செப்டம்பர் 15-ம் நாளை இன்ஜினியர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில்
என்ன சிறப்பு? இந்த நாளில் தான் இந்தியாவின் முக்கியமான இன்ஜினியரான சர்
மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள
முட்டனஹள்ளி என்னும் சிறிய ஊரில் 1860-ல் இவர் எளிய குடும்பத்தில்
பிறந்தார். சமூக மேம்பாடு என்னும் கனவைச் சுமந்து திரிந்த
விஸ்வேஸ்வரய்யாவின் அறிவுக்கு எடுத்துக்காட்டு மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ
சாகர் அணை.
சிக்கபல்லபுராவில் தொடக்கக் கல்வியைக் கற்றார் விஸ்வேஸ்வரய்யா. பின்னர்
இவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார்கள். தனது 15-ம் வயதில்
தந்தையை இழந்த இவர் பெங்களூரில் உயர்நிலைப் பள்ளிவரை படித்தார். அதைத்
தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். புனேவில்
உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். 1883
நவம்பரில் பொறியியல் கல்வியை முடித்த உடன் 1884 மார்ச்சில் பம்பாயின்
பொதுப் பணித் துறையில் அரசு வேலையில் சேர்ந்துவிட்டார். இதற்குப் பிறகு
இந்திய நீர்ப்பாசன ஆணையத்திற்கு அழைக்கப்பட்டு அங்கே பணியாற்றியுள்ளார்
விஸ்வேஸ்வரய்யா.
திடீரெனப் பெருகும் வெள்ள நீரால் அணையைக் காப்பாற்றும் விதமாக அணையில்
தானியங்கி மதகுகளை முதன்முதலில் வடிவமைத்த பொறியாளர் இவரே. இந்த மதகுகளை
1903-ல் புனே அருகில் உள்ள கடக்வாசல நீர்த்தேக்கத்தில் நிறுவினார். இதன்
வெற்றிகரமான செயல்பாடு காரணமாக இதே வகை மதகுகள் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும்
நிறுவப்பட்டன.
1908-ம் ஆண்டு செப்டம்பர் 28, திங்களன்று ஹைதராபாத் நகரில் வீசிய புயலின்
காரணமாகப் பெரு மழைபெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நகரின்
புனரமைப்பையும் இது போன்ற வெள்ளத்திலிருந்து எதிர்காலத்தில் நகரைக்
காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி விஸ்வேஸ்வரய்யாவை
அரசு கோரியது. இதை ஏற்றுக்கொண்டு இவர் அந்தப் பணிகளைச் சிறப்புடன் செய்து
முடித்தார். ஹைதரபாத் நகரில் நவீன வடிகால் அமைப்பை உருவாக்கினார்.
ஹைதராபாத்தில் இவர் மேற்கொண்ட பணிகள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்
தந்தன. விசாகப்பட்டினத்தின் கடலோரப் பகுதிகளைக் கடல் அரிப்பிலிருந்து
பாதுகாக்க அவசியமான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இவர் முக்கியப்
பங்காற்றியுள்ளார்.
1912-ம் ஆண்டில் இவர் மைசூர் மாகாணத்தின் திவானாகப் பொறுப்பேற்றுள்ளார்.
மைசூர் பல்கலைக் கழகம், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், பத்ராவதி இரும்பு
எஃகுத் தொழிற்சாலை உள்ளிட்ட பல நிறுவனங்களின் உருவாக்கத்திலும்
செயல்பாட்டிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. புகழையும் விளம்பரத்தையும்
விரும்பாத விஸ்வேஸ்வரய்யாவின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1955-ல்
இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கௌரவப்படுத்தியிருக்கிறது.
நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்த விஸ்வேஸ்வரய்யா
1962-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் காலமானார்.
தி இந்துவில் வெளிவந்த கட்டுரை
தி இந்துவில் வெளிவந்த கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக