இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2018

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

ஓவியம்: வெங்கி

வெகுளி வெள்ளைச்சாமி நகரசபைத் தலைவராக இருந்த இந்தூர் நகரசபைக்குத் தலைவராக ஆசைப்பட்டவன் சின்னதம்பி. நேர்மையாவும் மக்களோடு மக்களாகவும் நின்று செயல்பட நினைப்பவன் சின்னதம்பி. ஆனால், அவனது அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா என அவனுடைய பரம்பரையே அந்த நகராட்சிக்குத் தலைவராக இருந்திருக்கிறது. அவர்கள் சம்பாதித்த கெட்ட பெயரை எல்லாம் சின்னதம்பியால் போக்க முடியவில்லை. அவனும் என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிறான் போடா தம்பி போ என்னும் விதமாகவே அனைவரும் நடந்துகொள்கிறார்கள். ஆனாலும் வெள்ளைச்சாமியை விரட்டாமல் ஓயப்போவதில்லை என சின்னதம்பி சபதம் எடுத்ததுபோல் செயல்படுகிறான்.

இதையெல்லாம் சமாளிக்கும் திறன் பெற்றவன் வெள்ளைச்சாமி. நன்றாக உடம்பை வளர்த்துவைத்திருந்தான் வெள்ளை. அறிவு வளராததால் அந்த வளர்ச்சியெல்லாம் உடம்பில் வந்துசேர்ந்தது. ஆஜானுபாகுவான வெள்ளையின் தோற்றம் கம்பீரமாக இருக்கும். அந்த உடம்பு அவனுக்குப் பெரிய வரப்பிரசாதம். அவன் பெரிய நடிகன். திடீர்னு அழுவான் அடுத்த கணமே பெருங்குரலெடுத்து சிரிப்பான். எதுக்குன்னே தெரியாது. நமக்கு மட்டுமல்ல; அவனுக்கும் தெரியாது. அவனுடன் இருப்பவர்களே குழம்பிப்போவார்கள். ஆனால் அப்படியெல்லாம் நடந்துக்குவான். அதுக்காகப் பெரிய பயிற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறான். வெற்றி மட்டும்தான் வெள்ளையின் குறிக்கோள். அதற்காக எந்த இழிவான நிலைக்கும் அவன் செல்வான். அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்வின் அடிநிலையிலிருந்து மேலெழுந்து வந்தவன். பல தகிடுதத்தங்கள் செய்து மேலே வந்த பின்னர் அந்தத் தகிடுதத்தங்களைக் கடும் உழைப்பு என்று உதார் விடுவான். பொய் சொல்லக் கூசவே மாட்டான் வெள்ளை. மிகத் தைரியமாகப் பொய் சொல்வான்.

வெள்ளைச்சாமியின் தாய் மிகவும் ஏழை. வரிசையில் நின்று ரேசன் பொருட்கள் வாங்குவார். அதை போட்டோ எடுத்து பரப்புவான் வெள்ளை. தன் தாய் எவ்வளவு எளிமையாக வாழ்கிறாள் எனப் பிரபலப்படுத்துவான். அவ்வப்போது கிழிந்த டவுரசரைப் போட்டுக் கொண்டு தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொள்வான் வெள்ளை. இப்போது விலை உயர்ந்த கோட் சூட் எல்லாம் போட்டும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் எப்படித் தகிடுதத்தம் செய்து பதவிக்கு வந்தோமோ அப்படி வேறு யாராவது இந்தப் பதவிக்கு வந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கும். சில வேளைகளில் அழுகை அழுகையாக வரும். அப்போதெல்லாம் டேய் நீ ஒரு டான் அழக் கூடாது என்று கண்ணாடியைப் பார்த்து தன்னைத் தேற்றிக்கொள்வான்.

ஒரு முறை அவன் தமிழூருக்குச் சென்றபோது, அந்த ஊரின் மக்கள் அவனைப் பயங்கரமாக அவமானப்படுத்திவிட்டார்கள். சுவரெங்கும் வெள்ளையே திரும்பிப் போ என்று முழக்கமிட்டார்கள். காரைவிட்டு வெள்ளை இறங்கவே இல்லை. அன்று அவனுடைய காலைக் கடன், குளிப்பு, சாப்பாடு உரை எல்லாமே காரிலிருந்தபடியே கழிந்தது. மாலையில் தப்பித்தால் போதும் என்று தமிழூரிலிருந்து ஓடியே வந்துவிட்டான். எப்போதுமே தமிழூர் என்றாலே அவனுக்குக் கண்டம்தான். தமிழூரின் தலைவராக இருக்கும் பெரியவரை நினைத்தாலே அவனுக்குப் பகீரென்றிருக்கும். பேண்டை நனைத்துவிடுவோமோ என்று பயப்படுவான். சின்னவயதில் ஆசிரியருக்குப் பயந்தது நினைவுக்கு வரும்.

மொத்தம் பத்தாயிரம் பேர் உள்ள அந்த இந்தூரில் 15 ஆயிரம் பேரோட ஆதரவால் தான் நகராட்சித் தலைவராக ஆனதாகப் பெருமைப்பட்டுக்கொள்வான். திடீரென வெள்ளைச்சாமியின் பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது. அந்த ஊரின் வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமே வெள்ளைச்சாமி ஆதரவு தருவதாகவும் ஏழை எளியோரை வஞ்சிப்பதாகவும் சின்னத்தம்பி வெள்ளைக்கு எதிராக நகராட்சி உறுப்பினர்களைத் திரட்டினான். பொதுவாக, பொதுக்கூட்ட மேடைகளில் கையை அசைத்தும் தலையை ஆட்டியும் உற்சாக உரை எழுப்பும் வெள்ளைச்சாமிக்கு நகராட்சிக் கூட்டத்தில் பேச வேண்டுமென்றால் கைகால் எல்லாம் உதறும். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாது வெள்ளைச்சாமிக்கு. பாவம் அவன் என்ன செய்வான். அவனுக்கு அதெல்லாம் தெரியாது. அதனால் செய்தியாளர்களைச் சந்திக்கவோ நகரசபையில் விவாதத்தை எதிர்கொள்ளவோ திணறுவான். அப்படியே விவாதத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசுவான். ஆனால் அதை பெரிய சாதனை போல் சொல்வான். இதை எதுக்குச் சொல்றான் என யோசிக்கும்முன்பே அவன் தான் நினைத்ததை எல்லாம் உளறி முடித்துவிடுவான். எப்படியோ ஒவ்வொரு நிகழ்வையும் அவன் சமாளித்துவருகிறான். சில நேரம் இந்த மானங்கெட்ட பொழப்பு தனக்குத் தேவையா எனத் தனியாக இருக்கும்போது நினைத்துக்கொள்வான்.

வெள்ளை பயந்த நாள் வந்தது. சின்னதம்பி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டான். வெள்ளைக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரிக்க முயன்றான். சின்னதம்பி பேசியதைப் பார்த்த வெள்ளை திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. வேகமாக எழுந்துசென்று சின்னதம்பியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். மிகப் பிரமாதமான பேச்சு எனப் பாராட்டினான் வெள்ளை. வெள்ளை தன்னைக் கட்டிப் பிடித்துவிட்டானே, முத்தம் கொடுத்துவிட்டானே என சின்னதம்பிக்கு அவமானமாகப் போய்விட்டது. டன் கணக்கில் டெட்டால் போட்டுக் குளிக்க வேண்டும் என சின்னதம்பி எண்ணிக்கொண்டான். அவ்வளவு வெறுப்பு வெள்ளைமீது சின்னதம்பிக்கு.

சின்னதம்பி கேட்ட எந்தக் கேள்விக்கும் வெள்ளை பதிலே சொல்லவில்லை. அவை அனைத்தும் நியாயமான கேள்விகள். அதற்கு வெள்ளை பதில் சொன்னால் மாட்டிக்கொள்வான். அது அவனுக்குத் தெரியும். அதனால்தான் சின்னதம்பியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து நாடகமாடினான். அப்பாவிகள் வெள்ளையைப் புகழ்ந்தனர். எதிரியையும் சமமாக நடத்தும் வெள்ளையின் புகழ் நாடெங்கும் பரவியது. சின்னதம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படியொரு மானங்கெட்ட மனிதனை எப்படிச் சமாளிப்பது எனக் குழம்பினான். ஆனாலும் எப்படியும் வெள்ளையை வென்றாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் சின்னதம்பி.


மறைந்தும் மறையாச் சூரியன்

அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி

இந்தியா விடுதலையடைந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் தலைகீழ் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை அரியணையில் அமர்ந்திருந்த, பலம் பொருந்திய தேசியக் கட்சியான காங்கிரஸை 1967 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது மாநிலக் கட்சியான திமுக. அதன் முதல் முதலமைச்சரான அண்ணாத்துரை ஈராண்டுகளுக்குள், 1969இல் மறைய, கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் வரிசையிலிருந்த மு.கருணாநிதி முன்னேறினார்; முதலமைச்சரானார். திராவிட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியான திமுக ஒடுக்கப்பட்டோரின் நலனையும் சமூக நீதியை நிலைநாட்டுவதையும் தன் முக்கியக் கடமைகளாகக் கொண்டிருந்தது. தந்தை பெரியாரிடம், அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றறிந்த முதலமைச்சர் கருணாநிதியும் இது விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். 

ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடும்போது அதன் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெண்கள். சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக் குடும்பங்களிலும் பெண்களுக்கு எதிராக நிலவும் ஒடுக்குமுறைகள் ஒன்றல்ல; ஓராயிரம். அவை அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிய மிகப் பெரிய சமூக மாற்றம் தேவை. அந்த மாற்றத்துக்கான விதை தூவிய பெரியாரின் வழியில் அண்ணாவை அடியொற்றி நடைபோட்டவர் மு.கருணாநிதி. அதற்கான சான்றுகளாக கருணாநிதி கொண்டுவந்த மகளிருக்கான திட்டங்களைச் சொல்லலாம். அந்தத் திட்டங்களால் பயனடைந்த பெண்கள், கருணாநிதி மறைந்த மறுநாள் ஆகஸ்ட் 8 அன்று நிகழ்ந்த கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் கலந்துகொண்டார்கள். தங்கள் வாழ்வில் மலர்ச்சி காண விரும்பிய தந்தையாக, தமையனாக, தனயனாகச் செயல்பட்ட அம்மனிதரின் மரணம் அவர்களை உலுக்கியது. ஆகவே, கட்சி வேறுபாடின்றி அவருக்குத் தங்கள் நன்றியை அஞ்சலியாகச் செலுத்தினார்கள்.

காவேரி மருத்துவமனை முன்பு

மகளிருக்காக அவர் கொண்டுவந்த திட்டங்களைச் சிந்தித்துப் பார்த்தால் மகளிர் நலனுக்காக கருணாநிதி உண்மையிலேயே செயல்பட்டாரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளலாம். பெண்களின் பெரும் பிரச்சினைகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களது கல்வியும் திருமணமுமே முன்னிலையில் நிற்கும். ஆகவே, பெண்கள் கல்வி கற்கவும் மணமுடிக்கவும் திட்டங்கள் வேண்டும். சரி மணமுடித்த பெண்கள் கணவனை இழந்தால் கைம்பெண்ணாகிவிடுகிறார்களே அவர்களுக்கும் உதவ வேண்டுமே. இன்னும் பெண்களில் சிலர் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கக்கூடும் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இவை எல்லாம் உதவும், சொத்து நிறைந்த குடும்பத்துப் பெண்களுக்கு என்ன செய்வது? அந்தச் சொத்தில் சம உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது அவசியம்தானே? சரி அரசியல் ஈடுபாடுகொண்ட பெண்களை அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டுமே. அதற்கும் திட்டம் உண்டு. இப்படிப் பெண்கள் மீது அக்கறை கொண்டு எந்தவகையிலும் எந்தத் தரப்புப் பெண்ணும் விடுபட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன் எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உதவும்படியான திட்டங்களை முன்னெடுத்ததில் கருணாநிதியின் கூர்மதியும் பங்களிப்பும் காலகாலத்துக்கும் நினைவுகூரத்தக்கவை.

கணவன் இறந்துவிட்டால் பெண்ணுக்கு வாழ்வே முடிந்துவிட்டது என்ற சமூகத்தின் அறியாமையை அகற்ற கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில், கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் 1975ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம். கைம்பெண்களின் மறுவாழ்வை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மறுமணத்துக்கு ஆதரவு தரவுமான நிதியுதவித் திட்டம் இது. இந்தத் திட்டத்தில் அப்போது 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2009இல் இது 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் உதவிபெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. திருமணத்துக்கு உதவும் அதே நேரம் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கைம்பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்தார் அவர். அது, 1975 ஜூன் 1 அன்று கொண்டுவரப்பட்ட ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகைத் திட்டம். 18 வயசுக்கு மேற்பட்ட கைம்பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே உழைத்துப் பிழைக்க விரும்பும் 20 முதல் 40 வயது கொண்ட பெண்களுக்கு உதவுவதற்காக, சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975இல் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.

கலைஞர் மறைந்த அன்று காவேரி முன்பு

ஆண்களின் கல்வி குடத்து நீரெனில் பெண்களின் கல்வி குளத்து நீர். அதனால் சமூகமே பயனடையும். ஆகவே, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பெண்களின் கல்விக்கு உதவும்வகையில் பெரியார் ஈ.வே.ரா.நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை 1989-90இல் கொண்டுவந்தார்.  வருட வருமானம்  24 ஆயிரத்துக்குட்பட்ட எளிய குடும்பத்துப் பெண்கள் பட்டப் படிப்பு படிக்க உதவும் திட்டம் இது.

1989இல், கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொண்டுவந்த மற்றொரு திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். இது திருமண உதவித் திட்டம் என்றபோதும் மறைமுகமாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாகவும் செயல்படுகிறது. குடும்பத்தின் வருட வருமானம் 72 ஆயிரத்துக்குட்பட்ட ஏழை எளிய பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் அமைந்த திட்டம் இது. நிதி உதவி பெற விரும்பும் பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி. எனவே, இந்தத் திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. பழங்குடியினப் பெண்கள் 5ஆம் வகுப்புவரை படித்திருந்தால் போதும் என்பதைப் போன்ற விதிகளைக் கருத்தூன்றிக் கவனிக்கும்போது திட்டங்கள் பயனாளிகளுக்குப் போய்ச்சேருவதிலும் அவர் கொண்டிருந்த அக்கறை விளங்கும்.  

கலைஞரின் இறுதி ஊர்வலம்

பெண்களது சமூகச் செயல்பாட்டையும் நிர்வாகத் திறனையும் வளர்க்க உதவும் வகையில், 1989ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரியில் தொடங்கிவைத்த திட்டம் மகளிர் சுய உதவிக் குழு. கிராமப்புறப் பெண்கள் சிறு குழுவாக ஒருங்கிணைந்து வாழவும், வருமானம் ஈட்டவும் உதவிய திட்டம் இது. 1989இல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின்படி ஆண்களைப் போல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன. மாற்றுப்பாலினத்தவருக்குத் திருநங்கைகள் என்ற கவுரவமான பதத்தை வழங்கியதுடன் அவர்கள் மரியாதையான வாழ்வு நடத்துவதை ஆதரிப்பதற்காகத் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் ஒன்று 15.4.2008 அன்று தொடங்கப்பட்டது. அதுவரை மாற்றுப்பாலினத்தவரை ஏளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட இந்த நடவடிக்கை உதவியது.

திருமணமே செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு உதவவும் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கிறார் கருணாநிதி. அது 2008 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட முதிர்கன்னி உதவித் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் திருமணமாகாத 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி உதவி கிடைக்கிறது.

அஞ்சலி சுவரொட்டி

கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்பட்டன. அவர் கையிலிருந்து பணம் போட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. ஆனால், அத்தகைய திட்டங்கள் அவசியம் என்பதை உணர, முன்மொழிய, வழிமொழிய மகளிரின் துயரம் அறிந்த முதலமைச்சர் தேவைப்பட்டார். அந்த முதலமைச்சராக இருந்தார் கருணாநிதி. திட்டங்கள் தீட்டுவதில் வெறுமனே கடமையைத் தட்டிக்கழித்தால் போதும் என்று செயல்பட்டவரல்லர் அவர். திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து பயனாளிக்கான விதிகளைத் தீர்மானிப்பது வரை ஒவ்வொன்றிலும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்தியிருக்கிறார் அவர். அது மாத்திரமல்ல; யாருக்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ அந்தப் பயனாளிகளைத் திட்டங்கள் சென்றடைகின்றனவா என்பதை விசாரித்தறிவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இவற்றை எல்லாம் விசாரித்து அறியும்போது அவரது தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது. இருட்டறையில் முடங்கிக் கிடந்த மகளிருக்கு உதயசூரியனின் பேரொளியைக் காட்டிய கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள் இவை. அதனால்தான் தமிழ்ப் பெண்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராயிருக்கிறார் இன்று அவர்.

(பெண்களுக்காகவும் சுடர்ந்த சூரியன் என்னும் தலைப்பில் 2018 ஆகஸ்ட் 12 அன்று பெண் இன்று இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.) 

ஞாயிறு, ஜூலை 15, 2018

தண்ணீர் சாமி

ஓவியம்: வெங்கி
வெகுளி வெள்ளைச்சாமி ஆயா உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஊர் பேர் தெரியாத ஆளாகத்தான் இருந்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்கிய காசிலேயே தனி உணவகம் கட்டும் அளவுக்குச் சம்பாதித்துவிட்டான் என்று அவனுடைய எதிரிகள் சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் பத்து தோசை, இருபது இட்லி, பத்து காபி சாப்பிட்டால் வெள்ளை பில்லில் இரண்டு தோசை, ஐந்து இட்லி, இரண்டு காபி என்று குறிப்பிட்டுவிடுவான். ஆகவே, வாடிக்கையாளர் தாங்கள் அடைந்த லாபத்தில் பெரும்பகுதியை வெள்ளைக்கு டிப்ஸாகத் தருவார்கள். இந்த வேலையில் வெள்ளை நிம்மதியாக இருந்தான். ஆயா உணவகத்தில் எப்போதும் கூட்டம் ஜேஜே என்று இருந்ததால் உணவகத்தை நடத்திய ஆயாவுக்கு வெள்ளையின் கேப்மாரித்தனம் பற்றித் தெரியவே இல்லை. ஆயாவின் தங்கை சின்ன ஆயாவுக்கோ வெள்ளையின் மீது அபார நம்பிக்கை. தனக்கேற்ற அடிமையாக சின்ன ஆயா வெள்ளையை நம்பினார்.

அதே நேரம் ஆயாவின் நம்பிக்கைக்குரிய பணியாளாகத் தண்ணீர் பாண்டி இருந்தான். ஆயாவின் எதிரே தண்ணீர் பாண்டி நிமிர்ந்தே நின்றதில்லை. தண்ணீர் பாண்டிக்கு முதுகு நேரானதா இல்லை பிறவிலேயே கூன் விழுந்துவிட்டதோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு அத்தனை கச்சிதமாகத் தண்ணீர் பாண்டியின் முதுகு வளையும். ஆயா எங்கு சென்றாலும் பொறுப்பைத் தண்ணீர் பாண்டியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார். தண்ணீர் பாண்டியும் மிகவும் பணிவாக நடந்துகொள்வான். கணக்குவழக்குகளைக் கச்சிதமாகப் பராமரிப்பான். டிப்ஸ் கணக்குகளைக்கூடச் சொல்லிவிடுவான். காலையில் வேலையைத் தொடங்கும் முன்னர் ஆயா இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவான்.

ஆனால், தண்ணீர் பாண்டி லேசுபட்டவனல்ல. அவன் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பர்ஸில் கைவைத்துவிடுவதில் சமர்த்தன். ஆள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பானே ஒழிய தண்ணீர் பாண்டி பயங்கரமான தந்திரக்காரன். காலில் விழ வேண்டுமென்றால் காலில் விழுவான் கழுத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் கழுத்தைப் பிடிப்பான். காலில் விழுவதை வெளிச்சத்தில் செய்யும் தண்ணீர் பாண்டி, கழுத்தைப் பிடிப்பதை இருட்டில் செய்வான். அதுதான் அவனது சாமர்த்தியம்.  ஆகவே, வெள்ளை, தண்ணீர் பாண்டியிடம் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ள மாட்டான். தண்ணீர் பாண்டியும் வெள்ளையின் விஷயத்தில் தலையிடுவதில்லை. வெள்ளைக்கு உடம்பு வளர்ந்த அளவு மூளை வளரவில்லை. எது வளருமோ அது தானே வளரும் என்று வெள்ளையும் அப்படியே விட்டுவிட்டான். ஆனால், தண்ணீர் பாண்டியைவிடத் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வான்.

திடீரென்று ஒரு நாள் ஆயா உணவகத்து உரிமையாளரான ஆயா எங்கேயோ தொலைதூர தேசம் சென்றுவிட்டார். அவர் எங்கே போனாரென யாருக்குமே தெரியவில்லை. ஆதரவற்ற நிலைக்குச் சென்றது ஆயா உணவகம். வாடிக்கையாளர்கள் கலங்கிப்போனார்கள். மூன்று நேரமும் ஆயா உணவகத்திலேயே சாப்பிட்டு உடம்புவளர்த்த கவிஞர் பாம்பன் ’ஆயா எங்க ஆயா போன? எங்களுக்குத் தேவ பாயா… வந்துடு ஆயா வந்து தந்திடு பாயா’ என்று ஒரு கவிதையே பாடிட்டார். அந்தக் கவிதையை யாரோ ஆயா காதில் போட்டுட்டாங்களோ என்னவோ ஆயா பயந்துபோய் திரும்பிவரவே இல்லை. இந்தச் சூழலில் ஆயா உணவகத்தின் பொறுப்பைத் தான் ஏற்கலாமெனத் தண்ணீர் பாண்டியும் வெள்ளையும் தனித் தனியாகத் திட்டம் போட்டார்கள். ஆனால், உணவகத்தின் பொறுப்பைத் தானே ஏற்கலாம் எனச் சின்ன ஆயா தயாரானபோது வெள்ளையும் பாண்டியும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆனால், சின்ன ஆயாவால் உணவகப் பொறுப்பை ஏற்க முடியாத அளவுக்கு உடல்நலம் மோசமாகிவிட்டது. ஆயா உணவக உணவை அதிகமாக உண்டதால் அப்படியாகியிருக்கலாம் என அம்மஹை மருத்துவமனை மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆகவே, சின்ன ஆயா உடல்நலம் சரியாகும்வரை பொறுப்பை வெள்ளையிடம் ஒப்படைத்துவிட்டார். தண்ணீர் பாண்டி என்னவெல்லாமோ யுத்தம் நடத்திப் பார்த்தான் ஒன்றும் பாச்சா பலிக்கவில்லை. வேலைன்னு வந்துட்டா வெகுளி வெள்ளைச்சாமி நிஜமாகவே வெள்ளைக்காரன் என்பது தெரிந்தது. ஆகவே, வெள்ளையிடம் சமாதானமாகப் போய்விடலாம் என்று முடிவெடித்து தண்ணீர் பாண்டி வெள்ளைக்குச் சமாதானக் கொடி காட்டினான். அதன் பின்னர் ஆயா உணவகத்தில் ரெண்டு உரிமையாளர்கள் என்பது போல் வெள்ளையும் பாண்டியும் ஆனார்கள். எங்கு போனாலும் இருவரும் ஒன்றாகத்தான் போனார்கள். ஒன்றுக்குக்கூட அவர்கள் தனித்தனியாகப் போனதில்லை. அப்படியொரு மாற்றாராக மாறினார்கள். அவர்களைத் தனித் தனியாக யாராவது பார்த்தார்கள் என்று சொன்னால் சொன்னவர்கள் கண்ணில் கோளாறு என்றே பொருள். அதன் பின்னர் அந்த ஊர்க்காரர்கள் நகமும் சதையும் போல் என்று சொல்வதற்குப் பதில் பாண்டியும் வெள்ளையும் போல் எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். வெகுளி வெள்ளைச்சாமி தனது பெயரில் சாமி இருப்பதால் தன்னைச் சாமியாக நினைத்துக்கொண்டான். ஆனால், வாடிக்கையாளர்கள் அவனைப் பூதம் எனக் கேலிசெய்வார்கள். அது வெள்ளைக்குத் தெரியாது. வெள்ளையும் பாண்டியும் ஒன்றுசேர்ந்தது ஆயா உணவகத்துக்குக் கேடுதான் என்று நீண்ட கால வாடிக்கையாளர்கள் பேசிக்கொள்வது அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ?

சனி, ஜூலை 07, 2018

பரதனை இனிப் பார்க்க முடியாது!

‘ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்குள் வராத சோகத்தை வாசித்துக்கொண்டுதானிருக்கும்’ என்பார் ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் ஆடியோ கேசட்டின் தொடக்க உரையில் இயக்குநர் பாரதிராஜா. அந்தத் திரைப்படத்தை தென்காசியில் பரதன் தியேட்டரில் பார்த்தேன். அந்த பரதன் இப்போது இடிக்கப்படுகிறது. சில காலம் இயங்காமல் இருந்த பரதன் தன் கடைசி மூச்சையும் இழந்துகொண்டிருக்கிறது.

எண்பதுகளில் அந்த இடைநிலை நகரத்தில் பொழுதுபோக்குவதற்கு இருந்த இடங்கள் திரையரங்குகள் மாத்திரமே. அப்போது பக்தர்களுக்கு காசி விஸ்வநாதர் ஆலயம் என்றால் ரசிகர்களுக்கு ஸ்ரீபாக்யலட்சுமி, பரதன், வாஹினி ஆகிய திரையரங்குகள்தாம் கவலை தீர்க்கும் இடங்கள்.


காலத்தின் மாற்றம் வாஹினியிலிருந்து திரைப்படத்தைப் பிரித்தது. பின்னர் ஸ்ரீபாக்யலட்சுமி பிஎஸ்எஸ் காம்ப்ளெக்ஸ் ஆனது. இப்போது பரதன் மறையப்போகிறது. தற்போது நாற்பது, ஐம்பது, அறுபது சொச்ச வயதுகளில் இருப்பவர்களுக்குத் திரையரங்குகள் அளித்த ஆசுவாசம் புரியும். நினைத்த மாத்திரத்தில் நினைத்த படத்தைக் கையடக்கக் கைபேசியில் பார்க்கும் வசதி அப்போது இல்லை. நடிகை ஒருவரின் மந்தகாசப் புன்னகை இடம்பெறும் ஒரு ஷாட் ரசிகருக்குப் பிடித்திருந்தாலும் அந்த ஷாட்டை மறுபடியும் ஒருமுறை பார்க்க விரும்பினால் திரையரங்குக்குத்தான் செல்ல வேண்டும்.

அதனால்தான் திரையரங்குக்கு அவர்களது வாழ்வில் முக்கிய இடம் இருந்தது. ஒவ்வோர் ஊரிலும் ஏதாவது ஒரு சினிமா பாரடைஸ் ரசிகர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு பாரடைஸ் பரதன் தியேட்டர். இந்தத் திரையரங்கை நீங்கள் ‘தூள்’, ‘கில்லி’ போன்ற படங்களில் பார்த்திருக்கலாம். இந்த வரிகளை எழுதுபவனைப் போல் நீங்களும் அந்த தியேட்டரின் கதகதப்பை உணர்ந்திருக்கலாம்.


அது எண்பதுகளின் தொடக்க காலம். டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தை இந்தத் திரையரங்கில்தான் நண்பர்களுடன் பார்த்தேன். காலைக்காட்சி டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் குதிரையில் எம்.கே.தியாகராஜபாகவதர் வருகிறார். ஏதேனும் டிரெயிலரோ என்று நினைத்து சில காட்சிகளைக் கடந்த பிறகு தான் காலைக் காட்சி மட்டும் ‘ஹரிதாஸ்’ படம் என்பது தெரியவந்தது.

என்ன செய்வது? ‘ஹரிதா’ஸைப் பார்த்துவிட்டு அடுத்த காட்சி ‘உஷா’வையும் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம். பக்கத்து வீட்டு அக்காவுடன் ‘நவக்கிரக நாயகி’ பார்த்ததும் இந்தத் திரையரங்கில்தான். அந்த அக்கா இப்போது இல்லை, நினைவில் தங்கிவிட்டார்.

அப்படியே தூள் தூளாகச் சிதறிக்கொண்டிருக்கும் பரதனும் நினைவுகளில் படிந்துவிடும். அதன் ஒரு துகள் சொல்லும் நூறு கதைகள். பரதனில் டிக்கெட் கவுண்டரில் இரும்புக் கிராதிகளைத் திறக்கும்போது, சொர்க்கத்தின் வாசல் திறந்தது போல் இருக்கும். கவுண்டரில் கையை நீட்டி டிக்கெட்டைப் பெறும்போது கிடைக்கும் பேரின்பத்துக்கு ஈடேது. இடைவேளைகளில் திறந்தவெளி மூத்திரைப் பிறை அருகில் இருந்த கேண்டீனில் குற்றால அருவியில் பிடித்தது போன்ற டீயையும் ஓமப்பொடி முறுக்கையும் சுவைத்த நாட்கள் நினைவுகளில் சுழன்றுகொண்டே இருக்கும். அது ஒரு சுகமான சூறாவளி. பாரதிராஜாவும் ரஜினியும் இணைந்து அளித்த ‘கொடி பறக்குது’ தீபாவளி அன்று வெளியாக இருந்தது. அந்தத் தீபாவளி தியேட்டரில்தான் விடிந்தது. பல தீபாவளிகள் பரதனிலும் பாக்யலட்சுமியிலும்தான் தொடங்கியிருக்கின்றன. ‘கொடி பறக்குது’ பெட்டி தீபாவளிக்கு வரவில்லை. மறுநாள்தான் வந்தது. ஆனாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் பரதனுக்கு வந்து ‘கொடி பறக்குது’ பார்த்தேன்.



தளபதி வெளியானபோது முதன்முதலாக டிக்கெட்டை வழக்கத்துக்கு மாறாக, சற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. அதிக விலை என்றால் அதிக விலை அல்ல ரூ. 20தான். ஆனால், அதுவரை தென்காசியில் எந்தத் திரையரங்கிலும் ரிலீஸுக்கென்று விலையைக் கூட்டி விற்றதில்லை. கோவில்பட்டி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் அது அப்போது சாதாரணம்.

பாக்யலட்சுமியில் ரஜினியின் ‘மாவீரன்’ வெளியானபோது, பரதனில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ வெளியானது. ‘மாவீரன்’ தென்காசியில் முதல் ரிலீஸ் ஆனால், ‘அம்மன் கோவில் கிழக்காலே’ செகண்ட் ரிலீஸ்தான். ஆனால் அதுதான் ‘மாவீர’னைவிட அதிக நாட்கள் ஓடியது. ‘மாவீர’னில் அக்கா அம்பிகா ரஜினியைச் சாட்டையால் அடிப்பார். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் தங்கை ராதா விஜய் காந்தை சாட்டையால் அடிப்பார். இந்தத் தகவல்கள் ஏன் என் மன வெளியில் தங்கின?

கடைசியாக அங்கே ‘சுப்ரமணியபுரம்’ படம் பார்த்தேன். அதன் பின்னர் அந்தத் திரையரங்குக்குச் செல்லவே இல்லை. அந்த வழியே செல்லும்போது கடந்துபோகும் காதலியைப் பார்ப்பது போல் ஏக்கப் பார்வை வழியவிட்டபடியே செல்வேன். காலத்தின் புழுதி படிந்ததால் சோபை இழந்த சித்திரங்களில் ஒன்றாக பரதன் தியேட்டர் ஆகிவிட்டது சோகம்தான். நாளை பரதன் இருந்த இடத்தில் ஒரு புதிய காம்ப்ளெக்ஸ் கண் சிமிட்டக்கூடும். இந்தச் சோகமும் தொலைந்துபோய்விடலாம்.

2018 ஜூன் 30 அன்று சொந்த வீடு இணைப்பிதழில் வெளியானது.

ஞாயிறு, ஜூன் 24, 2018

அறுபத்தியெட்டு அங்குலத் தொப்பைக்காரர்

ஓவியம் வெங்கி

நிலைக்கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் வெகுளி வெள்ளைச் சாமி. தன்னை எல்லோரும் வெகுளி என அழைப்பதை எண்ணிச் சிரித்தானோ என்னவோ. சிரித்தபடியே நின்றுகொண்டிருந்த அவனை அவனுடைய உதவியாளன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். செல்ஃபி பிரியனான வெள்ளைக்கு செல்ஃபி எடுக்க சிரமாக இருக்கும் என்பதால் அதற்காக ஓர் உதவியாளனை வைத்திருந்தான். அவன்தான் வெள்ளையை விதவிதமாக செல்ஃபி எடுப்பான். செல்ஃபிக்களைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெள்ளை பகிர்ந்துகொள்வான். பகிர்ந்த உடனேயே அது பத்தாயிரம் பேரால் விரும்பப்படும். ஒவ்வொரு க்ளிக்கும் பத்தாயிரமாகப் பெருக சில மணித்துளிகளில் கோடிக்கணக்கான பேரால் அது பார்க்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வதில் ஒரு பெருமை வெள்ளைக்கு. அவனுடைய வளர்ச்சி தத்துவமும் அதுதான்.

இன்று ஆணவபுரத்தின் நகராட்சித் தலைவராகத் தலைநிமிர்ந்து நடக்கும் வெள்ளச்சாமி ஒரு காலத்தில் ஆணவபுரத்தின் பஜாரில் எடுபிடியாக இருந்திருக்கிறான். டீ வாங்கி வருவது, கடைகளைப் பெருக்குவது போன்ற எடுபிடி வேலைகளைத் தான் முதன்முதலில் செய்தான். அந்தப் பழக்கம் காரணமாக ஊரில் உள்ள வர்த்தகர்களின் நண்பனான் வெள்ளை. அதை வைத்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த நகராட்சிக்கே தலைவராகிவிட்டான். முதன்முதலாக அவன் நகராட்சித் தலைவராக ஆன போது பயபக்தியுடன் நகராட்சி வாசலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டு முத்தமிட்ட காட்சியைப் பார்த்தவர்களுக்கு அவனுடைய கடமை உணர்வு மெய்சிலிர்க்கச் செய்தது. அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் வெள்ளைச்சாமியின் பலம். தான் அடைய விரும்பியதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வான்; வெட்கப்படவே மாட்டான். இல்லாவிட்டால் யார் யாரோ போட்டி போட்ட நகராட்சிக்கு அவன் தலைவராகியிருக்க முடியுமா?

ஆணவபுர நகராட்சியின் தலைவராக விரும்பிய பெரியவர் குத்போனியை அவன் ஓரங்கட்டியதை எல்லாம் குத்போனியால்கூட நம்ப முடியவில்லை. இவ்வளவுக்கும் டவுசர் போட்டுக்கொண்டு அந்த ஊரின் ’பிறர் சேவை மன்ற’த்தில் வெள்ளை எடுபிடியாக இருந்தபோதே குத்போனி அதன் தலைவராக இருந்தவர். ஆனாலும் இன்று வெகுளி வெள்ளைச்சாமி நாடறிந்த நகராட்சித் தலைவர். அவனுடைய சுவீட்டர் பக்கம் உலகத்திலேயே அதிகம் பேரால் பின் தொடரப்படுகிறது. அவன் போகாத நகரங்களே நாட்டில் இல்லை. புதிதாக உருவாகும் பக்கத்து மாநில நகரத்துக்கு அடுத்த ஆண்டு வரப் போவதாக இப்போதே முன் பதிவு செய்துகொண்டான் வெள்ளை. என்னதான் பெரிய ஆளானாலும் வெள்ளையின் மனசில் அந்த டவுசர் காலம் நிறைந்திருந்தது. தான் போட்டிருந்த டவுசரைப் பத்திரமாக வைத்திருந்தான். அதைத் தினம் தோறும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் வெளியவே கிளம்புவான்.

மாதந்தோறும் நகராட்சி வானொலியில் பேசுவது வெள்ளைச்சாமிக்கு வாடிக்கை. அந்தப் பேச்சுகளை ஊரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தான் வெள்ளை. எடுபிடியாக இருந்த தன்னாலேயே இந்த அளவு உயர முடிந்தால் ஒழுங்காகப் படிக்கும் மாணவர்கள் எந்த அளவு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அந்தப் பேச்சின் வழியே அளித்தான் வெள்ளை.

தான் மூணாங்கிளாஸ் தான் படித்திருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை வெள்ளைக்குக் கிடையவே கிடையாது. உலகத்திலேயே தான்தான் அறிவாளி என்று காட்டிக்கொள்வான். அவன் மூணாங்கிளாஸ் படித்ததற்கே ஆதாரம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொல்வார்கள். அதை எல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டான் வெள்ளை. வெள்ளையின் மூளைதான் காலியாக இருக்குமே தவிர வெள்ளையின் வயிறு எப்போதும் நிறைந்தே இருக்கும். அவனது தொப்பையின் அளவைப் பத்திரிகைகளில் கிண்டலடிப்பார்கள். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் இருப்பதைப் போல் இரு மடங்கு அதிகமாகிவிடும் சாப்பிட்ட பின்பு அவனது தொப்பை. 68 அங்குலத் தொப்பைக்காரன் என்பதில் அவனுக்கு பெரிய மகிழ்ச்சி.

இந்த நேரத்தில் தான் பக்கத்து ஊர் கபடி ஆட்டக்காரர் பிரட் போளி வெள்ளையால் ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபட முடியுமா என்று விளையாட்டாகக் கேட்டுவிட்டார். அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்ட வெள்ளை தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டான். அதைப் பார்த்த ஆணவபுரத்துக்காரர்களே அசந்து போய்விட்டார்கள். உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக அமைதியாட்சி கோவிலின் மரத்தை வெள்ளை சுத்திவரும் காட்சியைக் கண்ட பலர்மீது அம்பாளே வந்து இறங்கிவிட்டார். அந்த அளவு ஆன்ம சுத்தியுடன் உடற்பயிற்சி செய்தான் வெள்ளை. ஒரு பெரும் பாறை மீது மல்லாக்கப்படுத்து அந்தப் பாறையுடன் சேர்ந்து பத்து முறை உருண்டான் வெள்ளை. ஆனாலும் அவனுடைய தொப்பைக்கு எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. அது பாறைக்கே சவால்விட்டது. சின்ன வயதில் டவுசர் போட்டுக்கொண்டு ’பிறர் சேவை மன்ற’த்தில் உடற்பயிற்சி செய்த காலம் அவன் நினைவில் எழுந்தது. இந்த வீடியோவை சுவீட்டர் பக்கத்தில் உலக நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். சுவீட்டர் தொடங்கிய காலம் முதல் இதுவரை வெளியான அனைத்து  வீடியோக்களையும்விட அதிகம் பேரால் பார்க்கப்பட்டது வெள்ளையின் உடற்பயிற்சி வீடியோ.

செவ்வாய், ஜூன் 19, 2018

அவரை நீங்க பாத்திருக்கீங்களா?

ஓவியம்: வெங்கி

வெகுளி வெள்ளச்சாமி எப்படியோ யார் யாரையோ, கையைக் காலைப் பிடித்து ஒரு செய்தியாளர் ஆகிவிட்டான். ஒரு முறை தற்செயலாக செண்டிரல் ரயில் நிலையத்தில் நடிகர் குஜினியைச் சந்தித்தான். அவர் அவசர அவசரமாக சமயமலைக்குத் தியானத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழக்கமாக விமானத்தில் செல்லும் குஜினி ஒட்டுத்தாடி, முகத்தில் மரு என்ற மாறுபட்ட கெட்டப்பில் இருந்தாலும் வெள்ளச்சாமியின் கண்களின் கூர்மைக்கு முன்னர் அவர் தப்பிக்க இயலவில்லை. சட்டென்று அவர் முன் சென்று மைக்கை நீட்டினான் வெள்ளை. ’என்ன என்ன’ என்று பதறினார் நடிகர். ’ஒண்ணுமில்ல சார் இங்கே கிடைக்காத அமைதி சமயமலையில் உங்களுக்குக் கிடைக்கிறதா?’ என்று முதல் கேள்வியை ஒரு கத்தியைப் போல் சொருகினான் வெள்ளை. குஜினிக்கு ஒரு நிமிஷம் உடம்பே சுத்தியிருச்சு. கிறு கிறுன்னு வந்துருச்சு. அவர் பதற்றத்தில் ’ஏய் ஏய்’ என்று மட்டும் சொன்னார். வெள்ளை பயந்து நடுங்கிவிட்டான். ’என்னடா வம்பாப் போச்சு நாம ஏதோ கேக்கப் போய் இந்த ஆளு கையக் கால நீட்டிட்டாருன்னா நம்ம பாடு பெரும்பாடாப் போயிருமே’ன்னு சத்தமில்லாம, பதில் பற்றிக் கவலைப்படாமல் மைக்கை எடுத்துட்டு வந்துட்டான். தன்னோட சேனலில் கூடச் சொல்லல. ஆனால், இதை எவனோ வீடியோ எடுத்து வேஸ்ட் அப்பில் பரப்ப வெள்ளை நாடறிந்த செய்தியாளர் ஆகிவிட்டான்.

அதன் பின்னர் நடிகர் சீஸ்அர் லூஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவை அவருடைய நண்பர் பேரிக்காவிலிருந்து அனுப்பியிருந்தார். அதைப் படித்த நடிகர் சீஸ்அர் அது என்ன ஏது என்று புரிந்துகொள்ளாமல் அதை அப்படியே லூஸ்புக்கில் பகிர்ந்துவிட்டார். அவ்வளவுதான். அதைப் பார்த்த அனைவரும் கொதித்து எழுந்தார்கள். நடிகர் சீஸ்அருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் கோரிக்கையில் இருந்த உண்மையைக் கண்டு நடிகர் சீஸ்அரே தன்னைக் கைது செய்வதுதான் சரியான நடவடிக்கை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் காவல் துறையால் கண்டே பிடிக்க இயலவில்லை. இவ்வளவுக்கும் அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஒட்டுத்தாடி, மரு போன்ற மாறுபட்ட கெட்டப்பில் எல்லாம் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. அதனால் எந்த மேக்கப்பும் இன்றி நடமாடினார். அதனாலோ என்னவோ அவருடன் வரும் காவலருக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை.

காவல் துறையும் அவரது அடையாளத்தைச் சொல்லி பத்திரிகையில் விளம்பரம் எல்லாம் கொடுத்தது. அவரது சட்டையில் கீழ் பொத்தான் கிடையாது என்றும் வலது கையை ஆட்டிக்கொண்டே இருப்பார் என்றும் தகவல்கள் எல்லாம் தந்திருந்தனர். ஆனாலும் காவல் துறையினரால் மட்டும் அவரைப் பார்க்கவே இயலவில்லை. சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படும் சீஸ்அர் காவல் துறையின் கண்களுக்குத் தெரியாதவாறு அன்னை பாராசக்திதான் அவருக்குச் சக்தி கொடுத்திருக்க வேண்டும்.

நடிகர் சீஸ்அரைத் தான் ஏன் ஒரு பேட்டி எடுக்கக் கூடாது என நினைத்தான் வெள்ளை. அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்றான். அப்போது சீஸ்அர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் உடற்பயிற்சி செய்கிறார் என்பதே அவனுக்கு வியப்புக்குரிய தகவலாக இருந்தது. பொறுமையாகக் காத்திருந்தான். நடிகர் சீஸ் அர், சுத்தமான பசும் பாலில் தயாரித்த சுவையான வடிப்புக் காப்பியைத் தருவித்து அவனுக்குத் தந்தார். குடித்து முடித்த வெள்ளை, உங்களை ஏன் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான். அதற்கு நடிகர் அவர்கள் வழக்கம் போல் பிற இடங்களில் எல்லாம் தேடுகிறார்கள் நானோ எனது வீட்டிலேயே இருக்கிறேன் அதனால் அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

நீங்களே சென்று ஏன் சரணடையக் கூடாது என்றான் வெள்ளை. சட்டென்று கடுங்கோபம் கொண்டார் நடிகர் சீஸ்அர். நீங்கள் நமது காவல் துறையை அவ்வளவு இழிவுபடுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது என்று சொல்லிவிட்டு, நானே சென்று சரணடைந்தால் காவல் துறையினரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகாதா என்று எதிர்க்கேள்வி கேட்டார். அவரது பதிலிலிருந்த நேர்மையை ரசித்தான் வெள்ளை. ஆகவே, எத்தனை காலம் ஆனாலும் காவல் துறை வந்து தன்னைக் கைது செய்வதுவரை தான் பொறுத்திருக்கப் போவதாகவும், தன் ஆயுள் முடிவதற்குள் கண்டிப்பாகக் காவல் துறை தன்னைக் கண்டுபிடித்து கைதுசெய்யும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நடிகர் சீஸ்அர் முத்தாய்ப்பாக முடித்தார்.    

புதன், மே 16, 2018

இரும்புத்திரை

விஷால்
டிஜிட்டல் இந்தியாவுக்கும் சாமானிய இந்தியருக்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளியைப் பற்றிப் பேசும் படம் இரும்புத்திரை.

கடன் வாங்குவதை அறவே வெறுக்கும் கோபக்கார ராணுவ அதிகாரி கதிரவன் (விஷால்). வங்கிக் கடன் வசூலிப்பாளர் ஒருவரது தகாத செயலால் கோபம் கொண்டு அவரை அடித்துவிடுகிறார் அவர். இதற்கான துறைரீதியான நடவடிக்கையால் ஆறுவார காலம் மனநல ஆலோசனை பெறுவதற்காக மனநல ஆலோசகர் ரதி தேவியைச் (சமந்தா) சந்திக்கிறார். கதிரவனின் கோபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் ரதி தேவி அவரை 30 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி இருக்கச் சொல்லி அனுப்புகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வரும் கதிரவன். தங்கையுடனும் தந்தையுடனும் (டெல்லி கணேஷ்) நாட்களைச் செலவிடுகிறார்.

குடும்பம் என்ற ஒன்றை இதுவரை இழந்துவிட்டதை உணரும் கதிரவனுக்குத் தங்கையின் காதல் விவகாரம் தெரியவருகிறது. 10 லட்ச ரூபாய் பணப் பிரச்சினையால் திருமணம் தடைபட்டதை அறிந்த கதிரவன் பணம் புரட்ட முயல்கிறார். ராணுவ அதிகாரியான அவருக்கு அரசு வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. சொந்தக் காரணத்துக்காக வங்கிக் கடன் கிடைக்காத அவரிடம் வியாபாரக் காரணம் சொல்லிப் பணம் பெறலாம் என்று ஒருவர் வழிநடத்துகிறார். ஆறு லட்ச ரூபாய் கடனும் பெற்றுவிடுகிறார். நிலத்தை விற்றுக்கிடைத்த 4 லட்ச ரூபாயும் கடனாகக் கிடைத்த 6 லட்ச ரூபாயும் சேர்ந்து கிடைத்த 10 லட்ச ரூபாய் மொத்தமாக வங்கிக்கணக்கிலிருந்து திருடப்பட்டு விடுகிறது.. பணம் திரும்பக் கிடைத்ததா, தங்கையின் திருமணம் நடைபெற்றதா போன்றவற்றுக்கு விடை காண்கிறது எஞ்சிய படம்.

விஷால், சமந்தா
சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய படத்தை, சிறிது தடுமாறினாலும் தடம் மாறாமலும் விறுவிறுப்புக் குறையாமலும் கொண்டு செல்கிறது. திரைக்கதை. கேஷ்லெஸ் இந்தியா எவ்வளவு கேர்லெஸ்ஸாக இருக்கிறது என்பதை உணர்த்தும் திரைக்கதை இது.. எங்கேயோ இருந்துகொண்டு தமது பணத்தை யாரோ ஒருவர் அபகரித்துவிட முடியும் என்பதை எதிர்கொள்ள முடியாத சாமானிய மனிதர் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் புகுத்தப்பட்ட டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் புத்திசாலித் தனமாகக் குறிப்புணர்த்திவிடுகிறார்.

எளிதில் தேசத் துரோகியாக அடையாளம் காட்டப்பட்டுவிடும் கதிரவன் வேடத்தை ராணுவ அதிகாரியாக்கியது போன்ற பல சாதுர்யமான உத்திகளைக் கையாண்டு அரசு எப்படியெல்லாம் பொருளாதாரரீதியாக சாமானியர்களை வதைக்கிறது என்பதைப் படம் சுவைபடச் சொல்லிச் செல்கிறது.. போகிற போக்கில் பிக் பாஸ், ரஜினி அரசியல், ஆதார் கார்டு தகவல் திருட்டு போன்ற பல விஷயங்களை நையாண்டியுடன் தொட்டுச் செல்லும் படம் என்பதால் சில பல லாஜிக் மீறல்களைச் சகித்துக்கொள்ள முடிகிறது.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன், சமந்தா
வெகுளியான தந்தை வேடத்தை டெல்லி கணேஷ் தனது இயல்பான நடிப்பால் முழுமையாக்கியிருக்கிறார். ரோபோ சங்கருடன் சேர்ந்து திருநெல்வேலி பாஷையுடனான உரையாடலோடு அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் காட்சி கலகலப்பு. தொழில்நுட்பரீதியாக அதலபாதாளத்தில் இருக்கும் சராசரிக் குடிமகனுக்குச் சரியான எடுத்துக்காட்டு அவர்.

சண்டைக் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் விஷால் குடும்ப செண்டிமெண்ட், காதல், வில்லனுடனான சவால் போன்ற காட்சிகளில் சற்றுப் பின்தங்குகிறார். சத்யமூர்த்தி என்ற ஒயிட் டெவில் வேடத்தில் கனகச்சிதமாக ரசிகர்களைக் கவர்கிறார் அர்ஜுன்.  

விஷால், அர்ஜுன்
மனநல ஆலோசகராக வரும் சமந்தாவுக்கு நடிக்கப் பெரிய வாய்ப்பில்லை. என்றாலும் வருகின்ற காட்சிகளில் ரசிகர்களின் மனதைத் தனது தோற்றத்தாலும் கண்ணியமான நடிப்பாலும் கவர்கிறார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் நெல்லையின் அழகும் சென்னையின் ஆர்ப்பாட்டமும் நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காட்சியில் அதிகாலைச் சூரியனையும் குண்டு பல்பையும் ஒரே ஃப்ரேமில் அடக்கியுள்ளது போன்ற சிறு சிறு அம்சங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. விவசாயிக்கு எஃப்பியில் லைக் போடுங்க, ஆனால் லைஃப்ல உதவாதீங்க என்னும் ரீதியிலான சமகால நிகழ்வுகளைப் படம் நெடுகிலும் தெளித்து எழுதப்பட்ட வசனங்களும் எடிட்டிங்கும் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு பேருதவி புரிந்துள்ளன.

டிஜிட்டல் இந்தியாவுக்கான உறுதியான விடை இந்த இரும்புத்திரை.

இது தி இந்து விமர்சனத்துக்காக எழுதியது. 

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்