இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

ஒட்டால்

அன்புள்ள தாத்தாவுக்கு..!



இருள் சூழ்ந்த அறையில்,மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்தப் பிஞ்சுச் சிறுவன் கண்ணீர் நிரம்பிய எழுதுகோலால் கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறான். திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில் (2015) இறுதியாகத் திரையிடப்பட்ட ‘ஒட்டால்’ இப்படித்தான் தொடங்குகிறது. பார்வையாளர்களைத் தன்வசம் ஈர்த்துக்கொண்ட ‘ஒட்டால்’ விருதுக் குழுவையும் விட்டுவைக்கவில்லை. அந்தத் திரைப்பட விழாவின் உயரிய விருதுகள் நான்கைப் பெற்றிருந்தது. இருபதாண்டு காலத் திருவனந்தபுரத் திரைப்பட விழா வரலாற்றில் வேறெந்தப் படமும் தொட்டிராத சிகரம் இது எனச் சிலாகிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரே நேரத்தில் முதன்முதலாகத் திரையரங்குகளிலும் இணையத்திலும் வெளியிடப்பட்ட இப்படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில், 10.01.2016 அன்று உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்பட்டது. 

ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் 1886-ல் எழுதிய ‘வான்கா’ சிறுகதையின் அடிப்படையில் ‘ஒட்டா’லை உருவாக்கியிருக்கிறார், இலக்கியப் பிரதிகளைத் திரைப்படமாக்குவதில் வேட்கை கொண்ட இயக்குநரான ஆர்.ஜெயராஜ். கேரளாவின் குட்டநாடு பகுதியில் ஏழ்மை ததும்பும் வாழ்க்கை நடத்தும் வாத்து மேய்ப்பவரான 70 வயது தாத்தாவுக்கும் (மீனவரான குமரகோட்டம் வாசுதேவன்), 8 வயதுப் பேரனான குட்டப்பாயிக்கும் (ஆஷந்த் கே ஷா) இடையேயான உணர்வுப் பிணைப்பு, இயற்கைக்கும் அவர்களுக்குமான உறவு என்ற தடங்களின் மேலேயே படம் பயணிக்கிறது. வாத்து மேய்க்க தாத்தாவுடன் படகில் செல்லும் பேரன் இயற்கையான சூழலிலே பொழுதைக் கழிக்கிறான். சிறுவனுக்குக் கல்வி கற்க விருப்பம். ஆனால் பள்ளி செல்லவோ கல்வி கற்கவோ அவர்களது பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. ஏனெனில் கடன் தொல்லை தாள முடியாமல் குடும்பத்துடன் உயிரைவிடத் துணிந்த தகப்பனும் தாயும் அதிர்ஷ்டவசமாக மாண்டுவிட, துரதிர்ஷ்டசாலியான சிறுவன் மட்டும் பிழைத்துக்கொள்கிறான்.



ஏழைகள் பரோபகாரிகள், செல்வந்தர்கள் சுயநலவாதிகள். கற்க வழியில்லாத சிறுவர்களைக் கூலித் தொழிலில் தள்ளிவிடுவதற்காகத் திரியும் மனிதர்கள் துளிக்கூட இரக்கமற்றவர்கள். இப்படியான கொடூரர்களிடம் மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள் படும்பாட்டைச் சொன்னால் மாத்திரமல்ல நினைத்தாலே போதும் நெஞ்சம் விம்மும். இத்தகைய சிறுவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வை அணுக வேண்டும். நம்பிக்கை மாத்திரம் போதும், அவர்கள் தாமாக வளர்ந்து, எழுந்து, நிமிர்ந்துநின்றுவிடுவார்கள். காலத்தால் அழியாக் காவியமாக, கவித்துவமான கேமரா மொழியில் ஜெயராஜ் படைத்திருக்கும் ‘ஒட்டால்’ இதைத்தான் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் ஜெயராஜ்
இயற்கையான சூழலில் குட்டப்பாயிக்குக் கிடைக்கும் வாழ்வு மகோன்னமானது. எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில், வலசைப் பறவைகள் வந்துசெல்லும் நீர்நிலைகள் நிரம்பிய, பசுமையான, குளுமையான, வளமான குட்டநாட்டைக் காணும்போது இப்படி ஓரிடத்தில் வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கம் எவருக்கும் எழும். குட்டநாடு பின்புலத்தில் உயிரோட்டமான திரைக்கதையை எழுதிய ஜோஷி மங்கலாத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் படத்துக்குக் கிடைத்தது. ஆனால் குட்டப்பாயிக்குக் குட்டநாட்டில் வாழக் கொடுத்துவைக்கவில்லை. தமிழகத்தின் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் அவன் மாட்டிக்கொள்கிறான். தனக்குப் பின்னர் அவன் நிராதரவாக நின்றுவிடக் கூடாதே எனக் கலங்கும் தாத்தா அவனை வலுக்கட்டாயமாகப் பணிக்கு அனுப்பிவிடுகிறார்.


தீப்பெட்டித் தொழிற்சாலையில் சிறுவனுக்குச் சரியாகச் சோறு கிடைப்பதில்லை; ஓய்வும் கிடைப்பதில்லை. அந்தக் கொட்டடியிலிருந்து மீளத் துடிக்கிறான் சிறுவன். தன்னை விடுவித்துச் செல்லும்படி தாத்தாவுக்கு உணர்வுபூர்வமான கடிதத்தை அவன் எழுதி முடிக்கும்போது படமும் நிறைவுபெறுகிறது. பார்வையாளர்கள் கண்ணீர் சிந்தாமல் திரையரங்கிலிருந்து திரும்ப முடியாது என்பதில் ஜெயராஜ் கொண்ட உறுதியைக் காட்சிகள் புலப்படுத்துகின்றன. ஒருவேளை கண்ணீர் வரவில்லை என்றால் பிழை கண்களில்தான் படத்திலல்ல. இயற்கை மீதான நேசம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித நேயம், குழந்தைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு சமூக அக்கறைகள் பேரொளி பாய்ச்சும் இந்தப் படம் செல்லும் இடங்களில் எல்லாம் விருதுகளை வாரி எடுத்துவருவதில் வியப்பென்ன?

சிறிய மாற்றங்களுடன் தி இந்து நாளிதழில் வெளியானது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக