(தி இந்துவில் 2016 ஏப்ரல் 1 அன்று வெளியானது)
விருதும் சர்ச்சையையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தியத் திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகளும் அப்படித்தான். 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பற்றிய அறிவிப்பு கடந்த 28-ம் தேதியன்று பிற்பகலில் வெளியானது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவ ஆரம்பித்தன. சர்ச்சைக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது ‘பாகுபலி’. இந்திய அளவில் சிறந்த படத்துக்கான விருது தெலுங்குப் படமான ‘பாகுபலி’க்கு என்ற அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமாவைத் தொடர்ந்து கவனிக்கும் பலருக்கும், திரைக்கதையில் பல குறைகளைக் கொண்ட அம்புலிமாமா கதைப் படமான ‘பாகுபலி’க்குச் சிறந்த படத்துக்கான விருதா என்ற வியப்பு மேலிட்டது.
பாகுபலி |
இந்த தேசிய விருதுகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்று பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், எப்போதும் போலவே இந்த ஆண்டும் சர்ச்சைகள் தாரளமாகப் புழங்கின. ‘பாகுபலி’யில் வலியுறுத்தப்பட்டிருந்த ராஜ விசுவாசம், பண்டைய சமூக அமைப்பைத் தூக்கிப் பிடித்தல் ஆகியவை காரணமாக மத்திய அரசு விருது அளித்திருக்கிறதா என்னும் சந்தேகத்தைப் பல தரப்பினரும் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த மாநில மொழியுமல்லாத சம்ஸ்கிருத மொழியில் உருவான ‘பிரியமானஸம்’ படத்துக்கும் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் எடுக்கச் சிறந்த மாநிலமென குஜராத்துக்குக் கிடைத்திருக்கும் விருதும் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
இப்படியான காரணங்களால் காட்டமான கேள்விக் கணைகளும் விமர்சனக் கருத்துகளும் தேர்வுக் குழுவைப் பதம்பார்க்கின்றன. பஞ்சாபைச் சேர்ந்த இயக்குநர் குர்விந்தர் சிங், நல்லறிவு படைத்த தேர்வுக் குழு ‘பாகுபலி’யைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்குமா என்ற கடுமையான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அத்துடன் நிறுத்தவில்லை அவர். இந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதுகள் கேலிக்கூத்து எனவும், மாநில மொழிப் படங்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது, பொழுதுபோக்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுக் கொந்தளித்திருக்கிறார்.
கான் பட விழா உள்ளிட்ட உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அவர் இயக்கிய ‘சௌதி கூட்’ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த படம் என்ற விருதுக்கான தகுதியைக் கொண்டிருந்தபோதும் சிறந்த மாநில மொழித் திரைப்படப் பிரிவிலேயே அதற்கு விருது கிடைத்ததைப் பெரும் ஏமாற்றமாகக் கருதுகிறார் அவர். சிறந்த ஜனரஞ்சக படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகிய பிரதான விருதுகள் அனைத்தையும் இந்தித் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதால் மாநில மொழிப் படங்களை உருவாக்குவோர் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.
பாஜிராவ் மஸ்தானி |
முதன்முறையாகச் சிறந்த இயக்குநர் விருது பெற்றதில் மகிழ்ந்திருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’யில் சிறப்பாகப் பங்களித்த தீபிகா படுகோன் அல்லது பிரியங்கா சோப்ராவுக்கு விருது கிடைத்திருக்கலாம் என்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் கடுமையான உழைப்பைத் தந்திருக்கும் விக்ரமுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், ஒப்பனையால் மட்டுமே தனித்துத் தெரிந்த அந்தக் கதாபாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்ததே வியப்பானது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. சர்வதேசக் கவனம் பெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மஸான்’ படத்துக்கு இந்திரா காந்தி பெயரிலான சிறந்த புதுமுக இயக்குநர் விருதே கிடைத்திருக்கிறது. விருதுக்குரிய படங்களைத் தேர்வு செய்யும் குழுவினரின் ரசனையைப் பொறுத்தே தேர்வுகள் அமைகின்றன. கடந்த வருடம் நீதியமைப்பைக் கேள்வி கேட்ட துணிச்சல் மிக்க படமான ‘கோர்ட்’டுக்குச் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. இந்த வருடம் பொழுதுபோக்குப் படங்கள் அதிகமான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன. விருதுப் படங்களில் கலைத் தன்மை சிறிதேனும் தூக்கலாக இருக்கும் என்பது பொதுவான புரிதல். அப்படியான படங்களை மட்டுமே விருதுக்காக விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அப்படியில்லாமல் ரசிகர்களைக் கற்பனை உலகின் மயக்கத்தில் ஆழ்த்தும் படங்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவிக்கும்போது, கலை தாகத்துடன் படமெடுத்த கலைஞர்கள் மனம் வருந்துவது இயற்கை. ஆனால், கலைப் படங்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டுமா பொழுதுபோக்குப் படங்களுக்கு வழங்கக் கூடாதா என்று மறு தரப்பினர் வாதிட்டால் அதையும் பரிசீலிக்கத்தான் வேண்டும்.
விசாரணை |
அறுபதுக்கும் மேற்பட்ட இந்திப் படங்கள், தூங்கா வனம், உத்தம வில்லன், தனி ஒருவன், கிருமி, தாரை தப்பட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள், தெலுங்கு மொழிப் படங்கள் பதினொன்று, சம்ஸ்கிருத மொழிப் படங்கள் இரண்டு உள்ளிட்ட 308 படங்கள் விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான ரமேஷ் சிப்பி தலைமையிலான பதினோரு பேர் குழுதான் இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய படங்களைப் பரிந்துரைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைத் தமிழகம் தட்டிச் சென்றிருக்கிறது. படத் தொகுப்பு உள்ளிட்ட மூன்று விருதுகள் ‘விசாரணை’ படத்துக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படம் அதற்கான தகுதி கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ‘ஆடுகளம்’ படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்தபோது சில மாற்றுக் கருத்துகள் எழுந்தன. ‘ஆடுகள’த்தின் இயக்குநர் வெற்றி மாறனின் குரு பாலு மகேந்திரா அப்போதைய விருதுக் குழுவில் இருந்தார். இப்போதும் அதேபோல் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. விருதுக் குழுவில் கங்கை அமரன் இடம்பெற்றிருந்த நிலையில், ‘தாரை தப்பட்டை’யில் சிறந்த பின்னணியிசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கு ஐந்தாம் முறையாகத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
சசிகுமார், பாலா, இளையராஜா, வரலட்சுமி |
இளையராஜா இசை தொடர்பான எல்லா வித விருதுக்கும் தகுதியானவர், அவரால் விருதுகளுக்குத்தான் பெருமை என அவருடைய ரசிகர்கள் புளகாங்கிதத்துடன் சொல்கிறார்கள். ஆனால், ‘தாரை தப்பட்டை’யில் விருதுபெறும் அளவுக்குச் சிறப்பான பின்னணியிசை அமைக்கப்பட்டிருந்ததா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள். ‘தாரை தப்பட்டை’போன்ற மிகச் சாதாரணப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதால், அவரது ஆயிரமாவது படம் என்ற விளம்பரத்தின் பங்கு விருது வழங்கலில் ஆதிக்கம் செலுத்தியிருக்குமோ என்றும் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். இயக்குநர் பாலா படங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விருதைப் பெற்றுவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிறந்த கலை மற்றும் பண்பாட்டுப் படம் என்ற பிரிவில் இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கிய ‘யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி’ என்னும் ஆவணப் படம் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட அளவுக்கு ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெறவில்லை. ஆவணப் படம் தொடர்பான நமது கவனமின்மையையே இது காட்டுகிறது. மேலும், திரைப்படம் குறித்து எழுதித் தள்ளும் தமிழ் மொழியிலிருந்து ஒரு நூல்கூட விருதுக்காக விண்ணப்பிக்கப்படவே இல்லை என்பதுவும் வருத்தமான செய்தி.