அதிகமான பெயர் இந்தப் படத்தின் மூலம் பா.இரஞ்சித்துக்குக் கிடைத்தது. சாதி என்னும் கொடுமை சமூகத்தில் அகல வேண்டியதன் அவசியத்தையும் ஆதிக்கச் சக்திகளை ஒரு உரையாடலுக்கான இடத்தை நோக்கி நகர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சினிமாவுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடன் சொன்ன படம் இது. தலித் அரசியலைப் பேசுவதற்காகவே மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தாலும் படத்தின் குரல் பா.இரஞ்சித் படங்களில் ஒலிப்பதைப் போல் வறண்ட போர் முழக்கமாக இல்லாமல் நட்பார்ந்த தன்மையில் இருந்ததால் பெருவாரியான ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டது. இதே போல் தலித் மக்களின் சிக்கலைப் பேசிய மற்றொரு திரைப்படம் அம்ஷன் குமார் இயக்கிய ‘மனுஷங்கடா’. வணிகத் திரைப்படத்துக்குத் தேவையான எந்த நெகிழ்வுத்தன்மையும் இன்றி மாற்றுப்படத்துக்கான விடாப்பிடியான கொள்கையுடன் வெளியான படம் இது. திரையரங்குகளில் பெரிய வரவேற்புக் கிடைக்காதபோதும் மாற்றுப்பட முயற்சிகளுக்குக் கைகொடுப்போர் தயவில் இந்தப் படமும் கணிசமான பார்வையாளர்களைச் சென்று சேர முயன்றது.


தமிழ் ரசிகர்கள் காதல் மயக்கத்திலிருந்து ஒருபோதும் வெளியேறிவிட மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் இயக்குநர் பாலாஜி தரணிதரன்  உருவாக்கிய 96. பருவ காலத்தில் ஒன்றுசேராத பச்சை மண் காதல் காலமெனும் நீரோட்டத்தில் கரைந்த கதைதான் 96. காதலனும் காதலியும் தொட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தபோதும் தொடாமல் எட்டியே நின்றதால் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். ஒரு முழுமையான வணிகப் படத்தின் கதாநாயக அம்சத்தை அப்படியே கைக்கொண்டாலும் ஒரு மாற்றுப்படமோ என்ற மயக்கத்தைத் தந்தே வெற்றிபெற்ற படம் இது.

‘பொல்லாதவ’னில் தொடங்கி தனது இயக்கப் பாதையில் தொடர்ந்து வளர்ந்துவரும் இயக்குநரான வெற்றி மாறனின் ‘வட சென்னை’ வசூல்ரீதியில் பெரிய வெற்றிபெறாத போதும் படைப்புரீதியில் கவனிக்கத்தக்கது. நிழலுக மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்ட திரைக்கதை என்றபோதும் இது அத்துடன் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்த மனிதர்களைப் பகடைக் காய்களாக்கி நகர்ந்த அரசியல் வரலாறு ஒன்றும் படத்தில் பேசப்படுகிறது. அதுதான் இந்தப் படத்தைப் பிற படங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. எளிய மனிதர்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலம் போல் செயல்படும் அரசியல்வாதிகளின் தந்திரத்தை கலையழகுடன் சுட்டுக்காட்டும் வட சென்னை முதல் பாகம் மட்டுமே. அடுத்த பாகமான அன்புவின் எழுச்சி பற்றிய அறிவிப்புடன் நிறைவடைந்திருக்கிறது வட சென்னை.  


மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, தாமிராவின் ‘ஆண் தேவதை’, ராம்குமாரின் ‘ராட்சசன்’, பாலாவின் ‘நாச்சியார்’, கார்த்திச் சுப்புராஜின் ‘மெர்குரி’ ஷங்கரின் ‘2.0’ போன்ற படங்களையும் உள்ளடக்கியதே இந்த ஆண்டின் பட வெளியீட்டுப் பட்டியல். இவ்வளவு படங்கள் வெளியான போதும் ஓரிரண்டு படங்களுக்கு மேற்பட்டவற்றை நல்ல படம் எனச் சொல்லத் தயங்கும் சூழலே தமிழில் நிலவுகிறது என்பது உள்ளபடியே வருத்தம் தருகிறது. ரசிகர்தம் வருத்தத்தைப் படைப்பாளிகள் தாம் போக்க வேண்டும்.     

திங்கள், அக்டோபர் 08, 2018

’தொண்ணூற்றாறு

ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கிறார்கள். இதில் முறிந்த காதல் ஜோடி ஒன்றும் சந்திக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் அந்தக் காதலர்கள் எப்படி அந்தத் தருணத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை அதீத உணர்வுடன் நாஸ்டாலஜியா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்



தனி ஒருவனாகப் பயணங்களில் ஈடுபடும் புகைப்படக் காரரான கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) திடீரெனத் தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார். பழைய நண்பர்களைப் பார்க்கத் தோன்றுகிறது. எல்லோரையும் வாட்ஸ் அப் வழியே பிடிக்கிறார். நண்பர்கள் ஒரு ரீயூனியனுக்குத் திட்டமிட்டு அதை நடத்துகிறார்கள். இதன்  வழியே பள்ளிப் பருவத்து நாட்களை அசைபோடுகிறார்கள். பத்தாம் வகுப்பில் பிரிந்த ராமச்சந்திரனும் ஜானகிதேவியும் (திரிஷா) மீண்டும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். ஓர் இரவு முழுவதும் ஒன்றாக நாளைச் செலவிடுகிறார்கள்.  இந்தத் தருணத்தை ஒரு சிறுகதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மிகவும் சாதாரணக் கதை தான். ஆனால் திரைக்கதையில் சில தருணங்களைச் சுவாரசியமான தன்மையில் தந்திருப்பதால் படம் தப்பித்துவிடுகிறது. ரீ யூனியனில் நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ராமும் ஜானுவும் ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவுதான் படத்தின் பலம். அதுவும் ராமின் மாணவிகள் சூழ்ந்திருக்கும் காட்சியில் தன்னை ராமின் மனைவியாகவே காட்டிக்கொண்டு திரிஷா பேசும் காட்சி ருசிகரம். 


பள்ளிப் பருவத்தில் ராமச்சந்திரனாக நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், ஜானகியாக நடித்திருக்கும் கௌரி உள்ளிட்ட அனைவரும் பலருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறார்கள்.

பள்ளியில் பலமுறை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டும் ஒரு முறைகூடப் பாடாத யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே பாடலை அந்த இரவில் ஜானு பாடும் தருணமும் ராமின்பரவசமும் ரசனையானவை. காதலித்தவனைத் தனக்குத் திருமணமான பிறகு சந்திக்கும் வேளையில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருக்கிறார் திரிஷா. நிறைவேறாத காதலை நினைத்தபடியே வாழ்வைக் கடக்கும் ராமச்சந்திரனாக விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான வேடம். அதை முழுமையாக்கிக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியும் திரிஷாவும் படத்தை முழுமையாகத் தோளில் தாங்கி நகர்த்தியிருக்கிறார்கள்.  


இரவில் ராம், ஜானு இரவும் வரும் நகர்வலக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளை அழகுபடுத்தியிருக்கின்றன.கல்லூரியில் ஜானுவை ராம் சந்திக்க முயலும் ஒரே சம்பவத்தை மூன்று கோணங்களில் காட்டும்  அம்சம் திரைக்கதையில் மெருகு. தொண்ணூறுகளில் தேவாவும் ஏ. ஆர். ரஹ்மானும் வந்துவிட்டார்கள் என்றபோதும் இளையராஜா பாடல்களையே வைத்து அந்தக் காலக் கட்டத்தைக் காட்டியிருப்பது நெருடல்.

காதலை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்தியிருப்பதும்,  மெலோ டிராமாவைத் திகட்டத் திகட்டத் தந்திருப்பதும் அலுப்பு. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆட்டோகிராப் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து,  காதலுக்கு முன்னர் காலம் எம்மாத்திரம் என்ற பம்மாத்தைப் பரவசமான அனுபவமாகத் தந்திருக்கும் படம் 96.

சனி, செப்டம்பர் 15, 2018

அண்ணா எனும் திராவிடப் பேரறிஞர்


பெரியாரும் அண்ணாவும்

தமிழர்களால் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஆய்த எழுத்தைக் கொண்ட தமிழ் மொழியை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கு பாடுபட்டவர் அறிஞர் அண்ணா. ஏழை எளியவர்களின் நலம் காக்க பாடுபட்டதாலேயே மக்கள் அவர் பெயரில் உள்ள துரையை அகற்றி விட்டு அண்ணா என்றே பிரியத்துடன் அழைக்கின்றனர்.

ண்ணாவுக்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் வர் புகழைப்பாடாத அரசியல் கட்சிகளோ தனிமனிதர்களோ ல்லை. அறிஞர் அண்ணா தம்மை நீதிக்கட்சிக்காரர் ஆகவும் சுயமரியாதை இயக்கத்தினராகவுமே காட்டிக்கொண்டார். நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.

அண்ணாசாலை அண்ணாசிலை

அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். என்றாலும் விடுதலை பத்திரிகையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகு தான் அவரது கருத்தின் வெளிச்சம் தமிழகத்தில் சுடர்விட்டது. 'விடுதலை'யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய 'பாலபாரதி'யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய 'நவயுக'த்திலும் எழுதியிருந்தார். 'ஆனந்தவிகட'னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொண்டுவர அடிப்படையாய் அமைந்தன.

எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு 'சங்கீத லயம்' இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணும்போது அவர் பேச்சை முடித்து விடுவார். அதுதான் அண்ணா. அதுதான் அவரது சிறப்பும். காரம் மிக்க பேச்சும் சாரம் மிக்க எழுத்தும் அண்ணாவின் தனிப்பெருமைகள். 

அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான 'திராவிடநாடு' இதழிலும், 'காஞ்சி' இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள 'தம்பிக்குக் கடிதம்' எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் 290.

அண்ணாவும் கலைஞரும்

ண்ணா பொதுவாழ்க்கைக்கு, திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2 ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியாரை முதன்முதலில் சந்தித்தார். சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை அடியோடு மாற்றிக்காட்டினார். எதிர்க்க ஆளே இல்லை என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அடையாளம் தெரியாத ஒன்றாக மாற்றியதில் அண்ணாவின் பங்கு முக்கியமானது.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். அவர் இந்தியை விருப்பப் பாடமாகப் பள்ளிகளில் கொண்டுவந்தார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இப்போராட்டம் புத்துணர்ச்சி அளித்தது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அறிஞர் அண்ணாவுக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது. போராட்டத்திலோ மறியலிலோ கலந்துகொள்ளாத அண்ணா கைதுசெய்யப்பட்டார். ஏன்? சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய  அனல் தெறித்த பேச்சுக்காக.

மேடையில் அண்ணா

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாக 1944இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார்; பெரியார்க்கு அதில் விருப்பம் இல்லை. இதன் விளைவால்தான் தி.மு.. உதயமாகியது. 1949இல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். உடனடியாகத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர்.

அண்ணாவின் திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டி வெளியானது.தன் முன்னுரையில், உலகப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டது இல்லஸ்டிரேட்ட் வீக்லி. அண்ணாவின் பெருமைக்கு பெருமை சேர்த்தது அந்தப் பத்திரிகை.

அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட 'மாஸ்டர் கிரிஸ்டியன்' எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை, 'புரட்சித்துறவி' எனும் தலைப்பில் குமுதம் பத்திரிகை, அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.

அண்ணா முதல்வராக

ஏழை எளியவர்களை முன்னேற்றுவதும் தமது மொழி, இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவுமே அவரது அரசியல் குறிக்கோளாக இருந்தது. இதனால்தான் தமிழக ஆட்சியை மக்கள் மனமுவந்து அண்ணாவிடம் தந்தனர். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்தார். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்; இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் மேற்கொண்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி இரவு 12:22 மணிக்கு மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிடிவியில் பணியாற்றியபோது, 2012ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளுக்காக எழுதியது. 

வியாழன், செப்டம்பர் 06, 2018

இமைக்கா நொடிகள்

 

நகரத்தில் அடுத்தடுத்து தொடர்கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிபிஐ அதிகாரி அஞ்சலி கொலைகாரனைக் கண்டுபிடிக்க முயலும்போது, ஏற்கெனவே அவரால் கொல்லப்பட்ட குற்றவாளி ருத்ராதான் இந்தக் கொலைகளையும் செய்வதாகத் தகவல் வருகிறது. அதிர்ச்சிகொள்ளும் அஞ்சலி சீரியல் கொலைகாரரைப் பிடிக்கும் முயற்சியை முடுக்கிவிடுகிறார். கொலையாளியை அஞ்சலி பிடித்தாரா, கொலைகளுக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது இமைக்கா நொடிகள்.

வழக்கமான த்ரில்லர் படத்தில் காணப்படும் எந்த விறுவிறுப்பும் இல்லாமல், விருதைக் குறிவைத்து எடுக்கப்படும் சராசரித் தமிழ்ப் படத்தைப் போல் மிக நிதானமாக நகர்கிறது படம். திரைக்கதை விவாதங்களின்போது எழுப்பப்படும் அடிப்படையான சந்தேகங்களைகூட நிவர்த்திசெய்யாமல் லாஜிக் பற்றிய கவலையற்றுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஞானமுத்து துணிச்சல்காரர். அவரைவிடத் துணிச்சல்மிக்கவர் இப்படத்தைத் தைரியமாகத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் .


சிபிஐ அதிகாரியாக நடிக்க முயன்றிருக்கிறார் நயன்தாரா. அதர்வா முரளிக்கு ஒரு டாக்டர் வேடம். கோட், ஸ்டெதஸ்கோப் போன்றவை உதவியால் அவரை டாக்டர் என நம்மால் நம்ப முடிகிறது. படத்தில் ராஷி கன்னா என்றொரு கதாநாயகியும் உண்டு. நாயகன் நாயகி இருப்பதால் காதலும் உண்டு. காதல் இருப்பதால் டூயட் உண்டு. பிரிவுத் துயர் உண்டு. எதுவுமே ரசிகர்களைச் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். இதெல்லாம் போதாதென்று விஜய் சேதுபதி வேறு. அவரும் வந்தது முதல் போவது வரை பேசிக்கொண்டே இருக்கிறார்.

இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் படம் முழுக்க பவனி வருகிறார். ஒரு சிங்கம் போல் வசனம் பேசிக்கொண்டு அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அவர் ஒரு திறமையான இயக்குநர் என்பதையே மறக்கடித்து அவர் அச்சுஅசல் ஒரு தமிழ் நடிகர் என்பதை மனத்தில் நிறுத்துகிறது. படத்தின் திரைக்கதையையும் எழுதி இயக்கியிருக்கும் அஜய், அதீத ஆர்வத்தின் காரணமாக சில படங்களுக்கான கதையைக் கொண்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் காட்சிகளைத் தான் எடுத்திருக்கும் தரத்தை உணர்ந்து படத்துக்கு இமைக்கா நொடிகள் எனப் புத்திசாலித் தனமான டைட்டிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.


படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். தற்போதைய தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தேவைப்படும் அளவுக்குத் தரமான வசனங்களை ஒரு திரைப்படத்துக்கு எழுதிய பெரிய மனது அவருக்கு. பத்திருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த படத்தில் எப்படித் தரமான வசனங்களை எழுதினாரோ அந்தத் தரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் வசனத்தைப் பட்டைதீட்டியிருக்கிறார். படத்தில் சீரியஸான காட்சிகள் சிரிக்கவைக்கின்றன; காமெடிக் காட்சிகள் சீரியஸாக்குகின்றன. இது ஒரு புதுமையான முயற்சி.  இதற்காக இயக்குநருக்குத் தனி பாராட்டு.

படத்தை முடிந்தவரை தூக்கிநிறுத்த ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படத்தின் காட்சிகளைத் தொழில்நுட்பரீதியில் பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன். படத் தொகுப்பின் நேர்த்திக்காக இல்லாவிடினும் அவரது பொறுமைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். பின்னணி இசையமைத்துப் பாடல்களையும் தந்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நமக்குத்தான் விலா நோகிறது. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களைக் கொண்ட இந்தப் படத்தை இரு பாகங்களாகக் கொடுக்காமல் ஒரே பாகமாகக் கொடுத்ததில் இயக்குநரது பரந்த மனது தெரிகிறது. இமைக்கா நொடிகள் தமிழ் சினிமாவின் தரத்தை நிச்சயமாக சில அடிகள் நகர்த்தும். எதிர்த் திசையில் என்பது தான் சோகம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

ஓவியம்: வெங்கி

வெகுளி வெள்ளைச்சாமி நகரசபைத் தலைவராக இருந்த இந்தூர் நகரசபைக்குத் தலைவராக ஆசைப்பட்டவன் சின்னதம்பி. நேர்மையாவும் மக்களோடு மக்களாகவும் நின்று செயல்பட நினைப்பவன் சின்னதம்பி. ஆனால், அவனது அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா என அவனுடைய பரம்பரையே அந்த நகராட்சிக்குத் தலைவராக இருந்திருக்கிறது. அவர்கள் சம்பாதித்த கெட்ட பெயரை எல்லாம் சின்னதம்பியால் போக்க முடியவில்லை. அவனும் என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிறான் போடா தம்பி போ என்னும் விதமாகவே அனைவரும் நடந்துகொள்கிறார்கள். ஆனாலும் வெள்ளைச்சாமியை விரட்டாமல் ஓயப்போவதில்லை என சின்னதம்பி சபதம் எடுத்ததுபோல் செயல்படுகிறான்.

இதையெல்லாம் சமாளிக்கும் திறன் பெற்றவன் வெள்ளைச்சாமி. நன்றாக உடம்பை வளர்த்துவைத்திருந்தான் வெள்ளை. அறிவு வளராததால் அந்த வளர்ச்சியெல்லாம் உடம்பில் வந்துசேர்ந்தது. ஆஜானுபாகுவான வெள்ளையின் தோற்றம் கம்பீரமாக இருக்கும். அந்த உடம்பு அவனுக்குப் பெரிய வரப்பிரசாதம். அவன் பெரிய நடிகன். திடீர்னு அழுவான் அடுத்த கணமே பெருங்குரலெடுத்து சிரிப்பான். எதுக்குன்னே தெரியாது. நமக்கு மட்டுமல்ல; அவனுக்கும் தெரியாது. அவனுடன் இருப்பவர்களே குழம்பிப்போவார்கள். ஆனால் அப்படியெல்லாம் நடந்துக்குவான். அதுக்காகப் பெரிய பயிற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறான். வெற்றி மட்டும்தான் வெள்ளையின் குறிக்கோள். அதற்காக எந்த இழிவான நிலைக்கும் அவன் செல்வான். அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்வின் அடிநிலையிலிருந்து மேலெழுந்து வந்தவன். பல தகிடுதத்தங்கள் செய்து மேலே வந்த பின்னர் அந்தத் தகிடுதத்தங்களைக் கடும் உழைப்பு என்று உதார் விடுவான். பொய் சொல்லக் கூசவே மாட்டான் வெள்ளை. மிகத் தைரியமாகப் பொய் சொல்வான்.

வெள்ளைச்சாமியின் தாய் மிகவும் ஏழை. வரிசையில் நின்று ரேசன் பொருட்கள் வாங்குவார். அதை போட்டோ எடுத்து பரப்புவான் வெள்ளை. தன் தாய் எவ்வளவு எளிமையாக வாழ்கிறாள் எனப் பிரபலப்படுத்துவான். அவ்வப்போது கிழிந்த டவுரசரைப் போட்டுக் கொண்டு தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொள்வான் வெள்ளை. இப்போது விலை உயர்ந்த கோட் சூட் எல்லாம் போட்டும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் எப்படித் தகிடுதத்தம் செய்து பதவிக்கு வந்தோமோ அப்படி வேறு யாராவது இந்தப் பதவிக்கு வந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கும். சில வேளைகளில் அழுகை அழுகையாக வரும். அப்போதெல்லாம் டேய் நீ ஒரு டான் அழக் கூடாது என்று கண்ணாடியைப் பார்த்து தன்னைத் தேற்றிக்கொள்வான்.

ஒரு முறை அவன் தமிழூருக்குச் சென்றபோது, அந்த ஊரின் மக்கள் அவனைப் பயங்கரமாக அவமானப்படுத்திவிட்டார்கள். சுவரெங்கும் வெள்ளையே திரும்பிப் போ என்று முழக்கமிட்டார்கள். காரைவிட்டு வெள்ளை இறங்கவே இல்லை. அன்று அவனுடைய காலைக் கடன், குளிப்பு, சாப்பாடு உரை எல்லாமே காரிலிருந்தபடியே கழிந்தது. மாலையில் தப்பித்தால் போதும் என்று தமிழூரிலிருந்து ஓடியே வந்துவிட்டான். எப்போதுமே தமிழூர் என்றாலே அவனுக்குக் கண்டம்தான். தமிழூரின் தலைவராக இருக்கும் பெரியவரை நினைத்தாலே அவனுக்குப் பகீரென்றிருக்கும். பேண்டை நனைத்துவிடுவோமோ என்று பயப்படுவான். சின்னவயதில் ஆசிரியருக்குப் பயந்தது நினைவுக்கு வரும்.

மொத்தம் பத்தாயிரம் பேர் உள்ள அந்த இந்தூரில் 15 ஆயிரம் பேரோட ஆதரவால் தான் நகராட்சித் தலைவராக ஆனதாகப் பெருமைப்பட்டுக்கொள்வான். திடீரென வெள்ளைச்சாமியின் பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது. அந்த ஊரின் வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமே வெள்ளைச்சாமி ஆதரவு தருவதாகவும் ஏழை எளியோரை வஞ்சிப்பதாகவும் சின்னத்தம்பி வெள்ளைக்கு எதிராக நகராட்சி உறுப்பினர்களைத் திரட்டினான். பொதுவாக, பொதுக்கூட்ட மேடைகளில் கையை அசைத்தும் தலையை ஆட்டியும் உற்சாக உரை எழுப்பும் வெள்ளைச்சாமிக்கு நகராட்சிக் கூட்டத்தில் பேச வேண்டுமென்றால் கைகால் எல்லாம் உதறும். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாது வெள்ளைச்சாமிக்கு. பாவம் அவன் என்ன செய்வான். அவனுக்கு அதெல்லாம் தெரியாது. அதனால் செய்தியாளர்களைச் சந்திக்கவோ நகரசபையில் விவாதத்தை எதிர்கொள்ளவோ திணறுவான். அப்படியே விவாதத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசுவான். ஆனால் அதை பெரிய சாதனை போல் சொல்வான். இதை எதுக்குச் சொல்றான் என யோசிக்கும்முன்பே அவன் தான் நினைத்ததை எல்லாம் உளறி முடித்துவிடுவான். எப்படியோ ஒவ்வொரு நிகழ்வையும் அவன் சமாளித்துவருகிறான். சில நேரம் இந்த மானங்கெட்ட பொழப்பு தனக்குத் தேவையா எனத் தனியாக இருக்கும்போது நினைத்துக்கொள்வான்.

வெள்ளை பயந்த நாள் வந்தது. சின்னதம்பி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டான். வெள்ளைக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரிக்க முயன்றான். சின்னதம்பி பேசியதைப் பார்த்த வெள்ளை திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. வேகமாக எழுந்துசென்று சின்னதம்பியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். மிகப் பிரமாதமான பேச்சு எனப் பாராட்டினான் வெள்ளை. வெள்ளை தன்னைக் கட்டிப் பிடித்துவிட்டானே, முத்தம் கொடுத்துவிட்டானே என சின்னதம்பிக்கு அவமானமாகப் போய்விட்டது. டன் கணக்கில் டெட்டால் போட்டுக் குளிக்க வேண்டும் என சின்னதம்பி எண்ணிக்கொண்டான். அவ்வளவு வெறுப்பு வெள்ளைமீது சின்னதம்பிக்கு.

சின்னதம்பி கேட்ட எந்தக் கேள்விக்கும் வெள்ளை பதிலே சொல்லவில்லை. அவை அனைத்தும் நியாயமான கேள்விகள். அதற்கு வெள்ளை பதில் சொன்னால் மாட்டிக்கொள்வான். அது அவனுக்குத் தெரியும். அதனால்தான் சின்னதம்பியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து நாடகமாடினான். அப்பாவிகள் வெள்ளையைப் புகழ்ந்தனர். எதிரியையும் சமமாக நடத்தும் வெள்ளையின் புகழ் நாடெங்கும் பரவியது. சின்னதம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படியொரு மானங்கெட்ட மனிதனை எப்படிச் சமாளிப்பது எனக் குழம்பினான். ஆனாலும் எப்படியும் வெள்ளையை வென்றாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் சின்னதம்பி.


பெண்களுக்காகவும் சுடர்ந்த சூரியன்

மவுண்ட் ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி
இந்தியா விடுதலையடைந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தலைகீழ் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை அரியணையில் அமர்ந்திருந்த, பலம் பொருந்திய தேசியக் கட்சியான காங்கிரஸை 1967 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது மாநிலக் கட்சியான திமுக. அதன் முதல் முதலமைச்சரான அண்ணாத்துரை ஈராண்டுகளுக்குள், 1969-ல் மறைய, கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் வரிசையிலிருந்த மு.கருணாநிதி முன்னேறினார்; முதல்வரானார். திராவிட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியான திமுக ஒடுக்கப்பட்டோரின் நலனையும் சமூக நீதியை நிலைநாட்டுவதையும் தன் முக்கியக் கடமைகளாகக் கொண்டிருந்தது. தந்தை பெரியாரிடம், அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றறிந்த முதலமைச்சர் கருணாநிதியும் இது விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். 

ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடும்போது அதன் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெண்கள். சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் குடும்பங்களிலும் நிலவும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஒன்றல்ல; ஓராயிரம். அவை அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிய மிகப் பெரிய சமூக மாற்றம் தேவை. அந்த மாற்றத்துக்கான விதை தூவிய பெரியாரின் வழியில் அண்ணாவை அடியொற்றி நடைபோட்டவர் மு.கருணாநிதி. அதற்கான சான்றுகளாக கருணாநிதி கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்களைச் சொல்லலாம். அந்தத் திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கருணாநிதி மறைந்த மறுநாள் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்த கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் கலந்துகொண்டார்கள். தங்கள் வாழ்வில் மலர்ச்சி காண விரும்பிய தந்தையாக தமையனாக தனயனாகச் செயல்பட்ட மனிதரின் மரணம் அவர்களை உலுக்கியது. ஆகவே, கட்சி வேறுபாடின்றி அவருக்குத் தங்கள் அஞ்சலியைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள்.

காவேரி மருத்துவமனை முன்பு
மகளிருக்காக அவர் கொண்டுவந்த திட்டங்கள் எவை எனப் பார்த்தால் மகளிர் நலனுக்காக கருணாநிதி உண்மையிலேயே செயல்பட்டாரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெண்களில் பெரும் பிரச்சினைகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களது கல்வியும் திருமணமுமே முன்னிலையில் நிற்கும். ஆகவே, பெண்கள் கல்வி கற்கவும் மணமுடிக்கவும் திட்டங்கள் வேண்டும். சரி மணமுடித்த பெண்கள் கணவனை இழந்தால் கைம்பெண்ணாகிவிடுகிறார்களே அவர்களுக்கும் உதவ வேண்டுமே. இன்னும் சில பெண்கள் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கக்கூடும் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இவை எல்லாம் உதவும் சொத்து நிறைந்த குடும்பத்து பெண்களுக்கு என்ன செய்வது. அந்தச் சொத்தில் சம உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது அவசியம்தானே? சரி அரசியல் ஈடுபாடுகொண்ட பெண்களை அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டுமே. அதற்கும் திட்டம் உண்டு. இப்படிப் பெண்கள் மீது அக்கறை கொண்டு எந்தவகையிலும் எந்தத் தரப்புப் பெண்களும் விடுபட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உதவும்படியான திட்டங்களை முன்னெடுத்ததில் கருணாநிதியின் கூர்மதியும் பங்களிப்பும் காலகாலத்துக்கும் நினைவுகூரத்தக்கவை.

கணவன் இறந்துவிட்டால் பெண்ணுக்கு வாழ்வே முடிந்துவிட்டது என்ற சமூகத்தின் அறியாமையை அகற்ற கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில். கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் 1975-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம். கைம்பெண்களின் மறுவாழ்வுவை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மறுமணத்துக்கு ஆதரவு தரவுமான நிதியுதவித் திட்டம் இது. இந்தத் திட்டத்தில் அப்போது 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2009-ல் இது 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் உதவிபெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணத்துக்கு உதவும் அதே நேரம் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கைம்பெண்களுக்கும் உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்தார் அவர். அது, 1975 ஜூன் 1 அன்று கொண்டுவரப்பட்ட ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை திட்டம். 18 வயசுக்கு மேற்பட்ட கைம்பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே உழைத்துப் பிழைக்க விரும்பும் 20 முதல் 40 வயது கொண்ட பெண்களுக்கு உதவுவதற்காக, சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975-ல் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.

கலைஞர் மறைந்த அன்று காவேரி முன்பு
ஆண்களின் கல்வி குடத்து நீரெனில் பெண்களின் கல்வி குளத்து நீர். அதனால் சமூகமே பயனடையும். ஆகவே பெண்களின் கல்விக்கு உதவும்வகையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பெரியார் ஈ.வே.ரா.நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை 1989-90-ல் கொண்டுவந்தார்.  வருட வருமானம்  24 ஆயிரத்துக்குட்பட்ட எளிய குடும்பத்துப் பெண்கள் பட்டப் படிப்பு படிக்க உதவும் திட்டம் இது.

1989-ல், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொண்டுவந்த மற்றொரு திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். இது திருமண உதவித் திட்டம் என்றபோதும் மறைமுகமாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகவும் செயல்படுகிறது. குடும்பத்தின் வருட வருமானம் 72 ஆயிரத்துக்குட்பட்ட ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் அமைந்த திட்டம் இது. நிதி உதவி பெற விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி. எனவே, இந்தத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. பழங்குடியினப் பெண்கள் 5-ம் வகுப்புவரை படித்திருந்தால் போதும் என்பதைப் போன்ற விதிகளைக் கருத்தூன்றிக் கவனிக்கும்போது திட்டங்கள் பயனாளிகளுக்குப் போய்ச்சேருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை விளங்கும்.  

கலைஞரின் இறுதி ஊர்வலம்
பெண்களது சமூகச் செயல்பாட்டையும் நிர்வாகத் திறனையும் வளர்க்க உதவும் வகையில், 1989-ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரியில் தொடங்கிவைத்த திட்டம் மகளிர் சுய உதவிக் குழு. கிராமப்புறப் பெண்கள் சிறு குழுவாக ஒருங்கிணைந்து வாழவும், வருமானம் ஈட்டவும் உதவிய திட்டம் இது. 1989-ல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின்படி ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன. மாற்றுப்பாலினத்தவருக்குத் திருநங்கைகள் என்ற கவுரமான பதத்தை வழங்கியதுடன் அவர்கள் மரியாதையான வாழ்வு நடத்துவதை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் ஒன்று 15.4.2008 அன்று தொடங்கப்பட்டது. அதுவரை மாற்றுப்பாலினத்தவரை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட இந்த நடவடிக்கை உதவியது.

திருமணமே செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கிறார் கருணாநிதி. அது 2008 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட முதிர்கன்னி உதவித் திட்டம் இந்தத் திட்டத்தில் திருமணமாகாத 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி உதவி கிடைக்கிறது.

அஞ்சலி சுவரொட்டி
கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்பட்டன. அவர் சொந்தக் கையிலிருந்து பணம் போட்டுச் செயல்படுத்தவில்லை. ஆனால், அத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை உணர, முன்மொழிய, வழிமொழிய மகளிரின் துயரம் அறிந்த முதல்வர் தேவைப்பட்டார். அந்த முதல்வராக இருந்தார் கருணாநிதி. திட்டங்கள் தீட்டுவதில் வெறுமனே கடமையைத் தட்டிக்கழித்தால் போதும் என்று செயல்பட்டவரல்ல அவர். திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து பயனாளிக்கான விதிகளைத் தீர்மானிப்பது வரை ஒவ்வொன்றிலும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்தியிருக்கிறார் அவர். அதுமாத்திரமல்ல; யாருக்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ அவை பயனாளிகளைச் சென்றடைகிறதா என்பதை விசாரித்தறிவதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இவற்றை எல்லாம் விசாரித்து அறியும்போது அவரது தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது. இருட்டறையில் முடங்கிக் கிடந்த மகளிருக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டின கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள். அதனால்தான் தமிழ்ப் பெண்களில் நெஞ்சம் நிறைந்த தலைவராயிருக்கிறார் இன்று அவர்.

செண்பகம் என்னும் பெயரில் 2018 ஆகஸ்ட் 12 பெண் இன்று இணைப்பிதழில் எழுதப்பட்ட கட்டுரை இது. 

ஞாயிறு, ஜூலை 15, 2018

தண்ணீர் சாமி

ஓவியம்: வெங்கி
வெகுளி வெள்ளைச்சாமி ஆயா உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஊர் பேர் தெரியாத ஆளாகத்தான் இருந்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்கிய காசிலேயே தனி உணவகம் கட்டும் அளவுக்குச் சம்பாதித்துவிட்டான் என்று அவனுடைய எதிரிகள் சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் பத்து தோசை, இருபது இட்லி, பத்து காபி சாப்பிட்டால் வெள்ளை பில்லில் இரண்டு தோசை, ஐந்து இட்லி, இரண்டு காபி என்று குறிப்பிட்டுவிடுவான். ஆகவே, வாடிக்கையாளர் தாங்கள் அடைந்த லாபத்தில் பெரும்பகுதியை வெள்ளைக்கு டிப்ஸாகத் தருவார்கள். இந்த வேலையில் வெள்ளை நிம்மதியாக இருந்தான். ஆயா உணவகத்தில் எப்போதும் கூட்டம் ஜேஜே என்று இருந்ததால் உணவகத்தை நடத்திய ஆயாவுக்கு வெள்ளையின் கேப்மாரித்தனம் பற்றித் தெரியவே இல்லை. ஆயாவின் தங்கை சின்ன ஆயாவுக்கோ வெள்ளையின் மீது அபார நம்பிக்கை. தனக்கேற்ற அடிமையாக சின்ன ஆயா வெள்ளையை நம்பினார்.

அதே நேரம் ஆயாவின் நம்பிக்கைக்குரிய பணியாளாகத் தண்ணீர் பாண்டி இருந்தான். ஆயாவின் எதிரே தண்ணீர் பாண்டி நிமிர்ந்தே நின்றதில்லை. தண்ணீர் பாண்டிக்கு முதுகு நேரானதா இல்லை பிறவிலேயே கூன் விழுந்துவிட்டதோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு அத்தனை கச்சிதமாகத் தண்ணீர் பாண்டியின் முதுகு வளையும். ஆயா எங்கு சென்றாலும் பொறுப்பைத் தண்ணீர் பாண்டியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார். தண்ணீர் பாண்டியும் மிகவும் பணிவாக நடந்துகொள்வான். கணக்குவழக்குகளைக் கச்சிதமாகப் பராமரிப்பான். டிப்ஸ் கணக்குகளைக்கூடச் சொல்லிவிடுவான். காலையில் வேலையைத் தொடங்கும் முன்னர் ஆயா இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவான்.

ஆனால், தண்ணீர் பாண்டி லேசுபட்டவனல்ல. அவன் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பர்ஸில் கைவைத்துவிடுவதில் சமர்த்தன். ஆள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பானே ஒழிய தண்ணீர் பாண்டி பயங்கரமான தந்திரக்காரன். காலில் விழ வேண்டுமென்றால் காலில் விழுவான் கழுத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் கழுத்தைப் பிடிப்பான். காலில் விழுவதை வெளிச்சத்தில் செய்யும் தண்ணீர் பாண்டி, கழுத்தைப் பிடிப்பதை இருட்டில் செய்வான். அதுதான் அவனது சாமர்த்தியம்.  ஆகவே, வெள்ளை, தண்ணீர் பாண்டியிடம் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ள மாட்டான். தண்ணீர் பாண்டியும் வெள்ளையின் விஷயத்தில் தலையிடுவதில்லை. வெள்ளைக்கு உடம்பு வளர்ந்த அளவு மூளை வளரவில்லை. எது வளருமோ அது தானே வளரும் என்று வெள்ளையும் அப்படியே விட்டுவிட்டான். ஆனால், தண்ணீர் பாண்டியைவிடத் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வான்.

திடீரென்று ஒரு நாள் ஆயா உணவகத்து உரிமையாளரான ஆயா எங்கேயோ தொலைதூர தேசம் சென்றுவிட்டார். அவர் எங்கே போனாரென யாருக்குமே தெரியவில்லை. ஆதரவற்ற நிலைக்குச் சென்றது ஆயா உணவகம். வாடிக்கையாளர்கள் கலங்கிப்போனார்கள். மூன்று நேரமும் ஆயா உணவகத்திலேயே சாப்பிட்டு உடம்புவளர்த்த கவிஞர் பாம்பன் ’ஆயா எங்க ஆயா போன? எங்களுக்குத் தேவ பாயா… வந்துடு ஆயா வந்து தந்திடு பாயா’ என்று ஒரு கவிதையே பாடிட்டார். அந்தக் கவிதையை யாரோ ஆயா காதில் போட்டுட்டாங்களோ என்னவோ ஆயா பயந்துபோய் திரும்பிவரவே இல்லை. இந்தச் சூழலில் ஆயா உணவகத்தின் பொறுப்பைத் தான் ஏற்கலாமெனத் தண்ணீர் பாண்டியும் வெள்ளையும் தனித் தனியாகத் திட்டம் போட்டார்கள். ஆனால், உணவகத்தின் பொறுப்பைத் தானே ஏற்கலாம் எனச் சின்ன ஆயா தயாரானபோது வெள்ளையும் பாண்டியும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆனால், சின்ன ஆயாவால் உணவகப் பொறுப்பை ஏற்க முடியாத அளவுக்கு உடல்நலம் மோசமாகிவிட்டது. ஆயா உணவக உணவை அதிகமாக உண்டதால் அப்படியாகியிருக்கலாம் என அம்மஹை மருத்துவமனை மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆகவே, சின்ன ஆயா உடல்நலம் சரியாகும்வரை பொறுப்பை வெள்ளையிடம் ஒப்படைத்துவிட்டார். தண்ணீர் பாண்டி என்னவெல்லாமோ யுத்தம் நடத்திப் பார்த்தான் ஒன்றும் பாச்சா பலிக்கவில்லை. வேலைன்னு வந்துட்டா வெகுளி வெள்ளைச்சாமி நிஜமாகவே வெள்ளைக்காரன் என்பது தெரிந்தது. ஆகவே, வெள்ளையிடம் சமாதானமாகப் போய்விடலாம் என்று முடிவெடித்து தண்ணீர் பாண்டி வெள்ளைக்குச் சமாதானக் கொடி காட்டினான். அதன் பின்னர் ஆயா உணவகத்தில் ரெண்டு உரிமையாளர்கள் என்பது போல் வெள்ளையும் பாண்டியும் ஆனார்கள். எங்கு போனாலும் இருவரும் ஒன்றாகத்தான் போனார்கள். ஒன்றுக்குக்கூட அவர்கள் தனித்தனியாகப் போனதில்லை. அப்படியொரு மாற்றாராக மாறினார்கள். அவர்களைத் தனித் தனியாக யாராவது பார்த்தார்கள் என்று சொன்னால் சொன்னவர்கள் கண்ணில் கோளாறு என்றே பொருள். அதன் பின்னர் அந்த ஊர்க்காரர்கள் நகமும் சதையும் போல் என்று சொல்வதற்குப் பதில் பாண்டியும் வெள்ளையும் போல் எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். வெகுளி வெள்ளைச்சாமி தனது பெயரில் சாமி இருப்பதால் தன்னைச் சாமியாக நினைத்துக்கொண்டான். ஆனால், வாடிக்கையாளர்கள் அவனைப் பூதம் எனக் கேலிசெய்வார்கள். அது வெள்ளைக்குத் தெரியாது. வெள்ளையும் பாண்டியும் ஒன்றுசேர்ந்தது ஆயா உணவகத்துக்குக் கேடுதான் என்று நீண்ட கால வாடிக்கையாளர்கள் பேசிக்கொள்வது அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ?