இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், டிசம்பர் 14, 2017

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2017 நாள் ஒன்று

இன்று (14.12.2017) உற்சாகமாகத் தொடங்கியது இந்த ஆண்டின் சர்வதேசத் திரைப்பட விழா. கடந்த ஆண்டில் உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் திரையீடு நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டில் தேவி, தேவிபாலா, அண்ணா கேசினோ ஆகிய அரங்குகள் அலுவலகத்தின் அருகிலேயே அமைந்துவிட்டதால் வசதியாகப் போய்விட்டது. 

தியேட்டர் அருகில் இருந்தால் படம் பார்க்கும்வகையில் அமைய வேண்டுமே? முதல் படமாக, தேவிகலா திரையரங்கில் ஈரான் நாட்டுத் திரைப்படமான மஜான் சென்றோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அதைத் தொடர்ந்து பார்க்க முடியாது என்பது தெரிந்துவிட்டது. ஆகவே வேறு வழியின்றி வெளியேறினோம். 


அதன் பின்னர் கேசினோ திரையரங்கில் 12.15 மணி காட்சி Mist & the Maiden என்னும் ஸ்பானிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். த்ரில்லர் வகைப் படம். ஒரு தீவு ஒன்றில் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்குக் காரணமாக உள்ளூர் அரசியல்வாதி சொல்லப்படுகிறார். அந்த வழக்கு முடிந்த 3 வருடங்களுக்குப் பின்னர் அந்த வழக்கை விசாரிக்கும் படி மேலிட உத்தரவு வருகிறது. அதனால் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது. பல மர்மங்கள் விலகுகின்றன. இறுதிவரை சுவாரசியமாக நகர்ந்து படம். த்ரில்லர் என்பதால் ஆர்ப்பாட்டமாக இசை எல்லாம் இலலை. வழக்கமான விசாரணை போலவே இயல்பாக விசாரணைக் காட்சிகள் நகர்ந்தன். காவல் துறை அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தைப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. 

மாலையில் தொடக்கவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஆறு மணிக்குத் தொடங்க வேண்டிய விழா நிதானமாக ஏழு மணிக்குத் தான் தொடங்கியது. நடிகர் அரவிந்த் சாமி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 7.45க்கெல்லாம் நிகழ்ச்சி முடிந்து The Square என்னும் ஸ்பானிஷ் மொழித் திரைப்படம் திரையிடப்பட்டது. அபத்த நகைச்சுவைப் படம். பல விஷயங்களைப் படம் பேசியது. கேன் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது வென்ற திரைப்படம். சினிமாவுக்கான மொழி வசப்பட்டிருந்தது. நவீன தன்மையுடன் படம் காட்சியாக்கப்பட்டிருந்தது. ஆனால், மையப்படுத்தப்பட்ட கதை என்ற ஒன்று இல்லை. சமகால வாழ்வின் பல, அபத்தங்களை, விஷயங்களைப் படம் தொட்டுச் சென்றது. இரவில் படம் முடிய 10.30 ஆகிவிட்டது. அதன் பின்னர் கால் டாக்ஸி பிடித்து கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் வழியாக நங்கநல்லூர் வந்து சேர இரவு 11.30 ஆகிவிட்டது. 

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

சினிமா ஸ்கோப் 45: விடுகதை


திரைப்படத்தைப் பொறுத்தவரை புதிய கதைகள் என எவையுமே இல்லை. எல்லாவற்றையுமே நம் முன்னோடிகள் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். திரைக்கதையில் மட்டும்தான் புதிது புதிதாக எதையாவது சொல்ல முடியும். எத்தனையோ திரைக்கதைகளைப் படித்துவிட்டு எவ்வளவோ திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒரு திரைக்கதை அமைக்க அமர்ந்தாலும் உருவாகப்போகும் புதிய திரைக்கதை பழையவற்றிலிருந்து மாறுபட்டு அமைய வேண்டும். இல்லையென்றால் திருப்தி கிடைக்காது. திரைக்கதைகளைப் படிப்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் ஏற்கெனவே எந்தெந்தக் கருப்பொருட்களில் எல்லாம் படங்கள் வந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள மட்டுமே உதவும். அவற்றைப் பார்த்துக் காட்சிகளை அப்படியே சுடும்போது படைப்பாளியின் தராதரம் வெளிப்பட்டுவிடும். ஷங்கர் பெரிய இயக்குநர் என அறியப்பட்டிருக்கிறார். ‘அந்நிய’னில் விக்ரமை ‘தி செவன்த் சீ’லின் மரணக் கதாபாத்திர கெட்டப்பில் வெளிப்படுத்தும்போது சட்டென்று எரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. யோசிக்கவே மாட்டார்களா அப்படியே எடுத்துவைத்துவிடுகிறார்களே எனச் சலிப்பாக இருக்கிறது. ஒரு கதாபாத்திர வடிவமைப்புக்கே இப்படி என்றால் முழுப் படத்தையும் உருவிப் படம் பண்ணினால் ரசிகர்கள் படைப்பாளிகளை எப்படி மதிப்பார்கள்?

தமிழில் வித்தியாசமான படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் படைப்பாளிகளாலோ படங்களின் தலைப்புக்குக்கூட மெனக்கெட முடிவதில்லை. ஏற்கெனவே வந்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகளை அப்படியே வைத்துக்கொள்கிறார்கள். எழுபது எண்பது வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களின் தலைப்புகளை மறுபடி பயன்படுத்தினால் பரவாயில்லை. எண்பதுகளில் வந்த படங்களில் தலைப்புகளையே மறுபடியும் பயன்படுத்திவிடுவது புதிய விஷயங்களை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அவை கிடைக்கும்போது சட்டென்று பற்றிக்கொள்வார்கள். எப்போதுமே இந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த சினிமா ரசிகர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய முடிந்திருந்தது இளையராஜாவால். இளையராஜாவை மிஞ்சி என்ன செய்துவிட முடியும் என எண்ணியிருந்தால் ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் உருவாகியிருக்க மாட்டார். மாஸ்டர்களை மதிக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களை மிஞ்சும் வகையில் படங்களை உருவாக்க முயல வேண்டும்? தமிழில் மிக அரிதான வகையிலேயே வித்தியாசமான களங்களில் படங்கள் உருவாக்கப்படுகின்றன.


சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்றொரு படம் வந்தது. பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த படம். அது வணிகரீதியாக வெற்றிபெற்ற படமல்ல. ஆனால், புதிதாக எதையாவது தர வேண்டும் என்ற உந்துதலில் உருவாக்கப்பட்ட படம். அதுவரையிலும் தமிழ் இயக்குநர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தையும் கல்லிடைக்குறிச்சியையும் சுந்தரபாண்டிய புரத்தையும் குற்றாலத்தையும் அழகாகக் காட்டி வந்தார்கள். ‘ஆரஞ்சு மிட்டா’யில் அதே திருநெல்வேலி மாவட்டம்தான். அதே அம்பாசமுத்திரம்தான். ஆனால், அந்தப் படத்தில் தென்பட்ட நிலம் வேறு படங்களில் தென்படாத நிலம். 108 ஆம்புலன்ஸ் என்னும் புதிய வரவைத் திரைக்கதையின் மையமாக்கி ஒரு படத்தை உருவாக்க முடிந்த தன்மை புதிது. அதன் திரைக்கதை பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அதன் நோக்கம் புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்பதே. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் அவர் இருப்பதாலேயே ‘சூதுகவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவரையும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களின் டெம்ப்ளேட் கதாபாத்திரங்களில் அடக்கிவிடவே திரையுலகம் முயலும். அதில் நாயகர்கள் ஜாக்கிரதையாக இருந்தால் தமிழ்ப் படங்களுக்கு நல்லது.               

சகலகலா வல்லவன் கமல் ஹாசனை நாம் ‘ஹே ராம்’, ‘மகாநதி’ போன்ற படங்களுக்காகத் தான் நினைவுகூர்கிறோம். காலத்தால் முந்தைய அத்தகைய படைப்புகள் மட்டுமே அவரது அடையாளம். வணிகரீதியாக வெற்றிபெற்றதா என்பதை எல்லாம் மீறி கமல்ஹாசன் திரைத்துறையை எவ்வளவு நேசித்தார் என்பதற்குச் சான்றாக அப்படியான படங்கள் நிலைத்திருக்கும். ‘காதல் கோட்டை’ படத்தின் மூலம் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற அகத்தியனுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கொடுத்தார் கே பாலசந்தர். அப்போது அகத்தியன் உருவாக்கிய படம் ‘விடுகதை’. அது ஒரு தோல்விப் படம்தான். ஆனால், மரணம் பற்றி ஆக்கபூர்வமாகப் பேச முயன்றிருந்தார். மரணத்தை யதார்த்தமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றிப் படம் பேசியது. அது பெரிதாக வரவேற்கப்படவில்லை. மீண்டும் அவர் ‘காதல் கோட்டை’ சாயலிலே ‘காதல் கவிதை’, ‘வசந்த மாளிகை’ பாதிப்பிலே ‘கோகுலத்தில் சீதை’ என்று சென்றுவிட்டார். மணிரத்னத்திடமிருந்து வெளிவந்த சுசிகணேசனின் முதல் படம் ‘விரும்புகிறேன்’. அவர் மிக விருப்பத்துடன்தான் படத்தை உருவாக்கினார். நல்ல சப்ஜெக்ட்தான். வணிகரீதியில் வெற்றிபெறவில்லை. ஆனால், சுசி கணேசனை நினைவுபடுத்த அந்தப் படம்தான் உதவும். மணிரத்னத்திடமிருந்தோ கமல்ஹாசனிடமிருந்தோ ஒருவர் ஆக்கபூர்வமான ஆளாக வெளிப்படுவதே அபூர்வம். அப்படி வெளிப்பட்ட சுசி கணேசன் ‘கந்தசாமி’, ‘திருட்டுப் பயலே’ போன்ற படங்களின் வழியேதான் வெற்றிபெற்ற இயக்குநரானார்.  


‘உதிரிப்பூக்கள்’ தொடங்கி ‘சுப்ரமணிய புரம்’, ‘சூது கவ்வும்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘மதயானைக் கூட்டம்’ போன்ற சில திரைப்படங்கள் மட்டுமே சட்டென்று நினைவில் வருகின்றன. இதற்கிடையே ‘சேது’, ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற சில படங்கள் வழக்கத்திலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. இந்த எல்லாத் திரைப்படங்களுமே ஏதாவது ஓர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை உணர்த்துவதற்கான திரைக்கதையை அமைத்துக்கொண்டுதான் பயணப்பட்டிருக்கின்றன. பார்வையாளர் சொல்லப்பட்ட திரைக்கதையின் வழியே உணர்த்தப்பட்ட கருத்தை உள்வாங்கிக்கொள்கிறார். ஆகவே, திரைக்கதை சுவாரசியமாக இல்லையென்றால் எதையுமே பார்வையாளரால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் படத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். இங்கே கருத்து என்பது ஒரு செய்தி அவ்வளவுதான். அதை நன்னெறி என்பதாக மட்டும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை. கருத்து சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னாலும் படங்கள் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. கருத்தை வெளிப்படையாகச் சொன்னால் அடப்போங்கப்பா என ரசிகர்கள் அலுத்துக்கொள்வார்கள். ஆகவே, அதை உணர்த்தும்படியான திரைக்கதை அமைக்கும்போது ரசிகர்கள் அதை உணர்ந்துகொள்வார்கள்.


படம் ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டுமே தவிர அதையே போதிக்கக் கூடாது. போதனை கட்டுரையின் தன்மை, திரைப்படத்தின் தன்மை உணர்த்துதலே. போதனைத் தன்மைக்கு உதாரணமாக சேது மாதவன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ‘நம்மவ’ரைச் சொல்லலாம். திரைக்கதையின் காட்சிகள் அனைத்துமே மையக் கருத்தை உணர்த்துவதற்கான பயணமாக இருக்கும்போது படம் சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ருசிகரமாகச் சொல்லி உணர்த்த வேண்டிய செய்தியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில்தான் திரைக்கதை அமைப்பின் சவாலே அடங்கியுள்ளது. அதை முடிந்தவரை நுட்பமாகச் செய்ய வேண்டும். ரஜினி காந்த் படத்து ஓபனிங் காட்சி போல் அமைந்துவிடக் கூடாது. அது ரஜினிக்கு சரி. நல்ல படத்துக்குச் சரியாக அமையாது.

(இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் 45 வாரங்கள் வெளிவந்த இத்தொடர் இந்த அத்தியாயத்துடன் நிறைவுபெறுகிறது.)

ஞாயிறு, செப்டம்பர் 10, 2017

சினிமா ஸ்கோப் 44: அவள் அப்படித்தான்


தமிழ் சினிமாவில் ஆண் பெண் உறவு பற்றிய வெளிப்படையான படமொன்றை உருவாக்கியவர் ருத்ரய்யா. ஒரே படத்தின் மூலம் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கப்பட்ட இயக்குநரும் அவர்தான். அவருக்கு அளவுக்கதிகமான புகழ் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் உண்டு. அந்த அளவுக்குத் தகுதி கொண்ட படமல்ல அவள் அப்படித்தான் என்பது தீவிரமான மனப்போக்கு கொண்ட சிலரது எண்ணம். ஆனாலும், ஒரு பொதுவான ரசிகனின் ரசனையில் அவருடைய அவள் அப்படித்தான் எதிர்பாராத குறுக்கீடுகளை நிகழ்த்தியது.

1978-ல் அந்தப் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவின் மரபு வேலிகள் திசையறியாது தவித்தன. அதுவரையான பெண் கதாபாத்திரங்களை எல்லாம் அது மிகச் சிறியதாக மாற்றிவிட்டு விஷ்வரூபம் எடுத்திருந்தது. கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகியோருடன் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரய்யா. அவர்கள் படைத்த மஞ்சு கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் நவீனப் பாத்திரங்களுக்கு முன்னோடியாகவே விளங்கியது. அதுவரை அப்படியொரு துணிச்சலான கதாபாத்திரம் எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்ததா என்பது சந்தேகமே. இன்றுவரை அந்தப் படம் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் மஞ்சுவாக நடித்திருந்த ஸ்ரீபிரியாதான்; அல்லது ஸ்ரீபிரியா ஏற்றிருந்த மஞ்சு கதாபாத்திரம்தான். ஒரு நடிகையாகத் தனது படைப்புத்திறனின் உச்சத்தை மஞ்சு கதாபாத்திரம் வழியே அவர் வெளிப்படுத்தியிருந்தார். பெண் விடுதலை, பெண்களின் நிலைமை போன்ற பல விஷயங்களைப் பேசும் இந்தப் படத்தின் வழியே சமூகத்தின் போலித்தனத்தையும் அம்பலப்படுத்தினார் ருத்ரய்யா. அவள் அப்படித்தான், மஞ்சுவை மட்டுமல்ல, மஞ்சு போன்ற எவரையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைச் செய்தி. இதே செய்தியை வெவ்வேறு இயக்குநர்கள் வெவ்வேறு படங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.


1979-ல் வெளியான மேற்கு ஜெர்மனி நாட்டுத் திரைப்படம் தி மேரேஜ் ஆஃப் மரியா ப்ரௌன். ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். இதன் நாயகியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவள் என்ன நினைக்கிறாள், யாரை விரும்புகிறாள் என்பது எல்லாம் அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இரண்டாம் உலகப் போரின்போது அவளுக்குத் திருமணம் ஆனது. திருமணம் செய்துகொண்ட அவளுடன் அவளுடைய கணவன் அரை நாளும் ஒரு ராத்திரியும் மட்டுமே வாழ்ந்துவிட்டுப் போருக்குச் சென்றுவிடுகிறான். போருக்குச் சென்ற அவனை அவள் தேடிக்கொண்டே இருக்கிறாள். அவன் ஒரு நாளில் திரும்பிவந்துவிடுகிறான். அந்த நாளில் அவள், அந்த மரியா, தனக்குப் பிடித்த காதலனுடன் படுக்கையில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் காதலனின் கரு மிதந்துகொண்டிருக்கிறது. காதலனுக்கும் கணவனுக்கும் மோதல் வருகிறது. அவள் காதலனை அடித்துக்கொன்றுவிடுகிறாள். கணவன் பழியேற்றுச் சிறைக்குச் செல்கிறான்.

இப்போது கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கு வருகிறது. ஒரு தொழிலதிபரின் காரியதரிசியாகப் பணியில் சேரும் மரியா, அவரது அன்புப்பிடியில் சிக்கிக்கொள்கிறாள். அவர் அவளை மணந்துகொள்ள விரும்புகிறார். அவளைப் பொறுத்தவரை அவள் கணவனுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்திருக்கிறாள். ஆகவே, மனம்விட்டு தொழிலதிபர் கேட்டும் மணம்புரிய மறுத்துவிடுகிறாள். சிறையிலிருக்கும் கணவனை வெளியே கொண்டுவரப் பாடுபடுகிறாள். இந்தக் கதையைப் படித்ததும் உங்களுக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் திரைப்படம் நினைவுக்கு வரலாம். அதிலும் ரேவதி தன் கணவன் பாண்டியனைச் சிறையிலிருந்து விடுவிக்கப் படாத பாடு படுவாள். வெளியே வரும் கணவன் தனது நடத்தையைச் சந்தேகப்படும்போது, புயலாகப் பொங்கி எழுந்து படிதாண்டுவாள்.


சிறையிலிருக்கும் மரியாவின் கணவரைத் தொழிலதிபர் சென்று பார்க்கிறார். மரியாவின் கணவனுக்கும் இந்த உறவு தெரியவருகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் அவன். மரியாவைவிட்டுப் பிரிந்துசெல்கிறான். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகிறார்கள். அவள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறாள். இதற்கிடையில் தொழிலதிபர், அவரது சொத்தை மரியாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அவள் மீண்டும் கணவனுடன் சேர்ந்த அன்று இந்தத் தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. கேஸ் ஸ்டவ்வில் சிகரெட் பற்றவைக்கும் அவள் கேஸ் ஸ்டவ்வை அடைக்க மறக்கிறாள். சிலிண்டர் வெடித்து இருவரும் இறக்கிறார்கள். ஸ்டவ் தானாக வெடித்ததா அவள் வெடிக்கவைத்தாளா குழப்பம் வருகிறதா அதுதான் மரியா. மரியா போன்றவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

மஞ்சு, மரியா போன்றவர்களைத்தான் ஞாபகப்படுத்துகிறார் ஆல்தியா ஜான்சனும். இது ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி 2017. ஆண்களால் ஒரு காலமும் பெண்களைப் புரிந்துகொள்ள முடியாது. பெண்கள் மனமுவந்து தரும் இடத்தில் ஆண்கள் சில காலம் தங்கிக்கொள்ளலாம். அவ்வளவுதான். அந்த இடத்தையும் ஆண்கள் தங்கள் மந்த புத்தியால் அழித்துக்கொள்கிறார்கள். ஆல்தியா ஜான்சன், சௌமியா, வீனஸ் போன்ற பெண்களது வாழ்வு ஆண்களால் அலைக்கழிக்கப்படுகிறது. இங்கு பிரபுக்களும் ஆங்கித்களும் வேலைக்காகாதவர்கள். ஜேக்கப்புகளும் ஆல்தியாக்களைப் புண்படுத்துகிறார்கள். பர்ணபாஸ்களுக்கு என்ன உரிமை இருக்கிறது வீனஸ்களைத் தண்டிக்க? இப்படியான கேள்விகளை எல்லாம் உள்ளடக்கிய தரமணி உலகமயமாக்கலின் காலத்தின் பெண்களின் துயரங்களைப் புதுமையான திரைமொழியில் பேசியது. இயற்கையை அழித்த உங்கள் வாழ்வில் இதுபோன்ற துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் அது எச்சரிக்கிறது. அதன் மொழி சற்றுக் கடுமையானது. ஆனால், அது சொன்ன சேதி புரிந்துகொள்ளப்பட வேண்டியது. ஆனால் புரிந்துகொள்வது அவரவர் பாடு.


இவையெல்லாம் ஆண்கள் பார்வையில் வெளிப்பட்ட படங்கள். இந்த ஆண்டு வெளியான இந்திப் படமான லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா ஒரு பெண்ணின் பார்வையில் பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த திரைப்படம். இதை இயக்கியவர் ஆலங்கிரிதா ஸ்ரீவாஸ்தவா. பெண்களின் கனவுக்கும் நனவுக்குமான பாரதூர இடைவெளிகளை இப்பட்த்தின் வாயிலாகப் படமாக்கியிருக்கிறார். ஜீன்ஸ் அணிந்து சுதந்திர வானில் பறக்கும் ஆசை கொண்ட இஸ்லாமியப் பெண் ஒருவர் அனுதினமும் புர்கா தைப்பதிலேயே தனது பருவத்தைக் கழிக்க நேர்கிறது. விரும்பிய காதலனைக் கரம்பற்ற முடியாமல் தாய் செய்துவைத்த திருமணத்துக்காளாகும் பெண் ஒருவர் தனது சமூக மரபுக்கெதிரான தன் எதிர்ப்பைக் காட்டுகிறார். திருமண நிச்சயதார்த்தன்றே தன் காதலனுடன் உறவுகொள்கிறார். மற்றொரு மணமான இஸ்லாமியப் பெண்ணோ பணியிடத்தில் திறம்படச் செயலாற்றுகிறாள்; படுக்கையிலோ அவளை உறவுகொள்வதற்கான இயந்திரம் போல் பயன்படுத்துகிறான் கணவன். 50வயதைக் கடந்த மற்றொரு பெண் தனது பெயரைக்கூட மறக்கும் அளவுக்குப் புற உலகினரால் நடத்தப்படுகிறார். தனக்கு நீச்சல் கற்றுத்தரும் இளைஞனிடம் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல் வழியே புதியதோர் உலகத்தைத் தரிசிக்கிறார். அவர்கள் நால்வரையும் அவர்களைக் குற்றப்படுத்த எந்தத் தகுதியுமற்ற ஆண்கள் அற்பக் காரணங்களுக்காகக் குற்றப்படுத்துகிறார்கள். பெண்களின் எந்தக் கனவையும் புரிந்துகொள்ளாத ஆண்கள் இதற்கெல்லாம் தகுதியற்றவர்கள் என்கிறார் இயக்குநர்.

இந்த எல்லாப் படங்களிலுமே பெண்கள் புகைபிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், ஆண்களுடன் உறவு கொள்கிறார்கள். அவர்களின் வழியில் எல்லாம் ஆண்கள் எதிர்ப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் பெண்கள் கனவு காணும் ஆத்மார்த்த உறவை அளிக்க வகையற்ற கையறுநிலையிலேயே ஆண்கள் இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஆண்கள் உணர்ந்துகொள்வதாகவே அத்தனை படங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்கிறார்களா?

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

சினிமா ஸ்கோப் 43: நட்சத்திரம்


சினிமாக் கனவில் தினந்தோறும் தலைநகரங்களில் அடைக்கலமாகும் இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழ்நாட்டில் வீட்டைவிட்டு ஓடிவரும் இளைஞர்களில் பலர் தேசத்தைக் காக்க ராணுவத்தில் சேரவில்லை என்றால் பெரும்பாலும் கலையைக் காக்க சினிமாவில்தான் சேருகிறார்கள். அதிலும் காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்குப் பிரதான இலக்கு சினிமாதான். ஒரு பெரிய நடிகராகவோ இயக்குநராகவோ ஆன பின்னர்தான் சொந்த ஊர் திரும்ப வேண்டும் எனச் சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள். பள்ளி, கல்லூரிகளில் யாராவது ஒரு அமெச்சூர் நாடகத்தில் நடித்துவிட்டாலோ ஏதாவது ஒரு உப்புமா நாடகத்தை எழுதிவிட்டாலோ அவ்வளவுதான், அவரது கதை முடிந்தது. அடுத்த சத்யஜித் ரே, அடுத்த அமிதாப் என்ற கனவில் கோடம்பாக்கத்துக்கு ரயிலேறிவிடுவார். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. இப்படி வருபவர்களில் பத்து சதவீதத்தினர்கூட வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஏனெனில், சினிமா என்னும் பரமபதத்தில் ஏணிகள் சொற்பமே, அதிகமும் பாம்புகள்தாம். இடையில் எத்தனையோ இழப்புகள். அத்தனையையும் தாங்கிக்கொண்டு ஆயுள் முழுக்க இரண்டு மணி நேர சினிமா ஒன்றில் பங்களித்துவிட வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். அறிவு இதை அபத்தம் எனலாம்; உணர்வு மட்டுமே இதைப் புரிந்துகொள்கிறது.

கே. பாலசந்தரின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘சர்வம் சுந்தர’த்தில் (1964) சினிமா முயற்சியில் தோற்றுப்போய் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலைபார்க்கும், மிகவும் சுமாரான தோற்றம் கொண்ட நாகேஷ் ஒரு காதல் காரணமாக மீண்டும் முயன்று பெரிய நடிகராகிவிடுகிறார். படத்தில் அவரது காதல் கைகூடாது. பி.மாதவன் இயக்கிய ‘ராமன் எத்தனை ராமனடி’யில் (1970) கிராமத்தில் ஜமீன்தாரின் தங்கையான கே.ஆர்.விஜயாவைக் காதலித்திருப்பார் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, வெகுளித்தனமான சிவாஜி கணேசன். இதனால் ஜமீன்தார் நம்பியாரால் அவமானப்படுத்தப்படும் சிவாஜி கணேசன் பெரிய நடிகராகும் லட்சியத்துடன் சென்னைக்கு வந்துவிடுகிறார்; படபடவென அடுத்தடுத்த காட்சிகளில் வெற்றிகரமான நடிகராகிவிடுகிறார். எந்தக் காதலியைக் கரம் பற்றுவதற்காக அவர் நடிகரானாரோ அந்தக் காதலியை அவர் மீண்டும் சந்திக்கும்போது அவர் மற்றொருவரின் மனைவி.


இதே பி. மாதவனின் இயக்கத்தில், ஷோபா, சிவகுமார் நடித்து வெளிவந்த படம் ‘ஏணிப்படிகள்’ (1979). இதில் ஒரு கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பை பெருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லக்கண்ணுவுக்கு சினிமா எனும் சொர்க்க வாசல் திறக்கிறது. அவளை முன்னேற்ற அவளுடைய காதலன் மாணிக்கம் உறுதுணையாக இருக்கிறான். ஆனால், செல்லக்கண்ணு, கமலாதேவி என்னும் நட்சத்திரமாக மாறத் தொடங்கியபோது அவளுடைய அண்ணனும் அண்ணியும் மாணிக்கத்தைத் தந்திரமாக வெளியேற்றிவிட்டு அவளது புகழ் வெளிச்சத்தில் குளிர்காய்கிறார்கள். இந்தத் தந்திரத்தை எல்லாம் அறிந்த கமலா தேவி தற்கொலை செய்துகொண்டு செல்லக்கண்ணுவாக மாறித் தன் மாணிக்கத்தைக் கரம்பற்றுகிறாள். இந்தப் படம் தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய ‘சீதாம்மாலக்‌ஷ்மி’ படத்தின் மறு ஆக்கம்தான். வசனத்தை மகேந்திரன் எழுதியிருப்பார்.

இந்தப் படங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் காதல் காரணமாகச் சில கதாபாத்திரங்கள் நடிகர்களாகிறார்கள். பிரவீணா பிலிம் சர்கியூட் என்னும் நிறுவனத்தின் பெயரில் கே.பாக்யராஜ் தயாரித்து இயக்கிய ‘தாவணிக்கனவுக’ளில் (1984) தன் தங்கைகளைக் கரையேற்றுவதற்காகக் கதாநாயகனாக முயல்வார் பாக்யராஜ். கதாநாயகனாக மாறிக் கைநிறையச் சம்பாதிப்பார். தன் தங்கைகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் என மாப்பிள்ளைகளை வரிசையில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். ஆனால், அவர்களோ தங்களது கஷ்ட காலத்தில் உதவிய டெய்லர், போஸ்ட்மேன் போன்ற சாதாரணர்களையே கரம்பற்ற விரும்புவார்கள். இதுதான் படம் சொன்ன செய்தி. ஆனால், மக்கள் அந்தச் செய்தியைக் கேட்கவே விரும்பவில்லை; படம் தோல்வியடைந்தது. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயி’லில் விஜயன் ஏற்றிருந்த பட்டாளத்தார் போன்ற கேப்டன் என்னும் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். திரைக்கதையில் கேப்டன் கதாபாத்திரம் சுப்ரமணியனுக்கு உதவியிருக்கும். படத்தைப் பொறுத்தவரை சிவாஜியால் பாக்யராஜுக்கு உதவியில்லை. சிவாஜியை இயக்கியாகிவிட்டது என்னும் பெருமை மட்டுமே அவருக்கு மிச்சம்.  

மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையிலே க்ருதிக் ரோஷன்’ (2016) படத்தின் சில காட்சிகளில் ‘தாவணிக்கனவுக’ளை நினைவுக்கு வந்தது. இப்படத்தில், விஷ்ணு உண்ணிகிருஷ்ணனை சினிமாவில் கதாநாயகனாக்க அவருடைய தந்தை முயல்வார். ஏனெனில், அவர் சினிமா நடிகராக விரும்பியிருப்பார். ஆனால், அது நடைபெறாமல் போனதால் தன் மகனை எப்படியும் நடிகனாக்க ஆசைப்படுவார். திருடனாகவே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அவருக்கோ கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். இறுதியில் கதாநாயகனாக ஆகிவிடுவார். இந்தப் படத்தில் ஒரு காட்சி உண்டு. இயக்குநர் ஒருவர் தன் மனைவியுடன் ஹோட்டலுக்கு வருவார். அதைப் பார்த்த விஷ்ணு அவரிடம் போய் வாய்ப்பு கேட்கலாம் எனச் செல்வார். ஆனால், இயக்குநரோ குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக மனம் வெதும்பிய நிலையிலேயே அங்கு வந்திருப்பார். விஷ்ணுவைக் கண்டபடி திட்டி அனுப்பிவிடுவார். இதுதான் யதார்த்தம். அதன் பின் அந்த இயக்குநரே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விஷ்ணுவுக்குக் கதாநாயகன் வாய்ப்பளிப்பார். இது திரைக்கதைக்கான சுவாரசியம். சின்னச் சின்ன திருப்பங்கள், சுவாரசியங்கள், நகைச்சுவைக் காட்சிகளுடன் கூடிய சாதாரணமான திரைப்படம் இது. படத்தின் திரைக்கதையும் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன்தான். படத்தை இயக்கியிருப்பவர் நாதிர்ஷா.

மார்டின் பிரகத் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பெஸ்ட் ஆக்டர்’ (2010) திரைப்படத்தில் பள்ளிக்கூட ஆசிரியரான மோகனுக்கு சினிமா ஆசை இருக்கும். நிம்மதியான ஆசிரியர் வேலையை விட்டு எதற்காக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரும் சினிமா வாய்ப்புக்காகப் பல படிகளில் ஏறி இறங்குவார். ஒரு கேங்க்ஸ்டர் வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு கொட்டேஷன் குழுவில் இணைந்துவிடுவார். அதனால் பல சிக்கல்கள் உருவாகும். அனைத்திலிருந்தும் விடுபட்டு இறுதியில் நாயகனாகிவிடுவார். ஒரு நடிகனுக்கு அடிப்படையில் என்ன தேவை என்பதை உணர்த்தும்வகையிலான திரைக்கதை இது.  


அனீஷ் உபாசனா இயக்கத்தில் 2012-ல் வெளியான ‘மேட்னி’ திரைப்படத்தில் ஒரு புதுவிதமான கதைக் களம். இதில் சினிமா ஆசை கொண்ட நாயகன் ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்துப் பிள்ளை. குடும்பச் சுமை காரணமாக வேலை தேடி நாயகி நகரத்துக்கு வருகிறாள். இருவரும் ஒரு சினிமாவில் நடிக்கும் சூழல் அமைகிறது. நல்ல கதைப் படம் என நம்பி அதில் நடிக்கிறார்கள். ஆனால், அந்தப் படம் திரைக்கு வரும்போது துண்டுப் படங்கள் இணைக்கப்பட்ட சதைப் படமாக மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களைச் சொல்வதே இந்தப் படம். 

ஒரு திரைக்கதையில் சினிமா ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்துவிடுகின்றன. ஏனெனில், திரைப்படம் வாழ்வு குறித்தான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதே அதன் ஆதார மரபு. ஆனால், யதார்த்தத்தில் சினிமாவுக்காக வாழ்வைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த யதார்த்தத்தைப் புரியவைக்கும் கதைகளைக் கொண்ட படங்களுக்கு உதாரணங்கள்தாம் ‘மேட்னி’ போன்றவை. இவை உங்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதில்லை; இந்தப் பாதை இப்படியும் அமையலாம் கவனமாக இருங்கள் என உங்களை எச்சரிக்கின்றன. எல்லா எச்சரிக்கைகளையும் மீறி சினிமாக் கதவுகளைச் சில கால்கள் வந்தடையும்; கைசோர அதன் கதவுகளைத் தட்டிப் பார்க்கும். அவர்களின் வாழ்வு விருதால் நிறையுமா விருதாவாகுமா என்பதே உண்மையில் சுவாரசியமான திரைக்கதை. 

< சினிமா ஸ்கோப் 42 >                                 < சினிமா ஸ்கோப் 44 >

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

சினிமா ஸ்கோப் 42: டும் டும் டும்

கன்னி ராசி பிரபு, ரேவதி

திரைப்படங்களில் காதலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சரக்கு திருமணமாகத்தான் இருக்கும். திருமணம் குறித்து வெளியான படங்களில் பெரும்பாலானவை அது தொடர்பான பொதுவான பிரச்சினைகளைப் பொதுப் பார்வையுடன் விவாதிக்கின்றன. இவை தவிர்த்து ஓரிரு படங்கள் சில சிக்கலான விஷயங்களைத் தனியான பார்வையுடன் பரிசீலித்துள்ளன. அதற்குப் பல சான்றுகளும் உள்ளன.

‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை, நான் கவிஞனுமில்லை’ போன்ற இனிய பாடல்களைக் கொண்ட இயக்குநர் பீம்சிங்கின் ‘படித்தால் மட்டும் போதுமா’ (1962) திரைப்படத்தில் தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்வார்கள். பாலாஜி, சிவாஜி கணேசன், ஆகியோர் அண்ணன் தம்பியாகவும் சாவித்திரியும் ராஜ சுலோசனாவும் மனைவிகளாகவும் நடித்திருப்பார்கள்.


தம்பி படிக்காதவன். அண்ணன் படித்தவன். எப்போதுமே படித்தவன் சூது வாதில் கெட்டிக்காரனாகத்தானே இருப்பான். பெண் பார்க்கப்போன இடத்தில் தம்பிக்காகப் பார்த்த பெண் அண்ணனின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள். அவளை அடைய திட்டம் போட்டு, ஒரு மொட்டைக் கடிதம் வழியே அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான் அண்ணன்காரன். ஆனால், தம்பியின் வாழ்க்கையிலோ புயல்வீசுகிறது. படிக்காதவனை அவனுடைய மனைவியே விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் தம்பிக்கு அண்ணனின் சூழ்ச்சி தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை திரைக்கதை சித்தரித்திருக்கும்.   

இந்தப் படத்தில் தன் அண்ணியின் பெயர் சீதா என்பதால் சீதாப்பழத்தைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் நாயகன். அது ஒரு காலம். இப்போது இதைக் கேட்டாலே சிரிப்புதான் வருகிறது. 

‘அவளா சொன்னால் இருக்காது’ என்னும் பாடல் இடம்பெற்ற, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘செல்வம்’ (1966) படத்திலும் திருமணம்தான் படத்தின் கரு. கதைப்படி நாயகிக்கு மாங்கல்ய தோஷம். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ அந்த மணாளன் ஓராண்டில் மரணமடைந்துவிடுவான் என்கிறார்கள் ஜோதிடர்கள். நாயகனோ தன் மனதுக்குகந்த மாமன் பெண்ணைக் கைப்பிடிக்கத் துடித்திருக்கிறான். அவளும் அவனுக்காகவே காத்திருக்கிறான். அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் ஜோதிடர்கள். ஜோதிடத்தைப் புறந்தள்ளிவிட்டு நாயகியைக் கைபிடித்துவிடுகிறான் நாயகன். 


தோஷத்தை மீறி திருமணம் செய்ததால் ஒரு பரிகாரம் என்று ஓராண்டுக்கு நாயகனையும் நாயகியையும் பிரிந்திருக்கச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள். ஆனால், இளமை வேகம் அதையும் மீறிவிடுகிறது. நாயகனும் நாயகியும் ஒருவரில் ஒருவர் கலந்துவிடுகிறார்கள். இப்போது என்ன ஆகும் ஜோதிடம் பலித்ததா, இல்லையா என்பதைத் தனது பாணியில் படமாக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சாவித்திரி தன் நாயகனை எமனிடமிருந்து மீட்கப் போராடிய புராணச் சம்பவம் படத்தில் கதாகாலட்சேபமாக இடம்பெற்றிருக்கும். படத்தில் எஸ்.வி.ரங்கராவ் ஏற்றிருக்கும் ஆங்கில மருத்துவர் வேடம் புதுமையானது. ஜோதிடம் தொடர்பான பல விமர்சனங்களுடன், ஜோதிடம் என்பதை மனிதர்கள் தங்கள் சுய லாபத்துக்கே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர்.   

இதே திருமண தோஷத்தை இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் தனது முதல் படமான ‘கன்னி ராசி’யில் (1985) பயன்படுத்தியிருப்பார். அவர் கதை எழுதிய இந்தப் படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமாரும் லிவிங்ஸ்டனும் எழுதியிருக்கிறார்கள். அக்காள் மகளை மணந்துகொள்ளும் ஆசையில் இருப்பார் நாயகன். திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் என்பது தெரியவரும். அதன் காரணமாகத் திருமணம் தடைபடும். ஜோதிடம் என்பதை நம்பி வாழ்வை அழித்துக்கொள்வது அவசியமா என்பதை உணர்த்தும் வகையில் ஜோதிடம் தெரிவிப்பதற்கு நேர் எதிரான சம்பவத்தை வைத்துப் படத்தை முடித்திருப்பார்கள்.
மெட்டி: சரத்பாபு, ராதிகா

திருமணம் என்ற சடங்கையும் குடும்பம் என்ற அமைப்பையும் கேள்விக்குட்படுத்திய இயக்குநர் மகேந்திரனின் ‘மெட்டி’யில் (1982) ஒரு குடும்பமே திருமண தோஷத்தால் அவதிப்படும். ஆனால், இதில் ஜோதிடம் என்பது காரியமில்லை, விதிதான் கைகாட்டப்படும். தமிழின் தீவிரமான சில படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் தமிழ்ச் சமூகத்தின் முகத்திரையை முடிந்த அளவு சேதாரப்படுத்தியிருப்பார் மகேந்திரன். குடிகாரத் தகப்பனின் தகாத செயல்களால் அவரை வெறுத்து ஒதுக்கும் மகன் வேடம் நாயகனுக்கு. கல்யாணி அம்மா, தரகர் தங்கம், டீக்கடைக்காரரான பாலேட்டா, எழுத்தாளர் விஜயன் போன்ற கதாபாத்திர சித்தரிப்புகள் பிறர் படங்களில் காணக்கிடைக்காதவை. கல்யாணி அம்மாவின் தற்கொலைக் காட்சி தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது எச்சிலை இறைத்திருக்கும். இளையராஜாவின் இசை படத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கும். 

‘பணங்கிறது ஒரு க்வாலிஃபிகேஷன் இல்ல... நான் தங்கத்த ரொம்ப கேவலமா நெனைக்கிறவன்… நீங்க என்னிக்கோ அவங்கள கொல பண்ணீட்டீங்க ஆனா அவங்க இறந்தது இன்னக்கிதான்... இப்படிக் குருட்டுப்பூனை விட்டத்துல தாவுன மாதிரி எதுக்கு அவனக் கட்டிக்க ஆசைப்படுற… உந்தலைவிதியையும் உங்கம்மா தலைவிதியையும் யார் மாத்துறது எல்லாம் நாசமாப்போங்க. இந்தக் குங்குமத்துல தான் உலகமே இருக்கோ பொம்பளய்ங்களுக்கெல்லாம்… நான் அம்மாவ நெனச்சி அழல, அம்மா வாழ்ந்த வாழ்க்கையை நெனச்சி அழறேன்… போன்ற பல வசனங்கள் மின்னல் கீற்றுகளாய் பளிச் பளிச்சென வந்து விழும். சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை அறிந்த இயக்குநர் மகேந்திரன் என்றபோதும் இந்தப் படத்தின் ரத்தினச் சுருக்கமான பல வசனங்கள் நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கூர்பார்க்கும் வகையிலானவை. பெண்கள் திருமணத்தை வேண்டி விரும்பி எல்லாம் ஏற்கவில்லை, வேறு வழியே இல்லாத காரணத்தால்தான் ஏற்க வேண்டியதிருக்கிறது என்னும் யதார்த்தத்தையே படம் சுட்டி நிற்கும்.  

பாம்புச்சட்டை: கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா
இயக்குநர் அபர்ணா சென், ‘சதி’ (1989) என்னும் பெயரில் ஒரு வங்க மொழிப் படம் எடுத்திருக்கிறார். இது 1800-களில் இந்தியச் சமூகத்தில் வழக்கத்திலிருந்த உடன்கட்டை ஏறுதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். அம்மா, அப்பாவை இழந்து, வாய் பேச இயலாத நிலையில் வாழும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் சபனா ஆஷ்மி. அவளுடைய திருமண தோஷம் காரணமாக அவளை ஓர் ஆலமரத்துக்குத் திருமணம்செய்து வைத்துவிடுவார்கள். அவள் கருத்தரித்தும் விடுவாள். ஆனால் அது மரத்தின் வேலையல்ல; ஒரு மனிதரின் கைங்கர்யம்தான். மாடு பெண் கன்றை ஈன்றால் மகிழும் சமூகம் பெண் பிள்ளை பிறந்தால் ஏன் துக்கம்கொள்கிறது எனும் கேள்வியைக் காட்சிரீதியாக எழுப்பியிருப்பார் அபர்ணா சென். இந்தப் படத்தின் திரைக்கதை தாயைவிட மேலாக உங்களைத் தாலாட்டும். அதையெல்லாம் மீறி பொறுமை காத்தால் படத்தைப் பார்த்து முடிக்க இயலும். 

பொதுவாக அனைத்துப் படங்களிலுமே திருமணத் தடை போன்ற நம்பிக்கை காரணமாக அதிக பாதிப்படைபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை மாறவில்லை. சமீபத்தில் வெளியான ‘பாம்புச் சட்டை’ படத்தில்கூடத் தன் அண்ணிக்குத் திருமணம் நடத்திவைக்க அந்த நாயகன் படாதபாடு படுவான். அவருடன் ஒரே வீட்டில் இருக்க நேரும் நாயகனையும் அண்ணியையும் தொடர்புபடுத்தி ஊரே பேசும். ஆண் பெண் உறவு, திருமணம் என்பவை குறித்தெல்லாம் இன்னும் இந்தச் சமூகத்தில் பெரிய அளவிலான புரிதல் வரவில்லை. ஆனாலும் மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வப்போது திரைப்படங்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றன என்பதே ஆறுதல்.

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

சினிமா ஸ்கோப் 41: கடமை கண்ணியம் கட்டுப்பாடு


திரைக்கதையிலும் படமாக்கப்பட்ட விதத்திலும் உணர்த்தும் விஷயத்திலும் சாரமிருந்தால் நல்ல படத்துக்குச் சாதாரணக் கதையே போதும். கதையையையும் திரைப்படத்தையும் இணைக்கும் பாலம் திரைக்கதையே. அப்படியான பாலத்தையே திரைக்கதையின் பலமாக்கி இயக்குநர் டேவிட் லீன் தனது த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் (1957) என்னும் படத்தில் வாழ்வைச் செழுமைப்படுத்த உதவும் பல செய்திகளைச் சொல்லியிருப்பார். இப்படம் பிரெஞ்சு நாவலாசிரியர் பியர் போல்லே எழுதிய த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய் என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவத்தினரிடம் கைதிகளாகச் சிக்குகிறார்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு ரயில் தடம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மரண ரயில் தடம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அந்த பர்மா ரயில் தட உருவாக்கப் பணியின்போது அதிகப்படியான எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பொறியியலாளரான பிரெஞ்சு நாவலாசிரியரும் போர்க்கைதியாக ஜப்பான் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் புனைவைக் கலந்து படைத்த நாவல் இது. 

டேவிட் லீனின் திரைப்படத்தில் பர்மா ரயில் தடத்தில் க்வாய் நதிக்கு மேலே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டிய பணி ஒன்று வருகிறது. இதை நிறைவேற்றும் பொறுப்பு ஜப்பானிய ராணுவப் படை தலைவர் சைட்டோ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போர்க்கைதிகளைப் பணியாட்களாக வைத்து இந்தப் பாலத்தை அவர் கட்டி முடிக்க வேண்டும். புதிதாக வந்திருக்கும் போர்க்கைதிகளிடம் அதிகாரிகள், வீரர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று சைட்டோ மிகக் கண்டிப்புடன் கூறுகிறார். ஆங்கிலேய படைத் தலைவரான நிக்கல்சன், அதிகாரிகள் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார். ஆனால், சைட்டோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நிக்கல்சனை அவமானப்படுத்துகிறார்; கடும் தண்டனை விதிக்கிறார். ஆனாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் நிக்கல்சன் எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.

வேறு வழியற்ற சூழலில், பணியை முடிக்க வேண்டிய நெருக்கடி அதிகரிக்கும்போது, சைட்டோ அதிகாரிகளை உடலுழைப்புப் பணியிலிருந்து விடுவிக்கிறார். இப்போது பணியை முடிக்க வேண்டிய பொறுப்பை நிக்கல்சன் ஏற்றுக்கொள்கிறார். தொழில்நுட்பரீதியில் பாலம் சரியாக இல்லாததை உணர்ந்து புதிதாகப் பாலம் அமைக்க முடிவெடுத்து வேலையைத் தொடங்குகிறார். குறிப்பிட்ட கெடுவுக்குள் பாலத்தை அமைத்து முடித்துவிட கிட்டத்தட்ட சைட்டோவைப் போன்றே எல்லா உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளையும், வியாதியஸ்தர்களையும்கூட உடலுழைப்பில் ஈடுபடுத்துகிறார். கடும் முயற்சியில் பாலத்தை உருப்படியாகக் கட்டி முடிக்கிறார். வேலை, விதிமுறை, கொள்கை போன்றவற்றை முறையாக அனுசரிப்பதால் ஏற்படும் தனிமனித இழப்புகளை இந்தக் கதாபாத்திரம் மூலம் டேவிட் லீன் வெளிப்படுத்துகிறார். 


இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம், இதே பாலத்தை அழிக்க ஆங்கிலேய ராணுவமே ஒரு திட்டம் தீட்டுகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு படைத் தலைவர் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல் கட்டளையை நிறைவேற்றத் துடிக்கிறார். இரு தரப்பிலும் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கதாபாத்திரங்கள் வழியே வேலை என்னும் பெயரில் மனிதர்கள் பைத்தியக்காரத்தனமான விதிமுறைகளை நிறைவேற்ற துடித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் டேவிட் லீன். சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணியிசை, தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றதுடன் நிக்கல்சன் கதாபத்திரத்தை ஏற்ற அலெக் கின்னஸுக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது. 

பாலத்தை அடிப்படையாகக் கொண்டு 1995-ல் ஸேக்ரொலாய் பஹுடூர் (Xagoroloi Bohudoor) என்னும் அஸ்ஸாமியப் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ‘கடலுக்கான பாதை மிக நீண்டது’ என்பதே இந்தத் தலைப்பின் பொருள். பொருள் பொதிந்த தலைப்பைக் கொண்ட இந்தப் படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் ஜானு பருவா. தொழில்நுட்பரீதியாகப் பெரிய மெனக்கெடல்கள் இல்லாத படம். மிகச் சாதாரணமான சம்பவங்களே படத்தின் காட்சிகளாகியிருக்கும். ஆனால், அழுத்தமான மன உணர்வை வெளிப்படுத்துவதில் நல்ல ஈரானியப் படங்களின் சாயலைக் கொண்டிருக்கும். நதிக்கரை ஓரத்துக் குடிசையில் வசித்துவரும் ஒரு முதியவரும் அவருடைய பேரனுமே பிரதானக் கதாபாத்திரங்கள். அவர்களிடையேயான உறவை உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கும் தன்மையில் இயக்குநரைக் காண முடியும். நதியில் மூழ்கி மகனும் மருமகளும் இறந்துவிட்டவதால் பேரனை ஆளாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. 


கிராமத்து மனிதர்கள் கரையைக் கடக்கப் படகோட்டுவதன் மூலம் வாழ்வுக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கிறார் முதியவர். அந்த நதியின் மீது பாலம் ஒன்று அமைக்க கிராமத்தினர் முயல்கிறார்கள். வாழ்வாதாரம் பறிபோய்விடும் எனப் பதைபதைக்கிறார் முதியவர். எல்லோரையும் கரைசேர்க்கும் அவர் பேரனைக் கரையேற்ற முடியாமல்போய்விடுமோ என்ற கவலையில் தத்தளிக்கிறார். நகரத்தில் வாழும் மற்றொரு மகன் மூலம் பேரனுக்கு வழிகிடைக்குமா எனப் பார்க்கிறார். அதுவும் தவறிப்போகிறது. நகரத்தில் வாழும் முதியவரின் மகனும் மருமகளும் உறவைவிட நிலத்தையும் பொருளையும் நம்புவர்களாக இருப்பதைத் தங்கள் நடத்தை வழியே காட்டுகிறார்கள். பொதுவாக வயதான மனிதர் என்றால் அவரை மிகவும் வெகுளியாகவும் அப்பாவியாகவும் சித்தரிப்பார்கள். அந்தத் தவறைச் செய்யவில்லை ஜானு பருவா. கடலுக்கான பாதை நீண்டதுதான் ஆனாலும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதை உணர்த்தி நிறைவுறும் படம்.

தமிழில் பாலம் என்ற பெயரிலேயே 1990-ல் ஒரு படம் வந்திருக்கிறது. தனக்குத் தீங்கிழைத்த அரசியல்வாதி ஒருவரைப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்திவந்து ஒரு பாலத்தில் சிறை வைத்திருப்பார். தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கும் தன் அண்ணன், அண்ணி, நண்பர்கள் இருவரையும் வெளியே விடாவிட்டால் அரசியல்வாதியைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவார். பொதுவாகத் தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரித் தான் இப்படியான கடத்தல்கள் நடக்கும். ஆனால், அப்பாவிகளை விடுவிக்கக் கோரியே இந்தப் புரட்சிப் படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். இதை இயக்கியவர் கார்வண்ணன். ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் முரளி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் பாஸ்கர் அந்த அரசியல்வாதியாக நடித்திருப்பார்.  

ஜானு பருவா

ஒரு கிராமத்துக்குப் பாலம் வந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள் என்பதால் அதை வரவிடாமல் தடுக்கும் அரசியல்வாதிக்கும் அந்த ஊர் மக்களுக்குமான போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையில் அமீர்ஜான், நட்பு (1986) என்னும் பெயரில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். நாடகத்தனமான இத்திரைப்படத்தின் கதை வசனம் வைரமுத்து. 

திரைப்படங்கள் வெறுமனே அறநெறிகளை மட்டும் போதித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அறநெறிகள் என்பவை காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடியவை. அவற்றைத் திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் உள்வாங்கிக்கொண்டு படங்களை உருவாக்கும்போது, பார்வையாளர்களுக்குப் புதிய உலகத்தின் தரிசனம் கிட்டும். அதைவிடுத்துக் காலம் காலமாகக் கூறப்பட்டுவரும் மரபுகளுக்கு முட்டுக்கொடுத்து உருவாக்கப்படும் படங்கள் திரைப்படங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மட்டுமே உதவும்.

ஞாயிறு, ஜூலை 30, 2017

டன்கிர்க் (ஆங்கிலம்): பிழைத்திருப்பதே பெரும் சாதனை



ற்கால ஹாலிவுட் இயக்குநர்களில் கிறிஸ்டோபர் நோலன் என்னும் பெயர் ரசிகர்களைச் சட்டென்று புருவம் உயர்த்தவைக்கும். இவரது முதல் படமான ‘ஃபாலோயிங்’ 1998-ல் வெளியானது. ஆனால், இரண்டாம் படமான ‘மெமண்டோ’ வழியாகவே ரசிகர்களின் பெரும் செல்வாக்கைப் பெற்றார். ‘த டார்க் நைட்’ வரிசைப் படங்கள், ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர் ஸ்டெல்லார்’ எனத் தொடர்ந்து அறிவியல் புனைவுப் படங்களின் மூலம், தனது இயக்குநர் என்னும் பொறுப்பை அழுத்தமாகவும் திருத்தமாகவும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியவர் நோலன். இவரது பத்தாம் படமான ‘டன்கிர்க்’ ஜூலை 13 அன்று லண்டனில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது. எல்லா ஹாலிவுட் இயக்குநர்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது ஒரு இலக்காகவே இருக்கும். நோலன் குறிப்பிடத்தகுந்த படங்களை உருவாக்கியுள்ளபோதிலும் இதுவரை ஆஸ்கரின் சிறந்த இயக்குநர் பிரிவுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதில்லை. இந்தப் படத்துக்காக நோலனுக்கு அந்த ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என்று இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


‘டன்கிர்க்’ என்னும் பெயர் இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்ஸில் ஊடுருவிய நாஜிப் படையினர், நேசப்படையினரைச் சுற்றிவளைத்துவிட்டனர். அவர்கள் தப்பிப்போக கடல் மார்க்கம் மட்டுமே மிச்சமிருந்தது. ஆகவே, இங்கிலிஷ் கால்வாய் வழியே இங்கிலாந்தை அடையலாம் என்னும் நிலையில், ஆங்கிலேயப் படைவீரர்கள் உள்ளிட்ட சுமார் 4,00,000 படைவீரர்கள் மீட்கப்பட்டனர். ராணுவ வரலாற்றில் மிகவும் அதிசயமான, ‘ஆபரேசன் டைனமோ’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வையே நோலன் ‘டன்கிர்க்’ படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், படத்தில் அரசியல் சம்பவங்களைக் கொண்ட காட்சிகளை அவர் இணைக்கவில்லை. இறுதியாக நாளிதழில் மட்டுமே வின்ஸ்டன் சர்ச்சிலின் உரை இடம்பெறுகிறது. வழக்கமாக இரண்டாம் உலகப் போரைப் பற்றிய படங்களில் நாஜிக்களும் அவர்களின் வதை முகாம்களுமே ஆதிக்கம் செலுத்தும். மனிதவர்க்கத்தையே இரண்டாகக் கிழித்துப் போடும் இந்தப் போர் எதற்காக என்று மனசாட்சியை உலுக்கும். ஆனால், நோலன் டன்கிர்க்கில் இரண்டாம் உலகப் போரின் அந்த எதிர்மறைப் பக்கத்தைத் தவிர்த்துவிட்டார்; அதைப் போல் பெரும்பாலும் பெண்களையும் தவிர்த்துவிட்டார்.

1958-ல், லெஸ்லி நார்மன் இயக்கத்தில் வெளியான ‘டன்கிர்க்’கில்கூடப் படத்தின் முதல் பாதியில் ஆங்கிலேயக் காலாட் படைவீரர்களுக்கும் நாஜிக்களுக்குமிடையே நடைபெறும் துப்பாக்கி மோதல் காட்சிகள் உண்டு. அதன் மறுபாதியில்தான் டன்கிர்க் கடற்கரைப் பகுதியின் மோல் என அழைக்கப்படும், கடல் நீரால் கடற்கரைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் அந்த மரப்பலகைகளாலான தடுப்புப் பகுதிக்கு வருகிறார்கள். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கில் படத்தின் தொடக்கமே, வீரர்களைக் கடற்கரையை நோக்கித் துரத்துகிறது. டாமி என்னும் அந்த ஆங்கிலேய இளம் வீரன் (ஃபியான் வொயிட்ஹெட்) உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தலைதெறிக்க ஓடுகிறான். வழியெங்கும் நாஜிக்களின் குண்டுகள் துரத்துகின்றன; கடற்கரையில் காத்திருக்கும் வேளையிலும் வானிலிருந்து போர் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்னும் பதற்றத்தினிடையே நேசப் படையின் வீரர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்னும் மனநிலையுடன் காத்திருக்கிறார்கள்.


பொதுவாக, நோலனின் படங்கள் நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் முன்னதும் பின்னதுமான நான் லீனியர் வகையைச் சார்ந்தே செல்லும் தன்மை கொண்டவை. இந்தப் படத்தின் திரைக்கதையை மூன்று கோணங்களாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார் . முதல் கோணம் மோலில் காத்திருக்கும் படைவீரர்களின் பயணம். இரண்டாம் கோணம் இங்கிலாந்திலிருந்து படைவீரர்களைக் காப்பாற்ற படகைக் கொண்டுவரும் டாசனின் (மார்க் ரிலயன்ஸ்) பயணம். மற்றொரு கோணம் நாஜிக்களின் வான் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆங்கில விமானப் படைவீரர்களான ஃபாரியர், காலின் ஆகியோரது பயணம். இந்த மூன்று பயணங்களும் மாறி மாறி வருகின்றன.1958-ல் வெளியான ‘டன்கிர்க்’கில் ஆங்கிலேயே விமானப் படை வீரர்களது முறியடிப்புக் காட்சிகள் இடம்பெற்றிருக்காது. 
ஹான்ஸ் ஜிம்மரின் இசை , காத்திருப்பின் படபடப்பையும் மூச்சிரைக்க ஓடுவதையும் துப்பாக்கிக் குண்டுகளின் வெடியோசையையும் துல்லியமாக உணர்த்துகிறது. இதனால் பார்வையாளர்களும் கடற்கரையில் காத்திருக்கும் வீரர்களின் மன நிலையைச் சட்டென பெற்றுவிட முடிகிறது. என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியாமல் எல்லாவற்றையும் தனிமையச்சத்துடனும் பதைபதைப்புடனும் பார்த்துக்கொண்டிருக்கச் செய்வதில் நோலன் வெற்றிபெற்றிருக்கிறார். அதற்கு நடிகர்களின் இயல்பான நடிப்பும் நோலனின் ஆளுமைப் பண்பும் ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்பங்களும் பெருமளவில் கைகொடுத்துள்ளன. பார்வையாளர்களை உணர்ச்சி வெள்ளத்துக்குள் ஆழ்த்தாமல் படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துவிடுகிறது. ஏதாவது ஒரு காட்சியில் உணர்ச்சி மேலிடும்போது, சட்டெனப் படம் அடுத்த கோணத்துக்குச் சென்றுவிடுகிறது.


வழக்கமாக, பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த இரண்டாம் உலகப் போர் படங்களைப் பார்க்கும்போது, இந்தப் போர் எதற்காக என்னும் கேள்வி அழுத்தமாக எழும். ஆனால், நோலனின் ‘டன்கிர்க்’கைப் பார்த்தபோது, போர் பற்றிய எந்தக் கேள்வியும் எழவில்லை. பொதுவாகப் போர்களில் குடிமக்களுக்கு எந்த வேலையும் இருக்காது. போரால் பெருமளவில் குடிமக்கள் பாதிக்கப்பட்டாலும்கூட அவர்களது நேரடியான ஈடுபாடு என்பது இருக்காது. ஆனால், டன்கிர்க் சம்பவத்தில் குடிமக்கள் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அதனாலேயே நோலன் இதைப் படமாக்க எண்ணியிருக்கலாம். ஏனெனில், போரின் வெற்றி - தோல்வி என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு உயிர் பிழைத்திருப்பதே பெரும் சாதனைதான் என்பதை இந்தப் படம் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

டன்கிர்க் சம்பவத்தைப் பொறுத்தவரையில் லட்சக்கணக்கான வீரர்கள் காப்பாற்றப்பட்டதைப் போல், ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டும்போனார்கள். அதைப் போல் வீரர்கள் பலர் எதிரிகளிடம் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் இந்தப் படம் உதாரணங்களைத் தந்துள்ளது. ஆனால், வரலாற்றை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறோம் என்னும் திருப்தி ஏற்பட்டபோதும் ஒரு சிறந்த படம் பார்த்த திருப்தியை நோலனின் ‘டன்கிர்க்’ தரவில்லை. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இந்தியர்களது பங்களிப்பை எந்தப் படமும் நினைவுவைத்துப் பிரதிபலித்ததில்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. இது பற்றி நௌபிரேக்கிங் இணையதளம் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது. ‘இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து சண்டையிடவில்லை, ஆனால், ஆங்கிலேயப் பேரரசு சண்டையிட்டது’ என்று ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் யாஸ்மின் கான் தனது ‘த ராஜ் அட் வார்’ (The Raj At War: A People's History Of India's Second World War)என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை மேற்கோள் காட்டி எழுப்பியிருக்கும் கேள்வியையும் சேர்த்துப் பார்க்கும்போது, படம் ஏன் முழுமையான திருப்தியைத் தரவில்லை என்பதற்கு விடை கிடைக்கிறது.

வெள்ளி, ஜூலை 21, 2017

சினிமா ஸ்கோப் 40: இரத்தக்கண்ணீர்


குற்றச் செயல்களால் எளிதில் ஈர்க்கப்படும் மனிதர்கள் அவற்றின் பின் விளைவுகளை எதிர்கொள்ளவே அச்சப்படுகிறார்கள். குற்றத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தைவிடப் பிறரை எதிர்கொள்ளத் தயங்கியே பல குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவ்வளவு எளிதில் எந்தக் குற்றத்தையும் மறைத்துவிட இயலாது; எல்லாக் குற்றங்களும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டுவிடும் என்பதுதான் இயற்கையின் ஏற்பாடு. அது தன்னை வெளிப்படுத்தும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது திரைக்கதையின் பயணம். அவை எப்படி வெளிப்படுகின்றன என்னும் பாதைதான் திரைக்கதையில் சுவாரசியத்தைச் சேர்க்கிறது. 

ஸ்பெயினைச் சேர்ந்த இயக்குநர் உவான் அந்தோனியோ பர்தெம் (Juan Antonio Bardem) இயக்கிய டெத் ஆஃப் எ சைக்ளிஸ்ட் என்னும் படம் 1955-ல் வெளியானது. இந்தப் படம் கான் திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சகர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு பரிசை வென்றது. சாதாரணமான ஒரு விபத்துச் சம்பவத்தில் படம் தொடங்குகிறது. காரில் ஒரு ஜோடி செல்கிறது. ஆளற்ற சாலையில் விரைந்து சென்ற அந்த கார், சைக்கிளில் சென்ற மனிதன் ஒருவன்மீது மோதிவிடுகிறது. இளைஞன் இறங்கிச் சென்று பார்க்கிறான் அடிபட்ட மனிதனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிடலாம் என இளைஞனைத் தூண்டுகிறாள். இருவரும் நகர்கிறார்கள். அடிபட்ட மனிதன் இறந்துவிடுகிறான். மறு நாள் நாளிதழில் இது செய்தியாகிறது. அவர்கள் இருவரும் காரில் சென்றதைப் பார்த்ததாகக் கலை விமரிசகன் ஒருவன் அவர்களைக் குறிப்பாக அந்தப் பெண்ணை மிரட்டுகிறான். அவர்கள் மனங்களில் பீதி படர்கிறது. 

காரில் வந்த இருவரும் கணவனும் மனைவியும் அல்ல. இருவரும் காதலர்கள். காரில் சென்ற ஆண் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அந்தப் பெண்ணும் சமூக அந்தஸ்து பெற்ற ஒருவருடைய மனைவி. அந்தப் பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவருடைய மனைவியாகவும் மற்றொருவருடைய காதலியாகவும் இருக்க முடிகிறது. இரு உறவுகளின் அனுகூலங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறாள். காதல் உறவைத் தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை; மிகவும் ரகசியமாகப் பேணுகிறாள். அதனால்தான் அவள் மிரட்டப்படுகிறாள்.


அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததே ஒழிய அதன் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள இயலவில்லை. பேராசிரியர், இறந்த மனிதரின் வீட்டுக்குச் செல்கிறார். மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் குடும்பத்தின் வருமானத்துக்குரியவரை அவர்கள் விபத்தில் கொன்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்ததற்கு மறு நாள் கல்லூரியில் மனக் குழப்பத்துடன் இருக்கும் பேராசிரியர் தன் மாணவி தேர்வில் தோற்றுப்போகக் காரணமாகிறார். ஒரு குற்றச் செயலைப் பல குற்றக் கண்ணிகள் தொடர்கின்றன. இந்தப் படம் வழியாக ஸ்பெயின் நாட்டின் இருவேறு தரப்புகளையும் காட்சிக்குவைக்கிறார் இயக்குநர். மேல் தட்டின் விசாலமான, பிரம்மாண்ட மாளிகைகளும் கீழ்த் தட்டினர் வசிக்கும் குறுகலான நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளும் காட்டப்படுகின்றன. போர், காதல், காமம், சமூக அந்தஸ்து போன்றவை பற்றிய தார்மிகக் கேள்விகள் பலவற்றைப் படம் எழுப்புகிறது. இந்தப் படம் வாழ்வின் பல வண்ணங்களைக் கறுப்பு வெள்ளையில் துல்லியமாகத் தந்திருக்கிறது. 

இந்த ஸ்பேனிஷ் படத்தைப் பார்த்த பின்னர் மயங்குகிறாள் ஒரு மாது (1975), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976),  விடிஞ்சா கல்யாணம் (1986) போன்ற சில தமிழ்ப் படங்கள் மனதில் நிழலாடின.          

ஒரு பாசமான தாயும் மகளும் சேர்ந்து இளைஞன் ஒருவனைக் கொன்றுவிடுகிறார்கள். அந்தக் கொலையைப் பிறரிடமிருந்து மறைப்பதற்காக யாரும் அறியாதவகையில் அந்தச் சடலத்தை ஒரு முகட்டிலிருந்து உருட்டிவிடுகிறார்கள். அதலபாதாளத்தில் விழும் அந்தச் சடலம் யார் கண்ணிலும் படாது என்று திரும்பிவிடுகிறார்கள். யார் கண்ணிலும் படாமல் இருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? அது ஒருவர் கண்ணில்படுகிறது. அதுவும் அவர் அப்போதுதான் சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் மரண தண்டனைக் கைதி. அவர் நேரடியாக அந்த தாயும் மகளும் குடியிருக்கும் வீட்டுக்கு வந்துவிடுகிறார். அந்தக் கொலையை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியே தனது காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார் கைதி. அந்தக் கொலையை விசாரிப்பதோ மகளை மணந்துகொள்ள இருக்கும் காதலன். இப்படி ஆர்வமூட்டும் பல முடிச்சுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிடுகின்றன. தாயும் மகளும் எதற்காகக் கொன்றார்கள், அந்தத் தூக்குத் தண்டனைக் கைதி யார் அவருக்கும் தாய், மகளுக்கும் என்ன தொடர்பு போன்றவற்றைத் தெளிவாக்கும் வேலையைத் திரைக்கதை செய்கிறது. இது மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான விடிஞ்சா கல்யாணம் (1986). 


ஒரு கதையின் டைரி, பூவிழி வாசலிலே போன்ற திரில்லர் வகைப்படம்தான் இது. கொலையைச் சரி என்று பார்வையாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமானால் அதன் பின்னணியில் வலுவான உணர்வுபூர்வ காரணம் இருக்க வேண்டும். ஒரு கொலையை யார் செய்கிறார்கள் எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்குப் பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கொலை என்பதைத் தீய செயலாகவும் குற்றச் செயலாகவும் பார்க்கும் நம் பார்வையாளர்கள் அதை நல்லவர்கள் செய்தால், நல்ல நோக்கத்துடன் செய்தால் நியாயம் என்று எடுத்துக்கொள்வார்கள். அதிலும் பெண்களின் மானத்தைக் காப்பாற்றச் செய்யப்படும் கொலைகள் பார்வையாளர்களால் கொண்டாடப்படும். 

சமூகத்தின் பார்வையில், பூவிழி வாசலிலே படத்தில் வில்லன் செய்த கொலைக்கான காரணம் அநியாயமானது; ஆனால் ஒரு கைதியின் டைரி, விடிஞ்சா கல்யாணம் போன்ற படங்களில் நாயகர்கள் செய்யும் கொலைக்கான காரணம் நியாயமானது எனவே, அது சமூகத்தின் பார்வையில் குற்றச்செயலாகப் பார்க்கப்படாது. பாபநாசத்தில் சுயம்புலிங்கத்துடைய குடும்பத்தின் பக்கம் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் நின்றதற்குக் காரணம் அதுதானே. 

மயங்குகிறாள் ஒரு மாது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது இரண்டையுமே எஸ்பி.முத்துராமன்தான் இயக்கினார். முன்னதன் கதை பஞ்சு அருணாசலம் பின்னதன் கதை புஷ்பா தங்கதுரை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்ற சம்பவங்களால் ஆனவை. ஒருவனைக் காதலித்து மற்றொருவனைக் கரம்பிடித்த பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் இந்தப் படங்கள். முதல் படத்தில் ஒரு மிரட்டல்காரர் வருவார். இரண்டாம் படத்தில் மிரட்டல்காரர் இல்லை. இரண்டு படங்களிலும் சுஜாதாதான் கதாநாயகி. ஸ்பானிஷ் படத்தில் மணமானதற்குப் பின்னர் எந்தச் சஞ்சலமுமின்றிக் காதலனைச் சந்திக்கிறாள் நாயகி. ஆனால், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் காதலனின் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் அவனுக்கு மனைவியாக இருக்கிறாள். அதுதான் சிக்கலாகிறது. இவ்வளவுக்கும் அவள் தமிழ்ப் பண்பாட்டைச் சிறிதுகூட மீறாமல் நடந்துகொள்கிறாள். மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் தான் காதலித்த ரகசியத்தைக் கணவனுக்குத் தெரியாமல் காப்பாற்றும் பொருட்டு மிரட்டல்காரனுக்கு அடிபணிகிறாள்.  

வாழ்வைப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் குற்றங்களை வெறும் குற்றங்களாகப் பார்க்காமல் அவற்றின் பின்னணியுடன் சேர்த்துப் புரிந்துகொள்ளச்செய்யும் வகையிலேயே படங்களை உருவாக்குகிறார்கள். ஒரு குற்றத்தில் தனிநபரின் பங்கு என்ன, சமூகத்தின் பங்கு என்ன என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறுமனே குற்றம், பழிவாங்கல், தண்டனை, மன்னிப்பு என்று முடிந்துவிட்டால் அது சராசரியான படமாக நின்றுவிடுகிறது. அதைத் தாண்டி ஏன் இந்தக் குற்றம் நிகழ்கிறது? ஏன் இது குற்றமாகப் பார்க்கப்படுகிறது? இதைத் தவிர்க்க முடியுமா, தடுக்க முடியுமா போன்ற பல சிந்தனைகளைப் பார்வையாளரிடம் உருவாக்கும் படங்கள் மேம்பட்டவையாக அமைந்துவிடுகின்றன.

ஞாயிறு, ஜூலை 16, 2017

பண்டிகை

நல்லவர் வாழ்வார் தீயவர் அழிவார் என்னும் பழம் பஞ்சாங்க நீதியின் டிஜிடல் வடிவம் பண்டிகை.

நேர்மையான வழியில் உழைத்து தனக்கொரு நல்ல வாழ்வு அமைத்துக்கொள்ள முயல்கிறான் வேலு (கிருஷ்ணா). குடும்பத்தை நிம்மதியாக வைத்துக்கொள்ளச் சூதாடினாலும் தப்பில்லை என்று எண்ணுகிறான் முனி (சரவணன்). சமூகம் எக்கேடு கெட்டாலும் தன் கருவூலம் நிரம்பினால் போதும் என்று செயல்படுகிறான் தாதா (மதுசூதனன் ராவ்). சூதாட்ட சூழ்ச்சி காரணமாகத் தாதாவிடம் தான் இழந்த பணத்தை வேலு உதவியுடன் பெற்றுவிட ஒரு திட்டம் தீட்டுகிறான் முனி. இதற்கு ஒரு ஐடியா கொடுக்கிறான் முந்திரி (நிதின் சத்யா). இதில் வென்றது யார் தாதாவா, முனியினரா என்பதே இந்தப் பண்டிகை.
கதை பழைய பாடாவதி கதைதான். திரைக்கதையில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதிலும் அநியாயத்துக்கு ஓட்டைகள். அவ்வளவு பெரிய தாதாவின் வீட்டில் பணத்தைப் பாதுகாக்க ஜிஎஸ்டிக்குப் பின்னான தியேட்டரில் இருப்பதைப் போல் பலவீனமான நாலைந்து பேரா இருப்பார்கள்? வீட்டுக்கு உள்ளே மட்டும்தான் கேமரா வைப்பார்களா? திக்கும்வாயன் என அடையாளப்படுத்தப்படும் ராட்டின குமார் (கருணாஸ்) போன்ற கதாபாத்திரங்கள்தான் இப்படியான திரைக்கதையைச் சுவாரசியமாக நகத்தும். மற்றபடி, பாண்டி நகைச்சுவை என்ற பெயரில் பண்ணும் கேலிக்கூத்து வெறும் அவஸ்தை.

பண்டிகை என்னும் பெயரில் இருவரை எதிரெதிரே மோதவிட்டு அதில் பந்தயம் நடத்துகிறார்கள். இது சூதாட்டம் அல்ல; சூழ்ச்சியான ஆட்டம். இதில் தாதா, முந்திரி, மாலிக், விக்டர் எனப் பல கதாபாத்திரங்களின் பங்கு இருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கை அம்பலப்படுத்த பண்டிகை ஒரு களம் அமைத்துத் தந்திருக்கிறது. வேலு பண்டிகைக் களத்தில் எதிரியின் மீது தரும் அடியை உணர்த்த அவரைவிட அதிகமாக சவுண்ட் எஃபக்ட் உழைத்திருக்கிறது. கதாநாயகி காவ்யா (ஆனந்தி) வாராது வந்த விருந்தாளி போல் ஓரிரு முறை வந்துவிட்டு ஓடிப்போய்விடுகிறார். அந்த செல்ஃபிய ஏம்மா எடுத்த காவ்யா? கொள்ளையைத் துப்புத் துலக்க வரும் இருவரில் ஒருவர் பயன்படுத்தும் அந்த ஆயுதம். பார்வையாளரைக் கிழிப்பது போல் இருக்கிறது. அநிச்சையாக உடம்பைத் தடவிப்பார்க்க வைக்கிறது. திரையில் ஒரு விஷயத்தைக் காட்டுவதால் ஏற்படும் மனரீதியான பாதிப்பு பற்றிய அக்கறையுடன் படம் எடுப்பது அவசியம் என்பதை பெரோஸ் உணர்ந்துகொள்வது நல்லது. 
வேலு பெற்றோரை இழக்கிறார், அவருக்கு எதுவுமே அடித்தால்தான் கிடைக்கிறது. திடீரெனக் காதல் கொள்கிறார், திடீரெனப் பிறருக்கு உதவுகிறார், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துவிட்டு அடிதடியில் புகுந்துவிளையாடுகிறார். கைதேர்ந்த கொள்ளைக்காரர் போல் நடந்துகொள்கிறார், அவ்வப்போது பாடல்களும். முத்தாய்ப்பான சில வசனங்களும் வேறு வருகின்றன. சூதாட்டத்தின் பின்னணியில் காவல் துறை இருப்பதை பால்ராஜ் (சண்முகராஜா) கதாபாத்திரம் வழியே சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் தொழில்நுட்ப உதவியுடன் திரையில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். எல்லாம் துண்டு துண்டாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. மொத்தத்தில் பண்டிகை என்னும் பெயரில் ஒரு படம் காட்டியிருக்கிறார்கள். அதில் கொண்டாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே தனி சூதாட்டம் நடத்தலாம்.

ஞாயிறு, ஜூலை 09, 2017

சினிமா ஸ்கோப் 39: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை


நகரம் சூதுவாதுகளில் கைதேர்ந்தது, அதன் மனிதர்கள் மனிதநேயத்தை மறந்தவர்கள். இப்படியான நம்பிக்கை விதைப்பில் திரைப்படங்கள் பிரதானப் பங்களித்தன. நகரம் குறித்துக் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் ஏராளம். இவை முழுவதும் உண்மையில்லை அதே நேரம் இவற்றில் உண்மையில்லாமலும் இல்லை. ஏதேதோ கற்பனைகளில் நகரங்களில் கால்பதித்தவர் பலருக்கும் ஏதோவொரு பெருங்கனவிருக்கும். பெரும்பாலும் அந்தக் கனவு ஈடேறுவதேயில்லை. 

நகரங்களுக்கு இரண்டு முகம் உண்டு. ஒன்று பளபளப்பானது; மற்றது பரிதாபமானது. ஒன்றில் வளமை தூக்கலாயிருக்கும்; மற்றதில் வறுமை நிறைந்திருக்கும். வளமைக்கு ஆசைப்பட்டு வறுமையில் உழல்பவரே அநேகர். நகரத்தின் பெரும்பசிக்கு இரையாகும் மனிதர்களைப் பற்றிய யதார்த்த படமெடுப்பது இயக்குநர்களின் படைப்புத் திறனுக்குச் சவாலானது. கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதுபெற்ற, முதன்மையான லத்தீன் அமெரிக்கப் படங்களில் ஒன்றான லொஸ் ஒல்விதாதோஸ் (Los Olvidados), இத்தாலிய இயக்குநர்கள் ரோபார்த்தோ ரொஸ்ஸெல்லினியின் ஜெர்மனி இயர் ஸீரோ, வித்தாரியோ தெ சிகாவின் ஷூஷைன் (கவுரவ ஆஸ்கர் விருதுபெற்றது), பிரெஞ்சு இயக்குநர் ஃபாஸுவா த்ரூஃபோவின் த 400 ப்ளோஸ்  உள்ளிட்ட பல படங்கள் இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவை.   

லொஸ் ஒல்விதாதோஸ் (1950) திரைப்படத்தில் மெக்ஸிகோ நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறார்களின் அவல வாழ்க்கைச் சம்பவங்கள் வழியே அந்நகரத்தின் குரூரத்தைப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர் லூயிஸ் புனுயெல். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பிவந்த எல் கைபோதான் படத்தின் பிரதானப் பாத்திரம். அவன் சிறார்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு தீய வழிகளில் நடப்பவன். கண் பார்வை தெரியாத வீதிப்பாடகர், கால்களை இழந்து அமர்ந்த நிலையிலேயே தள்ளுவண்டியில் நகரை வலம்வரும் பிச்சைக்காரர் போன்றவர்களிடம்கூட ஈவு இரக்கமின்றி நடந்துகொள்வது இவர்களது வழக்கம். எல் கைபோவின் கூட்டாளி பெத்ரோவின் தீய நடவடிக்கைகளால் அவன் மீது அன்பு செலுத்தாமல் ஒதுக்குகிறாள் அவனுடைய தாய். 


எல் கைபோ ஜூலியன் என்னும் சிறுவனைக் கொல்கிறான். ஜூலியன் உழைப்பில்தான் குடும்பம் பசியாறிக்கொண்டிருந்தது. ஜூலியனின் தந்தை ஒரு குடிகாரார். செய்யாத தவறொன்றுக்காக பெத்ரோவைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறாள் அவனுடைய தாய். சீர்திருத்தப்பள்ளியின் தலைவர். பெத்ரோவைப் புரிந்துகொள்கிறார். தன் மீது யாராவது நம்பிக்கையும் அன்பும் வைக்க வேண்டுமென அவன் ஏங்குகிறான் என்பதை அறிந்து அவனிடம் பரிவுடன் நடந்துகொள்கிறார். ஆனால், பெத்ரோவை வாழ்க்கை அலைக்கழிக்கிறது. இறுதியில் பெத்ரோவை அவனுடைய தாய் புரிந்துகொண்டபோது, பெத்ரோவை எல் கைபோ கொன்றுவிடுகிறான். இது அறியாத அவனுடைய தாய் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறாள். படத்தில் தன் தந்தைக்காகக் காத்திருக்கும் சிறுவன் பாத்திரம் ஒன்றுண்டு. இறந்தவர்களின் பல்லை எடுத்து அதைக் கழுத்தில் போட்டால் தீமை அணுகாது என்னும் நம்பிக்கையைக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் இறுதிவரை தன் தந்தையைக் கண்டடைவதேயில்லை. வறுமையில் வாடுவோரின் இழிசெயல்களைப் பழித்துப் பேசுபவர்களை வறுமையின் வேருக்கருகே அழைத்துச் சொல்லும் இந்தப் படம். 

ஷூஷைன் (1946) திரைப்படத்தில் வீதியோரம் ஷூ பாலீஷ் போடும் இரு சிறுவர்கள் பணம்சேர்த்து குதிரை ஒன்று வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால். ரோம் நகரில் அவர்கள் வாழ்க்கை சிக்கி சின்னாபின்னமாக்கப்படும் ஊழல்மிக்க அந்நகரம் அவர்களைச் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்துவிடும். இயக்குநர் ரொஸ்ஸெல்லினி, தன் மகன் ரமனோ நினைவுக்கு சமர்ப்பித்திருந்த, ஜெர்மனி இயர் ஸீரோ (1948) படத்தில் பெர்லின் நகரைச் சேர்ந்த ஒரு சிறுவன் நோயால் படுத்த படுக்கையாகிவிட்ட தன் தகப்பனுக்கு விடுதலை தர அவருக்கு விஷம் கொடுத்து நிரந்தரமாக உறங்கவைப்பான். இந்தச் செயலின் குற்றவுணர்வு உந்தித்தள்ள உயரமான கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தந்தை சென்ற இடத்துக்கே செல்வான். படத்தின் ஒரு காட்சியில் வீராவேசமான ஹிட்லரின் உரை ஒன்று காற்றில் தவழ்ந்துவரும்.    

இவற்றைப் போன்றே பம்பாய் வீதிகளில் அலைந்துதிரியும் சிறார்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட படம் மீரா நாயரின் இயக்கத்தில் உருவான சலாம் பாம்பே (1988). இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இரண்டாம் இந்தியப் படம். ஆனால், பரிசுவென்ற படம் டச்சு மொழியில் உருவான பெல் த கான்க்யுரர். பம்பாயின் வறுமையைக் காட்சிப்படுத்திய ஸ்லம்டாக் மில்லியனர் (2008) அளவுக்குக் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளாவிட்டாலும் சலாம் பாம்பேயும் சில எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளவே செய்தது. 


சலாம் பாம்பேயில் பிழைப்புக்காக கிருஷ்ணா தனது பூர்வீகக் கிராமமான பெங்களூர் அருகே உள்ள பிஜாபூரிலிருந்து பம்பாய் செல்கிறான். டச்சுப் படத்தில் பிரதானக் கதாபாத்திரங்களான லஸ்ஸேவும் அவருடைய மகனான பெல்லும் அதே பிழைப்புக்காக சுவீடனிலிருந்து டென்மார்க் செல்கிறார்கள். 

சலாம் பாம்பே பொழுதுபோக்குப் படமல்ல; மாநகரத்தின் வீதியோரம் வீசப்பட்ட சிறார்களின் சிதிலமடைந்த வாழ்க்கையின் பக்கங்களைக் கலாபூர்வமாக வெளிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இயல்பாகப் படமாக்கப்பட்ட மாநகரின் துயரம் தொனிக்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசைக் கலைஞரான டாக்டர் எல்.சுப்ரமணியத்தின் இசை இந்தப் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது. 

அண்ணனின் இருசக்கர வாகனத்தை எரித்ததன் காரணமாக சர்க்கஸில் பணிக்குச் சேர்த்துவிடப்பட்ட கிருஷ்ணா 500 ரூபாய் சேர்த்துவிட்டால் மீண்டும் தன் ஊருக்கு வந்துவிடலாம். இறுதிவரை அவன் சொந்த ஊருக்குத் திரும்பாமலேயே அந்த மாநகரத்திலேயே அல்லல்படுகிறான். ஒரு கிருஷ்ணா படும் பாட்டைக் காட்டியதன் வழியே உலகெங்கும் மாநகரங்களில் தங்கள் வாழ்வைத்தேடி தட்டழியும் பல கிருஷ்ணாக்களின் வாழ்வையும் பற்றி யோசிக்க வைக்கிறார் மீரா நாயர். 


பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளும் பாபா, பாலியல் தொழிலில் ஈடுபடும் அவனுடைய மனைவி, இந்தச் சூழலிலேயே வளரும் மஞ்சு என்னும் குழந்தை, பாபாவின் போதைப் பொருளை விற்பவனான சில்லிம், பாபா மூலமாக பாலியல் விடுதிக்கு வந்து சேரும் 16 வயதுப் பெண் போன்ற படத்தின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ஒரு சோற்றுப் பதங்கள். இப்படத்தின் பாலியல் விடுதிக் காட்சிகளைப் பார்க்கும்போது, கமல் ஹாசன் திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான மகாநதியில் தன் மகளை மீட்கச் சென்ற சோனார் கஞ்ச் காட்சிகளும் சாப் ஜான் திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கிய குணா படத்தில் குணா வசிக்கும் வீட்டின் சூழலும் மனதில் நிழலாடுகின்றன. 

அன்றாடப் பாட்டுக்கே அனுதினமும் படும் அவஸ்தை காரணமாகப் பல மனிதர்களின் நல்லுணர்வுகளை உறிஞ்சி எடுத்துவிடுகிறது மாநகரம் வறுமை எனும் நெருப்பில் விழுமியங்கள் கருகுகின்றன. அவர்களது வறுமையைப் போக்காது அறவுணர்வை அவர்கள் மீது ஊற்றுவது கற்சிலையின்மீது பாலூற்றுவது போன்றதே என்பதையே இந்தப் படங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆனால், கொலையொன்றைப் புரிந்துவிட்டு பம்பாய் சென்ற சிறுவன் வேலு நாயக்கராவது போன்ற மகத்தான கற்பனை மணிரத்னம் போன்றவர்களுக்குத் தோன்றுகிறது. சலாம் பாம்பேயின் தாக்கத்தில் தமிழில் உருவான படம் மெரினா என்பது உண்மையிலேயே வியப்பான தகவலே. இது தவிர கோலிசோடா, அங்காடித் தெரு போன்ற படங்களைத் தான் தமிழகத்தால் தர முடிகிறது.