இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், மே 27, 2014

வளைவான கூரை கொண்ட கட்டிடங்கள்

அழகிய மாடங்களையும் கலசங்களையும் கொண்ட கட்டிடங்கள் கண்களைக் கொள்ளைக் கொள்பவை. உலக அதிசயமாக ஆக்ரா நதிக் கரையில் எழுந்து நிற்கும் தாஜ்மகாலின் கலசங்களை நம்மால் மறக்க முடியுமா? ஆனால் கட்டிடங்களின் உச்சியில் குழிவான கலசங்களை அமைப்பது வெறும் அழகுக்காக மட்டும் தானா, இத்தகைய கலசங்களால் என்ன பயன் என்பதெல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தெரியாது; ஆனால் கட்டிடக் கலை நிபுணர்கள் இதைப் பல கோணத்தில் அலசக்கூடும். நீண்ட நெடுங்காலமாகவே கலசங்கள் நமது கட்டிடக் கலையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன; இன்றும்கூட அழகான கவிகைமாடத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கவே செய்கிறது. 

இன்றைக்கு நாம் மாடி மீது மாடியாகக் கட்டிடங்களை அடுக்கிக்கொண்டே போகிறோம். அதனால் கலசங்களே நமக்குத் தேவைப்படுவதில்லை. வளைவாக கூரைகளை (roof) அமைப்பதும் சாத்தியமல்ல. கலசங்களை அமைப்பதால் தேவையற்ற இடத்தை அவை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்று எண்ணுகிறோம். மேலும் கலசங்களை அமைக்கத் தனித் திறமையும் தேவைப்படுகிறது. அத்துடன் வட்ட வடிவமான அமைப்புகள் மீதே கலசங்களை உருவாக்க முடியும். இந்தக் காரணங்களால் நாம் கலசங்கள் பற்றிச் சிந்திப்பதேயில்லை. இவை எல்லாவற்றையும் கடந்து வளைவான கூரையை ஷெல் வடிவக் கட்டிட உச்சிகளில் அமைக்க முடியும். 

உண்மையில் ஷெல் வடிவக் கூரை என்பதும் கலசம் என்பதும் ஒன்றல்ல. ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. ஆனால் இரண்டுக்கும் சில ஒற்றுமையான பண்புகள் உள்ளன. உதாரணத்திற்கு இரண்டுமே வளைவான உச்சி அமையப் பெற்றதால் கட்டிடத்தின் சுமையை எளிதில் கடத்த உதவுகின்றன. பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் கலசங்களும் ஷெல் வடிவக் கூரைகளும் ஒன்று போல் தோன்றலாம் ஏனெனில் இரண்டுமே உட்புறம் வளைந்துள்ளன. ஷெல் வடிவக் கூரைகளில் கான்கிரீட் பூச்சு வளைவாகச் சுவர்களோடு இணைக்கப்பட்டிருக்கும். இவை குறைந்த அளவுக்கான தூரத்திற்குள்ளேயே முடித்துவைக்கப்படும். கலசங்களோ அரைக்கோள வடிவத்தில் இருக்காது மேலும் இவை அதிக உயரத்திற்கு எழுப்பப்பட்டிருக்காது. மேலும் கலசங்கள் அமைக்கும்போது அதன் மீது பயன்படத்தக்க தளம் அமைக்க இயலாது.   


பாண்டிச்சேரி ஆரோவில் பார்த்திருக்கிறீர்களா? ஷெல் வடிவ கூரையமைப்புக்கு அது மிகச் சரியான உதாரணம். இவற்றை அமைக்க அதிக செலவு பிடிப்பதில்லை, விரைவில் கட்டுமானத்தை முடித்துவிட முடியும், மாறுபட்ட அழகோடும் காட்சியளிக்கும். ஷெல் வடிவக் கூரைகளை கான்கிரீட் பயன்படுத்தியும் அமைக்க முடிவது அதன் சிறப்பு. ஷெல் வடிவக் கூரைகளை அமைக்கும்போது கட்டிடத்தின் சுமை சுவர்களை நேரடியாகத் தாக்காது. கூரையானது சுவர்களின் மீது செங்குத்தாக பூசப்பட்டால் கூரையின் எடை முழுவதும் அப்படியே சுவருக்குக் கடத்தப்படும். ஆனால் வளைவான கூரை அமைக்கும்போது கட்டிடத்தின் எடை நேரடியாகச் சுவரைப் பாதிப்பதில்லை. இதனால் சுவர் வெடிப்பு போன்றவை அதிகமாக சுவரைப் பாதிக்காது. 

வளைவான கூரை அமைப்பதால் பார்ப்பதற்கு கூரை அழகாக இருக்கும். கான்கிரீட் அதிகமாக செலவாவதில்லை, இரும்பு உபயோகமும் பாதியாகக் குறைந்துவிடும். சதுர வடிவம் செவ்வக வடிவம் கொண்ட கட்டிடங்களின் கூரையை வளைவாக அமைக்கலாம். ஆனால் இத்தகைய கட்டிடங்களை முறையான கட்டிடக் கலை நிபுணரின் ஆலோசனையின் பேரிலும் திறன் மிக்க வேலையாள்கள் உதவியுடனும் மாத்திரமே செய்ய இயலும்.  

அம்மாவின் காதல்

1995-ல் வெளியான அமெரிக்கப் படம் த பிரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கௌண்டி. கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். மேரில் ஸ்ட்ரீப் அவரது ஜோடியாக வேடமேற்றிருந்தார். இது ஒரு காதல் கதை. பருவ வயதுப் பெண்ணின் காதல் கதை அல்ல. பருவ வயதில் பெண்ணைக் கொண்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் காதல் கதை. அது அவளது முதல் காதலும் அல்ல. ஏனெனில் அவள் தன்னை முதலில் காதலித்தவனைத் தான் மணமுடித்திருக்கிறாள். அவனுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்றென இரண்டு மக்களையும் கொடுத்திருக்கிறாள். இத்தாலியைச் சேர்ந்த அவளது மரணத்துடன் படம் தொடங்குகிறது. தாய் இறந்த செய்தி கேட்டு, தங்கையின் அழைப்பின் பேரில் அவளது மகன் வருகிறான். தன்னை எரியூட்டித் தனது சாம்பலை அப்பகுதியில் இருக்கும் பாலத்தின் மீது தூவ வேண்டுமென தாய் விரும்பம் தெரிவித்திருக்கிறாள். மகனுக்கும் மகளுக்கும் இது அதிர்ச்சியைத் தருகிறது. கிறித்தவர்கள் இறந்தபின்னர் உடலைப் புதைப்பதுதான் வழக்கம். இவள் ஏன் தன்னை எரிக்கச் சொல்லி உயில் எழுதியிருக்கிறாள். முடியாதென மகன் மறுக்கிறான். தனது வாழ்வில் தன் குழந்தைகள் அறியாத மர்மப் பிரதேசத்தை தாய் மூன்று நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளாக எழுதிவைத்துள்ளார். அதன் மூலம் அவளது வாழ்வை அர்த்தப்படுத்திய அந்த நான்கு நாட்களின் சம்பவங்கள் விரிகின்றன. 
இத்தாலியின் பாரி பகுதியில் பிறந்தவள் பிரான்செஸ்கா. அமெரிக்காவைச் சார்ந்த ராணுவ வீரரான ஜான்சன் போர் நிமித்தம் இத்தாலி வருகிறார். அவரைக் காதலித்து அவருடனேயே அமெரிக்கா வந்து குடிபுகுந்துவிடுகிறாள். இதெல்லாம் நடந்து முடிந்து 16, 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்கு ஒரு தனிமை வாய்க்கிறது. கணவரும் பருவ வயதுக் குழந்தைகளும் பக்கத்து நகருக்கு நான்கு நாட்கள் கண்காட்சிக்குச் செல்கிறார்கள். அவள் மட்டும் தனித்திருக்க வேண்டிய நிலைமை. அப்போதுதான் ராபர்ட் வருகிறார். அவர் ஒரு புகைப்படக்காரர். அவளில் பூர்த்தியாகாத உணர்வுகளை நிறைவேற்றக்கூடியவராக அவர் இருந்தார். அவர் ஒரு வழிப்போக்கன். புகைப்படம் எடுத்தல் அவரது தொழில், வேட்கை. நாடு நாடாகச் சுற்றியிருக்கிறார். அவரைச் சந்தித்த கணத்திலிருந்தே பிரான்செஸ்காவின் மனம் ராபர்ட் பக்கம் சாய்கிறது. மிக இயல்பாக அவருடன் ஒட்டிக்கொள்கிறாள். அங்கிருக்கும் மேற்புரம் மூடப்பட்ட பாலம் ஒன்றின் முகவரி கேட்டுத்தான் முதலில் அவளை ராபர்ட் தொடர்புகொள்கிறார். அவருடன் சென்று பாலத்தைக் காட்டுகிறாள். அவர்களிடையே நிகழும் உரையாடல் மூலம் ஏதோ ஒரு இனம்புரியாத அன்னியோன்யம் அவளுக்குள் அவனை நோக்கி இழையோடுகிறது. கண்ணுக்குத் தெரியாத நேச இழை இருவரையும் இணைக்கிறது. அவளுள் இதுவரை திறந்திராத பாற்கடல் திடீரெனப் பொங்கி பிரவாகம் எடுக்கிறது. அவளால் அதன் பிரவாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனுள் இருவரும் மூழ்கித் திளைக்கிறார்கள். நான்கு நாட்கள் நிறைவடைகின்றன. பிரிவு வரும் தருணம் வந்தேவிடுகிறது. தன்னுடன் வந்துவிடுமாறு ராபர்ட் அழைக்கிறார். ஆனால் பிரான்செஸ்காவால் குழந்தைகள் கணவன் ஆகியோரை விட்டுவிட்டுச் செல்வது சரியாகப் படவில்லை. மறுத்துவிடுகிறாள். ஆனால் வெறுமை அவளைப் பிடுங்கித் தின்கிறது. ராபர்ட்மீது கொண்ட காதல் ஆயுளின் எஞ்சிய நாட்களெல்லாம் அவளைத் துரத்துகிறது. அவளது கனவுலகிற்கு அவளை அழைத்துச் சென்ற ராபர்ட்டுடன் அந்தச் சுதந்திர வெளியில் சுற்றித் திரிந்த நாட்களை மனத்தில் சுமந்தபடியே ஆயுளைக் கரைக்கிறாள் பிரான்செஸ்கா.
பிரான்செஸ்கா வேடம் ஏற்றிருக்கும் மெரில் ஸ்ட்ரீப் நடுத்தரவயதுப் பெண்ணின் காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, பரிதவிப்பு, வெறுமை, குடும்பச் சிறைக்குள் தனது விருப்பங்களை அடக்கிக்கொண்டு சிறைப்படும் துயரம் போன்றவற்றை அப்படியே உடல்மொழியிலும் கண்பார்வையிலும் வெளிப்படுத்திப் பார்வையாளனுக்கு மிக நெருக்கமாகிவிடுகிறார். நகரத்தில் முன்னால் செல்லும் காரில் தனது காதலன் ராபர்ட் இருப்பதை, பின்னாலுள்ள காரில் கணவனுடன் பார்க்கும் காட்சியில் அவரது காதல் உணர்வு காதலனை நோக்கிப் பலத்துடன் தள்ளுகிறது. ஆனால் அருகிலுள்ள கணவன், குடும்பம் ஆகிய பந்தம் பெருஞ்சுவராய் எழுந்து தடுக்கிறது. இந்த இரண்டுக்குமிடையில் மாட்டித் தவிக்கும் தவிப்பைத் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.  

தாயை எரிக்க மறுக்கும் மகன் படத்தின் இறுதியில் தாயின் உண்மையான காதலைப் புரிந்துகொண்டு அவளுடைய சாம்பலை மேற்புரம் மூடப்பட்ட பாலத்தின் மீது தூவுகிறான். அங்கு தான் தாயின் காதலன் ராபர்ட்டின் சாம்பலும் தூவப்பட்டிருந்தது. தனக்கு இரு குழந்தைகளைத் தந்து தன்னை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட தன் கணவன் புதைக்கப்பட்ட கல்லறைக்கருகில் தன்னைப் புதைக்க பிரான்செஸ்கா கோரவில்லை. தன் வாழ்நாளில் நான்கே நாட்கள் தன்னுடன் கழித்த ராபர்ட்டின் சாம்பல் தூவப்பட்ட பாலத்தில் தன் சாம்பல் தூவப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது. குடும்ப வாழ்வு எல்லாவற்றையும் கொடுக்கிறது ஆனால் அது காதலைத் தருகிறதா என்னும் ஆழமான கேள்வியை இப்படம் எழுப்புகிறது?  

தி இந்துவில் வெளிவந்த கட்டுரை  

ஞாயிறு, மே 25, 2014

மனதை மயக்கும் மாயப் புதிர்

ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியர் எர்னோ ரூபிக் 1974-ல் ஒரு புதுமையான, புதிரான கனச் சதுரத்தை உருவாக்கினார். இதை உடைக்கவோ பிரிக்கவோ முடியாது. ஆனால் தனித்தனியாகச் சுற்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வண்ணமயமான ஸ்டிக்கர்களை ஒட்டி இதை ஒரு விளையாட்டுப் பொருளாக்கினார். முதலில் உருவாக்கப்பட்ட ரூபிக் கனச்சதுரம் (Rubik's Cube) இதுதான். 

ஒரே மாதிரியான நிறங்களை ஒரே பக்கத்தில் கொண்டுவரும் தனது புதிரை விடுவிக்க அவருக்கு ஒரு மாதம் ஆனது. உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் விளையாட்டுப் பொருளாக ரூபிக் கனச்சதுரத்தை உருவாக்க ஆசைப்பட்டார். ஒருசில மாற்றங்களை இதில் ஏற்படுத்திய பின்னர் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பொருளானது ரூபிக் கனச்சதுரம். முதலில் தன் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் இதை அறிமுகப்படுத்தினார்.  முதன் முதலில் பொலைட்செனிகா என்னும் நிறுவனம் ரூபிக் கனச்சதுரத்தைத் தயாரித்து விநியோகித்தது. 


தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட ரூபிக் கனச்சதுரம் ’மாஜிக் க்யூப்’ என அழைக்கப்பட்டது. எடையும் இரு மடங்கு அதிகமாக இருந்தது. ஹங்கேரியில் பிரபலமாகியிருந்த இந்த ரூபிக் கனச்சதுரத்தை கணித அறிஞர்கள் உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளுக்கு கொண்டுசென்றனர். 1979-ல்  நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சிக்கு இது கொண்டுபோகப்பட்டது. அப்போது அங்கே வந்திருந்த டாம் க்ரெமெர் என்னும் விளையாட்டுப் பொருள் நிபுணர் உலகம் முழுவதிலும் இதை விற்கச் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து ஐடியல் டாய் நிறுவனம், மேஜிக் க்யூப் என்னும் பெயரை ரூபிக் நினைவாக ரூபிக் க்யூப் என மாற்றி விநியோகித்தது. 

1980-ல் இது உலகச் சந்தையில் அறிமுகமானது. அந்த ஆண்டு ஜெர்மனியின் சிறந்த விளையாட்டுக்கான விருதைப் பெற்றது. உலகத்தில் இதுவரை விற்பனையான ரூபிக் கனச்சதுரத்தின் எண்ணிக்கை 35 கோடி என்கிறார்கள்.  இன்று உலகத்தில் மிக அதிகமான விற்பனையாகும் விளையாட்டுப் பொருள் இதுதான். 40 ஆண்டுகளைத் தாண்டியும் வெற்றிநடைபோடுகிறது இந்தக் கனச்சதுரப் புதிர்.

புதன், மே 21, 2014

மலையில் திரியும் வரையாடு

தமிழகத்தின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு. அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் வரையாடு இடம்பெற்றுள்ளது. இந்த வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகின்றன. கடலிலிருந்து 1200 முதல் 2600 மீட்டர் உயரம் உள்ள செங்குத்தான மலையின் புற்கள் படர்ந்த பாறைப் பகுதியில் இவை வசிக்கும். பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் உண்டு வரையாடுகள் வாழும். இவை தாவர உண்ணி வகையைச் சேர்ந்தவை. செங்குத்தான மலைகளில் ஏறும் உடலமைப்பை இவை பெற்றுள்ளன. வரையாடுகள் விரைவாக ஓடக்கூடியவை.    


முதிர்ந்த ஆண் வரையாடு 100 கிலோ எடையும் 110 செமீ உயரமும் கொண்டிருக்கும்; பெண் வரையாடு 50 கிலோ எடையும் 80 செமீ உயரம் கொண்டதாயும் இருக்கும். பெண் வரையாட்டின் கொம்பு குட்டையாகவும் சரிவாகவும் காணப்படும். ஆண் வரையாடு, அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும். பெண் வரையாடோ சாம்பல் நிறத்தைக் கொண்டிருக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான மாதங்களில் இவை இனப்பெருக்கம் செய்யும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் வரையாடு. நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை குட்டிகள் தாயிடம் பால் குடிக்கும். 

அதிகாலை நேரத்திலும் பின் மாலை நேரத்திலும் இவை சுறுசுறுப்பாக மேய்ச்சலில் ஈடுபடும். சுமார் 3 ஆண்டுகளில் இவை இனப்பெருக்கம் செய்யும் தகுதி பெற்றுவிடும். இவற்றின் சராசரி ஆயுள் காலம் 3-3.5 ஆண்டுகளே. ஆனால் 4-4.5 ஆண்டுகள் வரை சராசரியாக வாழ்கின்றன. இவற்றின் ஆயுள் 9 ஆண்டுகள் வரை நீளவும் வாய்ப்புண்டு. 2010-ன் கணக்கெடுப்பின்படி சுமார் 2600 வரையாடுகள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் 5 சதவிகித இடங்களில் பரவியுள்ள இவை தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே வாழ்கின்றன. இரவிகுளம், நீலகிரி ஆகிய தேசிய பூங்காங்களில் இவை அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

புலி, செந்நாய், ஓநாய் ஆகியவை வரையாடுகளை இரையாக உண்ணும். இவை இந்த விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொம்புகளைப் பயன்படுத்தும். 1972-ல் இயற்றப்பட்ட இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

செவ்வாய், மே 20, 2014

கண்ணுக்குத் தெரியாத குழந்தைகள்

நியூ விஷன் என்பது உகாண்டாவின் முன்னணி செய்திப் பத்திரிகை. இது ஆண்டுதோறும் தம் சமூகத்திற்கு சேவை ஆற்றிய, வெளி உலகிற்கு அதிகம் தெரிந்திராத பெண்களைக் கண்டுபிடித்து விருதளித்துக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு நியூ விஷன் விருதளித்திருப்பது ரூத் நியாபஹிகா என்னும் இளம் பெண்ணுக்கு. அவர் செய்த செயல் எழுத்தறிவித்தது. யாருக்கு? கருத்தரித்தல் போன்ற காரணங்களால் படிப்பை இடையில் நிறுத்திய பெண்களைத் தேடிப்பிடித்து அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார். அப்பெண்களிடம் என்ன திறமை ஒளிந்துகிடந்ததோ அதைக் கண்டுபிடித்து அதற்கு உயிர் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளார் நியாபஹிகா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நியாபஹிகா எங்கிருந்தார்? உகாண்டாவின் கடைக் கோடி கிராமத்திலா, இல்லை. அமெரிக்காவில். அங்கே அவர் குழந்தை உளவியலாளராக பணியாற்றிவந்தார். இலகுவான கேளிக்கை நிரம்பிய வாழ்க்கை வாழ்ந்தார். அப்போது அவரை நம்பி அவரும் அவருடைய குழந்தைகளும் உகாண்டாவிலிருந்த பெற்றோரும் மட்டுமே இருந்தனர். இப்போது அவரை நம்பி 45 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும். கபேல் என்னும் ஊரில் வசித்துவருகிறார்.


இந்த மாற்றம் நிகழ் என்ன காரணம்? 2005-ம் ஆண்டில் அவர் இன்விஸிபிள் சில்ட்ரன் என்னும் ஆவணப்படத்தைப் பார்த்துள்ளார். அப்படத்தில், உகாண்டாவில் கலகம் நடத்தும் ராணுவ அமைப்பு குழந்தைகள்மீது தொடுக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காட்சிகளாக பரவியிருந்தன. அந்த அட்டூழியங்கள் அவர் மனதைப் பாதித்தன. அது தொடர்பாக பல விஷயங்களை ஆராய்ந்தறிந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆலோசனை தரும் இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் நியாபஹிகா. தன் பங்குக்கு குழந்தைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவந்தார். இந்நிலையில் 2010-ல் பராக் ஒபாமா உகாண்டா கலக்க்கார்ர்களான எல்ஆர்ஏவின் ஆயுதங்களைப் பறிக்கவும் வடக்கு உகாண்டாவை மீட்கவுமான சட்டம் இயற்றினார். அப்போது நியாபஹிகாவின் பங்களிப்பை அறிந்து அப்போதைய செனட்டான எட்வர்ட் கென்னடி அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.

அதற்குப் பிறகு உகாண்டாவில் நியாபஹிகா கழிக்கும் விடுமுறை நாட்கள் பிறருக்கு பயன் தரும் வகையில் அமைந்தன. குடும்பத்துடன் செலவிடும் குதூகலம் தவிர்த்த நேரங்களில் நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று சேவையாற்றினார். வாழ்க்கை பொருள்கொண்டதாக மாறிவருவதை அவர் உணர்ந்தார். இதனால் கிரேஸ் வில்லா என்னும் பெயரில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இல்லத்தைத் திறந்தார். இங்கே ஆறு முதல் 21 வயது வரையான பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கத் தொடங்கினார். இந்த திட்ட்த்தைத் தொடங்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக பணத்தைச் சேமித்துள்ளார் இவர். முதல் ஆண்டில் இவரது இல்லத்தில் 10 குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். குழந்தைகளின் எண்ணிக்கையை கூடுமானவரை மிகவும் அதிகரிக்கக் கூடாது என விரும்பினார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் தான் குழந்தைகளைப் பராமரிக்க முடியும் என நம்பினார். அப்படியிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக 45 குழந்தைகள் வந்து சேர்ந்துவிட்டனர்.

இல்லத்தில் மூன்று முக்கிய பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார். இதன் மூலம் பெண்களுக்கு தேவையான உடல் ஆரோக்கியப் பயிற்சி அளிக்கிறார்; பேக்கரி பணிகள், கணினிக் கல்வி, தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலை, தையல், விவசாயம் போன்ற பலவற்றைக் கற்றுக்கொடுக்கிறார்.

பெண்களின் வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்க்கை மேம்பட உறுதுணையாயிருக்கிறார் நியாபஹிகா. பொருளாதாரச் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வப்போது நண்பர்கள் உதவுகின்றனர். ஆனாலும் அது போதவில்லை. இல்லத்தில் பேக்கரி உணவு வகைகளைத் தயாரித்து அதன் மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளார். 

திங்கள், மே 19, 2014

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

(2014 மே 17 அன்று தி இந்துவில் வெளியானது)


அது 1981-ம் ஆண்டின் மே மாதம் 13-ம் நாள் அன்றைய மாலை நேரம். எல்லா நாளையும் போல் விடிந்த அந்த நாள் எல்லா நாளையும் போல் முடிந்திருக்க வேண்டிய தருணம் அது. ஆனால் அந்த நாள் அப்படி முடியாததால் வரலாற்றின் பக்கத்தில் முக்கிய நாளாகப் பதிவுசெய்யப்பட்டது. மாலை மயங்கி இருள் கவியத் தயாரான அந்த மாலைப் பொழுதில் போப் இரண்டாம் ஜான் பால் திறந்த வெளி ஜீப்பில் வாடிகன் சிடியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்த போப் 1978-ல்தான் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இத்தாலி நாட்டைச் சாராத முதல் போப் ஆண்டவர் அவரே. அவர் பெருந்திரளான தனது ஆதரவாளர்களது கூட்டத்தைக் கடந்துகொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்தேறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தொடர்ந்து நான்கு துப்பாக்கிக் குண்டுகள் போப்பைக் குறிவைத்துப் பாய்ந்துவந்தன. இரண்டு குண்டுகள் வயிற்றின் கீழ்ப் பகுதியைத் துளைத்தன. ஒன்று இடது ஆட்காட்டி விரலையும் மற்றொன்று வலது தோளையும் பதம் பார்த்தன. ரத்த வெள்ளத்தில் மிதந்த போப் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் போப்பின் பாதுகாவலர்கள் இருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

போப் மீது கொலை முயற்சி

போப் இரண்டாம் ஜான் பாலை 9மிமீ ப்ரௌனிங் ஹைபவர் செமி ஆட்டோமேடிக் பிஸ்டலால் சுட்டுக் கொல்ல முயன்றவர் பல்கேரிய நாட்டின் சோபியா பகுதியைச் சேர்ந்த மெஹ்மெட் அலி அஹ்கா என்பவர். இவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு பொய்யான பாஸ்போர்ட் உதவியுடன் 1981 ம் ஆண்டின் மே மாதம் 10 அன்று மிலன் நகரிலிருந்து ரயில் மூலம் ரோம் நகருக்குள் ஊடுருவியுள்ளார். துருக்கியைச் சேர்ந்த ஒருவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் இவருக்கு உதவியுள்ளனர். இத்தாலியில் இருந்த பல்கேரிய ராணுவ நிபுணரான ஸிலோ வாஸ்ஸிலேவ் என்பவரே திட்டத்தை அரங்கேற்றுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். போப்பை மெஹ்மெட் சுட்டுக் கொன்றவுடன் ஓரல் செலிக் என்பவர் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்வார். அப்போது உருவாகும் களேபரத்தின் நடுவே இருவரும் தப்பித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் போப்பின் மீது குண்டு பாய்ந்ததை ஒட்டி ஏற்பட்ட பதற்றமான சூழலால் கவலை கொண்ட ஓரல் செலிக் பயந்து ஓடிவிட்டார். மெஹ்மெட் கூட்டத்தினிடையே தப்பிக்க வழியின்றி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார்.

மன்னிப்பு தந்த மகான்

1981 ஜூலையில் மெஹ்மெட் அலி அஹ்காவுக்கு இத்தாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையிலிருந்த மெஹ்மெட்டை 1983-ல் போப் சென்று பார்த்துவந்தார். போப் மெஹ்மெட்டை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மெஹ்மெட்டின் குடும்பத்தினருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மெஹ்மெட்டின் சகோதரரையும் தாயையும் சந்தித்துப் பேசினார். இந்த உறவால் போப் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெஹ்மெட் மன்னிக்கப்பட்டு 2000-வது ஆண்டில் துருக்கிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் 1979-ல் பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கின் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டார். இத்தாலியில் சிறையிலிருந்த நாட்களைக் கழிக்க மறுத்துவிட்டது துருக்கி நீதிமன்றம். எனவே சிறைத் தண்டனை தொடர்ந்தது. தண்டனை முடிந்த பின்னர் 2010-ம் ஆண்டு ஜனவர் 10-ல் தான் மெஹ்மெட் விடுதலையானார்.

போப் இரண்டாம் ஜான் பால் மீதான தாக்குதல் திட்டத்தின் மூளையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான கேஜிபி இருந்ததாகச் சொல்லப்பட்டது. போலந்து நாட்டின் கூட்டொற்றுமைக்குப் பாடுபட்ட இயக்கத்திற்கு போப் தெரிவித்த ஆதரவு காரணமாக அதிருப்தி அடைந்த ரஷ்யா, போப்பைக் கொல்லச் சதி செய்தது என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு டாம் க்ளன்ஸி என்னும் நாவலாசிரியர் ரெட் ரேப்பிட் என்னும் புதினத்தை எழுதியுள்ளார்; கரோல்: த போப், த மேன் என்னும் தொலைக் காட்சித் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது. எந்தப் போப்பைக் கொல்ல மெஹ்மெட் முன்வந்தாரோ அந்த போப் 2005-ல் உடல் நலமின்றி இருந்தபோது அவர் உயிர் பிழைக்க மனமுருக பிரார்த்தித்து அவரது உடல்நலம் சீராக வாழ்த்தி கடிதம் அனுப்பினாராம் மெஹ்மெட்.

திங்கள், மே 12, 2014

ஆடம்பர வீடுகளால் அதிரும் கட்டுமானத் துறை

(2014 மே 10 அன்று தி இந்துவில் வெளியானது)


சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை பழமை விரும்பிகள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமான வீடுகளை விரும்புவோர்களும் மரபு சார்ந்த விஷயங்களின் மீது பிடிப்பு கொண்டோருமே சென்னையில் வீடு வாங்கிக் குடியேறுகிறார்கள் என்னும் நம்பிக்கை ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் இருந்துவருகிறது. ஆனால் சமீப காலமாக வீடுகளுக்கான சந்தையில் உருவாகிவரும் மாற்றங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்க்கின்றன.

முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் சென்னையில் ஏராளமான ஆடம்பர வீடுகளை உருவாக்கிவருகின்றன. அடையாறு, எழும்பூர், எம்.ஆர்.சி. நகர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் கட்டப்பட்டுவரும் புதிய வீட்டுத் திட்டங்களே இதற்குச் சான்றுகள். இந்தத் திட்டங்களில் உருவாகிவரும் குடியிருப்புகளில் சுமார் ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு ஒரு வீட்டின் விலை 5 முதல் 15 அல்லது 16 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பான்மையானவை வரவிருக்கும் மாதங்களில் பூர்த்திபெற்றுவிடும்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் நுகர்வோரால் எவ்வளவு விரும்பி வாங்கப்படும் என்பதைப் பொறுத்தே இவற்றின் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்த சிலர். சில திட்டங்கள் தொடங்கப்பட்டபோது ஓரளவு வாடிக்கையாளர்கள் வந்து தங்களுக்கான வீடுகளைப் பதிவுசெய்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களுக்குத் திறந்துவிடும் அதிருஷ்ட நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். நில உரிமையாளர்கள் சிலரும் இதைப் போன்ற குடியிருப்புகளைக் கட்டிவருகிறார்கள். முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் இத்தகைய குடியிருப்புகளை உத்வேகத்துடன் உருவாக்கிவருகின்றன.

பெரும்பாலான திட்டங்களில் உருவாகும் வீடுகளை நுகர்வோர்கள் கடன் பயமின்றி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமே. வழக்கமாகச் சென்னையில் தொழிலில் ஈடுபட்டு வரும் கட்டுமான அதிபர்கள் கூட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதையே வலியுறுத்துவார்கள். ஆனால் சமீபத்திய திட்டங்களில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் கணிசமான அளவில் தங்களைப் பணயம் வைத்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இதனால் கட்டுமானத் துறையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனிநபர்கள்கூடத் தங்களது நிலங்களில் சொந்தமாகக் குடியிருப்புத் திட்டங்களை, அதற்கான பிரத்தியேக திட்ட மேலாண்மைக் குழுவின் உதவியுடன் நிறைவேற்றுகிறார்கள். வீட்டுத் திட்டங்களின் தொடக்க செலவுக்கான நிதியைச் சம்பாதிப்பதற்காக நுகர்வோருக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறார்கள். தி.நகர் போன்ற பகுதிகளில் சில திட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு தனிநபர்களைத் துணிச்சலுடன் ரியல் எஸ்டேட் துறைக்குள் இறக்கியுள்ளது.

குடியிருப்புத் திட்டங்களை ஊக்குவிக்கக்கூடிய அளவுக்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை அமையாவிட்டால்கூட சில ஹோட்டல்கள் இத்தகைய திட்டங்களுக்கு அனுகூலமாய் அமைந்துள்ளன. ஆடம்பர வீடுகளை உருவாக்குவதில் வீட்டின் இண்டீரியரில் பொருத்தப்படும் அதிநவீன சாதனங்கள், குளியலறையின் நவீன வசதிகள், அலங்கார விளக்குகள் போன்றவையே சவாலாக இருக்கும் அம்சங்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கும்போது பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் தோற்றத்தில் வீடு அமைவது அவசியம். ஆகவே வீட்டைப் பார்த்த உடன் இதற்குக் கோடி ரூபாய் கொடுக்கலாம் என்னும் எண்ணத்தை உருவாக்கும் இண்டீரியரைத் தர வேண்டும்.

இந்த ஆடம்பர வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களல்ல. நமது நாட்டிலேயே வசிக்கும் உயரதிகாரிகளும், பிரபலங்களும், தொழிலதிபர்களும்தான் இங்கு வீடுகளை வாங்கத் துடிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் இந்தத் திட்டங்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டார்களை அணுக எந்தத் தடையும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

சனி, மே 10, 2014

கொடி அசைந்தால் காற்று வரும்…


பறம்பு நாட்டை ஆண்ட மன்னன் பாரி. இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். சாலையோரம் படர்ந்துகிடந்த முல்லைக் கொடி பற்றிக்கொள்ள கொழு கொம்பு இன்றித் தவித்தது. இதை அந்தப் பாதையில் தேரில் சென்ற பாரி பார்த்தான். பாரி அப்படியே சென்றிருந்தால் இன்று பாரி பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது.  ஆனால் அவன் முல்லைக் கொடி படர வாகாகத் தனது தேரை அப்படியே விட்டுவிட்டு அரண்மனை வரை நடந்தே வந்தான். அதனால் சரித்திரத்தில் நிலைத்து நின்றான். பாரியின் புகழ்க்கொடியைப் பறக்கவிட்டது முல்லைக் கொடி. இப்படி எத்தனையோ கொடிகள் தமது அழகால் நிலத்தை அழகாக்குகின்றன. கொடிகளை எப்படி வளர்ப்பது எங்கு வளர்ப்பது என்பது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா?  

பொதுவாகக் கொடிகளை வளர்ப்பது சுலபம். சாதாரண தோட்டத்து மண்ணிலேயே செழித்து வளரும் இயல்பு கொண்டவை கொடிகள். இவற்றிற்கெனப் பிரத்தியேகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த இடங்களில் படர வேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் படர தோதான வசதிகளை ஏற்படுத்திவிட்டால் போதும். போதுமான நில வசதி இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, பெரிய  தொட்டிகளில்கூட விதைகளைத் தூவிக் கொடிகளை வளர்த்துவிடலாம்.  

பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டிக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்துத் தொங்கும். முதல் வகைக் கொடிகளை தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளை கூரைமீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாக மலர்ந்து பார்ப்போரைக் கவரும்.   

செங்குத்தான இடங்களுக்கா அல்லது கிடைமட்ட பகுதிகளுக்கா என்பதைப் பொறுத்துத் தேவையான கொடிகளின் விதைகளை வாங்கிக் கொடிகளை வளர்த்து வீட்டை அழகுபடுத்தலாம்.  வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், வீட்டின் முன்புறச் சுவர்கள் போன்ற இடங்களில் எல்லாம் தேவைக்கேற்ப கொடிகளைப் படரவிட்டு வீட்டை வண்ணமயமாக்கலாம். பூக்கள் மிகுந்த கொடிகள் வண்ணமயமான தோற்றத்தைத் தருவதுடன் நறுமணத்தையும் பரப்பும்.