இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வியாளர், தத்துவ ஞானி, அரசியல் அறிஞர். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஐ ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிக அரிதாகத்தான் பேசியிருக்கிறார். எனவே இவரது சிறு வயது சம்பவங்கள், கல்வி ஆகியவை குறித்த விவரங்கள் வெகு காலத்திற்குப் பின்னரே தெரியவந்துள்ளன. 1888 செப்டம்பர் 5-ல் ஆன்மிகத் தலமான திருத்தணியில் பிறந்தார். இவரது தந்தை வீராசாமி, தாய் சீதம்மா. இவர்கள் ஆன்மிகக் காரியங்களில் ஈடுபட்டுவந்தனர். 

1896-ல் ராதாகிருஷ்ணன் பள்ளிப் படிப்புக்காகத் திருப்பதி அனுப்பப்பட்டுள்ளார். திருப்பதியில் ஆங்கில மிஷினரி பள்ளியில் நான்கு ஆண்டுகள் படித்தார். பின்னர் வேலூரில் இருந்த எலிசபெத் ராட்மேன் வர்கீஸ் கல்லூரியில் 1904-ம் ஆண்டுவரை பயின்றார். அமெரிக்க கிறிஸ்தவ மிஷன் நடத்திய கல்லூரி அது. இதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். இங்கு இவர் பிஸிக்கல் சயின்ஸ் பாடத்தை நுட்பமாகவும் ஆர்வத்துடனும் கற்றார். 

முதுகலை படித்த பின்னர் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது இங்கிலாந்து சென்று படிப்பதற்காக உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். அதே நேரம் சென்னையில் வேலை தேடிப் போராடிக் கொண்டிருந்தார். இந்தச் சிரமமான சூழலில் வில்லியம் ஸ்கின்னர் என்பவரது உதவியால் சென்னை மாநிலக் கல்லூரியில் தற்காலிகமாக ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது உளவியல், ஐரோப்பிய தத்துவம் போன்ற பல பாடங்களை நடத்தினார். தருக்கம், ஒளிவுக் கோட்பாடு, ஒழுக்கவியல் கோட்பாடு ஆகிய பாடங்களில் தனிச் சிறப்புடன் விளங்கினார். இந்தக் கல்லூரியில் பணியாற்றும்போது தான் அவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார். இந்திய, ஐரோப்பிய இதழ்களில் தனது எழுத்துகள் பிரசுரமாவதில் அக்கறை காட்டினார். முதுகலையில் அவர் படைத்த ஆய்வுக் கட்டுரையை கார்டியன் பிரஸ் வெளியிட்டது. இவரது உளவியல் விரிவுரைகளும் தொகுக்கப்பட்டுத் தனி நூலானது. 

1914-20 வரையான காலகட்டத்தில் ராதாகிருஷ்ணனின் கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரமாயின. தாகூரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். தாகூரின் கவிதைகளும் உரைநடையும் ராதாகிருஷ்ணனை ஆழமாகப் பாதித்தன. அவற்றிலிருந்த தத்துவக் கருத்துகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. தாகூரை ராதாகிருஷ்ணன் மீது ஆதிக்கம் செலுத்திய நம்பிக்கைக்குரிய ஆசான் என்றே சொல்லலாம். 

ஓர் அறிஞராக வளர்ச்சி கண்ட ராதாகிருஷ்ணன் 1921-ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையின் தலைவரானார். தென்னிந்தியாவில் இருந்து கல்கத்தா போயிருந்தார். முற்றிலும் புதிய சூழலில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி இந்தியத் தத்துவம் நூலின் இரண்டு பாகங்களை எழுதி முடித்தார். 1926-ல் அமெரிக்காவில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வரும்படி ராதாகிருஷ்ணனுக்கு அழைப்புவிடுத்ததன் பேரில் அங்கு சென்றுவந்தார். 

1931-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1939-ல் வாரணாசிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். மகாத்மா காந்தி கொலைசெய்யப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு வரை இந்தப் பதவியை வகித்தார். யுனெஸ்கோவில் இவரது பங்கு முக்கியமானது. 1946 முதல் 1951 வரை இதன் செயற்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக அங்கம்வகித்தார். பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுவுக்குத் தலைமை ஏற்ற ராதாகிருஷ்ணன் அதன் அறிக்கையில் ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளைத் தெரிவித்திருந்தார். இவை சுதந்திர இந்தியாவின் உயர்கல்விக்கு உத்வேகம் அளித்தன. 

ஜவர்ஹர்லால் நேரு இவரை மாஸ்கோவுக்கான இந்திய தூதராக நியமித்தார். தொடர்ந்து இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவராகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். 1954-ல் பாரத ரத்னா விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார். 1967-ல் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் 1975 ஏப்ரல் 17-ல் காலமானார்.

தி இந்துவில் வெளிவந்த கட்டுரை 

திங்கள், ஏப்ரல் 28, 2014

சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா

செப்டம்பர் 15-ம் நாளை இன்ஜினியர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் என்ன சிறப்பு? இந்த நாளில் தான் இந்தியாவின் முக்கியமான இன்ஜினியரான சர் மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டனஹள்ளி என்னும் சிறிய ஊரில் 1860-ல் இவர் எளிய குடும்பத்தில் பிறந்தார். சமூக மேம்பாடு என்னும் கனவைச் சுமந்து திரிந்த விஸ்வேஸ்வரய்யாவின் அறிவுக்கு எடுத்துக்காட்டு மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை.
சிக்கபல்லபுராவில் தொடக்கக் கல்வியைக் கற்றார் விஸ்வேஸ்வரய்யா. பின்னர் இவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார்கள். தனது 15-ம் வயதில் தந்தையை இழந்த இவர் பெங்களூரில் உயர்நிலைப் பள்ளிவரை படித்தார். அதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். 1883 நவம்பரில் பொறியியல் கல்வியை முடித்த உடன் 1884 மார்ச்சில் பம்பாயின் பொதுப் பணித் துறையில் அரசு வேலையில் சேர்ந்துவிட்டார். இதற்குப் பிறகு இந்திய நீர்ப்பாசன ஆணையத்திற்கு அழைக்கப்பட்டு அங்கே பணியாற்றியுள்ளார் விஸ்வேஸ்வரய்யா. 

திடீரெனப் பெருகும் வெள்ள நீரால் அணையைக் காப்பாற்றும் விதமாக அணையில் தானியங்கி மதகுகளை முதன்முதலில் வடிவமைத்த பொறியாளர் இவரே. இந்த மதகுகளை 1903-ல் புனே அருகில் உள்ள கடக்வாசல நீர்த்தேக்கத்தில் நிறுவினார். இதன் வெற்றிகரமான செயல்பாடு காரணமாக இதே வகை மதகுகள் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நிறுவப்பட்டன. 


1908-ம் ஆண்டு செப்டம்பர் 28, திங்களன்று ஹைதராபாத் நகரில் வீசிய புயலின் காரணமாகப் பெரு மழைபெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நகரின் புனரமைப்பையும் இது போன்ற வெள்ளத்திலிருந்து எதிர்காலத்தில் நகரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி விஸ்வேஸ்வரய்யாவை அரசு கோரியது. இதை ஏற்றுக்கொண்டு இவர் அந்தப் பணிகளைச் சிறப்புடன் செய்து முடித்தார். ஹைதரபாத் நகரில் நவீன வடிகால் அமைப்பை உருவாக்கினார். ஹைதராபாத்தில் இவர் மேற்கொண்ட பணிகள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. விசாகப்பட்டினத்தின் கடலோரப் பகுதிகளைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க அவசியமான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். 

1912-ம் ஆண்டில் இவர் மைசூர் மாகாணத்தின் திவானாகப் பொறுப்பேற்றுள்ளார். மைசூர் பல்கலைக் கழகம், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், பத்ராவதி இரும்பு எஃகுத் தொழிற்சாலை உள்ளிட்ட பல நிறுவனங்களின் உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. புகழையும் விளம்பரத்தையும் விரும்பாத விஸ்வேஸ்வரய்யாவின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1955-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கௌரவப்படுத்தியிருக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்த விஸ்வேஸ்வரய்யா 1962-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் காலமானார்.

தி இந்துவில் வெளிவந்த கட்டுரை

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

சார்லி சாப்ளின்: கண்ணீரைப் புன்னகையால் மூடியவர்

விசித்திரங்களால் நெய்யப்பட்டது வாழ்க்கை. அதன் மர்மங்கள் சாதாரண மனிதர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டவை. மௌனப் படங்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த சார்லி சாப்ளின் பிறப்புக்கான அதிகாரபூர்வ ஆவணம் இல்லை என்கிறார்கள். பிறப்புச் சான்றிதழோ ஞானஸ்நானம் பெற்றதற்கான பதிவோ இல்லாத சாப்ளினின் பிறந்த நாளை இன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். ஆனால், பால்யத்தில் ஒருவேளை உணவுக்கே வழியின்றி அலைந்து திரிந்தார் சாப்ளின். தாயின் மனநோயும் தந்தையின் குடியும் சாப்ளினைத் தரித்திரனாக்கியிருந்தது. உலகத்தைச் சிரிக்கவைத்தவரின் பால்யத்தைத் துன்பச் சரடுகள் மூச்சுவிட முடியாத அளவு நெருக்கியிருந்தன. நெருக்கடிகள் நிறைந்திருந்த வாழ்க்கையில் மூழ்கிப்போகாமல் திமிர்ந்து எழுந்து கலைஞனாக அவர் நின்றது காலத்தின் கருணையா தன்னம்பிக்கையின் வெற்றியா என்பதை எளிதில் சொல்லிவிட முடியாது. 


உலகைப் பொறுத்தவரை சார்லி ஸ்பென்சர் சாப்ளின் லண்டனின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த சம்மர்செட் குடியிருப்புப் பகுதியிலிருந்து வந்திருந்தவர். அங்கு 1889 ஏப்ரல் 16-ல் பிறந்திருந்தார் சாப்ளின். வாடகை தர முடியாத காரணத்தால் அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கிக்கொண்டு வேறொரு வீடு தேடி சாப்ளின் குடும்பம் அலைந்திருக்கிறது. இப்படித் துரத்தப்பட்ட பொழுதுகளின் இரவை அங்கிருந்த கொட்டகை ஒன்றில் கழித்துள்ளதாக சாப்ளின் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால் அங்கிருந்த பூங்காக்களில் தூங்குவதற்கே தான் பிரியப்பட்டதாகவும் அவர் சொல்கிறார். 

வறுமை நிறைந்திருந்த போதும் சிறுவயதில் சில ஆண்டுகள் தாயின் பாசம் சாப்ளினுக்குப் பூரணமாகக் கிடைத்துள்ளது. அப்போது வீட்டைக் கவனித்துக்கொள்ளப் பணிப்பெண் இருந்துள்ளார், சாப்ளின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருந்த சுற்றுலாத் தலங்களுக்குக் குதிரை வண்டியில் சென்றுவந்துள்ளனர். ஆனால் இந்த மகிழ்ச்சி மிகக் குறுகிய காலமே நீடித்தது.


சாப்ளினுக்கு நான்கு வயது ஆனபோது குடும்பத்தின் வறுமை அதிகரித்தது. அவருடைய தாய் ஹன்னா தையல் வேலைகளைச் செய்தார். ஆனால், அதில் அதிக வருமானம் கிடைக்கவில்லை. சாப்ளின் பப்களின் வெளியே நடனமாடி ஏதோ கொஞ்சம் சம்பாதித்தார். மூன்று பேர் நிம்மதியாக உண்ணக்கூட முடியாத பல சந்தர்ப்பங்களில் தானமாய்க் கிடைத்த உணவைக் கொண்டே நாள்களைக் கழித்தனர். வறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள் சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சாப்ளினின் தந்தை ஒரு காலத்தில் இசையரங்குகளில் நட்சத்திரமாக விளங்கினார். ஆனால் இந்தப் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது. சாதாரண வாழ்க்கைகூட வாழ வழியற்ற நிலையில் சாப்ளினின் தந்தை குடிக்கு அடிமையானார். தாயும் தந்தையும் அன்புடனும் ஆதரவுடனும் கவனிக்க வேண்டிய பாலப் பருவத்தில் சாப்ளினுக்குத் தனிமையே துணையானது.


ஹான்வெல் என்னும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். இங்கே சாப்ளின் சந்தித்ததெல்லாம் வாழ்வில் ஒருபோதும் எதிர்பார்த்திராத துயரங்களை மட்டுமே. அத்தனை துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டிய சூழலில் சாப்ளின் நாட்களை நகர்த்தினார். ஆண்டுக்கணக்கில் யாருமே பார்க்க வராத நிலையில் ஆற்றவோ தேற்றவோ ஒருவருமற்ற தனிமை சாப்ளின் மீது கவிந்தது.

ஹான்வெல் கடுமையான ஒழுக்க விதிகளை வலியுறுத்தும் இல்லம். இங்கே இருந்தபோது தனது தவறான நடத்தைகளுக்காக சாப்ளின் நன்கு அடிபட்டார். தலையில் ஏற்பட்ட படர்தாமரை காரணமாகத் தலை மொட்டையடிக்கப்பட்டது. அதிகக் கண்ணீர் உகுத்த நாட்கள் இவை எனப் பின்னாளில் சாப்ளின் குறிப்பிடுகிறார். இந்தத் துயரங்களுக்கு மத்தியிலும் தான் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று சாப்ளின் அடிக்கடி நினைத்துக்கொள்வாராம். இந்த நினைப்புதான் சாப்ளினை அந்தத் துன்பச் சேற்றில் மூழ்கிவிடாமல் துணிந்து நிற்கவைத்தது. இதை அவர் தன் மகனிடம் கூறியுள்ளார்.


ஹான்வெல் இல்லத்தில் சாப்ளின் பெற்ற துன்பங்களைத் தாங்கும் தன்மை சாப்ளின் பிற்காலத்தில் திரைப்பட ஆளுமையாக மாறியபோது கைகொடுத்தது. சாப்ளின் திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவார். நாடோடி போல் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் கம்பீரமாக நீண்ட தொலைவுக்கு நடந்துசெல்வார். இந்த நடைப் பழக்கம் அவருக்கு அதிகப்படியான ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் கொடுத்தது. 

சாப்ளினுக்கு உணவின் மீதும் பாதுகாப்பான வாழ்க்கை மீதும் நாட்டம் இருந்தது. இந்த இரண்டுமே பால்யத்தில் சாப்ளினுக்குச் சரிவரக் கிடைக்காமல் இருந்தன. வாழ்நாள் முழுவதும் பரிபூரணக் காதலுக்காக வெறிகொண்டலைந்தார் ஆனால் இறுதிவரை அதை அவர் கண்டடையவில்லை. 


தனது தொடக்கக் காலத் திரைப்படங்களில் கோபத்துடனோ குரூரத்துடனோ தன்னைத் துன்புறுத்துபவர்களைப் பழிவாங்கத் துடித்தார் சாப்ளின். பகைமை நிறைந்த பரிவற்ற உலகத்தில் பிழைத்திருப்பது குறித்த அக்கறையை அவரது பிற்காலப் படங்கள் வெளிப்படுத்தின. 

ஒன்பது வயதில் சாப்ளின் நாட்டுப்புற நடனக் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்தக் குழுவினருடன் இங்கிலாந்தில் இருந்த பெரும்பாலான இசையரங்குகளுக்குச் செல்லும் வாய்ப்பு சாப்ளினுக்குக் கிடைத்தது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த கோமாளிகளின், காமெடியன்களின் ஒவ்வொரு அசைவையும் நன்கு அவதானித்துத் தனக்குள் பதியவைத்துக்கொண்டார் சாப்ளின். இந்தச் சூழலில் 1901-ல் சாப்ளினின் தந்தை குடிநோய் முற்றி மரித்தார். சாப்ளினின் தாய் மனநோய் பீடித்துத் துன்புற்றார். பித்துப் பிடித்த தாயை இழுத்துக்கொண்டு லண்டன் தெருக்களின் வழியே நடந்து சென்றான் சிறுவனான சாப்ளின். மனநோய் இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா 17 ஆண்டுகளை அங்கேயே கழித்தார். 


இந்தத் துன்பங்களை எல்லாம் தாங்கிக்கொண்ட சாப்ளினுக்கு 14 வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் நடிக்க ஒரு சிறு கதாபாத்திரம் கிடைத்தது. இதில் நடிப்பதற்காக சாப்ளின் இங்கிலாந்து முழுவதும் சுற்றினார். இந்தப் பிரயாணம் தவிர்த்து இடையில் கிடைத்த நேரங்களில் ஸ்னூக்கர் விளையாட்டு, மது, மாது எனப் பொழுது கழிந்தது சாப்ளினுக்கு. 1913-ல் சாப்ளின் கலிஃபோர்னியாவில் உள்ள கீஸ்டோன் ஸ்டுடியோவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வாரத்திற்கு 150 டாலர் சம்பளம். அது இதுவரை அவர் சம்பாதித்திராத தொகை. ஓராண்டுக்குள் சார்லி சாப்ளின் அமெரிக்காவின் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். 1917-ல் சொந்தமாக ஸ்டுடியோவைக் கட்டினார். 1921-ல் சாப்ளின் லண்டனுக்குத் திரும்பிய போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இப்போது அவரைத் தெரியாதவர் ஒருவருமில்லை. 

சார்லி சாப்ளினின் பிறந்ததினத்தை முன்னிட்டு தி இந்துவில் வெளியான கட்டுரை இது.

தொங்கும் தூண் கொண்ட கோட்டை

(2014 ஏப்ரல் 20 அன்று தி இந்துவில் வெளியானது) 


வரலாற்றுப் பெருமையின் மௌன சாட்சியாக நிற்கிறது தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான்தான் இந்தக் கோட்டையை நிர்மாணித்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தர்மபுரி மாவட்டம் சங்க காலத்தில் தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட அதியமான் மாபெரும் போர்வீரர். அதியமானின் சிறப்பைப் பாடி புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இப்படி வந்த புலவர்களில் ஒருவர்தான் ஔவையார்.

தர்மபுரிதான் அதியமானின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மன்னர் அதியமானின் தலைமையிடமாக அதியமான் கோட்டை செயல்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனத் தொல்லியலாளர்களும் வரலாற்றறிஞர்களும் தெரிவிக்கிறார்கள். இப்போது சில பகுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தக் கோட்டை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இந்தக் கோட்டையிலிருந்து பழைய நாணயங்கள் முதலானவை வெளியுலகிற்குத் தெரியவருகின்றனவாம். அதியமான் கோட்டைதான் தகடூர் நகரின் நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதியமான் கோட்டையின் நுழைவாயில் மிகப் பெரியதாக இருந்துள்ளது. கோட்டை மதிலில் எதிரிகள் ஏற முடியாதபடி மதிலின் வெளிப்புறச் சுவரில் கடுகு எண்ணெய்யைப் பூசியுள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எல்லாம் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கியக் கோவில் சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வெளிப்புறக் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதியமானின் முத்திரை எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் தவிர, பைரவர், அங்காளம்மன், நரசிம்மர், காளியம்மன் ஆகிய கோவில்களும் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டையில் படைவீரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோட்டையின் மண்டபங்களில் மேற்புறச் சுவரில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கவனமின்றி சில ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள்.

அதியமான் கோட்டையிலுள்ள மகா மண்டபத்தின் தொங்கும் கல்தூண்கள் கட்டடக் கலையின் அதிசயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் இரண்டு டன்கள் எடை கொண்டவை. இவை தரையைத் தொட்டு நிற்கவில்லை. இந்தக் கோட்டை பழங்காலச் சின்னமாக இருப்பதால் அதியமான் கோட்டம் என்னும் பெயரில் இந்தக் கோட்டையைத் தமிழக அரசு பாதுகாக்கிறது. இந்தக் கோட்டத்தில் அதியமான், ஔவையார் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

திங்கள், ஏப்ரல் 14, 2014

குளு குளு மர வீடுகள்

(2014 ஏப்ரல் 12 அன்று தி இந்துவில் வெளியானது) 


நமது முன்னோர்கள் வீடுகளைப் பெரும்பாலும் களிமண், சுண்ணாம்பு, கல், மரம் போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டே கட்டினார்கள். வெப்பமான நமது சூழலுக்கு ஏற்றவாறான வீடுகளைக் கட்டி அதில் தான் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். வீடு கட்டவும் அலங்காரங்களுக்கும் மரங்களை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். மரப் பலகைகள் சூட்டைக் கடத்தாது, தடுத்துவிடும். எனவே அதிகமான சூடு வெளியில் இருந்தாலும் வீட்டின் உள்ளே வெப்பம் வராது. கோடைகாலத்தில் வீடு குளுகுளுவென்றிருக்கும், குளிர்காலத்திலோ கதகதப்பாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் நமது வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகப் பொருட்செலவில் முழுக்க சிமெண்டையும் இரும்பையும் கண்ணாடியையும் பயன்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம். இதனால் வீடுகளில் மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பழைய வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் உபயோகமுள்ள மரத்தை மறந்துவிட்டோம். பசுமையான சூழலை வீட்டிற்குத் தரும் மரங்களை விட்டு விலகிவிட்டோம். ஆனால் பழைய வீடுகளைப் பார்க்கும்போது பலருக்கு ஏக்கமாக உள்ளது. கடந்த காலத்தை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாலும் அந்தப் பழங்கால உத்தியை இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகிறார் கட்டடக் கலை நிபுணர் ரவீந்திர குமார்.

இவர் பெங்களூருவில் உள்ள ப்ரகுருப் (Pragrup) என்னும் கட்டட நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர். மரத்தாலான வீடுகளை இவர் உருவாக்கிவருகிறார். மர வீடுகள் மட்டுமல்ல மரத்திலேயேகூட வீடு கட்டித் தருகிறார் ரவீந்திர குமார். உங்களுக்குத் துணிச்சலும் வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். இது வரை சுமார் 20 மர வீடுகளை ரவீந்திர குமார் உருவாக்கியுள்ளார். இவை அனைத்துமே தனித்துவமானவை. ஒவ்வொன்றும் பிரத்தியேகமான வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் அனைத்து வீடுகளுக்குமான பொதுவான அம்சங்கள் அவற்றின் அழகும் பசுமையான சூழலும்.

உங்களது சொந்த வீட்டை உருவாக்குங்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவர் வீடுகளைக் கட்டுகிறார். இதனடிப்படையில் மரப் பலகைகளை வைத்துப் பண்ணை வீடுகள் போல் பசுமையான சூழலில் வீடுகளை அமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபடுகிறார். இவரது வீடுகளில் பாதங்கள் அதிகமாகத் தரையைத் தொட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க மரங்கள் தாம் வீட்டை ஆக்கிரமித்து நிற்கும். சுவர்கள், கூரைகள், தளங்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையாகவே இருக்கும். ரவீந்திர குமார் ஒரு வீட்டை மரத்தின் மீதே கட்டியுள்ளார். இந்த வீட்டை இவர் கமுகு மரத்தின் பட்டை, பழைய ரயில் தண்டவாளங்களை மறுசுழற்சி செய்து தயாரான இரும்புப் பட்டை ஆகியவற்றைக் கொண்டு கட்டினார். கமுகு மரத்திலிருந்து கிடைக்கும் பலகைகள் நீண்ட கால ஆயுள் கொண்டவையாம். இவை நூறு ஆண்டுகள் வரை கூட அப்படியே இருக்குமாம்.

இருபது வயது கொண்ட தூங்குமூஞ்சி மரத்தின் இரண்டு கிளைகளுக்கு மேலே இந்த மர வீடு தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. அடி மரத்திலிருந்து பிரிந்து செல்லும் இரண்டு கிளைகள் தான் வீட்டைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்தரத்தில் இருப்பது போல் தோற்றம் கொண்டாலும் மரம் வாயிலாக நிலத்தின்மீது நன்கு ஊன்றியபடி இந்த வீடு கம்பீரமாக நிற்கிறது. இதன் கதவுகள், சன்னல்கள், படிகள், அறைக்கலன்கள் அனைத்தும் மரத்தாலானவை. ஒருவேளை இயற்கைச் சீற்றத்தால் இந்த வீடு இடிந்துவிழுந்தாலும் இதன் பொருட்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கிவிடும் என்கிறார் ரவீந்திரா. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. வீட்டின் கூரை மீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. இடவசதித் தேவைக்கேற்ப பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைத்து அறைகளைப் பிரித்துள்ளார் ரவீந்திரா. மேற்கூரையில் புற்களை வேய்ந்துள்ளார்.

இந்த வீட்டின் வடிவம் பிரமிடைச் சாய்த்துவைத்தது போன்று உள்ளது. வீட்டின் சுவரைக் கல்லால் கட்டி யிருப்பதாலும் அதிகப்படியான மரத்தின் பயன்பாட்டாலும் பசுமையான உணர்வை இந்த வீடு அளிக்கிறது. வெளிப்புறச் சுவரின் மீது கமுகின் மேற்பட்டையை ஒட்டி அழகூட்டியிருப்பதால் பசுமை உணர்வு தூக்கலாகத் தெரிகிறது. குளுகுளு வீட்டை விரும்புவர்களின் மனதை விட்டு அகலாதவை இந்த மர வீடுகள்.

சனி, ஏப்ரல் 12, 2014

பறவைகளின் குதூகலப் பயணம்


அமெரிக்கத் தயாரிப்பான ரியோ என்னும் அனிமேஷன் திரைப்படம் 2011-ல் வெளியானது. அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப் பட்ட ப்ளூ கிளியின் பிரேசில் பயணம் பார்த்தவர்களைப் பரவசப்படுத்தியது. கிளிகள் வில்லன்களிடம் மாட்டிக்கொள்வதும் பின்னர் தப்பித்துச் செல்வதுமான காட்சிகள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை. இதனால் உலகமெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அந்தத் திரைப்படம் 486 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் கொடுத்தது. திரையரங்கில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இப்படத்தின் டிவிடிகளும் அதிக அளவில் விற்பனையாயின. ரியோவின் வசூல் சாதனையால் இதன் இரண்டாம் பாகத்தைத் தற்போது தயாரித்துள்ளனர். முதல் ரியோவிலேயே கிறங்கிய ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் பொழுதுபோக்குக்கு முழு உத்திரவாதமளிக்கும் ரியோ 2 தரப்போகும் அனுபவத்திற்காகக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரியோ 2 என்னும் இந்த இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகப் போகிறது. ஆங்கிலத் திரைப்படமான ரியோ 2 இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட ரசிகர்களிடமும் பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது ரியோ2. பிரேசிலின் நகரமான ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் சாதனைச் சம்பவங்களை நகைச்சுவை கலந்து படமாக்கியுள்ளனர். முதல் பாகத்தின் வண்ணமயமான காட்சிகளில் பறவைகளின் உற்சாகமான ஆடல் பாடல்களைக் கண்டு கட்டுண்டு கிடந்த ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் விதத்தில் ரியோ 2 இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆங்கிலப் படத்தில் ஜுவல், ப்ளு ஆகிய கிளி ஜோடிகளுக்கு அன்னா ஹாத்வேயும், ஜெஸ்ஸே இஸன்பர்க்கும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்தி ரியோ2 வில் கிளிகளின் பாஷையை இம்ரான் கானும், சோனாக்ஷி சின்ஹாவும் பேசியுள்ளனர்.

காட்டில் ப்ளுவும் ஜுவலும் தங்களது மூன்று குட்டிகளுடன் வாழ்ந்துவருகின்றன. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ்வதற்காக பிரேசிலில் இருந்து இவர்கள் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். பயணத்தினிடையே வில்லனான நைஜலின் பழிவாங்கும் முயற்சியும் நடக்கிறது. குடும்பம் ஒன்றாக இணைந்ததா என்பதை திரையரங்குக்குப் போய்ப் பாருங்கள். ஏற்கனவே ரசிகர்களுக்குப் பரிச்சயமான ரியோவின் கதாபாத்திரங்கள் மீண்டும் கலக்கும் காட்சிகளில் திரையரங்குகள் அதிரப் போகின்றன. கோடையின் வெப்பத்தால் தவித்துப் போயிருக்கும் குழந்தைகளையும் ரசிகர்களைகளையும் ரியோ 2 குதூகலப்படுத்தும் என நம்பலாம்.

புதன், ஏப்ரல் 09, 2014

நோய்களை ஒழிக்க முடியுமா?

(2014 ஏப்ரல் 7 அன்று தி இந்துவில் வெளியானது)


தப்பித்தவறிக் கைபட்டாலே உயிரிழந்துவிடும் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்களைத் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் 1950 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ல் உலக சுகாதார தினத்தை அந்நிறுவனம் கொண்டாடிவருகிறது.

உலக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதே உலக சுகாதார நாளின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு வருடமும் ஒரு முழக்கத்தை முன்வைத்து இந்த நாளை உலக சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது. இந்த ஆண்டு கொசுக்கடிக்கு எதிரான போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே சிறிய கடி பெரிய அச்சுறுத்தல் என்னும் முழக்கத்தை அது முன்வைத்துள்ளது.

ஆண்டுதோறும் 100 கோடிப் பேர் கொசு, ஈ போன்றவை பரப்பும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சுமார் 250 கோடிக்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயால் எளிதில் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் சீனா, போர்ச்சுகல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் மலேரியா நோய் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பரவியுள்ளது.

போதுமான சுகாதார வசதியுடன் கூடிய குடியிருப்பு, குடி நீர் போன்ற வசதிகள் கிடைக்காத எளிய மக்களே இந்த வியாதிகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள். 21-ம் நூற்றாண்டில் ஒருவர்கூட கொசுக் கடியால் உயிரிழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. ஆரோக்கியமான இருப்பிடம், சுகாதாரமான குடிநீர் போன்றவை அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த நோய்கள் காணாமல் போய்விடும். அந்த நிலைமையைக் கொண்டுவரும் நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டுவருகிறது என்பதே நமக்கான ஆறுதல்.

திங்கள், ஏப்ரல் 07, 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்


மூன்று வெவ்வேறு நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயணத்தால் ஏற்படும் மூன்று விளைவுகளை காமெடி கலந்து கொடுக்க முயன்றுள்ள சினிமா இந்த ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’

சிவன், பிரம்மன், நாரதர் ஆகிய மூவரின் தேவலோகக் கலந்துரையாடலில் தொடங்குகிறது படம். வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு முக்கியமானது. ஒரு நிமிடம் மாறினால் எப்படி விதி மாற்றுகிறது என்கிற விவாதப் பின்னணியில் கதையின் திசை பூலோகத்திற்குத் திரும்புகிறது.

தமிழும் (அருள்நிதி) இசெபெல்லாவும் (அஷ்ரிதா ஷெட்டி) காதலர்கள். குடும்ப கௌரவத்தை காப்பாற்ற நினைக்கும் இசெபெல்லாவின் தந்தைக்கு இந்தக் காதல் பிடிக்கவில்லை. இசெபெல்லாவுக்கும் வேறொரு பையனுக்கும் திருமணம் நடத்த முடிவெடுக்கிறார். ஒரு சர்ச்சில் இந்தத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தொழில் போட்டி காரணமாக இந்தத் திருமணத்தை நிறுத்த துடிக்கிறார் நாசர். மணப்பெண்ணைக் கடத்தினால் 30 லட்சம் தருவதாக அருள்நிதியிடம் நாசர் கூறுகிறார். ஒரு பக்கம் தன் காதலி, மற்றொரு புறம் அம்மாவின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படும் பெரிய தொகையான 30 லட்சம் என்றதும் கடத்தலுக்கு ஒத்துக்கொள்கிறான். கடத்தலைத் தன் நண்பர்களான மலர் (பிந்துமாதவி), ராமானுஜம் இசக்கி, ஐசக் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிடுகிறான், தமிழ். கிடைக்கும் பணத்தை மூவரும் பங்கிட்டு கொள்வதென்று முடிவெடுத்து நால்வரும் ஓட்டத்தைத் தொடங்குகிறார்கள். அந்தப் பயணம் எப்படியான முடிவுகளைக் கொடுக்கிறது என்பதுதான் படம். காதலர்கள் இணைந்தனரா பிரிந்தனரா என்பது கிளைமாக்ஸ்.

கடத்தல் திட்டம் சரியாகக் காலை 8:59 மணிக்குத் தொடங்குகிறது. இதே கடத்தல் திட்டம் ஒரு நிமிடம் தாமதமாகக் காலை 9 மணிக்குத் தொடங்கினால் முடிவு என்ன நடந்திருக்கும், அதற்கடுத்த நிமிடமான காலை 9.01 மணிக்கு நடந்திருந்தல் அப்போதைய முடிவு என்னவாக இருந்திருக்கும் என்று மூன்று வெவ்வேறு பயணங்களாகப் படம் ஊர்கிறது.


திரைக்கதையின் பயணம் விறுவிறுவென இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் மிக மெதுவாக நகர்வதால் அலுப்பு ஏற்படுகிறது. திரைக்கதையின் வேகம் கூடும் என நினைக்கும் நேரத்தில் கடத்தல் குழுவினர் ஸ்லோமோஷனில் ஓடுகிறார்கள். பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. காமெடிப் படம் தான் அதற்காக இப்படியா என எண்ணவைத்துவிடுகிறது. மேடை நாடகங்கள் போன்ற வசனங்கள் மட்டுமே அவ்வப்போது ரசிகர்களைச் சிரிக்கவைக்கின்றன. இராணி டீக்கடை முதலாளி மனோபாலா, போலீஸ் அதிகாரி, பேச்சலரை வெறுக்கும் குண்டலகேசி, பாட்டி, டிராஃப்பிக் போலீஸ், காய்கறிக் கடைக்காரர், செக்யூரிட்டி, தர்ப்பூசணி விற்கும் பெண் என வழியில் எதிர்ப்படும் மனிதர்கள் மூன்று பயணத்திலும் வெவ்வேறு பாதையில் பயணப்படுகிறார்கள். இந்தப் பயணம் எந்தவொரு சுவாரசியமுமின்றி அமைந்துள்ளது.

தமிழுக்கும், இசெபல்லாவுக்கும் இடையே மலரும் காதல் காட்சிகளில் காதலே இல்லை. ஒரு கன்னி மூணு களவாணிகள் என்று சொல்லிவிட்டுப் படத்தில் ஒரு களவாணியை முதல் காட்சிலேயே படுக்கவைத்துவிடுகிறார்கள். சர்ச்சில் கிருஸ்துமஸ் தாத்தா வேடத்தில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தமிழும், ராமானுஜ இசக்கியும் அடிக்கும் காமெடி பெரிதான கலகலப்பை ஏற்படுத்தவில்லை. அது என்ன புதுசா வாங்குன செல்போனா எல்லாரிடமும் தூக்கி தூக்கி காட்டுற எனத் தமிழிடம் இசக்கி கூறும் ஒருசில வசனங்கள் ஈர்க்கின்றன.

ஜெர்மனிப் படமான ‘ரன் லோலா ரன்’ தாக்கத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு படத்தை சிம்பு தேவன் எடுத்திருப்பது ரொம்ப லேட். சாயங்காலப் பொழுதுபோக்குக்கான துணுக்குத் தோரண ஆள்கடத்தல் காமெடிப் படமாக மட்டுமே உள்ளது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.

காற்றோட்டமான வீடு வாங்குகிறீர்களா?

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


வீடு என்பது வெறும் சொல்லல்ல. அது பலருக்குப் பெரும் கனவு. சம்பாத்தியமே போனாலும் கவலையில்லை நல்ல வீடு கிடைத்தால் போதும் என்பது தான் பலரது எதிர்பார்ப்பு. ஆக அப்படி ஒரு வீடு வாங்கும்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வீடு போன்று மற்றொரு வீடு இருக்காது.

எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம். விலை அதிகம் எனில் எப்படிச் சேமிப்பதாம் எனக் கேட்கிறீர்களா? வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக வீட்டின் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

அறைகளுக்கு அவசியமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும். முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டாம். குளிர்சாதன வசதியைத் தேவையின்றிப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கோடையில் மட்டும் தான் அந்த வீட்டிற்கு ஏ.சி. தேவைப்படும். இரவில் மட்டும் தான் விளக்கு தேவைப்படும். தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும்.
மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கப் போதுமான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்குக் குடிபோகும் முன் கவனிக்கப்பட வேண்டியவை; இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டிற்குக் குடிபோய்விட்டால் அதனால் அதிகச் சிரமம் ஏற்படும். நமக்குத் தேவையான விதத்தில் வீட்டை மாற்றியமைக்க நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள்.

பெரும்பாலும் வீட்டைத் தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம். ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்துவிட்டே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உட்புறம் முறையாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பலர் அவசரப்பட்டு வீட்டை வாங்கிவிட்டு உள் அலங்காரத்திற்கு அதிகச் செலவு செய்து அவதிப்படுவார்கள். அந்தத் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள். வீடு என்பது நிம்மதிக்கானது. எனவே நிதானமாக வீடு வாங்கி நிம்மதியாகக் குடிபோங்கள்.

பேஸ்புக்கால் பிழைத்த உயிர்

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


சமூக வலைதலங்கள் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக வலைதலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல செயல்களிலும் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கேரளாவில் ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் அகலி என்னும் இடத்தில் வசித்துவருபவர் ரபிதா சுனில் குமார். அவர் அகலியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் இதய நோயால் அவதியுற்றுவருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ரபீதா வகுப்பறையில் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை பாதிப்படைந்துள்ளதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரபீதாவை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு இருந்ததால் அவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். தேர்வு எழுத அவர் விரும்பினாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. கடும் வலி காரணமாக அவரால் தேர்வைச் சரியாக எழுத முடியவில்லை. பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அறுவைச் சிகிச்சை செய்தால் ஒழிய அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதய நோய் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் செலவாகுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாதாரணக் கூலித் தொழிலாளர்களான அவருடைய பெற்றோருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மகளின் உயிரைக் காப்பாற்ற அவ்வளவு பணமில்லை என்பதால் கவலையடைந்துள்ளனர்.

நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது ரபீதாவின் குடும்பம். குடும்ப நண்பர்கள் ஏதாவது நன்கொடை திரட்டலாம் என யோசனை தெரிவித்தனர், அதற்கும் முயன்றனர். ஆனால் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குறுகிய காலத்தில் எப்படிப் பணத்தைப் புரட்டுவது என ரபீதாவின் பெற்றோர் கலங்கித் தவித்துப்போனார்கள்.

இப்படியான சமயத்தில் ரபீதாவுடன் படிக்கும் மாணவி ஒருவர் ரபீதாவின் நிலைமை பற்றி ஃபேஸ்புக்கில் சாயக்கடா என்னும் குழுவில் பதிவிட்டுள்ளார். அது வெறும் லைக்குகளும் கமெண்டுகளுமாகச் சாதாரணப் பதிவாக முடிந்துவிடவில்லை. அந்தப் பதிவுக்கு அதிகமான அளவில் ஆதரவு கிடைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது பங்காக ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். எல்லோரும் அவர்களாக விரும்பி வந்து உதவினார்கள் என சாயக்கடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மினி ஸ்ரீனிவாசன் கூறுகிறார்..

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அங்கோலா போன்ற நாடுகளில் வசிக்கும் உறுப்பினர்கள் சிலரும் இந்த உதவியில் கைசேர்த்திருக்கிறார்கள். உண்மையில் இஸ்ரேலில் உள்ள ஒரு உறுப்பினர்தான் இந்த உதவிப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் என ரபீதாவின் அம்மா பிந்து சுனில்குமார் சொல்கிறார். அதனால்தான் எங்களை மலைக்கவைத்த தொகையை ஒரு வாரத்திற்குள் புரட்ட முடிந்தது என்றும் அவர் சந்தோஷப்படுகிறார்.

ரபீதாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. ரபீதாவுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவிட்டனர். ரபீதா மெல்ல மெல்ல இயல்பான நிலைக்குத் திரும்பிவருகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரபீதா மீண்டும் துள்ளித் திரியும் காலம் தொடங்கிவிட்டது.

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

நிமிர்ந்து நில்

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 90களுக்குப் பிறகு சமூக அக்கறையை வெற்றிகரமான வியாபாரமாக மாற்றிய படம் ஜெண்டில் மேன். இதன் இயக்குநர் ஷங்கர் அப்படத்தில் இட ஒதுக்கீட்டை மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருந்தார். அந்தப் படத்தின் வணிக வெற்றி தந்த தெம்பிலும் அடையாளத்திலுமே அவரால் இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற படங்களை உருவாக்க முடிந்தது. இத்தனைக்கும் ஜெண்டில்மேன் படம் வெளியான காலத்தில் நுழைவுத் தேர்வு முறை மருத்துவ, பொறியியல் படிப்புகளின் சேர்க்கை முறைப்படுத்தப்பட்டிருந்தது. 

அரசியல்வாதிகள், அதிகாரிகள், லஞ்சம், ஊழல் ஆகிய விஷயங்கள் மீது வெகுஜனங்களுக்கு எப்போதுமே எரிச்சலும் கோபமும் உண்டு. இந்தச் சமூகக் கோபத்தின் மையத்தைத் தொடும் விதத்தில் திரைக்கதையை அமைத்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்பது ஒரு கணக்கு. இந்தக் கணக்கு ஷங்கர் படங்களைத் தவிர ரமணா, கந்தசாமி உள்ளிட்ட ஒருசில படங்களிலும் தப்பவில்லை. 
வெறுமனே பொழுதுபோக்குப் படங்களை எடுப்பதற்குப் பதில் அதில் சமூக அக்கறையான விஷயங்களைச் சேர்க்கும் போது திரைப்படத்திற்கும் தனி நிறம் கிடைக்கிறது, இயக்குநரும் ஆத்ம திருப்தி அடைகிறார். ஆனால் இத்தகைய படங்களை உருவாக்குவது கத்திமேல் நடப்பது போன்றது. பாலுக்கும் காவல் இருக்க வேண்டும் பூனையின் பசியையும் ஆற்ற வேண்டும். இதில் ஷங்கர் கைதேர்ந்தவர். ஜெண்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பிராமணரல்லாத ஒருவர் போராடுவார். ஆனால் அது நண்பனுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகத் திரைக்கதையில் அமைந்திருக்கும். இந்தச் சாமர்த்தியம்தான் ஷங்கருக்கு நாம் பிறந்த மண் என்னும் பழைய திரைப்படத்தை இந்தியன் என்னும் பெரும் வெற்றிப்படமாக மாற்ற ஒத்துழைத்தது. இந்த சட்டகத்தைத் தாண்டி எடுத்த பாய்ஸ் திரைப்படத்தில் அவர் சறுக்கலைச் சந்தித்தார். அதன் பிறகு அந்நியன், சிவாஜி என்று பழையபாதைக்கு வந்தார். 

சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் தோற்றம்
பொழுதுபோக்குப் படம் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்ட இயக்குநர் எனக் காட்டிக்கொள்ள ஷங்கர் விழைந்ததில்லை. ஆனால் தயாரிப்பாளராகப் பரிணாமம் எடுத்தபோது மாறுபட்ட படங்களை உருவாக்க உறுதுணையாயிருந்தார். அதனால்தான் வெயில், காதல், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போன்ற படங்களை அவர் தயாரித்தார். 

இயக்குநர்கள் சிலருக்கு வணிக ரீதியான வெற்றிப் படமும் எடுக்க வேண்டும், சமூகப் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. நியாயமான விருப்பம் தான். ஆனால் இரண்டையும் ஒரே படத்தில் நிறைவேற்ற முயலும்போது இயக்குநரின் பணி கடுமையாகிவிடும். திறம்படச் சமாளித்தால் மட்டுமே சமாளிக்க இயலும். அப்படித் தப்பித்த படத்திற்கு எடுத்துக்காட்டாக கமலஹாசனின் கதை, திரைக்கதையில் வெளியான தேவர் மகனைச் சொல்லலாம். இயக்குநர் பரதனின் செய்நேர்த்தி படத்தின் நாயகன் கமலுக்குக் கைகொடுத்தது. பெரும்பாலான இயக்குநர்கள் இப்படியான இரண்டு குதிரைச் சவாரியில் திறனை வெளிப்படுத்த இயலாமல் திணறுகிறார்கள்.

நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அப்படி ஒரு சவாரியை இயக்குநர் சமுத்திரக்கனி மேற்கொண்டுள்ளார். இந்தப் படமும் ஊழலுக்கு எதிரான சமூகக் கோபத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அரவிந்த் சிவசாமி வெளியுலகம் தெரியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த பிள்ளை. வெளியே வந்து புற உலகில் கலக்கும்போது அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவனைச் சமூகப் போராளியாக மாற்றுகிறது. சமூகத்தில் புரையோடிய ஊழல் அவனை நேரடியாகப் பாதிக்கிறது. பூனை புலியாய் மாற வேண்டிய நிர்ப்பந்தம். அநீதி கண்டு எரிமலையாகிறான். இயக்குநரின் சமூக அக்கறையை எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. அமலா பால் போன்ற கதாநாயகி இருந்தும் கூட காதல் காட்சிகளில் ருசியில்லை. ஏனெனில் படத்தின் அடிநாதமான சமூகக் கோபம் கொண்ட கதாநாயகனை மடைமாற்ற இயக்குநருக்குப் பிரியமில்லை. ஆனால் இரண்டு குத்துப் பாடல்கள் இடம்பெறுகின்றன. 

பொழுதுபோக்கை எதிர்பார்த்து வரும் ரசிகர்களைக் கருத்து சொல்லி ஏமாற்றக் கூடாது என எண்ணி இயக்குநர் மேற்கொண்ட திரைக்கதைப் பயணம் சரியான திசையில் செல்லவில்லை. ஊழலுக்கு எதிரான படம் திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் இலங்கைத் தமிழர் அனுபவித்த இன்னல்களைப் பேசுகிறது. ஆனால் மரண தண்டனையை ஆதரிப்பது போல் கடுமையான தண்டனைகள் இருந்தால் தவறுகள் குறையும் என்கிறது. உலகெங்கிலும் மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையான தண்டனைகள் களையப்பட வேண்டும் எனப் போராடுகிறார்கள். கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் குறையும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்கள். ஆக ஊழலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் நிதானம் காட்டப்பட்டிருக்க வேண்டும். 
நிதானத்தோடும் ஆழ்ந்த புரிதலோடும் ஊழலெனும் சமூக சிக்கலைக் களையும் வழிமுறைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் இதுவரையான படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தி இந்து நாளிதழில் வெளியானது