இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, நவம்பர் 15, 2015

வெற்றி பெறுவாரா ஏஞ்சலினா ஜோலி?


பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தன் கணவர் ப்ராட் பிட்டுடன் இணைந்து நடித்திருக்கும் சமீபத்திய படம் ‘பை த ஸீ’. 2005-ல் வெளியான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித்’ படத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம் இது. ஏஞ்சலினா ஜோலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மூன்றாம் படம் இது.

படத்தின் திரைக்கதையையும் எழுதி ப்ராடுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கவும் செய்கிறார் ஏஞ்சலினா ஜோலி. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டின் திரைப்பட விழாவில் இந்தப் படம் முதலில் திரையிடப்பட்டது. விமர்சகர்களின் வரவேற்பு இந்தப் படத்துக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நவம்பர் 13 அன்றும், இங்கிலாந்தில் டிசம்பர் 11 அன்றும் வெளியாகவிருக்கிறது.

பிரான்ஸில் 1970-களின் மத்தியில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏஞ்சலினா ஜோலி எழுதியிருப்பதாகவும் தம்பதியருக்கிடையே ஏற்படும் உறவுச் சிக்கல் பற்றி இந்தத் திரைக்கதை அலசுவதாகவும் சொல்கிறார்கள். பிரிந்துவிடுவதென்று முடிவெடுத்தபின், தம் மண வாழ்வைக் காப்பாற்றும் இறுதி முயற்சியாக பிரான்ஸ் நாட்டின் ஒரு கடற்கரையோர நகரத்துக்குச் சுற்றுலா செல்லும் தம்பதியர், அங்கே எதிர்கொள்ளும் சம்பவங்களே திரைக்கதையாகியுள்ளன. ‘த ஒயிட் ரிப்பன்’ படத்தில் தான் மேற்கொண்ட சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்ற, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் கிறிஸ்டியன் பெர்கர் இப்படத்தைப் படம் பிடித்திருக்கிறார். படம் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில் இயற்கையான ஒளியையே கையாண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர் 10 அன்று நிறைவடைந்திருக்கிறது. ரோலண்ட் என்னும் அமெரிக்க எழுத்தாளர் கதாபாத்திரத்தில் கணவனாக ப்ராட் பிட்டும், வனெஸ்ஸா என்னும் நடன மங்கை கதாபாத்திரத்தில் மனைவியாக ஏஞ்சலினா ஜோலியும் நடித்திருக்கிறார்கள். இப்படம் தொடர்பாக இதுவரை வெளியான விமர்சனங்களைப் பொறுத்தவரை படத்துக்கு ஆதரவாக அவை அமையவில்லை. படத்தின் நீளம் மிகவும் அதிகம் எனவும், படம் பார்க்கும் ரசிகர்களைச் சோர்வையடையச் செய்யும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன எனவும் விமர்சகர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஹாலிவுட்டின் பிரபலமான தம்பதி பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்து நடித்திருப்பதைக் காண விரும்பும் ரசிகர்கள் ஒருவேளை திரையரங்கில் குவியலாம். ஆஸ்கர் விருது பெற்ற ஏஞ்சலினா ஜோலி என்னும் நடிகையின் ரசிகர்கள் படத்துக்குக் கைகொடுக்கலாம்.

ஞாயிறு, நவம்பர் 08, 2015

விஞ்ஞானிகள் உருவாக்கும் பேய்!


ஹாரி பாட்டர் படத்தில் பிரதான வேடமேற்ற டேனியல் ரேட்க்ளிப் இப்போது இளைஞனாகிவிட்டார். அவர் நடித்த ‘விக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம் நவம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவியான மேரி ஷெல்லி என்னும் ஆங்கில எழுத்தாளர் 1818-ம் ஆண்டில் எழுதிய ஃப்ராங்கென்ஸ்டைன் என்ற கிளாஸிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் திரைக்கதையை எழுதிய மேக்ஸ் லேண்டிஸ், மேரி ஷெல்லி எழுதிய பேய்க்கதையை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையை எழுதினாலும் சம காலத்துக்கு ஏற்ப அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். ‘அமெரிக்கன் அல்ட்ரா’, ‘க்ரோனிக்கிள்’ போன்ற படங்களுக்கு இவர் எழுதியிருந்த திரைக்கதை ஹாலிவுட் ரசிகர்களால் ஆர்வத்துடன் ரசிக்கப்பட்டது.

விஞ்ஞானியான டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைனுடைய உதவியாளர் இகோரின் பார்வையில் இந்தப் படம் சொல்லப்படுகிறது. வழக்கமான பாதையில் செல்லாமல் புதிய பாதையில் இந்தப் படம் பயணப்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணம். இகோரின் வேடமேற்றிருக்கிறார் டேனியல் ரேட்க்ளிப். டாக்டர் வேடமேற்றிருப்பவர் நடிகர் ஜேம்ஸ் மேக்வோய். டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன் என்று நாம் அறியும் பிரபல மனிதர் பிரபலமடைந்த பாதையில் அவருடன் பயணப்பட்ட அவருடைய உதவியாளர் இகோருக்கும் டாக்டருக்கும் இடையே நிலவிய நட்பு சார்ந்த பல சம்பவங்கள் இந்தக் கதையை நகர்த்திச் செல்கின்றன. ஃப்ராங்கென்ஸ்டைனின் பேய்க்கதையைப் படமாக்குபவர்கள் ஃப்ராங்கென்ஸ்டைனுக்கும் அவர் உருவாக்கும் பேயுருவுக்கும் இடையேயான உறவை அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பேயுரு படத்தின் பாதியிலேயே திரைக்கு வந்துவிடும். ஆனால் இப்போது வெளிவர உள்ள இந்த ஃப்ராங்கென்ஸ்டைன் படத்தின் இறுதியில்தான் அது கதைக்குள் நுழைகிறது. இதை உறுதிப்படுத்துவது போல் டேனியல் ரேட்க்ளிப் ஒரு நேர்காணலில், மேரி ஷெல்லியின் நாவலைப் படித்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்பது கேள்விக்குறிதான் எனத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டைனின் பேயுரு கிட்டத்தட்ட படத்தின் இறுதியில்தான் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால் ரசிகர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைவிட அதிகமாக ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்பதால் படத்தின் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது என்றும் கூறியிருக்கிறார். மொத்தத்தில் பல வேடிக்கை சம்பவங்களும் சாகச நிகழ்ச்சிகளும் நிறைந்த இந்தச் சுவாரஸ்யமான பேய்க்கதையை ஹாலிவுட்டுக்கே உரிய பிரமாண்டத்துடன் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பால் மெக்குயிகன்.

ஞாயிறு, நவம்பர் 01, 2015

அமெரிக்கா எதிர்பார்க்கும் படம்!


பிரபல அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தாமஸ் மெக்கர்த்தி இயக்கத்தில் வரும் நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது ‘ஸ்பாட்லைட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம். இயக்குநர் மெக்கர்த்தி தனது ‘அப்’ திரைப்படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் வெளிவரும் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினர் மேற்கொண்ட விசாரணையைப் பற்றிய படம் இது. 2002-ம் ஆண்டு மாஸாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற பாலியல் முறைகேடுகளைத் துப்புத் துலக்கி விளக்கமான அறிக்கைகளைத் தொடர்ந்து பிரசுரித்துவந்தது ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை. இதற்காக 2003-ம் ஆண்டு அந்தப் பத்திரிகைக்கு புலிட்ஸர் விருதும் கிடைத்தது. இந்தச் சம்பவங்களை உள்ளடக்கியதே இந்த ஸ்பாட்லைட் திரைப்படம்.

கத்தோலிக்க ஆலயத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் சுரண்டலுக்காக ஐந்து கத்தோலிக்கப் பாதிரியார்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விவகாரத்தில் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை துணிச்சலுடன் செயல்பட்டுத் திரைமறைவு ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுப் பாதிரியார்கள் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான ‘த பாஸ்டன் க்ளோப் ’ அறிக்கைகள் படு சூடாக அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டன. இந்தச் சூடான சம்பவங்களை அப்படியே ருசிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் தாமஸ் மெக்கார்த்தி. இதைத் திரைக்கதையாக்கியதில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜோஷ் சிங்கர்.

கால ஓட்டத்தில் இந்தப் பாலியல் முறைகேடுகள் தொடர்பான முணுமுணுப்புகள் சிறிது சிறிதாகச் சமூகத்தினரிடையே ஒலித்து மறைந்துவிட்டது. மக்களும் ஊடகங்களும் இந்த அவமானகரமான கதையை மறந்துவிட்டுத் தத்தம் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சட்ட அமைப்பும் காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்தை விட்டு விலகி நெடுதூரம் வந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த உண்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது பாஸ்டன் க்ளோப் பத்திரிகை. உண்மையை வெளி உலகுக்குத் தெரியப் படுத்த துணிச்சலுடன் செயலாற்றியது.

இதுதான் இப்போது திரைப்படமாகியிருக்கிறது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் பாலியல் முறைகேடுகளை அறியாத தலைமுறையினருக்கு இந்தப் படம் அந்த மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தும். இந்தப் பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினராக மார்க் ரூஃபலோ, மைக்கேல் கீட்டன், ரேச்சல் மெக்காதம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான திரைக்தையை மெக்கார்த்தியும் ஜோஷ் சிங்கரும் கடந்த 2013-ம் வருடத்திலேயே முடித்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2014 செப்டம்பர் 24 அன்று பாஸ்டனில் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. கடந்துபோன வரலாற்றின் கறை படிந்த தருணங்கள் மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும்போது அது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துமோ என்ற ஆவலுடன் அமெரிக்கா இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது

காதலில் கசிந்துருகிய ஆன்மாவின் கதை

தமிழ்த் திரையுலகில் தனது நடிப்புத் திறனால் நீங்காத இடம்பிடித்த நடிகை சாவித்திரி. திரையுலக வாழ்வில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற இவரது தனிப்பட்ட வாழ்க்கை சொல்லொணாத் துயரங்களைக் கொண்டது. சாவித்திரியின் இறுதிக்கால வாழ்க்கையின் சம்பவங்களைக் கேட்கும் யாரின் கண்களிலும் கண்ணீர் ததும்பாமல் இருக்காது. அப்படியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக் கொண்டுவருவதற்கே தனி தைரியம் தேவை. ஏனெனில் அசாத்தியத் துணிச்சல் இருந்தால் மட்டுமே அவருடைய வாழ்வின் சம்பவங்களை ஒரு நூலாகத் தொகுக்க முடியும். அந்தத் துணிச்சல் கைவரப்பெற்ற நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

இந்த நூல் நேர்கோட்டு வடிவில் சாவித்திரியின் வாழ்வைச் சொல்லவில்லை. மாறாக அவருடைய வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளை அரிய தருணங்களை விவரிப்பதன் மூலம் படிப்பவருக்கு சாவித்திரியின் வரலாறு சொல்லப்படுகிறது. சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் இடையே மலர்ந்த காதல் விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. ஜெமினியால் அவரடைந்த மனத் துயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நடிகையாக அறிமுகமான சாவித்திரி தயாரிப்பாளராக மாறியதால் அடைந்த துயரங்களுக்கும் அளவில்லை. அந்தத் துயரக் கதையும் இந்நூலின் பக்கங்களை நிறைத்துள்ளது. சாவித்திரியின் ஜனனம் தொடங்கி மரணம் வரையான பல முக்கிய தருணங்களையும் நிகழ்வுகளையும் கொண்டுள்ள இந்த நூலில் சாவித்திரியின் வாழ்வு தொடர்பான பல அரிய ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அவர் பங்களித்த திரைப்படங்களில் பட்டியல் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாவித்திரியின் வாழ்வை அறிந்துகொள்ள விரும்பும் வாசகரை இந்நூல் கவர்ந்துவிடும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கனிவான பாடல்கள் தந்த கவியரசு

தமிழ்க் கவிஞர்களில், பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்குக் கிடைத்திருக்கும் இடமும் புகழும் அளப்பரியது. தனது வாழ்வில் கடந்துவந்த சம்பவங்களைப் பாடல்களாகச் சமைத்து அவற்றுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தவர் கண்ணதாசன். இன்றும் காற்றில் தவழ்ந்து வரும் ஏதாவது ஒரு கண்ணதாசனின் பாடலைக் கேட்கும்போது அது தொடர்பான ஒருசில செய்திகளை நம் மனம் அசைபோடும். அப்படியான கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை, பாடல்களை ரசித்த கவிபாஸ்கர் அவற்றை ஆய்வு செய்து கட்டுரைகளாக்கியிருக்கிறார். கண்ணதாசனின் கவிதைகளில் காணப்படும் கவிநயம், அழகியல் போன்றவற்றை விவரிக்கும் அதே நேரத்தில் திரைப்படப் பாடல்களில் தென்படும் நயத்தையும் அழகையும் சுட்டிக்காட்ட கவிபாஸ்கர் தவறவில்லை.

கண்ணதாசன் பாடல்களைப் புனைந்த சம்பவங்களைப் பற்றிய பல கதைகள் காற்றில் தவழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எது புனைவு எது நிஜம் என்பதைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. இதை கவிபாஸ்கரும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரும் சில பாடல்களின் பின்னணியாகச் சொல்லப்பட்டும் சில சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இலக்கிய ரசனையும் கவிமனமும் கொண்ட கவிபாஸ்கரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த நூல் கண்ணதாசனின் ரசிகர்களுக்குப் பிடிக்கக்கூடியது; அவர்கள் விரும்பிப் படிக்கக்கூடியது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, அக்டோபர் 18, 2015

த பீனட்ஸ் மூவி

குழந்தைகளை உற்சாகப்படுத்திய ஹாலிவுட் படம் ஐஸ் ஏஜ். இந்த வரிசையில் நான்கு படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஐந்தாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது. ஐஸ் ஏஜின் நான்காம் பாகமான ஐஸ் ஏஜ்: காண்டினெண்டல் டிரிஃப்டை மைக் துர்மியருடன் இணைந்து இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவிவ் மார்டினோ. மிகப் பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் அடுத்து ஒரு அசத்தலான அனிமேஷன் படம் வெளியாக உள்ளது. 3டியில் வெளியாகும் த பீனட்ஸ் மூவி என்னும் படம் தரப் போகும் அனுபவத்தை எதிர்கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது அதன் டிரெயிலருக்குக் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பைப் பார்த்தாலே தெரிகிறது.

ப்ளு ஸ்கை ஸ்டுடியோஸ் நூறு மில்லியன் டாலர் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. சார்லஸ் எம் சல்ஸ் எழுதிய காமிக்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் இது. காமிக்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கும் ஐந்தாம் படம் இது என்கிறார்கள். 35 ஆண்டுகளில் முழுவதும் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம் இது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க காமிக்ஸ் ஸ்ட்ரிப்களில் பீனட்ஸ் மகத்தான வரவேற்பைப் பெற்றது. காமிக்ஸ் ஸ்ட்ரிப் என்பது நாளிதழ்களில் சில தொடர்ச்சியான சித்திரங்களில் வெளியாகும் படக் கதை. இதன் பிரதான கதாபாத்திரம் சார்லி ப்ரௌன். எத்தனை முறை தோல்விபெற்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் ஏதாவது புது முயற்சிகளில் ஈடுபடும் கதாபாத்திரம் சார்லி ப்ரௌன். குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாஸிட்டிவான எண்ணங்களை விதைக்கிறது சார்லி ப்ரௌன்.

சார்லி ப்ரௌன் தவிர அநேக சுவாரசியமான கதாபாத்திரங்களைக் கொண்ட இந்த பீனட்ஸ் படக்கதை இது வரை 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கானோர் இதைப் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது. இப்போது இந்தப் படக்கதை முழுநீளப் படமாகியிருக்கிறது. ஏற்கெனவே அநேக கதாபாத்திரங்கள் இருப்பதால் திரைப்படத்துக்கென புதிதாக எதுவும் கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை. இதுவரை நாளிதழ்களில் வாசகர்களை ஈர்த்திருந்த சார்லி ப்ரௌன் கதாபாத்திரம் நவம்பர் மாதம் திரைகளில் புரியும் வேடிக்கை விளையாட்டுகளைப் பார்த்து வயிறுவலிக்க சிரிக்கப்போகிறார்கள் ரசிகர்கள். காமிக்ஸ் ஸ்ட்ரிப்பின் 65 ம் ஆண்டைக் குறிக்கும், கொண்டாடும் வகையில் இந்தப் படம் நவம்பர் ஆறாம் தேதி திரைக்கு வருகிறது.

அக்டோபர் 16 தி இந்து நாளிதழில் வெளியானது

திங்கள், அக்டோபர் 05, 2015

கல்லுக்குள் ஈரம்

அவனும் அவளும் இடையில் இவனும்



அது ஒரு அழகிய கிராமம். தன் கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் அதன் சுபாவத்தைக் கிழித்து, புழுதி பரப்பி வாகனங்கள் விரைந்துவருகின்றன. கிராமத்தினர் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். அந்தக் கிராமத்துக்கு தனது புதுப்படத்தைப் படமாக்க பரிவாரங்களுடன் வருகிறார் இயக்குநர் பாரதிராஜா. இப்படித் தான் தொடங்குகிறது நிவாஸின் இயக்கத்தில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் படம். 

முழுக்க முழுக்க காதல் கதை என்றே சொல்லிவிடலாம். படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் காதியும் சோலையும். காதி அவ்வூரின் கூத்து வாத்தியாரின் மகள். சோலை சலவைத் தொழிலாளியின் மகள். இருவருக்குமே அம்மா இல்லை. நிவாஸின் படத்தில் பாரதிராஜா நாயகன் என்றால் பாரதிராஜாவின் படத்தில் நாயகன் சுதாகர். தன் காதலியைப் பிரிந்த நினைவுகளில் வாடும் பாரதிராஜா அந்தக் கதையை ஒட்டியே தனது படத்தையும் எடுக்கிறார். காதலியைப் பிரிந்த பின்னர் பாரதிராஜா வைராக்கியத்துடன் இயக்குநர் ஆகிவிடுகிறார். ஆனால் அவரது படத்திலோ நாயகனுக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. 


படத்தில் பல காதல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சோலை பாரதிராஜாவைக் காதலிக்கிறாள். காதி சுதாகரைக் காதலிக்கிறாள். அவ்வூரின் பள்ளிக்கூட வாத்தியார் காதியைக் காதலிக்கிறார். சோலையின் முறைமாமன் கறுப்பு அவள் மீது உயிராக இருக்கிறான், பித்துப் பிடித்து அலையும் சந்திரசேகருக்கும் சோலை மீது பிரியம். அவளது உடைந்த வளையலை எடுத்துப் பத்திரப்படுத்துகிறான். 

சோலை பாரதிராஜாமீது கொள்ளும் பிரியத்தை வெளிப்படுத்தும் காட்சி ஒவ்வொன்றும் புதிது புதிதான மலர்கள். பாரதிராஜா கோபக்காரர் என்ற பிம்பம் தான் அவளுக்கு. படத்தின் படமாக்கத்தின்போது அவள் காட்சியில் கவனிக்காமல் நுழைந்ததால் சோலையைப் பாரதிராஜா திட்டிவிடுகிறார்.  இப்படித்தான் அவளுக்கு பாரதிராஜா அறிமுகமாகிறார். மெல்ல மெல்ல ஒரு செடி வளர்வது போல் அவளுக்குள் பிரியம் கிளைவிடுகிறது. தான் அறியாமலேயே அதற்கு நீர் வார்க்கிறார் பாரதிராஜா. 


கிராமச் சூழலுக்குப் பொருத்தமான இசையை வாரி வழங்குகிறார் இளையராஜா. சில காட்சிகளில் பூவாய் வருடுகிறது சில காட்சிகளில் முள்ளாய் நெருடுகிறது. எந்தக் காட்சிக்கு என்ன தேவையோ அதை வழங்கும் இசை கல்லுக்குள் பசுமையை போர்த்திவிடுகிறது. சிறு பொன்மணி பாடல் படத்தில் பல கதாபார்த்திரங்களுக்கு பின்னணியாக ஒலிக்கிறது. படத்தின் அந்தராத்மாவின் உருக்கம் இந்தப் பாடலில் கலந்துகிடக்கும். பிரியங்களின் கிளையில் மலர்ந்து நிற்கும் மலர்களை இலக்கே இல்லாமல் பிடுங்கி எரிகின்றன சில பொல்லாத கரங்கள். ஏன் எதற்கு என்று எந்தக் காரணத்தையும் சொல்ல இயலாது என்பதைப் படம் சொல்கிறது. 

இது ஒரு யதார்த்தமான படம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் கிராம வாழ்க்கையின் பல யதார்த்தமான நிகழ்வுகள் படத்தில் பதிவாகியுள்ளன. ஆண் மீதான ஒரு பெண்ணின் பிரியத்தை இழை இழையாகப் பிரித்தெடுத்து மிருதேறிய ரசனையில் தோய்த்து காட்சிகளாக்கியிருக்கிறார் நிவாஸ். அநேகமாக அது பாரதிராஜாதான். ஏனெனில் படத்தின் டைரக்‌ஷன் மேற்பார்வை பாரதிராஜாவே. 


பாரதிராஜாவுக்கு மீனாட்சி பாட்டி வழியே கடலை தருவது, மலையடிவாரத்தில் இரவு முழுவதும் தனது தாவணியை அவருக்குப் போர்த்திவிட்டு குளிரில் நடுங்கியபடியே சோலை இரவைக் கழிப்பது, பாரதிராஜா தன் பெயரைக்  கேட்கும்போது அப்படியே உயிரே வழிந்து தன் மேல் விழுவது போன்று சோலை இளகுவது எனக் காதல் காட்சிகள் அனைத்தும்  பரப்பும் வாசம் நாசியை விட்டு எளிதில் அகலாதது.    

படத்தின் எந்தக் காதலும் கைகூடுவதில்லை. காதல் நிறைவேறா சோகத்தில் காதி தன்னை மாய்த்துக்கொள்கிறாள். இறுதியிலே சோலையும் பாரதிராஜாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து சந்தோஷத்தில் சஞ்சரிக்கும் வேளையில் பித்துப் பிடித்த சந்திரசேகர் பாரதிராஜாவைக் குத்திக் கொன்றுவிடுகிறார். இப்படித்தான் ஏதோ ஒரு மனநிலைபிறழ்வுக்கு ஆளானவனால் எல்லாக் காதல்களும் பிய்த்து எறியப்படுகின்றன. 


பாரதிராஜா - பாரதிராஜா
சுதாகர் - சுதாகர்
சோலை - அருணா
காதி - விஜயசாந்தி
கறுப்பு - ராமநாதன்
பள்ளிக்கூட வாத்தியார் - ஜனகராஜ்
சோலையின் தந்தை - கவுண்டமணி

2015 அக்டோபர் 4 அன்று இரவில் படத்தைப் பார்த்தால் இதை எழுத நேர்ந்தது. 

ஞாயிறு, அக்டோபர் 04, 2015

செவ்வாய் கிரகத்தில் மனித வில்லன்

ஹாலிவுட் பட ரசிகர்களால் கிளாடியேட்டர் படத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்தப் படத்தை இயக்கியவர் ரிட்லே ஸ்காட். இவரது இயக்கத்தில் த மார்ஷியன் என்ற அறிவியல் புனைவுத் திரைப்படம் இன்று வெளி யாகிறது. த மார்ஷியன் என்னும் பெயரில் ஆண்ட்டி வெய்ர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திரைக்கதையை ட்ரூ கோடார்ட் எழுதியிருக்கிறார். 

செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காகச் செல்கிறது ஒரு குழு. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் விண்வெளி வீரர் மார்க் வாட்னி. செவ்வாயில் இந்தக் குழு சென்று இறங்கிய பின்னர் கடும் பனிப் புயல் ஒன்று செவ்வாய் கிரகத்தைத் தாக்குகிறது. இந்தப் பனிப் புயலில் மாட்டிக்கொண்ட மார்க் வாட்னி அதனால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டுவிட்டார். அவர் இறந்துவிட்டாரென எண்ணிய குழுவினர் அவரைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் மார்க் வாட்னி மரிக்கவில்லை. உயிருடன் இருக்கிறார். தனித்துவிடப்பட்ட நிலையில் மீண்டும் பூமியைத் தொடர்புகொள்ள முயல்கிறார். அவர் உயிருடன் இருப்பதை அறிந்து நாஸா அவரைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் அந்த முயற்சியைக் குழுவினரில் சிலரே தடுக்கின்றனர். தங்கள் குழுவின் ஒருவரைக் காப்பாற்றவிடாமல் ஏன் அவர்கள் செயல்படுகிறார்கள்? தடைகளை மீறி நாஸா மார்க் வாட்னியைக் காப்பாற்றியதா என்பதையெல்லாம் சுவாரசியமான காட்சிகளாகக் கொண்ட முப்பரிமாணத் திரைப்படம் ‘த மார்ஷியன்’.

இந்தப் படத்தை இயக்கியிருக் கும் ரிட்லே ஸ்காட் கிளாடியேட்டர், அமெரிக்கன் கேங்க்ஸ்டர், ராபின்ஹுட் உள்ளிட்ட பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர். படத்தில் மார்க் வாட்னி வேடமேற்றிருக்கும் ஹாலிவுட் நடிகரான மேட் டாமன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய சேவிங் பிரைவேட் ரையான், த மெஜஸ்டிக், த டிபார்ட்டட், கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். இன்டர்ஸ்டெல்லர் படத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட நடிகை ஜெஸிகா சேஸ்டைன் படத்தின் நாயகியாக வேடமேற்றிருக்கிறார். இந்தப் படம் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டிருக்கிறது. பரவலாகப் படத்துக்கு ஆதரவான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. ஆகவே திரையில் படத்தைப் பார்க்கும் ரசிகர்களை இந்தப் படம் உற்சாகப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

அக்டோபர் 2 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்