(2016 பிப்ரவரி 21 அன்று தி இந்துவில் வெளியானது)
நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் பிரச்சினை வீடு சார்ந்ததாகவே இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்தும் நிம்மதியாக வசிக்க வழியில்லை என்ற வருத்தத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். புறாக் கூண்டு போன்ற அபார்ட்மெண்ட்களை விலை கொடுத்து வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கிறதே என்ற முணுமுணுப்புகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. குறைந்த இடத்தில் பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் போதுமான அளவில் வீடு கிடைத்தால் பெரிய வரம் என்ற நினைப்பு எழாதவர்கள் இருக்க இயலாது. இந்த எதிர்பார்ப்பை உணர்ந்து கட்டுநர்களும் முடிந்த அளவில் குறைந்த இடத்தில் போதுமான வசதியை அளிக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவு எளிதில் பூர்த்திசெய்துவிட முடியாது.
உலகமெங்கிலும் நகரப் பகுதியில் குறைந்த இடத்தில் வசதியான வீடு என்னும் தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. வீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்களும் தங்கள் அறிவைக் கூர்தீட்டி புதுமையான முறையில் நவீனமாக வீடுகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த கான்ஸ்டண்டின் எண்டலேசிவ் என்னும் விஷுவலைஸர் வீட்டின் உள்ளலங்காரத்தில் புதுமையான உத்திகளைப் பிரயோகித்துவருகிறார். 400 சதுர மீட்டர் பரப்புக்குள் அடங்கும் வீடுகளையே மிகவும் விசாலமானதாகக் காட்டும் வகையில் அமைத்துவிடுகிறார் அவர்.
அவர் கட்டிய மொத்தமே 344 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு வீட்டில் ஹாலிலேயே படுக்கையறை அமைந்திருக்கிறது. ஆனால் படுக்கையறைக்குக் கண்ணாடிச் சுவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு அது தனியான அறையாகத் தெரியாமல் ஒட்டுமொத்தமாகப் பெரிய அறையாகத் தெரியும். ஆனால் படுக்கையறையும் தனியாக அமைந்திருக்கும். சிறிய உத்திதான் ஆனால் நம் கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அதை அமைத்துவிடுகிறார்.
வசீகரமான இரண்டு நாற்காலிகள் ஒரு சிறிய டைனிங் டேபிள் ஆகியவற்றைப் போட்டு மனங்கவரும் ஒரு டைனிங் ஏரியாவை உருவாக்கிவிடுகிறார். அந்த டைனிங் அமைப்பே விருந்தினர்களை எளிதாகக் கவர்ந்திழுத்துவிடும். மிகவும் ஒடுங்கிய சமையலறையில் இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி அவை மிகவும் திறந்தவெளியில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். அதிக இடம் இல்லாவிட்டால்கூட சமையலறையில் ஒரு அமைதி எப்போதும் இருப்பது போன்று இது தோற்றம்கொள்கிறது.
மிகச் சிறிய குளியலறையில் அவர் வெள்ளை மார்பிள்களைக் கொண்டு இழைத்துவிடுகிறார். ஆகவே அந்தச் சிறிய குளியலறையே மிகவும் ஆடம்பரமான ஒன்றாக நம்மை எண்ணவைத்துவிடுகிறது. அந்தக் குளியலறையின் ஒரு மூலையில் செல்லம் போல் ஒரு ஷவர். அதைக் கண்ணாடிச் சுவர்களை வைத்து மறைத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது அறைக் குளியலே ஆனந்தக் குளியலாகத் தோன்றிவிடும். அந்த அளவு வசீகரமாக அதை அமைத்திருக்கிறார். மிகவும் சிறிய இடம் என்பதால் அதை எளிதில் சுத்தப்படுத்தலாம். ஆக, குளியலறை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சி தரும்.
அடிப்படைத் திட்டத்தைப் பெரிதும் மாற்றாமல் அழகிய, ஆடம்பர, அறைக் கலன்களையும், சுவரின் வண்ணங்களையும் மாற்றி அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் மற்றொரு வீட்டையும் உருவாக்கியிருக்கிறார். அவரது செயல்திட்டம் ஒன்று தான். மிகச் சிறிய இடத்தில் கண்ணுக்கு அழகான வசிப்பதற்கு வாகான வீட்டை அமைக்க வேண்டும் என்பதுதான். குறைந்த இட வசதி வீடு எப்படிக் கட்டுவது என யோசிப்பவர்கள் இதைப் போன்ற நிபுணர்களின் உத்தியைப் பின்பற்றினால் சிறப்பான வீட்டை அமைத்துவிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக