செல்மா ஜெஸ்கோவா செக்கோஸ்லோவியால் பிறந்தவள். பிழைப்புக்காக அமெரிக்காவுக்குப்
புலம் பெயர்ந்தவள். அவளது வாழ்வில் துயரங்களுக்குப் பஞ்சமில்லை.
முதல் பாதியில் வாழ்வுடன் போராடும் செல்மா இரண்டாம் பாதியில் மரணத்துடன்
போராடுகிறாள். வாழ்க்கை போல் மரணம் அவள் மீது குரூரத்தைப் பிரயோகிக்கவில்லை.
மரணம் அவளை வாஞ்சையுடன் ஆரத் தழுவிக்கொள்கிறது. அவளது துக்கங்களிலிருந்து விடுதலை தருகிறது. இதுதான்
செல்மாவின் கதை. இதைத் தான் டான்ஸர் இன் த டார்க் படமாக எடுத்திருக்கிறார்
இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையர்.
டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையர். இவர் திரைக்கதையாசிரியரும்கூட.
தனது பதினோறாவது வயதிலேயே படமெடுக்க ஆரம்பித்துவிட்டார். மன அழுத்தம், விமானத்தில் செல்லப் பயம் உள்ளிட்ட பல்வேறு
வகையான பயம் போன்ற மனநலப் பாதிப்புகளால் உளவியல் நெருக்கடிகளை வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில்
தொடர்ந்து சந்தித்துவந்திருக்கிறார் இவர். ‘நான் எல்லாவற்றுக்கும் பயப்படுவேன்
ஆனால் படமெடுப்பதற்கு மட்டும் பயப்படுவதேயில்லை’ என்று ஒருமுறை
இவர் கூறியிருக்கிறார் என கார்டியன் பத்திரிகையில் ஒரு குறிப்பு வெளியாகியிருக்கிறது.
அவர் தெரிவித்திருப்பது போல் படமெடுக்க அவர் பயப்படுவதில்லை என்பதை இப்படம்
உறுதிப்படுத்துகிறது. 1977-ம் ஆண்டு படமெடுக்கத் தொடங்கியிருந்த
இவரது டான்ஸர் இன் த டார்க் திரைப்படம் 2000-ஆவது ஆண்டில் கேன்
படவிழாவில் முதலில் திரையிடப்பட்டுத் தங்கப்பனை விருதை வென்றிருக்கிறது. இப்படம் திரையிட்டு முடிந்த பின்னர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள்
ஆதரவையும் பாராட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இப்படத்தின் சிறப்புக்கான
சான்று. இவரது ‘பொன்னிதய முப்படங்க’ளில் மூன்றாவது படம் இது. முதல் படம் பிரேக்கிங் த வேவ்ஸ்
(1996), இரண்டாம் படம் த இடியட்ஸ் (1998). இப்படங்களின்
நாயகிகள் பரிசுத்த இதயம் படைத்தவர்கள். நல்லொழுக்கத்தையும் தூய
அன்பையும் வெளிப்படுத்துபவர்கள்.
இவர் டச்சு இயக்குநர் தாமஸ் விண்டர்பெர்க்குடன் இணைந்து டாக்மீ 95 என்னும் திரைப்பட இயக்கம்
ஒன்றை 1995-ஆம் ஆண்டில் நிறுவினார். பாரம்பரியமான
பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட மண்சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிகர்களின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவரும் உத்திகளைக் கையாண்டும்,
திரைப்படமாக்கலில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கைவிட்டும் படங்களை உருவாக்க
வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் கொள்கை. திரைப்படமாக்கலை ஒரு
தொழிலாகக் கொள்ளாமல் அதை ஒரு கலையாக வளர்த்தெடுக்க இந்த இயக்கம் விரும்பியது.
முடிந்தவரை செயற்கை அரங்குகளைத் தவிர்த்து வெளியிடங்களிலேயே படப்பிடிப்பை
நிகழ்த்துவது, அவசியமற்ற விளக்குகளையும் இசையையும் தவிர்ப்பது,
கேமராவைக் கையிலே சுமப்பது, 35 எம்.எம். படச்சுருளிலேயே படமெடுப்பது எனப் பத்து விதிமுறைகளை
இவர்கள் பிரகடனமாகவே அறிவித்தார்கள். இந்தக் கொள்கைகளைக் கைக்கொண்டு
படங்களை உருவாக்கவும் செய்தார்கள். டான்ஸ் இன் த டார்க் டாக்மீ
95 படமல்ல, ஆனால் அந்தப் படமாக்கல் அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்ட படம்.
இந்தப் படம் இயக்குநர் லார்ஸ் வான் ட்ரையரின் பின்னணியைத் தெரிந்துகொள்ளத்
தூண்டும். ஏனெனில்
இதன் படமாக்கத்தில் காணப்படும் புதுமையான கலைத் தன்மை ஒரு சாதாரண மனநிலை கொண்ட இயக்குநரால்
இந்தப் படத்தை உருவாக்கியிருக்க முடியாது என்னும் எண்ணத்தைத் தந்துவிடுகிறது.
படத்தின் நாயகியான செல்மா வேடமேற்றிருப்பவர் ஒரு தொழில்முறை நடிகையல்ல.
அவர் ஓர் இசைக் கலைஞர், பெயர் பியர்க்.
அயர்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்துவருபவர். ஆனால் இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த சிறப்பான நடிப்பு கான் திரைப்பட
விழாவில் அவருக்கு விருதைப் பெற்றுத் தந்திருந்தது என்பதை இங்கே நினைவுகொள்ள வேண்டும்.
ஓய்வுவேளைகளில் செல்மா அமெச்சூர் நாடகம் ஒன்றில் பங்குகொள்கிறாள். அவளது வாழ்க்கையே ஒரு அமெச்சூர்
நாடகம் என்பதை இயக்குநர் காட்சிகளின் மூலம் சொல்லாமல் சொல்கிறார். அவளது துயரத்தைத் துடைக்க தொழிற்சாலையில் அவளுக்கு ஒரு தோழி கிடைக்கிறாள்.
அவளது பாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஆண் தோழன் ஒருவன் கிடைக்கிறான்.
அவன் செல்மாவையே பிரியத்துடன் சுற்றிச் சுற்றிவருகிறான். ஆனால் அதற்கான மனநிலை தனக்கு இல்லை எனக் கூறி அவனைத் தன் பாதையிலிருந்து விலக்கிவிடுகிறாள்
செல்மா.
நெருங்கிய நண்பனே தன் வாழ்நாள் லட்சியத்துக்கான சேமிப்பைத் திருடிவிடுகிறான். அதை மீட்கும் முயற்சியில்
அவள் கொல்லப்படுகிறான். அதுவும் அவன் வேண்டுகோளின் படியே.
தன் மனைவியின் அபரிமிதமான செலவு காரணமாக வாழ்வின் இழிநிலைக்குச் செல்ல
நேரிடும் சூழலில் தனக்கு மரணமெனும் விடுதலை கோரி இறைஞ்சுகிறான். இரக்கப்படுகிறாள் அவள். அவனது கோரிக்கைக்குச் செவிமெடுக்கிறாள்.
சட்டம் தன் கடமையைச் செய்ய வந்துவிடுகிறது. எந்தச்
சூழலிலும் தன் ரகசியத்தை வெளியிட்டுவிடக் கூடாது என அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவள்
நடந்துகொள்கிறாள். உண்மையைச் சொல்லியிருந்தால் தூக்குக் கயிறு
அவள் கழுத்தை இறுக்கும் தேவை ஏற்பட்டிருக்காது. மரணத்தைவிட அதிக
வாதையை அவள் உணரும்படியாக அவளது முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியிருக்க மாட்டார்கள்.
மரணத்தை ஏற்றுக்கொள்ளத் துணிந்த அவளால் அந்தத் துணி மூடலைத் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. ஆனால் எல்லாம் சட்டப்படியே நடக்க வேண்டும் என்பதால்
அவளை அப்படியே தூக்கிலிடுகிறார்கள். மரண தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்ட
பல அப்பாவிகளின் முகங்கள் நமக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது. அந்த
துயரமான ஞாபகங்களைக் கிளறுவதால் இது நமது மன அமைதியைக் குலைக்கிறது. அதனாலேயே இதை நல்ல படம் என்று சொல்ல நேர்கிறது.
செல்மா வாழ்வின் துயரங்கள் எல்லாவற்றையும் இசையிலும் நடனத்திலும்
கரைக்கிறாள். வாழ்வை இயல்பாக எதிர்கொள்கிறாள். அவளது பார்வை கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. பார்வை பறிபோவதால் அவள் எதிர்கொள்ளும்
இன்னல்களை எளிய காட்சிகள் மூலம் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். பார்வைக் குறைவு காரணமாக தொழிற்சாலையில் அவள் செய்யும் சிறிய தவறால் விரலில்
காயம் ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் காட்சியின் பின்னணியிசை ஒரு
பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சிறிது நாட்களில் பார்வை
முழுவதும் பறிபோய்விடும் நிலையில் வேலையையும் அவள் பார்வைக்குறைவு காரணமாக இழக்கிறாள்.
துயரமான நினைவுகளை மனதில் தேக்கி இல்லத்துக்கு வந்தாலோ அவள் சேமித்த
பணம் காணாமல் போயிருக்கிறது. தன்னிடம் ரகசியத்தைச் சொல்லிச் சென்ற
தன் நண்பன் ரகசியமாக பணத்தைத் திருடிவிட்டதை உணர்ந்துகொள்கிறாள் செல்மா.
தன் சந்தோஷத்தைத் தள்ளிவைத்துவிட்டு மகனைத் துன்பச் சேற்றிலிருந்து
மீட்டுவிடத் துடிக்கும் அவளது தாய்மைத் துடிப்புக்கு வாழ்வில் என்ன பொருள் இருக்கிறது? வாழ்வையே தொலைத்து மகனின்
கண் அறுவை சிகிச்சைக்காக ஏன் பணத்தைச் சேர்க்க வேண்டும்? மகனுக்குக்கூட
அதைத் தெரியாமல் ஏன் மறைக்க வேண்டும்? இந்த அபலைப் பெண் ஏன் இப்படி
அபத்தமாக நடந்துகொள்கிறாள்? இத்தகைய பல கேள்விகளைப் படம் உருவாக்குகிறது.
இந்தக் கேள்விகளை எல்லாம் உணராவிட்டால் இது ஒரு மெலோட்ராமா என எளிதாகச்
சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். 1964-ல் அமெரிக்காவில் நடைபெறும்
சம்பவங்களைக் கொண்ட ‘டான்ஸர் இன் த டார்க்’ திரைப்படத்தை மேலோட்டமாகப் பார்க்கும் யாரும் அதை மெலோட்ராமா எனச் சொல்வதற்கான
வாய்ப்புகள் அதிகம். ஆனால் நிதானமாக யோசித்தால் அப்படியான வகைக்குள்
இப்படத்தை அடக்க முடியாது என்பது புரிபடும். படமாக்கத்தில் இயக்குநர்
கையாண்டிருக்கும் கலைநுட்பம் மிகுந்த உத்தியே இப்படத்தை வேறுபடுத்திக்காட்டுகிறது.
இந்தப் படத்தை ஓர் இசைப் படமாக இயக்குநர் தந்திருப்பதே அவரது துணிச்சலின்
அடையாளம்தான். ஏனெனில் ஓர் இசைப் படத்துக்குரிய துள்ளலோ அளப்பரிய
ஆர்ப்பாட்டமோ இந்தப் படத்தில் இல்லை. இது ஒருவகையில் துன்பவியல்
திரைப்படமே. ஆனால் துயரம் வழிந்தபோதும் இந்தப் படம் ஒரு கலாபூர்வ
சிருஷ்டியாகப் பரிணமிக்கிறது. திரைப்படத்தின் அபத்தம் எனச் சொல்லப்படும்
பாடல்கள் இப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஒருவகையில் வாழ்வின் அபத்தங்களை
வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தன் நண்பனைத் தானே கொல்ல
நேர்ந்த அபத்த சூழலை எதிர்கொண்ட நிலையில் செல்மா பாடும் பாடல் அவளது மனோநிலையை மிகத்
தெளிவாக விளக்கிவிடுகிறது. அது ஒருவிதமான கருணைக் கொலை.
ஆனாள் அதற்கான தண்டனை அவளுக்கு மரணம். கண் பார்வையைக்
கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் செல்மா மகனை அந்த நோயிலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கிறாள்.
அதற்காக அவள் மரண தண்டனையைக் கூட ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அதை அவள் எதிர்கொண்டவிதம் அரசின் சட்ட திட்டங்களை எள்ளி நகையாடுகிறது.
அடப் போங்கடா நீங்களும் உங்களின் சட்டதிட்டமும் எனச் சொல்லவைத்துவிடுகிறது.
செல்மா தன் நெருங்கிய நண்பனைச் சுட்டுக்கொன்றதால் அவளுக்கு மரண
தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வழக்கு விசாரணையின் போது அவள் ஓர் உண்மையைச் சொல்கிறாள். ஒரு பொய்யைச் சொல்கிறாள். அதே நேரத்தில் ஓர் உண்மையை
மறைத்துவிடுகிறாள். உண்மை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொய்யோ அம்பலப்பட்டுவிடுகிறது. 2,056 டாலர்கள்
10 செண்ட் பணத்துக்காகத் தன் நண்பனை அவள் கொலைசெய்துவிட்டாள் என நீதிமன்றம்
முடிவுக்கு வருகிறது. அவள் ஒரு கம்யூனிஸ்ட் அனுதாபி என்று நம்பும்
நீதிமன்றம் அவளுக்கு மரண தண்டனையும் வழங்குகிறது. ஆனால் அது அவளது
பணம். ஹாலிவுட் படங்கள்
தான் அவளுக்குச் சிறுவயது முதலே நிம்மதியைத் தந்துவந்தது. ஹாலிவுட்
படங்களில் பார்த்தைப் போன்றே அமெரிக்காவும் வளம் தரும் எனும் நம்பிக்கையில் தான் செல்மா
அங்கே வந்திருந்தாள். துன்பங்களால் துரத்தப்பட்ட அவள் அடைக்கலம்
தேடி அமெரிக்கா வந்தாள். அமெரிக்க நீதிமன்றம் அவளுக்கு மரணம்
மூலம் நிம்மதி அளித்துவிட்டது. ஆனால் இப்படத்தின் அடிநாதமான கேள்வி
பார்வையாளர்களின் நிம்மதியைக் குலைத்துவிட்டது. அங்கேதான் இப்படம்
ஒரு கலைப்படைப்பாகவும் பரிணாமம் கொள்கிறது. செல்மாவின் வாழ்வின்
மூலம் நமது வாழ்வு குறித்த கேள்விகள் மேலெழும்புகின்றன. இந்தப்
படத்தைப் பார்த்து முடித்த பின்னர் உங்களால் நிம்மதியாக உறங்கிவிட முடியாது.
உங்களது மூளையைப் பிறாண்டிக்கொண்டேயிருக்கும் இந்தப் படம். சிறந்த படத்துக்கு வேறென்ன இலக்கணம் வேண்டும்?
நண்பர் முரளியின் அடவி இதழில் வெளியான விமர்சனக் கட்டுரை இது.