இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 29, 2020

வசனங்களால் வாழ்ந்தார் வாழ்கிறார் இன்னும் வாழ்வார்

அஞ்சலி: இயக்குநர் விசு (01.07.1945 – 22.03.2020)


இயக்குநர் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகைகள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள். விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல் இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம் போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால் பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் விசு.

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபோத்தனமான துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமான கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மையான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி.  தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய பட்டினப்பிரவேசத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய அவன் அவள் அது, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்களை முக்தா வி சீனிவாசன் இயக்கினார்.


எஸ்பி. முத்துராமன் இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான கண்மணிப் பூங்காவில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தினருக்கான படமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப் படம் பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் படம் இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது இந்தப் படம்.  விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், மோடி மஸ்தான் என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான மணல் கயிறுதான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தின் காது கேளாத மாமா போன்ற அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தனர் சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்றவர்கள். இப்படியான நிலையக் கலைஞர்களைப் பயன்படுத்திய தன்மை நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

1986-ல் வெளியான சம்சாரம் அது மின்சாரம் விசுவின் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் குடும்ப புராணம் என்னும் பெயரில் மலையாளத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

தில்லுமுல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மன்னன் என நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. ரஜினிகாந்துடன் இவரது பயணம் 1978-ல் இவரது கதை வசனத்தில் ’பசி’ துரையின் இயக்கத்தில் உருவான சதுரங்கம் திரைப்படத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே கதையைத் தான் பின்னர் விசு, திருமதி ஒரு வெகுமதி என்னும் பெயரில் படமாக்கினார். நடிகர் எஸ்.வி.சேகர் இந்தப் படத்தில் நடித்த வெகுளித்தனமான கணவன் வேடத்தில்தான் ரஜினி காந்த் நடித்திருந்தார். ரஜினி காந்த் அரசியலில் தனது காலைப் பதிப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவரைவிட ஓரிரு வயது மூத்த விசு காலமானது ஒரு சோகமே.


கமல் ஹாசனை விசு இயக்கியதில்லை ஆனால் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த சிம்லா ஸ்பெஷல் படத்துக்கு விசு கதை வசனம் எழுதியிருந்தார். ரஜினியை இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், எந்தச் சூழலிலும் படைப்புரீதியான சமரசம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த விசு ரஜினியை இயக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்தப் படம் அண்ணாமலை. பின்னர், அந்தப் படத்துக்கு வஸந்த் இயக்குநர் என நாளிதழ்களில் விளம்பரம்கூட வந்தது. ஆனால், இறுதியில் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அப்படியான சமரசத்துக்குத் தயாராக இருந்ததால் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாட்ஷா கிடைத்தது. விசுவோ தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டவராக வரலாற்றில் நிலைபெறுகிறார்.  

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஆனந்தக் கண்ணீர் திரைப்படத்தில்கூட அவரை நினைவுபடுத்துவது தோராயமாக என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவர் டாக்ஸி டிரைவரிடம் பேசும் நீளமும் குழப்பமுமான அந்த வசனம்தான். இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் விசு வெறும் நடிகரே. ஆனால், விசு என்றவுடனேயே இயக்குநர்களுக்கு இப்படியான வசனங்களுக்கான நடிகர் என்றே தோன்றுயிருக்கிறது. ஆனால், விஜய் காந்த் நடிப்பில் அவர் இயக்கிய டௌரி கல்யாணம் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருமணப்   பந்தியில் இலைகளில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களெல்லாம் பணத் தாள்களாகவும் நாணயமாகவும் தென்படும். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனின் மனத் தாங்கலை இதைவிடத் தெளிவாக வசனங்களால்கூட வெளிப்படுத்திருக்க முடியாத அளவுக்கு நயமான காட்சி.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையில் உருவாக்கப்பட்ட நாடகங்களைப் போன்ற திரைப்படங்களைப் படைக்கவே தான் திரைப்படத் துறைக்கு வந்தோம் என்பதில் அவருக்கு இறுதிவரை எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. அந்தப் படங்களில் பல பெரும்பான்மையான ரசிகர்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைக் கவர்ந்து வெற்றியை வாரிக்குவித்ததே அவரது சாதனைச் சரித்திரம்.

ஞாயிறு, மார்ச் 15, 2020

தாராள பிரபு


சென்னையில் கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). அவரிடம் தம்பதியர் பலர் குழந்தையின்மை பிரச்சினைக்காக வருகிறார்கள். தகுந்த ‘ஸ்பெர்ம் டோனர்’ இல்லாமல் அவதிப்படும் அவர் டோனரைத் தேடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவைக் (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார் கண்ணதாசன். முதலில் டோனராக இருக்க மறுக்கும் பிரபு பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுக்குக் காதல் ஏற்படுகிறது. தான் டோனர் என்பதை நிதியிடன் சொல்லவா வேண்டாமா எனக் குழம்புகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபுவின் வாழ்வின் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதற்கு விடையாக உள்ளது தாராள பிரபு.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவருகிறது; புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால்தான் பயனுண்டு என்பதை உணர்த்தும் வகையிலான திரைக்கதை அமைந்திருக்கிறது. விக்கி டோனர் (2012) என்னும் இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழுக்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார். என்றபோதும், தமிழுக்குப் படம் சற்று அந்நியமாகத் தான் இருக்கிறது. விந்து தானம், மறு மணம், தத்தெடுப்பு எனப் பல விஷயங்களைப் படம் கையாண்டிருக்கிறது. ஆனால், இயன்றவரை அதைப் பிரச்சாரப்படுத்தாமல் இயல்பான கதையோட்டத்திலேயே தந்திருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. எல்லோருக்கும் குழந்தை தந்த ஒருவருக்குக் குழந்தை இல்லாத சூழல் அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்ற ஒருவரிக் கதையை ஒரு முழுநீளப் படமாகத் தரத் தேவையான அம்சங்களைக் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விந்தணு தானம் என்ற, சமூகம் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாத, அம்சத்தைப் படம் மையமாகக் கொண்டிருந்தாலும் அதை முகம்சுளிக்கச் செய்யாத வகையில் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார்கள்.  


நடிகர் ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்து விளையாட்டு வீரனாக, ஸ்போட்ர்ஸ் கோட்டாவில் வேலை தேடிவிட வேண்டும் என்ற யத்தனிப்புடன் செயல்படுபவராக நடித்திருக்கிறார். விந்தணு தானத்துக்காகத் தன்னைத் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகிவிலகி ஓடுவது, பின்னர் தனது கோச்சுக்குக் குழந்தை இல்லாததால் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து தான் விந்து தானம் தரச் சம்மதிப்பது, காதலிடம் உண்மையைச் சொல்வதா வேண்டாமா எனத் தவிப்பது என பல காட்சிகளில் உறுத்தல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

விவேக்குக்கு முக்கியமான படம் இது. நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதைச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் சற்று நெருடல். ஒரு பெரிய மருத்துவமனையை நடத்திவரும் அவர் ஒரே ஒரு டோனரை நம்பிச் செயல்படுவதும், எப்போதும் ஹரிஷை மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது நம்பும்படியாக இல்லை.  ஆர்.எஸ். சிவாஜியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இடம் அழகு.



தான்யா ஹோப் அழகாக இருக்கிறார் ஆனால் அழகுப் பதுமையாக மட்டும் பயன்பட்டிருக்கவில்லை. தான் விவாகரத்தானவள் என்பதைக் காதலனிடம் மிக இயல்பாகச் சொல்கிறார். தன்னால் குழந்தையைத் தர முடியாது என்பதை உணரும்போது வெடித்தழுகிறார்; குழந்தையைத் தத்தெடுக்கும் காட்சியில் இயல்பான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணியிசை சராசரி.   

குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலரையாவது இதைப் போன்ற படங்கள் சிந்திக்க வைத்தால் நலமாக இருக்கும். சாதி, மதம், வெட்டுக் குத்து எனத் தொடர்ந்து படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் மனித உறவுகளை முன்னிருத்தி, ஆரோக்கியமான அறிவியல் உத்தியின் சாதக அம்சங்களைத் தாங்கி வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்தை ரசிக்க முடிகிறது.

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

ஞாயிறு, மார்ச் 01, 2020

திரௌபதி: எட்டுத் திக்கும் வன்மம்


சிலம்ப வாத்தியாரான ருத்ரபிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக்கொலை செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர். அவர் ஜாமீனில் வெளிவருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கருணாவையும் அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அவர் அடுத்தடுத்து கொலைசெய்கிறார். இந்தச் சூழலில் அவருடைய மனைவி திரௌபதி உயிருடன் இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்கிறது. ருத்ர பிரபாகர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? ஆணவக் கொலைக்காளானதாகச் சொல்லப்படும் திரௌபதி எப்படி உயிருடன் உள்ளார், ருத்ர பிரபாகரன் குடும்பத்துக்கு என்ன நடந்தது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது திரௌபதி.

இயக்குநர் மோகன் திரைக்கதையை ஒரு நோக்கத்துடன் அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது நோக்கமே முதன்மை பெறுவதால் வழக்கமான திரைக்கதையின் கட்டுமானத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போலித் திருமணம், நாடகக் காதல் என சில அம்சங்களையும் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன் எனச் சில அம்சங்கங்களையும் எதிரெதிர் பாதையில் கொண்டுசெலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார். இந்தப் பயணத்தில் சாதிப் பெருமை என்னும் பழமைவாதக் கருத்தைத் திரைக்கதையில் மையமாக்கி அதற்கு ஊட்டச்சத்தான உணவை வழங்க முயன்றிருக்கிறார். என்றபோதும் அது சவலைக்குழந்தையாக வளர்ந்து நிற்கிறது. 


ஒரு சமூகத்தை மேம்படுத்த சினிமா எனும் சாதனத்தை பெரும்பான்மையோர் பயன்படுத்தி வரும் வேளையில் அதே சாதனத்தை சாதி எனும் பழமைவாதக் கருத்தைப் பரப்ப இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சக மனிதரை இழிவுபடுத்தும் காட்சிகளை வைப்பது குறித்து எந்தக் கிலேசமுமின்றி இயக்குநர் காட்சிகளைக் கையாண்டிருக்கிறார். நமது சாதியச் சமூகத்தின் சாதியப் பாகுபாட்டைக் களைய பெரும்பங்கு வகிக்கும் காதல் எனும் இயல்பான உணர்வை முடிந்த அளவு கொச்சைப்படுத்தியுள்ளன திரைக்கதையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள். படத்தில் நாயகனும் காதல் திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் சொந்தத்திலேயே காதல்செய்தவர். 

படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பொறுப்பான கதாபாத்திரங்களும் பொறுப்பற்ற வசனங்களைப் போகிற போக்கில் உதிர்த்துச் செல்கின்றன. “இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லணும்” என்கிறார் ஒரு வழக்கறிஞர். “நாம எப்ப சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணமோ அப்பவே கார்ப்பரேட் டிசைட் பண்ணிட்டாங்க நாம எப்ப பிள்ளைப் பெத்துக்கணும்னு” என்கிறார் ஒரு மருத்துவர். இயக்குநர் பார்த்தறிந்த மருத்துவர் இப்படியான புரிதல்கொண்டவர்தான் போலும்.

பஞ்சாயத்துக் காட்சியில் பிரபாகனிடம் ”நீங்க ஏன் மாமா அவங்ககிட்ட பேசிட்டிருக்கீங்க” என்று சொல்லியபடி, வழக்கறிஞரையும் அரசியல்வாதியையும் பார்த்து சமூக சேவகியான திரௌபதி வெளிப்படுத்தும் உடல்மொழி சாதித் திமிரின் வெளிப்பாடு.  நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த திரௌபதியின் புரிதலும் வன்மமாக வெளிப்பட்டுள்ளது. எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் கண்ணி வெடியைப் புதைத்துவைத்துள்ளதைப் போல் சாதி வன்மத்தைப் புதைத்துவைத்துள்ளது படம். 

கல்யாண வயதில் உள்ள பெண்களை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு வஞ்சகத்தால் சீரழிக்க முயல்வது போன்ற தோற்றத்தை உருவாக்க படம் முயல்கிறது. மணமகள் விருப்பமே இல்லாமல் பதிவுத் திருமணங்கள்  நடத்திவைகப்படுவதான பிம்பத்தை நிறுவ இயக்குநர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கிறார். எங்கோ ஓரிடத்தில் தவறாக நடந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஆரோக்கியமாகக் கையாளப்படும் காதல் திருமணம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என விஷயத்தை அப்படியே தலைகீழாக்க இயக்குநர் முயன்றுள்ளார். பல காட்சிகளில் வன்மத்தைக் கக்குகின்றன வசனங்கள். தணிக்கையில் சில வசங்களின் ஒலி முடக்கப்பட்டுள்ளது என்றபோதும் சில வன்மமான வசனங்களைத் தணிக்கதைத் துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?

பரபரப்பான இடங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இரண்டு கொலைகளைச் செய்துவிடுகிறாரே அது எப்படி? பெண் குழந்தைகள் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது எனும்போது, பெற்றோரின் பார்வையில்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எப்படி எழுப்ப இயலுகிறது? இப்படி அநேகக் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பைத் தாராளமாக வழங்குகிறார் இயக்குநர்.

நடிகர்கள் பலரது நடிப்பு ஏதோ ஒரு சுரத்தற்ற நாடகத்தைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று காட்சிகள் நகர்கின்றன. இயையமைப்பாளர் ஜுபினின் பின்னணியிசை பெரிய அளவில் உறுத்தவில்லை; அதே நேரத்தில் பெரிதாகக் கைகொடுக்கவும் இல்லை.  குக்குக்குக்குக்கூ எனும் பாடல் முணுமுணுக்கவைக்கிறது. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும் சராசரி ரகம்.  

பட்டறையில் வேலை பார்க்கும் படித்த வசதியான பெண்ணைக் காதலித்து மணமுடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என நம்பும் ஜேக்கைப் பார்த்து நாயகன் ”படிக்காதது உன் தப்பு” என்று பேசுகிறார். இப்படியான அபத்தமான வசங்களுக்கும் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமேயில்லை. 

”நான் அட்டகத்தி சார்” 

”எந்த மாதிரி வம்சத்துல பொறந்துட்டு எப்படிப் பேசுற”

”இந்த முறை டவுசரத் தான் அறுத்தேன் அடுத்த முறை அறுத்துருவேன்”

”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யார் கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” 

இவையெல்லாம் இந்தப் படத்தில் வெவ்வேறு காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள். சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய விஷ வித்துக்கள் போன்ற வசனங்களை தன் படத்தில் ஒலிக்க விடுவதில் இயக்குநருக்குப் பெருமிதம் இருக்கலாம்; ஆனால், மேம்பட்ட சமூகம் பற்றிய கனவு காணும் ஒரு பார்வையாளனை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. படத்தில் நாயகன் இரண்டு காட்சிகளில் மீசையை முறுக்குவார்.  முதலில் திரௌபதி, திலகாவின் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என மிரட்டு இளைஞனின் டவுசரை அறுத்து அம்மணமாக்கும்போது. இரண்டாவது தன் மனைவி கருவுற்ற சேதி அறிந்தபோது. 

மூன்று மணி நேரம் தொடர்பில் இல்லாத தன் பெண்ணைப் பற்றி வரும் தகவலைச் சரிபார்க்காமல் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு தந்தை. தன் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்கிறாளே சரி பரவாயில்லை அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்ற பொறுமைகூட அவருக்கில்லை. சட்டென்று விஷம் குடித்து இறந்துபோகிறார் என்றால் இந்தச் சமூகம் என்ன மனநிலையில் உள்ளது? அப்படியா உன் சாதி உயர்ந்தது எனும் கேள்வியே எழுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டும் ஒருவன் குறித்து கணவனிடம் பேசப் பயந்து தந்தையிடம் ஓடிவருகிறார் ஒரு மனைவி. தனக்கே தெரியாமல் தன்னைப் பதிவுதிருமணம் செய்ததாக மிரட்டுகிறானாம் ஒருவன். அந்த மகளின் பிரச்சினையை மருமகனிடம் பேசும் துணிவு அந்தத் தந்தைக்கு இல்லை. கோடி கோடியாகப் பணம் கொடுத்துப் பிரச்சினையைச் சமாளித்தாராம் அவர். அழுதுகொண்டே நீதிமன்றத்தில் சொல்கிறார் அந்தத் தந்தை. நீங்கள் பார்த்துவைத்து திருமணம் உங்கள் சாதியில் ஒருவரைத் தான் மணமுடித்துவைத்துள்ளீர்கள். அந்த மருமகனிடம் உங்களால் பேசவே முடியவில்லை என்றால் இது என்னவிதமான உறவு? 
இயக்குநர் பெருமிதமாகக் கருதும் சமூகம் இப்படியான மனிதர்களைத் தான் உருவாக்கியுள்ளது என்பது காட்சிகளில் அம்பலமாகிறது. இதைப் பார்க்கும் ஒரு பார்வையாளனுக்கு அந்தச் சமூகத்தின் மீது எப்படி நம்பிக்கை வரும்? இப்படியான ஒரு திரைப்படத்தைச் சமூகத்துக்கு வழங்கியதன் மூலம் இயக்குநர் பெருமை கொள்வதைப் போன்ற சிறுமை இந்தச் சமூகத்துக்கு வேறில்லை.  உருவாக்கரீதியான அமெச்சூர்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது; ஆனால், கருத்தியல்ரீதியாக விஷம் கக்கும் திரௌபதி கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல; புறக்கணிக்கப்பட வேண்டியவள்.

லேட்டஸ்ட்

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

தொடர்பவர்

பார்வையாளர்