தமிழ்த் திரையுலகில் தனது நடிப்புத் திறனால் நீங்காத இடம்பிடித்த நடிகை சாவித்திரி. திரையுலக வாழ்வில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற இவரது தனிப்பட்ட வாழ்க்கை சொல்லொணாத் துயரங்களைக் கொண்டது. சாவித்திரியின் இறுதிக்கால வாழ்க்கையின் சம்பவங்களைக் கேட்கும் யாரின் கண்களிலும் கண்ணீர் ததும்பாமல் இருக்காது. அப்படியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக் கொண்டுவருவதற்கே தனி தைரியம் தேவை. ஏனெனில் அசாத்தியத் துணிச்சல் இருந்தால் மட்டுமே அவருடைய வாழ்வின் சம்பவங்களை ஒரு நூலாகத் தொகுக்க முடியும். அந்தத் துணிச்சல் கைவரப்பெற்ற நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா இந்த நூலை உருவாக்கியுள்ளார்.
இந்த நூல் நேர்கோட்டு வடிவில் சாவித்திரியின் வாழ்வைச் சொல்லவில்லை. மாறாக அவருடைய வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளை அரிய தருணங்களை விவரிப்பதன் மூலம் படிப்பவருக்கு சாவித்திரியின் வரலாறு சொல்லப்படுகிறது. சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் இடையே மலர்ந்த காதல் விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. ஜெமினியால் அவரடைந்த மனத் துயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நடிகையாக அறிமுகமான சாவித்திரி தயாரிப்பாளராக மாறியதால் அடைந்த துயரங்களுக்கும் அளவில்லை. அந்தத் துயரக் கதையும் இந்நூலின் பக்கங்களை நிறைத்துள்ளது. சாவித்திரியின் ஜனனம் தொடங்கி மரணம் வரையான பல முக்கிய தருணங்களையும் நிகழ்வுகளையும் கொண்டுள்ள இந்த நூலில் சாவித்திரியின் வாழ்வு தொடர்பான பல அரிய ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அவர் பங்களித்த திரைப்படங்களில் பட்டியல் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாவித்திரியின் வாழ்வை அறிந்துகொள்ள விரும்பும் வாசகரை இந்நூல் கவர்ந்துவிடும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
கனிவான பாடல்கள் தந்த கவியரசு
தமிழ்க் கவிஞர்களில், பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்குக் கிடைத்திருக்கும் இடமும் புகழும் அளப்பரியது. தனது வாழ்வில் கடந்துவந்த சம்பவங்களைப் பாடல்களாகச் சமைத்து அவற்றுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தவர் கண்ணதாசன். இன்றும் காற்றில் தவழ்ந்து வரும் ஏதாவது ஒரு கண்ணதாசனின் பாடலைக் கேட்கும்போது அது தொடர்பான ஒருசில செய்திகளை நம் மனம் அசைபோடும். அப்படியான கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை, பாடல்களை ரசித்த கவிபாஸ்கர் அவற்றை ஆய்வு செய்து கட்டுரைகளாக்கியிருக்கிறார். கண்ணதாசனின் கவிதைகளில் காணப்படும் கவிநயம், அழகியல் போன்றவற்றை விவரிக்கும் அதே நேரத்தில் திரைப்படப் பாடல்களில் தென்படும் நயத்தையும் அழகையும் சுட்டிக்காட்ட கவிபாஸ்கர் தவறவில்லை.
கண்ணதாசன் பாடல்களைப் புனைந்த சம்பவங்களைப் பற்றிய பல கதைகள் காற்றில் தவழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எது புனைவு எது நிஜம் என்பதைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. இதை கவிபாஸ்கரும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரும் சில பாடல்களின் பின்னணியாகச் சொல்லப்பட்டும் சில சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இலக்கிய ரசனையும் கவிமனமும் கொண்ட கவிபாஸ்கரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த நூல் கண்ணதாசனின் ரசிகர்களுக்குப் பிடிக்கக்கூடியது; அவர்கள் விரும்பிப் படிக்கக்கூடியது.
அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக