இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 01, 2021

அண்ணாத்த ரஜினி இனியாவது விழித்துக்கொள்வரா?

 


ரஜினி காந்த் என்னும் பெயருக்கும் அவரது ஸ்டைலுக்கும் தமிழ்நாட்டில் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. அதை அறுவடை செய்வதில் இன்னும் தயாரிப்பாளரிடையே போட்டியே இருக்கிறது. வயது எழுபதைத் தொட்டிருந்தாலும் ரஜினியைக் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், ரஜினி என்னும் தனித்துவத்துக்காக மட்டும் ரசிகர்கள் படம் பார்த்த நிலைமை மாறிவிட்டது. அந்த மாற்றம் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அந்த உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது அண்ணாத்த.

ரஜினி ரசிகர்களிடையே ரஜினி மீதான தங்கள் மரியாதையையும் அன்பையும் அநியாயத்துக்குச் சுரண்டுகிறார்களோ என்ற எண்ணத்தையே அண்ணாத்த திரைப்படம் அழுத்தமாக உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு நகரங்களிலுள்ள ரஜினி ரசிகர்கள்கூடக் குறைந்தது இருநூறு ரூபாய் செலவழித்தே படம் பார்க்க முடிந்தது. ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சாதாரண வருவாய் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திச் சம்பாதித்த பணம்தான் ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசாக மாறுகிறது. அண்ணாத்த படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் பலருக்கு அடிவயிற்றில் அடித்ததுபோல் இருந்தது. “அண்ணாத்த நமக்குக் கிடைக்கலடா நாமதான் அண்ணாத்தக்குக் கெடச்சிட்டோம்” என்று படத்தின் தொடக்கத்தில் வில்லன் பேசும் வசனத்தையே ரசிகர்களும் சொல்லும்படியாகிவிட்டது.  அதனால் தான் பாபாவின் பாதையில் படுபாதாளத்துக்கு அண்ணாத்த செல்கிறது.

புத்தாயிரத்தில் வந்த முதல் ரஜினி படம் பாபா. 2002இல் வெளியானது. முதல்நாளிலேயே படம் தோல்வியடைந்தது. சூப்பர் ஸ்டார் என்னும் மிகப் பெரிய பிம்பத்தின் மீது விழுந்த பலமான அடி அந்தப் படத்தின் தோல்வி. அந்தத் தோல்வியைத் துடைத்தெறிய மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன ரஜினிக்கு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியே அவரை மீண்டும் குரல் உயர்த்திப் பேசவைத்தது. ஆனால், அதை வெறும் ரஜினி படம் என்று சொல்லிவிட முடியாது. அந்தப் படத்தின் தலைப்பே நாயகி வேடத்தை முன்னிலைப்படுத்தியது. அதற்கு முன்னதாக வெளியான படையப்பா படத்திலும் நீலாம்பரி கதாபாத்திரமே பெயர் வாங்கியது என்றபோதும் படத்தின் தலைப்பு படையப்பாதான். ஆனால், சந்திரமுகி என்னும் தலைப்பு வைக்க ரஜினி ஒத்துக்கொண்டதே அவரது நிலைமை அவருக்குப் புரியத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான். இனியும் தான் சூப்பர் ஸ்டார் அல்ல; தனக்காக மட்டுமே ரசிகர்கள் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டியதுதான் என்பதை ரஜினிக்கு உணர்த்திய படமாக அமைந்தது சந்திரமுகி. அதற்கு முன்னர் நாயகிப் பாத்திரத்தின் தலைப்பில் வெளியான ரஜினி படம் 1978இல் வெளியான ப்ரியாதான்.

சந்திரமுகிக்குப் பின்னர், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில் ஷங்கர் என்ற இயக்குநரின் சூத்திரம் ரஜினியின் கணக்கில் வரவுக்கு வழிவகுத்தது. அடுத்து, அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியான ஒரே ரஜினி படமான லிங்கா அவருக்குக் கடும் தலைவலியாக அமைந்தது. இனி என்ன செய்யப்போகிறார் ரஜினி என்னும் கேள்வி அவரைத் துரத்தியது. அதன் பின்னர்தான் புதிதாக வந்த இயக்குநர்களின் வசம் தனது படத்தை ஒப்படைக்கத் தொடங்கினார். கபாலி, காலா ஆகிய படங்களை பா.இரஞ்சித் இயக்கினார். படம் பெரிய வெற்றிபெறாவிட்டாலும் ரஜினியின் வழக்கமான மசாலாப் படங்களாக அவை அமையாமல், ரஞ்சித்தின் கைவண்ணத்தில் சற்றுப் புது மாதிரியான சித்திரமாக அவை அமைந்தன. அந்த ஆசுவாசத்தில் பழைய ரஜினியை மீண்டும் காட்டுகிறோம் என்னும் பெயரில் பேட்ட, தர்பார் என்னும் இரண்டு படங்கள் வெளியாயின. இரண்டும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்று ரஜினி தரப்பினரைத் தவிர யாரும் நம்பவில்லை. 

இப்படியான நிலையில் மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் ரஜினி. கடுமையான உடல்நலப் பிரச்சினை வாட்டியபோதும் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டிய சூழலில் அண்ணாத்தவை ரஜினி முடித்துக்கொடுத்தார். தொடர்ந்து அஜித்தை வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவை இயக்குநராக நியமித்துக்கொண்டார்.  வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் வேலை சுலபம் என நினைத்திருக்கலாம் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதால் தன் வேலை சுலபம் என நினைத்துவிட்டார் இயக்குநர்.

சினிமா தோன்றிய காலத்தில் சொல்லப்பட்டிருந்தால்கூட மறுக்கப்பட்டிருக்கும் ஒரு கதையை ரஜினி ஓகே செய்திருக்கிறார். அவர் ஓகே செய்த காரணத்தால் அப்படியான பழங்கதைக்கும் திரைக்கதை எழுதிவிட்டார் இயக்குநர்; அதில் ரஜினியை நடிக்கவும் வைத்துவிட்டார்; அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் என்னும் பெரிய நிறுவனம் பெரும் பொருள் செலவில் தயாரித்திருக்கவும் செய்கிறது. ரஜினி ரசிகர்களை இவர்கள் மிகவும் எளிதான இலக்காகக் கருதிவிட்டார்களா?

பாபா தொடங்கி அண்ணாத்த வரையான ரஜினி படங்களின் வெற்றி தோல்விகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால், பெரும்பாலானவை படுதோல்வி என்னும் முடிவுக்கு வர முடிகிறது. படம் மாபெரும் வெற்றி என ஊடகங்களில் செய்தி வருவதும், படம் வெளியான சில நாள்கள் மட்டுமே வசூல் இருந்தது அதன் பின்னர் படம் பெரிதாகச் சம்பாதித்துத் தரவில்லை என்ற குரல் எழுவதும் வாடிக்கையானது. ஆக, ரஜினி படங்களின் வெற்றி தோல்வி என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியமாகவே இன்றுவரை உள்ளது. எவ்வளவு நாள் தான் ஊடகங்களின் உதவியுடன் வெற்றியை ஜோடிக்க முடியும்?

நாயகனாக மட்டுமே நடித்து இனியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது ரஜினி. தனது வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவருக்கும் அவரை இன்னும் ரசிக்கும் ரசிகர்களுக்கும் நல்லது. அதை அவர் விரும்பாமல் இன்னும் டூயட் பாட விரும்பினால் அவர் ஓய்வுபெற்றுவிடுவதே மேலானது. ஆனால், நடிப்பின் மீது தாகம் கொண்ட ரஜினி ஓய்வு என்பதை விரும்ப மாட்டார். அவருக்காக நல்ல கதையம்சத்துடன் திரைக்கதையை உருவாக்கும் இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் இன்னும் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் ரஜினி தன்னை ஒப்படைக்க வேண்டும். இயக்குநர்கள், ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்றியபோதும் ரஜினி மாறாமல் இருப்பதை ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள்; கதையும் அப்படியே மாறாமல் அண்ணத்த போல் ரஜினியைப் பல ஆண்டுகள் பின்னே இழுத்துச் செல்பவையாக இருந்தால் அது ரஜினி, தன் ரசிகர்களுக்குச் செய்யும் நியாயமாக இருக்காது. மேலும் ரஜினியின் பெயர் சொல்ல 16 வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், தர்மதுரை, தளபதி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. இனிப் புதிதாக ரஜினி நடித்துப் பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்னும் நிலைமை அவருக்கு இல்லை.

இல்லாதவனுக்கு அள்ளிக் கொடுத்துப் பாரு அந்த சாமியே சந்தோஷப்படும் என அண்ணாத்த படத்தில் ரஜினி பேசுவதுபோல இனியும் வெற்று வசனங்களைப் பேசுவது நலம்பயக்காது.  ரஜினியின் கிரீடத்தில் மேன்மேலும் வைரக் கற்களைப் பதிக்க வேண்டுமே ஒழிய அதில் கரி அள்ளிப் பூசுதல் அழகாகாது. இனி ஒரு அண்ணாத்த வந்தால் அதன் பின்னர் ரஜினியை அந்த ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 


 

 

திங்கள், அக்டோபர் 25, 2021

ஆஸ்கருக்கான படமா ஜெய் பீம்?

அமேசான் பிரைமில் நவம்பர் 2 அன்று வெளியாகப் போகும் ஜெய் பீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படத்தின் ‘கையில எடு பவர’ பாடலையும் இதே அளவில் பார்த்திருக்கிறார்கள். பழங்குடியினப் பெண்ணுக்கான நீதிக்காக அரசை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் சமூக வலைத் தளத்தில் தொடர்ந்து புழங்கிவருவோர். சாதிரீதியான பாகுபாட்டை அழுத்தமாக முன்வைத்திருக்கும் படமாக இது உருவாகியிருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது படத்தின் ட்ரெயிலர். ட்ரெயிலரில் இடம்பெற்ற திருடன் இல்லா சாதி இருக்கா வசனம் இப்போதே மீமாக உலா வருவதைப் பார்க்க முடிகிறது. ஜெய் பீம் என்னும் தலைப்பும், இத்தகைய வசனங்களும் பழங்குடியினப் பெண்ணுக்கான நீதி என்னும் கருவும் சூரரைப் போற்று படத்தில் தவறவிட்ட ஆஸ்கரைப் பெறுவதற்கான முயற்சியோ என எண்ணவைக்கிறது. ஜெய் பீம் படத்துக்கும் சூரரைப் போற்று படத்துக்குமான ஒற்றுமைகளே இப்படி யோசிக்கவைக்கின்றன. அப்படம் பற்றி வெளிவரும் தகவல்கள், சூரரைப் போற்று படத்தில் ஆழமாக வெளிப்பட்டிருக்காத ஒடுக்கப்பட்டோர் அரசியல் ஜெய் பீம் படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கக் கூடுமோ என்ற எண்ணவைத்திருக்கின்றன. ஒடுக்கப்பட்டோருக்கான நீதி என்பது ஆஸ்கர் கனியை விழச் செய்யும் ஆற்றல்மிக்க கல் என நினைக்கிறதோ ஜெய் பீம் குழு? இந்தப் பின்னணியில் ஆஸ்கர் விருதுக்கும் நம் படங்களுக்குமான உறவை அசைபோடலாம். 

ஜெய் பீம் படத்தின் நாயகன் சூர்யா நடித்து, இதே அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியான, திராவிட அரசியல் முலாம் பூசிய, சூரரைப் போற்று ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டது. அது, 93 ஆம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த 366 படங்களில் ஒரே இந்தியப் படம் என்னும் பெருமையைப் பெற்றிருந்தது. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை எனப் பல பிரிவுகளில் சூரரைப் போற்று ஆஸ்கர் போட்டியில் கலந்துகொண்டது. இறுதியில் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதைத் தவறவிட்டுவிட்ட போதும், ஓடிடியில் வெளியாகி முதன்முறையாக ஆஸ்கர் போட்டிவரை சென்ற தமிழ்ப் படம் என்றவகையில் வரலாற்றில் குறித்துவைக்கப்படும்.

உண்மையில், 2021ஆம் ஆண்டு விருதுக்கென இந்தியாவிலிருந்து ஜல்லிக்கட்டு என்னும் மலையாளப் படமே அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான ஜிஆர். கோபிநாத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான, பொழுதுபோக்குப் படமான சூரரைப் போற்று பணம் கட்டியே போட்டியில் கலந்துகொண்டது. உலக அளவிலான படங்கள் 12,500 அமெரிக்க டாலர் பணம் கட்டி, தங்கள் படத்தை ஆஸ்கர் விருதுக் குழுவுக்குப் போட்டுக் காட்டும் வாய்ப்பை ஆஸ்கர் நிறுவனம் வழங்குகிறது என்கிறார்கள். அந்த வகையில்தான் சூரரைப் போற்று படம் ஆஸ்கருக்குச் சென்றதே ஒழிய இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையின் பேரில் அன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கும் ஆஸ்கருக்குமான தொடர்பின் முக்கியமான கண்ணியாக இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் சத்யஜித் ராயைத் தான் சொல்ல முடியும். அவரது வாழ்நாள் சாதனைக்கு மரியாதை தரும் வகையில், 1992ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருதுக் குழு அவருக்குச் சிறப்பு விருதளித்தது. ஆனால், அபு சன்சார் (1959), மகாநகர் (1963), சாத்ரஞ் கே கிலாரி (1978) ஆகிய அவரது படங்கள் அதற்கு முன்பே இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வுகளாக இருந்தபோதும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில்கூட இடம்பெறவில்லை. சத்யஜித் ராய்க்கு முன்னதாக ஆஸ்கர் விருதை வென்றவர் பானு அதையா. அவர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் இயக்கத்தில், பென் கிங்ஸ்லி நடித்த காந்தி (1982) திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்காக ஜான் மாலோ என்ற ஆங்கிலேயருடன் விருதைப் பகிர்ந்துகொண்டார். கிரிக்கெட் விளையாட்டுச் சம்பவங்களாலான அமீர் கான் நடித்த லஹான் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பானு அதையாதான். அவர், குரு தத்தின் பியாசா, 1942: எ லவ் ஸ்டோரி, டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் படையெடுப்பு 1957ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அந்த ஆண்டு இந்தியாவிலிருந்து முதன்முறையாக மதர் இந்தியா எனும் இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கான இந்தியப் பரிந்துரையாகத் தேர்வுசெய்து அனுப்பப்பட்டது. மெஹ்பூப் கான் இயக்கத்தில் நர்கீஸ் நடித்த அந்தப் படம் 1959ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டிப் பட்டியலில் இருந்தபோதும் ஆஸ்கரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் நழுவவிட்டது. அப்போது ஆஸ்கர் விருதைத் தட்டிச்சென்றது த நைட்ஸ் ஆஃப் கேபிரியா என்னும் இத்தாலிப் படமே.  

இதற்கடுத்து இந்தியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு 61ஆம் ஆஸ்கர் விருதுக்கு சலாம் பாம்பே திரைப்படமும், 2001 இல் 74ஆம் ஆஸ்கர் விருதுக்கு லஹான் திரைப்படமும் அனுப்பப்பட்டன. அவை இரண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்துகொண்டன. ஆனாலும், இறுதிப் போட்டியில் அவை தோல்வியே கண்டன; விருதை வெல்லவில்லை. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தப் படங்கள் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டன. இப்போது இந்தப் பிரிவு சிறந்த சர்வதேசப் படம் என அழைக்கப்படுகிறது.

மதர் இந்தியா, சலாம் பாம்பே, லஹான் ஆகிய படங்களைத் தவிர, இந்தியப் பரிந்துரையின் பேரில் அனுப்பப்பட்ட எந்தப் படமும் ஆஸ்கர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழில் தெய்வமகன் (1969), நாயகன் (1987), அஞ்சலி (1990), தேவர் மகன் (1992) குருதிப்புனல் (1995), இந்தியன் (1996), ஜீன்ஸ் (1998), ஹே ராம் (2000), விசாரணை (2016) ஆகிய படங்கள் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. விசாரணை திரைப்படம் சில கட்டங்களைத் தாண்டிய போதும் இறுதிப் போட்டியில் நுழைய முடியவில்லை. ஐந்து முறை கமல் ஹாசனின் தமிழ்ப் படங்களும் ஒருமுறை சாகர் என்னும் இந்திப் படமும் ஒருமுறை சுவாதி முத்யம் என்னும் தெலுங்குப் படமும் ஆஸ்கருக்கெனப் பரிந்துரைக்கப்பட்டன. அதிலும் 1985, 1986, 1987 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் நடித்த இந்திப்படம், தெலுங்குப் படம், தமிழ்ப் படம் ஆகியவை ஆஸ்கர் விருதுக்கென இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக இருந்தன. எனினும், இதுவரை அவர் நடித்த ஒரு படம்கூட ஆஸ்கர் பரிந்துரைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

காட் ஃபாதர் ஹாலிவுட் படத்தைப் பார்த்திருக்கும் ஆஸ்கர் குழுவின் எந்த உறுப்பினர் நாயகனுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்? ஆனாலும், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கமல்ஹாசன் அன்புடன் அழைக்கப்படுகிறார். அது தமிழ் ரசிகர்கள் அவரது நடிப்புக்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரம் என்றே புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. இப்போதைக்கு கமலுக்குக் கிடைத்த ஆஸ்கர் அதுதான். ஆஸ்கர் சொல்லித்தான் நமக்கு கமலின் மதிப்பு தெரிய வேண்டுமா?  

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிஜமான ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். கமலை நாயகனாக்கிய பாலசந்தர்தான் ரஹ்மானையும் இசையமைப்பாளராக்கினார். ஸ்லம்டாக் மில்லியனர் என்னும் ஆங்கில மொழிப் படத்தின் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ரஹ்மான் பெற்றார். அந்தப் படத்தில் சிறந்த பின்னணியிசை வழங்கியதற்காகவும் சிறந்த பாடலுக்கான இசைக்காகவும் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் அந்தப் படத்தில் சிறப்பாக ஒலிக் கலவைப் பணியை மேற்கொண்ட, கேரளாவைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டிக்கும் விருது கிடைத்தது.  

ஆஸ்கர் விருதுக்கான பயணம் நீண்ட தொலைவைக் கொண்டது. அதன் அரசியலும் நடைமுறை விதிகளும் மிகச் சிக்கலானவை. வாக்களிக்கும் உரிமை பெற்றோர் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்கிறார்கள். ஆஸ்கர் விருதைப் பெற்றுவிட முயலும் மலையாளத் திரைப்பட இயக்குநர் ஒருவரது பயணத்தை விவரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த மலையாளப் படம் அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ (2019). இந்தப் படத்தை இயக்கிய சலிம் அஹமது தனது ஆதமின்ட மகன் அபு படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பயணத்தில் பெற்ற அனுபவத்தையே இந்தப் படத்தில் காட்சிகளாக்கினார் எனப் பேசப்பட்டது. ஆக, எல்லா விருதுகளையும் போல ஆஸ்கர் விருதும் சர்ச்சையையும் அரசியலையும் உள்ளடக்கியதே. இத்தகைய தடைகளை எல்லாம் தாண்டி ஆஸ்கர் விருது பெற வேண்டும் என இந்தியப் படங்கள் ஏன் முனைப்பு காட்டுகின்றன?

விசாரணை படத்துக்காக ஆஸ்கர் கதவைத் தட்டிப்பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாகப் பல விஷயங்களை நாளிதழ் ஒன்றில் பகிர்ந்துகொள்கிறார். இந்தியப் படங்கள் ஆஸ்கர் விருதைப் பெறாதபோதும், அதில் கலந்துகொள்வதையே பெருமைக்குரிய விஷயங்களாகக் கருதுகின்றன. அதனால் பெரும் பொருள் செலவானாலும் பரவாயில்லை எனக் கருதிப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். வெளிநாட்டுப் படங்களைப் பொறுத்தவரை அவை சிறந்த சர்வதேசப் படம் என்னும் பிரிவிலேயே விருதைப் பெற இயலும். ஃபிலிம் ஃபெடெரேசன் ஆஃப் இந்தியா என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பின் தேர்வுக் குழுவினரே, தங்களிடம் விண்ணப்பிக்கப்பட்ட 14 படங்களிலிருந்து ஒரு படத்தைத் தேர்வுசெய்து அனுப்புகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்கவும் கட்டணம் உண்டு.  

ஆஸ்கர் குழுவில் வாக்களிப்போரைக் கவர்ந்த படங்களை அவர்கள் சிறந்த சர்வதேசப் படம் என்னும் பிரிவைத் தாண்டி, சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கும் பரிந்துரைக்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார் வெற்றிமாறன். அப்படியான படங்கள் அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமாம். லைஃப் இஸ் பியூட்டிபுல் என்னும் இத்தாலிப் படத்துக்குச் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவிலும், சிறந்த நடிகர் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. அதேபோல் பாராசைட் படத்துக்கும் சிறந்த சர்வதேசப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் விருது கிடைத்தது. இத்தகைய விதிவிலக்குகள் உள்ளன என்றபோதும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிடலாகாது. ஆனாலும், ஆஸ்கர் கனவை மனத்தில் தேக்கியே திரைப்பயணத்தை இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆஸ்கர் விருது கிடைக்கிறதோ இல்லையோ அந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலைச் சமூக வலைத்தளத்தின் வழியே பரப்புகிறார்கள். இதன் மூலம் படம் தொடர்பான நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது சந்தை மதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அடிப்படையில் ஆஸ்கர் திரைப்படங்களின் கலைத்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆஸ்கர் நிறுவனத்தின் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கான விருது. அவர்களின் ரசனை, விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்த ஆஸ்கர் விருதைப் பெறுவதில் நமக்கு என்ன பெருமை? அதை ஏன் நாம் போராடிப் பெற வேண்டும்? நமது ரசிகர்களைத் திருப்தி செய்து நமது நாட்டில் கிடைக்கும் வெற்றிகளையும் விருதுகளையும்விட ஆஸ்கரைப் பெரிதாக நினைப்பது ஒருவகையான தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடே. மேலும், ஆஸ்கர் விருது மட்டுமல்ல அதைப் பெறும் படங்களில்  வெளிப்படும் அரசியலும் நமக்குத் தூரமானது; அந்நியமானது. ஆஸ்கர் விருதுப் படங்களின் பட்டியலைப் பார்த்தாலே ஆஸ்கர் அரசியலை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். பல சந்தர்ப்பங்களில் இன வெறி, நிற வெறி போன்ற விஷயங்களை மனிதநேயத்துடன் வெளிப்படுத்தும் படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இது ஒருவகையில் அவர்களது குற்றவுணர்வுகளுக்கான வடிகால். அங்கே போய் நாம் ஏன் எதிர்பார்ப்புடன் நிற்க வேண்டும்? சூத்திரர், பார்ப்பனர், பஞ்சமர் என்று பிரிந்து கிடக்கும் நமது சாதிய வாழ்வைப் பேசும் நமது படங்களின் அரசியலை அவர்கள் எந்த அளவுக்கு விளங்கிக்கொள்ள இயலும்? மேலும், நமது சூரரைப் போற்று போன்ற பொழுதுபோக்குப் படத்துக்கு ஆஸ்கரை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அதனால் தான் ஆஸ்கர் எதிர்பார்க்கும் விஷயங்களுடன் ஜெய் பீம் படத்தை உருவாக்குகிறார்களோ? தமிழ்ப் படங்களில் நாயகனை நாலும் தெரிந்தவனாகக் காட்டுவற்கு, அவன் ஆங்கிலத்தை அநாயாசமாகப் பேசும் காட்சியை வைப்பார்கள். அப்படியான ஆங்கில மோகம் போல்தான் ஆஸ்கர் மோகமும். அதை நம் கலைஞர்கள் உணராதவரை, என்றாவது பொழிந்துவிடாதா என ஆஸ்கர் வானத்தை அண்ணாந்து பார்த்தபடியேதான் அவர்கள் இருப்பார்கள். அப்படியான படங்களில் ஒன்றாகுமா ஜெய் பீம்? 

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 

வெள்ளி, அக்டோபர் 15, 2021

பிக் பாஸ் சீசன் 5: ஓடவோ ஒளியவோ முடியுமா?


இந்தியாவின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ எனச் சொல்லப்படும் பிக் பாஸைக் கோடிக்கணக்கானோர் பார்ப்பதாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் சொல்கிறார். இந்த ஷோவின் ஐந்தாம் சீசன் அக்டோபர் மூன்றாம் நாளன்று தொடங்கியிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் எதிர்பார்ப்பது தாராளமாகக் கிடைக்கும் என்பது தெரிகிறது. பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்றுள்ள அபிஷேக் பிக் பாஸ் பற்றி முன்னர் கூறிய சர்ச்சைக் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. இப்படியான கவன ஈர்ப்புகளை பிக் பாஸ் தொடர்ந்து திட்டமிட்டுச் செய்கிறது. ஆக, சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை. அதே சர்ச்சை, தனி மனித அந்தரங்க அரட்டை  எனத்தான் பிக் பாஸ் தொடரும் என்பதற்கான தடயங்கள் தென்படுகின்றன. பிக் பாஸ் பற்றிச் சமூக ஊடகங்கள் ஏராளமாக எழுதிவருகின்றன. நிகழ்ச்சிக்கு முன்னர் ஊகங்கள்; நிகழ்ச்சிக்குப் பின்னர் நாள்தோறும் விவரணைகள் என ஊடகங்களும் பிக் பாஸை விலாவாரியாக விவாதிக்கின்றன. இப்படியெல்லாம் விவாதிக்கப்படும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக முக்கியத்துவம் கொண்டதுதானா?

ஒரு வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதுகிறோம். ஆனால், அப்படி எட்டிப் பார்க்க நம்மில் பெரும்பாலானோர் ரகசியமாக ஆசைப்படுகிறோம். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது பிக் பாஸ். அதுதான் நிகழ்ச்சியின் பலமான நடு நரம்பு. தமிழில் இந்த நிகழ்ச்சி 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நெருக்கடி நிலை அமலாக்கப்பட்ட நாள் ஜூன் 25. நெருக்கடி நிலைக்கும் பிக் பாஸுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், இரண்டும் ஏதோ ஒரு வகையில் நமது நடைமுறை வாழ்வைப் பாதிப்பவை. அப்படி ஓர் ஒற்றுமை அவற்றுக்கு உண்டு.  அப்படிப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை நமது அன்றாட வாழ்வை எப்படிப் பாதித்ததோ அப்படிப் பாதிக்கும் தன்மை கொண்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியும். நெருக்கடி நிலையாவது தீங்கானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டது என்ற போர்வையில் நமது கீழ்மை உணர்வுகளுக்குத் தீனி போடுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் தொடர் எப்படி விளையாட்டைப் புறந்தள்ளிவிட்டு வணிகத்தை முன்னிலைப் படுத்துகிறதோ அப்படியே பிக் பாஸும் முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது. வணிக நோக்கத்தில் என்ன தவறு என்னும் ஒரு கேள்வி எழலாம். இப்படிப் பாருங்கள். முழுக்க முழுக்க வணிக நோக்கத்துக்கான நிகழ்ச்சி என்று பிக் பாஸ் விளம்பரப்படுத்தப்பட்டால் நம்மில் எத்தனை பேர் அதைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவோம்? அதே நேரத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, உங்களது தவறுகளை, சரிகளை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி என்னும் பெயரில் நம்முன் அது கடை பரப்பப்படும் பட்சத்தில் நாம் அதை எளிதாக அனுமதித்துவிடுகிறோம். இது ஒருவகையான வியாபாரத் தந்திரம். அதன் தந்திரத்துக்கு நாம் பலியாகிவிடுகிறோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எதற்குப் பார்க்கிறோம்? ஆழ் மனத்தைத் தொட்டுக் கேள்வி எழுப்பிப் பரிசீலித்துப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். ஒருவகையில் அது நம்மைப் புறணி பேச வைக்கிறது. பிக் பாஸின் அனைத்து சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டில் தங்கும் பங்கேற்பாளர்களைக் கவனியுங்கள். சமூகத்தின் எல்லா தரப்புக்கும் அதில் ஒரு பிரதிநிதித்துவம் தரப்படுவதைப் போன்ற தோற்றத்தை நம்மால் பார்க்க முடியும். இதோ இந்த ஐந்தாம் சீசனில் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவரும் இடம்பெற்றுள்ளார். கானா இசைக் கலைஞர், மாடலிங் கலைஞர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், தொலைக்காட்சித் தொடர் நடிகை, வெளிநாடுவாழ் தமிழர் எனப் பார்த்துப் பார்த்து ஆள்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்புகிறார்கள். ஏனெனில், அப்படி அனைத்துத் தரப்பிலும் ஆள்களைத் தேர்ந்தெடுத்து வீட்டை நிறைக்கும்போதுதான், ஒவ்வொரு வீட்டிலும் நிறையப் பார்வையாளர்கள் அமர்ந்து பிக் பாஸ் வீட்டை வெறிகொண்டு பார்ப்போம்.

சாதாரணர்களுக்குத் தாங்கள் அறிந்த பிரபலங்கள் பற்றிய பெரிய பிம்பம் மனதில் இருக்கும். அதனுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வார்கள். உதாரணமாக, ஒரு நடிகரின் விசிறிக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது கெட்ட பழக்கம் என்று அவருக்குத் தெரியும். அதே நேரத்தில் அவர் ரசித்துப் பார்க்கும் நடிகருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று தெரியவந்தால் இவருக்குத் தனது நகம் கடிக்கும் பழக்கம் பற்றிப் பெரிய வருத்தம் எழாது. அவருக்கே இருக்கிறதே எனத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்வார். இதனால்தான் பிரபலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. பிரபல ஆளுமைகளால் ஏற்படும் தாக்கம் அந்த அளவு இருக்கும். கமல் ஹாசன் போன்ற சமூக பிரக்ஞை உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் நடிகர் இப்படி ஒரு நிகழ்ச்சியை எந்தவிதமான குற்றவுணர்வுமின்றித் தொகுத்து வழங்கும்போது அதன் தீமைத் தன்மை வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்துகொள்கிறது. மறைந்திருந்த மானமிகு வாலியை வீழ்த்திய ராமனின் செயல்போல பிக் பாஸ் நம்மை மறைந்திருந்து வீழ்த்துகிறது. அதனால்தான் சமூக நலம் நாடுவோர் இந்த நிகழ்ச்சி குறித்த அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்.  

பிரபலங்களது தனிப்பட்ட வாழ்வு பற்றிப் பொதுச் சமூகம் அறிந்துகொள்ள எப்போதுமே ஆசைப்படும். மனிதர்களின் பலவீனங்களில் அதுவும் ஒன்று. அந்தப் பலவீனத்துக்குத் தீனி போடுகிறது பிக் பாஸ். ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளரது அல்லது ஒரு நடிகரது காதல் பற்றி அறிய ஆசைப்படுவோர் அவரைத் தொடர்ந்து சென்று கண்டறிந்து கொள்ள முடியாது.  சமூகச் சூழல் அதற்கு அனுமதிக்காது. ஆனால், பிக் பாஸ் அப்படி ஒரு சூழலை அமைத்துக் கொடுத்துவிடுகிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் தொடர்ந்து தங்கியிருக்கும்போது, அவரிடம் காதல் உணர்வு ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே சுகமாகக் கண்டு களிக்க முடியும். இரு மனிதரிடையேயான நட்பு, உறவு குறித்த அந்தரங்கமான தருணங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். அதில் பங்கேற்கும் தனி மனிதர்கள் தங்கள் அந்தரங்கம் மேடை ஏறுகிறது என்பதை அறிந்தே அதைச் செய்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு அதில் பெரும் பணமும் புகழும் கிடைக்கிறது. தனி மனிதர்கள் தங்கள் நேரத்தைச் செலவிட்டு அந்த அந்தரங்கத்தைப் பார்த்துச் சந்தோஷப்படுகிறார்கள். இது என்னவகையான நாகரிகம், பண்பாடு?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உந்துதலாக அமைந்த பிக் பிரதரைவிட பிக் பாஸ் சிறப்பானது என்று பேரார்வத்துடன் சொல்கிறார்கள் பங்கேற்பாளர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கமல் ஹாசனை நேரில் பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புவதாகப் பரவசமடைந்து கூறுவதை நாம் கேட்கலாம். அதே பரவச நிலையைத் தான் பார்வையாளர்களும் பெறுகிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால் இது ஒருவகையான போதைதான். கவலையை மறக்க டாஸ் மாக் என்று சொல்வோருக்கும் பொழுதுபோக பிக் பாஸ் என்போருக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

நடிகர் கமல் ஹாசன் டாஸ் மாக் மூடப்பட வேண்டும் என்று அரசியல் மேடைகளில் சமூக அக்கறையுடன் கருத்துகளை வாரி இறைக்கிறார். ஆனால், பிக் பாஸ் மேடையில் அவர் என்ன செய்கிறார்? டாஸ் மாக், பிக் பாஸ் இரண்டுக்கும் வேறுபாடுகள் இருப்பதைப் போல் ஒற்றுமையும் இருக்கத்தானே செய்கிறது. தனி மனிதர்களுக்கிடையேயான உணர்வு வெளிப்பாடுகளைக் கடை பரப்புவது அதை ஒட்டுமொத்தச் சமூகமும் விவாதிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இவற்றை எல்லாம் திட்டமிட்டுச் செய்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் தமிழ் பேசுவோரது கண்கள் முழுக்க பிக் பாஸ் வீட்டின் மீது இருப்பது போல் மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. சுய தெளிவு உள்ள பார்வையாளர்கள் வெறும் பொழுதுபோக்கு என்று கடந்துவிடக் கூடும். ஆனால், ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் அதைப் பொழுதுபோக்கு என்று கடந்துவிடவோ தமக்குத் தெளிவு தரும் நிகழ்ச்சியெனச் சொல்லவோ முடியுமா? இதையெல்லாம் உணராதவரா உலக நாயகன்?   

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா ஆரவ் காதல், அதனால் விளைந்த மருத்துவ முத்தம், இரண்டாம் சீசனில் மஹத் யாஷிகா காதல், மூன்றாம் சீசனில் லாஸ்லியா – கவின் காதல், நான்காம் சீசனில் பாலாஜி ஆரி மோதல் இப்படியான சம்பவங்கள் வெகு சாதாரணமாக நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய அம்சங்கள் வெகு கவனமாக உருவாக்கப்படுகின்றன; ஆனால் அவை இயல்பாக நிகழ்வதாகச் சொல்லப்படுகின்றன. இது ஒரு கண்கட்டு வித்தை. இதைத் தான் பிக் பாஸ் சாமர்த்தியமாகச் செய்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தபோது, முதலமைச்சரும் இதைப் பார்ப்பது மகிழ்ச்சி என்ற அளவில் கமல் ஹாசன் அதைக் கடந்துவிட்டார் என்பதை நினைவுபடுத்துப் பாருங்கள். அதே நேரத்தில் தனது அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் கமல் ஹாசன் பிக் பாஸைப் பயன்படுத்திக்கொள்கிறார். பங்கேற்பாளர்கள் தங்களது முன்னேற்றத்துக்கான வாய்ப்பாக பிக் பாஸைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பார்வையாளர்களுக்கு எந்த நல்ல விஷயமும் இல்லையா பிக் பாஸில் என்று கேட்டால். சொல்ல வேண்டுமே என்பது போல் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியில் புத்தகப் பரிந்துரை வழங்குகிறார். நல்ல விஷயம்தான். ஆனால், கமல் ஹாசன் சொல்லித் தான் இந்தப் புத்தகங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளதா என்பது கேள்விக்குறியே.

பிக் பாஸ் நிகழ்ச்சியைச் சுயபரிசீலனைக்கான வாய்ப்பாகவும் நம் அகத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் கமல் ஹாசன். உண்மையில் இது சாத்தியமா? நிகழ்ச்சி முழுதிலும் பாலியல் கிளர்ச்சிக்கான தீனிதான் போடப்படுகிறது. ஆனால், அதைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்றால் அது எங்ஙனம் சாத்தியப்படும்? ஒருவேளை சுய தெளிவு உள்ள பார்வையாளருக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சுய தெளிவும் சுய பரிசீலனை செய்யும் பண்பும் கொண்ட பார்வையாளர் பிக் பாஸிலிருந்து ஓடி ஒளிந்துகொள்வார். அவருக்கு இது தேவைப்படாது. நமது சமூகத்தின் போலித்தனத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது பிக் பாஸ்.  வீட்டில் சினிமா இதழ் வாங்காதவர்கள்கூட முழுக்க முழுக்க சினிமா செய்திகளை எழுதித் தள்ளும் வணிக இதழ்களை வரவேற்பறையில் நிரப்பி வைத்திருப்பார்கள். இப்படியான இரட்டை வேடம் போடுபவர்களுக்கான நிகழ்ச்சியாக இருக்கிறது பிக் பாஸ். அதனால்தான் பிக் பாஸ் வெற்றிகரமாகப் பார்வையாளர்களை அபகரித்துக்கொள்கிறது. 

ஓடினால் ஒளிந்துகொண்டால் பார்வையாளர்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், பார்வையாளர்களால் அப்படி ஓடவோ ஒளியவோ முடியாது என்பதே அவர்களின் பலவீனம், ஓடவோ ஒளியவோ விடாமல் அவர்களை ஈர்ப்பதே பிக் பாஸின் பலம்.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 

வெள்ளி, அக்டோபர் 08, 2021

ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?

 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தமிழ் இலக்கிய உலகில் பெரும்பாலானோரால் வாசிக்கப்பட்ட நாவல். தமிழ் சினிமாவின் மாஸ்டர்களில் ஒருவராக நம்பப்படும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான நாள் முதலாக, அது தொடர்பான ஒவ்வொரு தகவலும் பிரேக்கிங் நியூஸாகிறது.  அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்பட முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியம் அதன் வசனகர்த்தாவான இலக்கிய உலக ஜாம்பவான் ஜெயமோகன்.  அவரது இடம் இந்தப் படத்தில் என்னவாக இருக்கப் போகிறது?

வியாபாரரீதியில் வெற்றிபெறாத கடல் திரைப்படத்துக்கு ஏற்கெனவே கதை வசனம் எழுதிய அனுபவமுள்ள ஜெயமோகன் மீண்டும் மணிரத்னத்துடன் கைகோக்கிறார். இந்தப் படம் தொடர்பாக அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சினிமாவுக்கு ஏன் எழுதுகிறீர்கள் என்னும் கேள்விக்கு, கம்பனுக்கு சடையப்ப வள்ளல் எனக்கு சினிமா என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அவர். மேலும், தமிழில் அதிகமாக எழுதிவரும் தனக்கு இதுவரை கிடைத்த காப்புரிமைப் பணத்தைவிட இரு மடங்கு ஊதியம் பொன்னியின் செல்வனில் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரை வடிவத்துக்குப் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனைப் பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதவைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அவரால் அதைப் படமாக்க முடியவில்லை. மக்கள் திலகம் கைக்குத் தப்பிய அந்தப் படம் மணி ரத்னம் கையில் அகப்பட்டிருக்கிறது. அப்படியான பொன்னியின் செல்வனைத் திரைக்கதையாக்கும் வாய்ப்பு ஜெயமோகனுக்குக் கிடைத்திருக்கிறது. அது அவரது இலக்கிய உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றே நம்புகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள். ஆனால், ஜெய மோகன் வாசகர்களுக்கு இந்தப் படத்தில் திருப்தி கிடைக்குமா?

தமிழில் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் குரல் எனத் தொடர்ந்து எழுதிக் குவித்துவரும் ஜெயமோகனின் மகத்தான சாதனை எனப் புகழப்படுகிறது மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய வெண்முரசு நாவல். 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அந்த நாவலில் 2,000 கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கேட்கும்போதே மலைப்பாக இருக்கிறதே அதைப் படைக்க எவ்வளவு அசுர உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? அப்படி உழைத்த ஜெயமோகன் வசனத்தில் வளர்ந்துள்ள படம் பொன்னியின் செல்வன் என்றபோதும், ஒரு விஷயத்தைச் சிந்திக்க வேண்டும். ரத்னச் சுருக்கமான வசனங்களை அதுவும் மிக மிக அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்துபவர் மணி ரத்னம். ஆனால், பொன்னியின் செல்வனோ வரலாற்றின் கற்பனை விரிந்து பரவிக் கிடக்கும் தமிழின் மிகப் பெரிய நாவல். அதற்கு வசனமெழுதியவரோ 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை ஒருநாள் இடைவெளிவிடாமல் நாள்தோறும் அநாயாசமாக எழுதி முடித்தவர். மொத்தத்தில், மணிரத்னத்தில் வலிமை காட்சிகளில் வெளிப்படும்; ஜெயமோகனின் வலிமையோ சொற்களில் வெளிப்படும். எனும்போது, எழுத்தாளரான ஜெயமோகனுக்கு இந்தப் படத்தில் என்ன பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.   

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் தீபாவளி சிறப்பிதழின் இலக்கியப் புத்தகத்தின் முகப்பில், புத்தருக்குத் தவம் எனக்கு எழுத்து எனப் போட்டு ஜெயமோகனைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து வெளியான மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் எழுத்தாளராக நடித்திருந்த மாதவன் ஒரு காட்சியில், “சில பேரு சொல்லுவாங்க எழுத்து ஒரு தவம்னு  பிறவியிலேயே ஒரு ஸ்பார்க் வேணும்னு சுத்தப் பொய்” என்று வசனம் பேசுவார். அந்த வசனத்தை எழுதியவர் சுஜாதா. அந்த வசனம் குமுதம் இதழில் ஜெயமோகன் கூறியதற்கான சுஜாதாவின் எதிர்வினையோ என்ற எண்ணத்தையே தரும். மணி ரத்னத்தின் ராஜாங்கத்தில் சுஜாதா இருந்த இடத்தில் இப்போது ஜெயமோகன் இருக்கிறார்.   

ஜெயமோகனுக்கு வெகுஜன எழுத்தாளரான சுஜாதா மீது பெரிய அபிமானம் இருக்க வாய்ப்பில்லை. பொழுதுபோக்கு இதழ்களில் எழுதிப் பெரும் வாசகப் பரப்பை அடைந்தவர் சுஜாதா என்றால், சிறு பத்திரிகையில் எழுதிப் பெரும்பாலானோரைச் சென்றடைந்த சுந்தர ராமசாமியின் தொடர்ச்சி எனத் தன்னை முன் வைப்பவர் ஜெயமோகன். என்ன ஆச்சரியம் என்றால், சுந்தர ராமசாமி எந்தப் படத்துக்கும் வசனம் எழுதியிருக்கவில்லை; அவரது தன்மானம் சினிமாவுக்காக வளைந்துகொடுக்கவில்லை. ஜெயமோகனோ சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படத்தைக்கூட நழுவ விடவில்லை. அந்த வகையில் அவர் சுஜாதாவின் தொடர்ச்சி.

எனினும், திரைப்படத்தில் சுஜாதா தொட்ட உயரத்தை ஜெயமோகனால் தொட முடியவே இல்லை. சுஜாதாவை விடுங்கள் பாலகுமாரன் இடத்தைக்கூட ஜெயமோகனால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. சுஜாதா தீவிர இலக்கியவாதியல்லர் எனவே அவருக்கு சினிமா வசனங்கள் தீனி போட்டன ஆனால், ஜெயமோகன் தீவிர இலக்கியத்தில் அடியாழம் கண்டவர். அவரது யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்ற வாய்ப்பே சினிமா வாய்ப்பு வழியே கிடைக்கும். பிறகு எதற்கு சினிமாவுக்கு ஜெயமோகன் தேவைப்படுகிறார்? நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் அவரிடம் கதை கிடைக்கும். மேலும், அவரது இலக்கியப் பங்களிப்பு காரணமாக இளைஞர்களிடையே அவருக்கு ஒரு பிரபலத் தன்மை கிடைத்திருக்கிறது. இப்போது சினிமாவை இளைஞர்கள்தான் அதிகமாகப் பார்க்கிறார்கள். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்றால் அதன் சந்தை மதிப்பு கூடும் என சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். சினிமாவில் வசனம் எழுதினால், குறைந்த உழைப்பு அதிக வருமானம் என நினைக்கிறார் ஜெயமோகன். இதுதான் மணிரத்னம், ஜெயமோகன் கூட்டணிக்கான காரணம்.

மிக எளிய சொற்களைக் கொண்டு வசனம் எழுதினால் போதும் என்று சொல்லப்பட்டிருப்பதற்கும் அவர் கட்டுப்பட்டிருக்கிறார். சினிமாவில் வசனம் எழுத எதற்கு வெண் முரசு எழுதியவர் வேண்டும் என்று இறுமாப்போடு ஜெயமோகன் கேட்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியத்தில் அடங்க மறுக்கும் ஆசான்- இப்படித்தான் இவரது வாசகர்களால் இவர் அழைக்கப்படுகிறார்- சினிமாவில் அடக்கியே வாசிக்கிறார். இலக்கியத்துக்குத் தான் புரவலன் என்றபோதும் சினிமாவுக்குத் தான் புலவன்தான் என்னும் உண்மை அவருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லையென்றால், புத்தருக்குத் தவம் எனக்கு எழுத்து என்று சொன்ன ஜெயமோகனால் கம்பனுக்கு சடையப்ப வள்ளல் எனக்கு சினிமா என்று சொல்ல முடியுமா?

அவருக்கு அதிக ஊதியம் கிடைத்ததைப் பெருமையாக அவர் முன்வைத்தாலும் அவரது வாசகரைப் பொறுத்தவரை இருபது வயதுகளில் அவர் எழுதிய, ஒரு சிறு நாவல் என ஜெயமோகனே குறிப்பிடும் ரப்பர் தந்த திருப்தியில் பத்து சதவீத திருப்தியைக்கூட, அங்காடித் தெரு, நான் கடவுள் உள்ளிட்ட அவரது படங்கள் தந்திருக்கவில்லை என்கிறார்கள். எடுத்துக்காட்டாக ரப்பர் நாவலில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களை வாசித்தாலே வாசகர்களின் கூற்று உண்மை என்பது தெரிகிறது.

//ரப்பர் வந்த பெறவு மலையில் ஈரம் இல்ல, ஊற்று இல்ல.

இத்தனை செல்வம் எதற்கு மனிதனுக்கு? அது மனிதனை நல்ல வழியில் செல்லத் தூண்டாது… சுக போகங்களைக் குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிப்பது தான் மனிதமனம் கொள்ளும் வறட்சியின் எல்லை…

பிறர் உழைப்பிலும் உடைமையிலும் ஒரு அம்சத்தையாவது கவராமல் செல்வத்தை எப்படிக் குவித்துக்கொள்ள முடியும்? பணமும் பாபமும் பரஸ்பரம் பிரிக்க முடியாதவை.

ஒருபோதும் தன்னை மன்னித்துக்கொள்ள முடியாத செயலைச் செய்துகொண்டிருப்பதால்  உள்ளூர மனம் சொன்னது. ஆனால், குரூரமான வெறி எக்களிப்புடன் அந்த விளையாட்டைத் தொடர்ந்தார் வேறு வழி ஏதும் இருக்கவில்லை.

லாரன்ஸ் புன்னகையுடன், “ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை” என்றான்.

பிரான்ஸின் சட்டென்று புல்லரித்தான் எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத் திரும்பக் கேட்டும் ஏன் மனதைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா? ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வரவேண்டுமா?அந்த வார்த்தைகளைப் பலமுறை மனதுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை மந்திரம்போல் அவனுள் விரிந்தன. புதுப்புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை!//

இப்படியெல்லாம் ஒரு நாவலில் அதுவும் முதல் நாவலில் எழுத முடிந்தது ஏனெனில் அவருக்கு எந்தக் கட்டும் இல்லை. ஆனால், சினிமாவில் அப்படியன்று அவர் பணத்துக்காக மட்டுமே வசனங்களை எழுதுகிறார்.  ஆனாலும், அவரால் சினிமாவைத் தவிர்க்க இயலவில்லை என்பதை இலக்கிய வாசகர் அவரது பலவீனமாகத்தான் கருதுவார். அவரது இலக்கிய வாசகர்களுக்கு அவருடைய திரைப்படப் பங்களிப்பு எப்போதுமே திருப்தியை அளிக்கப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அதற்கு பொன்னியின் செல்வன் படமும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. பொன்னியின் செல்வன் மணி ரத்னம் காட்சிகளின் பிரம்மாண்டத்தால் கட்டியெழுப்பும் பெரும் மாளிகை அங்கே வசனங்களால் சிறு சிறு தீட்டல்களைத் தரும் வாய்ப்பு மட்டுமே ஜெயமோகனுக்கு இருக்கிறது.  ஆக, ஜெயமோகனுக்காக வரும் ரசிகருக்கு பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தையே தரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.   இலக்கியத்தில் அவர் வாழை மரம் என்றபோதும் சினிமாவில் அவர் ஒரு ரப்பர் மரமே.

வியாழன், செப்டம்பர் 30, 2021

கதாநாயகர் பிடியிலிருந்து விலகிடுமா தலித் சினிமா?

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று அவர் தான் நடிக்கும் ஜெய் பீம் என்னும் படத்தின் போஸ்டரைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுவரை சூர்யா 39 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த படத்தின் பெயரையும் போஸ்டரையும் ரசிகர்களுக்காகப் பரவசத்துடன் பகிர்வதாகவும் தெரிவித்திருந்தார். அந்த டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களது ஒட்டுமொத்தக் கவனமும் ஜெய் பீம் மீது திரும்பியது. ஏற்கெனவே சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அது திராவிட அரசியல் பேசியதாகச் சொல்லப்பட்டது. கடந்த முறை சூர்யாவின் திரைப்படம் திராவிட அரசியல் பேசி வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் இம்முறை தலித் அரசியலைப் பயன்படுத்தி வெற்றிபெற முயல்கிறதோ என்னும் எண்ணத்தை அந்த போஸ்டர் ஏற்படுத்தியது. சூரரைப் போற்று திரைப்படம் போலவே ஜெய் பீம் திரைப்படமும் அமேசான் பிரைமில் அதுவும் தீபாவளி நாளன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வைத்து அந்தப் படத்தின் கதையையோ அந்தப் படம் விவாதிக்கும் விஷயத்தையோ முடிவுசெய்திட முடியாது. ஜெய் பீம் பட போஸ்டரில் வெளிப்பட்டிருக்கும் சூர்யாவின் தோற்றத்தை வைத்து அவர் ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கலாம் என ஊகிக்க வாய்ப்புள்ளது. ஏழை எளியவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக அவர் இருக்கலாம். நீதியரசர் சந்த்ரு வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பெண் ஒருவருக்காக 1990களில் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையிலான படம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அவற்றை எல்லாம் நாம் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், படம் எப்படியிருக்கும் என்பது தொடர்பான ஓர் எதிர்பார்ப்பை அந்த போஸ்டர் உருவாக்கியது. ஒருவேளை அது தலித் அரசியலைப் பேசலாம் என ஊகிக்க அந்த போஸ்டர் இடம்கொடுத்தது. இது திட்டமிட்ட ஏற்பாடாக இருக்கலாம்.  

தொடர்ந்து எந்த வகைப் படங்கள் வெற்றிபெறுகின்றன என்பதைக் கவனித்து அப்படியான படங்களை சினிமாக்காரர்கள் உருவாக்குகிறார்கள். காதல் படங்கள் வெற்றிபெற்றால் காதல் படங்களாக வரும். இப்போது தலித் படங்களுக்கான காலம்.  பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்துக்குப் பின்னர் தலித் படங்கள் பற்றிய பேச்சு தமிழ்த் திரையுலகில் பரவலானது எனலாம். மெட்ராஸ் படத்தின் வெற்றியை அடுத்து இரஞ்சித் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார். கபாலி ரஜினி படமாக இருந்தபோதும், இதுவரை ரஜினி படம் எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்காமல் இருந்த நிலை மாறியது. ஏழை எளியவரின் நாயகனாக இருந்த ரஜினி தலித்துகளின் நாயகனாகப் பரிணமித்திருந்தார். கோட் சூட் அணிந்து, சோபாவில் அமர்ந்து ரஜினி சீன வில்லனுக்கு எதிராக, ”நான் முன்னுக்கு வருவதுதான் ஒனக்கு பிரச்சினைன்னா நான் முன்னுக்கு வருவேன்டா கோட் சூட் போடுவேன்டா” என்று பேசும் வசனமும் ரஜினி தலித் அரசியல் பேசுவதான தோற்றத்தைத் தந்தது. இந்த பாணி ரஜினிக்கும் பிடித்துப்போயிருக்கலாம் உடனே அடுத்த படத்தின் இயக்குநராகவும் இரஞ்சித்தை அமர்த்திக்கொண்டார். காலா படமாக்கப்பட்டது. இதிலும் தலித் அரசியலை நினைவுபடுத்தும் வசங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ரஜினியே தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துவிட்டதால் தலித் படங்களுக்கான சந்தை இருப்பது உறுதிப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் என வெளியான படங்களின் வெற்றி தலித் அரசியலுக்குப் பெரிய சந்தை இருக்கிறதோ என்ற எண்ணத்தைப் பரவலாக்கியிருக்கலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் தலித்துகள் பற்றிய சித்தரிப்பு இரஞ்சித் படங்களுக்கு முன்னர் இடம்பெற்றதே இல்லையா என்றால் இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கி, 1936இல் வெளியான பாலயோகினி திரைப்படத்திலேயே சாதி வேற்றுமைகளைச் சாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் பட்டியலின வேலைக்காரர் வீட்டில் பார்ப்பனக் கைம்பெண் ஒருவர் அடைக்கலமாவார். இதனால் ஆத்திரம் அடைந்த வைதீகர்கள் பட்டியலின வேலைக்காரர் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள். இவரது இயக்கத்தில் 1939இல் வெளியான தியாகபூமி படத்தில் ஒடுக்கப்பட்டோருக்குக் கோயிலில் இடம்கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 1987இல் மு.கருணாநிதி கதை வசனத்தில், சொர்ணம் இயக்கத்தில் ஒரே ரத்தம் என்றொரு படம் வெளியானது. இதிலும் ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் தீங்குகள், தீண்டாமை குறித்த காட்சிகள் உண்டு. இந்தப் படத்தில் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நந்தகுமார் என்னும் தலித் இளைஞனாக வேடமேற்றிருப்பார். இரட்டைக் குவளை தொடர்பான காட்சிகூட இடம்பெற்றிருக்கும்.

1985ஆம் ஆண்டில் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் விஜய்காந்த் நடிப்பில் வெளியான அலை ஓசை படத்தில் இளையபாரதி எழுதி இளையராஜா இசை அமைத்த ‘போரடடா ஒரு வாளேந்தடா’ என்னும் பாடல் அது வெளியான காலத்தைவிட அண்மைக் காலத்தில்தான் அதிகம் ஒலித்திருக்கிறது. எண்பதுகளில் இந்தப் படம் சராசரியான பொழுதுபோக்குப் படம் என்ற முத்திரையை மட்டுமே பெற முடிந்தது. இப்போது அந்தப் பாடலுக்குக் கிடைத்த கவனம் அப்போது கிடைத்ததா என்பது சந்தேகம்தான்.

இப்படி ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் துயரங்கள் தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பேசப்பட்டிருந்தாலும் தமிழில் தலித் சினிமா என்னும் பேச்சு இப்போதுதான் காதுகளில் ஒலிக்கிறது. இதுவரை பார்ப்பனரும் ஆதிக்கசாதியினருமான ஒடுக்கியவரே ஒடுக்கப்பட்டவருக்கான நியாயத்தைப் பேசிவந்தார். அந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. உள்ளேயிருந்த வரும் குரலாக இப்போது தலித்துகளின் குரல் வெளிப்படுகிறது. குனிந்து குனிந்து கிடந்தவர்கள் குமுறி எழுந்து கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. உதாரணமாக, காலா திரைப்படத்தில் ஹரிதாதா காலா வீட்டில் தண்ணீர் குடிக்காத காட்சிக்குப் புதியதொரு அர்த்தம் கிடைத்தது அதனால்தான்.    

அதே நேரத்தில் தலித் படங்கள் எனப் பெரிய அளவில் விதந்தோதப்பட்ட மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் கவனிக்கப்பட்ட அளவுக்கு தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசிய அம்ஷன்குமார் இயக்கிய மனுஷங்கடா, லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி ஆகிய படங்கள் பெரிதாகக் கவனிக்கப்படவில்லையே?  அதில் சொல்லிக்கொள்ளும்படியான நாயகர்கள் இல்லாததாலா?

பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில், “இங்க வாய்ப்புன்றது நமக்குல்லாம் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிட்றது கெடயாது இது நம்ம ஆட்டம் எதுக்க நிக்கிறவன் கலகலத்துப்போகணும்… நீ ஏறி ஆடுடா கபிலா இது நம்ம காலம் பாத்துக்கலாம்” எனும் வசனம் ஒலிக்கும்போது, பின்னணியில் சுவரில் அம்பேத்கர் படம் போட்ட சுவரொட்டி தென்படும். இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, இந்தப் படத்துக்கு வேறொரு புரிதல் கிடைத்துவிடுகிறது. அதனடிப்படையில் இதை தலித் படம் எனச் சொல்லிவிட முடியுமா? இது குத்துச் சண்டை தொடர்பான சுவாரசியமான பொழுதுபோக்குப் படம்தானே?

இந்தப் பின்னணியில், சூர்யாவின் ஜெய் பீம் படத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இருளர் பின்னணியில் உள்ளதால் அது தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசும் படமாக இருக்குமா? அப்படியிருப்பின் நல்லது. ஒருவேளை அம்பேத்கரின் சாயலைக் கொண்டு வணிக வெற்றியடைய முயலும் தந்திரமாக இருந்தால்? ஏனென்றால், அம்பேத்காரின் கொள்கைகளை விவாதிப்பதைவிட அவரது படம், புத்தர் சிலை, நீல நிற கோட் போன்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு பிரபல நடிகர்களைத் தீப்பொறி பறக்கும் வசனம் பேசவைத்தால் போதும் அது தலித் சினிமாகிவிடும், ரசிகர்களுக்கும் கிளர்ச்சி கிடைத்துவிடும் என்று சினிமாக்காரர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.  

கதாநாயகர்கள் எந்தச் சட்டையையும் அணிந்துகொள்வார்கள். அது நீல நிறமோ சிவப்பு நிறமோ கறுப்பு நிறமோ அது பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை வெற்றி, அவ்வளவுதான். ஆனால், இரஞ்சித் போன்ற இயக்குநர்களின் விழைவு வெறும் வணிக வெற்றி மட்டும் இல்லையே, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையில்லையா? அப்படியான நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய படங்கள் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் ஒருபோதும் உருவாக மாட்டா. தலித்துகளின் வாழ்வியல் சிக்கல்களை, சமுதாயம் அவர்களை நடத்தும் விதத்தை விமர்சிக்கும் படங்களில் ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் நடிப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அந்த மட்டோடு நகர்ந்துவிட வேண்டும் அதை ஆராதனைக்குரிய விஷயமாகக் கருதி பெருமிதச் சுழலில் சிக்கிடுதல் நல்லதன்று. அப்படிச் சிக்கினால், மீண்டும் மீண்டும் ஹீரோயிஸப் படங்கள் உருவாகிவிடலாம். நாயக அம்சங்களில் மூழ்கித் தோய்ந்த படங்களை ஒடுக்குபவர் உருவாக்குவதைப் போல் ஒடுக்கப்பட்டவர் உருவாக்குவதும் ஆபத்தே. திரைப்படச் சக்கரம் அப்படியொரு சகதிக்குள் சிக்காமல் நகர்ந்துவிடுவதே நல்லது.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

‘அண்ணாத்த’ அரசியல் எடுபடுமா?


தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்றே சொல்லப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது படங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் மறுக்கவியலா உண்மை. உதாரணங்களாக மாவீரன், ஸ்ரீராகவேந்திரர், பாண்டியன், உழைப்பாளி, அருணாசலம், பாபா, லிங்கா போன்ற படங்களைக் குறிப்பிட முடியும்.

ரஜினி காந்த் தனது படங்களை வெற்றிபெற வைக்கக் கையாண்ட உத்திகளில் ஒன்று அரசியல். ரஜினியின் நிஜ அரசியல் அவரது காலைவாரிவிட்டுவிட்டபோதும், அவரது சினிமா அரசியல் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அது இந்தத் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தைக் கரைசேர்க்குமா? ஏன் இப்படி ஒரு கேள்வி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1996இல் வெளியான முத்து திரைப்படம் தொடங்கி இதுவரை ரஜினி காந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக இலைமறைகாயாகப் படங்களில் உணர்த்தியோ திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் மேடைகளில் பேசியோ அவற்றை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திவந்தார். முதன்முறையாக இப்போது அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் அவரது படம் ஒன்று வெளியாகப் போகிறது. இந்தச் சூழலில் அரசியலுக்கும் அவருக்கும் முகிழ்த்த உறவிழை குறித்த நினைவை ஓட விடுவோம்.    

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னணி நடிகர் என்னும் இடத்தைக் கடந்து தமிழ்நாட்டின் முதன்மை நட்சத்திரமானார். திரைப்படங்களில் கிடைத்த தொடர் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயரானது ரஜினி காந்த். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த காலத்தில் திரைத்துறையில் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ரஜினி காந்த் மீது அரசியல் காற்றுவீசத் தொடங்கியது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்தான்.

1987இல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஊர்க்காவலன்  திரைப்பட வெற்றிவிழாவின் போது, ‘வரவிருக்கும் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்னும் பொருள் தொனிக்கும் வகையில் அவர் பேசியது நாளேடுகளில் செய்தியானது. இப்படி மேடையில் அரசியல் பேசினாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 1988இல் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், “எனக்குக் கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனப் பாடி நடித்திருந்தார் அவர். ஜானகி எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஜானகி எம்.ஜி.ஆருக்கு எதிர்நிலையிலிருந்த ஜெயலலிதாவுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. மேலும், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனால் ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவின் பார்வையில் கேலிக்கு ஆளானது. இதுதான் ஜெயலலிதா, ரஜினி இருவருக்குமிடையேயான மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும். 

அதைத் தொடர்ந்து 1989 தீபாவளி நாளில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பணத் திமிர் படைத்த மாமியாரின் கொட்டத்தை அடக்கும் மாப்பிள்ளையாக நடித்திருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தப் படத்தின் பெரிய அளவிலான வெற்றியே ரஜினியின் ‘சினிமா வெற்றிக்கு அரசியல் முலாம்’ என்னும் உத்திக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். திரைக்கு வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு திசைக்கு நகர வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கு உதவியது அரசியல்.   

1990இல் வெளியான அதிசயப் பிறவி என்னும் திரைப்படத்தில் ரஜினியைக் காட்டி, நடிகர் சோ, “பூவுலகில் இந்த முகத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு இவரைப் போன்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அரசியல்வாதிகளே அஞ்சி நடுங்குகிறார்கள்” என வசனம் பேசுவார். அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமே இல்லாத ரஜினி காந்த் இப்படியான வசனங்களை ஏன் அனுமதித்தார்? ரசிகர்களை உசுப்பேற்றி அவர்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க இத்தகைய வசனங்களும் காட்சிகளும் அவருக்கு உதவின. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லாம் ஆண்டவன் செயல் எனப் பூடகமாகச் சொல்வதன் மூலம் அவரால் தன் ரசிகர்களை எப்போதும் பரவச நிலையிலேயே வைத்திருக்க முடிந்தது.

1991 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியிலேயே ரஜினிகாந்தும் குடியிருந்துவந்தது இந்த அரசியல் விளையாட்டுக்கு மிகத் தோதாகிப்போனது. முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. ரஜினி என்னும் திரை நட்சத்திரம் இந்த விவகாரத்தை வெறுமனே கடக்க இயலாமல் தடுமாறினார். ஒருமுறை அவர் காரிலிருந்து இறங்கிச் செல்ல ஊடக வெளிச்சத்தில் அது சட்டென்று தமிழ்நாட்டுக்கான செய்தியானது. இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் சென்றிருக்கும். இப்படியான சம்பவங்களால் ரஜினி அரசியல் துறையில் குறுக்கீடு நிகழ்த்தியது காலத்தின் கட்டாயமானது. அந்தக் காலத்தில் வெளியான மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய முத்திரை வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசி மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள். முத்தாய்ப்பாக 1993 இல் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து என்னைக் கூலியா வச்சிருந்தான்; இன்னக்கி நடிகனாக்கியிருக்கான்; நாளக்கி…” என்று வசனம் பேசிச் சிரிப்பார் ரஜினி. ரசிகர்கள், தலைவா நாளக்கி நீ முதல்வர் என்று சொல்லி பூரிப்படைந்தார்கள். இவையெல்லாம் ரஜினிகாந்த் செவிகளையும் சென்றடைந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர். 1995ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பாட்ஷா பட விழாவில் வெடி குண்டு கலாச்சாரம் குறித்துப் பேசியபோது, சட்டென்று அனைவரது பார்வையும் அவர்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான உரசல் அதிகரித்தது.  அதன் பின்னர் 1996ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, ரஜினிக்கான அரசியல் பிரவேச வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததாக ரஜினி அரசியல் ஆலோசகர் என்ற நிலையிலிருந்த சோ ராமசாமி முதலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், ரஜினியோ அந்த வாய்ப்பில் பிரமாதமாகச் சொதப்பினார். அரசியலில் இறங்காமல், குரல் கொடுத்ததுடன் ஒதுங்கி நின்றுவிட்டார். அதன் பின்னர் ரஜினி காந்த் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவந்த காலம் போய் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகத் தொடங்கியது.

ஐம்பது வயதைத் தொட்ட நிலையில், அதுவரை திரைப்படங்களில் வசனம் பேசிய ரஜினி காந்த் மேடைகளில் வசனம் பேசத் தொடங்கினார். பாமக எதிர்ப்பு, காவிரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை அரசியல் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகள் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து அவரது படங்களும் வெளியாகும். ஆகவே, ஊடகங்கள் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைக் கட்டுரைகளாக எழுதித் தள்ளின. எப்படியும் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பிய அவரது ரசிகர்கள் அவரது படத்தைத் தொடர்ந்து பார்த்துவந்தனர்.

ரஜினியின் இந்த உத்தி எல்லா நேரத்திலும் அவரைக் காப்பாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனாலும், எல்லா நேரத்திலும் ரஜினி இந்த உத்தியை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினார். ஏனெனில், தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவிக்காமல், உள்ளங்கையைப் பொத்தியபடியே பூடகமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது முதன் முறையாக அரசியல் தொடர்பாகக் கையைவிரித்துள்ள நிலையில் அவரது படமான அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு சூழல் இது. அரசியல் என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளும் முன்னர் ரஜினி என்ற நடிகருக்கு இருந்த அதே வரவேற்பு இப்போதும் உள்ளதா என்பதை அண்ணாத்த வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இப்போதுகூட முற்றுப்புள்ளி வைத்த அரசியல் அரசியல் நாடகத்துக்கு ஒரு காற்புள்ளிவைத்து, சிறு கல்லெறிந்து பார்க்கிறார். வழக்கம்போல் ரஜினியிடம் ரசிகர்கள் ஏமாறுவார்களா, ரஜினி ரசிகர்களிடம் ஏமாறுவாரா? அண்ணாத்த ஒரு பாட்ஷாவாகுமா பாபாவாகுமா என்பதைப் பொறுத்தது அது.

இன்மதி இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை. 

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

அரசியல் சதுரங்கம் ஆட வருகிறாரா ஆளுநர்?

தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்னும் சொற்றொடர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்றபோதும், ஆளுநர் பதவி ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசு கண்காணிக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதான எண்ணம் சுயமரியாதையைப் போற்றும் எந்த மாநில அரசுக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், எந்தக் கட்சி  மத்தியில் ஆள்கிறதோ அந்தக் கட்சிக்குச் சார்பான ஒருவரே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகும் மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் பெரிதாகக் கருத்து வேற்றுமைகளோ மோதல்களோ ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசுடன் அரசியல்ரீதியாக முரண்படும் மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எப்போதும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருபவர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது இந்திய அரசியலை அறிந்த எவருக்கும் தெரிந்த செய்தியே. 

மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக எப்போதுமே ஆளுநரை ஆறாம் விரலாகத்தான் பார்க்கிறது. அரசியல் சாசனம் அனுமதித்தபோதும் அந்தப் பதவி அநாவசியம் என்றே அது நினைக்கிறது. அதனால் தான் கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் இல்லாத சமயத்தில் அப்படியோர் ஆளுநர் தேவை என்று திமுக கோரிக்கை வைத்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவைக் கிண்டல் செய்தார். திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா மட்டும் விதிவிலக்கு. அதேபோல் 1991இல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த சென்னாரெட்டிக்கும் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்குமான மோதல் போக்கு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது. ஆளுநர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும் அளவுக்கு அந்த மோதல் தரந்தாழ்ந்தவகையில் வெளிப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டு ஆளுநர் முதலமைச்சர் உறவு பெரிதாக மோதலோ சர்ச்சையோவின்றி மிகவும் அமைதியான முறையிலேயே இருந்தது.

இப்போது மாறுதலாகிச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்னும் பெயரில் நடத்திய நிகழ்வுகள் தமிழக அரசியல் நோக்கர்களைக் கொந்தளிக்கவைத்தன என்றபோதும், ஆளும் தரப்பு எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தாமல் எல்லாம் அவன் செயல் என்று காலம் கடத்தியது. இப்படியான சூழலைக் கடந்து வந்துள்ள தமிழ்நாட்டுக்கு இப்போது புதிதாக ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ரவீந்திர நாராயண ரவி. 1976இல் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பிஹாரைச் சேர்ந்த அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவலான முணுமுணுப்பு எழுந்தது. ஏனெனில், அவர் ஆளுநராக இருந்த நாகாலந்து மாநிலம் அந்த ஆளுநர் மாறிப்போவதைக் கொண்டாடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உளவுத் துறையின் அதிகாரியுமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசியலில் சிக்கலை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்படுகிறாரோ என்னும் அய்யத்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், முழுக்க, முழுக்கக் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார். இவை மட்டுமல்ல;  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதில், தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான அரசியல் பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுப்பதை அப்படியே விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் ஸ்டாலின் வரவேற்றிருப்பதையும் சாதாரணமானது என்று கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆளுநர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிவிட முடியாது என்பது வெளிப்படையான விஷயம். பதவியேற்ற நாள்முதலாக ஆளும் பாஜகவைச் சித்தாந்தரீதியில் எதிர்கொள்ளும் முதலமைச்சருக்கு ஒன்றிய அரசின் உண்மையான முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனில், அவர் ஏன் வாழ்த்தி வரவேற்கிறார்? அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு என்ன உணர்த்துகிறார்? நீங்கள் என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டை அசைத்துவிட முடியாது என்று சொல்ல நினைக்கலாம். சர்ச்சைக்குரிய மனிதரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் எங்களுக்கு ஒருவிதப் பதற்றத்தை  நீங்கள் உருவாக்க முயன்றால் நாங்கள் பதற்றமடையமாட்டோம் எனக் காட்டிக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம்.

அதே வேளையில் ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தைக் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு அம்பலப்படுத்தவும் முயலலாம். அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். ராஜாவைப் பாதுகாப்பது மட்டுமே சதுரங்கப் பலகையின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் இரு தரப்பினருக்கும் நோக்கம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதலமைச்சர் ஒரு புறம் இருக்கிறார் என்றால் ஒன்றிய அரசின் பக்கபலத்துடன் ஆளுநர் மறுபுறம் இருக்கிறார். எந்த வேளையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண்மைச்  சட்டங்கள், குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது. அனைவரையும் அர்ச்சகராக்கும் செயல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. இந்திய நாகரிகத்தைவிடத் தொன்மையானது தமிழ்நாட்டின் நாகரிகம் என்ற கருதுகோள் அழுத்தமாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முன்வைக்கப்படுகிறது. இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்ற முழக்கம் சென்னையில் ஒலித்தாலும் அது தில்லியை அதிரவைக்கிறது. அரசியல்ரீதியான எதிர்ப்புகளைவிடச் சிந்தாந்தரீதியான பண்பாட்டுரீதியான எதிர்ப்பை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் முதலமைச்சர் வெளிப்படுத்தும் வேளையில் இப்படியோர் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றால் அதை அப்படியே எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா என்ன? அதனால்தான் உடனடியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர். ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது தமிழ்நாடு. அதே நேரம் முதலமைச்சரோ வரவேற்புத் தெரிவிக்கிறார். ஆகவே, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஆளுநர் என்னும் பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் மிகவும் உன்னிப்பாகவும் அதே நேரத்தில் அநாயாசமாகவும் எதிர்கொள்ளத் தயாராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு பிடிப்பு கொண்ட மாநிலத்தில், மக்களின் பேராதரவைப் பெற்ற ஓர் ஆட்சியை, அதன் முதலமைச்சரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை உணராமல் இருக்காது ஒன்றிய அரசு. இது எதிரும் புதிருமான இரண்டு பலம் வாய்ந்தவர்களின் விளையாட்டு. இந்த விளையாட்டுத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது, இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆட்டத்தில் யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பதைவிட சுவாரசியமான ஆட்டம் ஒன்று அரங்கேறப்போகிறது என்பதே ஊடகங்களுக்கான செய்தி.   

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை.   

வியாழன், செப்டம்பர் 09, 2021

அரசியல் களத்து ஆயுதமா திராவிட அடையாளம்?


அண்மை நாள்களாக அரசியல் களத்தில் திராவிடக் களஞ்சியம் தொடர்பான விவாதம் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தமிழர் அடையாளங்களை அழித்தொழிக்க முயல்கிறது என தமிழ்த் தேசியவாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்போது இந்த விவகாரம் மிகச் சூடு பிடித்ததற்கு 2021 ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதமே காரணம். ஏனெனில் அந்த விவாதத்தின்போது, ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பத்தாம் அறிவிப்பு, சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாக வெளியிடும் திட்டம், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடும் திட்டம் ஆகியற்றைக் கொண்டிருந்தது.  இது போதாதா? கொதித்தெழுந்துவிட்டன தமிழ்த் தேசிய அமைப்புகள்.  தேசிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டின.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரான பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்களுக்குத் `திராவிடக் களஞ்சியம்என்ற பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல் என்றதுடன் இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த அறிவிப்பைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பொதுத் தளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கமளித்தார்.  எல்லோரும் சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள்  என்று அவர் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களை இந்தக் காலத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியதாகச் சந்தி பிரித்துச் செம்பதிப்புகளாக வெளியிடுவது ஒர் அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றோர் அறிவிப்பு. அதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கால்டுவெல், அஸ்கோ பர்ப்போலா, ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்றவை குறித்த விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் அதில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், தொல்காப்பியம் தொடங்கி முத்தொள்ளாயிரம் வரையிலான தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் இதற்காக வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் விட்டபாடில்லை. இந்த விவாதத்தைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் திமுக தலைவரை தமிழ்த் தேசியத்தை அழித்தொழிக்கும் ஒருவராக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் பேசும் பாஜக, தமிழ்த் தேசிய அரசியல் பேசும் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் இருவருமே தங்களது எதிராக திமுகவையே முன்னிருத்துகின்றன. தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றபோது அவர் இந்த அளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லையோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இப்போது திமுகவுக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.  திராவிட சிந்தாந்தத்தைப் பேசும் கட்சியாகத் திமுக இருந்தபோதும், கருணாநிதி தலைமையில் கட்சி நடத்தப்பட்டபோது, அதன் சித்தாந்தத்துக்கு இந்த அளவு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இப்போது திமுகவை மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தப்படும்போது சிந்தாந்தரீதியிலான நெருக்கடி முற்றிப்போயுள்ளது. மு.கருணாநிதியால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போது திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற அது மிகத் தீவிரமான இந்துத்துவ எதிர்ப்பைக் கையிலெடுக்க வேண்டியதிருந்தது.

தமிழ்நாட்டில் திராவிடச் சிந்தாந்தத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்து என்னும் ஒரு குடையின் கீழ் தமிழ் மக்களைத் திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அரசியல்ரீதியாக பாஜகவை எதிர்த்து நிற்கும் திமுக இட ஒதுக்கீடு, அனைவரும் அர்ச்சகர் முதலான அம்சங்களின் மூலம் தாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாஜக என்ற நேரடி எதிரியை அரசியல் களத்தில் எதிர்கொள்ளும் திராவிடக் கட்சியான திமுகவுக்கு தமிழ்த் தேசியம் என்னும் உடன்பிறந்த சகோதரத் தொல்லைகளும் உள்ளன. தமிழர் என்றும், திராவிடர் என்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் விவாதங்கள் இன்று நேற்று தொடங்கியவையல்ல. பெரியார், மறைமலையடிகள் காலம் தொட்டே இருந்துவருபவை.

ஆகவே, பாஜகவின் இந்துத்துவத்தையும் நாம் தமிழரின் தமிழ்த் தேசியத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அது திராவிட சித்தாந்தத்தை வலுவுடன் கைப்பற்றிக்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாதது. இப்போதைய திமுக அரசின் நிலைப்பாடுகள் திராவிடச் சிந்தாந்தத்தில் ஊறிப்போனவை என்பதான எண்ணைத்தையே தருகின்றன. அதன் அண்மைக்காலச் சான்றென திராவிடக் களஞ்சிய அறிவிப்பைச் சொல்லலாம். கட்சியில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பெரிய பொறுப்பை இப்போது திமுக நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது. அதற்காகவே இந்தத் திராவிட களஞ்சியம் அறிவிப்பை அது வெளியிட்டிருக்கிறது. திராவிட என்ற சொல் இந்துத்துவவாதிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்துகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே அது திராவிட அடையாள அரசியலைத் தனது ஆயுதமாக ஏந்திக்கொண்டது கண்கூடு. திராவிட சிந்தாந்த அரசியல் பேசுவதும் அதை ஆயுதமாக ஏந்திக்கொள்வதும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு நலனுக்கும் உகந்தது என்பதே திராவிடச் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களது கருத்து. திராவிடக் கொள்கைகளை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டுசென்றால் மட்டுமே தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் சிந்தாந்தப் போரில் வெற்றியைப்பெற முடியும் என்று திமுகவும் ஸ்டாலினும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது.

தங்களது இனம் திராவிடம் என்றும் தாங்கள் பேசும் மொழி தமிழ் என்றும் தொடர்ந்து திராவிட ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். திராவிடமும் ஆரியமும் ஒன்றுக்கொண்டு எதிரான அரசியல் நிலைகளில் உள்ளன. எப்போதுமே திராவிடத்தை அழிக்கவும் ஒழிக்கவும் இங்கிருந்தே எதிர்களை உருவாக்குவது ஆரியத்தின் சூழ்ச்சி. எப்போதுமே திராவிடர்களது ஒன்றுதிரளலைத் தடுக்க முயலும் ஆரியம் திராவிடத்துக்கான பகையை இங்கே திராவிட நிலத்திலேயே உருவாக்கும். இதற்குத்  தமிழ்த் தேசியம் பயன்படுகிறது என்னும் குற்றச்சாட்டு திராவிடர்கள் எப்போதும் முன்வைக்கிறார்கள். ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சிக்கான உரிமைக் குரல், சாதி,மதரீதியான சமத்துவம் போன்றவை  திராவிடச் சிந்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

அதனால்தான் திமுக அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நடைமுறைப்படுத்தியுள்ளது; கீழடி போன்ற தமிழர் பண்பாட்டு ஆய்வுகளை முன்னெடுக்கிறது; வ.உ.சிதம்பரானார் போன்ற தலைவர்களைக் கொண்டாடுகிறது;  தமிழ்ப் பெருமிதமான ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த விழைகிறது திராவிடர் குறித்த களஞ்சியங்களை உருவாக்குவது போன்ற பண்பாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக திமுக ஈடுபடுகிறது. சிந்தாந்த அடிப்படையிலான கொள்கைப் பிடிப்பும் அது தொடர்பான அடையாளங்களைப் பாதுகாப்பதுமே திமுகவுக்கு அரசியல்ரீதியான பலன் தரும் என்பதை ஸ்டாலினும் சரி திமுகவினரும் சரி உணர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட சிந்தாந்த விஷயத்தில், திமுகவின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதியைவிட மிகத் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே அரசியல் களத்தினர் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான்.

அதே நேரத்தில் இந்துத்துவவாதிகளைப்போல் பிற மதத்தினரைத் தேடித் தேடித் துன்புறுத்தும் வேலை போன்ற அடாவடித்தனங்களில் திமுக ஈடுபடவில்லை. திராவிடத்தின் ஒரு கொள்கையாக கடவுள் மறுப்பு உள்ளது என்றபோதும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கையே திமுக அரசு கைக்கொள்கிறது. இறுக்கமான ராணுவக் கெடுபிடி என்னும் ரீதியில் கொள்கைகளைப் பின்பற்றாமல் தேவைப்படும் வேளையில் நெகிழ்ந்துகொடுக்கிறது திமுக.  இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. திராவிடப் பெருமிதங்கள் ஒரு புறம் இருந்தாலும் அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் தொடர்ந்து திமுக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் நலனை விரும்புபவர்களின் எண்ணம். இந்துத்துவ அரசியலைப் போன்று எதிர்தரப்பினரை எதிரிகளாகவே கருதி அவர்களை ஒழிக்க முயலாதவரை திராவிட அடையாளங்களைக் கையிலெடுக்கும் திமுகவின் நடவடிக்கை அதற்கு அனுகூலத்தையே தரும் என்பதே உண்மை. 

டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக ரோஹின் என்னும் பெயரில் எழுதி வெளியானது.

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

பாலியல் குற்றங்களின் அரசியல்


ஆண் பெண் உறவு குறித்த பக்குவத்தை நம் சமூகம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையோ அந்த உறவு தொடர்பான புரிதலை வளர்த்துக்கொள்ளவில்லையோ என்னும் எண்ணத்தை வலுப்படுத்தும்படியான பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறியவண்ணமே உள்ளன. அண்மைச் சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுக்குவிடப்பட்ட கே.டி.ராகவன் வீடியோவைச் சொல்லலாம். பருவம் வந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட, அந்தரங்க உறவைப் பொதுவெளியில் பகிரும் நாகரிகமற்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கும் நடிகைக்குமான ரகசிய உறவைத் தமிழ்நாட்டின் முக்கிய செய்தி அலைவரிசை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. முக்கியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரது பாலியல் வீடியோ ஒன்று இதைப் போல் பொதுவெளியில் கசியவிடப்பட்டது. அந்த வேட்பாளர் அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார் என்பதையும் மறந்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரது பாலியல் வீடியோவையும் தமிழ்ச் சமூகம் பார்த்தது. இப்படியான விஷயங்கள் தொடர்பாக அநேக மீம்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழர், பண்பாடு, பாரம்பரியம், பெருமை பேசும் தமிழ்நாட்டில் இன்னும் இத்தகைய வீடியோக்கள் வெகுமக்கள் பரப்பைச் சுவாரசியப்படுத்தும் போக்கு கண்டு நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். ஆனாலும், எவரும் அப்படியொரு வெட்கம் கொள்ளாமல் தங்களது பாலியல் அரிப்பைத் தீர்க்கும் பேசுபொருளாக இப்படியான விஷயங்களைக் கருதுகிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பு அச்சம் தரத்தான் செய்கிறது ஆனாலும், நடைமுறையில் நமது நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?  

ஆணும் பெண்ணும் இணங்கிக் கொள்ளும் உறவை வரம்பற்ற நட்பை மூன்றாம் மனிதர் கேள்விகேட்பதோ அப்படியான உறவில் தலையிடுவதோ நாகரிக சமுதாயத்தில் அநாகரிகமாகவே பார்க்கப்படும். திருமணம் தாண்டிய உறவுகளில் ஏதேனும் சட்டப்பிரச்சினை இருந்தால் அது தொடர்பான மனிதர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். அதே வேளையில் அதிகாரம் காரணமாகவோ ஆதிக்கம் காரணமாகவோ பெண் ஒருவர் பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளானால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு பொதுச் சமூகம் அவர் பக்கம் நிற்க வேண்டும். இந்த இரண்டு வகைகளிலுமே முக்கிய ஆதாரமான வீடியோ, ஆடியோ போன்றவற்றைப் பொதுவெளியில் வெளியிட எந்த அவசியமும் இல்லை. நடைபெற்ற குற்றத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணங்களாகவே அவை கருதப்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில், மாநிலத்தில் இத்தகைய காட்சிகள் பொதுவெளியில் கேளிக்கைக்கான விஷயமாகச் சந்தி சிரிப்பது உள்ளபடியே அவமானமானகரமானதே.

தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்திருந்தவர் ஊடகத் துறையில் செயல்படுபவர். இந்த விஷயத்தை முன்னிட்டுத் தமிழ்ச் சமூகம் பெரிய விவாதங்களில் ஈடுபடுகிறது. பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாக முகம் சுளிக்கச் செய்யும் வகையிலான தொடர்பை ராகவன் பேணிவந்தது அந்த வீடியோவில் அம்பலமானது. அந்தப் பெண்ணுக்கும் ராகவனுக்கும் கட்சிரீதியான தொடர்பு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. கட்சிப் பெண்களிடம் அவர் தகாத செயலில் ஈடுபடுவதை அம்பலமாக்கும் வகையில் அந்த வீடியோ வெளியானதாகச் சொல்லப்பட்டது. உண்மை என்ன என்பது தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிச் செயல் என்பது போல் பார்க்கப்பட்டது. ஆனால், அது பரவிய வேகம் கே.டி.ராகவனை மாநிலத்தின் கடைசி மனிதர்வரை கொண்டுசேர்க்கச் செய்த ரகசியச் செயலோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போனது. அந்த அளவுக்கு இந்த வீடியோ ராகவனைப் பற்றிய அறியாத பலரிடமும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஒரு நல்ல விஷயம் பரவும் வேகத்தைவிட ஒரு கெட்ட விஷயம் மிகவும் வேகமாகவும் வீரியமாகவும் பரவிவிடுவது வருத்தம் தரக்கூடிய உண்மை. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்பது போல் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேம்போக்கான அந்தக் கருத்தும் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. அப்படியானால் இப்படித்தான் ஆண்கள் அனைவரும் நடந்துகொள்கிறார்களா, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வதைவிட அதை நியாயப்படுத்துவது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதான விமர்சனங்கள் எழுந்தன.

கே.டி.ராகவனோ தன்னையும் தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும், அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எந்தத் தவறும் செய்யாதபோது கட்சிப் பொறுப்பிலிருந்து ஏன் அவர் விலக வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. பழி விழுந்தபின்னர் பதவியில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்க முடியும் என அவர் தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறிய மதன் அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.  வீடியோ, ஆடியோ ஆகியவற்றை வெளியிட்ட மதன், வெண்பா ஆகிய இருவரும் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படியொரு வீடியோ தன்னிடம் உள்ளது என்பது தெரிந்த பின்னரும் அது பொதுவெளியில் பரவிடும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்த பின்னரும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.

அதே நேரத்தில் பாஜக போன்ற பலமானதொரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள மனிதர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு வீடியோவை சாதாரண ஊடகவியலாளர் ஒருவர் எளிதில் வெளியிட்டுவிட முடியுமா? அதையெல்லாம் கடந்து அந்த வீடியோவைத் துணிச்சலாக வெளியிட்டிருப்பதன் பின்னணியில் உள்ள விவகாரம் சாதாரணமாக இருக்குமா என்னும் ரீதியில் அரசியல் விமர்சகர்கள் இந்த விஷயத்தை விவாதத்துக்கு உட்படுத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலையும் அரசியல்ரீதியாகத் தன்னை வந்து சந்திக்கும் கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் தான் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றிக் கூறிய கருத்துகளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படியான விஷயங்களை மொத்தமாகப் பார்க்கும்போது, பெண்கள் பற்றிஆண்கள் கொண்டிருக்கும் பழமைவாத எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அவை உள்ளன.

யாராவது ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால் உடனே அவரது பாலியல் தொடர்பான விஷயங்களை அம்பலப்படுத்துவது, பெண் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவரது பாலியல்நடத்தையைக் கேள்விக்குட்படுத்துவது போன்றவை மிகவும் அநாகரிகமான செயல்கள். இதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. சூழலின் ஆரோக்கியமற்ற தன்மைக்கு என்ன காரணம்? இங்கே நாகரிமற்ற நடவடிக்கை என இத்தகைய வீடியோக்களைக் குறிப்பிடுவது, அது இருவர் ஒப்புதலுடன் நடைபெற்ற அந்தரங்கச் செயல் என்னும் நம்பிக்கையில்தான். அதேவேளையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தின் ரணம் இன்னும் நம் மனத்தில் ஆறாமல் அப்படியேதான் உள்ளது. இப்படியான சம்பவங்கள் ஆணாதிக்கச் சூழல் இன்னும் அகலவில்லை என்பதையே காட்டுகிறது. ராகவன் தொடர்பிலான வீடியோ எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது முறையான விசாரணை வழியாகவே தெரியவரும்.

அரசியலில், திரைப்படத் துறையில், அரசு, தனியார் நிறுவனங்களில், பள்ளி கல்லூரிகளில் என எங்கெங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். துணிச்சல் கொண்ட பெண்கள் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறார்கள். அதேவேளையில் பெண்களில் பலர் இத்தகைய சம்பவங்களை சிவ பெருமான் தொண்டையில் சிக்கிய ஆலகால விஷம் போல் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். படிநிலையில் தங்களைவிட மேலே இருக்கும் ஆண்கள் தங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுக்குட்படுத்தும்வேளையில், துணிச்சலான பெண்கள் பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டும் பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் பிற்போக்குத் தனம் இங்கு நிலவுகிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பிற்போக்குத்தனத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டாமா?

பெண்களின் பாலியல்ரீதியான பாதுகாப்புக்கு வழிகோலும் விசாகா கமிட்டி போன்ற அம்சங்களால்கூட இன்னும் ஆக்கபூர்வமான பலன்கள் கிட்டிவிடவில்லை. விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிறுவங்களிலேயே கூட பெண்ணுக்கு எதிரான இப்படியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் நாம் அறியாத உண்மை அல்ல. ஒப்புக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரமிகு பதவியில் ஆண் இருப்பின் பெண்கள் ஒடுக்கப்படுவதும் ஊமையாக்கப்படுவதும் வெகு சாதாரணமாக நிகழ்ந்துவருகின்றன. ஆனாலும், இவற்றைக் கண்டும் காணாமலும் நாம் போகிறோம். சிவபெருமான் தன் உடம்பின் பாதியை உமையவளுக்குக் கொடுத்தார் என்று சொல்கிற நாம்தான் அதே உமையவளைப் போன்ற பெண் ஒருவரைத் தகாத வகையில் நடத்தத் துடிக்கிறோம். பாலியல் என்னும் மிருக உணர்ச்சிக்கு இன்னும் இப்படியான அத்துமீறல்கள் வழியே தீனி போட முயல்வது குறித்து வெட்கப்பட வேண்டாமா? பதவியும் அதிகாரமும் பணமும் தரும் போதையில் நெறிதவறும் பெரும்பாலானோரின் இலக்கு பெண்களாகவே இருப்பது பற்றி பண்பாடு மிக்க ஒரு சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என்று தணியும் இந்த பாலியல் மோகம்? சட்டப்படியான தண்டனைகள் பெற்றுத்தர வாய்ப்பு இருந்தபோதும், பெண்ணை சக உயிர் என்று உணராதவரையிலும், தனிமனிதர் திருந்தாதவரையிலும் இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்யும் என்பது கசப்பான உண்மை.  

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது.