இந்தியாவின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ எனச் சொல்லப்படும் பிக் பாஸைக் கோடிக்கணக்கானோர் பார்ப்பதாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் சொல்கிறார். இந்த ஷோவின் ஐந்தாம் சீசன் அக்டோபர் மூன்றாம் நாளன்று தொடங்கியிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் எதிர்பார்ப்பது தாராளமாகக் கிடைக்கும் என்பது தெரிகிறது. பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்றுள்ள அபிஷேக் பிக் பாஸ் பற்றி முன்னர் கூறிய சர்ச்சைக் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. இப்படியான கவன ஈர்ப்புகளை பிக் பாஸ் தொடர்ந்து திட்டமிட்டுச் செய்கிறது. ஆக, சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை. அதே சர்ச்சை, தனி மனித அந்தரங்க அரட்டை எனத்தான் பிக் பாஸ் தொடரும் என்பதற்கான தடயங்கள் தென்படுகின்றன. பிக் பாஸ் பற்றிச் சமூக ஊடகங்கள் ஏராளமாக எழுதிவருகின்றன. நிகழ்ச்சிக்கு முன்னர் ஊகங்கள்; நிகழ்ச்சிக்குப் பின்னர் நாள்தோறும் விவரணைகள் என ஊடகங்களும் பிக் பாஸை விலாவாரியாக விவாதிக்கின்றன. இப்படியெல்லாம் விவாதிக்கப்படும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக முக்கியத்துவம் கொண்டதுதானா?
ஒரு
வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதுகிறோம். ஆனால், அப்படி
எட்டிப் பார்க்க நம்மில் பெரும்பாலானோர் ரகசியமாக ஆசைப்படுகிறோம். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான
வாய்ப்பை வழங்குகிறது பிக் பாஸ். அதுதான் நிகழ்ச்சியின் பலமான நடு நரம்பு. தமிழில்
இந்த நிகழ்ச்சி 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்தியாவில் பிரதமர் இந்திரா
காந்தி தலைமையில் நெருக்கடி நிலை அமலாக்கப்பட்ட நாள் ஜூன் 25. நெருக்கடி நிலைக்கும்
பிக் பாஸுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், இரண்டும் ஏதோ ஒரு வகையில் நமது நடைமுறை
வாழ்வைப் பாதிப்பவை. அப்படி ஓர் ஒற்றுமை அவற்றுக்கு உண்டு. அப்படிப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை நமது அன்றாட
வாழ்வை எப்படிப் பாதித்ததோ அப்படிப் பாதிக்கும் தன்மை கொண்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியும்.
நெருக்கடி நிலையாவது தீங்கானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், பிக் பாஸ்
நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டது என்ற போர்வையில் நமது கீழ்மை உணர்வுகளுக்குத்
தீனி போடுகிறது.
கிரிக்கெட்
விளையாட்டில் ஐபிஎல் தொடர் எப்படி விளையாட்டைப் புறந்தள்ளிவிட்டு வணிகத்தை முன்னிலைப்
படுத்துகிறதோ அப்படியே பிக் பாஸும் முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது. வணிக நோக்கத்தில்
என்ன தவறு என்னும் ஒரு கேள்வி எழலாம். இப்படிப் பாருங்கள். முழுக்க முழுக்க வணிக நோக்கத்துக்கான
நிகழ்ச்சி என்று பிக் பாஸ் விளம்பரப்படுத்தப்பட்டால் நம்மில் எத்தனை பேர் அதைப் பார்ப்பதில்
ஆர்வம் காட்டுவோம்? அதே நேரத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, உங்களது தவறுகளை, சரிகளை
அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி என்னும் பெயரில் நம்முன் அது கடை பரப்பப்படும் பட்சத்தில்
நாம் அதை எளிதாக அனுமதித்துவிடுகிறோம். இது ஒருவகையான வியாபாரத் தந்திரம். அதன் தந்திரத்துக்கு
நாம் பலியாகிவிடுகிறோம்.
பிக்
பாஸ் நிகழ்ச்சியை எதற்குப் பார்க்கிறோம்? ஆழ் மனத்தைத் தொட்டுக் கேள்வி எழுப்பிப் பரிசீலித்துப்
பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். ஒருவகையில் அது நம்மைப் புறணி பேச வைக்கிறது. பிக்
பாஸின் அனைத்து சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டில் தங்கும் பங்கேற்பாளர்களைக் கவனியுங்கள்.
சமூகத்தின் எல்லா தரப்புக்கும் அதில் ஒரு பிரதிநிதித்துவம் தரப்படுவதைப் போன்ற தோற்றத்தை
நம்மால் பார்க்க முடியும். இதோ இந்த ஐந்தாம் சீசனில் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவரும்
இடம்பெற்றுள்ளார். கானா இசைக் கலைஞர், மாடலிங் கலைஞர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சித்
தொகுப்பாளர், தொலைக்காட்சித் தொடர் நடிகை, வெளிநாடுவாழ் தமிழர் எனப் பார்த்துப் பார்த்து
ஆள்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்புகிறார்கள். ஏனெனில், அப்படி அனைத்துத் தரப்பிலும்
ஆள்களைத் தேர்ந்தெடுத்து வீட்டை நிறைக்கும்போதுதான், ஒவ்வொரு வீட்டிலும் நிறையப் பார்வையாளர்கள்
அமர்ந்து பிக் பாஸ் வீட்டை வெறிகொண்டு பார்ப்போம்.
சாதாரணர்களுக்குத்
தாங்கள் அறிந்த பிரபலங்கள் பற்றிய பெரிய பிம்பம் மனதில் இருக்கும். அதனுடன் தங்களை
ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வார்கள். உதாரணமாக, ஒரு நடிகரின் விசிறிக்கு நகம் கடிக்கும்
பழக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது கெட்ட பழக்கம் என்று அவருக்குத்
தெரியும். அதே நேரத்தில் அவர் ரசித்துப் பார்க்கும் நடிகருக்கு நகம் கடிக்கும் பழக்கம்
இருக்கிறது என்று தெரியவந்தால் இவருக்குத் தனது நகம் கடிக்கும் பழக்கம் பற்றிப் பெரிய
வருத்தம் எழாது. அவருக்கே இருக்கிறதே எனத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்வார். இதனால்தான்
பிரபலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. பிரபல ஆளுமைகளால் ஏற்படும் தாக்கம்
அந்த அளவு இருக்கும். கமல் ஹாசன் போன்ற சமூக பிரக்ஞை உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் நடிகர்
இப்படி ஒரு நிகழ்ச்சியை எந்தவிதமான குற்றவுணர்வுமின்றித் தொகுத்து வழங்கும்போது அதன்
தீமைத் தன்மை வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்துகொள்கிறது. மறைந்திருந்த மானமிகு வாலியை
வீழ்த்திய ராமனின் செயல்போல பிக் பாஸ் நம்மை மறைந்திருந்து வீழ்த்துகிறது. அதனால்தான்
சமூக நலம் நாடுவோர் இந்த நிகழ்ச்சி குறித்த அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
பிரபலங்களது
தனிப்பட்ட வாழ்வு பற்றிப் பொதுச் சமூகம் அறிந்துகொள்ள எப்போதுமே ஆசைப்படும். மனிதர்களின்
பலவீனங்களில் அதுவும் ஒன்று. அந்தப் பலவீனத்துக்குத் தீனி போடுகிறது பிக் பாஸ். ஒரு
தொலைக்காட்சித் தொகுப்பாளரது அல்லது ஒரு நடிகரது காதல் பற்றி அறிய ஆசைப்படுவோர் அவரைத்
தொடர்ந்து சென்று கண்டறிந்து கொள்ள முடியாது. சமூகச் சூழல் அதற்கு அனுமதிக்காது. ஆனால், பிக் பாஸ்
அப்படி ஒரு சூழலை அமைத்துக் கொடுத்துவிடுகிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் தொடர்ந்து
தங்கியிருக்கும்போது, அவரிடம் காதல் உணர்வு ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே
சுகமாகக் கண்டு களிக்க முடியும். இரு மனிதரிடையேயான நட்பு, உறவு குறித்த அந்தரங்கமான
தருணங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். அதில் பங்கேற்கும் தனி மனிதர்கள் தங்கள் அந்தரங்கம்
மேடை ஏறுகிறது என்பதை அறிந்தே அதைச் செய்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு அதில் பெரும்
பணமும் புகழும் கிடைக்கிறது. தனி மனிதர்கள் தங்கள் நேரத்தைச் செலவிட்டு அந்த அந்தரங்கத்தைப்
பார்த்துச் சந்தோஷப்படுகிறார்கள். இது என்னவகையான நாகரிகம், பண்பாடு?
பிக்
பாஸ் நிகழ்ச்சிக்கு உந்துதலாக அமைந்த பிக் பிரதரைவிட பிக் பாஸ் சிறப்பானது என்று பேரார்வத்துடன்
சொல்கிறார்கள் பங்கேற்பாளர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கமல் ஹாசனை நேரில் பார்ப்பதற்காக
இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள விரும்புவதாகப் பரவசமடைந்து கூறுவதை நாம் கேட்கலாம்.
அதே பரவச நிலையைத் தான் பார்வையாளர்களும் பெறுகிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால் இது
ஒருவகையான போதைதான். கவலையை மறக்க டாஸ் மாக் என்று சொல்வோருக்கும் பொழுதுபோக பிக் பாஸ்
என்போருக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
நடிகர்
கமல் ஹாசன் டாஸ் மாக் மூடப்பட வேண்டும் என்று அரசியல் மேடைகளில் சமூக அக்கறையுடன் கருத்துகளை
வாரி இறைக்கிறார். ஆனால், பிக் பாஸ் மேடையில் அவர் என்ன செய்கிறார்? டாஸ் மாக், பிக்
பாஸ் இரண்டுக்கும் வேறுபாடுகள் இருப்பதைப் போல் ஒற்றுமையும் இருக்கத்தானே செய்கிறது.
தனி மனிதர்களுக்கிடையேயான உணர்வு வெளிப்பாடுகளைக் கடை பரப்புவது அதை ஒட்டுமொத்தச் சமூகமும்
விவாதிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இவற்றை எல்லாம் திட்டமிட்டுச் செய்கிறது
பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் தமிழ் பேசுவோரது கண்கள் முழுக்க பிக் பாஸ்
வீட்டின் மீது இருப்பது போல் மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. சுய தெளிவு உள்ள பார்வையாளர்கள்
வெறும் பொழுதுபோக்கு என்று கடந்துவிடக் கூடும். ஆனால், ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும்
அதைப் பொழுதுபோக்கு என்று கடந்துவிடவோ தமக்குத் தெளிவு தரும் நிகழ்ச்சியெனச் சொல்லவோ
முடியுமா? இதையெல்லாம் உணராதவரா உலக நாயகன்?
பிக்
பாஸ் முதல் சீசனில் ஓவியா ஆரவ் காதல், அதனால் விளைந்த மருத்துவ முத்தம், இரண்டாம் சீசனில்
மஹத் யாஷிகா காதல், மூன்றாம் சீசனில் லாஸ்லியா – கவின் காதல், நான்காம் சீசனில் பாலாஜி
ஆரி மோதல் இப்படியான சம்பவங்கள் வெகு சாதாரணமாக நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய அம்சங்கள் வெகு கவனமாக உருவாக்கப்படுகின்றன; ஆனால் அவை இயல்பாக நிகழ்வதாகச்
சொல்லப்படுகின்றன. இது ஒரு கண்கட்டு வித்தை. இதைத் தான் பிக் பாஸ் சாமர்த்தியமாகச்
செய்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தபோது,
முதலமைச்சரும் இதைப் பார்ப்பது மகிழ்ச்சி என்ற அளவில் கமல் ஹாசன் அதைக் கடந்துவிட்டார்
என்பதை நினைவுபடுத்துப் பாருங்கள். அதே நேரத்தில் தனது அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான
வாய்ப்பாகவும் கமல் ஹாசன் பிக் பாஸைப் பயன்படுத்திக்கொள்கிறார். பங்கேற்பாளர்கள் தங்களது
முன்னேற்றத்துக்கான வாய்ப்பாக பிக் பாஸைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பார்வையாளர்களுக்கு
எந்த நல்ல விஷயமும் இல்லையா பிக் பாஸில் என்று கேட்டால். சொல்ல வேண்டுமே என்பது போல்
கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியில் புத்தகப் பரிந்துரை வழங்குகிறார். நல்ல விஷயம்தான்.
ஆனால், கமல் ஹாசன் சொல்லித் தான் இந்தப் புத்தகங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை
உள்ளதா என்பது கேள்விக்குறியே.
பிக்
பாஸ் நிகழ்ச்சியைச் சுயபரிசீலனைக்கான வாய்ப்பாகவும் நம் அகத்தைக் காட்டும் கண்ணாடியாகவும்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் கமல் ஹாசன். உண்மையில் இது சாத்தியமா? நிகழ்ச்சி
முழுதிலும் பாலியல் கிளர்ச்சிக்கான தீனிதான் போடப்படுகிறது. ஆனால், அதைப் பார்த்துப்
பாடம் கற்றுக்கொள்ளலாம் என்றால் அது எங்ஙனம் சாத்தியப்படும்? ஒருவேளை சுய தெளிவு உள்ள
பார்வையாளருக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சுய தெளிவும்
சுய பரிசீலனை செய்யும் பண்பும் கொண்ட பார்வையாளர் பிக் பாஸிலிருந்து ஓடி ஒளிந்துகொள்வார்.
அவருக்கு இது தேவைப்படாது. நமது சமூகத்தின் போலித்தனத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது
பிக் பாஸ். வீட்டில் சினிமா இதழ் வாங்காதவர்கள்கூட
முழுக்க முழுக்க சினிமா செய்திகளை எழுதித் தள்ளும் வணிக இதழ்களை வரவேற்பறையில் நிரப்பி
வைத்திருப்பார்கள். இப்படியான இரட்டை வேடம் போடுபவர்களுக்கான நிகழ்ச்சியாக இருக்கிறது
பிக் பாஸ். அதனால்தான் பிக் பாஸ் வெற்றிகரமாகப் பார்வையாளர்களை அபகரித்துக்கொள்கிறது.
ஓடினால்
ஒளிந்துகொண்டால் பார்வையாளர்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், பார்வையாளர்களால் அப்படி
ஓடவோ ஒளியவோ முடியாது என்பதே அவர்களின் பலவீனம், ஓடவோ ஒளியவோ விடாமல் அவர்களை ஈர்ப்பதே
பிக் பாஸின் பலம்.
இன்மதி இணையதளத்தில் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக