இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மார்ச் 22, 2021

தென்காசி தொகுதி அன்று முதல் இன்றுவரை

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பரம்பரையில் வந்திருந்தபோதும், சொந்த ஊர் குறித்த பெருமிதம் இல்லாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது சந்தேகமே. நான் 1990இல் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னடா, முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லாமல் இருக்கிறதே என நினைக்காதீர்கள். சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. சொல்லவில்லை என்றால் மறந்துபோய்விடும் என்பதால் சொல்லிவிடுகிறேன். அப்போது கீழக்கரையில் இருந்த ஒரு வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். அந்த வங்கி அலுவலர் என் பெயரைக் கேட்டார். என் பெயரைக் கூறினேன். எந்த ஊர் தென்காசியா என்று அடுத்த கேள்வியைப் போட்டார். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. எப்படிக் கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்டேன். இல்ல அந்த ஊருலதான் இப்படிப் பெயர் வைப்பார்கள் என்று பட்டென்று சொன்னார்

அப்படிப் பலரிடமும் பெயர் பெற்றிருந்த தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பற்றிய ஒரு புள்ளிவிவரக் குறிப்புகளை எழுதவிருக்கிறேன். அதனால், தான் ஊரின் பெருமையுடன் தொடங்கினேன். விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் தேர்தல் 1951இல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் மூன்று வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் 72.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 59,153. தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை 2,783 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் 44.53 சதவீத வாக்குகளைப் பெற்றார்; பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 26,340. சுயேச்சையாகப் போட்டியிட்ட சேவுக பாண்டிய தேவர் 23,557 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறார்

அடுத்த தேர்தல் 1957இல் நடைபெற்றது. திமுக முதன்முறையாகக் களம் கண்ட தேர்தல் இது. இந்த முறையும் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டிருக்கிறார்கள். 71.72 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். பதிவான மொத்த வாக்குகள் 58,887. காங்கிரஸ் கட்சியிடமிருந்து தொகுதியை சுயேச்சை வேட்பாளரான சட்டநாதக் கரையாளர் கைப்பற்றியுள்ளார். அவர் 31,145 வாக்குகளைப் பெற்றுள்ளார். 52.89 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர் தன்னை அடுத்து வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளையைவிட 5,646 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  25,499 வாக்குகளைப் பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 43.3.


1962இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் ஆறு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். மொத்தம் 75.31 சதவீத வாக்குகளான 69,171 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில், 2,198 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருக்கின்றன; பத்து வாக்குகள் தொலைந்துவிட்டன. எஞ்சிய வாக்குகளில் 29,684 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த .ஆர்.சுப்பையா முதலியார். அவர் பதிவான வாக்குகளில் 44.33 சதவீதத்தைப் பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்றிருந்தவர்  முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ரெபாய் சாஹிப். இவருக்கு 16,822 வாக்குகள் கிடைத்திருந்தன. இது பதிவான வாக்குகளில் 25.21 சதவீதம். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 12,802.

காங்கிரஸிடமிருந்து ஆட்சியைத் திமுக கைப்பற்றிய 1967இல் நடைபெற்றது அடுத்த தேர்தல். ஆட்சியைத் திமுக கைப்பற்றியிருந்தபோதும் தென்காசி தொகுதி காங்கிரஸ் வசமே தொடர்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ..சி.பிள்ளை, 34,561 வாக்குகளைப் பெற்று வென்றார். அவர் தனக்கு அடுத்த இடத்திலிருந்த திமுக வேட்பாளர் சம்சுதீனைவிட வெறும் 743 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றிருந்தார்; அவர் பெற்ற வாக்கு சதவீதம் 49.86. திமுக வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகள் 33,818; இது பதிவான வாக்குகளில் 48.79 சதவீதம். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 71,190 அதில் செல்லாதவை 1,872. ஆக, செல்லத்தக்க வாக்குகள் 69,318. இந்தத் தேர்தலில் மூவர் மட்டுமே போட்டியிட்டிருந்தனர்

1971 சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணா இறந்தபிறகு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. வரலாறு காணாத வெற்றியில் தென்காசித் தொகுதியும் பங்கெடுத்துக்கொண்டது. தங்களுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸிடமிருந்து தொகுதியைத் திமுக பெற்றுக்கொண்டது. கதிரவன் என்ற சம்சுதீன் இந்தத் தேர்தலில் தென்காசித் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சார்பில் தென்காசியிலிருந்து சட்டப் பேரவைக்குச் சென்ற முதல் வேட்பாளர் என்னும் பெருமையையும் பெற்றார். 72,423 வாக்குகள் பதிவாயின. அவற்றில் 2,163 வாக்குகள் செல்லாதவை. எஞ்சிய வாக்குகள் 70,260. திமுக வேட்பாளர் தன்னையடுத்த வேட்பாளரைவிட 7,960 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 39,110; வாக்கு சதவீதம் 55.6. இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் ஐ சி ஈஸ்வரன் இருந்தார். அவர் பெற்ற வாக்குகள் 31,150; வாக்கு சதவீதம் 44.34. இந்தத் தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். 


எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின்னர் 1977ஆம் ஆண்டில் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. தென்காசி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளரான எஸ் முத்துசாமி கரையாளர் 41.36 சதவீத வாக்குகளான 30,763 ஐப் பெற்று வென்றார். இரண்டாமிடத்தைப் பெற்றவர் சுயேச்சை வேட்பாளரான ஜே அப்துல் ஜப்பார். அவர் 18,489 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது பதிவானவற்றில் 25.26 சதவீதமாகும். மொத்தம் பதிவான வாக்குகள் 74,171. இதில் செல்லாதவை 977. மொத்தம் ஐவர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்டவர் வை.பாண்டிவளவன்.

அடுத்த தேர்தல் 1980இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. 74,565 வாக்குகள் பதிவாயின. இதில் 1,108 வாக்குகள் செல்லாதவை. அதிமுக சார்பில் போட்டியிட்ட சட்டநாதக் கரையாளர் தன்னையடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் டி ஆர் வேங்கடரமணனைவிட 675 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிபெற்றார். வெற்றிவேட்பாளரின் வாக்குகள் 36,638 (49.88%), தோல்வி பெற்ற வேட்பாளர் வாங்கிய வாங்குகள் 35,963 (48.96%).  மொத்தம் நால்வர் போட்டியிட்டிருந்தனர்.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகான தேர்தல் 1984 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு. கருணாநிதி போட்டியிடவில்லை. திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. கடந்த முறை தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த டி ஆர் வேங்கடரமணன் இந்த முறை 57,011 (60.45%) வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மா.குத்தாலிங்கத்தைத் தோற்கடித்தார். திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள் 35,383 (37.52%). வாக்குவித்தியாசம் 21,628. இந்த முறை மொத்தம் 99,409 வாக்குகள் பதிவாயின. இதில் 5,097 வாக்குகள் செல்லாதவை. தேர்தலில் மொத்தம் ஐவர் போட்டியிட்டிருந்தனர்.

எம்.ஜி.ஆர். இறந்தபிறகு, 1989இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக இரு அணிகளாக நின்று தேர்தலைச் சந்தித்தன. இந்த முறை தென்காசி தொகுதியில் 13 பேர் களமிறங்கியிருந்தனர். முதன்முறையாக இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டது இதுவே முதன்முறை. இம்முறை 1,11,533 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 2,285 வாக்குகள் செல்லாதவை. காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட்டு வென்றார். 39,643 (36.29%) வாக்குகளைப் பெற்று திமுகவின் பாண்டிவளவனை 6,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாண்டிவளவன் 33,049 (30.25%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.  


இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991இல் தேர்தல் நடைபெற்றது. இம்முறை 11 பேர் களத்தில் இருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸே போட்டியிட்டு 36,879 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுக சார்பில் போட்டியிட்டவர் எஸ்.ராமகிருஷ்ணன். பீட்டர் பெற்ற வாக்குகள் 65,142 (62.105). திமுகவுக்கு 28,263 (26.94%) வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன. மொத்தம் 1,08,739 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை 3,813. இந்த முறை 33 வாக்குகள் தவறிப்போயிருந்தன.  பாஜக முதன்முறையாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது.

ஜெயலலிதாவைத் தோற்கடித்த 1996 தேர்தலில் தென்காசியை திமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகாவின் வேட்பாளரான ரவி அருணன் கைப்பற்றியிருந்தார். 1,19,984 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாத வாக்குகள் 4,946. மூன்று பேரின் வாக்குகள் ஏற்கெனவே போடப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆலடி சங்கரய்யாவை 30,760 வாக்குகள் வித்தியாசத்தில் ரவி அருணன் வென்றிருந்தார். அவருக்கு 60,758 (52.82%)வாக்குகள் கிடைத்திருந்தன. சங்கரய்யா 29,998 (26.08%) வாக்குகளை மட்டுமே பெற்றார். தேர்தலில் இருபது பேர் போட்டியிட்டனர். முதன்முறையாக பெண் ஒருவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

2001இல் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இம்முறை 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றியது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 62,454 (51.41%) வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்து வந்த திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனைவிட 8,792 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.  திமுக வேட்பாளர் 53,662 (44.18%) வாக்குகளைப் பெற்றிருந்தார். மொத்தம் 1,21,695 வாக்குகள் பதிவாயின. இதில் செல்லாதவை 222; ஏற்கெனவே பிறரால் போடப்பட்ட வாக்குகள் 8. தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர்.

மைனாரிட்டி அரசு என்னும் பெயரைத் திமுகவுக்குப் பெற்றுத்தந்த தேர்தல் 2006இல் நடைபெற்றது. 2001இல் தொகுதியைத் தவறவிட்ட கருப்பசாமி பாண்டியன் 18,658 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை தொகுதியைக் கைப்பற்றிக்கொண்டார். 1,40,149 வாக்குகள் மொத்தம் பதிவாகியிருந்தன. இதில் செல்லாதவை, ஏற்கெனவே போடப்பட்டவை போன்றவை போக மீதி 1,39,570. கருப்பசாமிக்கு 69,755 (49.97%) வாக்குகள் கிடைத்திருந்தன. அவரையடுத்த வாக்குகளைப் பெற்றிருந்த மதிமுகவின் இராம உதயசூரியனுக்குக் கிடைத்தவை 51,097 (37.41%). பதினோரு பேர் போட்டியிட்டனர் இந்தத் தேர்தலில். 1996இல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவி அருணன் பாஜக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.


2011இல் நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவின் வேட்பாளரான சரத்குமார் 22,967 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றியிருந்தார். சென்ற முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் கருப்பசாமி பாண்டியன் தோல்வியைத் தழுவினார். சரத்குமாருக்கு 92,253 (54.3%) வாக்குகளும், கருப்பசாமிக்கு 69,286 (40.78%) வாக்குகளும் கிடைத்திருந்தன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 1,69,910. மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டிருந்தனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதியை அதிமுகவே தக்கவைத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை போட்டியிட்டவர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன். வெறும் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார். அதிமுகவுக்கு 86,339 (42.58%) வாக்குகளும், காங்கிரஸுக்கு 85,877 (42.35%) வாக்குகளும் கிடைத்திருந்தன. நோட்டாவுக்கு 3,379 வாக்குகள் கிடைத்திருந்தன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸுக்கு 7,324 வாக்குகள் கிடைத்திருந்தன. முதன்முறையாக செல்வி என்னும் பெண் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.  

தென்காசி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் ஏழு முறையும் அதிமுக நான்கு முறையும் திமுக இரு முறையும் சுயேச்சை ஒரு முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளன. அதிக வாக்குகள் பெற்று வென்றவர் 2011 தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார். பெற்ற வாக்குகள் 92,253. அதிக சதவீதம் பெற்று வென்றவர் 1991 தேர்தலில் பீட்டர் அல்போன்ஸ், சதவீதம் 62.1. இத்தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில், 36,879, வென்றவர் எனற பெருமையும் அவருக்குத்தான். மிகக் குறைந்த சதவீதத்தில் வென்றவரும் அவர்தான் 1989 தேர்தலில் 36.29 சதவீத வாக்குகளே  அவருக்குக் கிடைத்தன. 1989, 1991 ஆகிய இரண்டு முறை அடுத்தடுத்து வென்றவரும் அவர்தான். குறைந்தபட்சமாக 1971இல் இருவரும் அதிகபட்சமாக 1996இல் 20 பேரும் போட்டியிட்டிருந்தனர்.  

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பாத்திமா என்னும் பெண் ஒருவர் உள்ளிட்ட 34 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களில், 13 பேரின் வேட்பு மனுக்கள் (பாத்திமாவுடைய மனுவையும் சேர்த்து) தள்ளுபடி செய்யப்பட்டன; மூவர் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். மீதி 18 பேர் களம் காண்கிறார்கள்.  போன தேர்தலில் மோதிய செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் பழனி நாடாரும் மோதுகிறார்கள். கட்சி சார்ந்த வாக்குகள் அடிப்படையிலும் பொதுவான மனநிலையிலும் பார்த்தால் காங்கிரஸ் கட்சி எளிதாக வென்று விடும் என்றுதான் தோன்றுகிறது. கள நிலவரம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக எதுவும் இருப்பதுபோலும் தெரியவில்லை. ஆனாலும், மக்கள்தீர்ப்பை அறிந்துகொள்ள  மே 2 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.  

தென்காசி தொகுதியின் முடிவு மே 2 அன்று இரவில்தான் வெளியானது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளரே முன்னணியில் இருந்தார். மொத்தம் வாக்கு எண்ணப்பட்ட 30 சுற்றுக்களில்  5, 6 ,7, 9, 14, 21, 22, 24, 26, 27, 28, 29, 30 ஆகிய சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இருந்தபோதும், வாக்கு இயந்திரத்தின் எல்லாச் சுற்றுகளையும் சேர்த்து பழனி நாடார், 87,706 வாக்குகளே பெற்றிருந்தார்; அதிமுக வேட்பாளருக்கு 88,271 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், தபால் வாக்குகள் பழனி நாடாருக்குக் கைகொடுத்துள்ளன. அவருக்குக் கிடைத்திருக்கும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை 1,609; அதிமுகவுக்கு 674. ஆக, பழனி நாடார் பெற்ற மொத்த வாக்குகள் 89,315; அதிமுக 88,945. ஒருவழியாக பழனிநாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் தென்காசி தொகுதியைக் கைப்பற்றிவிட்டார். இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஆர் வின்செண்ட்ராஜ் 15,336 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நோட்டாவுக்கு 1,159 வாக்குகள் கிடைத்திருந்தன. எப்படியோ நூலிழை வித்தியாசத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸின் கைக்கு வந்துவிட்டது. 

ஞாயிறு, மார்ச் 14, 2021

கடவுள் வருவாரா, மாட்டாரா?

அவன் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தான்.

திடீரென ஒருவர் அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். அவரை எங்கேயும் பார்த்ததுபோல் நினைவில்லை. எனவே, அவன் அவரைக் கேள்வியுடன் பார்த்தான்.
என்னை எங்கேயும் பார்த்ததில்லை என்று யோசிக்கிறாயா என்று கேட்டார்.
சட்டென்று ஒருமையில் பேசும் அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்கிறாரே என்னும் எரிச்சலில் அவர் யார் எனப் புருவம் உயர்த்தினான்.
ஒருமையில் பேசியதால் உனக்கு எரிச்சலா என்று கேட்டார்.
எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறாரே எனக் கோபமே வந்துவிட்டது அவனுக்கு.
சரி கோபப்படாதே என்றார்.
அவனது கோபம் எல்லை மீறிவிடுமோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது.
நீங்க என்ன பெரிய கடவுளா என்று கோபத்தையும் எரிச்சலையும் அடக்கிக்கொண்டு கேட்டான்.
அவர் முகம் சட்டென்று மலர்ந்தது. எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தாய் என்று கேட்டார்.
எதுவும் நட்டு கழன்ற கேஸோ என்று கூர்ந்து பார்த்தான்.
மனிதர்களுக்குத்தான் புத்தி பேதலிக்கும் நான் கடவுள் என்றார்.
ஒருவேளை பாலா படங்களைப் பார்த்து அதனால் ஏற்பட்ட நிலைமையோ என்று யோசித்தான்.
உனக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லையா, எனக் கேட்டார்.
எப்படி இருக்க முடியும்? என்று கேட்டான்.
இப்படித்தான் என்று தன்னைக் காட்டினார்.
அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. சரி இருந்துவிட்டுப் போங்கள். எனக்கு வழிவிடுங்கள் எனக்கு வேலை இருக்கிறது என்று சொன்னான்.
என்னைவிட முக்கியமான வேலை என்றால் நீ இன்னும் என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன் என உரையாடலைத் தொடர்ந்தார்.
அவரது உரையாடல் அவனுக்கு அலுப்பைத் தந்தது. இதென்னடா வம்பாகப் போய்விட்டது. இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று நினைத்தான்.
பெரிய பகுத்தறிவு பேசுற ஆனால் யார் முகத்தில் முழித்தோம் என யோசிக்கிறாயே என்றார் அவர் விடாமல்.
ஒருவேளை கடவுள் தானோ என்று சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. தனது நம்பிக்கையின் மூல வேரை அறுக்க முயல்கிறாரே என்ற கோபம் வேறு சேர்ந்துகொண்டது.
சரி நான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால்தான் நம்புவாயா என்று கேட்டார்.
ஆமாம் என்று பலமாகத் தலையாட்டினான்.
என்ன வேண்டும் சொல் என்றார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் உங்களை நம்புகிறேன் என்றான்.
படுபாவி கடவுளாலேயே செய்ய முடியாத விஷயத்தைக் கேட்கிறானே என நினைத்தாரோ என்னவோ அவனைத் தர்மசங்கடத்துடன் பார்த்தார். ஆனால், சரி செய்கிறேன் என்றார்.
அவன் ஆச்சரியத்துடன் உங்களால் முடியுமா என்று கேட்டான்.
இனி எதையும் மே 2 அன்று கேள். அன்று மாலை உன்னை மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
மே 2 அன்று அவர் வருவாரா, மாட்டாரா?

அஞ்சலி: எஸ்.பி.ஜனநாதன்: இயற்கையோடு கலந்த இயக்குநர்


1959 மே 7 அன்று பிறந்த எஸ்.பி.ஜனநாதன் இன்று, 14.03.2021 அன்று, உயிரிழந்திருக்கிறார். ஓரிரு நாள்களுக்கு முன்னர் (மார்ச் 11 அன்று) மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீண்டு வந்துவிட வேண்டுமென்று திரைத்துறையினர் விரும்பிக்கொண்டிருந்த சூழலில் இயற்கை அதற்கு ஒத்துழைக்கவில்லை. பெரிய அளவிலான கல்வி அறிவு இல்லாதபோதும், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் வாழ்க்கைக் கல்வியைக் கற்றிருக்கிறார் ஜனநாதன். படிப்பறிவில்லாத பெற்றோருக்குக் கடைசி மகனாகப் பிறந்த ஜனநாதன் எம்.ஜி.ஆர். படங்கள் வாயிலாகவே திரைத்துறைக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார். 

பி.லெனினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜனநாதன் மலையாள இயக்குநர் பரதன், இயக்குநர் கேயார் ஆகியோரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் 2003இல் வெளியான இயற்கை’ படம் இவரது முதல் படம். காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிருடன் இருந்தால் வருகிறேன்...’ என்னும் பிரபலப் பாடல் இடம்பெற்ற இந்தப் படம் தேசிய விருதை வென்றது. சிறந்த தமிழ்ப் படம் என்னும் விருதை வென்ற இதன் கதை தஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுக’ளைப் போன்ற அம்சத்தைக் கொண்டிருக்கும். இந்தப் படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ஈ’ (2006), பேராண்மை’ (2009), புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ (2015) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள லாபம்’ என்னும் திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால், வெளியாகும் நிலையில் இருந்தது. இத்தகைய சூழலில் ஜனநாதனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. 

தமிழின் பெருமைமிகு இயக்குநராக ஜனநாதனை முன்னிருத்தும் வகையில் அவர் திரைப்படங்களை உருவாக்காதபோதும், குறிப்பிடத்தக்க இயக்குநராகத் தனது படைப்புகளைத் தந்தவர். அவருடைய படங்களில் இயற்கை’, ஈ’ ஆகியவை ஓரளவு நல்ல படங்கள் எனச் சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் நற்பெயர் எடுத்திருப்பவராகவே ஜனநாதன் உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியிலும் திரை ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.  

திங்கள், மார்ச் 08, 2021

கொன்றது நீதானா சொல் சொல்...


கடற்கரையில் அந்தக் குடும்பத்தினர் உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கே வரும் சீருடைக் காவலர்கள் விசாரணைக்காக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். இப்படித்தான் த கேர்ள் வித் எ ப்ரேஸ்லெட் படம் தொடங்குகிறது. ஏன், என்ன, எதுவெனப் புரியாமல் நாம் நிமிர்ந்து உட்காரும்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எனப் படம் தொடர்கிறது. லீஸ் பத்தைல் என்னும் அந்த இளம் பெண் தனது அருமைத் தோழியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும் நீதிமன்றக் காட்சிகளாகவே படம் நகர்கிறது. லீஸ் கொலைசெய்திருப்பாளா இல்லையா அவள் விடுவிக்கப்படுவாளா தண்டனை பெறுவாளா என்னும் கேள்விகளுடன் நாம் படத்தைத் தொடர வேண்டியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதத்தின் வழியே கொலைக் குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் 2016 ஜூன் 7 அன்று என்ன நடந்தது என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், கொலைச் சம்பவத்தின் எந்தக் காட்சியும் இறுதிவரை நமக்குக் காட்டப்படுவதேயில்லை. அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள சடலத்தின் புகைப்படம் மட்டுமே நமக்குக் காட்டப்படுகிறது. ஆறேழு இடங்களில் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார் அந்தப் பெண். குற்றம்சாட்டப்பட்டுள்ள லீஸ் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். விசாரணையின்போது, தேவைக்காக மட்டுமே பேசுகிறார். மற்றபடி உறைந்தநிலையிலேயே இருக்கிறார். இது பற்றி அரசாங்க வழக்கறிஞர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். 

ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது, அவரது நடத்தை பூரணமாகக் கவனிக்கப்படுகிறது. அவர் குற்றம்செய்தவரா இல்லையா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளும் நடைமுறைகளில் அவரது நடத்தை எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்சிகளின் மூலம் இயக்குநர் எடுத்துவைக்கிறார். ஆனால், இதையெல்லாம் வைத்து நீதியை முடிவுசெய்ய முடியாது என்பதையும் அவர் சொல்கிறார். 

பருவ வயதுப் பெண்ணின் நடத்தைகள் குறித்த புரிதலை உருவாக்கும் எண்ணத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பருவ வயதினரின் உடம்பு பற்றிய புரிதல் முந்தைய தலைமுறையால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையும் படம் விசாரிக்கிறது. லீஸுக்கும் அவளுடைய தோழிக்கும் இடையே உடல்ரீதியான மகிழ்ச்சிப் பரிமாற்றம் இருந்துள்ளது. கொலை நடந்ததற்கு முந்தைய நாளின் இரவில்கூட இருவரும் ஒரே படுக்கையைப் பகிர்ந்திருக்கிறார்கள்; முத்தமிட்டிருக்கிறார்கள்; பரவச நிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அது குறித்து அவளுக்கு அசூயையோ தவறென்ற எண்ணமோ இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை அளித்துக்கொண்டோம் என்றுதான் லீஸ் கூறுகிறாள். பெரும்பாலும் மூத்த தலைமுறையினரால் நிறைந்துள்ள அந்த நீதிமன்றத்தில் அந்த இளம் பெண்ணின் உண்மையான பேச்சு ஒருவிதமான நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்துகிறது.  

ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சம்பவம் அவளுடைய அவளது குடும்பத்துடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது என்பதை யோசிக்கச் செய்யும் வகையிலேயே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இளம் பெண் ஒருவருக்குத் தன் உடல் குறித்த பார்வை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் புரிதல் முதிய தலைமுறையினருக்கு வேண்டும் என்னும் கோணம் படத்தில் நம் கவனத்தைக் கோருகிறது. 

இளம்பெண்ணின் தனிப்பட்ட சுகதுக்கங்களைப் பற்றி அறிய நேரும் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் அதே வேளையில் அதன் இயல்புத்தன்மை குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஆகியவற்றைக் கதாபாத்திரங்கள் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளன. அடிப்படையில் சினிமா என்பது ஒரு புனைவாக இருந்தபோதும், அது நமது வாழ்வின் சிக்கலைத் தீர்த்துவைக்க ஏதாவது ஒரு வகையில் முயன்றுகொண்டே இருக்கிறது. இந்தப் படம் 2018இல் வெளியான த அக்குயிஸ்டு என்னும் பெயரில் வெளிவந்த அர்ஜெண்டினா நாட்டுப் படத்தின் மறு ஆக்கம். 

மாறும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. சட்டதிட்டங்கள் பழைய மரபையும் பாரம்பரியத்தையும் மட்டுமே தூக்கிப் பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமான தீர்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தல் தொடர்பான தீவிரமான கேள்வியை எழுப்பியிருக்கும் காரணத்தால் இந்தப் படத்தைப் பார்ப்பது மிகவும் பயனுள்ள செயலாகவே படுகிறது. எதேச்சையான சம்பவங்களைக் கண்டு அவற்றை குற்றம்சாட்டப்பட்டவரின் நடத்தையுடன் முடிச்சிட்டுக் குற்றங்களைப் பொதிந்துள்ள புதிரின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்வது ஒருவகையான அபத்தமே என்பதைப் படம் மிகவும் தெளிவாக உணர்த்துகிறது.