இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜூலை 07, 2018

பரதனை இனிப் பார்க்க முடியாது!

‘ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்குள் வராத சோகத்தை வாசித்துக்கொண்டுதானிருக்கும்’ என்பார் ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் ஆடியோ கேசட்டின் தொடக்க உரையில் இயக்குநர் பாரதிராஜா. அந்தத் திரைப்படத்தை தென்காசியில் பரதன் தியேட்டரில் பார்த்தேன். அந்த பரதன் இப்போது இடிக்கப்படுகிறது. சில காலம் இயங்காமல் இருந்த பரதன் தன் கடைசி மூச்சையும் இழந்துகொண்டிருக்கிறது.

எண்பதுகளில் அந்த இடைநிலை நகரத்தில் பொழுதுபோக்குவதற்கு இருந்த இடங்கள் திரையரங்குகள் மாத்திரமே. அப்போது பக்தர்களுக்கு காசி விஸ்வநாதர் ஆலயம் என்றால் ரசிகர்களுக்கு ஸ்ரீபாக்யலட்சுமி, பரதன், வாஹினி ஆகிய திரையரங்குகள்தாம் கவலை தீர்க்கும் இடங்கள்.


காலத்தின் மாற்றம் வாஹினியிலிருந்து திரைப்படத்தைப் பிரித்தது. பின்னர் ஸ்ரீபாக்யலட்சுமி பிஎஸ்எஸ் காம்ப்ளெக்ஸ் ஆனது. இப்போது பரதன் மறையப்போகிறது. தற்போது நாற்பது, ஐம்பது, அறுபது சொச்ச வயதுகளில் இருப்பவர்களுக்குத் திரையரங்குகள் அளித்த ஆசுவாசம் புரியும். நினைத்த மாத்திரத்தில் நினைத்த படத்தைக் கையடக்கக் கைபேசியில் பார்க்கும் வசதி அப்போது இல்லை. நடிகை ஒருவரின் மந்தகாசப் புன்னகை இடம்பெறும் ஒரு ஷாட் ரசிகருக்குப் பிடித்திருந்தாலும் அந்த ஷாட்டை மறுபடியும் ஒருமுறை பார்க்க விரும்பினால் திரையரங்குக்குத்தான் செல்ல வேண்டும்.

அதனால்தான் திரையரங்குக்கு அவர்களது வாழ்வில் முக்கிய இடம் இருந்தது. ஒவ்வோர் ஊரிலும் ஏதாவது ஒரு சினிமா பாரடைஸ் ரசிகர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு பாரடைஸ் பரதன் தியேட்டர். இந்தத் திரையரங்கை நீங்கள் ‘தூள்’, ‘கில்லி’ போன்ற படங்களில் பார்த்திருக்கலாம். இந்த வரிகளை எழுதுபவனைப் போல் நீங்களும் அந்த தியேட்டரின் கதகதப்பை உணர்ந்திருக்கலாம்.


அது எண்பதுகளின் தொடக்க காலம். டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தை இந்தத் திரையரங்கில்தான் நண்பர்களுடன் பார்த்தேன். காலைக்காட்சி டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் குதிரையில் எம்.கே.தியாகராஜபாகவதர் வருகிறார். ஏதேனும் டிரெயிலரோ என்று நினைத்து சில காட்சிகளைக் கடந்த பிறகு தான் காலைக் காட்சி மட்டும் ‘ஹரிதாஸ்’ படம் என்பது தெரியவந்தது.

என்ன செய்வது? ‘ஹரிதா’ஸைப் பார்த்துவிட்டு அடுத்த காட்சி ‘உஷா’வையும் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம். பக்கத்து வீட்டு அக்காவுடன் ‘நவக்கிரக நாயகி’ பார்த்ததும் இந்தத் திரையரங்கில்தான். அந்த அக்கா இப்போது இல்லை, நினைவில் தங்கிவிட்டார்.

அப்படியே தூள் தூளாகச் சிதறிக்கொண்டிருக்கும் பரதனும் நினைவுகளில் படிந்துவிடும். அதன் ஒரு துகள் சொல்லும் நூறு கதைகள். பரதனில் டிக்கெட் கவுண்டரில் இரும்புக் கிராதிகளைத் திறக்கும்போது, சொர்க்கத்தின் வாசல் திறந்தது போல் இருக்கும். கவுண்டரில் கையை நீட்டி டிக்கெட்டைப் பெறும்போது கிடைக்கும் பேரின்பத்துக்கு ஈடேது. இடைவேளைகளில் திறந்தவெளி மூத்திரைப் பிறை அருகில் இருந்த கேண்டீனில் குற்றால அருவியில் பிடித்தது போன்ற டீயையும் ஓமப்பொடி முறுக்கையும் சுவைத்த நாட்கள் நினைவுகளில் சுழன்றுகொண்டே இருக்கும். அது ஒரு சுகமான சூறாவளி. பாரதிராஜாவும் ரஜினியும் இணைந்து அளித்த ‘கொடி பறக்குது’ தீபாவளி அன்று வெளியாக இருந்தது. அந்தத் தீபாவளி தியேட்டரில்தான் விடிந்தது. பல தீபாவளிகள் பரதனிலும் பாக்யலட்சுமியிலும்தான் தொடங்கியிருக்கின்றன. ‘கொடி பறக்குது’ பெட்டி தீபாவளிக்கு வரவில்லை. மறுநாள்தான் வந்தது. ஆனாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் பரதனுக்கு வந்து ‘கொடி பறக்குது’ பார்த்தேன்.



தளபதி வெளியானபோது முதன்முதலாக டிக்கெட்டை வழக்கத்துக்கு மாறாக, சற்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. அதிக விலை என்றால் அதிக விலை அல்ல ரூ. 20தான். ஆனால், அதுவரை தென்காசியில் எந்தத் திரையரங்கிலும் ரிலீஸுக்கென்று விலையைக் கூட்டி விற்றதில்லை. கோவில்பட்டி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் அது அப்போது சாதாரணம்.

பாக்யலட்சுமியில் ரஜினியின் ‘மாவீரன்’ வெளியானபோது, பரதனில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ வெளியானது. ‘மாவீரன்’ தென்காசியில் முதல் ரிலீஸ் ஆனால், ‘அம்மன் கோவில் கிழக்காலே’ செகண்ட் ரிலீஸ்தான். ஆனால் அதுதான் ‘மாவீர’னைவிட அதிக நாட்கள் ஓடியது. ‘மாவீர’னில் அக்கா அம்பிகா ரஜினியைச் சாட்டையால் அடிப்பார். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் தங்கை ராதா விஜய் காந்தை சாட்டையால் அடிப்பார். இந்தத் தகவல்கள் ஏன் என் மன வெளியில் தங்கின?

கடைசியாக அங்கே ‘சுப்ரமணியபுரம்’ படம் பார்த்தேன். அதன் பின்னர் அந்தத் திரையரங்குக்குச் செல்லவே இல்லை. அந்த வழியே செல்லும்போது கடந்துபோகும் காதலியைப் பார்ப்பது போல் ஏக்கப் பார்வை வழியவிட்டபடியே செல்வேன். காலத்தின் புழுதி படிந்ததால் சோபை இழந்த சித்திரங்களில் ஒன்றாக பரதன் தியேட்டர் ஆகிவிட்டது சோகம்தான். நாளை பரதன் இருந்த இடத்தில் ஒரு புதிய காம்ப்ளெக்ஸ் கண் சிமிட்டக்கூடும். இந்தச் சோகமும் தொலைந்துபோய்விடலாம்.

2018 ஜூன் 30 அன்று சொந்த வீடு இணைப்பிதழில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக