இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, டிசம்பர் 20, 2020
மலரே என்னென்ன கோலம்...
ஞாயிறு, டிசம்பர் 06, 2020
டெனெட்: புளுட்டோனிய போர் தடுக்கும் கொள்கை
கிறிஸ்டோபர் நோலன் என்ற பெயர் ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே மகத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது. மெமெண்டோ என்னும் அவரது படம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மெமெண்டோவின் தாக்கத்தில் உருவானது என்பதை நம்மில் அறியாதோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. அந்தப் படம் தமிழில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஏ.ஆர். முருகதாஸுக்கு இந்திய இயக்குநர் அந்தஸ்து கிடைக்க காரணமான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்சோம்னியா, இன்ஸெப்ஷன், இண்டர்ஸ்டெல்லர், டன்கிர்க் படங்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் டெனெட்.
டெனெட் திரைப்படத்தின் கதையைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கிண்டல்களும் கேலிகளும் உலவிவருகின்றன. ஏனெனில், அவ்வளவு சிக்கலான கதை அது. கடந்த காலத்துக்குள் சென்று நமது தவறு ஒன்றைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அல்லது எதிர்காலத்துக்குள் சென்று நாம் எதிர்கொள்வதை அறிந்துகொண்டால் அதை எப்படி எதிர்கொள்வோம்? இதை யோசித்துப் பாருங்கள். ஒரு சுவாரசியம் தென்படுகிறதல்லவா? அந்த சுவாரசியத்தின் அடிப்படையில் தான் இந்தப் படமே அமைந்திருக்கிறது.
ஒருமுறை பார்த்து அதன் கதையையும் திரைக்கதையையும் முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது உண்மையிலேயே சாதனைதான். தொடர்ந்து ஆங்கிலப் படங்களிலேயே மூழ்கி முத்தெடுப்பவர்களுக்கு ஒருவேளை அதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால், அவ்வளவு கடினப்பட்டுப் பார்க்க வேண்டிய அளவுக்கு முக்கியமான படமா டெனெட் என்றால் தொழில்நுட்பரீதியில் சரிதான். ஏனெனில், தொழில்நுட்பரீதியாக செறிவான இந்தப் படம் உள்ளடக்கரீதியில் தக்கையான, தட்டையான படம்தான். மனித உணர்வுகளுக்கு இடமே அளிக்காத ஒரு படம் இது. முழுக்க அறிவியல் புனைவு என்னும் வறண்ட வானிலையில் நகரும் படமிது.
தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்னும் மனப் போக்கு கொண்டவர் ஆங்கில ரஷ்யரான, ஆந்த்ரேய் சேட்டர் (கென்னத் ப்ரனா என்னும் வட அயர்லாந்து நடிகர்). ஆயுத வியாபாரியான இவர் உலகை அழிக்கும் தன்மையிலான நேர்மாறு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார். ரஷ்யாவின் ரகசிய நகரத்தில் இவருடைய நேர்மாறு ஆயுத ஆலை இயங்குகிறது. நேர் மாறு ஆயுதம் என்பது அணு ஆயுதத்தைவிட மோசமானது. அதனால் கடந்த காலத்துக்கும் சென்று சேதம் விளைவிக்க முடியும். இப்படிப்பட்ட ஆயுதங்களை விற்கும் முகவரான சேட்டரால் உலகம் அழியும் ஒரு சூழல் உருவாகிறது. இதிலிருந்து மனிதர்களைக் காக்கும் பொறுப்பு சிஐஏ ஏஜண்டான நாயகனிடம் விடப்படுகிறது. இந்த வேடமேற்றிருப்பவர் ஜான் டேவிட் வாஷிங்டன். அதை அவர் நிறைவேற்றுகிறாரா, மனிதர்களை அவரால் காக்க முடிந்ததா என்பதே திரைக்கதையின் எஞ்சிய பயணம்.
வழக்கம் போன்ற ஹாலிவுட் படங்களில் காணப்படும் நன்மை தீமைக்கான போர் தான் இந்தப் படத்தின் கருவும். திரைக்கதையை உன்னிப்பாகக் கவனித்தால்தான் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது. நமது புராணங்களில் உள்ளதுபோல் பல ஜீபூம்பாக்கள் திரைக்கதையைத் தேற்றியுள்ளன. ஆனால், இடையிடையே இயற்பியல் விளக்கம் தருகிறார்கள். ஆனால், படத்தில் ஒரு வசனம் வருகிறது: இதைப் புரிந்துகொள்ள முயலாதே உணர்ந்துகொள் என்று அது தான் உண்மை. படத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் படத்தின் காட்சி அனுபவத்தைத் தவறவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, காட்சிகளைத் தொடர்ந்து அப்படியே சென்றோம் என்றால் படம் புரிந்துவிடும்.
தன்னைத் துளைத்த தோட்டா நேர்மாறானது என்பதால் அந்த தோட்டாவின் உலோகக் கலவை இந்தியாவைச் சேர்ந்தது என்று அறிந்துகொண்ட நாயகன் இந்தியாவுக்கு வருகிறான். அங்கே அவன் ஆயுத தரகரையும் அவருடைய மனைவியையும் சந்திக்கிறான். பிரியா என்னும் பெயர் கொண்ட அவர் நடிகை டிம்பிள் கபாடியா. அவரிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆந்த்ரேய் சேட்டரின் மனைவியான கேத்ரினைக் (எலிசபெத் டெபிக்கி என்னும் ஆஸ்திரேலிய நடிகை) காண்கிறான். என்னா உயரம் அந்த நடிகை! அவர் கலைப்பொருள்களை மதிப்பிடுபவர். அவர் வழியே சேட்டரைப் பிடிக்க முயல்கிறான் நாயகன். இதில் நாயகனுக்கு உதவுபவன் நீல் என்பவன் (ராபர்ட் பேட்டின்சன் எனும் ஆங்கில நடிகர்).
வில்லன் எதிர்காலத்துக்குள் சென்று என்ன நடக்கும் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னர் அந்தச் சம்பவம் நடக்கும்போது அதைச் சமாளிக்கிறான். இப்படியான காட்சிகளை நம்பித்தான் ஆக வேண்டும். நாயகன் மட்டும் லேசுப்பட்டவனா அவனும் கடந்த காலத்துக்குச் சென்று நம்பவியலாத காரியங்களில் எல்லாம் ஈடுபடுகிறான். பார்ப்பவரைக் கவரும் விதத்திலான பிரும்மாண்டமும் தொழில்நுட்பத் தரமும் படத்தை வாய் பிளந்து பார்க்கவைக்கின்றன. ஆனால், முழுவதும் பார்த்து முடித்தபிறகு, ஒரு பூஞ்சையான படத்தைப் பார்க்கவே நேரத்தைச் செலவழித்திருக்கிறோம் என்பது தெரிகிறது.
ஹாலிவுட் படங்களுக்கே உரிய சேஸிங் காட்சிகளும் வானளாவிய கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறும் பழங்கால உத்தி நவீனத் தொழில்நுட்பத்துடன் உதவும் காட்சிகளும் உண்டு. ஒரே நேரத்தில் ஒரு குழுவினர் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் கடந்த காலத்துக்கும் ஒரு பிரிவினர் நிகழ்காலத்துக்கும் செல்வது போன்ற காட்சிகளை எல்லாம் நம்பினால் தான் படத்தை ரசிக்க முடியும். படத்தின் தொடக்கத்தில் நிகழும் ஓபரா அரங்கில் நிகழும் தாக்குதல் முதல் இறுதிக்காட்சியில் புளுட்டோனியம் 241ஐ எடுப்பது வரை பார்வையாளர்களை திரையரங்கில் இருத்திவைப்பதற்கான நேர்த்தியான திரைக்கதைதான். என்றபோதும் வழக்கமான ஹாலிவுட் படங்களைப் பார்த்துப் பிரமிப்போருக்கான படம் இது என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை. கிறிஸ்டோபர் நோலன் படம் என்பதால் பார்க்கலாம். ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் நல்ல படங்களில் ஒன்று இதுவல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
வியாழன், டிசம்பர் 03, 2020
நிலவறைக் குறிப்புகள்: நிலைக்கண்ணாடி போன்றவை
செவ்வாய், டிசம்பர் 01, 2020
தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
இனிய தாம்பத்யம் இடையே ஒரு நண்பன்
மூளை
ஆபரேஷன் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் பிரபு (சிவகுமார்). ‘சின்னதா இருந்தாலும்
கறை கறைதான். அது உடையில இருந்தாலும் சரி உள்ளத்துல இருந்தாலும் சரி என்னால பொறுத்துக்க
முடியாது’ என்று வாழ்பவர் அவர். மருத்துவம் தொழிலாக இருந்தபோதும் கலைரசனையும் மிக்கவர்.
அவருடைய மனைவி ராதா (லட்சுமி). அவர் வழக்கமான மனைவி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்பவர்.
கணவன் எதிரே புடவை மாற்றவே கூச்சப்படுவர். இந்தத் தம்பதிக்கு லட்சுமி (பேபி மீனா) என்றொரு
பெண் குழந்தை.
மகிழ்ச்சியாகவும் அன்யோன்யமாகவும் சென்றுகொண்டிருக்கும் குடும்பத்தில் பிரபுவுடைய நண்பர் ஓவியர் ராஜேஷ் (சிவச்சந்திரன்) வந்துசேர்கிறார். திரைக்கதையில் ஒரு திருப்பத்தையும் மாற்றத்தையும் உருவாக்கும் கதாபாத்திரம் இது. ராஜேஷ், ரசனையற்ற மனைவியுடன் குடும்பம் நடத்த இயலாமல் விவாகரத்துப் பெற்றுக்கொண்டவர். பிரபு படிப்பதற்கு உதவிய குடும்பத்தின் வாரிசு ராஜேஷ் என்பதால் நட்புடன் நன்றியுணர்வும் கொண்டிருக்கிறார் பிரபு. ராஜேஷ் கடுமையான குளிர் காய்ச்சலால் தவிக்கும்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கிறார் பிரபு. கூடமாட ஒத்தாசையாக இருக்கும்படி மனைவி ராதாவையும் நிர்ப்பந்திக்கிறார் பிரபு.
முதன்முறை
ராஜேஷுக்கு ஊசி மருந்துசெலுத்துவதற்காக அவன் கையைப் பிடித்துக்கொள்ளும்படி பிரபு சொல்லும்போது,
ராதா சேலையை ராஜேஷ் கையில் போர்த்திப் பிடிப்பார். பின்னர் வீட்டில் ஒருவருமற்ற நேரத்தில்
மயங்கிவிழுந்த ராஜேஷைத் தொட்டுத் தூக்கிப் படுக்கையில் படுக்கவைக்க நேரிடுகிறது. பிரபுவிடம்
இதைச் சொல்கையில் பிரபு அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்.
மருத்துவர்களால்
கைவிடப்பட்ட அட்வகேட் சிதம்பரத்தின் மூளையில் உருவான கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையைச்
செய்து முடிக்க குறிக்கப்பட்ட நாளன்று பிரபுவின் திருமண நாள். சிகிச்சை காரணமாகக் கோவிலுக்குச்
செல்ல முடியாமல் அம்மா படத்துக்கு முன்பே பிரபுவைக் கும்பிடுகிறார் ராதா. குனியும்போது
தாலிச் சரட்டின் ஒரு பகுதி அறுந்து தரையில் விழுகிறது. பதறிப் போகிறார் ராதா. ராதாவைச்
சமாதானப்படுத்திவிட்டு பிரபு மருத்துவமனைக்குப் புறப்படுகிறான். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக
முடிக்கிறான். இரவில் நண்பன் ராஜேஷுக்கு விருந்து தருகிறார்கள்.
அப்போது
ராஜேஷுக்கு மிகவும் பிடித்த பால் பாயசம் செய்திருக்கிறார் ராதா. அதைச் சாப்பிடும் ராஜேஷ்,
‘இந்த ருசியை மாத்திரம் என்னால் வரைய முடிஞ்சிருந்தா நான் வரைந்த ஓவியங்கள்லேயே இதுதான் நம்பர் ஒன்னா இருக்கும்டா’ என்று கூறி பூரித்துப்போகிறார்.
திருமண நாளன்று எப்போதும் பாடும் பாடலை அன்றும் ராதா பாடுகிறார்; பின்னர் ராதா மூச்சுத்திணறலால்
மயங்கிவிழுகிறார். அந்தத் திருமணநாள் ஏதோ விபரீதமான நாளாகப் படுகிறது ராதாவுக்கு.
மறுநாள்
செய்தியாளர் சந்திப்பில் மனைவியின் பெருமையைப் பேசிவிட்டு வீட்டுக்கு வருகிறார் பிரபு.
அங்கே மனைவி இல்லை. அவர் எழுதிவைத்த கடிதம் மட்டுமே இருக்கிறது. இடிவிழுந்ததுபோல் ஆகிவிடுகிறது
பிரபுவுக்கு. கால் போன போக்கில் போகிறான். அதன் பின்னர் அந்தக் குடும்பம் என்ன ஆனது
என்பது அதன் பின்னரான திரைப்படம்.
என்ன
ஏதென்றே புரியாமல் வீட்டில் தனிமையில் பிரபு தவிக்கிறார். அவரது தவிப்பை, துயரத்தைக்
காட்சிகளாகவே விவரித்திருப்பார் பாஸ்கர். லட்சுமி வரைந்த ‘வீட்டுக்கு முன்னே ஆமை இருக்கும்’
ஓவியம், மீன் தொட்டி தரையில் விழ, துடித்துக்கொண்டிருக்கும் மீன்கள், ‘அப்பா மீனு,
அம்மா மீனு, நானு மீனு’ எனக் குழந்தை லட்சுமி கூறிய வார்த்தைகள் இவற்றைக் கொண்டே அந்தக்
காட்சியை அருமையான சோக ஓவியமாகத் தீட்டியிருப்பார் பாஸ்கர்.
கணவன்
மனைவி அன்யோன்யத்தை, மனிதரின் பிரியத்தை மிகவும் யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்
இயக்குநர். அநேக மிட் ஷாட்கள். எந்தக் கதாபாத்திரமும் கேமராவைத் தப்பித்தவறிக்கூடப்
பார்ப்பதில்லை. அப்படியொரு நுட்பம். ஒரு கதைக்கு என்ன தேவையோ அதைத் தரும் காட்சியமைப்பு.
காட்சியில் கதாபாத்திரங்கள் நிற்கும் இடங்கள், அவற்றின் தோரணை, உடல்மொழி, வசனங்கள்
(‘இடிவிழுந்த வீட்டுக்கு யாருமே குடிபோக மாட்டாங்கப்பா’, ‘இது மாடு மேஞ்ச துளசி இனி
மாடத்துல வைக்க முடியாது’), பார்வை, பின்னணி இசைத் துணுக்குகள் அவற்றை கேமரா உள்வாங்கியிருக்கும்
விதம் என ஒவ்வொன்றும் திரைக்கதையை விவரிக்கும் போக்கு ரசிக்கவைக்கிறது. முழுமையான சினிமா
அனுபவம் தருகிறது.
முற்பகுதியில்
அலோபதி மருத்துவம் இழையாகப் பயன்படுகிறது என்றால், பிற்பகுதியில் நாட்டு மருத்துவம்
இடம்பெறுகிறது. பங்களா போன்ற வீட்டைவிட்டு வந்த ராதா பார்வையற்றவராகவும் பூ விற்கும்
பருவப் பெண்ணாக லட்சுமியும் (ரோகிணி) பாழடைந்த மண்டபத்தில் வசிக்கின்றனர். அந்த ஊருக்கு
வருகிறார் பிரபு. இப்போது அவர் பரதேசியான தாடி பாபா. கணிதச் சூத்திரம் மூலம் அவிழும்
கணக்கைப் போல் திரைக்கதையில் ஒவ்வொரு முடிச்சும் அழகாக விழுந்து அப்படியே அவிழ்கிறது.
அதுதான் இந்தத் திரைக்கதையின் தனித்துவம்.
அன்று
தனக்கும் ராஜேஷுக்கும் இடையே என்ன நடந்தது என்பதை பாபாவிடம் அவர் யாரென்பதே தெரியாமல்
ராதா சொல்வார். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டே இருப்பார் பாபா. படித்துறையில்
நடக்கும் இந்தக் காட்சி உணர்வுமயமானது. விபத்தில் சிக்கிய லட்சுமியை பாபா மீண்டும்
ஒரு அறுவை சிகிச்சை வழியே காப்பாற்றுவார். இறுதியில் பாபா யார் என்பது தெரிந்தபின்னர்
ராதா என்ன செய்கிறார், பாபா குடும்பத்துடன் சேர்கிறாரா என்பதை யூடியூபில் கிடைக்கும்
படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரே
ஒரு கணம் மனம் தடுமாறியதால் இவ்வளவு பெரிய தண்டனையா? உண்மையில் உடம்பு மனம் இவற்றுக்கெல்லாம்
என்ன பொருள்? ஆண், பெண் உறவு, குடும்ப அமைப்பு, மரபு, நவீனம் இவை தொடர்பான பல உணர்வுபூர்வக்
கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ராதா ஏன் ஊரை விட்டு ஓடி வந்தார்? ராஜேஷ் ஏன் தனக்கு
அப்படி ஒரு தண்டனையை அளித்துக்கொண்டார்? பிரபுவால் ஏன் குடும்ப வாழ்வுக்குள் மீண்டும்
வர இயலவில்லை? ஓவியத்தைப் பார்த்துப் புரிந்துகொள்வதுபோல் அவரவர் புரிதலுக்குத் தகுந்த
வாய்ப்பைப் பார்வையாளர்களுக்கு இயக்குநர் அளித்துள்ளார்.
படத்தின்
தலைப்பிலிருந்து இறுதிவரை அனைத்தையும் அலசிப் பார்த்து பார்வையாளர்கள் ஒரு முடிவுக்கு
வரலாம். ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தைப் பிறருடன் விவாதிக்கலாம். அப்படியோர் அம்சத்தைத்
திரைக்கதையில் புழங்கவிட்டிருப்பது செய்நேர்த்திக்கு உதாரணம். பாஸ்கர் இயக்கிய படங்களில்
தீவிரமான படம் இது. இதிலும் திரைக்கதைதான் முதுகெலும்பு. அது மிகவும் தெளிவு, நேர்த்தி.
ஆனால், ராதா குளியலறையில் மயங்கிவிழும் அந்தத் தருணத்தில் அப்படியொரு நிகழ்வுக்குச்
சாத்தியமா எனும் கேள்வி எழுகிறது. ஆனால், திரைக்கதையை நகர்த்த சில லாஜிக் மீறல் தேவைப்படுகிறது
என்னும் அம்சம் அந்தக் கேள்வியை நீர்த்துப்போகச் செய்கிறது.
சென்னை
அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையை அரசின் அனுமதிபெற்று, படம்பிடித்து
அதைப் படத்தின் டைட்டில் காட்சியில் பயன்படுத்தியிருக்கிறார் பாஸ்கர். தமிழ்த் திரையுலகின்
முக்கியப் படங்களில் ஒன்றாக இடம்பெறத் தகுதிகொண்ட படம் இது.
தீர்ப்புகள் திருத்தப்படலாம்
கொன்றவளா அவள் கொண்டவளா?
அன்பான
கணவன், மனைவி, அழகுக் குழந்தை என்று நிம்மதியாக வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்ட
சிக்கலும் அதிலிருந்து அது எப்படி மீண்டது என்பதுமே கதை. ராஜேஷ் (சிவகுமார்) ஒரு பெரிய
நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிகிறார். அவருடைய மனைவி ராதா (அம்பிகா). இவர்களுடைய
குழந்தை ப்ரியா (பேபி மீனா). பிற பெண்களுடன் ராஜேஷுக்குத் திருமணம் தாண்டிய உறவு உள்ளதோ
என்பது ராதாவின் சந்தேகம். அது தொடர்பாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது.
காரசாரமாக வந்துவிழும் வார்த்தைகள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றன. ராதாவை வர்கீஸ்
என்னும் உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறான் ராஜேஷ்.
அன்று
ஏப்ரல் 1. வழக்கம்போல் அலுவலகம் சென்று வருகிறான் ராஜேஷ். குழந்தை வரவேற்பறையில் இருக்கிறாள்.
ராதா படுக்கையறையில் பொட்டு கலைந்து, காதில் ஒரு தோடு இல்லாமல் சற்று அலங்கோலமான தோற்றத்தில்
உறங்கிக்கொண்டிருக்கிறாள். ராஜேஷின் வாசிப்பு அறையில் ரிக்கார்ட் ப்ளேயர் இயங்கிக்கொண்டிருக்கிறது.
பயன்படுத்திய இரண்டு கப் அண்ட் சாஸர்கள் அப்புறப்படுத்தப்படாமல் டீப்பாயின் மீது உள்ளன.
இவையெல்லாம் ராஜேஷுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது அவன் தன் வாசிப்பறைக்குச்
செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் மூழ்கடிக்கிறது. அவனை மட்டுமல்ல;
பார்வையாளர்களையும்தான்.
லாரன்ஸ்
அன் கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன்ஸ் (சத்யராஜ்). இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்
ராதா. லாரன்ஸுடைய மனைவி ஷீலா (சத்யகலா). அவர்களுடைய குழந்தை மேரி பார்வைத்திறனற்றவள்.
லாரன்ஸுக்குப் பெண்கள் பலருடன் உறவிருப்பதாக அவரது கடையில் வேலை பார்க்கும் கமல் உட்படப்
பலரும் பேசுகிறார்கள். இது ஷீலாவுக்கும் தெரியும். இந்த லாரன்ஸின் சடலம்தான் ராஜேஷின்
வாசிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடக்கிறது. லாரன்ஸை யார் கொலைசெய்திருப்பார்கள்
என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.
முழு
உண்மையை அறியாமல், கேட்ட, பார்த்த தகவல்களின் அடிப்படையிலான ஊகத்தின் உதவியுடன் உண்மையைப்
பார்க்க விழைந்தால் அது எத்தகைய விபரீதத்தில் கொண்டுவிடும் என்பதையே திரைக்கதை தெள்ளத்
தெளிவாக எடுத்துவைத்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே
மெய் என்பார்கள். அதைத் தான் இந்தப் படமும் சொல்கிறது. லாரன்ஸை ராதா கொலைசெய்திருப்பாளோ
எனச் சந்தேகிக்கிறார் ராஜேஷ். ராஜேஷ் கொன்றிருப்பாரோ எனச் சந்தேகிக்கிறாள் ராதா. ராதாதான்
லாரன்ஸைக் கொன்றாள் என்றே சொல்கிறாள் ஷீலா. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு
வந்திருக்கிறார்கள். அவரவர் ஊகத்துக்குத் தேவையான தடயங்களும் சந்தர்ப்ப சாட்சியங்களும்
அவரவர் ஊகத்தை வலுப்படுத்துகின்றன. இப்படி ஒரு பயணத்தின் வழியே கொலைசெய்தவர் யார் என்பதும்,
அதற்கான காரணம் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியவரும்போது அது எதிர்பாராததாக உள்ளது.
படத்தின்
ஒளிப்பதிவு, பின்னணியிசை இரண்டும் அமானுஷ்யத் தன்மையுடன் இயங்கும்வேளையில் வசனமோ பூடகத்தன்மையிலானது.
சிவகுமார், அம்பிகா, பேபி மீனா, சத்யராஜ், சத்யகலா, விஜயராகவன் எனப் படத்தில் பங்குகொண்ட
அனைவரும் அவரவர் தரப்பைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு திரில்லராக எந்த இடத்திலும்
இறுக்கம் குலையாமல் இறுதிவரை பயணிக்கிறது படம். நகைச்சுவைக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி,
வனிதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் உள்ளார்கள். ’பைரவி’ திரைப்படத்தை நினைவுபடுத்துவது
போன்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சிவகுமாரைப்
படுத்தி எடுக்கும் சில காட்சிகளை மட்டும் ரசிக்க முடிகிறது.
மனைவிமீது
அன்புகொண்ட அதே நேரத்தில் அவள் மீது எழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலாத ஒரு சராசரிக்
கணவனாக சிவகுமார் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான பாசம், கோபம், எரிச்சல், ஆற்றாமை
என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மனரீதியான பாதிப்பு கொண்ட பெண்ணாக
இருந்தபோதும் அம்பிகாவின் கதாபாத்திரம் இயல்பான ஒரு மனைவின் தன்மையிலிருந்து பெரிதும்
மாறாதது. கணவனே கண் கண்ட தெய்வம் என்னும் பழமையில் ஊறிப்போனது. அதே நேரத்தில் தன் உரிமைக்காகக்
குரல் கொடுக்கவும் தயங்காதது. வேர் பழமையிலும் கிளை புதுமையிலும் ஊடாடும் கதாபாத்திரத்தை
அம்பிகா இயல்பான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்.
கனவில் அம்மா மலையிலிருந்து விழுந்ததைக் கண்ட அதிர்ச்சி நீங்காத நிலையில் மருத்துவமனையில்
அம்மா அம்பிகாவைப் பார்க்க வரும் காட்சியில் பேபி மீனாவின் நடிப்பு பார்வையாளர்களை
ஈர்த்துவிடக் கூடியது. தந்தை இரவின் கெட்ட கனவால் கத்தும்போது பேபி மீனா, “ஏன் டாடி
கத்துத இனிமே இப்படிக் கத்தாத எனக்குப் பயமா இருக்கு” என்பது மிக யதார்த்தமான வசனம்.
திரைக்கதையும், அதற்குத் தேவையான கூர்மையான வசனங்களும் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச்
சொல்லத்தக்கவை.
படத்தின்
வசனங்களில் பாஸ்கரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறது. உதாரணமாக சில வசனங்கள்:
“செத்துப்
போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.”
”மாங்கல்யம்
பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.”
”கொலைப்பொருளா
இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”
”குறுக்குவிசாரணை
பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”
”எங்குணம்
துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”
இயன்றவரை
யதார்த்தமான திரைமொழியில் படத்தை நகர்த்தினாலும் தான் எடுப்பது ஒரு பொழுதுபோக்கு சினிமா
என்ற விவேகத்துடன் பாஸ்கர் படத்தை இயக்கியிருப்பதால் எந்த இடத்திலும் சினிமாத்தனங்கள்
வரம்பை மீறி வெளிப்படவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை இப்போதும் எந்த விலகலுமின்றிப்
படத்தைப் பார்க்க முடிவதே இந்தப் படத்தின் சிறப்பைச் சொல்லும்.
பக்கத்து வீட்டு ரோஜா
இயக்குநர்
M.பாஸ்கர் M.A. இயக்கிய நான்காம் படம் ‘பக்கத்து வீட்டு ரோஜா’. 1982 செப்டம்பர் 2 அன்று
வெளியாகியிருக்கிறது. ‘பைரவி’ படத்தில் நடிக்க மறுத்திருந்த நடிகர் முத்துராமனின் மைந்தனான
கார்த்திக்தான் இந்தப் படத்தின் நாயகன். இதில் அவருக்கு ஒரு காட்சியில் பெண் வேடமும்
உண்டு. இந்த ஆண்டில் நடிகர் கார்த்திக் நடித்த ‘நினைவெல்லாம் நித்யா’, ‘வாலிபமே வா
வா’, ‘இளஞ்ஜோடிகள்’ உள்ளிட்ட பத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு ஜோடியாக
நடிகை ராதா நடித்திருந்தார். 1982-ல் ராதா ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’,
‘காதல் ஓவியம்’ உள்ளிட்ட 14 படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திக், ராதா இருவரும்
இந்த ஆண்டில் ஆறு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். 1981-ல் வெளியாகி பெரிய வெற்றியைப்
பெற்ற ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகிய வெற்றி ஜோடி இவர்கள் என்பதே இதற்குக்
காரணமாக இருக்க வேண்டும்.
படத்தின் கதையும் தயாரிப்பும் கலைஞானம். அவருடைய
உதவியாளர் பனசை மணியன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இயக்கம் மட்டுமே பாஸ்கர்.
இசை சங்கர் கணேஷ். மனோரமா, கவுண்டமணி, ஜனகராஜ், S.S.சந்திரன், தியாகு உள்ளிட்ட பலரும்
நடித்திருக்கின்றனர். மலையாள நடிகர் பிரேம் நஸீரின் மகனான ஷாநவாஸ் எதிர்மறை நாயகனாகவும்
அப்போதைய பிரபல நடிகை ராணி பத்மினி நடனக்காரியாகவும் வேடமேற்றிருக்கிறார்கள். நிஜ வாழ்வில்
கொலைக்காளான ராணி பத்மினிக்கு இந்தப் படத்திலும் அதே கதிதான்.
மிக எளிய கதை. படத்தைப் பற்றி ஒரு வரியில்
சொல்ல வேண்டும் என்றால், பெண் ஒருவர் நகைமீது கொண்ட ஆசையால் எதிர்கொண்ட ஏற்ற இறக்கமான
சம்பவங்கள் என்று சொல்லலாம். பொதுவாகவே பாஸ்கர் தனது படத்துக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்குப்
பெரிதாக மெனக்கெடவில்லை. என்ன இருந்தாலும் இது சினிமாதான் என்ற புரிதல் காரணமாக இந்த
முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். இந்தப் படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு
நடிகர்களது பெயரே வழங்கப்பட்டிருக்கிறது. ராதாவுக்கு நகை என்றால் கொள்ளைப் பிரியம்.
கோயிலில் அர்ச்சகரிடம் இரவலாக அம்பாள் நகையையே கேட்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
யாராவது கண்ணைப் பறிக்கும் புது நகை ஒன்றை அணிந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும்
அதை எப்படியாவது அணிந்துபார்க்க வேண்டும் என்ற அடங்காத ஆசை அவருக்கு எழுந்துவிடும்.
நகைக்கடை அதிபர் மதன் ஒரு காமுகன். நகைகளுக்கு
மயங்கும் பெண்களைத் தன்வசப்படுத்தி மகிழ்பவன். அவனது நகைகளைப் பறிக்க முயன்ற கூட்டத்தினருடன்
சண்டையிட்டு அவனுக்கு கார்த்திக் உதவியதால் இருவரும் நண்பர்களாகின்றனர். தனது கடையிலேயே
மதன், கார்த்திக்கைப் பணியில் அமர்த்துகிறான். நகைக்கடைக்கு வரும் ராதா கார்த்திக்கை
அதன் உரிமையாளர் என எண்ணிக்கொள்கிறாள். அழகான பெண் என்பதால் கார்த்திக்கும் அதை அப்படியே
பராமரிக்கிறான். இருவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
தன்னைக் கடையின் உரிமையாளர் என நினைப்பதால்
தனக்கு உதவுமாறு மதனிடம் வேண்டுகிறான் கார்த்திக். ராதாவுக்காக அவனும் கார்த்திக்குக்கு
உதவுவதாக ஒத்துக்கொள்கிறான். ராதா குடும்பத்தினரிடம் கார்த்திக்கின் கடையில் தான் வேலை
பார்ப்பதாகச் சொல்கிறான் மதன். கார்த்திக் ராதா திருமணம் நடந்துவிடுகிறது. மணமான மறுநிமிடம்
ராதாவுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் ராதாவுக்கு கார்த்திக்கை மனதால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றாக இருந்தும் ஒன்றிணைய அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதைச் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.
பெண்களின் நகை மோகத்தால் அவர்களுக்கு ஏற்படும்
பாதிப்பைச் சுட்டிக்காட்டும் படம். நகைச்சுவையான திரைக்கதைதான் படத்தை நகர்த்துகிறது.
சிஸ்டர் என்று கூறியே பெண்களைக் கட்டிலில் தள்ளத்துடிக்கும் மதன் கதாபாத்திரம் வழியே
சமூகத்தில் சகோதரி என்னும் பதம் எப்படியான பொல்லாங்குப் போர்வை என்பதைச் சுட்டுகிறார்
இயக்குநர். பாஸ்கர் படங்களில் பெண்களின் உரிமை என்பது பேசப்பட்டாலும் பெண்களின் பாதுகாப்பு
என்பது வரம்புக்குள் இருக்கும்வரைதான் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இந்தப் படத்திலும்
அந்தப் போக்குதான் உள்ளது. என்றபோதும், ஆண்களின் புரிதலின்மையையும் படம் பேசுகிறது.
தன்னை நாடாத மனைவி ராதாவை வழிக்குக் கொண்டுவர இன்னொரு பெண்ணுடன் காதல் கொள்வதுபோல்
நடிக்கிறார் கார்த்திக். ஆண்களின் இந்த நடவடிக்கை எவ்வளவு அபத்தம் என்பதைப் படம் கவனப்படுத்துகிறது.
படத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் பெண் இயக்குநராக
வருகிறார் மனோரமா. நாயகர்கள் டூப் போடுவதை நக்கலடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வருகிறது.
நாயகியைச் சாட்டையால் அடிக்கும் காட்சியை டூப் போட்டு எடுக்கிறார்கள். தயாரிப்பாளர்
உதவி இயக்குநரிடம் ‘டூப்புக்கு வசனம் உள்ளதா?’ என்று கேட்கிறார். வாய்ப்பு கேட்டு வரும்
நடிகர் ஒருவர் பல் செட் வைத்துக்கொண்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனம் பேசி பல் தெறித்து
நிற்கிறார். கீழே விழுந்து கிடக்கும் பல் செட் தமிழ் சினிமாவைக் கேலியாகப் பார்க்கிறது.
சினிமாவில் இருப்பதால் அதை உன்னதமான வேலையாகக் கருதாமல், தனக்குக் கிடைக்கும் சிறு
சிறு வாய்ப்புகளில், அதன் அபத்தங்களை வெளிக்கொணரும் காட்சிகள் இயக்குநரின் முத்திரைகளாகின்றன.
முந்தையப் படங்களைப் போல் இதிலும் நட்பு, பாசம்,
காதல், பாலியல் வல்லுறவு, கொலை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான அனைத்து
அம்சங்களையும் கலந்து, தன்னால் இயன்ற அளவு தெளிவாகவும் நேர்த்தியாகவும் படத்தைத் தந்திருக்கிறார்
பாஸ்கர். யூடியூபில் இதன் மட்டமான பிரிண்ட்தான், அதுவும் பாடல்கள் எவையுமின்றிக் கிடைக்கிறது.
லேட்டஸ்ட்
கட்டுரைகள்
- திரை (83)
- தமிழ்ப் படம் (59)
- சினிமா ஸ்கோப் (45)
- உலகப் படம் (31)
- ஹாலிவுட் (29)
- அரசியல் (21)
- சினிமா (20)
- பகடி (16)
- சொந்த வீடு (14)
- நட்சத்திர நிழல்கள் (11)
- நகைச்சுவை (10)
- மலையாளப்படம் (7)
- இலக்கியம் (6)
- மதிப்புரை (4)
- இலக்கணம் (3)
- திரைப்படம் (3)
- கோல்டன் க்ளோப் (2)