இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

பாலியல் குற்றங்களின் அரசியல்


ஆண் பெண் உறவு குறித்த பக்குவத்தை நம் சமூகம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையோ அந்த உறவு தொடர்பான புரிதலை வளர்த்துக்கொள்ளவில்லையோ என்னும் எண்ணத்தை வலுப்படுத்தும்படியான பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறியவண்ணமே உள்ளன. அண்மைச் சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுக்குவிடப்பட்ட கே.டி.ராகவன் வீடியோவைச் சொல்லலாம். பருவம் வந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட, அந்தரங்க உறவைப் பொதுவெளியில் பகிரும் நாகரிகமற்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கும் நடிகைக்குமான ரகசிய உறவைத் தமிழ்நாட்டின் முக்கிய செய்தி அலைவரிசை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. முக்கியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரது பாலியல் வீடியோ ஒன்று இதைப் போல் பொதுவெளியில் கசியவிடப்பட்டது. அந்த வேட்பாளர் அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார் என்பதையும் மறந்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரது பாலியல் வீடியோவையும் தமிழ்ச் சமூகம் பார்த்தது. இப்படியான விஷயங்கள் தொடர்பாக அநேக மீம்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழர், பண்பாடு, பாரம்பரியம், பெருமை பேசும் தமிழ்நாட்டில் இன்னும் இத்தகைய வீடியோக்கள் வெகுமக்கள் பரப்பைச் சுவாரசியப்படுத்தும் போக்கு கண்டு நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். ஆனாலும், எவரும் அப்படியொரு வெட்கம் கொள்ளாமல் தங்களது பாலியல் அரிப்பைத் தீர்க்கும் பேசுபொருளாக இப்படியான விஷயங்களைக் கருதுகிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பு அச்சம் தரத்தான் செய்கிறது ஆனாலும், நடைமுறையில் நமது நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?  

ஆணும் பெண்ணும் இணங்கிக் கொள்ளும் உறவை வரம்பற்ற நட்பை மூன்றாம் மனிதர் கேள்விகேட்பதோ அப்படியான உறவில் தலையிடுவதோ நாகரிக சமுதாயத்தில் அநாகரிகமாகவே பார்க்கப்படும். திருமணம் தாண்டிய உறவுகளில் ஏதேனும் சட்டப்பிரச்சினை இருந்தால் அது தொடர்பான மனிதர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். அதே வேளையில் அதிகாரம் காரணமாகவோ ஆதிக்கம் காரணமாகவோ பெண் ஒருவர் பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளானால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு பொதுச் சமூகம் அவர் பக்கம் நிற்க வேண்டும். இந்த இரண்டு வகைகளிலுமே முக்கிய ஆதாரமான வீடியோ, ஆடியோ போன்றவற்றைப் பொதுவெளியில் வெளியிட எந்த அவசியமும் இல்லை. நடைபெற்ற குற்றத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணங்களாகவே அவை கருதப்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில், மாநிலத்தில் இத்தகைய காட்சிகள் பொதுவெளியில் கேளிக்கைக்கான விஷயமாகச் சந்தி சிரிப்பது உள்ளபடியே அவமானமானகரமானதே.

தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்திருந்தவர் ஊடகத் துறையில் செயல்படுபவர். இந்த விஷயத்தை முன்னிட்டுத் தமிழ்ச் சமூகம் பெரிய விவாதங்களில் ஈடுபடுகிறது. பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாக முகம் சுளிக்கச் செய்யும் வகையிலான தொடர்பை ராகவன் பேணிவந்தது அந்த வீடியோவில் அம்பலமானது. அந்தப் பெண்ணுக்கும் ராகவனுக்கும் கட்சிரீதியான தொடர்பு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. கட்சிப் பெண்களிடம் அவர் தகாத செயலில் ஈடுபடுவதை அம்பலமாக்கும் வகையில் அந்த வீடியோ வெளியானதாகச் சொல்லப்பட்டது. உண்மை என்ன என்பது தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிச் செயல் என்பது போல் பார்க்கப்பட்டது. ஆனால், அது பரவிய வேகம் கே.டி.ராகவனை மாநிலத்தின் கடைசி மனிதர்வரை கொண்டுசேர்க்கச் செய்த ரகசியச் செயலோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் போனது. அந்த அளவுக்கு இந்த வீடியோ ராகவனைப் பற்றிய அறியாத பலரிடமும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஒரு நல்ல விஷயம் பரவும் வேகத்தைவிட ஒரு கெட்ட விஷயம் மிகவும் வேகமாகவும் வீரியமாகவும் பரவிவிடுவது வருத்தம் தரக்கூடிய உண்மை. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்பது போல் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேம்போக்கான அந்தக் கருத்தும் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. அப்படியானால் இப்படித்தான் ஆண்கள் அனைவரும் நடந்துகொள்கிறார்களா, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வதைவிட அதை நியாயப்படுத்துவது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதான விமர்சனங்கள் எழுந்தன.

கே.டி.ராகவனோ தன்னையும் தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும், அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எந்தத் தவறும் செய்யாதபோது கட்சிப் பொறுப்பிலிருந்து ஏன் அவர் விலக வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. பழி விழுந்தபின்னர் பதவியில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்க முடியும் என அவர் தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறிய மதன் அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.  வீடியோ, ஆடியோ ஆகியவற்றை வெளியிட்ட மதன், வெண்பா ஆகிய இருவரும் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படியொரு வீடியோ தன்னிடம் உள்ளது என்பது தெரிந்த பின்னரும் அது பொதுவெளியில் பரவிடும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்த பின்னரும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.

அதே நேரத்தில் பாஜக போன்ற பலமானதொரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள மனிதர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு வீடியோவை சாதாரண ஊடகவியலாளர் ஒருவர் எளிதில் வெளியிட்டுவிட முடியுமா? அதையெல்லாம் கடந்து அந்த வீடியோவைத் துணிச்சலாக வெளியிட்டிருப்பதன் பின்னணியில் உள்ள விவகாரம் சாதாரணமாக இருக்குமா என்னும் ரீதியில் அரசியல் விமர்சகர்கள் இந்த விஷயத்தை விவாதத்துக்கு உட்படுத்திவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அண்ணாமலையும் அரசியல்ரீதியாகத் தன்னை வந்து சந்திக்கும் கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் தான் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றிக் கூறிய கருத்துகளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படியான விஷயங்களை மொத்தமாகப் பார்க்கும்போது, பெண்கள் பற்றிஆண்கள் கொண்டிருக்கும் பழமைவாத எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அவை உள்ளன.

யாராவது ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால் உடனே அவரது பாலியல் தொடர்பான விஷயங்களை அம்பலப்படுத்துவது, பெண் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவரது பாலியல்நடத்தையைக் கேள்விக்குட்படுத்துவது போன்றவை மிகவும் அநாகரிகமான செயல்கள். இதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. சூழலின் ஆரோக்கியமற்ற தன்மைக்கு என்ன காரணம்? இங்கே நாகரிமற்ற நடவடிக்கை என இத்தகைய வீடியோக்களைக் குறிப்பிடுவது, அது இருவர் ஒப்புதலுடன் நடைபெற்ற அந்தரங்கச் செயல் என்னும் நம்பிக்கையில்தான். அதேவேளையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதும் தொடர்ந்து வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தின் ரணம் இன்னும் நம் மனத்தில் ஆறாமல் அப்படியேதான் உள்ளது. இப்படியான சம்பவங்கள் ஆணாதிக்கச் சூழல் இன்னும் அகலவில்லை என்பதையே காட்டுகிறது. ராகவன் தொடர்பிலான வீடியோ எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது முறையான விசாரணை வழியாகவே தெரியவரும்.

அரசியலில், திரைப்படத் துறையில், அரசு, தனியார் நிறுவனங்களில், பள்ளி கல்லூரிகளில் என எங்கெங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் பெண்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். துணிச்சல் கொண்ட பெண்கள் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறார்கள். அதேவேளையில் பெண்களில் பலர் இத்தகைய சம்பவங்களை சிவ பெருமான் தொண்டையில் சிக்கிய ஆலகால விஷம் போல் விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். படிநிலையில் தங்களைவிட மேலே இருக்கும் ஆண்கள் தங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுக்குட்படுத்தும்வேளையில், துணிச்சலான பெண்கள் பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டும் பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் பிற்போக்குத் தனம் இங்கு நிலவுகிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பிற்போக்குத்தனத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டாமா?

பெண்களின் பாலியல்ரீதியான பாதுகாப்புக்கு வழிகோலும் விசாகா கமிட்டி போன்ற அம்சங்களால்கூட இன்னும் ஆக்கபூர்வமான பலன்கள் கிட்டிவிடவில்லை. விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிறுவங்களிலேயே கூட பெண்ணுக்கு எதிரான இப்படியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் நாம் அறியாத உண்மை அல்ல. ஒப்புக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரமிகு பதவியில் ஆண் இருப்பின் பெண்கள் ஒடுக்கப்படுவதும் ஊமையாக்கப்படுவதும் வெகு சாதாரணமாக நிகழ்ந்துவருகின்றன. ஆனாலும், இவற்றைக் கண்டும் காணாமலும் நாம் போகிறோம். சிவபெருமான் தன் உடம்பின் பாதியை உமையவளுக்குக் கொடுத்தார் என்று சொல்கிற நாம்தான் அதே உமையவளைப் போன்ற பெண் ஒருவரைத் தகாத வகையில் நடத்தத் துடிக்கிறோம். பாலியல் என்னும் மிருக உணர்ச்சிக்கு இன்னும் இப்படியான அத்துமீறல்கள் வழியே தீனி போட முயல்வது குறித்து வெட்கப்பட வேண்டாமா? பதவியும் அதிகாரமும் பணமும் தரும் போதையில் நெறிதவறும் பெரும்பாலானோரின் இலக்கு பெண்களாகவே இருப்பது பற்றி பண்பாடு மிக்க ஒரு சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என்று தணியும் இந்த பாலியல் மோகம்? சட்டப்படியான தண்டனைகள் பெற்றுத்தர வாய்ப்பு இருந்தபோதும், பெண்ணை சக உயிர் என்று உணராதவரையிலும், தனிமனிதர் திருந்தாதவரையிலும் இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்யும் என்பது கசப்பான உண்மை.  

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக