சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்) அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கைத் துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியாரின் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மருமகனுக்குப் பதில் சுப்புராஜ் கொல்லப்பட்டதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். இது தொடர்பாக சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. இந்த மோதலின் காரணமாக சேதுபதி வேலையைத் தற்காலிகமாக இழக்கிறார். மீண்டும் சேதுபதி வேலையில் சேர்ந்தாரா, வாத்தியார்தான் வென்றாரா என்பதை விவரித்துச் செல்கிறது சேதுபதி.
சேதுபதி அடர்த்தியான முறுக்கு மீசையுடன் ஆண்மைமிக்க தோற்றம் காட்டி நேர்மைத் திமிர் கொண்ட போலீசாக வலம் வருகிறார். அடிக்கடி மீசையை வீரத்துடன் தடவிவிட்டுக்கொள்கிறார். குடும்பத்தில் மனைவியுடன் குறும்பில் ஈடுபட்டு குண்டாத்தி எனப் பிரியத்துடன் கொஞ்சும் ஆசைக் கணவனாகவும், குழந்தைகளுடன் சரிக்குச் சரி விளையாடும் பாசத் தந்தையாகவும் இருக்கும் விஜய் சேதுபதி காவல் நிலையத்திலோ டெரரான இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அந்தந்த நேரத்தில் அந்தந்த மனிதராக மாறிவிடுகிறார். கணவனையும் குழந்தைகளையும் உலகமாகக் கருதும் சராசரியான நடுத்தரவர்க்க மனைவி வேடம் ரம்யா நம்பீசனுக்கு. அதில் அவர் அழகுடன் பொருந்திப்போகிறார். சின்ன சின்ன ஊடல் காட்டி வசீகரிக்கிறார்.
வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தி ஊருக்குப் பெரிய மனிதர். ஆனால் தன் வழியில் யாராவது குறுக்கிட்டாலோ எந்த நிலைக்கும் கீழிறங்கி எதிரிகளைப் பந்தாடும் தாதாவாக வந்துசெல்கிறார்.
எந்தப் புதுமையும் இல்லாத பழைய கதை என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் திரைக்கதையில் சில திருப்பங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றுக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைக்கிறது. மிரட்டலான போலீஸ் அதிகாரியாக சேதுபதி அறிமுகமாகும் காட்சி, வாத்தியாரைப் பயமுறுத்தும் விதத்தில் வரும் சேதுபதி அவரை எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டுச் செல்லும் காட்சி, மேலும் விசாரணை கமிஷன் முன்பு காவலர் பொய் சொல்வதும் அதன் பின்னணிக் காட்சிகளும் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தேவையைப் பூர்த்திசெய்திருக்கிறது. ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் திரைக்கதையில் வேகத்துக்கு உதவியுள்ளது. பல இடங்களில் காட்சிகளின் உணர்வை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பின்னணியிசை நெளியவைக்கிறது. மிரட்டலான போலீஸ் கதைப் படம் என்றாலும் இவ்வளவு பயங்கரமான இசையா என எண்ணவைக்கிறது. பாடல்கள் எவையும் படத்துடன் ஒன்றவேயில்லை. திரைக்கதையின் வேகத்துக்குத் தடையாகவே பாடல்கள் அமைந்துள்ளன. சேதுபதி வீட்டில் இல்லாத வேளையில் வாத்தியாரின் ஆட்கள் அவருடைய வீட்டுக்கு வந்து மிரட்டும் காட்சியில் சின்னப் பையன் துப்பாக்கியால் சுட்டு ஆட்கள் பயந்து ஓடுவது திரைக்கதையில் வித்தியாசமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை.
சேதுபதி சஸ்பெண்ட் ஆன பின்னர் கதையில் பெரிய சம்பவங்கள் எவையுமே இல்லை. சின்ன சின்ன திருப்பங்கள் மூலமாக மட்டும் கதை நகர்வதால் திரைக்கதை சிறிது தளர்ந்துவிடுகிறது. விசாரணை என்ற பெயரில் நான்கைந்து பேரை சேதுபதி சுட்டு வீழ்த்துவது கேள்விக்குள்ளாகவில்லை. ஆனால் அவரது காவல் நிலையத்தில் அவரது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டால் மாணவன் காயம்படுவது அவ்வளவு பெரிய விஷயமாகிவிடுகிறது. இது திரைக்கதையில் பெரிய அபத்தம். மொத்தத்தில் இயக்குநர் அருண் குமாரின் சேதுபதி ரசிகர்களின் நினைவில் நிற்கும் போலீசாக இல்லை என்றாலும் சேதாரமில்லாமல் தப்பிவிட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக