விசித்திரங்களால் நெய்யப்பட்டது வாழ்க்கை. அதன் மர்மங்கள் சாதாரண
மனிதர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டவை. மௌனப் படங்களைத் தனது ஆதிக்கத்தின்
கீழ் வைத்திருந்த சார்லி சாப்ளின் பிறப்புக்கான அதிகாரபூர்வ ஆவணம் இல்லை
என்கிறார்கள். பிறப்புச் சான்றிதழோ ஞானஸ்நானம் பெற்றதற்கான பதிவோ இல்லாத
சாப்ளினின் பிறந்த நாளை இன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உற்சாகத்துடன்
கொண்டாடுகிறார்கள். ஆனால், பால்யத்தில் ஒருவேளை உணவுக்கே வழியின்றி அலைந்து
திரிந்தார் சாப்ளின். தாயின் மனநோயும் தந்தையின் குடியும் சாப்ளினைத்
தரித்திரனாக்கியிருந்தது. உலகத்தைச் சிரிக்கவைத்தவரின் பால்யத்தைத் துன்பச்
சரடுகள் மூச்சுவிட முடியாத அளவு நெருக்கியிருந்தன. நெருக்கடிகள்
நிறைந்திருந்த வாழ்க்கையில் மூழ்கிப்போகாமல் திமிர்ந்து எழுந்து கலைஞனாக
அவர் நின்றது காலத்தின் கருணையா தன்னம்பிக்கையின் வெற்றியா என்பதை எளிதில்
சொல்லிவிட முடியாது.
உலகைப் பொறுத்தவரை சார்லி ஸ்பென்சர் சாப்ளின் லண்டனின் தெற்குப் பகுதியில்
அமைந்திருந்த சம்மர்செட் குடியிருப்புப் பகுதியிலிருந்து வந்திருந்தவர்.
அங்கு 1889 ஏப்ரல் 16-ல் பிறந்திருந்தார் சாப்ளின். வாடகை தர முடியாத
காரணத்தால் அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும்
குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். ஒவ்வொரு முறையும்
தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கிக்கொண்டு வேறொரு வீடு தேடி சாப்ளின்
குடும்பம் அலைந்திருக்கிறது. இப்படித் துரத்தப்பட்ட பொழுதுகளின் இரவை
அங்கிருந்த கொட்டகை ஒன்றில் கழித்துள்ளதாக சாப்ளின் நினைவுகூர்ந்துள்ளார்.
ஆனால் அங்கிருந்த பூங்காக்களில் தூங்குவதற்கே தான் பிரியப்பட்டதாகவும் அவர்
சொல்கிறார்.
வறுமை நிறைந்திருந்த போதும் சிறுவயதில் சில ஆண்டுகள் தாயின் பாசம்
சாப்ளினுக்குப் பூரணமாகக் கிடைத்துள்ளது. அப்போது வீட்டைக்
கவனித்துக்கொள்ளப் பணிப்பெண் இருந்துள்ளார், சாப்ளின் குடும்பத்தினர்
ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருந்த சுற்றுலாத் தலங்களுக்குக் குதிரை
வண்டியில் சென்றுவந்துள்ளனர். ஆனால் இந்த மகிழ்ச்சி மிகக் குறுகிய காலமே
நீடித்தது.
சாப்ளினுக்கு நான்கு வயது ஆனபோது குடும்பத்தின் வறுமை அதிகரித்தது. அவருடைய
தாய் ஹன்னா தையல் வேலைகளைச் செய்தார். ஆனால், அதில் அதிக வருமானம்
கிடைக்கவில்லை. சாப்ளின் பப்களின் வெளியே நடனமாடி ஏதோ கொஞ்சம்
சம்பாதித்தார். மூன்று பேர் நிம்மதியாக உண்ணக்கூட முடியாத பல
சந்தர்ப்பங்களில் தானமாய்க் கிடைத்த உணவைக் கொண்டே நாள்களைக் கழித்தனர்.
வறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள் சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை
பாதிப்படையவே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சாப்ளினின் தந்தை ஒரு காலத்தில் இசையரங்குகளில் நட்சத்திரமாக விளங்கினார்.
ஆனால் இந்தப் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது. சாதாரண வாழ்க்கைகூட வாழ
வழியற்ற நிலையில் சாப்ளினின் தந்தை குடிக்கு அடிமையானார். தாயும் தந்தையும்
அன்புடனும் ஆதரவுடனும் கவனிக்க வேண்டிய பாலப் பருவத்தில் சாப்ளினுக்குத்
தனிமையே துணையானது.
ஹான்வெல் என்னும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின்
சேர்க்கப்பட்டார். இங்கே சாப்ளின் சந்தித்ததெல்லாம் வாழ்வில் ஒருபோதும்
எதிர்பார்த்திராத துயரங்களை மட்டுமே. அத்தனை துன்பங்களையும் சகித்துக்கொள்ள
வேண்டிய சூழலில் சாப்ளின் நாட்களை நகர்த்தினார். ஆண்டுக்கணக்கில் யாருமே
பார்க்க வராத நிலையில் ஆற்றவோ தேற்றவோ ஒருவருமற்ற தனிமை சாப்ளின் மீது
கவிந்தது.
ஹான்வெல் கடுமையான ஒழுக்க விதிகளை வலியுறுத்தும் இல்லம். இங்கே இருந்தபோது
தனது தவறான நடத்தைகளுக்காக சாப்ளின் நன்கு அடிபட்டார். தலையில் ஏற்பட்ட
படர்தாமரை காரணமாகத் தலை மொட்டையடிக்கப்பட்டது. அதிகக் கண்ணீர் உகுத்த
நாட்கள் இவை எனப் பின்னாளில் சாப்ளின் குறிப்பிடுகிறார். இந்தத்
துயரங்களுக்கு மத்தியிலும் தான் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று சாப்ளின்
அடிக்கடி நினைத்துக்கொள்வாராம். இந்த நினைப்புதான் சாப்ளினை அந்தத் துன்பச்
சேற்றில் மூழ்கிவிடாமல் துணிந்து நிற்கவைத்தது. இதை அவர் தன் மகனிடம்
கூறியுள்ளார்.
ஹான்வெல் இல்லத்தில் சாப்ளின் பெற்ற துன்பங்களைத் தாங்கும் தன்மை சாப்ளின்
பிற்காலத்தில் திரைப்பட ஆளுமையாக மாறியபோது கைகொடுத்தது. சாப்ளின் திடீர்
திடீரெனக் காணாமல் போய்விடுவார். நாடோடி போல் எல்லையற்ற மகிழ்ச்சியுடன்
கம்பீரமாக நீண்ட தொலைவுக்கு நடந்துசெல்வார். இந்த நடைப் பழக்கம் அவருக்கு
அதிகப்படியான ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் கொடுத்தது.
சாப்ளினுக்கு உணவின் மீதும் பாதுகாப்பான வாழ்க்கை மீதும் நாட்டம் இருந்தது.
இந்த இரண்டுமே பால்யத்தில் சாப்ளினுக்குச் சரிவரக் கிடைக்காமல் இருந்தன.
வாழ்நாள் முழுவதும் பரிபூரணக் காதலுக்காக வெறிகொண்டலைந்தார் ஆனால் இறுதிவரை
அதை அவர் கண்டடையவில்லை.
தனது தொடக்கக் காலத் திரைப்படங்களில் கோபத்துடனோ குரூரத்துடனோ தன்னைத்
துன்புறுத்துபவர்களைப் பழிவாங்கத் துடித்தார் சாப்ளின். பகைமை நிறைந்த
பரிவற்ற உலகத்தில் பிழைத்திருப்பது குறித்த அக்கறையை அவரது பிற்காலப்
படங்கள் வெளிப்படுத்தின.
ஒன்பது வயதில் சாப்ளின் நாட்டுப்புற நடனக் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
இந்தக் குழுவினருடன் இங்கிலாந்தில் இருந்த பெரும்பாலான இசையரங்குகளுக்குச்
செல்லும் வாய்ப்பு சாப்ளினுக்குக் கிடைத்தது. அந்தக் குழுவில்
இடம்பெற்றிருந்த கோமாளிகளின், காமெடியன்களின் ஒவ்வொரு அசைவையும் நன்கு
அவதானித்துத் தனக்குள் பதியவைத்துக்கொண்டார் சாப்ளின். இந்தச் சூழலில்
1901-ல் சாப்ளினின் தந்தை குடிநோய் முற்றி மரித்தார். சாப்ளினின் தாய்
மனநோய் பீடித்துத் துன்புற்றார். பித்துப் பிடித்த தாயை இழுத்துக்கொண்டு
லண்டன் தெருக்களின் வழியே நடந்து சென்றான் சிறுவனான சாப்ளின். மனநோய்
இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா 17 ஆண்டுகளை அங்கேயே கழித்தார்.
இந்தத் துன்பங்களை எல்லாம் தாங்கிக்கொண்ட சாப்ளினுக்கு 14 வயதில் ஷெர்லாக்
ஹோம்ஸ் கதையில் நடிக்க ஒரு சிறு கதாபாத்திரம் கிடைத்தது. இதில்
நடிப்பதற்காக சாப்ளின் இங்கிலாந்து முழுவதும் சுற்றினார். இந்தப் பிரயாணம்
தவிர்த்து இடையில் கிடைத்த நேரங்களில் ஸ்னூக்கர் விளையாட்டு, மது, மாது
எனப் பொழுது கழிந்தது சாப்ளினுக்கு. 1913-ல் சாப்ளின் கலிஃபோர்னியாவில்
உள்ள கீஸ்டோன் ஸ்டுடியோவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வாரத்திற்கு 150
டாலர் சம்பளம். அது இதுவரை அவர் சம்பாதித்திராத தொகை. ஓராண்டுக்குள் சார்லி
சாப்ளின் அமெரிக்காவின் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார்.
1917-ல் சொந்தமாக ஸ்டுடியோவைக் கட்டினார். 1921-ல் சாப்ளின் லண்டனுக்குத்
திரும்பிய போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இப்போது
அவரைத் தெரியாதவர் ஒருவருமில்லை.
சார்லி சாப்ளினின் பிறந்ததினத்தை முன்னிட்டு தி இந்துவில் வெளியான கட்டுரை இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக